படிக்காத நண்பன்!

2
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,098 
 

ரசிதம்பரம் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது தான், முருகேசனை பார்த்தான் ராம்குமார்.
தன்னைப் பார்ப்பதற்குள், ஒளிய இடம் தேடுவதற்குள் பார்த்து விட்டான் முருகேசன். பார்த்தது மட்டுமல்லாமல், கட்டம் போட்ட சட்டையணிந்த முருகேசன், கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல், சப்தமாக கையசைத்தபடி, ஆனால், முகமலர்ச்சியுடன் கூப்பிட்டான்.
“”ஏய் ராம்குமார்…”
அப்போது தான் பார்த்தது போல், பதிலுக்கு ராம்குமாரும், “”ஹாய்…” என்று, செயற்கை புன்னகையுடன், சிக்கனமாய் கையசைத்தான்.
படிக்காத நண்பன்!ஷூ அணிந்து, மெல்லிய கோடு போட்ட முழுக்கை சட்டையை பேன்ட்டினுள் டக் – இன் செய்திருந்தான் ராம்குமார்.
அதிசயமாய் பேன்ட் அணிந்திருந்தான் முருகேசன். இன்ன உடை என்று கிடையாது. பொது இடம் என்று கூட பாராமல், லுங்கி அணிந்து வருவான். சில நேரங்களில் ஷாட்ஸ் வேறு.
அருகே நெருங்கி, சிரித்தபடி உரிமையுடன் ராம்குமாரின் கையை பிடித்து குலுக்கினான் முருகேசன்.
“”எப்படியிருக்க ராம்குமார்?”
“”நல்லாயிருக்கேன்… நீ?”
“”சூப்பர்… வா, டீ சாப்பிடலாம்.”
“”வேண்டாம். நான் இப்பதான்…”
சொல்லி முடிப்பதற்குள், அருகிலிருந்த டீ கடையி<னுள் நுழைந்து, நூறு ரூபாய் தாளை நீட்டி, இரண்டு டோக்கன் கேட்டான் முருகேசன். ""சில்லரை இல்லையே முருகேசா... இப்பத்தான் பைனான்ஸ் கட்டினேன். சரி வர்றப்ப கொடு,'' என்று கூறினார் கடைக்காரர். முருகேசன் புன்னகையுடன் தலையாட்டினான், முதல் டீயை வாங்கி, ராம்குமாருக்கு கொடுத்துவிட்டு, அடுத்த டீயை தான் வாங்கிக் கொண்டான். ராம்குமாருக்கு லேசாக எரிச்சல் தான். வேறு வழியில்லாமல், டீயை உறிஞ்சத் துவங்கினான். பூந்துறை கிராமம். சிதம்பரத்துக்கு அருகில் உள்ள இக்கிராமத்தில் தான், ராம்குமாரும், முருகேசனும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். சொந்த ஊரும் கூட. படிப்பில், இருவரும் எதிர் துருவம். ராம்குமார் எப்போதும், முதல் ரேங்க்; முருகேசன் அனைத்து பாடங்களிலும் கடைசி. எந்த ஆசிரியர்கள் வகுப்பில் நுழைந்தாலும், முருகேசன் பெயரை, ஒரு முறையாவது உச்சரிக்காமல் செல்ல மாட்டார்கள். "முருகேசன் வீட்டுப் பாடத்தை முடிச்சுட்டானா?' "என்ன முருகேசா... முகத்துல ஒரே சிரிப்பா இருக்கு?' "முருகேசனுக்கு உடம்புதான்டா வளருது... மண்டையில ஒண்ணும் கிடையாது. ரெண்டு வருஷத்துல கல்யாணமே பண்ணிடலாம்டா...' வகுப்பே, "கொல்' என சிரிக்கும். அமைதியாக இருப்பதா அல்லது தானும் கூட சேர்ந்து சிரிப்பதா என்று தெரியாமல் விழிப்பான் முருகேசன். ஏதோ ஒரு வகையில் ராம்குமாருக்கும், முருகேசனுக்கும் வகுப்பில் இணைப்பு ஏற்பட்டு கொண்டேயிருந்தது. "ராம்குமார்... எப்பவும் இதேப் போல பஸ்ட் ரேங்க் வரணும் புரியுதா... கொஞ்சம் அசந்தா முருகேசன் மாதிரி ஆயிட வேண்டியதுதான்...' "முருகேசா... உனக்கு என்னடா குறை வைக்கிறோம்... ராம்குமாரை பாருடா... அவன் படிக்கிறதுல, கால்வாசி படிச்சாக் கூட நல்ல மார்க் வாங்கலாமேடா...' ஆசிரியர்கள், முருகேசனுடன் தன்னை கம்பேர் செய்து உயர்த்தி பேசுவது, ராம்குமாருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எதையும் கண்டு கொள்ள மாட்டான் முருகேசன். சில பணிகளை தானே முன் வந்து செய்வான். கால் உடைந்த டெஸ்கை சரி செய்வான்; வகுப்பிற்கு, குடத்தை தோளில் சுமந்து தண்ணீர் கொண்டு வருவான்; மூலையில் கூட்டப்பட்ட குப்பையை, யாரும் சொல்லாமலே அள்ளிச் சென்று, வெளியில் குப்பைத் தொட்டியில் கொட்டுவான். ஒரு காலக்கட்டத்தில், விதி இருவரையும் அதிகமாக இணைத்தது. புதிதாக வந்த கணித ஆசிரியர், அனைத்து மாணவர்களையும் உயர பிரகாரம் அமர வைத்த போது தான் அது நடந்தது... ராம்குமாரும், முருகேசனும் அருகருகே அமரும் சூழல் ஏற்பட்டது. மாணவர்களுக்கு கிண்டலா இருந்தது; ராம்குமாருக்கு எரிச்சலாக இருந்தது; முருகேசனுக்கு வெட்கமாக இருந்தது. இடம்மாற எவ்வளவோ முயற்சித்தான் ராம்குமார்; முடியவில்லை. தன் கோபத்தை, வேறு வழியில் காட்டத் துவங்கினான். தன் நண்பர்களுக்கு காப்பி அடிக்க கொடுக்கும் கணக்கு நோட்டை, முருகேசனுக்கு மட்டும் காட்டவே மாட்டான். கெஞ்சிப் பார்ப்பான் முருகேசன். வாய்ப்பே இல்லை. முருகேசன் அடிவாங்கும் போது, உள்ளுக்குள் சிரிப்பான். காலம் கடந்தது. முருகேசன் அதே வகுப்பில் பெயிலாக, ஒன்பதாம் வகுப்பு சேர, சிதம்பரம் தனியார் பள்ளிக்கு சென்று விட்டான் ராம்குமார். ""டம்ளரை குடுடா...'' ராம்குமாரின் கையிலிருந்து காலியான டீ டம்ளரை, <உரிமையாய் வாங்கி, மேசை மீது வைத்து விட்டு, ""ஆமா... என்ன இந்த பக்கம்... மெட்ராசே கதியின்னு கிடப்பியே...'' ""ஒரு சின்ன வேலை, அதான்...'' ""என்ன வேலை?'' "விடமாட்டானே... சொல்லலாமா, வேண்டாமா... சொல்லித்தான் வைப்போம். அவன் என்ன செய்யப் போகிறான்...' ""ஒண்ணுமில்ல முருகேசா... மெட்ராஸ்ல ஒரு கம்பெனியில மேனேஜரா இருக்கேன்ல...'' ""ஆமா சொல்லியிருக்கே...'' ""நானே தனியா சொந்தமா, ஒரு சின்ன கம்பெனியை ஆரம்பிக்கலாம்ன்னு ஒரு ஐடியா. ஒரு பத்து லட்சம் தேவைப்படுது.'' ""பத்து லட்சமா?'' ""ஆமா ரெண்டு பார்ட்னர். நான் பத்து லட்சம், இன்னொருத்தர் பத்து லட்சம். யூனியன் பேங்க்ல, அப்ளை செய்திருக்கேன். ஊர்ல இருக்கிற நிலத்தை செக்யூரிட்டியா காட்டியிருக்கேன். ரெண்டு கவர்ன்மென்ட் ஸ்டாப் ஜாமின் கையெழுத்து போட்டிருக்காங்க. ஆனா, இன்னும் பேங்க் மேனேஜர் இழுத்தடிச்சிட்டிருக்காரு.'' ""எப்போ அப்ளை பண்ணே?'' ""ஆறு மாசம் ஆச்சி... அதுக்காகத் தான் சென்னையிலேயிருந்து வந்தேன். இன்னைக்கு காலையில தான் அவரை பேங்க்ல பார்த்தேன்.'' ""என்ன சொன்னாரு?'' ""அடுத்த மாசம் வாங்க... பார்க்கலாம்ன்னு சொல்றாரு,'' முருகே சன் ஏதோ யோசிக்க ஆரம்பித்தான். முருகேசனிடமிருந்து சீக்கிரம் விடுபட எண்ணி, ""சரி முருகேசா... பக்கத்துல ஒரு பிரண்டை பார்த்துவிட்டு நான் கிளம்பறேன்.'' உறுதியான குரலில், ""சரி ராம்குமார்... வா போகலாம்,'' என்று கூறினான் முருகேசன். ""எங்கே?'' ""அந்த மேனேஜர், இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார்.'' ""மேனேஜர் வீட்டுக்கா...'' ""ஆமாம்... வீடு ரெண்டு தெரு தள்ளிதான் இருக்கு. வா, வீட்டுக்குப் போய் பேசுவோம்.'' ஆடிப்போ# விட்டான் ராம்குமார். "நானே பக்குவமாய், ஆறுமாதமாய் அவரை ஹேண்டில் செய்து கொண்டிருக்கிறேன். இவனை அழைத்து சென்றால், என்ன ஆவது?' ""எனக்கும் வீடு தெரியும். வீட்டுக்கு போனா தப்பா நினைப்பார். எனக்கு இன்னும் நேரம் இருக்கு. லோன் மெதுவாக் கூட வாங்கிக்கலாம்,'' அவசர அவசரமாக சொன்னான் ராம்குமார். ""அட நீ வேற... எனக்கு கொஞ்சம் பழக்கமுண்டு. சிபாரிசு செய்யலாம்ன்னு கூப்பிட்டா, பயன்படுத்திக் கணும். யோசிக்கறியே?'' "அடப்பாவி... இவனை சிபாரிசுக்கு அழைத்துச் சென்று, உள்ளதையும் கெடுத்துக் கொள்வதா?' ""இல்லை முருகேசா... யோசிக்கலை. உனக்கு ஏன் வீண் சிரமம்ன்னு...'' ""மண்ணாங்கட்டி. ஒரு சிரமமும் இல்லை. வா என்கூட.'' மறுத்தால், சப்தம் போட்டு திட்டுவான் என தோன்றியது. வேறு வழியில்லாமல் பின் தொடர்ந்தான் ராம்குமார். ராம்குமார் நல்ல மதிப்பெண்களுடன் கல்லூரிப் படிப்பிற்குள் நுழைந்த போது தான், முருகேசன் தட்டுத் தடுமாறி, படாதபாடு பட்டு, இரண்டு அட்டெம்ட்களுக்கு பின், பத்தாவது தேர்ச்சி பெற்றான். அதற்கு மேல் படிக்க முயற்சி செய்வது, அநியாயம் எனப்பட்டது. வீட்டிலும் வற்புறுத்தவில்லை. அதன் பின், முருகேசனின் வாழ்க்கை இலக்கின்றி, காட்டாறு கணக்காய் ஓடியது. வெவ்வேறு தொழில்கள்; வெவ்வேறு ஊர்கள்; இடையில் திருமணம், இரு குழந்தைகள். தேங்காய் மண்டியில் வேலை பார்த்தான். கடைகளுக்கு தின்பண்டங்கள், "சப்ளை' செய்து பார்த்தான். இறுதியாக கட<லூரில் வாழைப்பழ வியாபாரம் மொத்தமாகவும், சில்லறையாகவும் செய்து வருகிறான். ராம்குமார், பட்ட மேற்படிப்பை முடித்து நல்ல ஆங்கில அறிவு, கணிப்பொறி அறிவுடன் சென்னையிலேயே தனியார் நிறுவனத்தில் சேர்ந்து விட்டான். சம்பளத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு கம்பெனியாய் மாறினான். இறுதியாக ஒரு எலக்ட்ரானிக் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியில் மேலாளர் பதவி. "செட்டில்' ஆக வேண்டும் என்று, இன்னும் திருமணம் செய்யவில்லை. இருவரும் அவ்வப்போது சிதம்பரத்தில் எதிர்பாராமல் சந்தித்து கொள்வதோடு சரி, அப்போதும் முருகேசன் தான் ஓடிப்போய் வலிய பேசுவான். ராம்குமார் பேருக்கு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, "எஸ்கேப்' ஆகவே முயற்சிப்பான். ""ராம்... சார் வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போவமா? வெறுங்கையோட போனா நல்லாயிருக்காது!'' ""சரி... பழம் வாங்கிட்டு போகலாம்.'' ""பழம் வேணாம்.'' ""வேற?'' ""சாருக்கு விரால் மீனுன்னா உசுரு. பக்கத்துலயே ஒரு மீன் கடை இருக்கு. வாங்கிட்டு போகலாம்,'' என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பாராமல் நடந்தான். ராம்குமார் அரண்டு விட்டான். "ஒரு பேங்க் மேனேஜர் வீட்டுக்கு, அதுவும் முதல் முறை செல்லும்போது, மீன் வாங்கி கொண்டா செல்வது?' மீன் கடை வந்து விட்டது. வரிசையாய் நாலைந்து கடைகள், ஒரு கடையில்... ஒரு அம்மா முருகேசனை பார்த்ததும், வெற்றிலை சிரிப்புடன், ""என்ன முருகேசு... ஆளையே பார்க்க முடியல?'' ""கடலூர்ல வியாபாரம். நேரம் கிடைச்சாதான் வர்றது. ஆமா, விரால் மீன் எப்படி?'' ""உனக்கு இன்னா சொல்லப் போறேன்... கிலோ நூத்தம்பது. உயிர் மீனு பார்த்துக்கோ...'' அன்னக்கூடை நீரில் உலவிக்கொண்டிருந்தன உயிர் விரால்கள். ""ரெண்டு கிலோ போடும்மா...'' சொன்னவன், ராம்குமார் பக்கம் திருப்பி, ""ராமு... இருநூற்றம்பது எடு.'' "அடப்பாவி... என் காசை வாங்கி, என் லோனுக்கே வேட்டு வைக்கிறானே...' இருநூற்றைம்பது ரூபாயை கொடுத்துவிட்டு, ஒரு துணிப்பையில் விரால் மீன்களை வாங்கிக்கொண்டு திரும்ப, மீன்காரம்மா, ""முருகேசா... அது நானூரு ரூபா மீனு... உனக்குன்னு குறைச்சு சொன்னா, நீ இன்னும் குறைச்சுட்டே...'' சிரிப்புடன், ""சரிம்மா... நண்பர் கூட வந்திருக்காப்பல, நம்ம கடைன்னு தானே தேடி வந்திருக்கோம்.'' அந்த அம்மா பேச்சை மாற்றி, ""முருகேசா... பூபதியை ஆறாங்கிளாஸ் சேக்கிறேன்னு சொன்னியே, மறந்திடாதப்பா...'' ""ஏற்கனவே சொல்லிட்டேன். ஏழாந்தேதி அப்ளிகேஷன் தர்றாங்க. வாங்கி மட்டும் வச்சிடு. அடுத்த வாரம் கடலூர்ல இருந்து வருவேன். அவனை கான்வென்ட் ஸ்கூல்ல சேக்கிறது என் பொறுப்பு... வரட்டுமா?'' ""ரொம்ப நன்றிப்பா!'' சொன்னதை காதில் கூட வாங்காமல். திரும்பி நடந்தான். ""என்ன விஷயம்?'' என்று கேட்டான் ராம்குமார். ""ஒண்ணுமில்ல... அந்தம்மா பேரன், கிராமத்துல அஞ்சாம் கிளாஸ் படிக்கிறான். அருமையா படிப்பான். அப்படியே உன்னமாதிரித்தான். ஆறாங்கிளாஸ்ல இருந்து, கான்வென்ட் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிக்கணும்ன்னு பாட்டிக்கு ஆசை. அதுக்குத் தான் ஏற்பாடு செஞ்சுட்டிருக்கேன்.'' நடை தொடர்ந்தது. மேனேஜர் வீடு. மாலைப்பொழுது துவங்கி விட்டிருந்தது. கிரில் கேட்டை திறந்து, சற்று நடந்து, காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தனர். மிக இயல்பாக இருந்தான் முருகேசன். ராம்குமாருக்கு தான் படபடப்பாய் இருந்தது. "இப்போது கூட திரும்பி விடலாம்...' என யோசித்தான். அதற்கு மேல் யோசிக்க அவகாசமில்லாமல், கதவு திறக்கப்பட்டது; வெளிப்பட்டது மேனேஜர்தான். முருகேசன் பவ்யமாய், ""வணக்கம் சார்.'' புன்னகையுடன், ""வா முருகேசா... எப்படியிருக்கே?'' என்றவர் இயல்பாய் திரும்பி, ராம்குமாரை யோசனையாய் பார்த்து, ""நீ... நீங்க?'' ""வணக்கம் சார்... நான் ராம்குமார், இன்னைக்கு காலையில உங்களை பேங்க்ல மீட் பண்ணினேன் சார்.'' ""ஆமாம், ஆமாம்... பிசினஸ் லோன் அப்ளை செய்திருக்கீங்கள்ல?'' ""ஆமா சார்...'' எதிரில் இருந்த நாற்காலிகளை காட்டி, ""முருகேசா <உட்கார். நீங்களும் உட்காருங்க.'' முருகேசன் இயல்பாய் அமர, தயக்கமாய் அமர்ந்தான் ராம்குமார். ஆனால், அதன்பின் ராம்குமாரிடம் பேசாமல், ""சொல்லு முருகேசா... வீட்ல எப்படியிருக்காங்க... ஏதாவது விசேஷமா... அதிசயமா இந்தப்பக்கம் வந்திருக்கே?'' சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மேனேஜரின் மனைவி வெளிவர, ""வா முருகேசா... நல்லாயிருக்கியா?'' ""நல்லாயிருக்கேம்மா...'' சொல்லிவிட்டு, பக்கவாட்டு தரையில் வைத்திருந்த விரால்மீன் பையை எடுத்து கொடுத்தான். ""உயிர் விரால் மீனும்மா...'' ""ஏது முருகேசா?'' ""வழியில் கிடைச்சதும்மா... ஐயாவுக்கு ரொம்ப பிடிக்கும். ரெகுலரா கிடைக்காது. கிடைக்கறப்ப உடனே வாங்கிடணும்.'' ராம்குமாருக்கு எரிச்சல் வந்தது. "தேவையில்லாமல் பேசுகிறானே...' ""சார்... இவரு ராம்குமார்; என் பிரண்ட்.'' "போச்சு... போச்சு... பிரண்ட் என்று வேறு சொல்லி விட்டான். என் லோன் சாங்ஷன் அவ்வளவுதான்...' ""சரி...'' ""நம்ம பேங்க்ல, பிசினஸ் லோனுக்கு விண்ணப்பம் குடுத்திருக்கிறார். ஐõமின், செக்யூரிட்டி எல்லாம் முறையா குடுத்திருக்கிறாராம். லோன் கிடைக்க தாமதமாகும்ன்னு சொன்னாப்பல. நான்தான்... சரி... சாரை பார்க்கலாம்ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டேன். தவறா நினைக்காதீங்க.'' ராம்குமாரை பார்த்து, ""அந்த பத்து லட்சம் ரூபாய் லோன் தானே?'' என்று கேட்டார் மேனேஜர். ""ஆமாம் சார்...'' முருகேசன் பக்கம் திரும்பி, ""முருகேசா... ஒண்ணுமில்ல. சார் எல்லாமே பிராப்பரா சப்மிட் செய்திருக்கிறார். பேங்க் ரூல்ஸ் என்னன்னா, சீனியாரிட்டிபடிதான் லோன் சேங்ஷன் செய்ய முடியும். ரெண்டு வருஷத்துக்கு இத்தனை அலாட்மென்ட்டுன்னு டார்கெட் இருக்கு. அதனால் தான் லேட்டாவுது. மத்தபடி ஒண்ணுமில்ல.'' ஏதோ அதிகாரிக்கு விளக்கம் அளிப்பது போல, முருகேசனுக்கு புரியும் வகையில், நிதானமாக பேசிக் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. ""ஐயையோ... நான் ஏதும் தவறா நினைக்கலை சார். நம்பிக்கையான நண்பன் சார். தொழிலுக்கு அவசரமா தேவைப்படுது. பூந்துறையில் எனக்கு கொஞ்சம் நஞ்சை நெலம் இருக்கு சார்... சொன்னீங்கன்னா, பத்திரத்தைகூட செக்யூரிட்டியா கொடுக்கிறேன். நீங்க மனசு வச்சா, எப்படியாவது கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து ஏற்பாடு செய்யலாம் சார்.'' மேனேஜர் ஏதோ யோசித்து... ""முருகேசா... நிலம் பத்திரமெல்லாம் வேணாம்... சாரை வர்ற புதன்கிழமை ஈவ்னிங் வந்து பார்க்கச் சொல்லு.'' உடனே மகிழ்ந்தான் முருகேசன். ""நன்றி சார்.'' ராம்குமாருக்கு அதிர்ச்சியான மகிழ்ச்சி! ""ரொம்ப நன்றி சார்.'' ""நோ பிராப்ளம்.'' பேசிக்கொண்டிருக்கும் போதே, மேனேஜரின் மனைவி வெளியே வந்தாள். கையில் சில நூறு ரூபாய் தாள்கள். ""இந்தா முருகேசு... மீனுக்கு வச்சுக்கோ... பதட்டமாக மறுத்தான், ""வேண்டாம்மா வேண்டாம்.'' மேனேஜர் அந்த பணத்தை வாங்கி, முருகேசன் மறுக்க மறுக்க, அவன் பாக்கெட்டில் திணித்தார். ""வை முருகேசா... நீயும் காசு கொடுத்துதானே வாங்கியாந்திருப்பே...'' ""அப்படியில்ல சார்... வந்து...'' ""உங்க ஊர் ஏரியில மொத்தமா மீன் பிடிப்பீங்கள்ல, அப்ப கொண்டாந்து கொடு. தாராளமா வாங்கிக்கறேன்.'' மகிழ்ச்சியாக, ""சரி சார்...'' என்றான். விடைபெற்று வெளியே வந்தபோது, தன் பாக்கெட்டிலிருந்த மடிக்கப்பட்ட ரூபாய் தாள்களை, அப்படியே எடுத்து ராம்குமாரின் பாக்கெட்டில் திணித்தான் முருகேசன். ""என்ன முருகேசா?'' ""நீ கொடுத்த பணம் திரும்ப வந்தாச்சு.'' ""கூட இருக்கும் போல இருக்கு, மீதியை திரும்ப கொடுத்திட்டு வந்திடலாமா?'' ""இருக்கட்டும் வை. திரும்ப வாங்க மாட்டாரு...'' ""முருகேசா... உனக்கெப்படி இவர் பழக்கம்?'' ""இவருக்கு காலேஜ் படிக்கிற ஒரு பையன் இருக்கான். ஒரு வருஷம் முன்னாடி பைக் ஓட்டி, நின்னுட்டிருந்த ஒரு கார் மேல மோதிட்டான். இவன்கிட்ட லைசென்சும் கிடையாது, கார்காரனும் கொஞ்சம் பெரிய ஆள். டிராபிக் போலீசும் வந்தாச்சு; கேஸ் பைல் பண்ற அளவுக்கு போயிடுச்சி, பையன் அழுதுட்டான். நான் அந்தப் பக்கமா வந்தேன். அப்புறம் நான்தான் போலீஸ்கிட்டேயும், அந்தாள்கிட்டேயும் பேசி, ஸ்பாட்லேயே பிராப்ளத்தை சால்வ் பண்ணினேன். அப்புறம்தான் தெரியும், தம்பி மேனேஜர் பையன்னு. அதுக்கப்புறம் கொஞ்Œம் கொஞ்Œமாக பழக்கமாயிட்டோம்!'' மெல்ல மெல்ல ராம்குமாரின் மனதில், மின்னலாய் வெவ்வேறு திசைகளில் எண்ணங்கள் பளிரென ஓடின. "ஆறுமாதமாய் என் ஆங்கிலத்துக்கு அசராத அந்த அதிகாரி, ஐந்து நிமிடத்தில் முருகேசனுக்கு அசைந்தது எப்படி? "டீக்கடையில் முருகேசனை நம்பி கடன் கொடுத்தானே, எனக்கு கொடுத்திருப்பானா?'' "மீன்கார பாட்டி முருகேசனுக்கு அவ்வளவு விலை குறைத்தாளே! எனக்கு அந்தளவுக்கு குறைத்திருப்பாளா? "படிக்காத முருகேசன், தெரியாத பையனுக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு முயற்சி செய்கிறானே... நான் இதுவரை, ஒரு குழந்தையின் கல்விக்காவது வழிகாட்டியாக இருந்திருப்பேனா... மேனேஜரின் பையனுக்கு கூட, பலனை எதிர்பாராமல் தானே சிக்கலில் இருந்து காப்பாற்றினான்... "இதோ... அதன் பலன் இன்று எனக்கு கிடைத்துள்ளது. அதைக் கூட, என்னை வலிய இழுத்து வந்துதானே செய்கிறான். இது, இவனின் இயல்பான குணமா... கற்றுக்கொண்ட குணமா... படித்த நான், நூறு விஷயங்களை கற்று வைத்திருக்கலாம்... படிக்காத முருகேசன், சுற்றிலும் நூறு மனிதர்களை சம்பாதித்து வைத்துள்ளானே... பள்ளியில் கற்றதைவிட, முருகேசனிடம் கற்க வேண்டியவை நிறைய உ<ள்ளன...' படிக்காத நண்பன், இப்போது பாசக்கார நண்பனாக மாறிக் கொண்டிருந்தான்! - ஜார்ஜ் வில்லியம் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

2 thoughts on “படிக்காத நண்பன்!

  1. மனிதாபிமானம் எப்போதும் ஜெயிக்கும் என்பதை தெளிவாக சொன்ன கதாசிரியருக்கு பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *