நான்கு வழிச் சாலைக்கு ஒரு வழி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,622 
 

தார்ச்சாலையை அடைத்து நின்ற வசதியான வாகனத்துக்குள்ளிருந்து இறங்கிய மாணிக்கவிநாயகம் குறுகலான சாலையின் இரண்டு புறங்களிலும் இருந்த அடைசலான கடைகளை நோட்டமிட்டார். கடைகள் கூரை , ஓடு , கான்கிரீட்களில் இருந்தன. அதற்குள்ளே ஒரு உயரமான கட்டிடம். அது மிகச் சிறப்பாக நின்று கொண்டிருந்தது. அந்தக் கட்டிடம் தான் இந்த ஊருக்கென இருக்கும் ஒரே அங்க அடையாளம்.

இந்த ஊர் மக்களுக்கு ஒரே பொழுது போக்கு அந்தக்கட்டிடத்தை பார்ப்பதும் அதற்குள்ளே இருக்கும் பல கடைகளை நோட்டமிடுவதும் வெளீரென இருக்கும் சாய்வு கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு மாடியில் ஏறுவதும், பின் லிப்டில் இறங்குவதும்தான். ஏழைகள் பார்த்து ரசிப்பதைத் தவிர வாங்கும் அளவிற்கு இந்தக் கட்டிடத்திற்குள் ஒன்றுமில்லை. தேக்கு மரபொருள் கடை , ஒரே விலை துணிக்கடை , மலபார் கோல்டு , ரியல் எஸ்டேட் விளம்பரம் , வெளிநாட்டு பணங்களை பட்டுவாடா செய்யும் வங்கி என பலவாறு இருந்து கொண்டிருந்தன.

மாணிக்கவிநாயகம் அந்தக் கட்டிடத்தின் தலையை ஏறிட்டுப் பார்த்தார். கட்டிடத்தின் பெயர் தங்க நிறத்தில் எக்ஸைல் காம்ப்ளக்ஸ் என காட்டிக் கொண்டிருந்தது. அதை மட்டும் மொபைலில் படம் எடுக்கச் சொன்னார். அவர் கூட வந்தவர் உடம்பை அப்படியும் இப்படியுமாக வளைத்துப் போதும் என சொல்றவரைக்கும் போட்டோ எடுத்தார். வந்த வேலை முடிந்ததென்று வேட்டிக் கசங்காமல் வாகனத்தில் தலையைச் செருகிக்கொண்ட அவர் மெதுவாகப் பயணித்தார்.

கட்டிடங்கள் அவரை டாட்டா காட்டி அனுப்பி வைத்தன. எக்ஸைல் காம்ப்ளக்ஸை நெருங்கும் போது ட்ரைவர் பிரேக்கை அழுத்த, கார் நிற்க , காருக்குள் இருந்தபடி கட்டிடத்தை மெல்ல ரசித்த மாணிக்கவிநாயகம் “ சரி மெதுவாக போ” என்றதும் கார் மெதுவாக ஊர்ந்தது. அப்போதும் அவர் கார் ஓரக்கண்ணாடி வழியாகக் கட்டிடத்தை வச்ச கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேதான் வந்தார். கார் கொண்டை ஊசி வளைவில் வந்து திரும்பியது.

வளைவின் விளிம்பில் இரண்டு சிலைகள் இருந்தன. அதில் ஒன்று மாநில அறப்போர் தியாகியின் சிலை. அதையும் காரை நிறுத்தி படம் எடுத்துக் கொண்டார். பிறகு கார் புகையைக் கக்கியபடி விரைந்து கொண்டிருந்தது. அந்தப் பேரூராட்சியை ஒட்டிப் பரந்த வயல் வெளிகள். பாசி படர்ந்த குளம் போல எங்கும் பச்சை மயம். சிலுசிலுவென இதமாக வீசிக்கொண்டிருந்த காற்றை சுவாசித்தப்படி கண்களை மூடினார். எக்ஸைல் காம்ப்ளக்ஸ் அவர் கண் முன்னே வந்து நின்றது. அதன் கட்டிட அமைப்பை ரசித்துக்கொண்டே கணநேரம் கண் துயிந்தார்.

இரண்டொரு நாட்களுக்குப்பிறகு செய்தி ஊருக்குள் மையம் கொண்டு அந்தியும் சந்தியும் பேச வைத்தது. “இந்த வழியாகத்தான் நான்கு வழிச்சாலை வரப்போகுதாம் “

கட்டிட உரிமையாளர்கள், கடை நடத்துபவர்கள், தினக்கூலி ஆட்கள், வாடிக்கையாளர் என பலரும் கண்டகண்ட இடத்தில் குழுமி நின்று இதைத்தான் பேசுகிறார்கள்.

“சாலையின் புறம் விசாலமான அரசுப்பள்ளிக்கூடம். அதனை ஒட்டி சற்றே பெரிய போலீஸ் ஸ்டேசன். இவை இரண்டிற்கும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்தேறி கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் மீறியா இதுல நான்கு வழிச் சாலை வரப்போகுது?”கேட்டு வைத்தான் கனகவேல்.

“பள்ளிக்கூடமும் காவல் நிலையமும் தெற்கு பார்த்தாப்புல இருக்கு. குட்டிக்கடைகள் அடைசலாக வடக்குப் பார்த்தாப்புல இருக்கு. இடிக்கிறவங்க ஒரு புறமட்டும் இடிப்பாங்களா இல்ல ரெண்டு புறமும் இடிப்பாங்களா? “ என்றான் முத்தன்.

“ ஒரு பக்கம் மட்டும் தான் இடிக்கப் போறாங்களாம்” கேள்விப்பட்டதைச் சொல்லி வைத்தார் முத்துராமன்.

”அது எப்படி ? இடிச்சா இரண்டு பக்கமும் தானே இடிக்கணும்?“ சீறினான் முத்தன். அவன் அப்படி சீறுவதற்குக் காரணம் உண்டு. வடக்குத் திசையை நோக்கியிருக்கும் அடைசலான கடைகளில் ஒரு கடை அவனுடையது.

“ நீ நினைக்கிற மாதிரி இல்ல முத்தன் . பள்ளிக்கூடம் , காவல் நிலையம் எல்லாம் அரசாங்கக் கட்டிடம் . சாலை போடப்போறது அரசாங்கம். இராமர் கோயில இடிச்சிட்டு அனுமார் கோயிலவா கட்டுவாங்க ? ” இப்படி சொன்னது உரமூட்டை ஏற்ற வந்த வெள்ளையன்.

“ சரி. இவ்ளோ நாளா குட்டிக்குட்டியா உள்ள கடை வருமானத்திலிருந்து தானே நம்ம பேரூராட்சி நிர்வாகமே நடந்திச்சு. அதை மறந்திட்டு எப்படி இதை இடிக்க முடியும்? ” – முத்தன்.

“ இடிக்கப்போறது நம்ம மாநில அரசு இல்ல. மத்திய அரசு“ என்றார் வெள்ளையன்.

“ எந்த அரசா இருந்தாலென்ன? கட்டிய கடைகளை இடிக்கிறது பசுமாட்டின் காம்புகளை அறுக்கிற மாதிரி! ” கோபத்துடன் பேச்சை முடித்தான் முத்தன்.

மாட்டு வண்டியில் உர மூட்டையெல்லாம் ஏற்றிய வெள்ளையன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் கட்டிடங்களைப் பரிதாபமாக பார்த்தபடி மாட்டை விரட்டி வண்டியைக் கிளப்பினார். ஒரு திருப்பத்தில் அவர் பெரிதென மதிக்கும் இரு தலைவர் சிலைகள் இருந்தன. இவ்விரு சிலைகளும் சாதி அரசியல் பூசப்பட்டு பரிதாபமாக நின்று கொண்டிருந்தன. இருப்பினும் கலவர பயம் இதுநாள் வரைக்கும் இந்த மண்ணிலிருந்து கிளம்பியதில்லை .

இரண்டு சிலைகளுக்கும் சலாம் போட்ட வெள்ளையன், “ தலைவா….. வயித்துல நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தேன். அணில் முதுகுல விழுந்த கோடு விவசாய நிலத்துக்குள்ளே விழுந்திருமோன்னு. ஒரு வழியாக எங்க வயல்காடுகள் நான்கு வழிச்சாலையிலிருந்து தப்பிச்சிருச்சு. வாரேன் தலைவா!” வண்டியை விரட்டிக்கொண்டு ஊர்ப்போய் சேர்ந்தார். “ அடேய் பசங்களா … நேத்தைக்கு இரவுல நாம செட்டுக்கட்டி பேசின விசயம் பொய்யாப் போகலப்பா. மத்திய அரசு சாலை கடைத்தெருவை மட்டம் தட்டித்தான் வரப்போகுதாம். கொண்டை ஊசி திருப்பத்துக்கிட்ட மட்டும் சின்னதா ஒரு பாலம் போடப்போறதாக கடைத்தெருவில பேசிக்கிறாங்கப்பா” அலையக்குலைய சொன்னார் வெள்ளையன். கேட்டு பூரிப்பு அடைஞ்சார்கள் இளைஞர்கள்.

*****

மாணிக்கவிநாயகம் லாட்ஜ்க்குள் நுழைந்தவுடன் சேதுப்பிள்ளை எழுந்து வணக்கம் தெரிவித்தார். “ மன்னிக்கணும். ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன்“

“பரவாயில்லைங்க “ என்றபடி சோபாவில் உட்கார்ந்தார் சேதுப்பிள்ளை.

மாணிக்கவிநாயம் வட இந்திய பிரபலமான ஒரு அரசியல்வாதியின் சொத்துக் காப்பாளர். சேதுப்பிள்ளை எக்ஸைல் கட்டிடத்தின் உரிமையாளர். இருவரும் அந்த நிமிடம் கைக்குலுக்கிக் கொள்ள அன்புப் பரிமாற்றத்துடன் கட்டிடமும் கைமாறியது. இடது கையால் சூட்கேசை வாங்கிய சேதுப்பிள்ளை கட்டிடத்தின் மீதான உரிமையை துண்டித்துக் கொண்டார். சேதுப்பிள்ளைக்குப் பத்திரத்தில் கையெழுத்திடும் போது இடிபடப்போகும் கட்டிடத்தை விற்றுவிட்ட மகிழ்ச்சி இருந்தது. மாறாக சூட்கேஸை வாங்கும் போது நெஞ்சுக்கூட்டை கருவண்டு துளைப்பது மாதிரியான உணர்வு.

“ சேதுப்பிள்ளை வரும் பிரச்சனையை இருவரும் சேர்ந்துதான் சால்வ் பண்ணணும். அதற்காகும் செலவெல்லாம் என்னோடது. பிரச்சனை முழுதும் தீர்ந்த பிறகுதான் பாக்கி ஒரு கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். பேசிய படியே பணம் கொடுத்திருக்கிறேன். சரிங்களா?”

“ சரிங்க“ என்றபடி விடை பெற்றார்.

*****

எலையும் கொலையுமாகத் துடிச்சிக்கிட்டு வந்தான் சொக்கப்பன். வெள்ளையன் வயலில் உழுதுக்கிட்டிருந்தார்.“ அண்ணே …….. நாம தலையில இடி விழுந்திருச்சிண்ணே”.

மாட்டை நிறுத்தி சாட்டைக்குச்சியை சேத்துக்குள்ளே ஊன்றிவிட்டு ஒரே வீச்சில் வந்து சேர்ந்தார் வெள்ளையன். “ என்னடா சொல்றே?”

“அண்ணே அந்த பெரிய கட்டிடம் கைமாறிடுச்சாண்ணே. யாரோ ஒரு வடநாட்டுக்காரன் வாங்கிருக்கிறானாம். கடைத்தெருவ இடிக்கப் போறதை தடுக்கக் கடைக்காரங்களெல்லாம் உண்ணாவிரதம் இருக்கப் போறாங்களாம்“

“ அட சும்மா இருடா. உன்கிட்ட யாரோ கயிறு திரிச்சிருக்கான்”

“ டவுனுக்கு வந்து பாருங்கண்ணே” என சொல்லிவிட்டு ஊருக்குள்ளே ஓடினான்.

முதலில் வெள்ளையன் அதை நம்பவில்லைதான். பத்து பேரிடம் விசாரிச்சு உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னார். “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்துமாம். வாங்கடா ஒரு கை பார்த்திடுவோம்.”

கபடி ஆட்டம் மாதிரி எல்லைக்கோடு போட்டு போராட்டம் நடந்துக்கிட்டு வந்தது. ஒரு பக்கம் சேதுப்பிள்ளை தலைவர். மறுபக்கம் வெள்ளையன். அரசே…….என ஆரம்பித்துப் பேசுறார் சேதுப்பிள்ளை. கொப்புரானே……போட்டு பேசுறார் வெள்ளையன். அவங்க பஸ்ஸ மறிக்கிறாங்க. இவங்க அதிகாரிய மறிக்கிறாங்க. அவங்க வயித்துல பணத்தைக்கட்டிக்கிட்டு உண்ணாவிரதம் இருக்கிறாங்க. இவங்க ஈரத்துணிய கட்டிக்கிட்டு பட்டினி கிடக்கறாங்க. ”

நிலவரம் கட்டுக்கடாமை போய்கிட்டுருப்பதை இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுனு மத்திய அரசு ஆறு பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மூன்று பேராக பரிந்து ஒரே நேரத்தில் விசாரணையைத் தொடுத்தார்கள்.

“செத்தாலும் வாழ்ந்தாலும் எங்களுக்குனு இருக்கிறது இந்த வயக்காடு தானுங்க”

“ இந்தக் கடைய நம்பித்தாங்க நாங்க உயிர் வாழ்றோம்.“

“ சாமி….. ஒரு செலவும் செய்யமாட்டோம். விதைச்சி அறுத்தா ஏக்கருக்கு இருபது மூட்ட . நட்டு அறுத்தா முப்பது மூட்ட.”

“ அய்யா, பள்ளிக்கூடத்துக்கு புதுக்கட்டிடம் வந்து பாதிகட்டி முடிச்சிருக்கோம். இதுல நான்கு வழிச்சாலை வந்தா பள்ளிக்கூட பிள்ளைங்களுக்கு இடஞ்சலா இருக்காதுங்களா?”

“ மானாவாரி பூமிங்க . எங்களுக்குனு இருக்கிற ஒரே ஜீவாதாரம் இந்த வயக்காடுதானுங்க. அஞ்சு தலைமுறையா இதுல வெள்ளாமை பண்ணி பொழைச்சிக்கிட்டு வாறோம்க”

“எங்க பேரூராட்சி நிர்வாகமே இந்தக் கடைத்தெருவுல வருகிற வருமானத்த வச்சித்தான் நடக்குது”

“இந்த நிலத்த நம்பி இரண்டு ஊரு இருக்கு சாமி”

“ இந்தக்கடைய நம்பி நாங்க முப்பது நாற்பது குடும்பங்கள் இருக்கோம்.”

குறித்துக்கொண்ட பிரதிநிதிகள் அவர்களிடம் சில கேள்விகளைத் தொடுத்தார்கள்.

“ சரிங்க. நீங்க இவ்வளவு சொல்றீங்களே… இந்த நிலத்துக்கான பட்டா எத்தனை பேருக்கிட்டே இருக்கு?”

“ சரி சரி . இந்தக்கடைகளோட பத்திரம், வாய்தா, வில்லங்க சர்டிபிக்கட், வருமான வரி ரசீது எல்லாத்தையும எடுத்துக்கிட்டு வாங்க”

” பட்டா ஒன்னும் அரசாங்கம் கொடுக்கலைங்களே சாமி”

“ நீங்க கேட்ட அனைத்துச் சான்றிதழ்களும் இதுல இருக்குதுங்க ” கட்டாக நீட்டினார் சேதுப்பிள்ளை.

கடை முதலாளிடம் விசாரணை முடிவுக்கு வந்து விட்டது. விவசாயிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள்தான் அனுமன் வாலாட்டம் நீண்டு கொண்டே போகுது.

“ பட்டா இல்லாம எப்படி நீங்க விவசாயம் செய்யலாம்?“

அரசும், நெருப்பும், பாம்பும் சரி. பக்கத்திலே நெருங்க விடாது. தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறி கமுக்கட்டில் வைத்துக் கொண்டு வெள்ளையன் தூரத்தில் நின்றபடி தலையைச் சொறிந்து கொண்டிருந்தார்.

“ பல முறை மாவட்ட ஆட்சியாளரைப் பார்த்து மனு கொடுத்திருக்கோம் சாமி. மேய்ச்சலுக்கான தரிசு நிலம், வெள்ளாம பண்ணி பொழச்சிக்கிடுங்க. பட்டாக் கேட்டு அலையாதீங்கனு சொல்லிட்டாங்க” முந்தானையை விரித்தபடி சொல்லி முடித்தாள் வெள்ளையன் பொஞ்சாதி கூத்தாயி.

“ மேய்ச்சல் நிலங்கிறதுனாலே உங்களுக்கு சாதகமா இருக்கு. பிரச்சனையின் முடிவும் உங்களுக்கு சாதகமாகத்தான் வரும். இப்ப நீங்க உண்ணாவிரத்தை முடிச்சிக்கிட்டு கூட்டத்தக் கலையுங்க”

“ அது மட்டும் முடியாதுங்க சாமி. அரசின் முடிவைச் சொல்ற மட்டும் உண்ணாவிரதம் தானுங்க” வெள்ளையனின் வெள்ளை மீசை துடித்தது.

ஒரு அதிகாரி அதிகாரத் தோரணையில் சொன்னார். “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அந்தத் தரப்பு கலைஞ்சிட்டாங்க”

“ நாங்க ஒன்னும் அவங்களுக்குப் போட்டியாக் கூட்டம் நடத்தலேங்களே.”

பிரதிநிதி ஆறு பேரும் மாறி மாறித் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அரசிடமிருந்து உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்கிற வாக்குறுதியோடு புறப்பட்டார்கள்.

பிரச்சனையின் போக்கு தலைநகரத்திலிருந்த மாணிக்கவிநாயகத்திற்கு கிலி மூட்டியது. பத்து கோடி ரூபாய் கண்ணுக்குத் தெரிந்து மண்ணோடு மண்ணாகப் புதைவதா? அந்தக் கட்டிடம் சரிந்து விழுவதை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மண்டைக்குள் கிண்ண் என்றொரு வகையான உணர்வு. கடைசியாக ஆயிரம் காக்கைகளை விரட்ட ஒரு கல்லை விட்டெறிந்து பிரச்சனையை ஒரு வழிக்குக் கொண்டு வர களத்தில் இறங்கினார்.

உண்ணாவிரதம் இருபதாவது நாளாக நடந்து கொண்டிருந்தது. களத்தில் முந்நூறு பேர் கூடிருந்தார்கள். மீசையை முறுக்கிக் கொண்டு ஓடி வந்தான் சின்னத்துரை. அவனைக் கண்டு கொண்ட வெள்ளையன் மெல்லத் தலையைத் தூக்கி “என்னடா எதுவும் நல்ல சேதியா? ” என்று கேட்டு வைத்தார். அவசர குடுக்கை உப்புப் பானைக்குள்ளே கையை விட்ட கதையாக செய்தியைக் கொண்டு போய் அரும்பு மீசை முளைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் காதுகளில் கொட்டினான். உய்யென்று கிளம்பினார்கள் அத்தனை பேரும். மதம் கொண்ட யானை கண்ட மரத்தையெல்லாம் சாய்க்கும் கணக்காகப் போன வேகத்தில் கிளைகளை முறித்தார்கள். காலால் எத்தி வேர்களை பெயர்த்தார்கள். பந்தய ஓட்டமெடுத்துக் கொண்டை ஊசி வளைவு போய்ச் சேர்ந்தார்கள்.

வெள்ளையன் பதறியடித்து எழுந்து பசங்களைப் பார்க்கிறார் “என்னய்யானு“ ? கேட்டுத் தெரிந்து கொள்ள அவருக்குப் பக்கத்தில் ஒரு காக்கா குருவி கூட இல்லை. பெண்கள் மார்பிலும வயித்திலும் அடித்துக் கொண்டே விழுந்து எழுந்து ஓடுகிறார்கள். உண்ணாவிரதம் உண்மையாக இருந்த வெள்ளையனாலே நடக்கவே முடியலை. பின்னே எப்படி ஓடுறது? என்னடா சங்கதினு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனப்பார்த்தால் போனவன் எவனும் திரும்பி வரவில்லை… தகிடுத்தத்தம் போட்டு ஒரு வழியாக போய்ச் சேர்ந்தவர் நிலைமையைக் கண்டு மனமொடிந்து போனார்.

ஒன்றாக உட்கார்ந்து சீட் ஆடிக் கொண்டிருந்த குங்கையனும் சுப்பிரமணியும் கம்புகளுடன் எதிரெதிரே நின்று சீறிக்கிட்டிருக்கிறார்கள். ஒரு கிளைய முறிச்சி இரண்டாக பகுந்துக்கிட்டவர்கள் கீரியும் பாம்புமாக நிற்கிறார்கள். அட! பொம்பளைச் சட்டினு கேளிக்கு உள்ளான சின்னத்துரை கூட தைரியம் இருந்தால் இந்தக் கோட்டுக்கும் உள்ள வந்துபாருடானு தாவிக்குதிக்கிறான். எடுபிடி வேலைப்பார்க்கும் நம்ம குப்பன் மகன் கையில ஒரு தடி இருக்கு…

மாநிலம் முழுவதும் கலவரம். காவலர்களின் குவிப்பு. பஸ் மறியல். சிலைக்கு சிலை காவலர்களின் பாதுகாப்பு. நிலவரம் அரசுக் கட்டுக்குள் வரவில்லை.

இரு தரப்பினரும் சிலைகளின் கால்களை இறுகப் பற்றிய படி கொக்கறிக்கிறார்கள். “என் தலைவன் சிலையை அகற்றிவிட்டு இந்த வழியாக சாலையைப் போடச் சொன்னவன் யாரடா.? மீசையை இழப்போம். ஆண்மையை துறப்போம். ஒரு போதும் மாட்டோம் என் தலைவன் சிலையை இழக்க”. ஒரே வசனத்தையே மாறிமாறி இரு தரப்பினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் தலைமையிடத்தில் சாதிக் கட்சிகளின் உயர் குழுவைக் கூட்டி மாற்றுவழியை அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை வெள்ளையன் மட்டும் தனியாளாய் நின்று எதிர்த்துக் கொண்டிருந்தார். மாணிக்கவிநாயகம் போட்ட முடிச்சு சாதிப்பிரச்சனைக்கு மத்தியில் வெள்ளையனின் போராட்டம் கடலில் கரைத்திட்ட பெருங்காயம்தான்.

இதற்கிடையில் ஊருக்குள் பெரிய பாம்பு ஒன்று வயல் வரப்புகளையெல்லாம் பெயர்த்தெறிந்து வந்து கொண்டிருக்கிறது நான்கு வழிச்சாலை என்னும் வடிவில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *