நம்பிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 12,235 
 

எனக்கு இந்த வெற்றிலைப் பழக்கம் இருக்கிறதே அது ஒரு பெரிய தொந்தரவு. வாய் நிறைய ஒரு ரூபாய் எடை புகையிலையை வாயில் அடைத்தால் தாகம் எடுக்காமல் என்ன செய்யும்? கண்ட இடத்தில், அசந்தர்ப்பமான இடத்தில் எல்லாம் இந்தத் தொந்தரவுதான். காப்பி, கலர் குடித்தால் தாகம் தீரக்கூடிய நாஸுக் பேர்வழியில்லை நான்.

அன்று நானும் என் நண்பரும் தெருவில் சுற்றிக்கொண்டு இருந்தோம். அவர் வெற்றிலை போடுங்களேன் என்றார். இதற்கு உபகாரம் வேறு வேண்டியிருக்கிறது. போட்டாய் விட்டது. அதன் உத்ஸாகத்தில் கொஞ்ச நேரம் நடுத்தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் திரும்பிப் பார்க்கும்படியான சல்லாபம். பிறகு… கேட்பானேன். தெரிந்ததுதான். அந்த வெற்றிலைக் கடைக்காரனுக்கு என்னைப் போன்ற பழைய ஏட்டுப் பிரதிகள் வருமென்று தெரியுமா? நண்பர் எனக்கு ஜலவசதிக்காக அவருக்குத் தெரிந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஏன் என்றால் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் நடக்க வேண்டுமென்ற சுத்த ஹம்பக் பேர்வழி நான்.

அந்த ஜோரில் தண்ணீர் பிரச்சினை ஒருவாறு முடிந்தது.

எனது நண்பர் ஒரு அபூர்வப் பேர்வழி; அவர் மேல் எப்பொழுதும் பொறாமை அதிகம். சமூகத்தின் எந்தப் படிக்கட்டிலிருப்பவனும் அவரிடம் வெகு லேசாகத் தனது உள்ளத்தைத் திறந்துவிடுவான். அது மட்டுமன்று. இந்தக் குழந்தைகள்தான், அவரிடம் என்ன வசீகர சக்தியோ?

அந்த ஹோட்டலில் ஒரு குழந்தை. அந்த ஹோட்டல் சொந்தக்காரனுடையது. பார்த்தால் அதை முத்தமிட வேண்டுமென்று தோன்றாதவன் மரக்கட்டை. குழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அவ்வளவுதான் ஏக ரகளை.

“ஓடி வா! ஓடி வா! ஒன்னு ரெண்டு… மூணு!”

குழந்தை… ஒரே பாய்ச்சலில் அவர் ஏந்திய கையில் விழுந்து, ஒவ்வொரு படியிலும் உருண்டு விடாமல் இருக்கவேண்டுமே என்று மெதுவாகக் காலை வைத்துத் தடவும் அந்தக் குழந்தை… என்ன நம்பிக்கை!

இவ்வளவும் வாசல் படியில். இந்தக் கூத்துக்களையெல்லாம் முன்னே வெளியில் வந்த நான் கவனித்துக்கொண்டு தத்துவம் பண்ணிக்கொண்டிருந்தேன். உத்ஸாகம் அவருக்கு ஜாஸ்தியோ, அந்தக் குழந்தைக்கோ? எனக்குப் பெருமை ஒன்றுதான் மிச்சம்.

நான் சொல்லும் நேரம் சாயங்காலம். சாயங்காலம் என்று மரியாதையாகத்தான் கூறுகிறேன். பட்டணத்தின் மின்சார கோரமும், அதனுடன் குழம்பும் இரைச்சலும் என் மனதில்…

எனது கண்கள் தெருப் பக்கம் அகஸ்மாத்தாகத் திரும்பின.

அங்கே ஒரு ரிக்ஷாவில் ஒரு கனவான். எல்லா விஷயத்திலும். பர்ஸிலிருந்து சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தார். வண்டி நிறுத்தி விடப்பட்டிருந்தது.

பக்கத்தில் ஒரு பிச்சைக்காரி, வாலிபம்… வாலிபத்தின் களை. அழுக்குப் பிடித்த வெள்ளாடை முக்காடு தலையை மறைத்தது. முகத்தை மறைக்கவில்லை. கனவான் பக்கம் கையை நீட்டிய வண்ணம் அசையாது நின்றிருந்தாள். சில சமயம் வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிவந்தன. அது என்னவோ? இரைச்சலில் கேட்கவில்லை. அவள் இடையில் ஒரு குழந்தை சிறியது. நான்கைந்து மாதம்… துயரத்தின் சிற்றுரு தாயிடம் பால் குடித்தவண்ணம் இருந்தது. மூடிய கண்கள் ஏறக்குறைய உயிரற்றது மாதிரிதான்.

சிற்சில சமயம் அதன் தாய் தன்னையறியாமல் அதை இறுக அணைத்துக்கொண்டாள். அதன்மீது அவ்வளவு பாசமோ, கைதான் வலிக்கிறதோ!
அந்தத் தாயின் முகத்தில் என்ன துயரம்… என்ன சோர்வு… அதிலே பசி… என்று எழுதிய மாதிரி கலங்கிய கண்கள்… நம்பிக்கையிழந்த கண்கள்… அந்தக் கை கனவானை நோக்கி நீட்டியது சற்றாவது விலகவில்லை. என்ன நம்பிக்கை!

அவளைக் காணவும் மற்றதை மறந்தேன். அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று என் உள்ளம் தூண்டியது. ஆனால் சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து. அதை என்னைப் போன்றவர்கள் எளிதில் அனுபவித்துவிட முடியாது. நானும் யார்? அவளைவிட ஒருபடிமேல்… எனது முகம் வாழ்க்கையின் அலை மேல் சற்று உயரத் தள்ளி இருக்கிறது. அதற்கென்ன இப்போது?

அந்த ரகளை இவளை ஓட்டல் பக்கம் திரும்பச் செய்தது.

திரும்பியவள்…

அப்படியே மெய் மறந்து நின்றவள் போல், தெய்வத்தை, இலக்ஷயத்தைக் கண் எதிரில் கண்டவள் போல் அவற்றை… கண்களில் ஒரு பிரமிப்பு.

பிறகு…

அந்தச் சோர்வும் சோகமும் நிலவிய கண்களிலிருந்து துயரம் தேங்கிய அதரங்களிலிருந்து, மேகத்தின் பின் ஒளிந்து சந்திரன் வெளிவந்த மாதிரி…

ஒரு புன்சிரிப்பு.

அவள் குறைகள் அவளையறியாமலே பால் சுவைத்துக் கொண்டிருக்கும் குழந்தையை அணைத்துக் கொள்கின்றன.

ஒரு நிமிஷந்தான்.

மறுபடியும் அவள் முகத்தில் வாழ்க்கையின் மேகம் கவிந்தது.

அந்தக் கனவானை நோக்கி ஏதோ கூறினாள்.

அவரோ?

அவரும் அந்தக் குழந்தையின் விளையாட்டில் கண்களைத் திறந்தபடி ஈடுபட்டிருக்கிறார்.

பை மாத்திரம் கைக்குள் பலமாக இறுகப் பிடிபட்டிருக்கிறது.

அந்தத் தாயும் குழந்தையும்… அவள் நீட்டிய கை… அதற்குத் தான் என்ன நம்பிக்கை. அந்தக் கண்கள் ஒளி இழந்துதான் இருக்கின்றன. அதில் என்ன நம்பிக்கை! சோர்வினாலா?… வேறு கதியில்லாமலா… இருந்தாலும் நம்பிக்கைதானே. அந்தப் பிரமையாவது இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ள வேறு என்ன விருக்கிறது?

“ஓடி வா! ஓடிவா! ஒன்று ரெண்டு… மூணு…” குழந்தையின் களங்கமற்ற வெள்ளிக் கிண்ணத் தொனி போன்ற சிரிப்பு… ஒரே பாய்ச்சல், அவர் மீது என்ன நம்பிக்கை!

– காந்தி, 15-09-1934, புதிய ஒளி, முதற் பதிப்பு: டிசம்பர் 1953, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *