நிராகரிக்கப்பட்டவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,464 
 

கண்களில் பயத்தோடு ஈட்டன் ஹவுஸ் அகதிகள் நிலையத்தில் அவன் நின்றுகொண்டு இருந்தான். அகதிகள் எப்போதும் பயத்துக்கு உரியவர்கள்தான். டோக்கன் நம்பர் கொடுத்து இருந்தார்கள்.

கையில் இருக்கும் நீல நிறத் துண்டில் இலக்கம் 14 என்று அச்சிடப்பட்டு இருந்தது. அவனுக்குச் சிரிப்பு வந்தது.

14-ம் திகதிதான் அவனது பிறந்த திகதியும். வாழ்க்கையில் 14-ம் திகதி, அவனுக்கு எந்த சுபிட்சத்தையும் கொண்டுவரவில்லை.

வலது பக்கம் ஒரு செக்யூரிட்டி இருந்தார். அவர் ஆப்பிரிக்க நாட்டுக்காரர். இடது பக்கச் சுவரில், ‘நீங்கள் உங்கள் எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு டோக்கன் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

அகதிகள் நிலையம் அகதிகளுக்கு எப்போதும் உவப் பானதாக இல்லை. கையெழுத்து போடப் போகும்போது மனம் ஒன்றுக்குப் பத்து தரம் அடித்துக்கொள்ளும்.

லண்டனில் ஈட்டன் ஹவுஸ் என்றால், அகதிகள் மத்தியில் பிரபல்யமான இடம். பக்கத்திலேயே ஹீத்ரோ விமான நிலையம். அதற்குப் பக்கத்தில் அகதிகளைத் திருப்பி அனுப்பும் ஹாமன்ஸ் வேத் சென்டர்.

அவன் தனது மணிக்கட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தழும்பை ஒரு தரம் பார்த்துத் தடவிக்கொண்டான்.

கொழும்பு கோல் பேஸில்வைத்து, பிறந்த இடம் ‘ஒட்டு சுட்டான்’ என்று அடையாள அட்டையில் இருக்க… பொலிஸ்காரன் பிடித்துக்கொண்டு போய், பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்வைத்து, கையில் நைலோன் கயிறைக் கட்டி மேசையோடு இணைத்து இறுக்கியதில் வந்த தழும்பு அது. இன்னும் அது மாறவில்லை.

”இப்ப சாட்டட் ஃபிளைட் பிடித்து இலங்கைக்கு ஆட்களை அனுப்புறாங்களாம்” என்று வரிசையில் நின்ற 15-ம் இலக்கக்காரத் தமிழர் ஒருவர் கொஞ்சம் சத்தம் போட்டுச் சொன்னார்.

எப்போது அகதிகளைத் தடுத்து வைப்பார்கள்… எப்போது வெளியில் விடுவார்கள்… எப்போது அனுப்புவார்கள் என்ற எந்த விடயமும் அகதிகளுக்குத் தெரியாது.

”எல்லோரும் அவரவர் சாமான்களை அருகில் உள்ள பெட்டியில் போட்டுத் தயாராகவைத்திருங்கோ” என்று ஆங்கிலத்தில் சொன்னார் அந்த ஆப்பிரிக்க செக்யூரிட்டி.

லண்டனில் ஆப்பிரிக்க நாட்டுக்கார செக்யூரிட்டிகள்தான் பாது காப்பு வேலையில் அதிகமாக இருக் கிறார்கள். தமிழர்களுக்கு, ஆப்பிரிக்க நாட்டவர்கள், வெள்ளைக்காரர்கள் என்றால், பயம் கொஞ்சம் அதிகம் தான்.

அவனுக்குக் கண்கள் கலங்கி முட்டி இருந்தன. ஓவென்று அழ வேண்டும்போல் இருந்தது. ஊர் உறவுகளை விட்டுவிட்டு வந்து, அந்நிய நாட்டில் யாரும் அற்ற அநாதையாக, விசாவும் இல்லாமல் நாய்போல அலைந்துகொண்டு இருக்கிறான். இரண்டு கண்களும் வெப்பி சாரத்தால் கலங்கி நீர் வழிந்தது.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். லண்டனுக்கு வந்த ஒன்பது வருடங்களில் அகதியாய்ப் பதிந்தது. அது பதில் வராமல், நாலு வருடங்கள் கழிந்தது. இப்போது ஐந்து வருடங்களாக ஒன்றுமே சொல்கிறார்கள் இல்லை ஹோம் ஒஃபிஸ்.

ஆனால், மாதம் ஒரு முறையாக இருந்த சைன் பண்ணுகிற விடயம், இப்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆகிவிட்டது.

இது பெரும் மன உளைச்சல். இங்கு அவனோடு இருந்த சீலன், போன வாரம் வீட்டின் மேல் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றான். கடைசியில் முழங்கால் எலும்பு முறிந்து, வெஸ்ட் மிடில் செக்ஸ் வைத்திய சாலை வார்டில் படுத்து இருக்கிறான்.

அவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். பக்கத்தில் நின்ற யாரும் பார்க்கவில்லை.

‘தற்செயலாக இன்று தடுத்துவைத்து, இலங்கைக்கு நாடு கடத்தினால் என்ன செய்வது?’ என்று நினைக்கும்போதே அவனுக்கு நெஞ்செல்லாம் நடுங்கியது. நினைத்துப் பார்க்கவே பயமாய்க்கிடந்தது.

கொழும்பில் போய் இறங்க… என்ன நடக்கும்; கைது செய்வார்களோ? அல்லது கோட்டபாய ராஜபக்ஷ வைத்து இருக்கும் பிரத்யேகமான சித்ரவதைக் கூடத்துக்குக் கொண்டுபோவார்களோ? நினைக்க நினைக்கப் பயமாக இருந்தது.

”ச்சீ… அப்படி நடக்காது. வற்றாப்பளை கண்ணகை ஆச்சி அப்படி விட மாட்டாள்” – நினைத்துக்கொண்டான்.

‘ஆனால், கண்ணகை அம்மனை எப்படி நம்புறது? கண்ணகை அம்மனுக்கு முன்னாலைதானே, 40 ஆயிரம் உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டன. கண்ணகை அம்மனுக்கு முன்னாலைதானே, நந்திக் கடல் ரத்த ஆறாக ஓடியது. கண்ணகை அம்மனின் அருள், ஆமிக்காரரின் ஷெல்லுக்கு முன்னால் தவிடுபொடி ஆகிவிட்டதே. காட்டு விநாயகர் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்… அவராலையும் மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே. எல்லாம் அழிந்துபோய்விட்டதே’ – நம்பிக்கைக்கும் கையறு நிலைக்கும் இடையில் நூலாடியது அவன் நினைவுகள்.

திரும்பிப் பார்த்தான்… ஒன்று, இரண்டு, மூன்று… பின்னால் எட்டாவதாக சிவத்தார் நின்றுகொண்டு இருந்தார். அவர் லண்டனுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவரும் அகதியாகப் பதிந்து இன்னும் ஒரு முடிவும் வராமல் கையெழுத்திட வந்து இருக்கிறார்.

சிவத்தார் குடியிருந்த வாடகை வீட்டுக்குப் பக்கத்தில்தான் அவனும் குடியிருந்தான். சிவத்தாருக்கு தான் உயர் ஜாதி என்ற தடிப்பு அவர் மனதில் எப்போதும் இருக்கும். இங்கு லண்டனில் ஜாதியையும் கூட்டிக்கொண்டுதான் யாழ்ப்பாணத்தார் அலைகின்றனர். என்னதான் முற்போக்கு, கல்வி அறிவு, வளர்ந்த நாட்டில் இருக்கிறோம் என்று பீற்றிக்கொண்டு இருந்தாலும், ஜாதி, தமிழர்கள் மத்தியில் பரவி, நச்சு வேராகிக்கிடக்கிறது.

ஒரே ஜாதியில்தான் கலியாணம் முடிப்பார்கள், ஒரே ஜாதியோடுதான் பழகுவார்கள். ஆனால், தமிழர்களின் புதிய தலைமுறை அவற்றை உடைத்துக்கொண்டு போகிறது. தமிழ்ப் பெண் பிள்ளைகள், பத்துக்கு எட்டுப் பேர் வெள்ளைக்காரரைத் தான் காதலிக்கிறார்கள். கலியாணமும் செய்கிறார்கள். அவர்களைக் கட்டுப் படுத்த முடியாது.

சிவத்தார் அவனைப் பார்த்துச் சிரித்தார். அவனும் அவருக்குக் கையால் சைகை காட்டிவிட்டுத் திரும்பி நின்றான்.

”இப்போது இங்கு லண்டனில் உள்ள ஹோம் ஒஃபிஸ்காரங்கள், இலங்கை அரசாங்கத்தோடு இங்கை உள்ள இலங்கைத் தூதரகத்தோடு தொடர்பு வெச்சிருக்கிறாங்களாம்… உண்மையோ… பொய்யோ… தெரியாது” என்று அவனுக்குப் பின்னால் நின்ற தமிழர் இவனுக்குச் சொன்னார்.

”உண்மைதான். ஷியோபன் மக்டொனால்ட் என்கின்ற லேபர் எம்.பி., டி.வி-யிலை பேசினதை நானும் கேட்டனான். ஹோம் ஒஃபிஸ்காரர், அகதிகளின் விடயங்களை இங்கை உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தோடைப் பகிர்ந்துகொள்கிறார்களாம். மற்றது எமர்ஜன்சி பாஸ்போட் எடுக்கப் போக, முதல் என்றால் ஒன்றும் கேட்காமல் எல்லாம் கொடுத்தார்கள். ஆனால், இப்ப நிறையக் கேட்டு எழுதுகிறார்களாம் ஹை கொமிசனில். முக்கியமாக, புலிகளுக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன என்பதுதான் பிரதானமான கேள்வியாம்.”

ஒவ்வொருத்தராக செக்யூரிட்டியைக் கடந்து, அவர்கள் வைத்து இருக்கும் மெட்டல் டிடெக்டரைக் கடந்து போக வேண்டும். கையில் ஒன்றுமே வைத்திருக்கக் கூடாது. ஒரு குண்டூசி அளவு சாமானும் இருக்கக் கூடாது. அவன் எல்லாவற்றையும் எடுத்துப் பெட்டியில் வைத்தான். இடுப்புப் பட்டியையும் கழட்டிவைத்தான். ஹோம் ஒஃபிஸ் பேப்பரோடு, மெயின் ஹாலுக்குள் போடப்பட்டு இருந்த நீல நிற பிளாஸ்டிக் கதிரையில் போய் அமர்ந்தான்.

பதற்றமான நேரத்தில் அவனுக்குஉள்ளங் கையில் வியர்வை வரும். இப்போதும் வியர்வை வந்தது. கைக்குட்டையால் கை யைத் துடைத்துக்கொண்டான். திரும்பத் திரும்ப வியர்வை வந்து கை கசிந்துகொண்டு இருந்தது.

அதனால், ஹோம் ஒஃபிஸ் பேப்பர்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கையில் வைத்து இருந்தான்.

அவனுக்குப் பக்கத்தில் முன் பின் தெரியாத பெண்மணி ஒருத்தி இருந்தார். கையில் குழந்தை இருந்தது. குழந்தைக்குத் தலைமுடியைக் கூட்டி உச்சியில் பேண்ட் போட்டு வைத்திருந்த அந்தப் பெண், அவனைப் பார்த்துக் கேட்டாள், ”அண்ணை, நீங்கள் ஸ்ரீலங்காவோ?”

”ஓம்.”

”எவடம்?”

”ஒட்டு சுட்டான்.”

”அண்ணை… அகதிகளை ஏத்துறதுக்கு சாட்டட் ஃபிளைட் ஒண்டை புக் பண்ணிட் டாங்களாம் உண்மையா?”

”எண்டுதான் கேள்விப்பட்டனான்.”

”இந்த மாதம் 23-ம் திகதி ஒண்டு போகு தாம். அடுத்தது 30-ம் திகதி இன்னொண்டு ஸ்ரீலங்காவுக்குப் போகுதாம்.”

”ஆரை எல்லாம் அனுப்புகினமாம்?”

”சரியாத் தெரியாது. இண்டைக்கு ஏதாவது வில்லங்கம் இருக்குமோ?” அந்தப் பெண்மணி, பயத்தை இன்னும் அதிகரித்தாள். ”அண்ணை… சேனல் 4 டொக்கியூமன்றியைப் பாத்த பிறகும் லண்டன்காரர் எங்களைப் பிடிப்பினமே?” – இயலாதவளாக அந்தப் பெண் இருந்தாள். சேனல் 4 ‘இலங்கையின் கொலைக் களம்’ விவரணப் படத்துக்குப் பிறகு, லண்டனில் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இனிமேல் பிரித்தானியா, இலங்கைத் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கும் என்று.

அவன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், ”டொக்கியூமன்றி வேறை… அகதிகள் விசயம் வேறை.”

”என்னண்ணை சொல்லுறியள்?”

”ஓம். அகதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள பிரச்னையை நிரூபிக்க வேணும். நிரூபித்தால்தான், அகதி அந்தஸ்து.”

”டொக்கியூமன்றி ராஜபக்ஷே அரசுக்குத்தானே வில்லங்கம். எங்கடை விசயம் வேறை.”

”டோக்கன் நம்பர் 14.” மூன்றாம் இலக்க கவுன்டர் பெண்மணி அழைத்தாள். அவன் கவுன்டருக்குக் கிட்ட போனான். அந்த அலுவலகப் பெண்மணி முகத்தை உர்ர்ர் என்று வைத்து இருந்தாள். அவள் குஜராத்தி யாக இருக்க வேண்டும். அவனைக் கண்ணுக்கு நேரே பார்த்தாள். இங்கு பிறந்து வளர்ந்த ஆட்கள், அகதிகளை வேண்டா வெறுப்பாகவே பார்க்கிறார்கள். அகதிகள் வந்து தங்களுடைய நாட்டைச் சூறையாடு கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இந்தி யாக்காரரே, இலங்கையனை மதிப்பது இல்லை. ஏன், இலங்கைத் தமிழனேகூட, இலங்கைத் தமிழனை மதிப்பது இல்லை.

”உங்கடைப் பேர் என்ன?” அலுவலர் பெண்மணி கேட்டாள்.

”மனோகரன்.”

”எங்கை பேப்பரைத் தாங்கோ!”

கொடுத்தான். பேனாவை அவளது வாய்க்குள் வைத்துக் கடித்தாள். கண்ணை உருட்டினாள்.

”இன்னும் இதே விலாசத்தில்தான் இருக்கிறீர்களா?”

”ஓம்.”

”உங்களுக்கு வேறை ஏதாவது லெட்டர் வந்ததா?”

”இல்லை.”

”உங்கடை லோயரைத் தொடர்புகொண்டீர் களா?”

”இல்லை. ஏன்?”

”அப்படியே இருங்கோ, வாறன்.”

சொல்லிவிட்டு அவளது நாற்காலியில் இருந்து இறங்கிப் போனாள். அப்போதுதான் பார்த்தான், அவளுக்கு ஒரு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்தி இருந்தாள். அவனுக்கு மனது வலித்தது. ஒரு கால் இல்லா மலும் அவள் உழைக்கிறாள்.

போனவள், இன்னொரு ஒஃபிஸருடன் வந்தாள். அவர், அவளின் உயர் அதிகாரியாக இருக்கும். அவர் அவனிடம் சொன்னார்.

”மனோகரன் சுப்ரமணியம்?”

”ஓம்.”

”நீங்கள் கொஞ்ச நேரம் அந்த ஒறேஞ் நிற கதிரையில் அமருங்கள். உங்களிடம் பேச வேண்டும்.”

என்ன அநியாயமோ தெரியாது. புடிச்சு அனுப்பப்போறாங்களோ? ‘லண்டனில் 9 வருஷங்கள் வீணாய்ப் போய்விட்டதே’ என்று நினைத்தான்.

தமிழர்கள் வாழவே பயப்படுகிற நாடு இலங்கைதானே. பத்திரிகைக்காரர்கள், வெளிநாட்டில் இருந்து போகிறவர்கள், ஆண்கள், பெண்கள் என்று கடத்திக்கொண்டு போகிறார்கள். கொலை செய்கிறார்கள். லண்டனில் இருந்தாலாவது மனப் பயம் இல்லாமலாவது வாழலாமே.

யோசிக்க யோசிக்க… மூளைஎதனை யும் உள் வாங்கத் தயாராக இல்லை. அவனுக்குப் பக்கத்தில் இருந்த பெண் மணி சைன் பண்ணிவிட்டு, தனது குழந்தையோடு இவனைப் பரிதாப மாகப் பார்த்துவிட்டுப் போகிறாள். குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. அவனுக்குச் சிரிக்க வேண்டும் என்ற உணர்வு வரவில்லை. விரக்தியான மனநிலைதான் மனம் முழுக்க விரவிக்கிடந்தது. கைகள் வியர்த்தன. மனம் பதற்றமாக இருந்தது.

அவன் தனது அகதி அந்தஸ்து தொடர்பாக ஒரு நல்ல சட்டத் தரணியூடாகத்தான் வழக்கை நடத்துகிறான். ஆனால், ஹோம் ஒஃபிஸ் சரியான பதிலைச் சொல்லாமல் இழுத்தடிக் கிறது.

டேவிட் கமரூன் அரசாங்கம் வந்த இந்தக் காலத்தில், அகதிகள் மீதான கெடுபிடி அதிகரித்து இருக்கிறது. எப்படியாவது அகதிகளைக் குறைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அரசாங்கம் செயல்படுகிறது. அகதிகளைக் குறைக்கிறோம் என்று சொல்லித்தான் பிரித்தானிய மக்களி டம் வாக்கு கேட்டார்கள். மக்களும் அவர்களுக்கு வாக்கு போட்டார்கள். மக்களின் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அகதிகளை நாட்டைவிட்டு விரட்டுகிறார்கள்.

அதோடு, அகதியாக வந்து இங்கு பதிந்த, இலங்கை, பாகிஸ்தான், இந்தியாக்காரரும் மெட்ரோபாலிடன் பொலிஸாருக்குப் பெரும் தலை இடி யைக் கொடுத்தார்கள். சண்டைக் கோஷ்டிகள், கிரடிட் கார்டு மோசடி, கொள்ளை, கொலை என்று அகதித் தமிழர்களில் ஒரு சிலரும் – பெரும் சச்சரவாக இருந்தார்கள். பெரியபெரிய கிரிமினல் குற்றவாளிகள் தமிழர்களிலும் இருக்கிறார்கள். கள்ள பாஸ்போர்ட் செய்வது, விசா செய்வது என்று செய்யாத கள்ள வேலைகள் இல்லை. இப்போது இது கட்டுப்பட்டு இருந்தாலும், போன மாதமும் கோஷ்டி மோதலில் ஒரு கொலை விழுந்து இருக்கிறது. இவை எல்லாவற்றையும் நினைக்க, அவனுக்கு வெறுப்பாக இருந்தது.

பூனைக் கண் அலுவலர் ஒருவர் வந்து அவனை அழைத்தார்.

”மனோகரன் சுப்பிரமணியம்!”

அவன் அவரைப் பார்த்தான்.

”வாங்கோ.”

அவர் ஓர் அறையின் கதவைத் திறந்து பிடித்துக்கொண்டு உள்ளே போனார். அந்த அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு செக்யூரிட்டி… அறை மூலையில் விறைப்பாக நின்றுகொண்டு இருந்தார்.

”மனோகரன் சுப்பிரமணியம்… இதிலை ஒரு கையெழுத்து வையுங்கோ…”- பூனைக் கண் அலுவலர் சொன்னார்.

”இது என்ன ஃபோம்?”

”இது பாஸ்போர்ட் ஃபோம். உங்களை ஊருக்கு அனுப்பப்போகிறோம்.”

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஏற்கெனவே அவனுக்குத் தெரிந்தவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அலுவலர் கொடுக்கும் எந்த ஃபோமிலும் கையெழுத்து போடக் கூடாது. ஆனால், அவனுக்கே விரக்தியாக இருந்தது. 9 வருடங்கள் இங்கு இருந்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இலங்கைக்குப் போனால் என்ன நடக்கும், நிச்சயமற்ற வாழ்வு.

செக்யூரிட்டி அவனையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கையெழுத்து வைத்தான். நடப்பது நடக்கட்டும். லண்டனில் இருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை, ஒவ்வொரு நாளும் இலங்கைக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது வெளியில் தெரிவது இல்லை. இங்கு வாழ்ந்துவிட்டு இலங்கையில் போய் வாழ்வது என்பது எல்லோருக்கும் விருப்பமானது அல்ல. தமிழனாக திருநீறு பூசி, சந்தனப் பொட்டுவைத்துக்கொண்டு, கொழும்பில் சுதந்திரமாகத் திரிய முடியாது.

இப்போது சிங்களவர்கள் தமிழர்களை வெற்றிகொண்ட புழுகில் திரிகிறார்கள்.

”குட், அவருடன் போங்கோ”- பூனைக் கண் அதிகாரி, செக்யூரிட்டியுடன் போகச் சொன்னார்.

செக்யூரிட்டி வேறு ஒரு வழியில் கொண்டுபோய் ஒரு வாகனத்தில் ஏற்றினார். வாகனம், ஹாமன்ஸ் வேத் தடுப்பு முகாமை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தது.

அரை மணி நேர ஓட்டத்தில் தடுப்பு முகாமில் கொண்டுபோய்விட்டார்கள். அங்கு அவனைப் பதிவு செய்து, ஒரு பெரிய அறைக்குக் கொண்டுபோனார்கள். அங்கு போனபோதுதான் பார்த்தான். அவனோடு சேர்த்து 56 பேர் இருந்தார்கள். அழுத கண்களுடன் கலவரமான மனிதர்களாக இருந்தார்கள். எல்லோரும் தமிழர்கள். நான்கு சுவர்களுக்குள் தமிழர்கள் அடைபட்டுக்கிடந்தார்கள்.

வவுனியாவில், அகதிகள் முகாமில் தமிழர்கள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். லண்டனில் தடுப்பு முகாமில் அகதிகள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று எல்லோரும் இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பிரச்னைகளைச் சுமந்துகொண்டு இருப்பது தெரிகிறது. இங்குவைத்து இவர்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாது.

‘பிரிட்டன், அகதிகளுக்கு வாய்ப்பான ஓர் இடம் என்றும், சட்ட விரோதக் குடியேறிகளுக்கு உவப்பான இடம் என்றும் நினைக்கக் கூடாது’ என்று உள்துறை அமைச்சர் டேமியன் கிறீன் சொன்னது… திரும்பத் திரும்ப அவனுக்கு நினைவு வந்தது.

இப்போது வெயில் காலம் ஆகையால், அந்தச் சதுர மண்டபத்தில் ஒரே புழுக்கமாக இருந்தது. மனிதச் சூடு வெப்பமாக இருந்தது.

”அண்ணை புதுசோ?”- அங்கு நின்றுகொண்டு இருந்த இளம் பெடியன் ஒருவன் விசாரித்தான்.

”ஓம். நீங்கள்?”

”நானும்தான். நான் ஸ்ரூடன்ட் விசாவில் இருந்துகொண்டு முழு நேரமாக வேலை செய்தனான். வேலை செய்த இடத்தில்வெச்சு பிடிச்சுப் போட்டினம். அப்படியே இங்கை கொண்டுவந்திட்டினம்” என்றான் அந்தப் பெடியன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்னையில் இருந்தார்கள். நேரம் கரைந்துகொண்டு இருந்தது. மாலையில் பிஸ்கட்டும் பால் தேநீரும் தந்தார்கள். எல்லோரிடமும் பதற்றம் அதிகரித்துக் காணப்பட்டது. தங்கள் தங்கள் சட்டத் தரணிகளோடு பேசுவதற்குத் தொலைபேசி வசதி செய்து தரும்படி, ஒரு சிலர் போய் அதிகாரிகளைக் கேட்டார்கள். ஒவ்வொருத்தராகப் பேசுவதற்கு அனுமதி கொடுத்தார்கள். பிறகுதான் தெரிந்தது, இங்கு பிடித்து வரப்பட்டவர் களில் பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள் என்று.

மாணவர் விசாவில் வந்து விசா முடிந்தவர்கள், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள், விசா இல்லாமல் இருந்துகொண்டு கார் ஓட்டி பிடிபட்டவர்கள், கள்ள விசாவில் நாட்டுக்குள் வந்தவர்கள், இன்ஷூரன்ஸ் நம்பர் இல்லாமல் ரூறிஸ்ட் விசாவில் இருந்துகொண்டு வேலை செய்த வர்கள் என்று பலரும் இருந்தார்கள். இயலுமானவர்கள் தங்கள் தங்கள் சட்டத் தரணியூடாக வெளியில் போக பேசிக்கொண்டு இருந்தனர்.

இலங்கைக்கு அகதிகளை ஏற்றப்போகிறார்கள் என்ற பதற்றம் லண்டன் முழுவதிலும் தமிழர்கள் மத்தியில் வேகமா கப் பரவியது. தங்கள் தங்கள் அகதிகளைக் காப்பாற்ற, ஒரு சில சட்டத் தரணிகள் மிக வேகமாக வேலை செய்துகொண்டு இருந்தனர். ஒரு சில சட்டத் தரணிகள் அலட்டிக்கொள்ளவில்லை.

ஹோம் ஒஃபிஸுக்கு கால் பண்ணிக் கேட்டால், ஃப்ளைட்டில் ஆட்களை அனுப்புவது பற்றி வாய் திறக்கிறார்கள் இல்லை. அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அகதிகள், எப்படியாவது தங்களது சட்டத் தரணிகளைப் பிடித்து விமானத்தில் ஏற்றுவதைத் தடை செய்ய, படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தனர். அதில் அவனும் தனது லோயருடன் பேசிக்கொண்டு இருந்தான். கொழும்புக்குப் போய் சாவதைவிட, லண்டனில் எப்படியாவது இருந்துவிட வேண்டும் என்னும் பதகளிப்பு அவனில் தெரிந்தது.

அந்த மண்டபத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த ஜன்னல் திறந்து இருந்தது. திடீர் என்று அந்தப் பக்கம் பெரும் சத்தம் கேட்டது. எங்கள் ஊரைப்போல இங்கு உள்ள ஜன்னல்களுக்குக் கம்பிகள் இல்லை. சைடுக்கு இரண்டு பெரிய கதவுகள் மல்லாந்து திறந்து இருந்தன.

”ஐயோ, அவர் கழுத்திலை சுருக்கு போட்டுட்டார்” என்று ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்ற ஒருவர் கத்தினார். கண் மூடித் திறப்பதற்குள் அது நடந்து முடிந்துவிட்டது. தனது லுங்கியைக் கழற்றிக் கிழித்து, ஒருவர் ஜன்னல் ஓரத்தில் இருந்த கம்பியில் சுருக்கிட்டு வெளியில் பாய்ந்துவிட்டார்.

அவருக்குத் தொண்டையில் லுங்கி இறுகி வெளியில் தொங்கிக்கொண்டு இருந்தார். பெரிய உயரம் இல்லாத இடம் என்பதால், மூன்று ஆண்கள் திடீர் என்று வெளியில் குதித்து, அவருடைய கழுத்தில் இறுகி இருந்த லுங்கியை அவிழ்த்து எடுத்துவிட்டார்கள். அகதிகள் தங்களை நாட்டுக்கு அனுப்பாமல் இருக்க இவ்வாறான தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது இப்போது வழக்கமாகிவிட்டது.

கைகளை பிளேடால் வெட்டிக்கொள்வது, கழுத்தில் சுருக்கிடுவது, தலையைச் சுவரில் அடித்துக் காயப்படுத்துவது, விமானத்தில் ஏற்றினால், ஆடைகளைக் களைந்துவிட்டு நிற்பது என்று எதிர்ப்பைக் காட்டி, நாடு கடத்துவதை எதிர்ப்பதற்கு இப்படிச் செய்வார்கள்.

இங்கு வெள்ளைக்காரருக்கு கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வது புதிய விடயம். அவர்களுக்கு இந்த தற்கொலை முறை தெரியாது. இங்கு தூக்க மாத்திரை போடுவது, ஓடும் ரயிலில் விழுவது, நச்சு வாயு நிரம்பிய காருக்குள் இருந்து தற்கொலை செய்துகொள்வதுதான் தெரியும்.

அங்கு இருந்த அதிகாரிகள் 999-க்கு கால் பண்ணிவிட்டார்கள். உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து தூக்குப் போட்ட தமிழருக்கு முதலுதவி கொடுத்துவிட்டு, கழுத்துக்கு ஒரு கிறீம் போட்டுத் தடவிவிட்டுப் போய்விட்டார்கள். அவருக்கு சுவாசம் சரியாக வேலை செய்கிறது. பயப் பட ஒன்றும் இல்லை என்று முதலுதவிக் காரர் சொன்னதோடு சரி. இப்போது அவர் சிறைபோன்ற கூண்டு ஒன்றுக்குள் கொண்டுபோய் விடப்பட்டார். அங்கு ஒன்றுமே இல்லை. ஒரு சிமென்ட் பெஞ்ச் மட்டும் இருந்தது. படுக்க வேண்டியதுதான். தற்கொலைக்கு முயற்சி செய்யவே முடியாது.

இரவு யாருமே நித்திரைகொள்ளவில்லை. எல்லோருக்கும் சாண்ட்விச்சும் தேநீரும் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் பசிக்கு ஏற்றதுபோல கேட்கக் கேட்க சாண்ட்விச் கொடுத்தார்கள். குழந்தைப் பிள்ளைகள் அழுதுகொண்டு இருந்தன. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சோகமான கதைகள் இருந்தன. பிறகுதான் தெரிந்தது… அங்கு விசா முடிந்த சிங்கள, முஸ்லிம் மாணவர்களும், விசா பிரச்னையால் அங்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள் என்கின்ற விசயம்.

இங்கு ஹோம் ஒஃபிஸ் மிகவும் கவனமாகவே இவர்களை நாடு கடத்தத் திட்டம் தீட்டி இருந்தது. இவர்களோடு சேர்த்து அகதிகளும் இருந்தார்கள். இவர்களை ஏன் நாடு கடத்துகிறார்கள் என்று கேட்பதற்கு யாருக்கும் திராணி இல்லை என்று ஹோம் ஒஃபிஸ் முடிவு எடுத்துவிட்டது.

இரவு பெரும் சிரமத்தோடு கழிந்தது அவனுக்கு. மிகவும் கஷ்டமான காலை விடிந்துவிட்டது.

காலை 8 மணிக்கு அதிகாரிகள் வந்தார்கள். 12 அதிகாரிகளும் பொலிஸாரும் வாகனங்களும் கூடவே வந்தன. அங்கு இருந்தவர்களுக்கு அந்தக் காலை சபிக்கப் பட்ட காலையாகவே இருந்தது.

எல்லோரையும் வரிசையாக வரச் சொன்னார்கள். அதிகாரிகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வரிசையாக வந்தார் கள் மக்கள்.

ஒவ்வொருவருடைய பெயர், ஒரு வழி பயண அனுமதிப் பத்திரம் எல்லாம் சரிபார்க்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டார்கள்.

அவனுக்கு வாகனத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. லண்டனை இறுதியாகப் பார்க்கிறோம். இனிமேல் சாகும் வரை இங்கு வர முடியாது என்று உறுதியாக நம்பினான். யுத்தத்தால் அழிக்கப்பட்ட, ஊரே இல்லாத தனது ஊருக்கு அவன் அனுப்பிவைக்கப்படுகிறான்.

‘தாய் இல்லை, தந்தை இல்லை. சகோ தரர்களும் யுத்தத்தில் செத்துப்போனார்கள். அங்கு போய் என்ன செய்வது? கொழும்பில் புலனாய்வுப் பிரிவினரின் கெடுபிடிகளைத் தவிர்த்து ஊருக்குப் போக முடியுமா? போனாலும் ஊரில் ஆமிக்காரர் இருக்கவிடுவாங்களா? தொழிலுக்கு என்ன செய்வது?’ மனம் முழுக்கப் பெரும் கொந்தளிப்பாக இருந்தது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு… ஊர், ஊராக இல்லாத தரிசு நிலம் ஒன்றுக்குப் போகப்போகிறேன்’ என்று நினைத்துக்கொண்டான்.

இதில் போகிற எல்லோருக்கும் ஏற்படுகிற நிலைமைதானே தனக்கும் என்று எண்ணிக்கொண்டான். சரி, வாறது வரட்டும் நடக்கிறதைக் காணுவோம். விதி என்று ஒன்று தன்னைக் கூட்டிக்கொண்டு போவதாக எண்ணினான்.

லண்டன் கெட்விக் விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இல்லை. அழைத்துப் போனவர்கள் எல்லோரையும் வேறொரு வாசலால் கூட்டிக்கொண்டு போனார்கள்.

அவனுக்கு முன்னால் தடுப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்றவரைக் கையில் விலங்கு போட்டு அழைத்துப் போனார்கள். அவர் மீண்டும் தற்கொலைக்கு முயலக்கூடும் என்ற பயம் அதிகாரிகளுக்கு.

அநேகமாக அடம்பிடித்தவர்கள் ஒன்று இரண்டு பேருக்குப் பக்கத்தில் அதிகாரிகள் கூடவே போனார்கள். விமானம் தயாராக இருந்தது. ஒவ்வொருவராக விமானத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள் அதிகாரிகள். பெண்கள் ஓவென்று குமுறி அழுதார்கள்.

வெளியில் தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகள் எல்லாம் ‘இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்’ என்று அன்று நாள் முழுவதும் செய்திகளைத் தந்துகொண்டு இருந்தன. ஆனால், என்ன நடைபெறுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஒரு சில சட்டத் தரணிகள் விமானம் புறப்படுவதற்கு முன்னால் தங்கள் சார்பில் இருக்கும் அகதிகளைத் திருப்பி எடுப்பதற் குப் போராடிக்கொண்டு இருந்தார்கள். முடியவில்லை.

எல்லோரும் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்டார்கள்.

மாலை 5 மணிக்கு விமானம் இலங்கையர்களை ஏற்றிக்கொண்டு புறப்படப்போகிறது. விமானத்தைச் சரி பார்த்தார்கள். லண்டனைவிட்டு இவர்கள் போகப்போகி றார்கள். இதுதான் லண்டன் சீமையை இவர்கள் விமானத்தின் கண்ணாடிக்குள் காணும் கடைசித் தருணங்கள்.

30 நிமிடங்கள் இருக்கின்றன. மனோகரனுக்குத் தண்ணீர் தாகமாக இருந்தது. விமானப் பணிப் பெண்ணை அழைத்துக் கேட்டான்.

அவள் அவனைப் பொறுத்து இருக்கும்படி கூறினாள். தண்ணீர் கொடுக்கச் சிறிது நேரமாகும் என்றும் சொன்னாள்.

அகதிகளை லண்டனில்வைத்துப் பராமரிக்கும் செலவைவிட, அவர்களை இப்படி ஏற்றி அனுப்பினால், ஒரே செலவோடு எல்லாம் முடிந்துவிடும். அது மட்டும் அல்ல…. இனிமேல், இலங்கையில் இருந்து இங்கு லண்டனுக்கு அகதிகள் வரத்தும் குறைந்துவிடும் என்று பிரிட்டன் இந்த வேலையைச் செய்கிறது.

விமானத்தில் இன்னும் ஏ.சி. வேலை செய்யவில்லை. ஒரே வியர்வையாக இருந்தது. இன்னும் 15 நிமிடங்கள்தான் இருக்கின்றன. தனது சட்டத் தரணி வந்து தன்னைத் திருப்பி எடுப்பார் என்கிற நம்பிக்கை முழுதும் அறுந்துபோனது.

எல்லாம் முடிந்துவிட்டது என்று அவன் நினைத்தான். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால், கண்ணீர் வரவில்லை.

விமானம் புறப்பட்டது!

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *