படிப்பும் பதவியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 4,277 
 

“தம்பி, நீ பரீட்சைகள் எல்லாம் எழுதிப் பாஸ் பண்ணி, பட்டங்கள் வாங்கியிருக்கலாம். ஓயாது புத்தகங்களைப் படித்துப் படித்து அறிவு விருத்தி செய்துகொண்டிருக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருப்பதனாலே ஒண்ணும் நடக்காது. தபாலில் எழுதிப் போட்டு விடுவதனாலும் பிரயோசனமில்லை . பல பேரையும் நேரில் பார்த்துப் பேசிப் பழகணும். பெரிய மனிதர்கள் சில பேருடைய தயவு உனக்கு வேணும். இதெல்லாம் இல்லையென்றால், இந்த உலகத்தில் நீ நன்றாக வாழ முடியாது….”

“வேலையில்லாதவன்” என்ற பட்டத்தோடு உலாவிய இளையபெருமாளுக்கு, அவனுடைய உறவினர் சூரியன் பிள்ளை அடிக்கடி கூறுகிற உபதேசம் இது.

அவனுக்கு ஏதாவது உத்தியோகம் தேடிக் கொடுக்கவேண்டியது தமது கடமை என்று கருதிய சமூகப் பெரிய மனிதர் அவர். அவரால் உபதேசம் புரியத்தான் முடியுமே தவிர, உருப்படியாக எதுவும் செய்ய இயலாது என்பது அவனுடைய அபிப்பிராயம்.

ஆயினும், “அட சூரியன் பிள்ளையால் கூட ஏதோ உதவி செய்ய முடியும் போல் தோணுதே!” என்று இளையபெருமாள் எண்ண வேண்டிய சந்தர்ப்பமும் வந்து சேர்ந்தது.

ஒரு நாள் பிள்ளை அவர்கள் ஒரு கடிதத்தோடு வந்தார். “தம்பி. உனக்கு அக்கறை இல்லையென்றால் கூட, நான் உனக்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏன்னு கேட்கணும். அந்தக் காலத்திலே உங்க அப்பா எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்காக . அந்த நன்றியினாலேயும். உன்னைக் கவனித்துக் கொள்ளும்படி உங்க அம்மா தன் கடைசிக் காலத்திலே என்னிடம் சொல்லிவிட்டுப் போனதனாலேயும்தான் நான் இவ்வளவு சிரத்தை காட்டுகிறேன்.”

சூரியன் பிள்ளை இவ்வாறு பேசத் தொடங்கிவிட்டால், இளைய பெருமாள் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியது தான். தப்புவதற்கு வேறு வழி கிடையாது. இப்போதும் அவன் “சிவனே என்று உட்கார்ந்திருந்தான்.

“நம்ம அறம் வளர்த்த நாதர் இருக்கிறாரே அவருக்குக் காரியதரிசி தேவை என்று கேள்விப்பட்டேன். அறம் வளர்த்தாரைத் தெரியாது உனக்கு? என்ன பிள்ளையப்பா நீ வெறும் புத்தகப் பூச்சியாக இருக்கியே… பெரிய தலைவரு சிறந்த பேச்சாளரு. அப்படி இப்படின்னு அவர் பேரு எங்கும் அடிபடுது. நீ என்னடான்னா அந்த ஆளைப் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது என்கிறீயே!” என்று வருத்தப்பட்டார் பெரியவர்.

“ஓ . அந்த எம்.எல். ஏயை சொல்கிறீர்களா?’ என்று இளையபெருமாள் கேட்டான். அப்பாடா இது புரிவதற்கு இவ்வளவு நேரமாச்சுதா?” என்று பிள்ளை அலுத்துக் கொண்டார். ஆமா அவரேதான். அவருக்கு ஒரு செக்ரடரி வேணுமாம்…

அதுக்கு நான் நீ என்று எத்தனையோ பேரு விழுந்தடிச்சு ஓடுவாங்களே மேலும் அவருக்குத் தெரிந்த பெரிய மனுஷங்க தங்களுக்கு வேண்டிய ஆசாமிகளுக்கு சிபாரிசு செய்வாங்க..” என்று இழுத்தான் இளையவன்.

அதை எல்லாம் பற்றி உனக்கென்ன? நீ நான் சொல்கிறபடி செய் அறம் வளர்த்ததாருக்கு ரொம்பவும் சிநேகிதரான ஒருவரைப் புடிச்சு, நான் ஒரு கடிதம் வாங்கி வந்திருக்கிறேன். உனக்காகத்தான் நீ அதை எடுத்துக் கொண்டு , நம்ம எம்.எல்.ஏயை பார்க்கப் போ. அவர் என்ன சொல்கிறார் என்று பாரேன்” என நம்பிக்கையோடு அருள் புரிந்தார் சூரியன் பிள்ளை.

எம்.எல்.ஏ. அறம் வளர்த்தநாதபிள்ளையைச் சந்திக்கப் போக வேண்டும் என்கிற எண்ணமே இளையபெருமாளுக்குக் கசப்பாக இருந்தது. “சனியன் பிடிச்ச இந்தச் சூரியன் பிள்ளைக்காகத்தான் போய்த் தொலைக்க வேண்டும்” என்று அவன் மனம் புலம்பியது. பிறகு பரவால்லே. அதனாலே கால நஷ்டம் தவிர வேறு நஷ்டம் எதுவும் ஏற்படாது. மூணெழுத்து வாலர் எப்படி இருக்கிறார் என்றும் பார்த்துவிடலாமே!” என்று அவன் தனக்குத்தானே உபதேசித்துக் கொண்டான்.

அறம்வளர்த்தநாதர் எம்.எல்.ஏயை இளையபெருமாள் சந்திக்கச் சொன்ற வேளையில், வேறு அநேகரும் அவர் பேட்டிக்காகக் காத்து நின்றார்கள். காரில் வந்த கனவான்கள் இருவரோடு அவர் உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு ஓட்டுப்போட்டு அவரைப் பெரிய மனிதராக ஆக்கிவிட்ட “இந்நாட்டு மன்னர்களில் பலர் அவருடைய தயவைக் கோரி “பல்லெல்லாம் தெரியக் காட்டி….. சொல்லலாம் சொல்லி நாட்டி, துணைக்கரம் விரித்து நீட்டிக் கெஞ்சுவதற்காகக் காத்துக் கிடந்தார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்களும், படிக்காமலே வாழ்வில் உயர்நிலையை எட்டிப் பிடித்து விட்டவர்களும், பணக்காரர்களும் – பணமில்லாதவர்களும் பல தரத்தினரும் எம்.எல்.ஏயிடம் ஏதாவது ஒரு உதவி பெறுவதற்காக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர் ஆளுக்குத் தக்கபடி பேசி, வந்தவரை எல்லாம் திருப்தி செய்து அனுப்பி வைத்தார்.

‘வயல் விளைந்து சாப்பிடவேண்டிய நிலையில் இருப்பவர்கள் அநேகர் வாய் விளைந்து சாப்பிடுவோர் பலர் – இப்படி ஒரு பெரியவர் சொல்வது வழக்கம். அறம் வளர்த்தார் வாய்த் திறமையால் வயிறு வளர்ப்பவர்; வாழ்க்கையை வளர்ப்பவரும் கூட. இல்லையென்றால் அவர் எம்.எல்.ஏ. ஆகியிருக்க முடியுமா? இவ்விதம் இளையபெருமாளின் மனக்குறளி முணமுணத்துக் கொண்டிருந்தது.

அவசரக்காரர்கள் அனைவரும் போய்ச் சேர்ந்த பிறகு, இளையபெருமாள் பெரியவர் திருமுன் ஆஜரானான். அவருக்கு “வேண்டியவர் எழுதித் தந்திருந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தான். தமிழில்தான் எழுதப்பட்டிருந்தது அது. எழுதியவரின் தமிழ்ப்பற்றை அது காட்டுகிறது என்றே இளையபெருமாள் எண்ணியிருந்தான்.

“உனக்கு இங்லீசு பேச வருமா?” என்று கேட்டார் எம்.எல்.ஏ.

“நான் பி.ஏ. பாஸ் செய்திருக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் அறிவித்தான் அவன்.

அறம் வளர்த்த நாதர் புன்னகை பூத்தார். “நீ என்னிடம் இஞ்லீசு பேசணும்கிற அவசியமே கிடையாது. என் செக்ரடரி எனக்காக மற்றவர்களிடம் இஞ்லீசில் பேசினால் போதும்” என்றார். அவன் பெயர், ஊர். உறவுப் பெரியவர்கள் பற்றி எல்லாம் விசாரித்தார். திடீரென்று. “எனக்குக் காரியதரிசியாக வேலை பார்ப்பதனால், என்னென்ன செய்யணுமின்னு உனக்குத் தெரியுமா? அந்தப் பொறுப்பை சரியாக நிர்வகிக்க முடியும்கிற நம்பிக்கை உனக்கு இருக்குதா?” என்று கேட்டார்.

“ஒரு செக்ரடரிக்கு என்னென்ன கடமைகள் உண்டோ அவற்றை எல்லாம் செய்யத் தயாராக இருக்கிறேன். கடிதங்கள் எழுதுவது, செய்யவேண்டிய அலுவல்கள் பற்றி நினைவு படுத்துவது, பார்க்க வருகிறவர்களுக்கு….

ப்சா என்று கையசைத்தார் தலைவர். அதெல்லாம் சரிதாம்பா. அவை தவிர முக்கியமான சில டூட்டிகளும் உண்டு” என்றார். சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு கேட்டார். ஆங்கிலத்தில் உள்ளது எதையும் தமிழாக்க முடியுமா உன்னாலே?”

‘முடியும் ஸார். பல கதை கட்டுரைகளை நான் தமிழ்ப்ப டுத்தியிருக்கிறேன்….”

“தினசரி பத்திரிகைகள் படிக்கிறது உண்டுமா?”

“மேலோட்டமாகப் பார்ப்பது வழக்கம். ஒன்று விடாமல் செய்திகள் பூராவையும் நான் படிப்பதில்லை”.

“நீ ஹிண்டு பேப்பரை வரி விடாமல் படிக்கணும். அதில் வருவதில் முக்கியமானவற்றை எனக்குச் சொல்லணும். என்னைப்பற்றி எந்த இங்லீசுப் பேப்பர்லே என்ன வந்தாலும் சரி, அவைகளை என் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு, எழுத்துவிடாமல் தமிழாக்கித் தரணும். உணக்கு ஞாபகசக்தி அதிகம் இருக்கணும். நான் எங்கே எப்போது என்ன பேசினேன் என்பதை நீ நினைவில் வைத்திருக்கணும். நான் மறந்துவிட்டால் நீ ஞாபகப் படுத்தவேண்டும் சில சமயங்களிலே நான் வேணுமென்றே மறந்து போகிற விஷயங்களும் உண்டு. அவற்றை நீ சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு ஞாபகப் படுத்த முன்வரக்கூடாது. உதாரணமாக, நம்ம கட்சி அரசியல் கட்சி என்று சில சமயங்களில் எழுதியிருப்பேன். பேசியுமிருப்பேன்.

அவசியம் ஏற்படுகிறபோது, நம்ம கட்சி அரசியல் அடிப்படையில் உள்ள கட்சி அல்ல; அது வெறும் கலாசார அமைப்பேயாகும் என்று சொல்லுவேன். ஆனால், மாற்றுக் கட்சிக்காரர்கள் இப்படியெல்லாம் சொல்ஜாலம் பண்ணினால் அதைக் கண்டிக்கத் தயாராவேன். இதுகளை எல்லாம் கவனிச்சு அதுக்குத் தக்கபடி நடந்து கொள்ளணும். என்ன, தெரியுதா?” என்று கேட்டு இளையவனின் முகத்தை நோக்கினார் பெரியவர்.

”உம்ம்” என்று இழுத்தான் அவன்,

“எனக்கு பிரசங்க விஷயங்கள் தயாரித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உனக்கு உண்டு. அரசியல், பொருளாதாரம், கலை. இலக்கியம், சமூகம் சம்பந்தமான நல்ல நூல்களை எல்லாம் நீ படிக்கணும்… பத்திரிகைக் காரனுக ஆண்டு மலரு, தீபாவளி மலரு. சுதந்திர மலரு, பொங்கல் மலருன்னு எழவெடுப்பாங்க. அப்போல்லாம் நம்ம உசிரை வாங்குவானுக. அப்பப்போ கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். அந்த வேலையும் உனக்குத்தான். என்ன. தெரியுதா?”

இளையபெருமாள் வெறுமனே தலையாட்டினான்.

“நான் செய்கிற பிரசங்கங்களைக் குறிப்பெடுத்து வந்து, பிறகு விரிவாக எழுதித்தரணும். சில சமயம் எனக்காக நீயே புத்தகம் எழுத வேண்டிய அவசியம் கூட ஏற்படலாம். அதாவது நீ எழுதவேண்டியது. ஆசிரியர் என்கிற இடத்திலே நம்ம பேரு இருக்கும்… இன்னும் பல அலுவல்கள் இருக்கும். அதை எல்லாம்
அவ்வப்போது சொல்வேன் என அருள் புரிந்தார் அறம் வளர்த்தார்.

அவராகச் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த இளையபெருமாள், “சம்பளம் எவ்வளவு தருவீர்கள்?” என்று கேட்டான்.

“சம்பளமா?’ என்று தலையைச் சொறிந்தார் தலைவர். “சம்பளமா!” என்று மோவாயைத் தடவினார். எழுபத்தஞ்சு” என்றார். எழுபத்தஞ்சு போதாது?” என்றும் கேட்டார், ஏதோ பெருந்தொகையை வாக்களித்துவிட்டவர் போல.

இளையபெருமாள் வறட்டுச் சிரிப்பு சிரித்தான். “உங்கள் காரியதரிசியாகப் பணி புரிவதற்கு இது மிகவும் சொல்பமான சம்பளம் ஸார். இது காணாது” என்றான்.

“ஹேங் என ஒலி உதிர்த்தார் பெரியவர். “உங்களுக்கு இதைவிட அதிகமாக எங்கே அள்ளித் தாறாகளாம்? குமாஸ்தா வேலைக்குப் போனாலும் உனக்கு என்ன கிடைக்கும்? எம். எல். ஏ. அறம் வளர்த்தநாதரின் செக்ரடரின்னு சொன்னா, அதுக்கு எவ்வளவு மதிப்பு உண்டு தெரியுமா? முன்னாலே ஒரு பையன் நம்மகிட்டே இருந்தான். அவனுக்கு சம்பளமின்னு நான் கொடுத்ததே கிடையாது. அவன் கேட்டதுமில்லை. அப்போ அப்போ செலவுக்கு என்று பத்து, இருவது கொடுப்பேன். ஆனால் அவன் சாமர்த்தியசாலி. எம்.எல் ஏயின் செக்ரடரி – தனித்துவக் கட்சித் தலைவரின் காரியதரிசி என்ற ஹோதாவிலே புகழும் பணமும் பெறவேண்டிய முறை
அவனுக்குத் தெரிஞ்சிருந்தது…..

இளையபெருமாள் குறுக்கிட்டான். அதெல்லாம் வேண்டாம் ஸார். நியாயமான சம்பளம்…’

“ஓகோ, நான் அநியாயமாகவா பேசுறேன் உன்கிட்டே?. நமக்கும் உனக்கும் சரிப்படாது ஐயா, போ. உடனே போய்ச் சேரு” என்று கட்டளையிட்டார் அவர்.

“நன்றி. மிக்க மகிழ்ச்சி” என்று கும்பிடு போட்டு விட்டு வெளியேறினான் இளையவன்.

அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த சூரியன் பிள்ளை, ஆவலுடன், “என்னடே? போன விஷயம் என்ன ஆச்சு? காயா, பழமா?” என்று விசாரித்தார்.

“ஒண்ணும் ஆகலே!” என்ற இளையபெருமாள் நிகழ்ந்தது பற்றி அறிவித்தான்.

பொறுமையோடு கேட்டிருந்த சூரியன் பிள்ளை படபடத்தார். “அட போ, புத்தி கெட்டவனே! பிழைக்கத் தெரியாத பிள்ளை ”

“பிழைக்கணுமே என்று எதை வேண்டுமானாலும் செய்யணுமாக்கும்? அவர் பதவி அவர்மட்டுக்கு! சரியாகப் படிக்கக்கூடத் தெரியாத அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் செய்யணுமாம். எழுபத்தஞ்சு ரூபா தருவாராம்!” என்று ஏளனமாகச் சொன்னான்.

“படிப்பு இல்லே என்கிறதுனாலே அவருக்கு என்ன குறைஞ்சு போச்சு? பி.ஏ. படிச்சுக்கிழிச்ச நீ என்ன உசந்திட்டே? இல்லை கேட்கிறேன். மெத்தப் படிச்ச மேதாவிகள், பணக்காரனுக, பெரிய இடத்து ஆசாமிகள் எல்லாரும் இன்னிக்கு அவரு தயவை நாடி அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறாங்க. எத்தனையோ பிஏக்களும் எம் .ஏக்களும் கவனிப்பாரற்றுக் கிடக்கிறாங்க. அப்படிப்பட்ட பெரியவருடைய செக்ரடரி என்றால் சும்மாதானா? எவ்வளவு கௌரவம், என்ன மதிப்பு, எத்தகைய செல்வாக்கு என்று நீட்டினார் சூரியன் பிள்ளை.

அதுக்காக, பண்பாடு குறைந்த வகையில்…. “சீ போ!” என்று சீறினார் பிள்ளை . “இவரு பெரிய இவரு பண்பாடு, அது இதுன்னு பேச வந்துவிட்டாரு… பிழைக்கத் தெரியாத மடையன் என்று எரிந்து விழுந்தவாறே வெளியேறினார்.

இளைய பெருமாள் அலட்சியமாகச் சிரித்தான். என்னவோ சொல்வார்களே – இருவேறு உலகத்து இயற்கை: திரு வேறு தெள்ளியராதல் வேறு என்றா? அதை இப்படியும் சொல்லாமனு தோணுது –

பல்வேறு உலகத்து இயற்கை
பணம் வேறு, பதவி வேறு
படிப்பு வேறு, பண்பும் வேறுவேறே!”

அவனுடைய அறிவின் மின்வெட்டை ஏற்று, ரசித்து, மகிழ்வதற்கு அருகில் யாரும் இல்லை. அவன் வெறும் நபர்தானே!

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *