நம்பிக்கை வித்துகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 5,608 
 

போன வருஷம் சென்னையும், கடலூரும், காஞ்சிபுரமும், மழைவெள்ளத்தில் முழுவிப் போச்சில்ல?, அப்பத்தில இருந்துதான் சார் இங்க பத்திரிகைகள் கிட்டேயும் சரி, மக்கள்கிட்டேயும் சரி, தூர்ந்து போன ஏரிகளையும், கால்வாய்களையும் பத்திய விழிப்புணர்வு வர ஆரம்பிச்சது. ஆமாம் தான?. ஆனா எங்க ஊர்ல பாருங்க ரொம்ப காலமாகவே அந்த பிரச்சினைய பேசிக்கிட்டிருக்கோம். வேறொண்ணும் பண்ணல பேசிக்கிட்டிருக்கோம். இன்னிக்கிக் கூட பாருங்க ஈஸ்வரன் கோயில் எதிரிலிருக்கும் ஆலமர நிழலில் மீண்டும் இந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. பிரஸ்தாபித்தது பெரியபெர்தனம் கந்தப்பன் அய்யா. . “போன மன்மத வருசம் பேஞ்ச மழையில பதினஞ்சி நாளுக்கு மேல நம்ம ஏரி கலிங்கல் சாஞ்சி, கழனிகாடெல்லாம் ஊத்தோடிங் கெடந்திச்சி. உண்டா இல்லையா?. இன்னிக்கு எட்டு மாசம் ஆவலய்யா, ஏரில மாடு கன்னுங்க குடிக்கக் கூட தண்ணி இல்ல.” “ஹும்! முன்னெல்லாம் நம்ம ரெட்டேரி கலிங்கல் சாஞ்சுட்டா ஒரு வருசத்துக்கு மேல பாயும்ன்றது கணக்கு. முப்போகம் கியாரண்டி, சமயத்தில நாலாம் போகம் தாளடி கூட சல்லீசா வெளைஞ்சி அறுத்திருக்கோமே. அதுக்குள்ள அடுத்த வருச மழை வந்து கோத்துக்கும். இதான வாலாயமா இங்க நடக்கிற விசயம்?.” —-இது மேலத்தெரு சுந்தரம்.

“ அட யார்றா இவன்?. எந்த காலத்து கதையச் சொல்ற?. இன்னைக்கு ரெண்டாம் போகம் சொர்ணவாரிக்கே கதிரு பால் புடிக்கிற பருவத்தில மோட்டாங்காலு பயிரெல்லாம் தண்ணி அருந்தட்டலாப் போச்சே. மாட்டை வுட்டுல்ல மேய்ச்சோம்?. ”

“ஏரிதான் நீர்புடிப்புல ஏகபரப்புக்கும் பத்து அடி ஒசரத்துக்கு மண்ணு தூர்ந்து போய் கெடக்குதில்ல?. அதான் நாலுநாளு மழைக்கே ஏரி கலிங்கல் சாஞ்சிப்போவுது. தூர் வார்றதுக்கு நாமளும் கலெக்டர், மந்திரின்னு போயி மனு குடுத்து பார்த்துட்டோம். ஒண்ணும் கிணுங்கலியே. நம்ம எம்.எல்.ஏ. செய்வானான்னா அந்தாளு எதிர்கட்சி எம்.எல்.ஏ.வாப் போயிட்டான். ஏரி பாச்சவாரி பள்ளக்காலு, மோட்டாங்காலு எல்லாம் சேர்த்து மொத்தம் ஆயிரத்து நாப்பது ஏக்கரான்றது கணக்கு. ஏரி இந்த பவுசுல இருந்தா நாண்டுக்கிட்டு சாவ வேண்டியதுதான். இப்பவே கடைக்கோடி மோட்டாங்கால்ல பாதி கழனிங்க ரியல் எஸ்டேட்காரங்களுக்கு வெலையாகிப் போச்சுது.. அதான் மூட்டையில பணத்தை வெச்சிக்கிணு கார்ல சுத்தி சுத்தி அலையறானுவள. இன்னும் இன்னான்னா கதியாவப் போவுதோ பகவானே!. ”—பெரிய பெர்தனம் கவலையோட பேசினார். “அப்புறம் ஊருக்கு செய்யாம புடுங்கறதுக்கா இவன்களுக்கு ஓட்டு போட்டோம்?.” “ மாமோவ்! ஊர சாய்ச்சிம் போயி சாலை மறியல்னு உக்காந்துடலாம்யா. அதான்யா இன்னைக்கு கிடுக்கிப் புடி.” “அதெல்லாம் கவைக்கு ஆவாதுடா. போலீஸை வுட்டு சமாதானம் பேசி தொரத்தி வுட்ருவானுவ. தலக்கட்டுக்கு அறுநூறு ரூவா புருவு போட்டிருக்கு. அத வெச்சி மொதல்ல கால்வாயை சுத்தப் படுத்துவோம். தாக்கு எடுக்கிற ஆளுங்கள வரச் சொல்லியிருக்கேன். பேசி வுட்ருவோம். மணப்பாக்கம் ஏரியில இருந்து நம்ம ஏரிவரைக்கும் கால்வாயை சுத்தமா தொடைச்சி எடுக்கணும். மொத்தம் நாலு கிலோமீட்டர் தூரம்.”— புருவுன்றதில அங்க யாருக்கும் விருப்பமில்ல. இந்த காச்ச காலத்தில மனுசன் கதை மூக்க புடிச்சா ஜீவன் போவுது,

அப்போது ஷண்முகமணி அய்யா எழுந்தார். அவர் ஓய்வு பெற்ற என்ஜினியர். ஊருக்கு நல்லதைச் சொல்கிற, செய்கிற, விவரவாளி. “ஏம்பா! எல்லாத்துக்கும் அவன் செய்யல, இவன் செய்யலன்னு காலத்துக்கும் சொன்னதையே சொல்லிக்கிட்டு வர்றதில என்னய்யா பிரயோசனம் இருக்குது?. நாம இன்னா செஞ்சோம்?. இன்னைய அரசியல்வாதிகளின் நோக்கந்தான் வெளங்க தெரியுதே. பணம் குடுத்து வோட்டை வாங்கிப்புடணும், அப்புறம் கேள்விமுறை இல்லாம மொத்தமா சுருட்டணும். நம்ம ஜனங்களும் யாரு குடுகிறீங்களோ குடுங்கடான்னு ரெண்டு கைகளையும் நீட்டி வெச்சிக்கிறது” “அப்புறம் இந்த பிரச்சினைக்கு இன்னாதான் மாத்து?.” “மொதல்ல கால்வாய்களையும், ஏரியையும் நம்பித்தான் நம்ம வெள்ளாமை பொழப்பு இருக்குதுன்னு நமக்கு உறைக்கணும். கால்வாயை தூர் வார்றத நாம மறந்து ரொம்ப காலமாச்சி, ஏன்?. எல்லா வேலைங்களையும் நமக்கு கவர்மெண்ட்டே வந்து செஞ்சி குடுக்கணும்னு உக்காந்திருக்கோம். இலவசங்கள வாங்கி வாங்கி நடுவாந்தரத்தில வந்த புத்திய்யா இது. இப்பவாவது நம்மள மாத்திக்கணும்யா. குடிமராமத்து வேலையை நாமளே செய்யணும். ஒரு இருவத்தஞ்சி முப்பது வருசத்துக்கு முன்னெல்லாம் மழை காலம் வர்றதுக்கு முன்ன வைகாசி ஆனியிலேயே எல்லா ஊர்க்காரனும் அவங்கவங்க அத்துல வர்ற நீர்வரத்து கால்வாயை தூரு வாரி சுத்தம் பண்ணி தயாரா வெச்சிருப்போம். தலைகட்டுக்கு ஒருத்தருன்னு தூரு வார போயாவணும். நான்கூட போயி கால்வாயை தூரு வாரியிருக்கேன். பேச்சும் சிரிப்புமா அலுப்பில்லாம கடகட ன்னு வேலை ஓடும். அத்துப் போன அந்த குடிமராமத்து வேலைய இன்னிக்கு நாம ஆரம்பிக்கணும்யா. நம்மள பார்த்துப்புட்டு மத்த ஊர்காரங்களுக்கும் இந்த புத்தி வரட்டுமே என்ன சொல்றீங்க?.”— அட வித்தியாசமா இருக்கே என்று இளவட்டங்கள் கவனிக்க ஆரம்பித்தன. “யோவ்! இனிமே எவன் கட்டை வணங்கி தூரு வாரப் போறான்?. நூறு நாளு வேலை வந்தப்பெறவு இன்னும் சுத்தம். அறப்புக்குக்கூட ஆளு ஆப்டாம வெள்ளாமையே அத்துப்போயி கெடக்கு?.” “ அய்யா! அரசாங்கமும் செய்யாது, நாமளும் சிறு துரும்பையும் அசைக்கமாட்டோம், ஆனா நோவாம நமக்கு எல்லாம் கெடைக்கணும்னா அது இன்னிக்கு ஜெயில்லதான்யா கிடைக்கும்.”

காலையில ஒன்பது மணிக்கு ஆரம்பிச்ச கூட்டம் ஒருமணிக்குத்தான் முடிஞ்சிது. நிறைய வாதப் பிரதிவாதங்கள், கூச்சல், குழப்பங்கள். இதில் இளவட்ட கும்பல் முழுமூச்சா குடிமராமத்து வேலையை செய்வோம்னு சப்போர்ட் பண்ணதால என்ஜினியர் ஷண்முகமணி அய்யா தலைமையில ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தலைக்கட்டுக்கு ஒருத்தரு கத்தி, கடப்பாரையோட வேலைக்கு வரணும்னும் ஊரு கட்டுப்பாடு போட்டுட்டது. நமக்கு நாமே திட்டம் போன்ற இந்த பழங்கால வாழ்க்கைமுறையை நடத்த ஊரே சிலுத்துக்கிட்டு எழுந்தது. ஏரிய பொருத்தவரைக்கும் தூரு வார்றதைப் பத்தி இப்பத்திக்கு ஒண்ணும் ஐவேஜி இல்லை மேலைக்கு பார்க்கலாம்னு முடிச்சிட்டாங்க.

அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமையில கால்வாய் தூரு வாரும் வேலைய தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேலு துவக்கி வைக்க, தன்னார்வ தொண்டுப் படையாக வந்த இளைஞர்கள் கும்பல் அதை திருவிழா போல குதூகலமாக ஆரம்பித்தார்கள். வாரிக் கொட்றதுக்கு பெருமளவு பொம்பளை படையும் திரண்டு போச்சி. பாலாற்றில இருந்து மொத்தம் பதினாறு ஏரிகளுக்கும் நீர் வரத்து இந்த மாமண்டூரான் கால்வாய் மூலம்தான், ஆழமும், அகலமும் ஜாஸ்தி. கால்வாயில் நிறைய மரங்கள் செழிப்பாக கிளைச்சிருந்திச்சி. சீமை கருவேலன், புங்கன், வேப்பன், நுணா, ஒவ்வொண்ணும் தொடை சைஸுக்கு பெருத்திருந்துச்சி. அப்படீன்னா தூர் வாரி எத்தினி வருசம் ஆயிருக்கும் பார்றான்னு பேச்சு எழுந்துச்சி… அடர்த்தியாய் ஓணான் கொடிங்க, உத்தாமனி, காரமுள்ளு செடிங்க, கிளேரியா, ஆமணக்கு, நொச்சி, மாதிரியான செடிகொடிகள் மண்டிக்கிடந்தன. இதில்லாமல் ஊர் குப்பைகளும் கால்வாய்லதான் கொட்டப்பட்டிருந்தன. பாலாற்று மணலும் கால்வாயில் வந்து பரவலாக மேடு தட்டியிருந்துச்சி.. நாலு கிலோ மீட்டர் தூரத்துக்கும் இதே அக்கப்போர்தான். மலைப்பா இருந்துச்சி. சரசரவென மரங்களை வெட்டி அப்புறப் படுத்த ஆரம்பிச்சாங்க.. வேர்முடிச்சிங்களை அடியோடு கிளறி வாரி அப்புறப் படுத்த ஒரு ஜேசிபியை எறக்கி வுட்டிருந்தாங்க.

உக்கிரமான வெய்யிலு தோலுரியுது. பதினோரு மணிக்கெல்லாம் ஜனங்க சோர்ந்து போச்சிங்க. அந்நேரத்துக்கு ஷண்முகமணி அய்யா பிஸ்கட்டு, சில்லுன்னு மோரு, பானகம்னு ஏற்பாடு செஞ்சி சோர்வுதட்டாம பார்த்துக்கிட்டார். அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள்ளே விஷயம் எப்படியோ ஊடகங்களின் காதுகளுக்கு எட்ட, காலையில வேலை ஆரம்பிக்கிறப்போ பத்திரிகைக்காரங்களும், டி.வி. சேனல்களும் மொலுமொலுன்னு மொய்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஜனங்க செய்யற வேலையை எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொருத்தருக்கும் தன் முகம் டிவியில வருதுன்ற உளவியல் கான்செப்ட் வேலை செய்ய ஆரம்பிக்க, வேலை சுணக்கமில்லாம ஓட ஆரம்பிச்சது. கூடவே ஊரு முக்கியப் புள்ளிகளின் கைங்கர்யத்தில எல்லாருக்கும் விதவிதமான தின்பண்டங்களும் விநியோகமாயின. நாலாவது ஞாயித்துக் கிழமைக்கெல்லாம் மூணு கிலோமீட்டருக்கு மேல் கால்வாயை ஆழமா தொடைச்சியெடுத்து சுத்தம் பண்ணியாச்சி. அடுத்த ஞாயித்துக் கெழமையோட கால்வாய் வேலை முடியற கட்டம். இவங்க செய்றத அப்பப்ப மத்த ஊர்காரங்களும் வந்து பார்த்துவிட்டு போனாங்க. ஷண்முகமணிஅய்யா ரொம்ப சந்தோஷமா சுத்திசுத்தி வந்தாரு. ஒரு நாள் மதியம்ரெண்டுமணி இருக்கும் முக்கியஸ்தர்கள் எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கும்போது, நாலைஞ்சி வெடலைப் பசங்க பெரிய பெர்தனத்தைத் தேடி வந்தாங்க. எல்லாம் படிச்ச புள்ளைங்களா தெரியுது.. “ யாருப்பா நீங்க?. அட நீ நம்ம போஸ்ட்மாஸ்டர் கண்ணப்பன் பையன் இல்லே?.” “ஆமாங்கய்யா. பேரு அரவிந்தன். இவங்கள்லாம் மேலத்தெரு பசங்கதான். என் கூட மெட்றாஸ்ல கம்ப்யூட்டர் கம்பெனிகள்ல என்ஜினியரா வேலை செய்றவங்க. எங்களை மாதிரி படிச்சிட்டு மெட்றாஸிலும், வெளிநாட்டிலும் வேலை செய்ற நம்மூரு பசங்க எப்படியும் முப்பது நாப்பது பேர் இருக்கோம்.” “ஆமாமா புதூரு கூட்ரோடுல என்ஜினியரிங் காலேஜ் வந்தப்புறம் நம்ம பக்கம் நிறைய பசங்க படிச்சிட்டு அங்கங்கே வேலை செய்றாங்கல்ல?.” “ ஆமாங்கய்யா. இப்ப நம்மூருல நடக்கிற குடிமராமத்து வேலையப் பத்தி பேசறப்போ, ஏரிய தூர் வார்றதுக்கு எங்களுக்கு வசதி இல்லைன்றத நீங்க விலாவாரியா டி.வி.யில பேசியிருந்தீங்க.” “அதான கண்ணூ ஊரு இருக்கிற நெலம?.” “ஏரி தூர்ந்து கிடக்கிறத படம் புடிச்சி போட்டிருந்தாங்க, மனசுக்கு கஷ்டமா இருந்துச்சி. அதை வாட்ஸ்அப் முலம் எல்லா பசங்களுக்கும் தெரியப் படுத்தினோம்.” “சரி அதனால என்னப்பா?.” “அவ்வளவு பெரிய நம்ம ரெட்டைஏரி இன்னைக்கு தூர்ந்துபோய் வெள்ளாமைக்கு பங்கமா ஆயிட்சேன்னு எங்களுக்கெல்லாம் மனசு கேக்கல. நாங்கள்லாம் நீச்சலடிச்சி விளையாடினது, வருஷா வருஷம் கடைசியா ஏரிய கொள்ளை வுட்றப்போ குளோன்னு ஊரு ஜனங்களோட ஓடி ஏரிய கலக்கி மீன் பிடிப்போம், காய்ச்ச காலத்தில ஏரிக்குள்ளதான் எங்க கிரிக்கெட் கிரவுண்டு. இப்படி ஏரியோட எங்களுக்கு பலவிஷயங்க இருக்கு. இதில்லாம நிலத்தடி நீருக்கு இதான் முக்கியமான ஆதாரம். நாங்க எல்லாரும் பேசி ஏரிய தூருவார்றதுக்குன்னு ஒரு ஃபண்டு ஏற்படுத்தியிருக்கோம். ஆளுக்கு நாற்பதாயிரத்தில இருந்து லட்ச ரூபா வரைக்கும் அவங்கவங்க வருவாய்க்கேற்ப போட்டிருக்கோம்.அங்கங்க எங்களுக்கு தெரிஞ்ச ஃப்ரண்ட்ஸ் கிட்டல்லாம் வசூல் பண்ணிக்கிட்டிருக்கோம்.

சில கார்பரேட் கம்பெனிங்கள்ல கூட உதவி கேட்டு மூவ் பண்ணிக்கிட்டிருக்கோம். இது பொதுப் பிரச்சினைன்றதால கிரீன் சிக்னல் கிடைச்சிருக்கு. நேர்ல வந்து ஏரிய பார்த்துட்டு சொல்றோம்னு சொல்லியிருக்காங்க. நாங்க என்ன சொல்றோம்னா, நீர்புடிப்புல ஏகத்துக்கும் பத்தடி ஆழத்துக்கும் தூர்ந்து போன ஏரிய தூரு வார்றதுக்கான முழு செலவையும் நாங்க பார்த்துக்கறோம்.”—அவர்கள் நிஜமான ஆர்வத்துடன் பேச, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி. அவ்வளவு பெரிய வேலையை முடிக்க, இப்படி சுலுவா நம்ம புள்ளைங்களே பொறுப்பு ஏத்துக்குவாங்கன்னு நெனைக்கவே முடியல. முடியுமான்னு மலைப்பா இருக்கு. நம்பிக்கையே வரல. நடக்கிறது கனவு மாதிரி இருக்கு. அங்கிருந்தவங்க உணர்ச்சி வசப்பட்டாங்க. பெரியபெர்தனத்துக்கு கண்ல தண்ணி வந்திடுச்சி. சந்தோஷத்துடன் அரவிந்தனை அணைச்சிக்கிட்டாரு. “தம்பீ! இது நடக்குதோ இல்லையோ, நடந்தா எப்படி இருக்கும்னு நெனைச்சிப் பார்க்கவே சந்தோஷமா இருக்குப்பா.”—அரவிந்தன் அவர் கையை பிடித்துக் கொண்டான். “ நிச்சயம் நடக்கும்யா. நடத்திக் காட்றோம் பாருங்க.” —ஷண்முகமணி அய்யா அவங்க ஒவ்வொருத்தன் கைகளையும் புடிச்சி குலுக்கினாரு. “தம்பிங்களே! முகஸ்துதிக்கு சொல்லல. எந்த நேரமும் காதில் குண்டலம் மாதிரி செல் ஸ்பீக்கர்களை சொருவிக்கிட்டு, உப்புசப்பில்லாத பேச்சு பேசிக்கிட்டு, பொம்பள பசங்களோட காபி ஷாப்பிலும், பப்பிலும் சுத்திக்கிட்டிருக்கிற நிறைய சம்பாதிக்கிற, ஆனா பொறுப்பில்லாத ப்ளேபாய்கள்தான்னு உங்களையெல்லாம் எல்லாரும் நெனைச்சிக்கிட்டிருந்தாங்க. ஏன் நான் கூட அப்படித்தான் நெனைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா நீங்கள்லாம் அப்பிடி இல்லேன்னு போனவருசம் சென்னை வெள்ளத்தின் போது ஒவ்வொருத்தரும் எம்மாம் பணத்த ஜனங்களுக்கு செலவு பண்ணீங்க?, எப்படி உசுரக் குடுத்து வேலை செஞ்சீங்கன்னு இந்த நாடு பார்த்துக்கிட்டு இருந்திச்சி. தினந்தோறும் நெட்ல பார்க்கிறேனே அழிந்து வரும் நம் தமிழை மீட்டெடுப்பது பத்தி, குறைஞ்சிக்கிட்டே வரும் நிலத்தடி நீர் பத்தி, நீர் மேலாண்மை பத்தி, புவி வெப்பமயமாதல் பத்தியெல்லாம் எவ்வளவு கவலை இருக்கு உங்க கிட்ட?. எவ்வளவு ஆர்ட்டிகிள்கள் எழுதறீங்க?. என்னதான் உங்களுக்கெல்லாம் எதேஷ்டமான வருவாய்ன்னாலும், ஆளுக்கு நாற்பதினாயிரம், ஒரு லட்சம்னு போட்றது சாமானியம் இல்ல. ரொம்ப சந்தோசம்பா. ஆனா இது பெரிய எஸ்டிமேட் வேலை தம்பீ, எப்படியும் அறுபது லகரத்த தாண்டும், சமாளிப்பீங்களான்னு இருக்கு. எங்க கிட்டயிருந்து பணஉதவி எதுவும் கிடைக்காது.” “கவலைப் படாதீங்கய்யா. நாங்க நிச்சயம் சமாளிப்போம்.”

ஒரு நல்ல நாளில் ஆரம்பித்தார்கள். சென்னையில இருக்கிற படிச்ச உள்ளூர் இளைஞர்கள் எல்லாரும் ஆஜராகியிருந்தனர். எல்லா ஊடகங்களும் மொய்ச்சிக்கிட்டிருக்க, ஊர் திரண்டிருந்துச்சி. மாவட்ட கலெக்டர் தலைமையில் எம்.எல்.ஏ. தங்கவேலர் மக்கள் தங்களுக்கு தாங்களே செய்துக் கொள்ளும் சேவையையும், இளைஞர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசி துவக்கி வெச்சாரு. ஜெ.சி.பி.கள் ஏரிக்குள்ளே நாலா திசைகளிலும் வேலை செய்ய ஆரம்பிச்சத எல்லா சேனல்களிலும் புதிய சிந்தனைன்ற தலைப்பில நேரடியா ஒளிபரப்பினாங்க.”

ஆயிற்று ஒருமாசம் போல எந்த வில்லங்கமும் இல்லாம ஜெ.சி.பி.கள் தொடர்ச்சியா வேலை செஞ்சதில ஏரி விஸ்தீரணத்துக்கும் பதினோரு அடிக்கு மேல பரவியிருந்த மேட்டையும் துப்புரவாய் சரிச்சி எடுத்ததோடு இல்லாம கூட ஒரு நாலு அடிக்கு ஆழப்படுத்தியாச்சி. கால்வாயையும் சுத்தமா தூர் வாரி முடிச்சாச்சி. ஏரியில் வாரிய மண்ணை கரைமேல கொட்டி வந்ததில கரை அகலமாகி பலப்பட்டது. ஏரியப் பார்க்க ஆழமும் அகலமுமாய் பிமாண்டமாய் தெரியுது. அரவிந்தன் நண்பர்கள் வேலையோடு வேலையாய் கரை நெடுக்க மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிக்க ஒரு சம்பள ஆளையும் ஏற்பாடு பண்ணிட்டாங்க. ஊர் ஜனமும் வந்து வேடிக்கை பார்க்குது. இதுக்கு நடுவுல எம்.எல்.ஏ. வின் ஆளுங்க வந்து ஏரியையும், கால்வாயையும் போட்டோ எடுத்துக்கிட்டு போயிருக்காங்க. ஒருநாள் தாசில்தாரும், பொதுப்பணித்துறை என்ஜினியரும் கூட வந்து பார்வையிட்டுட்டு போயிருக்காங்க.. எம்.எல்.ஏ. ஏதோ திருட்டு வேலை செய்யறாருன்னு மட்டும் தெளிவா தெரியுது. “பார்த்துக்கிணே இருங்க, அந்தாளு ஏரி வேலைய தான் செஞ்சதா பில் போட்டு சாப்பிடப் போறான்.” “ அடீங்! யாரு செஞ்ச வேலைய யாரு திருட்றது?.”—பெரியபெர்தனம் சீறினது கர்ஜனை மாதிரி இருந்துச்சி. இளைஞர்கள் குதித்தார்கள். ஷண்முகமணி அய்யா மட்டும் பதட்டப் படாம அமைதியாகப் பேசினாரு. “யாரும் ஆத்திரப் பட்டு எங்கியும் வார்த்தைய வுட்றாதீங்க. நாம செய்ற வேலைக்கு வில்லங்கம் வந்துடும். அவன் இன்னைக்கு நாலைஞ்சி வருசமா டவுன் வாசியா ஆயிட்டிருந்தாலும், உள்ளூர்காரன்தான?. நாளைக்கு நம்ம முகத்தில முழிக்க வேணாம்?. நீங்க நெனைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. நம்ம விஷயம் டிவிசேனல்கள், பத்திரிகைகள் மூலமா பெரியளவுக்கு நாடுபூரா ரீச் ஆயிட்டுது. அவனால எதுவும் செய்ய முடியாது. நாறடிச்சிடும்.”. “திருட்றவனுக்கு எப்பன்ற தோது தெரியும்” “இருக்கட்டும், எதுக்காவ நாங்க ஏழெட்டு முக்கியஸ்தர்கள் செலவு பண்ணிக்கிட்டு போயி எம்.எல்.ஏ.வையும் கலெக்டரையும் அழைச்சோம்?. அவங்கள துணைக்கு வெச்சிக்கிட்டு விழாவை நடத்தினோம்?. எந்த வில்லங்கமும் இல்லாம நம்ம வேலை முடியணும். எந்த நிமிசத்திலும் கலெக்டரோ, எம்.எல்.ஏ.வோ எதையாவது ஒரு சட்ட பாய்ண்டைக் காட்டி வேலைய தடுத்து முடக்கிடலாம். பொதுப்பணித்துறைக்கு அதிகாரம் இருக்குது. அப்படி நடக்கக் கூடாதுன்னுதான்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அன்றைக்கு நிறைவு விழா. உபரியாக சுத்துப்பட்டு ஜனங்களும் பார்க்க வந்து திரண்டுபோவ, கஜகஜன்னு கூட்டம். பாதுகாவலுக்கென்று பேருக்கு மூணு போலீஸ் வந்திருந்துச்சி. மேடையின் எதிரில் வி.ஐ.பி. இருக்கை என்ற இடத்தில் உள்ளூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இளைஞர்கள உட்கார வெச்சிருந்தாங்க. விழா ஆரம்பிச்சது. கடவுள் வாழ்த்து முடிஞ்சி, பெரிய பெர்தனம் எல்லோரையும் வரவேற்று சுருக்கமாக பேசிட்டு, ஏரி தூர் வார தோள் கொடுத்த இளைஞர்களுக்கும் வந்திருந்த விருந்தினர்களுக்கும் சால்வை போர்த்தி மரியாதை செஞ்சாங்க. ஒவ்வொருத்தருக்கும் சால்வை போர்த்தறதை ஊர் தலைவர் பார்த்துக்கிட்டார். அடுத்ததாக கலெக்டரும்,எம்.எல்.ஏ.வும் ஆளுக்கு பத்து பத்து நிமிஷம் பேசினாங்க. எம்.எல்.ஏ. பேசும்போது “இது நாட்டுக்கே ஒரு முன்னுதாரணம். மொத்த செலவு ஒரு கோடின்னு சொன்னாங்க. மலைப்பா இருக்குது. நம்மூரு இளைஞர்கள் இங்கே அமைதியாக ஒரு புரட்சியை நடத்திட்டாங்க. இதுபோன்ற மாற்றங்கள் வரணும். அதை இளைஞர்களாலதான் கொண்டுவர முடியும். இளைஞர்களுக்கு காதலையும் சினிமாவையும் தாண்டி சமூகப் பொறுப்புகளும் இருக்கின்றன என்பதை அவங்க நிரூபிச்சிருக்காங்க.”—–என்று சொன்னபோது, கைத்தட்டல்கள் பொரிந்தன. கடைசியாய் ஷண்முகமணி அய்யா பேச வந்த போது திடீரென்று உசரமாய் உள்ளூரு விவசாயி இளைஞன் ஒருத்தன் ஓடிவந்து மேடையேறி அவசரமாய் மைக்கை அவர் கிட்டேயிருந்து பிடுங்கிட்டான். கூடவே அடுத்தடுத்துன்னு நாலஞ்சி பேர் ஏறி வந்து நின்னாங்க. “எல்லாருக்கும் சொல்லிக்கிறோம், இன்னைக்கு நம்ம ஊர்ல நடந்திருக்கிற குடிமராமத்து வேலைக்கும், ஏரிய தூர் வாரியதுக்கும் ஷண்முகமணி அய்யாதான் ஐடியா குடுத்தாரு இல்லேங்கல. ஆனா அதுக்காவ இந்த ஒரு மாசமா உழைச்சது என்னை மாதிரி எங்க ஊர்ல இருக்கிற அறியாத பசங்கதான். மாமண்டூரான் கால்வாய்ல தூரு வாரினதும், ஏரில தூரு வாரினதும் உள்ளூர் பசங்கதான். அமிஞ்சிக்கு செய்றதுக்கு இது ஒண்ணும் நூறு நாள் வேலை இல்லை. இந்த கடும் வெய்யில்ல உசுரக் குடுத்து ஒவ்வொருத்தனும் தன் சொந்த வேலை மாதிரி செஞ்சோம். எம்மாம் பாம்புங்க?. நடுவில எங்கள்ல ரெண்டு பேரு நல்லபாம்பு கடிச்சி செத்து பொழைச்சிருக்காங்க. எங்கியோ கண்காணாத எடத்தில வேலை செய்ற படிச்ச நம்மூரு பசங்க ஏரிக்கோசரம் பணத்தை லட்சம் லட்சமா கொண்டாந்து கொட்டியிருக்காங்க. இப்படி நாங்கள்லாம் பாடுபட்டு செஞ்ச வேலையை அரசியல்வாதிங்களோ, இல்லே அரசு அதிகாரிங்களோ யாராவது அரசாங்கம் செஞ்சமாதிரி எஸ்டிமேட் போட்டு, பில் போட்டு முழுங்கினாங்கன்னு தெரிஞ்சது. ஊர் மொத்தமும் திரண்டுபோயி யாராயிருந்தாலும் அவங்க வூட்டாண்ட போயி நின்னுப் புடுவோம் ஆமாம். அப்புறம் நடக்கிறவைகளுக்கு நாங்க பொறுப்பில்லை, எங்க கிட்ட வாய்பேச்சே கெடையாது, ஆமாம். அவ்வளவுதான் சொல்லுவோம். ஊரு ஒண்ணு கூடிட்டப்புறம் எதிர்த்து எந்த பவரும் ஒண்ணும் கிழிக்க முடியாது. இது எச்சரிக்கை.”— கீழே ஜனங்க கைத்தட்டி, விசிலடிச்சி தங்கள் ஆதரவை தெரிவிச்சாங்க. அத்துடன் சடாரென்று மேடையை விட்டு இறங்கிட்டாங்க. ஷண்முகமணி அய்யாவுக்கும், பெர்தனக்காரங்களுக்கும் தர்மசங்கடமாய் போச்சு. எம்.எல்.ஏ.வும், கலெக்டரும் ஒரு வார்த்தை பேசவில்லை. அமைதியாக எழுந்துக் கொண்டார்கள். அப்போது வேகமாய் எழுந்த அரவிந்தன் கோபமாய் வந்து மைக்கைப் பிடித்தான். அவனுடைய தோழர்களும் எழுந்துக் கொண்டார்கள். எம்.எல்.ஏ.வையும், கலெக்டரையும் பார்த்து கைகூப்பி உட்காரச் சொல்லி கேட்டுக்கிட்டாங்க. அரவிந்தன் பொரிந்துத் தள்ளினான்.

“ யாரும் விஷயந் தெரியாம எதையும் எடுத்தேன் கவுத்தேன்னு பேசக்கூடாது. இன்னைக்கு அரசியலில் தப்பானவங்கதான் இருக்காங்கன்றது உண்மைதான். அதுக்காக நேர்மையான மனுசன் இந்த நாட்டில இல்லவே இல்லைன்னு ஏன் முடிவு கட்டிட்டீங்க?. இந்த வயசிலேயும் பொதுவேலைன்னா முன்ன முன்ன வந்து நிக்கிற நம்ம ஷண்முகமணி அய்யா இல்ல?. ஊருக்காக கடுமையாய் உழைச்ச வெள்ளாமைய பார்த்துக்கிட்டிருக்கிற நமமூரு பசங்க நீங்க இல்லே?, ஊரு நல்லதுக்காக லட்ச லட்சமாய் பணத்தைக் கொட்டிக் குடுத்த படிச்ச என் ஃப்ரண்ட்ஸுங்க இல்லே?, நம்மள மாதிரிதான் நம்ம எம்.எல்.ஏ.வும், தெரிஞ்சிக்கோங்க. நம்புங்கய்யா இப்படி அங்கங்கே சில நல்ல வித்துங்க இந்த மண்ணில் கண்டிப்பாய் முளைச்சிக்கிட்டுத்தான் இருக்கு. இன்னும் நிறைய மொளைக்கும். மோசமான ஜனங்கள்ல இருந்துதான் மோசமான தலைவருங்க வராங்கன்னு படிச்சிருக்கேன்..பின்ன அவங்கள்லாம் மேலயிருந்தா குதிக்கிறாங்க?. அப்படிப் பார்த்தா மொதல்ல நாமதான்யா மாறணும். நாம மாறிட்டா நேர்மையான அரசியலும் தன்னால வந்துடும்யா. வருங்காலத்தில் அப்படி வரும்னு நீங்க நம்பறீங்களோ இல்லையோ நாங்கள்லாம் நம்பறோம்.

எம்.எல்.ஏ.ஆளுங்க ஏரிய அளவெடுத்தது, போட்டோ பிடிச்சது எல்லாம் இந்த விஷயத்தை சி.எம். கவனத்துக்குக் கொண்டு போயி, இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுக்க கொண்டு போவணும்ன்ற நல்ல நோக்கம்தான் அவருக்கு. அந்த விஷயம் எங்களுக்கும் தெரியும். நாம செஞ்சவேலைகளையெல்லாம் டி.வி.யில லைவ்வாக காட்டினாங்களே, எல்லா பத்திரிகைகளும் எழுதுச்சே, எப்படி? பிரஸ்காரங்க தன்னால வந்துட்டாங்களா?.இல்லே நீங்க யாராவது சொன்னீங்களா?. எல்லாம் எம்.எல்.ஏ. சாருடைய வேலைதான். அவருதான் நாலு பேருக்குத் தெரியணும்னு ஏற்பாடு பண்ணாரு. இன்னொரு விஷயம் சொல்றேன். நாங்க கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கிற ஃபண்டுக்கு நம்ம எம்.எல்.ஏ. நாலு லட்ச ரூபாய வசூல் பண்ணி குடுத்திருக்காரு தெரியுமா?.

இப்படிப்பட்ட நல்ல மனுஷன் மேல நம்பிக்கை வைக்கணும்யா, காமராஜரும், கக்கனும், லால்பகதூர் சாஸ்திரியும், கட்டின வேஷ்டிக்கு மறு வேஷ்டி கூடஇல்லாம வாழ்ந்த தோழர் ஜீவாவும்,இந்த மண்ணுலதான மொளைச்சாங்க?.”— ஷண்முகமணி அய்யா பேச முடியாமல் திகைச்சி நின்றுவிட்டார். கூட்டம் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தது.. பிரவாகமாய் வந்த அரவிந்தன் பேச்சில் அபரிதமாய் சீற்றம் தெறித்தது. இப்படி அரவிந்தனைப் போல நேர்மையை ஆராதிப்பதையே இயல்பாகக் கொண்டு வளர்ந்து வரும் நாளைய சமுதாயத்தையும், அப்புறம் வாய்பேச்சில எங்களுக்கு நம்பிக்கை கிடையாதுன்னு கொதிச்சிப் போய் சொன்ன, வன்முறையான முரட்டு இளைஞர்கள் கூட்டத்தையும் பார்க்கிறப்போ அரசியல்வாதிகள் திருந்த வேண்டிய காலம் அதிக தூரத்திலில்லை என்பதில் அவருக்கு சந்தோஷமிருந்தது. நாட்டில் இன்றைக்கு அங்கங்கே பரவலாக மக்கள் நடத்தும் சாலை மறியல்களும், மந்திரிகளை சுற்றி வளைத்து நடத்தும் மறியல் போராட்டங்களும், ஏன்? வடக்கே சில அரசியல் தலைவர்கள் உதை கூடவாங்கிட்டாங்க.. இவைகளெல்லாம் வரப் போகும் நேர்மையான எதிர்காலத்தை ஊர்ஜிதப் படுத்துகின்றன. இவைகள் ஒரு நல்ல விடியலுக்கான துவக்கமாகவே அவருக்குப் பட்டது. அரவிந்தனை அவர் கட்டியணைக்கும் போது கண்கள் சுரந்துக் கொண்டன.

நன்றி— கிழக்குவாசல் உதயம் செப்டெம்பர்2016-இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *