நஷ்டத்தின் ரகஸியம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 5,148 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்வாரி தெரு மசூதி பழுது பார்ப்பதற்குப் பத்தாயி ரம் ரூபாய், உள்ளூர் அரபு மதராஸாவிற்கு ஆறாயிரம், பாத்திமா பீ அநாதை விடுதிக்கு ஐயாயிரம் – இம்மாதிரி யாக ஏராளமான நன்கொடைகள் தாராளமாக அளித்த ஷேக்மீரா ராவுத்தரிடம் ஆண்டவன் காட்டிவிட்ட சோத னைகள் என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. ஐந்து ‘வேளை ‘நமாஸ்’ தவறாதவரும், எதற்கெடுத்தாலும், ‘அல்லாஹுத்தாலாவின் செயல்’ என்று பல்லவி பாடு பவருமான ராவுத்தருக்கு உண்டான இன்னல்கள் எனக்கோ அல்லது என் குடும்பத்திற்கோ நேர்ந்திருந்தா லும் நான் அவ்வளவு வாட்டம் அடைந்திருக்க மாட்டேன்.

மக்காவிற்கு ‘ஹஜ்’ யாத்திரை கிளம்ப ராவுத்தர் ஏற்பாடுகள் செய்து கொண் டிருந்ததாக என் காதில் விழுந்தது. அவர் பம்பாய்க்குச் சென்று கப்பலேற ஒரு மாத காலந்தான் இருந்தது. அந்த இடைக்காலத்தில் ராவுத் தரின் வாழ்க்கையில் பல பூகம்பங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவிட்டன. செய்கோனில் பலே ஜோராக நடந்து வந்த அவர் வியாபாரம் தடாலென்று படுத்துவிட்டதாகக் ‘கேபிள்’ பறந்தது. பர்மாவில் பெகு நகரிலிருந்த அவர் கடை, கொள்ளைக்காரர்களால் சூறையாடப்பட்டதாகச் செய்தி செவிகளில் வீழ்ந்தது. ஏராளமாகப் பணத்தைப் போட்டு வைத்திருந்த உள்ளூர்ப் பாங்க் தலைமுழுகி. தீபாவளி கொண்டாடிவிட்டது. ராவுத்தருக்கு வலது கை போன்றவனும், அவர் கைலிக் கடையை நிர்வகித்து வந்தவனுமான கறார் கந்தசாமி, கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு கம்மென்று கம்பி நீட்டிவிட்டான். ராவுத்தர் ஐ.பி . ஜாப்தாவில் சேர்ந்து கொள்ள எத்தனிப்பதாக ஹேஷ்யம் நிலவியது.

நாணயமும் நேர்மையும் கொண்ட தர்மப் பிரபுவாகிய ஷேக் மீரா ராவுத்தருக்கு, அதுவும் அவர் புண்ணிய யாத்திரையைத் தொடங்கும் சமயத்திலே, இத்தகைய ஜபர்தஸ்த் அடிகள்’ விழுமென்று யாரும் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு நெருங்கிய நண்பனும், ஆலோசனை யாளனுமான நான், (அடியேன் ஒரு ரிடையர்டு சப்ரிஜிஸ் ட்ரார் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.) ராவுத் தரின் மோசமான நிலைமையைக் கேள்விப்பட்டு, மதி மருண்டு, கதி கலங்கினேன். நேரிலே சந்தித்து ஆறுத லளிக்க வாக்கிங்-ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு புறப் பட்டேன்.

“அஸ்ஸலாமுவாலைகும், நாயுடுகாரு ! ஏது, திடீர் விஜயம் விடியகாத்தாலே?” என்று புன்சிரிப்புச் சிரித்த வண்ணம் என்னை வரவேற்றார் ராவுத்தர் .

அவர் வதனத்தில் சலனமோ உடலில் நடுக்கமோ பேச்சில் குழப்பமோ இல்லாததைக் கண்டு, எனக்கு என்னவோபோல் இருந்தது.

‘சும்மாப் பார்த்துட்டுப் போக வந்தேன்” என்று சொல்லி, ஹி… ஹி… என்று வழக்கம்போல் சிரிப்பினால் என் மழுப்பலை இருட்டடித்தேன்.

“வந்தது நல்லதாய்ப் போச்சு. இன்றைக்கு ராத்திரியே கிளம்பி, பம்பாய் போய்விடத் தீர்மானித்து விட்டேன். அடுத்த வாரம் ஏதோ ஒரு கப்பல் கிளம்புதாம் ஜெட்டா விற்கு …”

எதிர்பாரத தாக்குதல்களிலிருந்து மீள முடியாத ராவுத்தர், திடீரென்று இப்படி முடிவு செய்துவிட்டார் என்பது எனக்கு விளங்கிவிட்டது.

“ஏதோ ஆண்டவன் கட்டளை போலும். தன் திரு விளையாடல்களுக்கு அப்பாவியாகிய உங்களையும் ஓர் இலக்காக வைத்து அந்த ரங்கநாதன் பரீட்சித்து விட் டானே ! அதுதான் எனக்குப் புரியவில்லை” என்று தழு தழுத்த குரலில் சொல்லி, விஷயத்தில் நேரடியாக இறங் கினேன். ராவுத்தர் வாய்விட்டுக் கடகடவென்று சிரித்தார்.

“உங்களைப்போன்ற, நாணயமும் நேர்மையும் உடைய வர் வாணிபத் துறையில் இருப்பார்களா என்று எனக்குச் சந்தேகம் சாய்பு. ஒரு பாவமும் அபவாதமும் புரியாத உங்களுக்கு, இந்தக் கஷ்ட காலம் வந்தது ஏதோ நாங்கள் சொல்லுவது போல் பூர்வஜன்ம பலாபலன்களின் கோளா றுதானோ?” என்றேன் நான், உணர்ச்சியுடன்.

“நாயுடு, இப்போ நீங்க சொன்னீங்களே, அதில் தான் நீங்கள் பிசகு செய்துவிட்டீங்க” என்று ராவுத்தர் சொன்னதும், எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“என்ன” என்றேன் நான் ஒரே திகைப்புடன்.

“பூர்வஜன்ம பலாபலன் இல்லை நாயுடு. இந்த ஜன்மத் திலே செய்துவிட்ட காரியந்தான் காரணம்” என்று சொல்லி ராவுத்தர் தொடர்ந்தார்: ”நல்லா சம்பாதிச்சேன். ஆடம்பரமாக வாழ்ந்தேன். நான் விரும்பியபடியே, கடைசியாக இப்படி நடந்தது என் மனசுக்கு நிம்மதி கொடுத்துச்சு நாயுடு “

“நிம்மதியா!” திகைப்பினால் வாயைப் பிளந்து நின்றேன் நான்.

“பரிபூர்ணமான நிம்மதி நாயுடு ! எப்படின்னு சொல் றேன் கேளுங்க” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு, ராவுத்தர் தொடர்ந்தார்.

“சுமார் இருபது வருஷத்திற்கு முன்னாலே நம்ம சிந் தாதிரிப்பேட்டையிலே நடந்த சம்பவம் நாயுடு / கிழிந்த கைலியையும், சல்லடை போன்ற கோலாலம்பூர்ப் பனியனை யும் உடுத்திக்கிட்டு, பீடி சுருட்டிப் பிழைச்சிட்டிருந்தேன். ஆயிரம் பீடி சுருட்டினா அரை ரூபாய் கிடைச்சுடும். அது செஞ்சு முடிக்கிறதுக்குள்ளே இரண்டு உள்ளங் கைகளும் சிவந்து ரத்தம் கக்கிவிடும். அப்படி ஆரம்பிச்ச சீவனம் நாயுடு ! அப்போ என்னைப் பார்த்தவங்க, ‘அதோ போறான் குண்டன்!’ என்று பெருமையாகச் சொல்லு வாங்கோ . அப்படி மாலிஷ் பண்ணிக் கொழுகொழுன்னு வளர்த்தேன் இந்த உடலை. மொஹரம் பண்டிகையிலே புலி வேஷம் போட்டா அசல் வரிப்புலி மாதிரி பாஞ்சு பாஞ்சு ஆடுவேன். ஆ …மா!… ரௌடிங்க கூட்டத்தோட நான் பழகினாலும் ஒரு கெட்ட குணம் என்னை ஒட்ட வில்லை. ஆயிரம் பீடி சுருட்டுவேன். ஒரு பீடிகூடப் பிடிக்க மாட்டேன். தப்பு தண்டாக்களுக்குத் தப்பித் தப்பி வாழ்ந்தேன். அப்படி இருந்தது என் வாழ்வு. ஒரு நாள் சாயந்தரம், சூரியன் அஸ்தமிக்கிற நேரம். வேலை யெல்லாம் முடிச்சிட்டு, சிங்கண நாய்க்கன் தெரு வழியாக வீட்டுக்குத் திரும்பிக்கிட்டிருந்தேன். எனக்கு ஒரு பத்துக் கஜத்துக்கு முன்னாலே ஒரு கிழவி தள்ளாடித் தள்ளாடிப் போயிட்டிருந்தாள். தெருவிலே ஜன நடமாட்டம் ஜாஸ்தி யில்லை. வலது பக்கத்திலே திண்ணையிலே உட்கார்ந்திருந்த யாரோ ஒரு தடியன் பாய்ந்தான். கிளவி தொபக்னு கீழே விழுந்துவிட்டாள். அவளிடமிருந்த சின்ன டிரங்க் பெட்டியை எடுத்துக்கொண்டு, அந்தப் பயல் ஓட்டமெடுத் தான். அந்தக் காட்சியைக் கண்ணாலே பார்த்துக்கிட் டிருந்த இந்தச் சிங்கலடி சிங்கம் சீறாமல் இருக்குமா? சும்மா வேங்கை போலத் துரத்தினேன். அவன் ஓட , நான் துரத்த, கடைசியிலே அந்தத் தடிப்பயல் ஒரு வளைவு கொடுத்து, அய்யா முதலித் தெருவுக்குள்ளே புகுந்து அங்கேயிருந்த ஒரு மசூதிக்குள்ளே நுழைஞ்சுட்டான். நானும் அவன் பின்னாலே புகுந்தேன். மக்ரீப் நமாஸ் முடிஞ்சு போன தாலே பள்ளி வாசல்லே யாருமில்லை; அந்தக் கயவன் அந்த இடத்திலே மாயமா மறைஞ்சுபோனது ஒரே ஆச் சரியமாக இருந்தது. இந்தக் கலாட்டா இங்கே நடக்க, அந்தக் கிழவியும் பெரிய கூட்டமும் மசூதிக்கு முன்னாலே நின்னுக்கிட்டு ஒரே கூச்சல் போட ஆரம்பிச்சுடுச்சு. எல் லோரையும் வெளியே நிற்கும்படி சொல்லிவிட்டு, நான் மசூதி முழுவதும் தேட ஆரம்பிச்சேன். இடது கோடி யிலே ஒரு சின்ன அறை இருந்தது எனக்குத் தெரியும். அங்கேதான் ஏணி , சுண்ணாம்புச்சட்டி லோட்டா, டப்பா வைப்பாங்க. இரண்டு பெருச்சாளி கூட அங்கே குடி வைச்சிட்டிருந்தது. அந்தப் பேர்வழி அதுக்குள்ளே ஒளிஞ்சிருப்பான்னு நினைச்சு, உள்ளே காலடி வைத்தேன். அவன் சுவரோடு சுவராக மூலையிலே நின்னுட்டிருந்த தைப் பார்த்தேன். ‘அத்தரிப்பாச்சா கொழுக்கட்டை’ என்று வீர கோஷம் போட்டுக்கிட்டு இரண்டு முண்டாக் களையும் தட்டிக்கொடுத்துட்டு, அவன் மேலே பாய்ஞ்சு. அவன் பரட்டைத் தலையை இறுகப் பிடிச்சுக்கிட்டேன். தொபக்னு கையிலே இருந்த பெட்டியை அவன் கீழே போட்டுட்டான். அவ்வளவுதான். அவன் வயிற்றிலே யும், முதுகிலேயும் இரண்டு கைகளாலும் கும்மா’க் குத் துக்களை மாறி மாறிக் கொடுத்தேன். அவன் மசியவில்லை. கடைசியாக, என் சொந்த ஊர்ச் சரக்கான கூத்தாநல்லூர் குத்து ஒண்ணு காண்பிச்சேன் . அவன் அப்படியே என் காலடிலே விழுந்துட்டான்.

“இனிமே என்னை அடிக்காதீங்க. போன வாரம் தான் ஜெயிலிலிருந்து வந்தேன். கூடப் பொறந்த பாழாய்ப்போன குணம், மறுபடியும் இந்தத் தொழிலிலே இறங்கும்படி செஞ்சுடுச்சு. என்னை மன்னிச்சு என் னைக் காப்பாத்துங்க. சாயபுமார் ஆலயத்திலே கெஞ்சு றேன்” என்று சொல்லி விக்கி விக்கி அழுதான். என் மனசு இளநீர்போல இளகிப் போச்சு. ‘ஏதோ போறாத காலம். மறுபடியும் திருடிவிட்டான். எத்தனை வருஷம் கம்பி எண்ணப் போறானோ! தொலைஞ்சு போகட்டும்’னு நெனைச்சு அவனை விட்டுவிடத் தீர்மானித்தேன். அதே அறையிலே பின் தெருவுக்குப் போக ஒரு கதவு இருந்தது. அதை ஒரு ஏணி மறைச்சிருந்தது. அதை அப்புறப் படுத்தி, கதவைத் திறந்து அவனை அனுப்பிவிட்டேன். அப்புறம் என் உடம்பிலே இருக்கிற வியர்வையைத் துடைச்சிக்கிட்டு, கைலியை இறுகக் கட்டிக்கிட்டுப் பெட்டியை எடுத்துக்கிட்டு வெளி வாசலுக்கு நான் வருவதற்குக் கால் மணி நேரம் ஆயிடுச்சு. டிரங்க் பெட்டியை அந்தக் கிழவி கிட்டக கொடுத்தேன்.

“என்னைப் பெத்த ராசா? நீ நல்லா இருப்பேடா” என்று வாழ்த்தினாள் அவள். கூட்டம் அப்படியே என்னை அலக்காகத் தூக்கிக்கிட்டு ஜே கோஷம் போட்டுச்சு. ”திருடன் எங்கே?” என்று கேட்டாங்க.

“அவன் சுவரேறி ஓடிவிட்டான்” என்று சொல்லி, நான் மழுப்பினதுதான் தாமதம். ”அட, பாவி மவனே! என் கடைசிச் சொத்தைக்கூட அடிச்சிக்கிட்டுப் போயிட் டானே ! கடன்காரன் என் குடிசையைப் பிடுங்கிக்கிட் டான். இருந்த ஒரே புடைவையையும், என் வீட்டுக்காரர் பண்ணிப் போட்ட மோதிரத்தையும் இந்தப் பெட்டியிலே போட்டுக்கிட்டுக் கிளம்பினேன். மோதிரத்தை விற்று, அந்தப் பணத்திலே இடியாப்பம் சுட்டு வயிறு வளர்க்க லாம்னு நினைச்சேன். அதை எடுத்துக்கிட்டுப் போயிட் டானே அந்தப் படுபாவி. அவன் உருப்பட மாட்டான்” என்று கிழவி கூச்சல் போட்டு ஓவென்று அழுதாள். விஷயம் புரிஞ்சுடுச்சு. ‘பயல் முக்கியமான பொருளைக் கிளப்பிக்கொண்டு டிமிக்கி கொடுத்துட்டான்’ என்று

எல்லோரும் பேசிக்கிட்டாங்க. நான் வாயை மூடிக்கிட்டுக் கைகளைப் பிசைந்துக்கிட்டு லாந்தர்க்கம்பம் போல் நின்னுட் டேன். அந்த ஒரு சம்பவந்தான் நான் இப்போ நடுத் தெருவிலே நிற்கிறதற்குக் காரணம் நாயுடு’ என்றார் ராவுத்தர் , நாசுக்காகத் தாடியைக் கோதிவிட்டு.

“சாயபு, நீங்களோ உபகாரம் பண்ண அவ்வளவு துணிச்சலோட போனீங்க. விஷயம் வேறு விதமாக நடந்துடுச்சு. அதுவா ஒரு பாவம்?”என்றேன் நான் சற்று வியப்புடன்.

“அதுதான் நான் செஞ்ச பாவம் நாயுடு!”

“என்ன சாயபு , தலைகீழாகப் பேசுறீங்க? உபகா ரத்தை அபகாரம் என்று நீங்களே முடிவு கட்டிட்டீங்களே. இது நல்லதா?” என்று சொல்லி, ராவுத்தரை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்தேன்.

“அந்தக் கிழவி பறிகொடுத்தாளே…”

“அதைத்தான் அந்தக் கேடிப் பயல் அடித்துக் கொண்டு போயிட்டானே.”

“அதுதான் இல்லை நாயுடு’ “என்ன?” “செஞ்சவன் வேறு ஒரு அயோக்கியன் “

“யார் அவன்?”

“நேர்மையும் நாணயமும் கொண்ட தர்மப்பிரபுன்னு சர்டிபிகேட் கொடுத்தீங்களே, அந்தப் பிரபுவாகிய நான் தான் நாயுடு.

“நீங்களா!”
அந்தரத்திலே ஓர் அந்தர் பல்டி அடித்தது போன்ற ஒரு பிரமை எனக்கு உண்டாயிற்று.

தொடர்ந்தார் ராவுத்தர் ; மசூதியிலே அந்த அறையின் கதவைத் திறந்து பின் வழியாக அந்தத் தடியனை வெளியே அனுப்பிவிட்டேன் என்று சொன்னேனல்லவா?”

“ஆமாம்.”

“அவன் போன பிறகு என் குணம் எப்படி மாறிடுச்சு தெரியுமா? அந்தப் பெட்டியைத் திறந்து அதற்குள்ளே என் கை துழாவ ஆரம்பிச்சுது ! மோதிரம் சிக்கியதும் ஓசைப்படாமல் இடுப்பிலே செருகிக்கொண்டு பரம யோக் கியன் போல் மசூதி வெளி வாசலுக்கு வந்தேன் . சைத் தான் புத்தி என்னை எப்படி ஆட்டி வச்சுது பாருங்கோ? கலாட்டா முடிஞ்சு ஒரு வாரத்திற்கப்புறம் அந்தப் பொருளை விற்றேன். முப்பது ரூபாய் கிடைச்சுது. அந் தப் பணத்தை முதலாகப் போட்டுத்தான் இப்போ நடக்கிற கைலி வியாபாரத்தை ஆரம்பிச்சேன். அதிர்ஷ்டம்

அடிச்சுது. வியாபாரத்திலே பணம் மலைபோல் குவிஞ்சுது. நீங்கள் எல்லோரும் என்னை வாயாரப் புகழ்ந்தீங்க. ஆனால், அந்தக் கிழவியின் சாபம் என்னைச் சும்மா விட்டு வைக்குமா? அந்தப் பழிதான் பழி வாங்காது இருக்குமா? செல்வத்திலே புரண்ட என்னை, மண்ணிலே புரளும்படி இப்போ செஞ்சுடுச்சு நாயுடு “

ராவுத்தரின் விழிகளின் விளிம்பிலே நீர்த்திவலைகள் தத்தளித்தன. மேலும் தொடர்ந்தார் : “நிலத்தைப் பண் படுத்தி, உரம் போட்டு, மரத்தை வளர்த்து, பழத்தைப் பறித்துத் தானம் கொடுத்துட்டாப் போதுமா? போட்ட விதை கசப்பு ஜாதியில்லாமல் பார்த்துக்கொள்ளணும் நாயுடு! ஹஜ் முடிச்ச பிறகு எந்த மசூதியிலே அந்தப் பாவம் செஞ்சேனோ அதே இடத்தில் பாங்கொலி கூவும் மோதினார் வேலை செய்யத் தீர்மானித்துவிட்டேன். அப் போது தான் என் பாக்கி நாட்களை அமைதியாகக் கழிக்க முடியும்” என்றார் ராவுத்தர்.

ஏதேதோ வேதாந்த எண்ணங்கள் குமிழியிட்டு என் அறிவிலே எழும்பின . வழியெல்லாம் அதே யோசனையில் ஈடுபட்டு, ஆடுபோல் தலையை அசைத்துக்கொண்டே, வாக்கிங் -ஸ்டிக்கை எட்டி எட்டி வைத்து நான் வீடு திரும்புவதற்குள், என் நிலைமை போதும் போதும் என்று ஆகிவிட்டது.

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘சுதேசமித்திரனி’ல் நடமாடின

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *