நல்லதம்பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,402 
 

கால் போன போக்கில் நடப்பான். மனம் போன போக்கில் நடப்பான். எட்டியிருந்து பார்ப்பவர்களுக்கு இவ்வளவுதான் நல்லதம்பி. அதற்கு மேல் கேட்டால் “சொல்லுறதுக்கு பெருசா ஒண்ணுமில்ல” என்ற பதிலே வரும்.

எங்கு சென்றாலும் இந்த நான்கு தெருக்களுக்குள் தான் சுற்றி வர வேண்டும் எனுமளவிற்கு சிறிய ஊர். “ஏலே நல்லதம்பிய பாத்த?” இந்த தேடலே ஊர் பெருசுகளின் விடியல் பொழுதாய் அமையும்.

“அந்த பயல தான் நானும் தேடுறேன்… ஆப்புட மாட்டேங்குறான். வெரசா வர சொன்னா ஒரு பொழுது கூட வாரதில்ல”

“அவன கொளத்தாங்கர பக்கம் பாத்த மாதிரி இருக்கு…”

“நம்ம எளவட்ட பயலுவ எவனாவது சைக்கிள் எடுத்து ஒரு அழுத்து அழுத்துனா என்ன?”

“அட பேசிக்கிட்டே இருந்தா நடக்குமா? யாராவது ஆள் விட்டு அனுப்புங்கப்பா… சூரியன் சுட்டெரிக்குற வேளையாயிடுச்சு“

இத்தனை சலம்பல்களுக்கு இடையிலும் உள்ளுக்குள் சந்தோஷம் கொப்பளிக்க அடுப்பில் பால் கொதிக்க ஒரு கையை தூக்கி பிடித்து மறு கையை தாழ்த்தி பின்னுக்கு நகர்த்தி லாவகமாக தேநீர் ஆற்றிக் கொண்டிருப்பார் சின்னசாமி.

“நெதம் இதே சோலியா போச்சு… ஏப்பா சின்னு… ஒரு டீ தண்ணி கொடப்பா… தொண்ட கமரிக்கிட்டு வருது“

“உங்களுக்குத்தேன் கலக்குறேன்… ஒரு நிமிசம் இருங்க… நொரைக்க நீட்டுனாத்தான நம்ம கைமணம் தெரியும்“ சின்னுவின் கையில் நீர்வீழ்ச்சியாய் கொட்டும் தேநீரின் வேகமும் உயரமும் கூடும்.

“ஒன்றயணா டீ தண்ணியில என்னத்த கைமணம் வேண்டிக் கெடக்கு? வெரசாக் கொண்டா“ தனக்கும் தேநீர் வேண்டும் என்பதை உரிமையாய் கேட்கும் மற்றொரு குரல்.

படித்துறையில் அமர்ந்து, கணுக்கால் வரை நீருக்குள் விட்டு, தனது சிறிய வாய் திறந்து மூடி பாதங்களில் கூச்சமேற்படுத்தும் மீன்களை ரசித்துக் கொண்டிருப்பான் நல்லதம்பி.

“ஏலே கூட்டாளி…“

இப்படி இழுத்து பாசமாய் அவனை அழைப்பது அந்த ஊரில் மருது மட்டுமே. நல்லதம்பிக்கு தான் திரும்ப மனம் வராது. அவன் வந்த காரணத்தை அறிந்தவன் அசையாமல் அமர்ந்திருப்பான்.

“ஏலே… கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்… காது மசமசத்துப் போச்சோ? நெதம் இங்கன வந்து உக்காந்து என்னத்த பாக்குற?“

அமைதியாய் ஒரு பார்வை பார்ப்பான். அவன் பதில் சொல்லமாட்டான் என்று தெரிந்து மேலும் தொடர்வான் மருது.

“அங்கன பெருசுக எல்லாம் காத்துக் கெடக்குதுங்க… உன்ன கூட்டியார வந்தேன். வெரசா வா“

இதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க முடியாதென்று தலையசைத்து எழுந்து மருதுவின் சைக்கிளில் பின்னால் அமர்வான்.

மருது சைக்கிள் மிதிப்பதில் ஒரு லயம் இருக்கும். ஒற்றையாளாய் மிதித்துச் சென்றாலும் சரி… பின்னால் முன்னால் சுமையை சுமந்து சென்றாலும் சரி. அந்த லயம் மாறாது. அனாயாசமாக சைக்கிளை டீ கடைக்கு மிதித்து விடுவான்.

“எம்புட்டு பேரு உங்களுக்காக காத்துக் கெடக்கோம் தம்பி… டீ தண்ணி ஏதும் வேணுமா?”

நல்லதம்பியை கண்டதும் பிரகாசமாகும் முகங்கள். அவனின் நாள் துவங்குவது அந்த டீ கடையிலிருந்து தான் எனலாம். அதன் பிறகு அவனுக்கு ஓய்வுக் கிடையாது.

உச்சி வெயில் பொழுதில் கிடைத்ததை வாயில் அரக்கப்பரக்க அள்ளிப் போட்டுக் கொண்டு படித்துறைக்கு தனது சைக்கிளில் விரைந்து வந்துவிடுவான். நீண்டு, பருத்து விழுதுவிட்டு நிற்கும் ஆலமரத்து நிழலில் காலை நீருக்குள் விட்டு அமர்வதே அவனை பொறுத்தவரை சொர்க்கம்.

இது நாள் வரை பத்து நிமிடத்திற்கு மேல் அவனால் அந்த சொர்க்கத்தை அனுபவிக்க முடிந்ததில்லை. அப்போதெல்லாம் மனம் முழுவதும் எரிச்சல் மண்டிக் கிடக்கும்.

இன்று அலுவல் காரணமாக பக்கத்து ஊருக்குப் போக வேண்டிய அவசியம் வந்தது. பக்கத்து ஊர் ஒன்றும் அவ்வளவு பக்கத்தில் இல்லை. பேருந்து பயணம் முழுவதும் சுதந்திர காற்றை சுவாசித்து நுரையீரல் புத்துயிர் பெற்றது. வேலை முடிந்து திரும்பும்போது அது காணாமலும் போனது.

சட்டையை கழட்டி கொக்கியில் மாட்டி பாய் விரித்த தரையில் படுத்தான். அடுத்த நொடி மின்சாரம் தடைப்பட்டது. வாடிக்கையாக மாலை இந்த நேரத்திற்கு நடப்பது தான். இருந்தாலும் இன்று அறைக்குள் இருக்கப் பிடிக்கவில்லை.

வேஷ்டியை ஒரு கையில் தூக்கிப் பிடித்து மறுகையால் பெட்டிக்கு பக்கத்தில் இருந்த டார்ச்சை எடுத்தவன் விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான். எவ்வளவு நடந்தும் அரை மணி நேரத்தில் ஊரை சுற்றியாயிற்று.

படித்துறையின் நினைவு வந்து அங்கு போனான். பெரும் பிசகு. காற்று வாங்க ஊரே அங்குக் கூடியிருந்தது. யார் கண்ணிலும் அகப்படாமல் திரும்புவதற்குள் “நல்லதம்பியா அது? வா வா“ என்றுக் குரல் கேட்க வேறு வழியின்றி கூட்டத்திற்குள் புகுந்து அழைத்தவரின் அருகில் சென்றமர்ந்தான்.

“இது என்னோட சித்தப்பா மகேன்… எங்கூட்டு விசேஷம் ரெண்டு நாள்ல வருதுல்ல… அதுக்காக வந்திருக்கான்“

பேசியவரையே அடையாளம் கண்டுப்பிடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தவன் அவரின் உறவினரை பார்த்து லேசாக தலையசைத்தான்.

“மரியாத தெரிஞ்ச பையனா இருக்கியேப்பா… ஆமா… நீங்க என்ன ஆளுங்க?“

“நான் யார்கிட்டயும் ஜாதி கேட்குறதும் இல்ல… சொல்லுறதும் இல்ல“

பளிச்சென்று மின்விளக்கு எரிய எழுந்து தான் தங்கியிருந்த அறையை நோக்கி நடந்தான்.

காலை எழுந்து குளித்ததும் பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினான். 5 மணி பேருந்தில் அவனுக்கான பார்ஸல் வரும். அளவில் சிறியது தான். அதை அந்த ஊருக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

இன்றும் பார்சலை வாங்கி வந்து வைத்துவிட்டு படித்துறைக்கு சென்றுவிட்டான். சாப்பிடத் தோன்றவில்லை. நேற்றைய பயணத்தின் நினைவுகளில் மூழ்கியிருந்தான். அவனையழைக்க என்றைக்கும்விட இன்று மருது சீக்கிரம் வந்துவிட்டான்.

“எப்பவும் நான் தான் உன்ன நோவடிக்குறேனோ? அங்க எல்லாரும் கூட்டியார சொல்லுறாக. போவோமா?“

“நீ என்ன பண்ணுவ? போலாம்“

சின்னு முன்வந்து தேநீரை நீட்டினார். அவன் இன்னும் சாப்பிடவில்லை என்ற சேதி தெரிந்துவிட்டது போல.

“பஸ் போயிட்டுதா? தபால் எதுவும் இருக்கா?“

“போஸ்ட் ஆபீஸ்ல இருக்கு. ரெண்டு கவரு இருந்துது…“

“இப்படி ஒக்காரப்பா. இந்தா பிடி… இன்னைக்கு பேப்பரு… ஆரம்பி கேப்போம்“

“படுபாவிங்க… ஊருக்குள்ள ஒரு பய நாலு எழுத்து படிச்சிருந்தா போஸ்ட் மேனா வந்துட்டு இவனுங்கள்ட மாட்டி நான் இப்படி சீரழிஞ்சிருப்பேனா? தினம் காலையில பேப்பர கையில குடுத்து படி படின்னு உசுர வாங்கி… இதுல இவனுங்க கேட்குற சந்தேகத்த தீக்குறதுக்குள்ள… ஷ்ஷ்ஷ்…“

நல்லதம்பி பேப்பரை பிரித்து பிடித்து படிக்க ஆரம்பிக்க, அவன் வாங்கி வந்த இரண்டு கவருள் ஒன்றில் அவனுக்காய் காத்திருந்தது அவன் வேலை இடமாற்றலுக்கான ஆணை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *