நண்பர்களற்றவனின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,102 
 

எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று எண்ணலாம். உண்மையில், உலக வாழ்கையே சுவரஸ்யமற்றது தான். சுவரஸ்யமென்பது வாழ்கையினுள் நாம் வழிய திணித்துக் கொள்ளும் பொய். அதனால் என் வாழ்க்கை சுவாரஸ்யமற்று போனதைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிலபல நண்பர்களோடு திரிந்த நான் இப்படி நண்பர்களற்றுப் போனதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு, பிப்ரவரி மாதத்தில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி ஓடாமல் போன அந்த திரைப்படத்தின் முதல்நாள்- முதல்காட்சி- முதல்டிக்கெட்டை குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் நான் வாங்கிய போது என் பின்னே வரிசையில் நின்றுகொண்டிருந்த எழுபது பேரும் என் நண்பர்கள்தான். அன்று திரையரங்கில் முழுக்கமுழுக்க எங்களுடைய கல்லூரி மாணவர்களே இருந்தனர். அதில் பெரும்பாலானோர் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். மிகவும் நெருங்கிய நண்பர்களென்று என்னுடன் எப்போதும் வலம் வந்த ஐந்தாறு பேரும் இப்போது இல்லை. இன்று யாருமற்ற ஒருவனாய் இங்கே இரண்டு குதிரைகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறேன். பார்க் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே சுவற்றை ஓட்டியிருந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு குதிரைகளும் என்னை பாந்துவமாக பார்ப்பது போல் இருந்ததால் அதன் நடுவே போய் அமர்ந்துகொண்டேன். அந்த குதிரைகள் ஒன்றை ஒன்று சட்டை செய்யாமல் நின்றுக் கொண்டிருந்தன. நண்பர்களற்ற குதிரைகள்..

எவ்வளவு நேரம் ஓடியது என்று தெரியவில்லை. “ஆம்பள குதிரைய பாக்க வருவானுங்க” அங்கே இருந்த குண்டு பெண்மணி சொன்னாள். எனக்கு அவமானமாக இருந்தது. எழுந்து நடந்தேன்.

கல்லூரியில் என்னுடைய கேங் பெரியது. எப்போதும் பதினைந்து இருபது பேர்களாக சேர்ந்து கல்லூரி ஹாங்கரில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால் இப்போது அப்படி பேசியதை எண்ணும் போது தொலைந்து போன மகிழ்ச்சி ஒரு நிமிடம் மீண்டும் மனதை தொட்டுவிட்டு போகிறது. மூன்று வருடங்கள் நண்பர்கள் புடை சூழ வாழ்க்கை நகர்ந்தது. இறுதி ஆண்டில், சேர்மேன் தேர்தலின்போது நடந்த பிரச்சனையில் நிறைய பேர் பிரிந்து சென்றுவிட்டனர். இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமே மிஞ்சினர்.

பின் திரைகடல் ஓடி திரவியம் தேடும் முயற்சியில் ஈடுபட்டதால் அந்த நண்பர்களும் தொடர்பற்று போனார்கள். தன்னுடைய ஒரு தலைக்காதல் கதைகளை பற்றி இரவு பன்னிரண்டு மணிக்கு போன் செய்து கிட்டதட்ட ஆறுவருடங்களுக்கு மேல் புலம்பிக் கொண்டிருந்த ஒரே ஒரு நண்பனும், தான் காதலித்த பெண்ணையே இறுதியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு கை பிடித்துவிட்டதால், என் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

எல்லா நண்பர்களும் கடைசி வரை உடன் வர மாட்டார்கள் என்று என் பழைய நண்பன் பாபா அடிக்கடி சொல்வான். ஆனால் உன்னுடனே உனக்காகவே சாவேன் என்றெல்லாம் பேசியவர்களும் பிரிந்து சென்றுவிட்டார்கள் என்பதைதான் ஜீரணிக்க முடியவில்லை. வாழ்க்கை இரக்கமற்றது. அது நம்மை பயன்படுத்திக் கொண்டு, மாங்கொட்டை போல் சப்பி போட்டுவிடுகிறது. அல்லது நாம் மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு விலகி வந்து விடுகிறோம்.

சிறிது தூரம் நடந்ததும் அந்த ஹோட்டல் போர்டு பெரிதாக இருந்தது. அதை பார்த்ததும் தான் அங்கே நான் ஏன் வந்தேன் என்று உரைத்தது. வங்கியில் ஒரு ட்ரைனிங்கிற்காக அனுப்பி இருந்தார்கள். ஒருவாரம் அமரவைத்தது credit monitoring, credit appraisal, NPA management என்று ஏதேதோ பேசுவார்கள். எல்லாம் ஆட்டிற்கு மாலை போடும் கதை தான்.

வங்கியிலும் எனக்கு பெரிதாக நண்பர்கள் என்று யாருமில்லை. பெரும்பாலும் என்னுடன் வேலை செய்பவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். மேலும் ஏதோ அடிமை போல் அவர்கள் வேலை செய்வது எனக்கு எரிச்சலை தரும். கொஞ்சம் உரையாடினால் என்னையும் அடிமையாக மாற்றிவிட முயற்சி செய்வார்கள் அதனால் அவர்களிடமிருந்து விலகியே இருந்தேன். எப்போதும் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன்.

வங்கி ஐந்து மணிக்கு முடியும். ஏழு மணி வரை சும்மா உக்காந்திருக்க வேண்டும். “ஆபிசர் 24 மணி நேரமும் வேலை செய்யனும்” என்று வங்கி மகான்களும் மாக்கன்களும் சொல்வார்கள். எனக்கு கடுப்பாக தான் இருக்கும். வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்திருப்பேன். பைத்தியம் பிடிப்பது போல் இருந்தாலும் நான் என்னெதிரே இருக்கும் கணினியின் திரையை பார்த்தவாறே மனதில் சூரத்தின் சுத்தமான அழகான சாலையில் விளக்கொளி நிறைந்த மாலை வேலையில் அந்த பஞ்சாபி தோழியின் கை கோர்த்து நடந்து செல்வேனே தவிர பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சக ஊழியருடன் தப்பித்தவறி கூட உரையாடிவிட மாட்டேன்.

நான் எங்கெங்கோ வேலை பார்த்திருக்கிறேன். பொதுவாக எல்லா அலுவலகங்களிலிலும் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். முதலாம் வகையினர், தங்கள் வேலையை நேர்மையாக செய்பவர்கள். அவர்கள், மற்றவர்களோ நிர்வாகமோ தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அலட்டிக் கொள்ளமாட்டார்கள். இன்னொரு வகையினர் உண்டு. அவர்களின் முதல் குறிக்கோள் நிர்வாகத்திடம், நிர்வாகத்தின் பிரதிநிதிகளிடம் நல்ல பேர் வாங்குவது. வேலை செய்வதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். நான் முதல் ராகம். அதனாலேயே எனக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது. நல்ல பெயர் வாங்குவதை பற்றி அலட்டிக் கொள்ளாததால் கெட்டப் பெயர் தேடி வந்தது. நல்ல பேர் வாங்குபவர்களை மட்டும்தான் ட்ரைனிங் வொர்க்ஷாப் எல்லாம் அனுப்புவார்கள். இந்த முறை, அரங்கில் இரண்டு இருக்கைகள் காலியாக இருந்ததால் என்னையும் அனுப்பினார்கள்.

நான் அமைதியாக கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அறையில் நிறைய பேர் இருந்தும் நான் தனித்துவிடபட்டவனாகவே இருந்தேன். எனக்கு வொர்க்ஷாப்பில் ஆர்வம் வரவில்லை. ரகசியமாக என்னுடைய கிண்டிலில் தஸ்தயெவ்ஸ்கி படிக்கத் தொடங்கினேன். .

‘இறுதியாக அவன் அவள் அருகே சென்றான். அவனுடைய கண்கள் மின்னின. அவன் தன் இரண்டு கைகளையும் அவள் தோல் மேல் வைத்து, அவளுடைய கலங்கிய கண்களை பார்த்தான். காய்ச்சலால் சோர்வுற்றிருந்த அவனது கண்கள் அவளை ஊடுருவியது. அவன் உதடுகள் துடித்தன. திடிரென்று அவன் சாஸ்டாங்கமாக தரையில் விழுந்து, அவள் கால்களை முத்தமிட்டான். ஒரு பைத்தியக்காரனிடமிருந்து விலகிச் செல்பவளை போல அவள் விலகினாள். ஆம், அவன் பார்ப்பதற்கு பைத்தியக்காரன் போலவே தோன்றினான்’

“அவ்ளோ பிசியா?” குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

“ப்ரேக்ல கூட அவ்ளோ இன்ட்ரஸ்ட்டா சார் என்ன படிக்குறீங்க?” அவள் ஆங்கிலத்தில் கேட்டாள். நான் அவளை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் என்னோடு சேர்ந்து இந்தியா முழுவதும் சுற்ற வேண்டும் என்று கொல்கத்தாவில் வைத்து சொன்ன கன்னடப் பெண். எனக்கு திருமணம் என்று தெரிந்ததும் என்னை வாட்ஸாப்பில் ப்ளாக் செய்துவிட்டு காணாமல் போய் விட்டாள். அவள் ட்ரைனிங்கிற்காக ஹுப்ளியிலிருந்து வந்திருந்தாள்.

“ஹுக்கா பார் கூட்டிட்டு போறியா?” என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு அலிபூரில் தங்கியிருந்த போது கேட்டவள் அவள்தான்.

நான் புன்னகை செய்தேன். எனக்கு ஆசையிருந்தாலும் பெரிதாக ஆர்வம் இல்லை. “நான்….” என்று இழுத்தேன்.

“நீ ரொம்ப நல்லவன். உன்னை நம்பி எங்கேயும் வரலாம்” என்றாள்.

அஞ்சுனா கடற்கரையில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை பார்ப்பதை போல் இருந்தது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.

நான் கொல்கத்தாவில் ஒரு பெரிய முகலாய ரெஸ்டாரண்டில் மேஜை புக் செய்து வைத்துவிட்டு அவளை அழைத்த போது,

“எல்லாம் தப்பா பேசுவாங்கடா. சாரிடா… திஸ் பீபில் ஆர் சோ சிக்” என்றாள்

நான் சரி என்று சொல்லிவிட்டு போனை துண்டிக்கலாம் என்று நினைத்த போது,

“உன் கூட சேர்ந்து ஒரு நாள் புல்லா சுத்தணும்” என்றாள். அன்றே முடிவு செய்துவிட்டேன், அவளை புரிந்துகொள்ள முயற்சி செய்யக் கூடாதென்று.

“பேசுறதே இல்ல. வாட்ஸாப்ல ஒரு ஹாய் கூட அனுப்பல… ஆல்மோஸ்ட் ஒன் இயர் ஹோகயானா!” கண் சிமிட்டி வினவினாள்.

“I couldn’t ping you. some problem in your whatsapp…” என்று சொன்னேன். வேகமாக தன் மொபைலை எடுத்து வாட்ஸாப்பை பார்த்தாள். எதுவும் சொல்லவில்லை. ட்ரைனிங் ஒரு வாரம் நடந்தது. என்னை unblock செய்வாள் என்று எதிர்பார்த்தேன். செய்யவில்லை. கடைசி நாளன்று, “உன் வைப்ப இன்ட்ரோ பண்ணவே இல்ல….” என்று கேட்டாள். நான் புன்னகை செய்தேன்.

“வாழ்க்கையில் ஒரு முடிவை எதற்காக எடுக்கிறோமென்று தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஓடி தப்பித்து கொள்வதாக நினைத்து இன்னொன்றில் சிக்கிக் கொள்கிறோம்” என்று அவளிடம் சொன்னேன். அந்த சந்தர்ப்பத்தில் அத்தகைய வசனம் தேவை இல்லைதான்.

“நீ இஞ்சினியரிங் விட்டு வந்திருக்க கூடாது….” என்றாள். பின் ஏதேதோ பேசினாள். பேசிகொண்டிருக்கும்போதே bye என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவது அவளது வழக்கம். அன்றும் அதை செய்தாள். அவளை புரிந்துகொள்ள முயற்சிப்பதோ நிரந்தரமான தோழி என்று நினைப்பதோ மனப்பிறழ்வில் கொண்டு விட்டுவிடும்.

கடைசியாக அறையைவிட்டு வெளியே வரும்போது “எங்க ஊருக்கு வா. சுத்திக் காட்டுறேன். உன்னமாதிரி இப்டி கண்டுக்காம ஓடிட மாட்டேன்” என்றாள். நான் திரும்பி பார்க்காமல் வெளியே வந்தேன்.

மீண்டும் அதே வழி. அங்கே அந்த குதிரைகள் இல்லை. ஒருவேளை குதிரைகளுக்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள் போலும்!

ட்ரெயினில் எதையோ நினைத்துக் கொண்டே வந்தேன். அது செங்கல்பட்டு ட்ரைன் என்பதால் முதல் வகுப்பிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நான் கதவருகே நின்றவாறே சாய்ந்துகொண்டு, சிறுகதை படித்துக் கொண்டு வந்தேன். யதார்த்திலிருந்து தப்பித்து செல்ல புனைவுகள் தேவைப்படுகின்றன. தினமும் காலையும் மாலையும் பயணம் சிறுகதைகளுடன் தான் கழிகிறது. மனதிற்கு பிடித்தவர்களின் மடியில் முகம் புதைத்துக்கொண்டு அழும் நிறைவை நல்ல சிறுகதை தந்துவிடும்.

ட்ரைன் நின்றது. பலர் இறங்கினர். எந்த நிலையம் என்று பார்க்க தலையை தூக்கிய போது, எதிரே நின்றவரை கவனித்தேன். அவர் பேண்ட்டில் ஜிப் போட மறந்திருந்தார். அதை அவரிடம் சொன்னால் என்னை தவறாக நினைத்துவிடுவாரோ என்று தோன்றியது.

சுற்றிமுற்றும் பார்த்தேன். எல்லோரும் அவர்கள் வேலை பார்த்தார்கள். என்ன நினைத்தாலும் பாராவயில்லை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ‘சார் ஜிப்’ என்று சன்னமான குரலில் சொன்னேன். அவர் ‘oops’ என்றவாறே ஜிப்பை போட்டுக்கொண்டு என்னை பார்த்து நன்றியுணர்வோடு புன்னகைத்தார். நான் தலையை திருப்பிக்கொண்டேன். அவர் என்னிடம் உரையாட முயற்சி செய்பவரை போல் என்னை பார்த்து கொண்டு வந்ததை என்னால் உணர முடிந்தது. நான் அவரை நிமிர்ந்து பார்க்க கூச்சப் பட்டு புத்தகத்தை கவனித்தேன்.

‘அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி வெளிப்பட்டாள் மரி’

ட்ரைன் பல்லாவரத்தில் நின்றது. இறங்கிய அவர் என்னை திரும்பி பார்த்து,

“தம்பி இத சொல்ல ஏன் கூச்ச படுற. என் பையன் வயசுதான் இருக்கும் உனக்கும்…”

நான் சங்கடமாக புன்னகைக்க, அவர்,

“ஹாப்பி பிரெண்ட்ஷிப் டே” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பிரெண்ட்ஷிப் டே என்று அவர் சொன்னதும் உரைத்தது, எதற்காக நண்பனை வெளியே தேடிக் கொண்டிருக்கிறேன்? வீட்டிற்கு போக வேண்டும். ஒருவேளை என் மனைவி எனக்கொரு நல்ல தோழியாக இருக்க கூடும்.

– ஆகஸ்ட் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *