பிஞ்சு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 6,575 
 

‘ இந்தக் கூடையில் உள்ள வெள்ளரிப் பிஞ்சுகள் இரு நூறு ரூபாய்க்குத் தேறுமா. .? ‘ – என்று நினைத்து கண்களாலேயே அளந்து பார்த்தான் சிங்காரு.

‘ தேறும் ! ‘ என்று மனசு சொல்லியது.

‘ இதை இரு நூறு ரூபாய்க்கு விற்றால் தான் அரிசி, உப்பு, மிளகாய், புளி, குழம்பிற்கு கருவாடு, கத்தரிக்காய் , அம்மாவிற்கு வெற்றிலைப் பாக்கு செலவு போக மீதி கொஞ்சம் உண்டியலில் போடலாம்.! என்று மனசுக்குள் நினைத்தான்.

வெளியிலிருந்து வீட்டினுள் வந்த அவன் தாய் அலமேலு இவன் யோசனையுடன் அமர்ந்திருப்பதை பார்த்து. .

” ஏன்டா சிங்காரு ! என்ன யோசனை. .? ”

” ஒண்ணுமில்லேம்மா…”

” இன்னைக்கு இவ்வளவுதானா இருந்துச்சி. .? ” என்று கேட்டு கூடையைப் பார்த்தாள்.

” ஆமாம்மா. ! ”

” ஏன்..??… ”

” எல்லாம் நரி தின்னுட்டுப் போச்சு. நரி வெள்ளரிப் பழத்தைத்தான் தின்னும். இப்ப உள்ள நரியெல்லாம் வெள்ளரிப் பிஞ்சைக் கூட விட்டு வைக்காமல் தின்னுது. எல்லாம் நம்ப நேரம்.! ” என்றான் விரக்தியுடன்.

” சரி சரி. காலா காலத்தோட போய் வித்துட்டு வா. இன்னைக்காவது நேரா நேரத்தோட நம்ம வீட்ல அடுப்பு எரியட்டும். கஞ்சி காய்ச்சறேன். ” என்றாள் அலமேலு.

கோடைக்காலம் வந்துவிட்டால் இருக்கும் ஐம்பது குழி வயலில் வெள்ளரிப் போட்டு , விற்று , பிழைப்பு நடத்துவதுதான் இவர்களது தொழில். அது வறண்ட பூமி என்பதால் வேறு எதுவும் பயிர் செய்ய முடியாது. மேலும் வேறு வேலை எதுவும் தெரியாது. அந்த ஊரில் வயல் வைத்திருப்பவர்களுக்கு இதுதான் வேலை. பருவ காலமாக இருந்தால் ஆற்றில் தண்ணீர் வந்து எல்லோரும் விவசாயம் செய்வார்கள்.

அலமேலு நடவு நட, களை எடுக்க என்று வேலைக்குப் போய் வருவாள்.

சிங்காரு சிறுவயசு பையன் என்பதால் அரை ஆள் கூலிக்கு வயல் வேலைகளுக்குச் செல்வான்.

வயிறார தாயும், மகனும் கஞ்சி குடிப்பார்கள். கோடையில் வெள்ளரிப் பயிர் செய்து வந்த வருமானம்தான் வயிற்றை நனைக்க வேண்டும்.

அலமேலு வெள்ளரிப் பிஞ்சு விற்கப் போவது கிடையாது. கணக்குத் தெரியாமல் காசை விட்டுவிடுவாள். அப்பா உயிருடன் இருந்தபோது மூன்றாவது வகுப்பு வரைக்கும் படித்த படிப்பு சிங்காருவிற்கு இப்போது கை கொடுத்தது. பன்னிரண்டு வயதுதான் ஆனாலும் சரியாக வியாபாரம் செய்து விட்டு வந்து விடுவான்.

” அம்மா ! மார்கெட்டுக்குப் போய் மொத்தமா குடுத்துட்டு வந்துறேன்ம்மா..” என்றான் தாயைப் பார்த்து.

” ஏன்டா. .? ”

” ஒண்ணுமில்லே. ராத்திரி காஞ்சி குடிக்கலையா. .! ஒரே களைப்பா இருக்கிற மாதிரி இருக்கு . அதான். ! ” என்றான்.

இதைக் கேட்டதும் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. மனம் பொறுக்க முடியாமல் மகனைக் கட்டிக் கொண்டாள். மனம் …’ ஓஓ. ..’ வென்று ஓலமிட்டது. இல்லாதவள் வேறு என்ன செய்வாள். .? ! பாவம் !!

தான் அனுதாபப் படுவதைக் காட்டிக் கொண்டால் மகன் சோர்ந்துவிடுவானே என்று பயம் வர… மனத்தைத் தேற்றிக்கொண்டு….

” த்தூ. .! இதானே ! நாலு பிஞ்சை தின்னுட்டு தெம்பா போயேம்ப்பா. .! ” என்றாள் ஆதரவுடன்.

” வேணாம்மா ! நாலு பிஞ்சைத் தின்னுட்டா பத்து ரூபாய் குறையும். நான் அலையாம மார்க்கெட்டுலேயே வித்துட்டு வந்துடுறேன். ” என்றான் சிங்காரு.

” பத்தரமா போயிட்டு வா. .! ” அதற்கு மேல் தடை சொல்லாமல் மகன் விருப்பத்திற்கு விட்டாள்.

சிங்காரு கிழிந்த துணியைச் சுருட்டிச் சும்மாடாக தலையில் வைத்துக்கொண்டு வெள்ளரிக் குடையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டான்.

கூடை தலையில் ஏறியதும் உற்சாகமாக இருந்தது. இதுவரை தன்னைத் தொற்றிக்கொண்டிருந்த களைப்பு போன இடம் தெரியவில்லை. அது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது

மார்க்கெட் நோக்கிப் போகும்போதான் அவன் வழியில் தென்பட்ட நகரத்தின் பேருந்து நிலையத்தைக் கவனித்தான்.

அங்கு தினமும் வழக்கமாய் வெள்ளரிப் பிஞ்சு விற்கும்… ராமு, சுப்பு, கோதண்டம் . .. ஒருவரையும் காணவில்லை.

அந்த பேருந்து நிலையத்தில் வந்து ஒரு நிமிடமோ ஐந்து நிமிடங்களோ நின்றுஏறுவதுதா சாமர்த்தியம்.

‘ இன்று இவர்களையெல்லாம் காணோமே. !.. தான் இன்றைக்கு இங்கே வியாபாரம் செய்தால் என்ன. ..? ‘ என்கிற நினைப்பு வந்தது சிங்காருவிற்கு.

கூடவே அவர்களெல்லாம் ஓடும் பேருந்தில் கூடையைத் தூக்கிக் கொண்டு ஏறவோ, இறங்கவோ செய்வார்கள். தனக்கு அதுமாதிரி லாவகமாக ஏறவோ இறங்கவோ தெரியாதே என்று நினைத்துக் கொண்டான். ஓடும் பேருந்துவிலிருந்து இறங்கத் தெரியாமல் விழுந்து விட்டால். . என்ன செய்வது ?…. என்ற பயமா மனதில் எழுந்தது.

ஆனாலும் இன்றைக்கு அவர்களெல்லாம் இல்லாததால் நான்கிற்குப் பதில் மூன்று விற்றால் கூட அதிகம் பணம் கிடைக்கும் ! என்ற எண்ணம் வர நாக்கில் எச்சில் ஊறியது. ஓடும் பேருந்துகளில் ஏறவும் வேண்டாம் இறங்கவும் வேண்டாம். நிற்கும் பேருந்துகளின் அருகில் சென்று நின்று கூவி விற்றாலே போதும் என்று நினைத்துக் கொண்டான். அதுதான் சரியென்று மனதில் பட. . ‘ இன்று வியாபாரம் இங்குதான் ! ‘ என்று தீர்மானித்துக்கொண்டு தலைச் சுமையுடன் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தான்.

ஆரம்பத்தில் ராமு, சுப்புவெல்லாம் கீழே நின்றுதான் வியாபாரம் செய்தார்கள். நிற்கும் பேருந்துகளின் ஜன்னல் ஓரம் சென்று கூவினால் பயணிகள் வாங்கிக்கொண்டு காசு தருவார்கள். பேருந்து கிளம்பினால்கூட காசைக் கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள். இவர்கள் பொறுக்கிக் கொள்வார்கள். இப்படி வியாபாரம் செய்துதான் கொஞ்சம் கொஞ்சமாக ஓடும் பேருந்தில் ஏறவும், இறங்கவும் பழகிக் கொண்டார்கள். தானும் அதுபோல கொஞ்ச நாள் போனால் பழகிக் கொள்ளலாம் என்று நினைத்தவாறு தலையிலிருந்த கூடையை இறக்கி கீழே வைத்து விட்டு சும்மாட்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.

கூடையுடன் உட்கார்ந்து பிஞ்சுகளை உதிரிகளாய் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தால் சரியாக இருக்காது என்கிற எண்ணம் வர. .. உடன் அருகில் இருக்கும் பூக்கடைக்குச் சென்றான். கொஞ்சம் வாழை நார் வாங்கிக் கொண்டு வந்தான். சின்னதும் பெரிதுமாய்க் கலந்து மூன்று பிஞ்சுகளை பொறுக்கி ஒன்றாகக் கட்டிக் கொண்டான்.

நாலைந்து கட்டுகள் கட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு பேருந்து வந்து நிற்க மூன்று கூறுகளை கையில் அடுக்கி கொண்டு ஓடினான்.

அந்த பேருந்து…. ஒரு வினாடி கூட நிற்காமல் இறங்கத் தயாராக நின்ற பயணிகளை இறக்கி விட்டு விட்டு விர்ரென்று கிளம்பிச் செல்ல. .. ஏமாற்றத்துடன் திரும்பி வந்து கூடைக்கருகில் அமர்ந்த போதுதான் ஒருவர் இவனிடம் வந்தார்.

” கூறு எவ்வளவு. .? ” கேட்டார்.

” பத்து ரூபாய் சார் ! ”

” என்னப்பா இது. நேத்து வித்தவனெல்லாம் நாலு கொடுத்தான். நீ மூன்றை வச்சிக்கிட்டு பத்து ரூபாய் சொல்றே. .? ! ” கேட்டார்.

” காட்ல பிஞ்சிங்க இல்லை சார். மழை இல்லாம வெள்ளாமை சரி இல்லே. ரொம்ப கிராக்கி அதனாலதான். ..” சிங்காரு தன் வியாபார புத்தியை உபயோகித்து சாமார்த்தியமாகப் பதில் சொன்னான்.

” நாலு கொடுத்தா கொடு. இல்லேன்னா வேணாம். .! ” என்றார் அவர்.

இவர் இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர்கள். நான் ஒண்டித்தானே இருக்கேன். இன்னைக்கு ரெண்டு வித்தாலும் மூணு வித்தாலும் தன்னை விட்டால் வேறு கதி கிடையாது. தன்னிடம்தான் வாங்க வேண்டும் என்று நினைத்து. ..

” நாலு வாராது சார் . ” என்றான்.

அவர் வாங்க மனமில்லாமல் நகர்ந்தார்.

அவர் நகர்ந்து சென்ற பிறகு ஒருவன் வந்து. ..

” எலே. .! உன்ன யாரு இங்க உட்கார்ந்து விக்கச் சொன்னது. .? ” என்றான் அதட்டலாக.

நிமிர்ந்து பார்த்தான் சிங்காரு.

குரலுக்கு உரியவன் காக்கி அரைக்கால் டிரவுசரும் , காக்கி மேல் சட்டையும் அணிந்திருந்தான். வந்திருப்பவன் முனிசிப்பாலிட்டிக்காரன் என்று தெரிந்ததும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

” அதோ…. அங்க தூக்கிக்கிட்டுப் போ. .” என்று அதட்டல் போட்டு வெளியே கையைக் காட்ட மிரண்டு போனான் சிங்காரு.

” டேய். .! என்ன முழிக்கிறே. .? தூக்கிக்கிட்டுப் போறீயா. .? இல்ல. .. தூக்கிக் கடாசவா. .? ” என்றவாறு கீழே குனிந்து குடையைத் தூக்க. . எத்தனிக்க…

பயந்து போன சிங்காரு சட்டென்று கூடையைத் தூக்கிக்கொண்டு அவன் காட்டிய திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இவன் பயந்து போனதைப் பார்த்து இரக்கப் பட்ட அவன். …

” சரி. சரி. இங்கேயே வியாபார பண்ணு. .” சொல்லி சிங்காரு தலையில் இருந்த கூடையை இறக்கி வைத்து விட்டு ஐந்து பிஞ்சுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு. ..

” யாராவது கேட்டா. .. நான்தான் வியாபாரம் பண்ணச் சொன்னேன்னு சொல்லு. ” என்று தைரியம் கொடுத்து விட்டுச் சென்றான்.

‘ ப்பூ. .! இந்த மத்தாப்புக்குத்தான் இந்த மிரட்டா. .?! ‘ – நினைத்த சிங்காரு. ..

‘ நாலு பிஞ்சு நட்டம். பத்து ரூபாய் குறைவு ! ‘ என்று துக்கப் பட்டவன். ..

‘ பரவாயில்லே. இனி எவன் வந்து கேட்டாலும்….. அந்த ஆளு விக்கச் சொன்னாருன்னு சொல்லி ஆளைக் கை காட்டலாம் ! ‘ என்று மனசைத் தேற்றிக் கொண்டான்.

அப்போது ஒரு பேருந்து வர. .. மூன்று கட்டுகளை எடுத்துக் கொண்டு ஓடினான்.

அது நிற்க. … அதன் ஜன்னல் அருகில் சென்று. ..

” கட்டு பத்து ! கட்டு பத்து ! ” கையில் வைத்துக் கொண்டு குரல் கொடுத்தான்.

ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி பத்து ரூபாய் ஒன்றை நீட்டி ஒரு கட்டை வாங்கிக் கொண்டாள்.

ஒன்றை விற்றதுமே சந்தோசம் பற்றிக் கொண்டது சிங்காருவிற்கு.

அடுத்து … ஒருவர் கை நீட்ட இவன் ஒரு கட்டை அவர் கைக்குள் திணிப்பதற்குள் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

‘ இன்னொரு பத்து ரூபாய்க்கு வியாபாரம் செய்திருக்கலாம் டிரைவர் கெடுத்துவிட்டார்.! ‘ விசனப்பட்டவன் , ‘ அடுத்து எப்போது பேருந்து வருமோ..? ‘ நினைத்தான்.

தன் கூடை இருக்கும் இடத்திற்குத் திரும்பும்போதுதான் கவனித்தான் கூடையின் அருகில் ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார் .

‘ ஏன் கூடைக்கருகில் நிற்கிறார்.. ? ‘ வியாபாரம் செய்யவா , வெளியேற்றவா..? ! ‘ நினைத்து கலவரமடைந்தவனாய் அருகில் வந்தான்.

‘ ஏய் ! நீ பாட்டுக்க கூடை நெனப்பே இல்லாம வியாபாரம் பண்றீயே..? யாராவது எடுத்துக்கிட்டுப் போனா என்ன செய்வே..? ” என்கிறார்.

” அதெல்லாம் ஒன்னும் ஆகாது சார். அப்படி யாரும் எடுக்க மாட்டாங்க.” சொன்னான்.

” நீ அப்படி நெனைக்கிறீயா.. நான் இங்கே இருக்கிறதுனால அப்படி ஏதும் நடக்காது . இங்கே எவன் எதை தெரியாமல் எடுத்தாலும் இந்த முத்து போலீஸ்காரன் கண் கொத்தி பாம்பா இருந்து கவனிப்பான், பிடிப்பான்னு எல்லோருக்கும் தெரியும் , பயம். சரி. நல்ல பிஞ்சா ரெண்டு கட்டு கொடு.” கையை நீட்டினார்.

சிங்காரு கொடுத்தான். வாங்கி தன் துணிப்பையில் வைத்துக் கொண்டவர் காசு கொடுக்காமல் புறப்பட்டார் .

” ஐ…. ஐயா கா காசு ..? ” கை நீட்டினான் .

” என்ன காசா…? ! ” என்று கேட்டு ஒரு ஏளனப்பார்வை ஒன்றை வீசினார்.

‘ இவரிடம் காசு கேட்டது தவறோ..? ‘ நினைத்தான்.

அவர் அதோடு விடாமல்…

” நான் யாரு தெரியுமில்லே..? ” கர்ஜித்தார்.

போலீஸைக் கண்டாலே பயப்படும் சிங்காருவிற்கு இவர் கர்ஜிப்பு உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. மிரட்சியாகப் பார்த்தான்.

‘ ம்ம்ம்.. அது..? ” என்று உறுமிவிட்டு அவர் நடையைக் காட்டினார்.

‘ ஓசி !! ‘ என்று அவர் முதுகைப் பார்த்து முனகி கூடைக்கருகில் அமர்ந்தான் .

‘ மேலும் இரண்டு பத்து போய் விட்டது என்று நினைக்கும்போது வயிறெரிந்தது . பசியும் கிளம்பியது.

கூடையை விட்டு எழுந்து எதிரிலிருக்கும் முனிசிபாலிட்டி குழாயில் முகம் கழுவிக்கொண்டு ரெண்டு வாய் தண்ணீர் குடித்தான் . பசி கொஞ்சம் அடங்கியது போலிருந்தது.

சிங்காரு கூடையை நோக்கி வரும்போது இரண்டு பேருந்துகள் ஒன்று பின்னால் ஒன்று சேர்ந்து வந்தது .

சிங்காரு அவசர அவசரமாக கையில் கிடைத்த நான்கைந்து கட்டுகளை அள்ளிக்கொண்டு ஓடினான் .

இரண்டு கட்டுகள் வியாபாரம் செய்தான். பின்னால் வந்த பேருந்துவிலிருந்து இறங்கிய ஓட்டுனர் இவனிடம் வந்து ஒரு கட்டை வாங்கி ஒரு பிஞ்சை எடுத்து ருசி பார்த்தார்.

நன்றாக இருக்கவே…

” அவரிடம் வாங்கிக்கோப்பா ” என்று பின்னால் வந்த நடத்துனரைக் கை காட்டிவிட்டு நகர்ந்தார் .

அவர் இவனைக் கண்டுகொள்ளாமலேயே… அப்பால் சென்றார்.

வண்டி கிளம்பும்போது வாங்கிக்கொள்ளாம் என்று நினைத்து வியாபாரத்தைக் கவனித்தான் . இரண்டொரு கட்டுகள் விற்றுக் கொண்டிருந்த போது அந்த வண்டி புறப்பட்டுச் சென்றது.

‘ அதை அடுத்து வருகையின் போது கவனித்துக் கொள்ளலாம்.! ‘ என்று நினைக்கும்போதே.. ‘ இதே டிரைவர், கண்டக்டர் அடுத்து வருவார்களா… ? ‘ யோசனை வர …இதுவும் நட்டம் என்று நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.

அடுத்து வந்த பேருந்துவிலிருந்து யாரோ இவனைக் கை காட்டி அழைத்தார்கள் .

அழைத்தவரிடம் ஓடிப்போய் வியாபாரம் செய்ய அடுத்தவரும் கை நீட்டினார். பிஞ்சைக் கொடுத்து காசு வாங்குவதற்குள் வண்டி புறப்பட்டுச் சென்றது.

வாங்கியவர் காசை விட்டெறிவார் என்று நினைத்தான் . இவன் எதிர்பார்ப்பு வீணாயிற்று. வாங்கியவர் இவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

” சாவு கிராக்கி ! ” சபித்தான்.

கூடையைப் பார்த்தான். ஐந்து கட்டுகள் மிச்சமிருந்த. ஓசி போன கட்டுகளையும் விற்றிருந்தால் கணிசமான தொகை தேறி இருக்கும் நினைத்தான்.

மிச்சமிருக்கும் இந்த கட்டுகளை விற்றால் ஓரளவிற்குத் தேறும் … தோன்றியது.

இப்படி சிங்காரு நினைத்துக்கொண்டிருக்கும்போதே மூன்று பேருந்துகள் ஒன்றன் பின் வந்தது.

எல்லாவற்றையும் விற்றுவிடலாம் என்று நினைத்து கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.

முதல் பேருந்து ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒருவர் பேரம் பேசி ஐந்து கட்டுகளையும் வாங்கினார்.

வாங்கியவர் சாவகாசமாக தன் இருக்கைக்கு அடியிலிருந்து துணிப் பை எடுத்து திணித்துக் கொண்டிருக்கும்போதே பேருந்து புறப்பட்டது .

சிங்காரு … ” காசு ! காசு ! ” என்று கை நீட்டிக்கொண்டே ஓடினான்.

அந்த ஆள்…. இதோ அதோ என்று காசை எடுப்பதைப் பாவ்லா காட்ட பேருந்து வேகமெடுத்தது.

இவனும் காசை வாங்க விடாமல்ஓடினான். ஆனாலும் அவன் ஓட்டத்திற்கும் பேருந்து ஓட்டத்திற்கும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

பேருந்து…நிலையத்தை விட்டு வெளியேறி விட்டது.

‘ தான் மொத்தமாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் !! ‘ என்று நினைத்தபோது ஆத்திரம்தாக்கியது.

‘ இன்றைக்கும் அரை வயிறு கஞ்சிதானா..?! ‘ நினைக்கையில் சிங்காருவிற்கு அவனையும் அறியாமல் அழுகை தொற்ற … கண்கள் குப்பென்று கொப்பளித்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *