புது வெள்ளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 9,330 
 

கதை ஆசிரியர்: ஜெயமோகன்.

1917 நவம்பர் ஏழு. அது கொடுமையான குளிர்காலம். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி நான்கு மாதங்களும் ருஷ்யா பூமியிலிருந்து துண்டிக்கப்படும் மாதங்கள். விண்ணிலிருந்து மனம் உறைந்த இரக்கமற்ற பனிப்படலம் இறங்கி வந்து தன் உறைந்த வெண்விரல்களினால் அந்தப் பெரும் தேசத்தை மெல்ல அள்ளி மண்ணிலிருந்து தூக்கிவிடுகிறது. பிறகு அகண்ட மௌனம் நிரம்பிய ஏதோ பாழ்வெளியில் ரஷ்யா ஒடுங்கிக் கிடக்கிறது. அப்படிக் கூற முடியாது.

பனிப்படலங்களின் உள்ளே அது தன் உயிர்ச் சக்தியை முழுக்க வெப்பமாக மாற்றிக்கொண்டு அந்தக் கடும் குளிருடன் போரிடுகிறது. கடைசி விறகுவரை எரிக்கப்படுகிறது. கடைசி நம்பிக்கை வரைச் சொற்களாக மாற்றப்படுகின்றன. பிப்ரவரி இறுதியில் பனி விலகுவது போல. இருண்ட கருவறைக்குள்ளிருந்து பனியின் வெண்ணிறப் படலத்தை மெல்ல விலக்கியபடி ஒளிமிக்க புதிய பூமிமீது, புதிய வானத்தின் கீழே, பிறந்து வந்து விழுகிறது அது. அனைத்தும் உயிர்த்தெழுகின்றன. மரங்கள், பறவைகள், புழுப்பூச்சிகள். கூடவே மனிதர்களும். அது அழிந்து புதிதாகப் பிறக்கும் ரகசியமறிந்த பூமி.

ஆனால் அந்த நவம்பர் மாறுபட்டிருந்தது. பனியின் சாம்பல் நிற உறைக்குள் துப்பாக்கிகள் முழங்கின. மங்கலான பனிப்படலத்துக்கு அப்பால் வெடிப்பின் செம்மின்னல்கள் அடக்கமாகத் துடிதுடித்தபடியே இருந்தன. வெடியோசைகளும் பனியால் போர்த்தப்பட்டே ஒலித்தன. மரண ஓலங்கள் எல்லாத் திசைகளிலுமிருந்தும் கேட்டன. குளிரில் விறைத்த செங்கற் கட்டிடங்களில் அவை எதிரொலித்து, அந்த ஜடங்களின் துயரங்களையும் ஏற்றுக் கொண்டு, பெருகின. அவற்றையெல்லாம் மெல்லக் கீழடக்கியபடி எழுந்தன வெற்றிக் கூச்சல்கள். இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இதயங்களின் களிவெறியின் அழுத்தம் தாளமுடியாதபடி ஆனபோது கைகளை விரித்து, தொண்டை புடைக்க, கண்கள் தெறிக்க, இருண்ட வானை நோக்கிக் கூவிய கூச்சல்களின் பேரிரைச்சல் அது!

அது விண்ணில் தூங்கும் தேவதைகளையும் புனிதர்களையும் அறைந்து எழுப்பி ஒரு செய்தியைச் சொன்னது: இனி மண்ணில் அவர்களுக்கு வேலை இல்லை. ஆயிரம் பல்லாயிரம் வருடங்களாக அவர்களுக்கு நம்பி மண்ணில் உதிரமும் கண்ணீரும் வியர்வையும் சிந்திய ஏழைகள் கிளர்ந்து எழுந்து விட்டார்கள். தங்கள் பொன்னுலகைத் தாங்களே அமைக்க சித்தமாகிவிட்டார்கள். துப்பாக்கி அவர்களுடைய புதிய தேவதையாகிவிட்டிருந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் பனியிருள் நிரம்பிய தெருக்களினூடாக களிவெறியில் திசை மறந்த தொழிலாளர்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடினார்கள். களநடைப் பாடல்களையும் அறுவடைப் பாடல்களையும் காதற் பாடல்களையும் பாடியபடி நடனமிட்டார்கள். திடீரென்று வானை நோக்கிச் சுட்டார்கள். பரஸ்பரம் கட்டித்தழுவிக் கொண்டார்கள். நரம்புகள் தளர்ந்து அப்படியே கதறி அழுதார்கள். இரு அமெரிக்க நிருபர்கள் அந்தக் கூட்டத்தை ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் ஜான் ரீட். இன்னொருவர் ரைஸ் வில்லியம்ஸ். மாபெரும் ருஷ்யப் புரட்சிபற்றிக் கேள்விப்பட்டு அதை நேரில் பார்க்கும் பொருட்டு வந்தவர்கள் அவர்கள்.

“ஒரு தேசமே வெறிகொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார் ஜான் ரீட். “இந்த வெறி இந்த நகரத்தை இன்னும் நொறுக்கித் தூள் தூளாக்கி விடாததுதான் ஆச்சரியம்.”

”அப்படியும் நிகழலாம். அவர்கள் பெரிய அலைபோல ஹெர்மிட்டேஜிலும் பனிக்கால அரண்மனையிலும் நுழைந்தார்கள் என்று விடுதிக்காரன் சொன்னான். மாஸ்கோ இருக்கிறதோ என்னவோ” என்றார் வில்லியம்ஸ்.

“என்ன வெறி! என்ன ஆனந்தம்! பிரெஞ்சுப் புரட்சி இப்படித்தான் இருந்திருக்கும்.”

ஒரு குடியானவன் கிழிந்த உடைகளும் கையில் ரைஃபிளுமாகப் பாய்ந்து வந்தான். “தவாரிஷி! தவாரிஷி!” என்று அழைத்தபடி முத்தமிட்டான். ரஷ்யர்களுக்குரிய வாய்ப்புண் வீச்சம் அடித்தது. “தவாரிஷி! தவாரிஷி!” என்று அவன் உணர்ச்சிப் பெருக்குடன் கூப்பிட்டான். கைகளை விரித்தபடி, கண்ணீர் விரித்தபடி, பரவசம் கொண்ட குரலில், அச்சொல்லை மந்திரம்போல மீண்டும் மீண்டும் சொன்னான்.

“என்ன சொல்கிறான்?” என்றார் ரீட்.

”இது விந்தையான சொல். இதை ஆங்கிலத்தில் தோழர் என்றும் சகபயணி என்றும் மொழிபெயர்க்கலாம்!”

“அது ஏன் இந்தக் கிழவனை இப்படி வெறிகொள்ள வைக்க வேண்டும்?”

“இந்தப் புரட்சியின் மந்திரங்களில் ஒன்று அது. சமத்துவத்தை, கூட்டுச் செயல்பாட்டை, ரத்த ஒற்றுமையை அது குறிக்கிறது. இன்று நீங்கள் யாரை வேண்டுமானாலும் தவாரிஷி என்று கூப்பிடலாம். அப்படிப்பட்ட நிலைமை இன்று உலகில் எந்த நிலப்பகுதியிலும் இல்லை என்பதை நினைவுகூருங்கள். கருத்துகளினாலல்ல, அந்த ஒரு சொல்லின் மாயத்தால்தான் இங்கு புரட்சி ஏற்பட்டிருக்கிறது….”

“ஒவ்வொன்றும் விசித்திரமாக, முன்பு காணக்கிடைக்காதவையாக உள்ளன. மன எழுச்சியையும் அச்சத்தையும் ஊட்டுகின்றன.”

“மகத்தானவை எல்லாமே அப்படித்தான்.”

அவர்கள் முதல் தடையரணுக்குச் சென்று சேர்ந்தார்கள். கையில் சூடாகப் புகை கமழும் துப்பாக்கியுடன் ஒரு இளம் தொழிலாளி எழுந்து “தோழர் உங்கள் அடையாளம் என்ன?” என்றான்.

ஜான் ரீட் தன் அடையாள அட்டைகளைக் காட்டினார். இளம் தொழிலாளி தலைவணங்கினான். “என் பெயர் திரிபோனோவ் தோழர். நான் ஒரு கம்மியன். ஜார்ஜியாவிலிருந்து வருகிறேன். இவன் யானிஷேவ். நெய்பூத்திலிருந்து வந்தவன்.”

“வணக்கம் தோழர்களே, நாங்கள் உங்கள் தலைவர் லெனினைப் பார்க்க விரும்புகிறோம்.”

பனியால் சிவந்த முகத்துடன் யானிஷேவ் சிரித்தான் “தலைவரா? அப்படி யாரும் இல்லையே. எங்களுக்கு லெனின் என்ற பெயருடைய ஒரு தோழர் இருக்கிறார், வழிகாட்டி இருக்கிறார், ஆசிரியர் இருக்கிறார்.”

“ஆம், நாங்கள் பார்க்க விரும்புவது அவரைத்தான்.”

“அவர் அங்கே, இந்தச் சதுக்கத்துக்கு அப்பால், ஸ்மோல்னியில் இருக்கக் கூடும்.”

“அது என்ன?”

“பிரபு வம்ச ராணுவக் கல்லூரி. இப்போது அது சோவியத்துகளின் மத்திய நிர்வாகக் கமிட்டியின் அலுவலகம்.”

“அங்கு போக விரும்புகிறோம்.”

“ஆனால் இப்போது அங்குதான் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ராணுவப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் அப்பகுதியில் இன்னமும் இருக்கிறார்கள்.”

அதற்குள் வெடியோசை கேட்டன. விய் விய் என விசில் ஒலிகள் கேட்டன.

“தோழர், அமருங்கள்! அமருங்கள்!”

அவர்கள் அமர்ந்ததும் “தோழர் நீங்கள் இதுவரை போரைப் பார்த்ததில்லை என்று ஊகிக்கிறேன்.” என்றான் திரிபோனோவ்.

“ஆம், எப்படித் தெரியும்?”

“நீங்கள் கேட்ட விசில் சத்தம் துப்பாக்கிக் குண்டுகள் கடந்து போகும் ஒலி. மயிரிழை வித்தியாசத்தில் உயிர் பிழைத்தீர்கள்.”

இருவருக்கும் உடல் புல்லரித்தது. ரீட் “கடவுளே, இப்படிப்பட்ட அபாயகரமான இடத்திலா புரட்சியின் தலைவர் இருக்கிறார்?” என்றார்.

அவர்கள் போரில் இறங்கி விட்டமையால் பதில் பேசவில்லை. சற்று நேரம் கழித்து ஓரிரு கூச்சல்கள் மட்டும் கேட்டு அடங்க, வெடியோசைகள் எதிரொலித்து மறைய, அமைதி திரும்பியது.

“தோழர், நீங்கள் மிக அபாயகரமான இடத்தில் இருக்கிறீர்கள்” என்றார் ரீட்.

“ஆம், இதோ சில அடி தூரத்தில் மரணம் இருக்கிறது. மரணம் நிச்சயம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இறந்தால் என்ன? இந்தப் பத்து நாட்களில் என் வாழ்வின் அனைத்து இன்பத்தையும் நான் அனுபவித்து விட்டேன்” திரிபோனோவ் உணர்ச்சி மீதுற உதடுகளை அழுத்திக் கொண்டான். “தோழர் நான் யாரோ, யாரிடமோ, எதற்காகவோ நடத்தும் ஓர் அர்த்தமற்ற போரில் சாகவில்லை. என் சந்ததியினருக்காகச் சாகிறேன். அவர்களுக்கு சுரண்டலற்ற, அநீதியற்ற, புது உலகமொன்றைப் படைத்துத் தருவதற்காகச் சாகிறேன். ஒரு மனிதனின் வாழ்வுக்கு இதைவிட அர்த்தமுள்ள முடிவு என்ன இருக்க முடியும்?”

தாங்க முடியாத மன எழுச்சி நடுக்கமாகவும், கண்ணீராகவும் ஜான் ரீடில் வெளிப்பட்டது. அவர் அந்தத் தொழிலாளியை அப்படியே கட்டிக் கொண்டார்.

சில மணி நேரம் கழிந்து உதவிக்குப் படை வந்தது. தடையரண் முன்னகர்ந்தது. நிருபர்கள் ஒரு பழைய வண்டியில் ஸ்மோல்னிக்கு இட்டுச் செல்லப்பட்டார்கள். வழியெல்லாம் பழத்தோட்டத்தில் உதிர்ந்த ஆப்பிள்கள் போல உதிரம் பெருகிய பிணங்கள் கிடப்பதைக் கண்டார்கள். இரண்டு நாள் கழித்து அந்தத் தடையரணில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டதை அவர்கள் அறிய நேர்ந்தது.

ஸ்மோல்னி ஒரு பழைய கட்டிடம். ஜாரின் ருஷ்யாவின் பெரிய கனவுகளில் ஒன்று. செங்கற்களாலான பெரிய உருண்ட தூண்கள். விசாலமான வராண்டாக்கள். அகலமான படிகள். முகப்பில் கோச் வண்டிகளை நிறுத்தும் பெரிய முற்றம். அதன் முதல் மாடியிலும் பெரிய வராண்டா இருந்தது. வராண்டாவிலும் முகப்பிலும் செம்மச் செம்ம ஆட்கள் நிரம்பியிருந்தனர். முற்றமெங்கும் மனிதத் தலைகள். மனித நெடி. மனித ஓங்காரம். வண்டி அந்த அலைகளில் தள்ளி மிதந்து முன்னகர்ந்தது. பொருத்தமற்ற இறுக்கமான உடையணிந்த இளைஞன் முன்னகர்ந்து “அமெரிக்க நிருபர்களா?” என்றான்.

”ஆம்.”

“வாருங்கள், தோழர் லெனின் உங்களைப்பற்றித் தனியாக விசாரித்தார்.”

”எங்களைப் பற்றியா?”

“ஆம், வாருங்கள்….” நெரிபட்டபடி அவர்கள் ஊடுருவிச் சென்றனர். ஸ்மோல்னியின் வராண்டாவில் போடப்பட்ட பெரிய மேஜைக்குப் பின்னால் குட்டையான மனிதர் உட்கார்ந்திருந்தார். அவர் அடையாள அட்டைகளைப் பார்த்தபிறகு “தோழர்களே, அதோ அங்கு அமருங்கள். இரு ஜெர்மானிய நிருபர்களும் உங்களுக்குத் துணையுண்டு” என்றார்.

அவர்களை அந்தப் பெரும் கூட்டத்தின் உணர்ச்சிப் பிரவாகமே ஈர்த்திருந்தது. அந்தக் கூட்டம் ஒரே மனம் கொண்டதாக இருந்தது. திடீரென்று ஒரு ஓலம் கேட்டது. மக்கள் சிதறி இடைவெளி விட்டனர். சதுக்கத்தின் நடுவே பெரிய கற்பீடத்தில் ஜார் நிகலஸின் பெரிய கற்சிலை இருந்தது. அதன்மீது நிறையத் தொழிலாளர்கள் பூச்சிகள் போல மொய்த்து ஏறினார்கள். ஜாரின் சிலைவிழிகள் அதே உக்கிரத்துடன் உறைந்திருக்க அவர் கழுத்திலும் கைகளிலும் வடங்கள் மாட்டப்பட்டன. வடங்களைப் பலநூறு கரங்கள் பற்றின.  சிலை மெல்ல ஆடியது. அதில் ஏறியவர்கள் குதித்தனர். சிலையின் தலை மடேரென்று ஒலியுடன் பிளந்து தரைமீது தட்டென்று விழுந்தது. அப்பகுதி மக்கள் சிதறினர். சிலை பீடத்துடன் அசைந்தது. தள்ளாடி மண்ணை அறைந்தபடி விழுந்தது. காது செவிடுபடும் படியான ஒலி எழுந்தது. வெறி நடனங்கள் ஊளைகள், அடக்க முடியாத சிரிப்புகள், அழுகைகள். சிலைமீது தொழிலாளர்கள் ஏறி நின்று கூத்தாடினார்கள்.

“மனிதர்கள் இப்படி சுயமிழந்து ஒற்றைப் பெரும் சக்தியாக ஆக முடியுமா? இது சாத்தியம்தானா?” என்றார் ரீட்.

“சாத்தியமாகியிருக்கிறதே. மனிதத் திரள் ஒற்றை மனமும் ஒரே இலக்கும் கொள்ளும்போதுதான் வரலாறு படைக்கப்படுகிறது” என்றார் வில்லியம்ஸ்.

“பெரும் சக்தி!” என்றார் ரீட் பிரமிப்புடன். “சரியானபடி கட்டுப்படுத்தப்படாவிட்டால் இதுவே உலகை அழித்துவிடும்.”

”அந்த மனிதர் ஒரு மாயாவி. இந்த பிரளயத்தின் மீது அவருக்கு முழுக் கட்டுப்பாடு உள்ளது.”

“அது மிக மேலோட்டமானதாகவே இருக்க முடியும். பார்த்தீர்களல்லவா ஜாருக்கு நிகழ்ந்ததை? ஆயிரம் வருடம் இம் மக்களின் மனங்களில் ஆட்சி செலுத்தியவர் அவர்.”

“ஆனால் இது வேறு யுகம்.”

“ஆம், கட்டுப்பாடற்ற, மூர்க்கமான, ஆதிமானுட சக்தியின் யுகம். தங்கத்தின் யுகம் இதோ சரிகிறது. இனி இரும்பின் யுகம்…”

“இந்த மனிதர் இரும்பாலானவரா?”

“இல்லையேல் இது பேரழிவின் துவக்கம். இந்த மக்களுக்குத் தேவை ஓர் இரும்பு மனிதர். இரும்பாலான ஞானமும், இரும்பாலான சொற்களும்,  இரும்பாலான சித்தமும் கொண்ட மனிதர்.”

”இந்த மனிதர் விளாடிமிர் இலியிச் ஓர் அற்புத மனிதர் என்கிறார்கள்” என்றார் வில்லியம்ஸ்.

”எனக்கு நம்பிக்கை வரவில்லை.”

“பார்ப்போம்!”

“அமைதி! அமைதி!” என ஒரு குரல் கூவியது. அமைதி அமைதி என்ற பல நூறு தொண்டைகள் கூவின. கூட்ட முகப்பு அமைதி அடைந்தது. கட்டளை கண்ணெதிரில் பரவிச் செல்வது தெரிந்தது. மெல்ல அந்தக் கூட்டமே அமைதியடைந்தது, கடல் பனியாக உறைந்தது போல.

இழுத்துப் போடப்பட்ட பீரங்கி வண்டிமீது ஒரு மனிதர் ஏறினார்.

”பீரங்கி வண்டி மீதா?” என்றார் ரீட், பொறுக்க முடியாமல்.

“வரலாறு தன் விருப்பப்படி தன்னை விரித்துக்கொள்கிறது.”

”இருந்தாலும்….”

“இது இரும்பு யுகம் என்றீர்கள்.”

கட்டைகுட்டையான உடலும் வலுவான தோள்களும் கொண்ட, கரிய நிற உடைகள் அணிந்த மனிதர். மேடிட்ட நெற்றியும், முன் வழுக்கையும், அழுந்திய மூக்கும், அழுந்திய சிறு உதடுகளும், குறுந்தாடியும், பளிச்சிடும் இடுங்கிய கண்ணும், குறும்புச் சிரிப்பும்…

“இவர்தான்! படங்களில் பார்த்தது போலவே இருக்கிறார்!” என்றார் வில்லியம்ஸ். அவருடைய பரபரப்பு ரீடையும் தொற்றிக் கொண்டது. இதோ வரலாற்றின் மிக மகத்தான தருணங்களில் ஒன்று நிகழப் போகிறது. ஒரு வேளை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு உலகமே மாறிவிடக் கூடும். மானுட குலத்தின் எதிர் காலமே இந்தத் தருணத்தில் தீர்மானமாகப் போகிறது…. இதன் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு தகவலும், இங்குள்ள ஒலிகளும் மணங்களும், இவர் பேசப் போகும் ஒவ்வொரு சொல்லும், சொல்லுக்கிடைப்பட்ட மௌனமும் என் கவனத்தில் விழ வேண்டும். என் மனதில் ஆழப் பதிந்து என்னுடைய பிரக்ஞையின் பகுதியாகிவிட வேண்டும். பிறகு இத்தருணத்தின் சாட்சியாக நான் மிஞ்சிய வாழ்நாளைக் கழிப்பேன். என் பிறவியின் நோக்கம் ஈடேறும் தருணம் இது. ரீடின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அம்மனிதர் பீரங்கி வண்டி மீது ஏறியதும் கைகளை உயர்த்தி வாழ்த்துச் சைகை செய்தார். உடனே கூட்டம் ஆரவாரித்தது. ஸ்மோல்னியின் பெரிய கட்டிடம் இடிந்து விழப்போவது போலிருந்தது. அவர் கைகளை ஆட்டி அமைதி என்று சைகை காட்டினார். அமைதி பரவியது. அவர் களைத்திருந்தார். தலைமுடி பறந்தது. உடைகளில் கரியும் தூசியும் படிந்திருந்தன. அவர் புன்னகையில்கூட களைப்பும் தூசியும் படிந்திருந்தன. புராதனமான, மகத்தான ஓவியம் போலிருந்தார்.

அமைதி இறுகியது. ஒரு செருமல், ஒரு துப்பாக்கியின் கிளிங் எனும் ஒலி, ஒரு பூட்ஸ் இடம் பெயரும் சத்தம் என மௌனம் மேலும் தீவிரம் கொண்டது. அமைதியில் மணங்கள் மேலெழுந்தன. ரத்தம், வியர்வை, வெடிமருந்து, மட்கும் சப்பாத்துகள், பனி ஆகியவற்றின் மணம். அவரை அந்தப் பெரும் ஜனக்கூட்டம் கூர்ந்து கவனித்தது. “தோழர்களே” என்றார் அவர். குரல் கம்மியிருந்தது. அது யாருக்கும் கேட்கவில்லை. அவர் உரக்கக் கூவினார், “தோழர்களே… நாம் இப்போது சோஷலிசக் கட்டுமானத்தைத் தொடங்கவிருக்கிறோம்…”

***********

1999 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் சிறுகதைகளில் ஒன்று .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *