தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,571 
 

“”கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே… அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங் கள். சரித்திரம்! மனித வாழ்க்கையின் சாட்சி அது. நாம் இன்று இருக்கிற தேசம் எப்படி உண்டானது, யார் யாரெல்லாம் இதை கட்டியமைத்தனர். இந்த அரசியல் அமைப்பு எப்படி ஸ்திரப்பட்டது என்பதையெல்லாம் விளக்குகிற காலக் கண்ணாடி, சரித்திரப் பாடம்தான். நான் இந்த சப்ஜெக்ட்டை விரும்பி எடுத்துத்தான் படித்தேன். நீங்களும் உண்மையான ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,”
பழைய மாலை!சசி மெல்லிய குரலில் புன்னகையுடன் சொன்னாள்.
ஒரே ஒரு கணம் வகுப்பு அமைதி காத்தது. அடுத்த நொடி, “”ஓ.கே., டீச்சர்… படிக்கிறோம் டீச்சர்,” என்று கோஷ்டி கானம் போல மாணவியர் கூறினர்.
“”நல்லது… எட்டாம் வகுப்பு என்பது அழகான காலக்கட்டம். மனதிலும், உடலிலும் மாற்றங்கள் உண்டாகிற காலம். நான் உங்களுக்கு வெறும் சரித்திர டீச்சராக மட்டும் இருக்காமல், நல்ல தோழியாகவும் இருப்பேன். நீங்களும், எதையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம். என் பெயர் சசி. இரண்டு குழந்தைகள் எனக்கு. மானசா, மனோகர். இரட்டைப் பிறவிகள். இப்போதுதான் ப்ளே ஸ்கூல் போகின்றனர். என் வயதான தாயார்தான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறார், நான் இல்லாத பகல் வேளைகளில்.”
“”ஏன் டீச்சர், சார் இல்லையா?” என்றாள் ஒரு துடுக்குப் பெண்.
“”இல்லை…”
“”வேறு ஊரில் இருக்கிறார்களா?”
“”இல்லை…”
“”வெளிநாட்டில் இருக்கிறாரோ?”
“”இல்லை குழந்தைகளே… சார் இறந்து விட்டார். மிக நல்லவர். ராணுவத்தில் இருந்தார் அதிகாரியாக. நாகாலாந்து கலவரத்தில் கொல்லப்பட்டு விட்டார்.”
“”அய்யோ!” வகுப்பு உடனே அமைதியும் வருத்தமுமானது.
அவள் ஒரு நிமிடம் வானத்து ஒற்றை மேகம் நகர்வதைப் பார்த்தாள்.
“”சமுதாயத்திற்கு ஒரு தனிப்பட்ட மனிதன் என்ன தொண்டாற்ற முடியுமோ, அதை அவர் சிறப்பாக செய்துவிட்டுப் போய் விட்டார். அவர் மனைவியாக, நான்கு ஆண்டுகள் வாழ்ந்ததை என் பெருமையாக கருதுகிறேன். சரி குழந்தைகளே… நாம் பாடத்திற்கு போகலாமா?”
பரிமளா எழுந்து நின்றாள்.
“”ஒரு நிமிடம் டீச்சர்…”
“”சொல் பரிமளா…”
“”உங்கள் பேச்சு, சிரிப்பு, சேலை, அறிவு எல்லாமே எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது டீச்சர்… நாங்களும் நல்ல மாணவியராக இருப்போம் டீச்சர். நீங்கள் சொன்னது போல சரித்திரப் பாடத்தை, ஆர்வத்துடன் படிப்போம் டீச்சர். இந்த வகுப்பின் லீடர் என்ற முறையில், நான் உறுதி அளிக்கிறேன் டீச்சர்,” என்று அவள் சொல்லி முடித்ததும், மற்ற மாணவியரும் எழுந்து, “”ஆமாம் டீச்சர்…” என்று ஒரே குரலில் கூறினர்.
மனநிறைவுடன் அவள் புன்னகைத்தாள்.
அன்றைய நாள் அவ்வளவு நல்ல நாளாக இருக்கப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது.
அம்மா சுருண்டு கிடந்தாள். ஆறு மணிக்கு இவள் சமையலை முடித்துக் கொண்டிருக்கும் போது, அம்மா, கூடமாட ஏதாவது செய்து கொண்டே இருப்பாள். மானசாவுக்கு தலை வாருவது, கீரை ஆய்வது, மனோவுக்கு டினோசார் கதை சொல்வது என்று, வீட்டில் ஒரு இயக்கம் இருக்கும். அப்படி இல்லாமல் அம்மா சில நாட்களில், மைக்ரேன் தலைவலியுடன் கிடக்கிற நாட்களில் அவள் மனமும் சோர்ந்து விடும்.
“”புது டிகாஷன், புது பால், நல்ல சூடா காபி குடிம்மா,” என்று அருகில் உட்கார்ந்தாள்.
“”நான் வேற பாரம்டி சசி உனக்கு,” அம்மாவின் இமைகள் சடாரென்று நீர் கோர்த்துக் கொண்டன.
“”அய்யோ!” அவள் கவலையுடன் முதிய விரல்களைப் பற்றிக் கொண்டாள்.
“”தயவு öŒ#து அப்படி சொல்லாதேம்மா… நீ கொடுக்கிற மனோதைரியம்தான் என் வாழ்க்கைக்கே அடிப்படைம்மா… உனக்குத் தெரியாது அது. ஒரு வேலையும் பண்ண வேண்டாம்… கண்ணை மூடி, படுத்துக்கோ போதும்.”
“”எப்பிடி சசி? ரெண்டையும் கிளப்பி அனுப்பிட்டு, சமையலையும் முடிச்சு, நீ ஸ்கூலுக்கு பஸ் பிடிச்சு ஓடணுமே… லீவு போட முடியாதா?”
“”இல்லம்மா… புது ஹெச்.எம்., ரொம்ப கறார் பேர்வழிம்மா… பேச்சு ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கு… பரவாயில்லம்மா… நீ ரெஸ்ட் எடு.”
“”சின்ன வயசுல, ஏன் பெரிய பாரம் உன் முதுகுல? அதுவும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே போகுற பாரம்,” என்ற அம்மா வேதனை குரல் கொடுக்க, எந்தக் கடவுளும் காலண்டரில் இருந்து இறங்கி வரவில்லை.
அடுத்த சோதனை, பயணத்தில் காத்திருந்தது. திடீர் ஆட்டோ ஸ்டிரைக் என்றனர். கூட்டத்தைப் பார்த்து, பேருந்துகள் அலறி அடித்துக் கொண்டு ஓடின.
நேரம் விரயமாகி விரைந்து கொண்டிருந்ததை கையாலாகாமல் படபடப்புடன் பார்த்தாள். இதயத்தின் துடிப்பு, காதுகளுக்குள் கேட்டது.
தாமதமாவதை, ரோஸிக்கு சொல்லி விடலாம் என்று மொபைல் போனை எடுத்தாள். திடுக்கிட்டாள். சுத்தமாக சார்ஜ் இல்லை. காலை பரபரப்பில், சார்ஜ் ஏற்ற மறந்திருந்தாள். அய்யோ!
பொது டெலிபோன்களில் கூட்டம் மோதிக் கொண்டிருந்தது. அவளும் நின்றாள்.
சூரியனின் உக்கிரக் கதிர், கத்தி போல, நேரே வந்து முகத்தில் குத்தியது. மானசா காலையில் அரை இட்லி கூட சரியாக சாப்பிடவில்லை என்கிற கவலை உள்ளே நெருடிக் கொண்டிருந்த போது, ஒரு பஸ் வந்தது.
தாவி ஏறினாள் அவள்.
எதிர்பார்த்தது போலவே பள்ளி தொடங்கியிருந்தது. மீனாட்சியின் வாயிலிருந்து வரப் போகிற கொடிய வார்த்தைகளை நினைத்தபோது பதைபதைத்தது.
“”இப்பத்தான் வரியா சசி டீச்சர்? போ பெரிசு கூப்பிடுது போ,” தெய்வானை சிரித்தபடி சொல்லி விட்டுப் போனாள்.
அய்யோ, இதென்ன வாழ்க்கை! எதிர்பார்க்கிற நல்லவைகள் நடப்பதே இல்லை. ஆனால், எதிர்பார்க்கிற கெட்டவைகள் எல்லாமே நடந்து விடுகின்றன, அதிவிரைவாக, அய்யோ, இந்த உலகம்!
“”வா சசி, உட்கார்,” என்றாள் மீனாட்சி.
“”சாரி மேடம்… திடீர் ஆட்டோ ஸ்டிரைக், தவிர பஸ்…” என்று அவள் ஆரம்பிப்பதற்குள் மீனாட்சி புன்னகைத்தாள்.
“”இட்ஸ் ஆல்ரைட், அதான் சம்பத் சார் சொல்லிட்டாரே நீ இன்பார்ம் பண்ணியதை,
லீவிட்… இப்ப எதுக்கு கூப்பிட்டேன்னா, உன் ஸ்டூடண்ட்ஸை, எஜுகேஷன் டூர் கூட்டிட்டுப் போகணும் நீ, உன் சப்ஜெக்ட் சம்பந்தமா… சரித்திர புகழ் பெற்ற கோட்டை, அரண்மனை இப்படி… ட்ரை டு ஆர்கனைஸ் அட் த எர்லியஸ்ட்… குட்டே.”
“”யெஸ் மேடம்… நிச்சயமா!” என்று வெளியில் வந்த போது, கனவுலகத்திலிருந்து இறங்குகிற மாதிரி இருந்தது. மீனாட்சியா அன்பு ததும்ப பேசினாள்? நாக்கில் சொடுக்கும், கொடுக்கும், வைத்துக் கொண்டு, சதா ரத்தம் பீறிட வைக்கிற மீனாட்சியா?
“”உரிமை எடுத்துகிட்டதுக்கு மன்னிக்கணும்.”
சட்டென்று திரும்பினாள். சம்பத் நின்றிருந்தான். புன்னகைத்தான்.
“”தாங்க் யூ சார்…” என்றாள் வேகமாக. “”உண்மையில தவிச்சுப் போயிருந்தேன். எந்த டிரான்ஸ்போர்ட்டும் இல்ல, மொபைல் போனும் வேலைக்கு ஆகலே, இன்னிக்கு சாட்டைதான்னு முடிவே பண்ணிட்டேன்…. ஆனா, தெரஸாம்மா மாதிரி பேசினாங்க மேடம்… நன்றி சம்பத் சார்…”
“”நீங்க இன்னும் முழுசா புரிஞ்சுக்கலே சசி,” என்றான்.
“”சார்…”
“”கூட்டத்துல உங்களைப் பார்த்தேன்… என் ஸ்கூட்டர்ல ஏத்திக்கிட்டு வந்திருப்பேன்… துடிச்சுது மனசு… ஆனா, ஏற மாட்டீங்களே… தெரியுமே… ஸ்கூலுக்கு வந்ததும் நீங்க இன்பார்ம் பண்ணதா சொல்லிட்டேன்… ஏதோ ஒரு நிம்மதி,” என்றான். அவளையே கூர்ந்து பார்த்தான்.
“”உதவிகளை பெறுவதற்கு கூட சில தகுதிகள் வேணும் சார்… எனக்கு எதுவும் அப்படி இல்ல.”
“”அது உங்க கருத்து , ஆனா தப்பான கருத்து.”
“”இருக்கலாம்… வரட்டுமா…”
“”ஒரு நிமிஷம்…”
“”சொல்லுங்க சார்…”
“”ஒரு கேள்வி…”
“”என்ன சார்?”
“”கடைசி வரை தனிமரமாவே இருந்துட முடியும்ன்னு நினைக்கிறீங்களா சசி?”
“”நிச்சயமா இல்ல…”
“”அப்படின்னா?” என்றான் முகம் பிரகாசிக்க. “”யெஸ் சொல்லப் போறீங்களா? உங்க அழகான உலகத்துல என்னையும் சேர்த்துக்கப் போறீங்களா?”
“”என் உலகம் மட்டுமில்ல சார், இந்த மொத்த உலகமே அழகானதுதானே… கடைசி வரை இசை, தோட்டம், சுசிலா பாடல்கள், குழல், காய்கறி சமையல்ன்னு, என் பிரியமான எல்லாத்துடனும் வாழப் போறேன் சார், நிச்சயம் தனியா இல்ல.”
அவள் விறுவிறுவென்று நடந்தாள்.
“”உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” அம்மா கத்தினாள். “”வலிய வர்ற பாக்கியத்தை யாராவது தள்ளி விடுவாங்களா? சம்பத் ஒரு நல்ல பி.டி., மாஸ்டர்ன்னு நீயே சொல்லியிருக்கியே சசி? பிறகு ஏன் தயக்கம்? முட்டாளா நீ?”
“”மொதல்ல நீ சாப்பிடும்மா, வத்தக் குழம்பு, உன் பேவரைட்.”
“”விளையாடாதே சசி,” என்ற தாயின் குரலில் சட்டென்று ஈரம் கொப்பளித்தது.
“”அறிவு ஜீவிகள்கிட்ட அன்பு இருக்கிறதில்ல. அன்பா இருக்கிறவங்க அறிவாளிகளா இருக்கிறதில்ல. ரெண்டும் கலந்து இருக்கிறவங்க, நம்ம கூட கடைசி வரை வர்றது இல்லன்னு… இந்த சம்பத்கிட்ட எல்லா நிறைவும் இருக்கு சசி… எல்லா உண்மையும் தெரிஞ்சுதானே வரார் மாலையோட, ஏன் விலகி ஓடறே?” அதற்கு மேல் பேச முடியாமல் அழுது விட்டாள் அம்மா.
அவள் குழந்தைகளுடன் மாடிக்குச் சென்றாள், நிலாச்சோறு ஊட்ட.
ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. காலாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்துவது, அடுத்த வார ஸ்பெஷல் வகுப்புக்கு தயார் செய்வது, தவிர, கல்விச் சுற்றுலாவுக்கு பயண ஏற்பாடு, உணவு, பாதுகாப்பு என்று, அசுர வேலைகளை செய்து கொண்டே இருந்ததில், மதிய சாப்பாட்டை மறந்தே போனாள். தலை சுற்றியது. காலை உணவு கூட சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வந்தபோது உடல் சரிந்தது. கடைசியாக தலை விழுகிற இடத்தில், மிகக் கூரான பாறாங்கல்தான் தெரிந்தது.
“”என்ன சசி? இதுவா படிப்புக்கு செய்கிற மரியாதை? சுவர் இருந்தால்தானே ஓவியம்? உடலை, வயிற்றை அலட்சியப்படுத்தலாமா? சசி, இதைத்தான், மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். உனக்கு துணை வேண்டும் சசி. உன் சுமையை பகிர்ந்து கொள்ள, கை கோர்த்து நடக்க… நல்ல வேளை நான் பார்த்தேன், தாங்கிப் பிடித்தேன். இல்லையென்றால் அந்த விபத்து நிகழ்ந்தேயிருக்கும் சசி… அந்தப் பாறை உன் நெற்றியை வெட்டியிருக்கும்,”
சம்பத் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
உண்மையா? அய்யோ, ஒரு பெண் தனித்து, கம்பீரமாக, மதிப்புடையவளாக, அன்பானவளாக வாழவே முடியாதா? யார் இவள்? சக்தி! நாலு பேருக்கு நன்மை செய்பவள். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை இனிமையாக மாற்றிக் கொள்பவள். அனைத்தையும் தன் பலமாக உருமாற்றிக் கொள்பவள். மதிப்புமிக்க மூன்று உயிர்களை அரவணைப்பவள்.
ஆனால், ஆனால்…
அந்த அணைப்பு ! அந்த பரிதவிப்பு! அதுவா என்னைக் காப்பாற்றியது? பாரபட்சமும் அநீதியும் கறையான் புற்றாய் விரவிக் கிடக்கும் சமூகத்தில், மெல்லிய தென்றல் போன்ற அந்த ஸ்பரிசம்! அய்யோ, நான் என்ன செய்வேன்!
அவள் தடுமாறினாள்.
செஞ்சிக் கோட்டை!
அதன் கம்பீரத்தில், உயரத்தில், உறுதியில், மாணவியர் வியந்து நின்றனர். அவளும் பெருமிதத்துடன் கோட்டையைப் பார்த்தாள். மனிதனின் பரிணாம அறிவு வளர்ச்சி பிரமிப்பூட்டியது. அவ்வளவு உயரத்தில், நன்னீர் சுனையும், பசேல் வேம்பும், லாயங்களும், கொத்தளங்களும் ஆச்சரியத்தைக் கொட்டின.
கைடாக வந்த பெரியவர் சொன்னது கேட்டது.
“”தேசிங்குராஜன் பிரமாதமான ராஜாதான். கோட்டை அவருடையதுதான். ஆனால், ஒரு கோட்டை என்னதான் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். இதோ, இந்த வடக்கு வாசலைப் பாருங்கள், கதவின் வெளிப்புறம், பெரிய ஓட்டை! பிறகு…”
அவள் அப்படியே நின்றாள்.
என்ன சொன்னார்?
கோட்டைக்கும் பலவீனங்கள் உண்டா? அதை புரிந்து எதிரிகள் புகுந்து விடுவாரா? கோட்டை பாதிக்கப்படுமா? அதன் புனிதமும் உறுதியும் தகர்க்கப்படுமா?
அப்படியானால், அவளுக்கும் பலவீனமா? அதுதான் குலைக்கிறதா வாழ்வின் பாதையை? மானசா, மனோ இருவரின் வாழ்க்கை முக்கியமல்லவா? தான், தன் என்று போய் விட்டால், ஒரு வாழ்க்கை வேண்டுமானால் காப்பாற்றப் படலாம். ஆனால், இரண்டு இனிய மழலைகள், இரண்டு இனிய வாழ்க்கைகள் கேள்விக்குறியாகும். அவளுக்கும், புதியவனுக்கும் பிறக்கும் குழந்தை, இந்த சிறார்களுக்கு அரக்கனாய் அமையலாம். அய்யோ!
வேண்டாம். வாழ்க்கை மிக நீளமானது. ஸ்பரிச இன்பமும், இளமைக் கனவுகளும் குறைந்த ஆயுளே கொண்டவை. அவற்றிற்கு முக்கியம் கொடுத்து, நான் இன்னொரு மாலை சூடிக் கொண்டால், பழைய மாலை அர்த்தம் இழந்து விடும். அழகிய நினைவுகளோடு, லட்சிய வேகத்துடன் மானசா, மனோவை வளர்ப்பதுதான் நீதி, என்னைப் பொறுத்தவரையில், என்று, அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டபோது, தேசிங்குராஜாவின் செல்லக் குதிரையின் கல்லறை மலர் அவளைப் பார்த்து புன்னகைப்பதைப் போலிருந்தது.

– வானதி (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *