கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 12,521 
 

கதை ஆசிரியர்: கி.ரா.

அந்தக்காலத்தில், இப்போது போன்ற நவீன வகான வசதிகள் ஏற்படாத காலம். காசிக்குப் போகிறவர்களெல்லாம் நடந்தேதாம் போகணும். போய்த் திரும்புகிறதென்பது பெரிய்யபாடு. காசி என்றால் அந்த ஒரு சேத்திரம் மட்டுமல்ல; அதைத் தொடுத்துப் பல சேத்திரங்களுக்கும் போகிறது என்றும் உண்டு. போய்த் திரும்ப மாசக் கணக்கு என்றில்லை. வருசக்கணக்கும் ஆகிவிடும். அதுவும் வயோதிகக் காலம் என்று ஆகிவிட்டால் அவ்வளவுதாம்; ஒரு நாடு என்று போகிறவர்கள் திருநாடு (மோட்சம் (சாவு) வைணவ வழக்குச் சொல். திருநாடு) போய்ச் சேர்ந்து விடுகிறதும் உண்டு.

சுலோசன முதலியாருக்கு ஒரு சொந்தக்கார அம்மையார் இருந்தார். விதவை, பிள்ளை குட்டி கிடையாது. வயதும் ஆகிவிட்டது. காசிச் சேத்திரம் போய் உயிரை விட்டால் நேராய்க் கைலாசமே போய்ச் சேர்ந்துவிடலாம் என்று புறப்பட்டார். தன்னிடம் இருந்ததை எல்லாம் ஒரு பொட்டலமாக்கிக் கட்டித் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான சுலோசன முதலியாரிடம் தந்து, திரும்ப வந்தால் வாங்கிக்கிறேன் என்று தந்துவிட்டுப் போனவர்தாம். வருசங்கள் பல ஆகிவிட்டன.

இனி ஆள் வராது என்று ஆகிவிட்டது. அந்தப் பொட்டலத்தை என்ன செய்ய என்று தெரியவில்லை. அப்படி அதில் என்ன பிரமாதமாய் இருக்கப் போகிறது என்று அவிழ்த்துப் பார்த்தால்… வைர வைடூரியம் பதித்த தங்க நகைகள், தங்கக் காசுகள் என்று விலை மதிக்கமுடியாத முதல் இருந்தது. அந்தப் பொட்டணம் அங்கே இதுவரை யாரும் சட்டை பண்ணாத ஒரு இடத்தில், அவருடைய அவ்வளவு பெரிய வீட்டில், ஒரு அறையின் மூலையில் பரணில் கேட்பார் அற்றுக் கிடந்தது.

சரி; இன்னுங் கொஞ்சநாள் காத்திருந்து பார்ப்போம் என்று பார்த்தார் முதலியார். நாட்கள் வருசங்கள் என்று காலம் போய்க்கொண்டே இருந்தது. அந்த அம்மையாருக்கு வேற அக்குதொக்கு என்று யாரும் கிடையாது. இருந்தால் அவர்களிடமாவது கூப்பிட்டுத் தந்துவிடலாம். என்ன செய்ய, யாரிட்டெக் கேட்க என்று தட்டளியுதார்.

அந்த ஊரில் முதலியார் மதிக்கிற ஒரு சாமியார் இருந்தார். அவரைப் பெரிய்ய சித்தர், யோகி என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியான சித்தர்கள் யோகிகள் சமாச்சாரமெல்லாம் ரொம்ப விநோதமாக இருக்கும். அவர்கள் வாயைத் திறக்கமாட்டார்கள். திறந்து பேசினால் என்ன சொல்லுகிறார் என்று அதை விளக்கிச் சொல்ல அதுபோல இன்னொரு சாமியாரிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேணும்! முதலியார் போய்ச் சேர்ந்த நேரம், அந்தச் சாமியார் கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டிருந்தார். இவருக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. வந்து நின்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது. சரி, போய்ட்டு இன்னொரு சமயம் வருவோம் என்று திரும்பி ஒரு எட்டு எடுத்து வைத்திருப்பார். ‘யாருடா’ என்ற குரல் கேட்டது.

சாமீ; அடியேன் வந்திருக்கேம் என்று சொல்லி, நெடுஞ்சாங்கிடையாக் கால்லெ விழுந்து சேவித்தார்.

எழுந்து கும்பிட்டுக்கொண்டே நின்றார். சாமியார், என்ன ஏது என்று கேட்காமல், பேசாமல் கம்மென்று முதலியாரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சரி; சாமியார் கேக்கமாட்டார். நாமதாம் சொல்லணும் என்று விசயத்தை ஆதியோட அந்தமாய் நடந்ததையெல்லாத்தையும் சொல்லி முடித்துவிட்டு, ‘சாமி, இப்போ அந்தப் பொட்டணத்தை நா என்ன செய்யட்டும்’ என்று கேட்டார்.

‘ஆத்துல கொண்டு போடு போ’ என்றாராம்! முதலியார் மனசுக்குள்ளே சிரிப்பு ஒரு பக்கம்; வருத்தம் ஒரு பக்கம். இந்தக் கோட்டிக்காரச் சாமியார் இப்படி சொல்லீட்டாரே என்று.

வெள்ளம் போற ஆத்துல போடுறதா. வெறும் ஆத்துல போடுறதா என்று கேட்கலாமா என்று தோண்ணதாம்.

அது வேற கோவப்பட்டு ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லீட்டா என்ன செய்ய சரீன்னு சொல்லி, திரும்ப ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துட்டார். தாமிரபரணி ஆத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ஊர்ல முதலியாருக்கு நஞ்சை நிலங்கள் இருந்தன. அந்த ஆண்டு நெல் நல்ல விளைச்சல். அறுவடை முடிந்த நெல் மூட்டைகள் வண்டிகள்ளெ பாரம் ஏத்தி ஆத்தைக் கடந்து வந்தபோது, வெள்ளம் ஆத்துல பெருவாரியா வந்து, ஆட்கள், வண்டி மாடுகள், நெல் மூட்டைகள் என்று எல்லாம் ஆத்தோடு போய்விட்டன. முதலியாருடைய நெல்வண்டிகள் மட்டுமில்லை; பல பேருடைய நெல் மூட்டைகளும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டன.

எல்லோருக்குமே அப்பதான் தெரிந்தது. ஒரு பாலம் கட்டி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று சரி; இப்போ பாலம் கட்டணும். சர்க்கார் அனுமதி தந்தது; கொஞ்சம் உதவியும் கிடைத்தது. தன்னிடமிருந்த பணத்தையும் போடலாம். மீதிக்கு என்ன செய்ய. அப்பதான் ஞாபகம் வந்ததாம். அந்தச் சாமியார் சொன்ன ‘ஆத்துல கொண்டுப் போடுடா’ என்ற வாசகம்.

பாலத்துக்குச் சுலோசன முதலியார் வாணம் (அஸ்திவாரம்) தோண்ட ஆரம்பிக்கும்போது சிந்துபூந்துறையிலுள்ள பெரிய மனிதர்களை அழைத்திருக்கிறார். அப்படி வந்தவர்களில் ஒரு வயது முதிர்ந்த பெரியவர் சொன்னார். ‘நாஞ் சின்ன புள்ளெயா இருந்தப்பொ இங்கே ஒரு பாலம் இருந்தது. அந்தப் பாலம் ஒரு பேமழை வெள்ளத்துல அடிச்சிட்டுப் போயிட்டது’.

முதலியாருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருந்தது.

அந்தக் காலத்தில் சிமெண்டு கிடையாது காரைதான். காரைச் சாந்துக்குப் கடுக்காய், கருப்பட்டி, பதநீர் சேர்த்து குழைத்துப் பக்குவப்படுத்திக் கட்டினால் பாறை போல் உறுதியாக நிற்கும். அப்படி கட்டப்பட்டதுதான் இந்த சுலோசன முதலியார் பாலம்.

நாடு வெள்ளை ஆட்சியிடமிருந்து நம்மவர்களுக்குக் கை மாறிய பிறகு வாகன போக்குவரத்து எல்லாம் அதிகமாகியதால் அகலமான பாலம் தேவைப்பட்டது. சுலோச முதலியார் பாலம் ரொம்ப பழையது. அதை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய ஒரு அகலமான பாலம் கட்டுவது என அரசு தீர்மானித்தது. பாலத்தை இடிக்க ஆரம்பித்தவர்கள்; இடிக்கவே முடியவில்லை. இடிக்கக் காண்டிராக்ட் எடுத்தவர் மேலிடத்தில் போய் சொன்னார். பெரிய பெரிய இன்சினீயர்களெல்லாம் வந்து பார்த்துவிட்டு, இது இடிக்கவேண்டிய பாலமில்லை. ரொம்ப உறுதியாக நிற்கிறது. இதன் பக்கத்திலேயே இதை ஒட்டி ஒரு பாலம் கட்டி இதோடு சேர்த்து அகலமாக்கிவிடலாம் என்று சொல்லி, அதேபடி சேர்த்துவிட்டார்கள். இன்றும் சுலோசன முதலியார் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது இந்தப் பாலம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *