நுட்பம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 7,032 
 

“ என்ன…..மேஸ்திரி…..பையன் யாரு?….”

“எம் பையன் தான் முதலாளி!….இப்பவே நம்ம தொழில் நுணுக்கங்களையெல்லாம் கூடவே வச்சு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கேன்!….”

“அப்படியா?….ரொம்ப சந்தோஷம்!… இப்ப நீ வேலை செய்யற கட்டிட வேலை எந்தளவுக்கு இருக்கு?..”

“ரூப் சிலாப் போட்டாச்சு….ரூப் பிரிக்கும் வரை சில்லறை வேலை செய்யச் சொல்லியிருக்காங்க!….”

“அப்ப இன்னைக்கு வேலை செய்ய என்ன என்ன உனக்கு வேண்டும்?….”

“ஒரு யூனிட் மணலும்,ஆயிரம் செங்கல்லும் இருந்தாப் போதும்!…”

“ஆத்து மணலுக்கு இப்ப ரொம்ப டிமாண்ட்…யூனிட் நாலாயிரம் ஆகிறது….ஒரு செங்கல் ஐந்து ரூபா ஆகும்…”

“என்ன முதலாளி இன்றைய மார்க்கெட் ரேட் கூடவா தெரியாமலயா இந்த தொழிலிலே இருபத்தி ஐந்து வருஷம் இருப்பேன்?….”.

“சரி…அப்ப விபரம் சொல்லு…லோடு ஏத்தி அனுப்பறேன்…”

“வழக்கம் போல் தான் முதலாளி…ஒரு யூனிட் மணலுக்கு 4500 ரூபாயும், ஆயிரம்செங்கல்லுக்கு 6000 ரூபாயுக்கும் பில் போட்டுத்தாங்க!.டிரைவரிடம் சொல்லி முக்கா யூனிட் மணலும், 900 செங்கல்லும் அனுப்பச் சொல்லுங்க…அப்படியே பழைய மணலும்,கொஞ்ச செங்கல்லும் சைட்டில் இருக்கும் அதன் மேலேயே இந்த மணலையும், செங்கல்லையும் சரித்து விடச் சொல்லிடுங்க…நான் முக்கா யூனிட் மணலுக்கு 3000 ஆயிரமும், 900 செங்கல்லுக்கு 4500ம் தந்திடறேன்!…”

“சரி…மேஸ்திரி..பணத்தைக் கொடு…” என்றுசிரித்துக் கொண்டே பணத்தை வாங்கிப் போட்டார் அந்த பில்டிங் மெட்டிரியல் சப்ளை செய்யும் அந்த கம்பெனி உரிமையாளர்.

கொஞ்சம் நகர்ந்ததும் பையன் மேஸ்திரியிடம், “அப்பா!….நீங்க காலையிலே வீட்டுச் சொந்தக்காரரிடம் மணலுக்கு 4500 என்றும், செங்கல்லுக்கு 6000 என்று சொல்லி 10500 ரூபாய் வாங்கினீங்க!…இங்கே 7500 தானே தந்தீங்க!…”என்று கேட்டான்.

“இந்தக் கட்டுமானத் தொழிலே அப்படித்தாண்டா!….வீட்டுச் சொந்தக்காரன் 10 லட்சம் கொடுத்தா…அவர் வீட்டுக்கு 7 லட்சம் தான் செலவு செய்வாங்க!…அஸ்திவாரம் தோண்டறவனிலிருந்து கடைசியா பெயின்ட் அடிக்கிறவன் வரை எல்லோரும் ‘பொய்’ மட்டும் தான் சொல்லுவாங்க!..அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு போனால் தான் சொந்த வீடு கட்டும் வீட்டுக்காரன் ஆசை நிறைவேறும்! இல்லாவிட்டா வீடு பாதியிலேயே குட்டிச் சுவரா நின்று விடும்!…அதெல்லாம் சொந்த வீடு கட்ட ஆசைப் படுபவனுடைய தலையெழுத்தைப் பொறுத்தது!..” என்றுகட்டுமானத் துறையின் நுணுக்கங்களை மேஸ்திரி தன் மகனுக்கு விளக்கிச் சொன்னான்.

– பொதிகைச் சாரல் அக்டோபர் 2014 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *