நம்பிக்கை நட்சத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 7,223 
 

கிட்டத்தட்ட ஒரு மாதமாச்சு. டீசர் வெளியான நாளிலிருந்தே எப்படியும் முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கணும் என்ற வெறி ஆறுமுகத்தைப் பிடித்து ஆட்டியது. கூட வேலை பார்க்கும் ஷகாபுதீனிடம் சொல்லி டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்த்திருந்தான். ஷகாபுதீன் இவன் ஊர்க்காரர்தான். சென்னைக்கு வந்து பல வருடங்கள் சர்வீஸ் போட்ட ஆள். பார்க்காத வியாபாரமில்லை. பழகாத மனுசரில்லை. படிப்பு என்னவோ பத்தாவதுதான்.

“லே, பத்தமடையிலெ கூட என்னத்தெரியாதவன் இருப்பாண்டே, ஆனா இந்த மெட்ராசில என்னெயத் தெரியாதவன் இருக்க மாட்டான்” என்பார்.
நானாவித ஆசாமிகளும் பழக்கமாதலால் ஆறுமுகத்திற்கு டிக்கெட் வாங்கித்தர வாக்குக் கொடுத்து விட்டார்.

ஷகாபுதீன் அண்ணாச்சிக்கு தி. நகரில் அந்த பெரிய ஜவுளிக்கடையில் மூன்றாவது தளத்தில் ஆயத்த ஆடைகள் பிரிவில் வேலை. வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக மேலே வந்தவர். பத்தாவது முடித்து , மேல் நிலை வகுப்பு படிக்க ஆசைதான். ஆனால் அவரது வறிய வீட்டுச் சூழல் அதற்கெல்லாம் இடம் தரவில்லை. நாலைந்து பழைய சட்டை வேட்டியுடன் சென்னைக்கு “வாயில் இருக்குது வழி”, என்று சொல்லி வீட்டை விட்டு புறப்பட்டவர்தான். ஆரம்பத்தில் வாசுதேவ நல்லூர் ஹக்கீம் அண்ணன் எக்மோர் ரயில் நிலையத்தில் வைத்திருந்த பெட்டிக்கடையில் தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்புறம் கட்டுச் செட்டாக இருந்து காசு சேர்த்து சொந்தமாக ஒரு பிளாட்பார கடையை பாண்டி பசாரில் ஆரம்பித்தார்.

அது ஒரு போராட்டமான வாழ்க்கை. எப்போ போலீஸ் வரும் எப்போ எல்லாவற்றையும் தூக்கிட்டுப் போகும் என்பது எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். என்னதான் சூரியன் கிழக்க உதிக்க மறந்தாலும் மாமூலும், தண்டலும் கண்டிப்பாகத் தந்து விட வேண்டும். முப்பத்தைந்து வயது வரை இந்த இரண்டுங்கெட்டான் நிலையற்ற வாழ்க்கை கருதியே நிக்காஹ் கூட செய்து கொள்ளவில்லை. பின்னாளில் இந்த ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்த பின் நிலையான சம்பளம் என்றான பின்னால்தான் நிக்காஹ் செய்து கொள்ள சம்மதமளித்தார். மேரூனிஸ்ஸாவும் நல்ல பெண்தான். பட்டதாரி மாப்பிள்ளைகள் பலர் வந்த போதும் ஷகாபுதீனின் நல்ல குணத்துக்காகவே காத்திருந்து மணந்து கொண்டாள்.

குடும்பம் ஊரில்தான். மெட்ராஸ் ஊரில் பிழைக்கப் போய் சம்பாதித்து கடைசியில் பத்தமடையில் வீடு கட்டி செட்டில் ஆகவேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். மாதம் ஒரு முறை ஊருக்குப் போய் விடுவார். வெள்ளிக்கிழமை இரவு நெல்லை எக்ஸ்பிரஸில் கிளம்பி சனி,ஞாயிறு குடும்பத்துடன் கழித்து விட்டு திங்கள் மாலை மீண்டும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து செவ்வாய் காலை வந்து விடுவார். மற்றபடி லீவு எதுவும் எடுப்பதில்லை. அப்படி போகும் போது எப்படியும் பதினைந்தாயிரம் இல்லை இருபதாயிரம் கொடுத்துவிடுவார். ஊரில் அத்தனை விலைவாசி இல்லை. மாமியார், மாமனார் அப்புறம் மகன் ரபீக் ஆக நான்கு ஜீவன்களுக்கு அது தாராளமாகப் போதும். இதிலும் எப்படியும் சீட்டுக் கட்டி, பீடி சுற்றி, பாய் நெய்து என்று எதாவது ஒரு வகையில் எப்படியும் மாதம் மூன்றாயிரம் சேர்த்து விடும் சாமர்த்தியம் மேரூன்னிஸாவிற்கு உண்டு. சேர்மாதேவி பாண்டியன் கிராம பாங்கில் அப்படியும் இப்படியுமாக ஒரு ஐம்பதாயிரம் போட்டு வைத்திருக்கிறாள்.

ஷகாப் பாய்க்கு கிட்டத்தட்ட மாதம் முப்பதாயிரம் வருமானம். தி. நகரில் கட்டுப்படியாத வாடகைக்குப் பதிலாக சற்று தள்ளி ஐயாயிரம் ரூபாய் வாடகைக்கு கொடுங்கையூரில் வீடு எடுத்து கடையில் வேலை செய்யும் நாலைந்து பேர் பங்கிட்டு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாடகை. நம்ம ஆறுமுகத்தை கடையில் வேலைக்கு ஷகாபுதீன் பாய் சேர்க்கிறதுக்கு முன்னால் அவன் உஸ்மான் ரோட்டில் கிருஷ்ணவிலாஸ் ஹோட்டலில் சப்ளையர். காலையில் 9 மணிக்குப் பின் வியாபாரம் கொஞ்சம் சுமாரக இருக்கும் . அப்போது வெளியே நடைபாதையில் முதலில் ஒரு குருட்டுப் பிச்சைக் காரர் அடுத்தது குடைக்குள் கைக்குட்டை வைத்தபடி நடமாடியபடி வியாபாரம் செய்யும் ஒரு இருபது வயது இளைஞன் அப்புறம் கழுத்தில் செவ்வக அட்டைப் பெட்டியைக் கட்டிக் கொண்டு அதில் சின்ன சின்ன பிளாஸ்டிக் குப்பிகளில் சோப்புத்தண்ணீரையும் அதில் முக்கி ஊதுவதற்கு பிளாஸ்டிக் ஊது வளையம் வைத்துக் கொண்டு, ஊதியபடி காற்றில் வண்ண வண்ண சோப்புக் குமிழிகளை விட்டபடி வியாபாரம் செய்யும் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுமி. இவர்கள் தான் அவனது தினசரி காட்சியாளர்கள். அந்த சிறுமி அரக்கு நிறப் பாவாடையும் சந்தன நிறத்தில் மேல் சட்டையும் போட்டிருப்பாள். சரியாக பகலில் பதினொன்று முதல் பன்னிரண்டு மணி வரை அவளைக் காண முடியும். அதன் பின் மீண்டும் மாலை நான்கு முதல் ஒன்பது மணி வரை இருப்பாள்.

அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் கேட்கும் தொலைவில் ஆறுமுகம் இல்லை. ஆனால் அவர்களின் பேச்சு என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பான். அந்த சிறுமியின் உடை அரசாங்கம் இலவசமாக வழங்கும் பள்ளிச் சீருடை என்பதும் அவள் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறாள் என்றும் அவனால் அனுமானிக்க முடிந்தது. கூட்டம் இல்லாத வேளைகளில் அச்சிறுமி எதிர்வாடையில் உள்ள ஆயத்த ஆடைக்கடையில் காட்சிப்பெட்டியில் உள்ள சிறுமியின் மேல் அணிவிக்கப்பட்ட ஆடையை பார்ப்பாள். அப்புறம் கர்சீப் விற்கும் அண்ணனிடம் ஏதோ சொல்லிச் சிரிப்பாள்.

இதெல்லாம் பழைய சங்கதி. இப்பொது அந்த ஆயத்த ஆடைக்கடைக்கே ஆறுமுகம் வேலைக்கு வந்து சேர்ந்து ஆறு மாதமாகி விட்டது. தினமும் அந்தப் பெண் காட்சிப் பெட்டி அருகில் நிற்பதையும், சில சமயம் தனக்குள் பேசிச் சிரிப்பதையும் பார்க்கும் போது அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் என்று தோன்றும். கடையில் தினமும் வேளை முடிந்து ஷகாபுதீன் பாயுடன் அறைக்குப் போய் சாப்பிட்டு தூங்குவதற்கு கிட்டத்தட்ட மணி 12 ஆகிவிடும். காலையில் ஒன்பது மணிக்கு பாயுடன் கிளம்பி கடைக்கு வந்தால் வேலை நெட்டி முறிக்கும்.

உடைளை வாடிக்கையாளர்கள் கலைத்துப் போட்டால் மீண்டும் மடித்து அதன் இடத்தில் மாட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள் எடுத்த துணிகளை வாங்கி பில் போட கௌண்டரில் கொடுக்க வேண்டும். இதற்கிடையில் சந்தடிசாக்கில் திருடவரும் ஆட்களையும் அடையாளம் கண்டு சூப்பிரவைசரை எச்சரிக்க வேண்டும். நல்லவேளையாக ஷகாப் பாய் தான் அவனது சூப்ரவைசர். அவரிடமிருந்து நிறைய தெரிந்து கொண்டிருக்கிறான். திருட வரும் ஆட்களை நேரடியாக பிடிக்க கூடாது. தனியாகப் பிடித்தால் அடையாளம் வைத்துக் கொண்டு எங்காவது தனியா பார்க்கும் போது பிளேடால் கிழித்து விடுவார்களாம். அதனால் போலீசுக்கு தகவல் சொல்லித்தான் பிடிக்கணுமாம். எல்லாம் பாய் சொல்லிக் கொடுத்த பால பாடம்.

நாளைக்கு படம் ரிலீஸ். ஷகாப்புதீன் பாய்யை இப்போது கேட்க முடியாது. அப்படி மீறிக் கேட்டால்,” எலே, புத்தியை வியாபாரத்தில் வை. அண்ணாச்சி நம்ம நம்பித்தான் முதல் போட்டு வியாபாரம் செய்யறார். கடைக்கு வந்துட்டா கோவில் மாதிரி. அங்கன யாவாரம் தவிர வேற சிந்தனை இருந்தா தப்புலே” என்று சொல்லிவிடுவார். இன்னிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு போகும் போது சொல்லி ஞாபகப்படுத்தலாம். மனதை கட்டுப்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

முதலாளி அண்ணாச்சி வழக்கமாக தினமும் ஒரு சுற்று வருவார். இன்னிக்கும் வரும் போது “என்ன பாய், மணி பன்னிரெண்டு, தொழப் போகலையா” என்றார். பாய் மீது அவருக்கு அபார நம்பிக்கை. பாய்க்கும் முதலாளி மேல் தேவ விசுவாசம். முதலாளி தன் சொந்த ஊருக்குப் போகும் போது அவருக்கு நம்பிக்கையான ஷகாப் பாய்தான் கார் ஓட்டுவார். ஊருக்குப் போன பின் பாய்க்கு ஒரு வாரம் முழு ஓய்வுதான். அங்கே உள்ளூர் டிரைவர் இருப்பார். பாயை பத்தமடை அனுப்பி விடுவார். புறப்படும் முன் நாள் போன் செய்து காயாமொழிக்கு வரச் சொல்லி விடுவார்.

“அய்யா, நீங்க வரப் பார்த்தேன். அதுதான் நின்னுட்டேன் “ என்றார்.

“சரி, நீங்க கிளம்புங்க”

“உத்தரவு” பாய் கிளம்பி விட்டார்.

சே, முதலாளி வந்ததில் காரியம் கெட்டுப்போச்சு. எல்லாம் விதி. மனசுக்குள் நொந்து கொண்டான் ஆறுமுகம். பத்து நாட்களாக ஊரில் நண்பர்களுக்கெல்லாம் போன் செய்து படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது பற்றி பெருமை பீற்றியாச்சு. அடுத்து அவனுங்களுக்கு கட்டம் கட்டமா கதை சொல்லி போன் பேசணும். நடக்குமோ என்னவோ தெரியலை.

தொழுகை முடிந்து பாய் கொஞ்சம் தாமதமாக வந்தார். “லே, ஆறுமுகம் கொஞ்சம் தண்ணி கொண்டாலே” என்றார்.
தண்ணியை வாங்கி ஒரு மிடறு குடித்தவர், “ஆறு, அது என்னடா டிக்கெட் அந்த வெலை விக்கி? இருநூறு ரூபாயாமலெ, நமக்கு எதுக்குடா அத்தினி செலவு?

ஒரு நா நல்லா சாப்பிடலாமேடே, அதான் உன்னைய கேட்டுக்கிட்டு வாங்கலாமின்னு திரும்பி வந்திட்டேன்’ என்றார்.

“இல்லை பாய் அண்ணாச்சி, பொறந்தது முதல் இது நா தொட்டு இப்படி ஒருக்கா கூட படம் பார்த்தது இல்லை. ஏதோ உங்க தயவுல ஒரு அதிருஷ்டம் கிடச்சதாதான் நினைச்சேன், எப்படியும் பார்க்கணும் பாய்”.

“அதுக்கில்லைடா, ஏதோ பத்தம்பது ரூவாய்னா பரவாயில்லை. இருநூறு என்னதும் மலைப்பாயிருந்தது”.

“ பாய் அது அந்தக் காலம். நீங்க படமே பார்க்க மாட்டீங்க. நீங்க பார்த்த காலத்து டிக்கெட் அம்பது ரூபாய். இப்பொ குறைஞ்சது இருநூறு. விலை வாசி எல்லாம் ஏறிட்டு”. எப்படியும் வாங்கிடுங்க பாய்”.

“சரி. மேனேஜர் தெரிஞ்சவர்தான். நம்ம முதலாளிக்கு பங்காளிங்க தியேட்டர்தான். காலையில் வாங்கித் தாரேன்”. பொழுது எப்போ புலரும், ஷகாப் பாய் எப்போ எழுந்துப்பார் என்று நினைத்தே ஆறுமுகத்திற்கு தூக்கம் வரவில்லை. வழக்கம் போல பாய் எல்லா வேலையையும் முடித்துவிட்டு, தனக்கும் ஆறுமுகத்திற்கும் டிபன் கட்டிக்கொண்டு கிளம்ப மணி எட்டாயிற்று. கடை வாசலில் வராமல் பின் பக்கம் வழியா வண்டியை கடைப் பார்க்கிங்கில் விட்டவர். “நீ உள்ளே வராதே. பிளாட்பாரத்தில் நில். நான் முதலாளியிட்ட ஒரு தகவல் சொல்லிட்டு வரேன்” என்றார்.

பிளாட்பாரத்தில் கடைக்கு அருகில் நின்றவன் அப்பொதுதான் பார்த்தான் அந்த சோப்புக் குமிழி சிறுமியை. அது ஆறுமுகத்தை சட்டை பண்ணாமல் காட்சிக் கண்னாடிப் பெட்டியில் உள்ள பொம்மை அணிந்துள்ள உடையைத் தான் அணிந்து பள்ளிக்கு போய் மற்ற குழந்தைகளிடம் காட்டுவதாக கற்பனை செய்து தனக்குத்தானே பேசி சிரித்தபடி இருந்தது. காட்சி, அந்த கற்பனை உரையாடல்கள் எல்லாம் கவனத்தை ஈர்த்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின் கர்சீப் இளைஞனிடம், “அண்ணா என்னிக்கு அந்த முட்டாய் கலர் டிரஸ் வாங்கித் தருவாய்” என்றது. அதற்கு அவன்,

“அது ஒனக்கு நல்லாயிராது. தீபாவளி நேரத்தில் நல்ல டிரஸ் சீப்பா அண்ணன் வாங்கித்தருவேன்” என்றான்.

உடனே அது அந்த பிச்சைகார கிழவனிடம் போய் “ தாத்தா, நீ சொல்லு தாத்தா, அது எனக்கு நல்லாத்தானே இருக்கும். அண்ணன் பொய் சொல்லுது” என்று புகார் சொன்னது. “இல்லை. அது ஒனக்கு நல்லா இருக்காது. அண்ணன் சொல்லறது சரிதான்”

“போ, தாத்தா, ஒனக்கு கண்ணே தெரியாது. அப்புறம் எப்படி அந்த கலர் எனக்கு நல்லாயில்லைன்னு உனக்குத் தெரிஞ்சது” எதிர் கேள்வி போட்டது அந்தப் பெண். இதை வேடிக்கை பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை ஆறுமுகத்திற்கு.

“ வா, போகலாம்” என்று பாய் கூப்பிட்டதும் சுயநிலைக்கு வந்தான். வண்டியில் தியேட்டருக்கு வந்து பாய் நேராக மேனேஜரைப் பார்த்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தார். “லே, படம் பார்த்துவிட்டு தலை வலி என்று லீவு கேட்க கூடாது. ஆமா” என்று சொல்லி விட்டு மாலை மூன்று மணிக்குள் கடைக்கு வந்து விடும்படி கூறிவிட்டு மோட்டார் பைக்கில் சென்று விட்டார்.

ஆறுமுகத்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் கடையில் பார்த்த ஷகாபுதீன் பாய்க்கு ஆச்சரியம்.

“என்னடே, பிரச்சனை. படத்துக்குப் போகலையா?”

“இல்லை அண்ணாச்சி, அந்த மிட்டாய் கலர் ஃப்ராக் என்ன விலை?”

“ அது எண்ணூறு ரூபாய் டே. ஏலே, என்ன ஊருக்குப் போகப் போறியா? ஒரு வார்த்தை கூடச் சொல்லலை”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை பாய். அந்த ஃபிராக் நான் வாங்கிக்கிறேன். பில்லு போட சொல்லுங்க”

கௌண்டரில் எண்ணூறு ரூபாய் பணத்தை எண்ணி கொடுத்து விட்டு, டெலிவெரி பகுதியில் சோமுவிடம் டெலிவெரி வாங்கிக் கொண்டான். ஷகாபுதீன் பாயை, “அண்ணாசி, என்னோட கொஞ்சம் வாங்க” என்று கூப்பிட்டவன், கீழே பிளாட்பாரத்திற்கு வந்தான். இன்னமும் அந்த சிறுமி கண்ணாடி காட்சிப் பெட்டியில் உள்ள பொம்மையுடன் பேசிக் களித்துக் கொண்டிருந்தது. அதை கூப்பிட்டு அருகே வரச் சொல்லி,
“ பாய் அண்னாச்சி, பாப்பாவுக்கு அந்த ஃப்ராக்கை கொடுத்துடுங்க” என்றான்.

அந்த சிறுமி முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். கர்சீப் அண்ணன் தாங்க்ஸ் சார் என்று ஆயிரம் தடவை சொல்லியிருப்பான். ஷஹாபுதீன் பாய், ஆறுமுகம் இருவரையும் சுற்றி பெருங் கூட்டம். கூட்டத்தை விலக்கி கடைக்கு வந்தவன் பாயிடம், “ நீங்க போன பின்னாடி அங்கே வந்த ஒரு ரசிகருக்கு டிக்கெட் தேவைப்பட்டது. அவர் என்னிடம் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டை தர முடியுமான்னு கேட்டார். வேற சந்தர்ப்பமாக இருந்திருந்தா மாட்டேன். ஆனா காலையில் இந்த பிஞ்சின் ஆசையை கேட்டபோது பாவமாக இருந்தது. நா தர்மம் எதுவும் செய்யவில்லை. அந்த அளவுக்கு பணவசதியும் இல்லை. தலைவர் எனக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார். பண வசதி இருந்த பணக்காரன் யாரும் இந்த பிள்ளையின் ஆசையை இந்த ஜென்மத்தில் பூர்த்தி செய்யப் போவதில்லை. பணம் உள்ளவன் கையில் இருந்த அதிகப்படி பணத்தை அந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்ற ஆண்டவன் காட்டிய படி பயன்படுத்தினேன் அவ்வளவுதான் பாய். நான் செய்தது தப்பானா என்னை மன்னிச்சிருங்க பாய்” என்ற ஆறுமுகத்தை இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஷஹாபுதீனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *