நேற்றைய நண்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 8,029 
 

(தாயகம்-கனடா 12.03.1993)

திருக்கோயில் கிராமம்-இலங்கை- செப்டம்பர் 1987

தூரத்தில் கடலிரைய,பக்கத்தில் மகன் விக்கிரமன் படுத்திருந்து குறட்டைவிட பார்த்தீபன் தூங்காமலிருக்கிறான்.அடுத்த அறையில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவனின தாயின் மெல்லிய முனகல்கள்; அடிக்கடி கேட்கின்றன. அத்துடன அவளுக்குத் துணையாக அந்த அறையிலிருக்கும் பல மூதாட்டிகளின் மெல்லிய உரையாடல்களும் அவ்வப்போது கேட்கின்றன. அவர்கள் தூங்கமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

பார்த்தீபனின் மனைவி துளசியின் கைகள் அவன் மார்பில் துவண்டு கிடக்கின்றன. அவனின் தாயின் சுகவீனம் காரணமாகத்,துளசிக்குப் பலநாட்களாகத் தூக்கமில்லை. அந்த அசதியில் இன்று அவள் கண்மூடியிருக்கிறாள்.

துளசிக்குத்தான் எத்தனை துக்கங்கள், மாமியாரின் வருத்தம் பற்றிய துக்கம். தாயின்; வருத்தத்தைக் கேள்விப்பட்டு ஊருக்கு வந்திருக்கும் கணவன் பார்த்தீபனின் பாதுகாப்பு பற்றிய யோசனைகள் என்று எத்தனையோ யோசனைகளும் துக்கங்களும் அவளுக்கு.

‘பாவம் துளசி’ ஓருபக்கத்தில் தகப்பனுடன் ஒட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் மகனைக் குழப்பாமல்,சாடையாளத் திரும்பித் துளசியைப்பார்த்தான். வயது தெரிந்த காலம் முதல்க் காதலித்துக் கல்யாணம் செய்தவளுடன் மனம் விட்டு ஆசை தீரப்; பேசியே எவ்வளவோ காலமாகிவிட்டது.

ஓரு மனிதனின்,சாதாரண வாழ்க்கையின் நியதிகள் அசாதாரணமாகிப் போன தமிழர் வாழ்க்கையில் தனிமனித ஆசாபாசங்கள் காற்றில்ப் பறந்து தொலைந்த கவிதைத் துண்டின் கதையாகிப் போய்விட்டது.

அவனும் அவளும் வாழும் வாழ்க்கையில் சில நூறு மைல்கள் இடைவெளியாயிருக்கின்றன. பர்த்தீபனின் பாதுகாப்பு காரணமாக கொழும்பில் வாழ்கிறான். குழந்தையையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள அவள் ஊரில்; முடங்கி விட்டாள். அவளின் கைகளைத் தன்மார்போடு இணைத்துக்கொண்டான். இருளான அந்த அறையில் அவள் முகத்தைப் பார்க்கமுடியவில்லை. அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொள்கிறான். இருவர் மெல்லிய மூச்சுகளும் இணைந்த போகிறது.

‘என்னைக் கல்யாணம் செய்து இவள் என்ன சுகம் கண்டாள்?’

பெருமூச்சுடன் மனைவியைத் தடவி விடுகிறான். அவள் ஏழுமாதக் கர்ப்பிணி. அவளுக்குத் தாய் கிடையாது. சில வருடங்களுக்கு முன் ‘தமிழ்ப்பயங்கரவாதி’களைத்தேடித் திருக்கோயிற் கிராமத்தைச் சுற்றி வளைத்து வந்த அரச பயங்கரத்தின் வெடியில் சுருண்டு மறைந்த ஆயிரக்கணக்கான இளம் தமிழ் உயிர்களில் அவனின் பெயருமிணைந்து விட்டது. அந்த வேதனை தாங்காத துளசியின் தாயும் இறந்து விட்டாள்.

அவனுக்கும் அவளுக்கும் பொதுவாகத் தாய்மை கொட்டும் ஒரு உயிர் மண்ணுக்கும் விண்ணுக்குமான உலகில் பக்கத்து அறையில் ஊசலாடுகிறது.

‘அம்மா இறந்து விட்டால்த் துளசி துடித்துப்போவாள்’.

ஆவணிமாதத்துப் புழுக்கத்தை; தாங்காது,கொஞ்சமாகத் திறந்து வைத்திந்திருந்த ஜன்னல்களால் உலகத்தைப் பார்த்தான்.

வெளியில் நல்ல நிலவு. ஜன்னலைக்கூட முழுக்கத் திறந்து வைத்து நல்ல காற்றை மூச்செடுத்து, ஒளி பொழியும் நிலவையும், நட்சத்திரங்களின் கண்ணடிப்புக்களைக் கண்டு ரசிக்க முடியாதளவு தமிழ் மக்கள்,ஒடுங்கிய அறைகளுக்குள் அடங்கி வாழப் பழகி விட்டார்கள்.

ஏதோ பயங்கரக்கனவு கண்டாளோ என்னவோ துளசியின் கைகள் இவனை இறுக்கப் பிடித்துக்கொண்டன. மெல்லக் குனிந்து தூங்கும் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டபோது,தூரத்தில் நாய்கள் சட்டென்னு குலைக்கத் தொடங்கின.

பார்த்தீபனின் வயிற்றில் தேள்கள் ஊர்வது போன்ற உணர்ச்சி பரந்தது.

எந்தப் பக்கத்திலிருந்து நாய் குரைக்கிறது. பார்த்தீபன் கவனமாக உற்றுக் கேட்டான். பக்கத்து அறையிலிருந்த மூதாட்டியொருவர் கடவுளின் பெயரை அழைத்துக் கும்பிடுவது கேட்டது.அவள் குரலில் பய நடுக்கம்.

நடு இரவில்,காரணமல்லாமல் நாய்கள் ஓலமிட்டால் எமதூதர்கள்போல, யாரோ சிலர் ஊரைநோக்கி வருகிறார்கள் என்பது ஊராரின் பழைய நம்பிக்கைகளில் ஒன்று. ஊருக்கு வெளியிலுள்ள சுடுகாட்டிலிருந்து சிலவேவைளை ஓநாய்கள் பயங்கரமாக ஊளையிடும்.

சுடலை நரிகள் ஊளையிட்டால் நிச்சயமாகச் சாவு வரும் என்பதும் இன்னொரு நம்பிக்கை.

இப்போதெல்லாம் நாய்கள் குலைத்தாலே ஊரார் நடுங்குகிறார்கள். துப்பாக்கி தூக்கிய தமிழ் எமன்கள் வருகிறார்கள் என்று பயப்படுவார்கள்.

ஒரேயடியாப் பல நாய்கள் குலைத்தன.

துளசி திடுக்கிட்டு எழும்பி உட்கார்ந்தாள். கணவனின் மார்பில் துவண்ட கைகள் கண்ணீர் வடிய அவன் முகத்தைத் தடவுகிறது.

‘நீங்கள் பின்னேரமே வெளிக்கிட்டுப் போயிருக்கவேணும்’ அவள் விம்மி வெடிக்கிறாள்.

அவன் மறுமொழி சொல்லாமல் அவளையணைத்துக் கொள்கிறான்.

அவன் தனது ஊருக்கு வரமுடியாத காரணத்தால் இவ்வளவு காலமும் கொழும்பில் நின்றான். துளசி அடிக்கடி கொழும்புக்குப் போய் அவளைப் பார்த்து விட்டு வருவாள்.

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தவை’ என்ற முதுமொழியில,; பெற்ற தாய் உயிரோடு போராடும்போது வரமுடியவிலலை என்று சொல்லிக் கொண்டு,ஊருக்கு வராமலிருக்க அவன் பாசம் இடம் கொடுக்கவில்லை. இறந்து கொண்டிருக்கும் தாயைப்போய்ப் பார்க்காமல் அவனால் கொழும்பில் இருக்க முடியவில்லை.

கொழும்பில் அவன் வாழ்வதற்கு,கொழும்பிற்தான் அவனுக்கு வேலை என்பது மட்டும் காரணமல்ல.ஊருக்கு வந்தால் அவனது உயிருக்கு ஆபத்து என்று கேள்விப் பட்டிருக்கிறான். உயிர் பறிக்கும் காலன்கள் ஊரெல்லாம் நிறைந்திருக்கிறார்கள்.

பார்த்தீபன் தன்னிற் துவண்டு கிடந்து கதறும் மனைவியின் கண்களில் முத்தமிட்டான். அவள் கதறல் அவனது இருதயத்தைக் கலக்குகிறது. அவளை முத்தமிட்ட அவன் உதட்டில் அவள் கண்ணீரின் உப்புத் தன்மை கரித்தது.

‘அம்மாவுக்குச் சுகமில்லை…’அவன் சொல்ல வந்தததை அவள் கேட்க விரும்பவில்லை.அம்மா சாவதை இவனாற் தடுக்க முடியுமா?

தூரத்தில் பல நாய்கள் ஓலமிடுகின்றன. துளசி பதறுகிறாள்.

‘இப்போதாவது எங்கேயாவுது ஓடிப் போங்களேன்;’

அவள் கெஞ்சல் அவன் மனதைப் பிழக்கிறது. இறந்துகொண்டிருக்கும் தாயைப்பார்க்கக் கூட ஒரு மகனுக்கு உரிமை கொடுக்காத சமுதாயமாகத் தமிழனம் எப்போது மாறியது?

அவன் பெருமூச்சு விடுகிறான்.

அவன் பிறந்த,தவழ்ந்த, விளையாடிய,படித்த,காதல் செய்த,கல்யாணம் செய்த, குழந்தை பெற்றுக்கொண்ட இந்தத் திருக்கோயில் மண்ணை விட்டு அவன் எங்கோ ஓடுவதாம்?

இறந்து கொண்டிருக்கும் தாயயைப்பார்க்க நேற்றுத்தான் அவன் ஊருக்கு வந்தான். அவனை’முடித்து விட’ துப்பாக்கி தூக்கிய தமிழ்க்கூட்டத்தினர் காத்திருக்கிறார்கள் என்று அவன் ஊருக்கு வரமுதலே அவன் கேள்விப் படடிருக்கிறான். அதனால்த்தான் ஊருக்கு வருவதையே தவிர்த்து வந்தான். நேற்று,பின்னேரம்,இரவு கருகும்; போது ஊருக்கு வந்தான். அவனின் தாயின் வருத்தம் பார்க்க வந்த அத்தனை உற்றார் உறவினரும்,’ஊரில் நிலைமை சரியில்லை’ என்று அவனை உடனடியாகக் கொழும்பு திரும்பச் சொல்லிக் கெஞசினர்.

ஐந்து வயதான மகனைத் தூக்கிக் கொண்ட துளசி அவனைப் பார்க்கக் கொழும்புக்குப் போவாள் இன்று அவன் தாய் இறந்து கொண்டிருக்கிறாள் என்பதால் தன்னுயிருக்குப் பயந்தாலும் தாயின் முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்த்து விட்டுப் போக நேற்றுத்தான் வந்தான்.

தாய்க்கு நடக்கமுடியாது.இவனைப்பார்க்கக் கொழும்புக்குப் போக முடியாது.

தன்னைப் பார்க்க இவன் வந்தததும் பதறிவிட்டாள். இவனுக்கு என்ன நடக்குமோ என்ற தவிப்பில்’ ‘ஏன் ராசா இஞ்ச வந்தாய்?’ தாய்மை இவன் வரவால்த் தடுமாறியழுதது.

‘மகனே’ தாயின் குரல் பக்கத்த அறையிலிருந்து பயத்துடன் ஒலிக்கிறது. துளசி கண்களைத் துடைத்துக் கொண்டு கணவனைப் பின் தொடர்கிறாள். தூங்கிக் கொண்டிருந்த மகனும் விழித்துக்கொண்டு பெற்றோரைத் தொடர்கிறான்.

அவளின் தலைமாட்டில் குத்து விளக்கெரிய,கிழவிகள் பக்திப் பாடல்களை முணுமுணுக்க அவனின் தாய் மரணத்தை எதிர்பர்த்துக்கொண்டிருக்கிறாள்.

தன் எதிரில் அவனது சிறிய குடும்பத்தடன் வந்து நிற்கும் தனது ஒரேயொரு மகனைப் பார்க்கிறாள்.

பத்துமாதம் சுமந்து பெற்ற அவளது மகன் பார்த்தீபனின் உருவம் அவளின் சுருங்கிய,கலங்கிய கண்களுக்குள் இறுக,அவள் பெலவீனமான குரலில் அழுகிறாள்,’ என்ர தங்க மகனே ஓடிப் போயிடப்பா போய்விடு’.

மரணத்தில் வாசலில் நிற்பவள் வாழவேண்டிய தனது செல்வத்தை உயிர் தப்பி ஓடச் சொல்கிறாள்.

எந்த நிமிடமும் அவள் உயிர் போகலாம்.அதற்காக இன்னும் எத்தனையோகாலம் வாழ வேண்டிய அவள் மகனின் உயிருக்கு ஆபத்து வருவதை அவள் விரும்பவில்லை

இந்த இரவில் அவன் எங்கு போவான்?

‘அம்மா நான் யாருக்மும் எதுவும் செய்யல்ல ,எந்த இயக்கத்தோடும் சேரவில்ல, எனக்கென்ன பயம்’ தாயைத் தேற்றுவதாதற்காகச் சொன்னாலும் அவன் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறான் பார்த்தீபன்.

‘மகனே,இஞ்ச இரிக்கிற நிலை உனக்குத் தெரியாது,ஓடப்பா, எங்கெட்டாலும் உன்ர சினேகிதர்மாரிட்ட ஓடிப்போ அப்பா’ கிழவி தாங்காத வேதனையுடன் கெஞ்சுகிறாள்.

சினேகிதர்கள்?

அவனுக்கு இப்போது யார் சினேகிதர்கள்?

அவனுடைய பழைய சினேகிதர்களைக் கண்டே பல காலமாகிவிட்டது.

அவனுடைய எண்ணிக்கையற்ற எத்தனையோ சினேகிதர்களை சிங்கள இராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து விட்டது. பலர் சிங்கள் இராணுவத்தால் பலியெடுக்கப் பட்டார்கள். பலா,; சிங்களவனைப் பழிவாங்க,தமிழினத்தைக் காப்பாற்றப் பல இயக்கங்களிற் சேர்ந்து, அழிந்து விட்டார்கள். அல்லது அழிக்கப் பட்டு விட்டார்கள்.

ஓரு காலத்தில் சிங்கள இராணுவத்திறு;குப் பயந்து ஊரை விட்டோடியவன், பின்னர் தமிழ் இயக்கங்களுக்குப் பயந்து ஊருக்கு வராமலிருந்து விட்டான்.

உயிரோடு யாரிருக்கிறார்கள்? எங்கிருக்கிரு;கிறார்கள் என்ற விபரம் அவனுக்குத் தெரியாது. சிங்கள இராணுவத்தின் மிருக வேடடைக்குப் பயந்து,தமிழ்த் தாய் தகப்பன் தங்கள் குழந்தைகளைப் பல இடங்களுக்கும் அனுப்பிய காலகட்டத்தில் அவனுடைய தாய் தகப்பனும் அவனை எப்படியோ காப்பாற்றினார்கள்.

தமிழ்ப் பிரதேசங்களிலிருந்த தாய் தகப்பன்,குழந்தைகளைக் காப்பாற்ற பல வழிகளையும் தேடினார்கள். ஓரு சிலர் இந்தியாவுக்கு ஓடினார்கள். ஓடமுடியாதவர்கள், கொழும்புக்குப் போனார்கள். ஓரு சில தமிழ் இளைஞரை, அடுத்த ஊரிலிருந்த முஸ்லிம் குடும்பங்கள் காப்பாற்றின். முஸ்லிம் குடு;பங்களுடன் அன்பில்,ஆதரவில் அவர்களுடனிருந்து படித்து வெளியே வந்த தமிழர்கள் பலருண்டு. அந்த அருமையான,காலம் காலமாகச் சகோதரர்களாகப் பழகிய முஸ்லிம்களையே,தமிழ்ப் போராளிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள்.

யாருக்கு யார் எதிரி?

மனிதம் மறைந்த பூமியில் மிருகவேட்டை தொடர்ந்தது.

அதன் பின் பார்த்தீபன்; ஊரைவிட்டோடிப் போய்ப் பல வருடங்களாகி விட்டன.

என்ன குற்றம் செய்தேன்? எந்த இயக்கத்திலும் சேராமல் இருந்தது துரோகமா? துப்பாக்கி தூக்காமல் இருப்பது தமிழ்;ச் சமுதாயத்திற்குச் செய்யும்; கொடுமை என்ற புதிய தத்துவத்தை அவனால் விளங்கிக் கொள்;ள முடியவில்லை.

‘மகனே யாரையும் நம்பி எதையும் கதைக்காத, ஆரோட ஆர் இரிக்கினம் என்டு தெரியாது’ அவனது தாய் அவனை எச்சரித்திருந்தாள்;. மனதில் குமையும் துயர்களைச் சொல்லியழ உண்மையான சினேகிதர்களுமில்லாத ஒரு சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் என்று மாறியது?

சில சினேகிதர்களை அவனால் மறக்க முடியவில்லை.

அவனது உயிர்ச் சினேகிதன் கிருஷ்ணனைக் கண்டு எத்தனையோ வருடங்களாகின்றன.

கிருஷ்ணன் எங்கேபோயிருப்பான்? என்று பல தடவைகள் தன்னைத் தானே கேட்டிருக்கிறான். அரச பயங்கரத்திற்குப் பயந்து ஊரை விட்டோடியவர்களில் கிருஷ்ணனும் ஒருத்தன். பார்த்தீபனும் கிருஷ்ணனும் இளமையில் ஒன்றாகத் திரிந்த சினேகிதர்கள். பார்த்தீபனின் ஓரளவு பரவாயில்லாத வசதியான வாழ்க்கை முறையும், மூன்று தங்கைகளுடன் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் கிருஷ்ணனின் வாழ்க்கை அமைப்பும் இவர்களின் சினேகிதத்தைப் பாதிக்க வில்லை.

அதோ இpருக்கிறதே அந்த வளைந்து குறுகிய தென்னை மரத்திலிருந்து எத்தனை கதை பேசியிருப்பார்கள். பாடசாலையைப் பற்றி, உடன் படிக்கும் மாணவர்களைப் பற்றி, உலகத்தில் இவர்களின் கவனத்தை ஈர்த்த பல விடயங்களைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருப்பார்கள். மகனுடன் இணையாச் சினேகிதனாகத் திரியும் கிருஷ்ணனைத் தனது இன்னொரு மகன் மாதிரி நடத்தினாள் பார்த்தீபனின் தாய்.

முறுக்கும், வடையும் கொறித்துக் கொண்டு தன்னோடு ஒருகாலத்தில் குறும்புக் கதைபேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? கிருஷ்ணனுக்குத் தன்குடும்பத்தின் வறுமை நிலை மிகுந்த துயர்கொடுப்பவை.

‘எதிர்காலத்தில் எப்படி நிமிர்ந்து நிற்கப் போகிறேன்?’ பெருமூச்சுடன் பார்த்தீபனைக் கேட்பான் கிருஷ்ணன்.

‘அம்மா சொல்ற மாதிரி, எல்லாத்துக்கம் கடவுள் இருக்கிறார்’ என்று சொல்வான் பார்த்தீபன். ”கடவுளுக்கு ஏழைகள் இருப்பது தெரியுமோ தெரியாது’ விரக்தியுடன் பேசுவான் கிருஷ்ணன்.

வாழ்க்கை விரிந்தது. வாழ்க்கையின் வழிகள் பல பரிமாணங்களைக் காட்டியது. பார்த்தீபன் வாழ்க்கையில் துளசி வழிபுகுந்தாள்.

சினிமாவைப் பற்றி, சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பார்த்தீபனின் சிந்தனையின் பெரும்பாகம் காதல் என்ற சித்தார்ந்தத்தால் கவிதை படைக்கத் தொடங்கியதும்; பார்த்தீபனை ஒரு வித பொறூமையுடன் பார்த்தான கிருஷ்ணன். ‘உனக்கென்ன அதிஷ்டசாலி, எங்களைப் போல எத்தினையோ பிரச்சினைகளை நீ கண்டிருக்க மாட்டாய், காணுவும் மாட்டாய்’ கிருஷ்ணன் விரக்தியுடன் சொன்னான்.

பார்த்தீபன் வீட்டுக்கு ஒரு பிள்ளை. வசதியானவன், மேல்ப் படிப்பு படிக்க வழியுள்ளவன், காதலிக்கத் துணிந்தவன்.

கிருஷ்ணன் வீட்டுக்கு மூத்த பிள்ளை. தகப்பனுடன் சேர்ந்து குடும்ப சுமையைச் சுமக்கக் கடமைப் பட்டவன். பார்த்தீபனின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாதவன்.

‘சமுதாயம் திருந்தவேணும், சீதனங்களை ஒழிக்கவேணும்,பெண்கள் தங்களில் கால்களில் நிற்கவேணும’ என்று கிருஷ்ணன்,முற்போக்காகப் பேசினாலும்,,சமுதாயத்தில் தன்னை மற்றவர்கள் ஒரு முக்கியமானவனாக நடத்த வேண்டும் என்ற தாபமிருப்பதை, அவசரமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமென்ற கிருஷ்ணனின் வெறியைப் பார்த்தீபன் புரிந்து கொண்டான்.

‘எந்தவொரு சமுதாய மாற்றத்தை ஒரு சில நாட்களில் கொண்டு வரமுடியாது. சர்வாதிகார நாடுகளில் மக்களைத் துப்பாக்கிமுனையில் மிரட்டிற மாதிரி எங்கள் சமுதாயத்தை ஒரு நாளும் மிரருட்ட முடியாது’ பார்த்தீபன் சொல்லிச் சிரிப்பான். தமிழ்; என்ற வார்த்தைக்குள் ஒரு வெறியைத் திணித்து ஒரு இனத்தைப் படுகுழிக்குள் தள்ளிய தமிழ்த் தலைமை வராத இளமைக்காலத்தில் பேசிய பேச்சது.

பார்த்தீபனுக்கு வாழ்க்கையில் பெரிய மதிப்பு.வாழ்க்கையுடன், மனித இனத்தின் கலை கலாச்சாரங்கள்ன் பின்னிப் பிணைந்து கிடக்கும் மிகவும் சிக்கலான நுண்ணிய இணைவுகளைச் சட்டென்று ஒரு சில கால கட்டத்தில் மாற்ற முடியும் என்பதை அவன் நம்பத் தயாரில்லை.

‘அழிவிற்தான் ஆக்கமுண்டு,ஒரு புதிய சமுதாய அமைப்பு வரச்; சில விடயங்களைக் களையெடுக்கவேணும்’ கிருஷ்ணன் திட்டவட்டமாகச் சொன்னான்.

துளசியில் ஏற்பட்ட காதற்போதையில்,பார்த்தீபன் தன் உணர்வுகளைத் தன் சினேகிதனுக்குக் கொட்டித் தீர்ப்பான். காதல் என்பது தற்காலிக அறிவுணர்வுகளைத் தாண்டும்; ஒருமாய வலையைக் கொண்டது என்பதைத் தெரிந்து கொள்ளாத துள்ளும் இளமைப் பருவத்தில், பார்த்தீ+பனுக்கு பார்த்த இடமெல்லாம் இனிமையாக, இருதயத்தை அமுதமாககுகம் அற்புத பிம்பமாகத் தெரிந்தது.

;

கிருஷ்ணன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இவன் பேச்சைக் கேட்டுக்கொண்ருந்தான்.

‘கிருஷ்ணா உனக்கும் ஒரு துளசி வருவாள்” பார்த்தீபன் நண்பனைத் தேற்றுவான்.

‘வசதி படைத்தவனுக்கு வாழ்க்கை ஒரு பூங்காவனம், வசதி கெட்டவனுக்கு வாழ்க்கை ஒரு நரகலோகம்’ கிருஷ்ணன் விரக்தியுடன் முணுமுணப்பான்.

‘நான் ஒன்றும் வசதி படைத்தவனல்ல. சாதாரண ஒரு மனிதன், சாதாரண ஆசைகளுடன் வாழ்கிறேன்,அது பிழையா’ நண்பனிடம் கேட்பான் பார்த்தீபன்.

இவர்களது கேள்விகள் மறுமொழிகள்,என்ற இளவயதுக் கலந்துரையாடல்கள்,இனவாதம் பிடித்த சிங்களக் கொடும் ஆட்சிக்கு முன்னால் அர்த்தமற்றுப் போயின.

‘தமிழன்’ என்பதன் அர்த்தம் ‘மரணம்’ என்ற விளக்கம் அரசால் அமுல் நடத்தப் பட்ட காலத்தில் சினேகிதர்கள் திசை பிரிந்தார்கள். தெரிந்த நண்பர்கள் இடம் தெரியாது மறைந்து விட்டார்கள்.

ஓரு சில நண்பர்கள் சிங்கள ஆர்மியால் உயிரற்றுப் புதைக்கப்பட்டார்கள்.

எதிரிச் சிங்களவனை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொணடவர் தமிழ் இளைஞர்களிற் பலர்,.இயக்கங்களிற் சோர்ந்தார்கள்.

பார்த்தீபனின் பல தமிழ் நண்பர்கள், முஸ்லிம்நண்பர்களெல்லாம் தமிழரின் விடுதலை இயக்கங்களிற் சேர்ந்தார்கள்.

நாளடைவில்,அதிகார,ஆதிக்க வெறியில், ஒரு தமிழ்க் குழுவுக்கு,மற்ற தமிழ்க் குழுவைப் பிடிக்காததால், பலகொடுமைகளைச் செய்தார்கள்.

இயக்கங்களுக்குள் உண்டான மோதல்கள் ஒருத்தரை ஒருத்தர்,மனித இனத்தால் விபரிக்க முடியாத கொடுமைகளுக்குள்ளாக்கினார்கள். எதிரிச் சிங்களவன், தமிழனுக்குச் செய்த கொடுமைகளை விடப் பல மடங்கு பயங்கரவதைகளைத் தமிழன் ஒருத்தனுக்கு ஒருத்தன் செய்து கொண்டான். தமிழன் பயங்கரமான வக்கிரத்துடன் இன்னொரு தமிழனை, உயிரோடு புதைத்தான்.

ஓரு இயக்கத்திலிருந்து வந்த ஒரு கும்பல், இன்னொரு இயக்கத்தை; வீட்டோடு கொழுத்தினார்கள். இன்னொரு இயக்கத்தைப் பட்டப் பகலில் நடுச் சந்தியிற்; போட்டெரித்தார்கள்.

அவர்கள் கொடுமையைப் பற்றிக் கேள்வி கேட்காமல் கொலை காரார்களக்குக் கொக்கோ கொலா உடைத்துக் கொடுத்து அவர்களின் மனித வேடடையின் தாகத்தைத் தீர்த்துத்; தங்கள் சம்மதத்தையும் கொடுத்தார்கள் தர்மத்தைப் புனிதமாக நிகை;கும் தமிழர்கள்

ஓரு தட்டிற் சாப்பிட்டு,ஓரே பாயிற் படுத்தவர்கள் காலையிலெழும்பும்போது, அடுத்த தமிழனைச் சுட்டுவிட்டு விட்டுச் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டார்கள்.

வீட்டுக்கு வந்த தமிழ்; விருந்தினனுக்குத் தேனீர் கொடுத்து தமிழ்ப் பெண்ணின் தாலியைத் தங்கள் துப்பாக்கி முனையில் அழித்தொழித்தார்கள் விடுதலைப்போராளிகள்.

சமுதாயத்திற் நன்மை செய்த நல்ல தமிழ் மனிதர்களை நாய்கள்போல்ச் சுட்டு வீழ்த்தினார்கள்.

சிங்கள இராணுவம், தமிழன் என்ற ஒரே அடையாளத்திற்காகச்சில தமிழரைக்; கொலை செய்தான்.

ஆனால் தமிழர் விடுதலைக்கு துப்பாக்கி தூக்கியவர்களோ, படித்தவர்கள், பண்புள்ளவர்கள், நியாயம் தெரிந்தவர்கள், கேள்;விகேட்கக் கூடிய சிந்தனை கொண்டவர்கள் என்ற பலரக அடையாளங்களை முன்வைத்துத் தமிழர்களை அழித்தார்கள்.

உலகத்திலேயே மிகப் பெரிய தொன்மையான நாகரீக வளர்ச்சியைக் கொண்டிருந்ததாகச் சொல்லப் பட்ட தமிழினத்தை இலங்கையில் கலாச்சாரக் குருடர்களாக்கினார்கள். பண்புகெட்ட பயங்கரவாதிகளாக மாற்றினார்கள். ஆமாம் சாமி போடும் அறிவற்ற ஒரு முட்டாளக் கூட்டத்தை உருவாக்கினார்கள்.

உண்ணவும் பல் விளக்கவும் மட்டும் தமிழினம் வாய்திறக்கப் பழகிக் கொண்டது.

எப்போதாவது ஊருக்கு வரும் பார்த்தீபன் மவுனமாக வாழ மிகவும் கஷ்டப்பட்டான். அவனின் மனைவியின் தம்பிமார் இருவர் வெவ்வேறு இயக்கங்கில் இணைந்து கொல்லப் பட்டவர்கள். தொடர்ந்தும் தமிழ் உயிர்கள் அழிவதை அவனாற் பொறுக்க முடியவில்லை.

‘மரணத்தில் வெற்றி பெறுபவர்கள் யார்? துப்பாக்கியால்தொலைத்து விட்ட சமுதாயத்துக்குக் கடைசியில் சுடகாட்டிலா கொடி கட்டிப் போகிறீர்கள்?’ என்று கேட்பான்

இவன் எந்த இயக்கத்தையும் சாராததால், எல்லா ‘தமிழ் விடுதலை(?)’ இயக்கங்களுக்கும் இவனிற் கோபம். ‘எங்களிடம் கேள்வி கேட்ட இவருக்கு என்ன அப்படி மண்டைக்கனம்?’ ஒரு சில இயக்கத்தினர் இவனைப் பார்த்தக் கறுவிக் கொண்டதையும் கேள்விப்பட்டிருக்கிறான்.

காட்டு மிருகங்கள் வீட்டு மனிதர்களிற் கோபப் படுகின்றன என்பதால் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ள முடீயுமா?

‘ஊருக்கு வரவேண்டாம்’ துளசி இவனுக்கு உத்தரவு போட்டுவிட்டாள். அவனைப் பார்க்க கொழும்பு போய்வந்தாள்.

இப்போது அவன் மரணப்படுக்கையிலிருக்கும் தாயைத் தரிசிக்க வந்திருக்கிறான்.

தூரத்தில் கேட்ட நாய்களின் குரைப்பு இப்போது அண்மையில் கேட்டது.

நடுங்கும் தன் கரங்களால் தன் தனயனைக் கட்டிக்கொண்டழுதாள் கிழவி. ஐந்து வயது மகன் விக்கிரமன் தகப்பனின் தோளைக் கட்டிக்கொண்டான்.

துளசி மண்டியிட்டு அழுதுகொண்டிருந்தாள்.

இவர்களின் வளவில், ஒருகாலத்தில் கிருஷ்ணனுடன் சேர்ந்திருந்த கதை பேசிய,வளைந்து கிடந்த தென்னை மரத்தைத் தாண்டி துப்பாக்கி தூக்கிகள்; பாய்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

‘ஓடியிரிந்திருக்கலாமா?’

அவன் உடம்பு நடுங்க தனக்கு முன்னால் நிற்கும் துப்பாக்கி தூக்கிகளைப் பார்த்தான்.

ஓரு காலத்தில், பார்த்தீபனக்கு முன் குறுகிய மனிதனாய்,விரக்தியின் விழிம்பில் வாழ்ந்த பார்த்தீபனின் நண்பன் கிருஷ்ணன், இப்போது துப்பாக்கி ஏந்திய கம்பீரத்தில் மிக மிக உயாந்தவனாகத பார்த்தீபனுக்கு முன்னால்த் தெரிந்தான!.

ஓருகாலத்தில் தனது மணத் தோழனாக வந்து துளசியைக் கலயாணம் செய்யத் தாலிக்கயிறு எடுத்துக் கொடுத்து சேர்த்து வைத்தவன்,இன்று அவர்களை அழிக்கவும் பிரிக்கவும் ஒரு மரணக் கையிறுடன் வந்திருக்கிறான!.

நேற்றைய இரு சினேகிதர்களுக்கிடையிலிருந்து ஒரு சில அடித்தூரங்கள்,இன்றைய நிலையை,நாளைய சரித்திரத்தை ஒரு துப்பாக்கியின் குண்டுடன் உருவாக்கப் போகிறது.

‘உயிர்காப்பான் தோழன்,கொலையும் செய்வாள் பத்தினி’ என்றொரு தமிழ்ப் பழமொழியுண்டு.

இன்று அவனின் பழைய நண்பனின் காலில் விழுந்து அவன் மனைவி தன் கணவனின் உயிர்பிச்சைக்கு மன்றாடுகிறாள். கிருஷ்ணனின் காலில் விழுந்து துளசி கதறினாள்.

கண்ண பரமாத்மா காலில் விழுந்து தன் மானம் காப்பாற்றக் கதறினாள் திரவுபதி,

இன்று, துப்பாக்கியுடன் முன்னிற்கும் கிருஷ்ணன் காலில் விழுந்து தனது கணவனின் உயிருக்கு மன்றாடினாள் துளசி.

தன் தாலியயைக் காடடி. ஏழுமாதக் குழந்தை தவழும் தன் வயிற்றைக் காட்டிக் கதறியது அந்த அப்பாவித்தமிழ்ப் பெண்மை.

மரணத்தை; தழுவிக் கொண்டிருக்கும் கிழவி ஊர்;ந்;து வந்து, ஒருகாலத்தில் தன்போட்ட சோற்றைத் தின்ற துப்பாக்கி தூக்கியிடம், தன்மகனின் உயிருக்காகப் போராடியது. பார்த்தீபன் அசையாமல் பயத்தால் உறைந்து போய் நின்றிருந்தான்.

தூரத்தில் சுடலை நரிகள் ஊளையிட்டன.

நேற்றைய நண்பன் ஒருத்தன் இன்றைய பிணமாகத் துடித்து விழுந்தான்.தர்மம் இன்னொரு தரம் தலைகுனிந்தது.

தமிழன் ஒருத்தன் இன்னொரு தமிழனுக்க அதிகாலையில் வைத்த குண்டின் ஒலியில் ஊர் அதிர்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *