நெய்மா…நெய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 8,914 
 

“மரத்தில் பணம் காய்க்கிறது என்ற அஞ்ஞானத்தில் அந்நிய நாட்டு நேரடி முதலீட்டை கண்மூடித்தனமாக எதிர்ப்பதால் நுகர்வோர் பார்வையில் மற்றும் நீண்டகால அடிப்படையில் நம் முன்னேற்றமும் வளர்ச்சியும் தடைப்படும் என்றாலும் குறுகியகால அடிப்படையில் பெட்டிக்கடைக்காரர் மற்றும் பலசரக்குக்காரரின் வாழ்வாதரங்கள் நசுங்கும் என்பதையும் ஒரு குறுகிய கண்ணோட்டம் என்று பாதிக்கப்படக்கூடியவர்களின் பார்வையில் கூறமுடியாது. என்றாலும் ஆவினங்களே முதலீட்டு செல்வம் என்ற நம் நாட்டு தொண்மை பொருளாதார கோட்பாடுகள் இன்றைய புதிய தலைமுறை நுகர்வோர் தேவைகளுக்கு ஈடுகொடுக்காது….” என்று நாளை கல்லூரியில் நடக்கவிருக்கும் கலந்தாய்விற்க்காக குறிப்பெடுத்துக் கொண்டிருந்த வேளையில் என் சிந்தனை வேறு மாதிரி ஓடிக்கொண்டிருந்தது.

ஏதோ இங்கு கலந்தாய்வு செய்து சொல்லும் கருத்தை நாடாள்பவர்களு்ம் பாராள்பவர்களும் மதிப்புக் கொடுத்து தங்கள் கொள்கைகளை மாற்றி அமைத்துக் கொள்வது போல் இன்று ஒவ்வொரு கல்லூரியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விவாதங்களும் கருத்தரங்கங்களும் ஏற்ப்பாடு செய்து ஆசிரியர்களுக்கு செலவு வைத்து அல்லல் படுத்துவது என்பது இன்று வாடிக்கையாகிவிட்டது. நாளைக் கழிந்தால் ‘சமூக சீர்த்திருத்தம்’ என்றோ அல்லது ‘புதிய வேலை வாய்ப்பு’ என்றோ வேறு தலைப்பை எடுத்துக் கொண்டு ‘அந்நிய முதலீடு’ விவாதத்தை சுத்தமாக அனைவரும் மறந்து விடுவோம்!

“நெய்மா…நெய்” என்று வீட்டு வாசலை அடைத்துக் கொண்டு குரல் கொடுத்தவரின் சத்தம் என் கவனத்தை திசை திருப்பியது. எங்கள் நல்ல விடுமுறை நாட்களின் காலைப் பொழுதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வழக்கமான தெரு வியாபாரிகளிள் ஒருவந்தான் அவன்.

“நெய் இருக்குப்பா. இன்றைக்கு வேண்டாம்” என்று எதிர் குரல் கொடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்த என் மாமியாரைச் சிறிதும் சட்டை செய்யாமல் வாசல்ப்படி முற்றத்தில் நன்றாக உட்க்கார்ந்துக் கொண்டு தன் நெய்க் கடையை பரப்பி விட்ட அவன் “இன்னைக்கு நீங்கத்தாம்மா போனி” என்ற சுருதியில் ஆரம்பித்தான்.

“அம்மா கண்ட நெய்யெல்லாம் வாங்காதே… தரத்துக்கு குறியீடு வேணும்னு விளம்பரம் பார்க்கரதில்லையா… பிராண்டட்டா வாங்கும்மா” என்று என் கணவர் வீட்துக்குள்ளே உட்கார்ந்து ஆங்கில நாளேட்டை படித்துக் கொண்டே ‘அந்த வியாபாரியை துரத்து’ என்ற தோரனையில் ஒரு குரல் கொடுத்தாலும், அவருக்கும் அவரது தாயார் பாதி விலைக்கு பேரம் பேசி வாங்கும் தெரு வியாபாரியின் நெய்யால் குடும்ப பட்ஜெட்டில் விளையும் ஆதாயம் தெரியும்.

விளம்பரத்தில் காட்டும் நெய்யைப் பார்த்து ‘மணல் மணலாய் இல்லை’, ‘வாசனையாய் இல்லை’ என்று தன் தாயாரின் பேரத்திற்க்கு சாதகமாக குரல் கொடுப்பாரேத் தவிர ‘கொலெஸ்ற்றால்’ கவலைகளை மறந்து தினமும் நெய்யை ஒரு கை பார்ப்பவரும் இவர்தான்.

“ஐயா… நம்ம நெய்க்கு என்னோட தாயார் பேரிலேயே பிராண்டு போட்டாச்சு… இனி ‘பிராண்டு’ தான் வேணும்னு நெடி இல்லாத பழைய நெய்யை பைசா கொடுத்து வாங்கி ஏமாறாதீங்கையா” என்று கம்பீரமாய் அவன் கொடுத்த பதிலடியால் அதிர்ந்து போய் நானும் என் கணவரும் வெளியில் வந்தோம்.

வழக்கமாக வாயகன்ற அலுமினிய ஜோட்தவளையை கூடையில் வைத்துக் கொண்டு நெய் கொண்டு வரும் அவன் ‘ராணி வாசனை நெய்’ என்று நீல மார்க்கர் பேனாவால் தெளிவாக எழுதியிருந்த இருவது முற்பது ‘பெட்’ பாட்டில்களில் நெய் கொண்டு வந்திருந்தான்.

“என்னப்பா… மாட்டையெல்லாம் விற்று விட்டு நீக்கூட நெய்யை வாங்கி விற்க ஆரம்பித்து விட்டாயா?” என்று நாங்கள் கேட்க வந்ததை பார்வையில் புரிந்துக் கொண்டு “தாயீ… நீங்க போனாப்ல சொன்ன மாதிரி நம்ம கவுன்சிலர கவனிச்சு அரசாங்கத்துல இலவசமா கொடுக்குற ஆட்டையும் மாட்டையும் எங்க மாங்காடு தொழுவத்தில வாங்கி கட்டிப் போட வழி பண்ணிட்டேன். இனி அதுக்கும் தீனி போடணும்னா நானு நெய்யை நல்ல விலைக்கு வித்தாத்தான் ஆவும். கோணிப்பைல ‘பிராண்டு’ ந்னு ஒரு பேரை பிரிண்டு பண்ணி தீவனத்து விலையை தாறுமாறா ஏத்திப்புடறானுங்க…நாமும் ஏதாவது பண்ணனும்த்தான் பாட்டில்ல அடைச்சு நெய் வியாபாரம் தொடங்கிட்டேன்…அடுத்தமுறை வியாபாரத்துக்கு வரும் போது காலி பாட்டிலை கொடுத்தா போதும் தாயீ” என்று தன் வியாபார அபிவிறுத்தி திட்டத்தை பற்றி பெறுமையாக கூறினான்.

“பெட்டிக் கடைக்காரர்களும் பலசரக்கு கடைக்காரர்கலும் ஐஸ் பொட்டி கொடுகிராங்கன்னு பிராண்டட் பண்டங்களை பிரபலப்படுத்துவதால் விவசாய உற்பத்தியாளர்களும் சிறு வியாபாரிகளும் நலிவடைவார்கள் என்று கூறப்பட்ட நியாயமான கருத்தை ஏற்கவில்லை. வியாபாரத்தில் பெரிய மீன் சின்ன மீனைத் தின்றுவிடும் என்ற நிலை இயல்புதான் என்றாலும் நாளையப் பசிக்கும் சிறிய மீன் தேவை என்பதால் அவற்றின் வளற்சிக்கும் நியாயமான வாய்ப்புகள் இயற்கையாக இருக்கும்…” என்று நான் தொடர்ந்து எழுதும் வேளையில் கழுவு மீனில் நழுவு மீனாக தன் பாட்டில் பிராண்டட் நெய்க்கு ஐம்பது ரூபாய் அதிகம் வசூலித்துக் கொண்டு “நெய்மா… நெய்” என்று எதிர் வீட்டில் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் நெய்க்காரன்.

நேஷனல் ஜியாகரபி சானலை இரவு பார்துக்கொண்டே தூங்கிவிட்ட என் மகள் “அம்மா…’பிரானா’ மீன் சின்ன மீனா இல்லை பெரிய மீனா?” என்று தூக்கம் கலைந்து சிணுங்கியபடியே கேள்வி கேட்டாள். இனி என் நேரமே என் முதலீட்டுக்கு இருக்கப்போவதில்லை என்பதால் குறிப்புகள் எழுதுவதை மூடிவிட்டு எழுந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *