நீ எங்கிருந்து வருகிறாய்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 7,157 
 

கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, ‘சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:

“இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்!”

இங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது ‘ஹாக்கி’ அல்லது ‘பேஸ் பால்’ விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள். வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.

“உண்மைதான். ஆனாலும் எனக்கு இந்தக் குளிரைத் தாங்க முடியும். ஆனால்.. இந்த உறைபனி (Snow) இருக்கிறதே… அதனை மட்டும் தாங்கவே முடியாது..” என்று இவன் பதிலுக்கு உரையாடலினைத் தொடர்ந்தான். அதற்கு அந்த வெள்ளையினத்தவன் சிரித்தவனாகத் தொடர்ந்தான்:

“நீ வெப்பமான நாட்டினில் பிறந்தவன் அதுதான். ஆனால் எனக்கு இந்த உறைபனியில்லாவிட்டால் இருக்கவே முடியாது. இதற்குள்ளேயே பிறந்து, வளர்ந்து, விளையாடி வளர்ந்தவர்கள் நாம்… அது சரி…”

இவ்விதம் அவன் கூறிச் சிறிது நிறுத்திய பொழுது உடனடியாகவே இவனுக்கு அவன் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகின்றானென்பது தெரிந்து விட்டது. இருபது வருடங்களாக இந்த மண்ணில் இருக்கிறானல்லவா. இது கூடத் தெரியாமல் போய் விடுமாவென்ன?

“ஏ! நண்பனே! நீ அடுத்து என்ன கூறப் போகின்றாயென்பது எனக்குத் தெரிந்து விட்டது…” என்று இவன் கூறவும் அவனது முகத்தில் சிறிது வியப்பு படர்ந்தது.

“நீ என்ன சோதிடனா எதிர்காலத்தை எதிர்வு கூறுவதற்கு?”

“நான் சோதிடனல்லன். ஆனால் இந்த மண்ணுடனான எனது பிணைப்பும் சொந்தமும் எனக்கு இந்த விடயத்திலெதிர்வு கூறும் வல்லமையினைத் தந்து விட்டன. அது சரி.. ‘நீ எங்கிருந்து வந்தாய்” (Where are you from?’) என்பது தானே நீ கேட்க எண்ணிய வினா?”

அதற்கு அவன் சிரித்தபடியே பதிலிறுத்தான்: “நீ நன்றாகவே கனடாவினைப் பற்றிக் கற்றறிந்து விட்டாய்.”

“உண்மைதான். ஏனெனில் நான் இந்த நாட்டுக் குடிமகனல்லவா!” என்றான். இந்தக் கேள்வியினை, ‘நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்னும் வினாவினை, அவன் இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்த நாட்களிலிருந்து எதிர்கொண்டு வருகின்றான். இளையவர், முதியவரென்ற பாகுபாடின்றி அவன் அனைவரிடமிருந்தும் அவ்வப்போது எதிர்கொண்டு வருகின்றான். அவன் வந்த பின் இந்த மண்ணில் அவதரித்தவர்களும் வளர்ந்து பெரிதாகி அவனிடம் இந்த வினாவினத் தொடுக்கத் தொடங்கி விட்டார்கள். அண்மையில் அவனிடம் மட்டுமே கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த மண்ணில் பிறந்த அவனது வளர்ந்து விட்ட அவனது குழந்தையிடமும் கேட்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். வந்த புதிதில் அவன் இந்தக் கேள்வியினை ஒருவித ஆர்வத்துடன் எதிர்நோக்கினான். தன்னைப் பற்றி அறிய இவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வமென்று மகிழ்வுற்றான். எனவே அப்பொழுதெல்லாம் அவனது இதற்கான பதிலும் விரிவானதாகவே இருக்கும். தன் நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றியெல்லாம் விரிவாகவே அலுக்காமல், சலிக்காமல் அவன் பதிலுறுப்பான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு அந்த ஆர்வமில்லை. ஆரம்பத்தில் ஆர்வமாககப் பதிலிறுத்தவன் அதன் பின் பதிலிறுப்பதலில் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். வினாத்தொடுப்போருக்குப் பூகோள சாத்திரம் கற்பிக்கத் தொடங்கினான். இந்தக் கேள்வி எதிர்பட்டதுமே அவன் பின்வருமாறு தனது பதிலைக் கேள்வியொன்றுடன் ஆரம்பிப்பான்.

“இதற்கான பதிலை நீ அறிய வேண்டுமானால்.. அதற்கான எனது பதில். ஊகி என்பதுதான்..”

“ஓகே.. ஊகிப்பதா.. சரி..எங்கே முகத்தைக் காட்டு பார்ப்போம்…. ” என்பார்கள். இவனும் முகத்தைக் காட்டுவான். உரையாடல் தொடரும்.

“பார்த்தால்… கயானா.. அல்லது கிழக்கிந்தியனைப் போல் தெரிகிறாய்… ஓகே. நீ இந்தியனா..” என்பார்கள்.

இவன் அதற்குக் கீழுள்ளவாறு பதிலிறுப்பான்:

“நீ நன்கு நெருங்கி விட்டாய்… ஆனால் நான் இந்தியனில்லை… ஆனால் எனது மண் இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ளது…”

“ஓகே…. பாகிஸ்த்தானா.. ”

“அதுவுமில்லை…. ” என்பான்.

“பங்களாதேஷ்..” என்பார்கள். அவ்வளவுதான் அதற்குமேல் பெரும்பாலோருக்கு வேறு நாடுகளின் பெயர்களே தெரிவதில்லை. இவனும் விட மாட்டான்.

” சரி.. உனக்கு நான் சிறிது உதவி செய்கிறேன்.. தயாரா” என்பான்.

அவர்களும் அடுத்த கட்டத்திற்குத் தயாராவார்கள்.

“அது ஒரு அழகான தீவு.. ஆங்கிலேயர்களின் முக்கியமான காலனிகளிலொன்று.”

” நீ என்னை நல்லாவே சோதிக்கிறாய்… இனி நான் பூகோள சாத்திரம் இதற்காகவே படிக்க வேண்டும்…” என்று கூறியபடியே மண்டையினைப் போட்டு உடைத்துக் கொள்வார்கள். இறுதியில் இவனும் மனமிரங்கிப் பதிலிறுத்து விடுவான். பின்னர் அதிலும் இவனொரு சிறியதொரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். இறுதியாகப் பதிலிறுப்பதைத் தவிர்த்துப் பின்வருமாறு கூறுவான்: ‘உனக்கு உண்மையிலேயே இதற்கான பதில் தேவையென்றால்.. வீடு சென்றதும் உலக வரைபடத்தை எடுத்துப் பார் புரிந்து கொள்வாய்… இந்தியாவின் தெற்குப் புறமாக உள்ள தீவு என்னவென்று அறிய முயற்சி செய். பதிலை நீயே கண்டு கொள்வாய்….’

“…….”

“என்ன சிந்தனையிலாழ்ந்து விட்டாய்? என் கேள்விக்கென்ன பதில்?” என்றான் அவன்.

“நண்பனே! இதற்கான பதிலுனக்குத் தேவையென்றால்… என் கேள்விக்கு நீ பதில் தரவேண்டும்.”

“உன் கேள்வியா? நீ தான் கேள்வியே கேட்கவில்லையே… கேட்காத கேள்விக்கு எவ்விதம் பதில் தரமுடியும்? ”

“அவசரப்படாதே… இனிமேல் தான் கேட்கப் போகின்றேன்… நீ தயாரா?’

“நான் தயார். நீ தயாரென்றால் சரிதான்…”

“நீ எங்கிருந்து வருகின்றாய் நண்பனே! ”

” நானா…. தொடராண்டோவின் கிழக்குப் பகுதியிலிருந்து வருகின்றேன்..”

“நான் அதைக் கேட்கவில்லை..”

“பின் எதைக் கேட்கிறாய்..”

“உன் மூலமென்ன.. நீ எங்கிருந்து வந்தாய்… இந்த மண்ணுக்கு…”

” நீயென்ன விளையாடுகின்றாயா… இது நான் பிறந்த மண்… ”

“நான் அதைக் கேட்கவில்லை…. உன்னுடையா மூலமென்ன.. ஆதியில் உன் குடும்பத்தவர் எங்கிருந்து வந்தார்கள்… அது உனக்குத் தெரியும் தானே…”

“ஓ.. அதுவா… அவர்கள் ஒண்டாரியோ மாநிலத்தில் வடக்கிலுள்ள தண்டர்பேயிலிருந்து வந்தவர்கள்…..”

“அதையும் நான் கேட்கவில்லை… அது சரியான பதிலுமல்ல…. ” என்றான். கேள்வி கேட்டவன் முகத்தில் சிறிது பொறுமையின்மை, ஆத்திரம் பரவியதை இவன் அவதானித்தான். அது அவன் குரலிலும் தொனித்தது.

” நீ என்னுடன் விளையாடுகிறாய். நான் யார் தெரியுமா? இந்த மண்ணின் குடிமகன். என்னைப் பார்த்து நீ கேலி செய்கிறாய்..”

” நண்பனே… பொறு.. அவசரப்படாதே… நீ இன்னுமென் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நான் கேட்டதென்னவென்றால்…. உன் தாத்தா, பாட்டி அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்…”

அவன் கூறினான்: ” இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கின்றாய்.. கனடியக் குடிமகனொருவனை நீ அவமதிக்கின்றாய்…. அது உனக்குத் தெரிகிறதா?”

“எனக்கு நன்றாகவே தெரிகிறது. உனக்குத் தெரிந்தால் சரிதான்” இவ்விதம் கூறிவிட்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த போக்குவரத்து வண்டியில் ஏறுவதற்குத் தயாரானான் இவன்.

நன்றி:இசங்கமம் , பதிவுகள், திண்ணை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *