நண்பன் என்றொரு புத்தகம்….

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 10,312 
 

“ சபேசன் சார் நீங்கதான் அப்பாவோட நெருங்கிய நண்பர், அப்பா ஏதாவது உங்க கிட்ட சொல்லியிருக்காரா அது விஷயமா பேசனும் நீங்க நாளைக்கு வீட்டுக்கு வர்றிங்களா?” மணிமாறன் போனில் அழைத்திருந்தான்.

என் நண்பன் போன பிறகு அந்த வீட்டிற்கு போய் ஆறு மாதமாயிற்று.

நடேசன் இழப்பு ஒரு கண்ணை இழந்தது போல்தான் இருக்கிறது. அவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் அடக்க முடியாமல் துக்கம் பீறிட்டு குலுங்கி குலுங்கி அழுது விடுகிறேன். என் மனைவி வடிவு புலம்புவாள்..” ஆமா அவங்க பிள்ளைங்க கூட இப்படி நினைக்கிறாங்களோ இல்லையோ நீங்க எதுக்கு சும்மா மனசை போட்டு வருத்திக்கிட்டு ..?”

முப்பத்தி ஐந்து வருட நட்பு. அப்போது நான் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியிலிருந்தேன். திருமணமாகி குழந்தை பிறந்து விட்டிருந்த நிலையில் புரமோஷனுக்காக முதுகலை தமிழ் படிக்க தொடங்கினேன். இலக்கண நூல்களை தேடி கொண்டிருந்த போது நூலகர் சொல்லித்தான் நடேசனை தெரியும். “ ஸார் இந்த லைப்ரரியில் இல்லாதது கூட நடேசன் சார் வீட்ல கிடைக்கும்.. கேட்டால் கொடுப்பார் ஆனால் பத்திரமா கொடுத்திரனும்”

நடேசன் வீட்டிற்கு சென்றதும் முதல் முறை பார்ப்பது போல் நினைக்காமல் பழகியது போல் அன்புடன் பேசினார். அவர் ரயில்வேயில் கிளார்க்காக இருப்பதாக அறிமுகப்படுத்தி கொண்டார். அவருடன் பேசிய சில நிமிஷங்களிலேயே புரிந்து விட்டது அவர் மாபெரும் புத்தக ப்ரியர் என்று. அவரின் பெரிய அறையில் ஒரு மினி லைப்ரரி போலிருந்தது.. அத்தனை நேர்த்தியாக புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். ‘ஒவ்வொரு புத்தகங்களும் எனக்கு ஒவ்வொரு நண்பன் மாதிரி’.. என்றார்.

‘சார்.. நீங்க எவ்வளவு நாள் வேணா டைம் எடுத்துக்கங்க ஆனா புத்தகத்தை பத்திரமா திருப்பி கொடுத்திடுங்க.. ‘

அதற்கு பிறகு நான் அடிக்கடி எனக்கு தேவையான புத்தகம் எடுப்பதும், கொடுப்பதுமாய் போய் வந்து கொண்டிருந்தேன். அவர் பணிதான் இரயில்வே.. மற்றபடி ஒரு பேராசிரியருக்கு உரிய சிறந்த இலக்கிய புலமை பெற்றிருந்தார். நான் முனைவர் பட்டம் பெற்றதே அவர் வழிகாட்டுதலால்தான்.

நடேசன் வயதில் ஒன்றிரண்டு வருடங்கள் மூத்தவராக இருக்கலாம். எங்களுக்குள் நட்பு வளர்ந்து குடும்ப உறவாய் மாறியது. விடுமுறை நாட்களில் இலக்கிய கூட்டங்களுக்கு ஒன்றாகவே செல்வோம். வரும்போதெல்லாம் ஒரு புத்தகம் பிடித்து கொண்டு வந்து விடுவார்,
நடேசன் மனைவி திலகம் என்னிடம் சொல்லி சண்டையிடுவாள்,” ஏங்க நீங்களாவது அவருக்கு சொல்ல கூடாதா சம்பாதிக்கிறதுல பாதி பணத்துக்கு இப்படி புஸ்தகமாவே வாங்கி செலவழிச்சா நாளைக்கு இரண்டு பிள்ளைகளுக்கு என்ன சேர்த்து வைக்கிறது…?

“ விடுப்பா படிக்காதவ அவளுக்கு புத்தகத்தோட அருமை என்ன தெரியும்.. பணம்லாம் வரும் போவும்.. நான் அறிவை சேர்த்து வைக்கிறேன்.. “ பதிலுக்கு இப்படி என்னிடம் சொல்வார்.

புத்தகத்தினை பொக்கிஷமாக நினைத்துதான் திருமணங்களுக்கு கூட பரிசாக அளிப்பார். சிலர் என்னிடம் கிண்டல் பேசுவார்கள், ஆமா இந்த மனுஷன் ஆவுன்னா ஊவுன்னா… ஒரு பொஸ்தகத்தை தூக்கிட்டு வந்துடுவான்.. கஞ்சன்…”

“ நடேசா.. புத்தகத்தோட வேல்யூ தெரியாதவங்களுக்கெல்லாம் ஏன் அதை பரிசா கொடுத்து கஞ்சன் பட்டம் வாங்கிக்கிற..? அந்த காசுக்கு ஒரு ஜூஸ் செட்டோ காபி டபராவோ வாங்கி தந்துடறதுதானே..! நீ குடுக்கிற புக்கை எவனாவது பிரிச்சு பார்ப்பானாங்கறது கூட சந்தேகம்தான்…”

“ எப்படி வேணா சொல்லிகிடட்டும்.. நான் உயர்வா நினைக்கிற ஒண்ணைதான் என்னால பரிசா கொடுக்க முடியும்.. “ அதில் மட்டும் உறுதியாக இருப்பார்.

காலங்கள் ஓடியது அவர் பிள்ளைகள் வேலை வாய்ப்பு உத்தேசித்து படித்து நல்ல வேலையில் அமர்ந்தார்கள். இருவருக்கும் திருமணம் செய்து விட்டார். அவர் வீட்டு எல்லா விசேஷத்திற்கும் என்னைதான் முன்னிறுத்துவார். அதே போல் என் ஒரே மகன் திருமணத்தையும் அவர்தான் எடுத்து போட்டு கொண்டார். என் மகன் வெளி நாட்டில் செட்டில் ஆகிவிட்ட பிறகு எனக்கு நடேசனை விட்டால் வேறு பேச்சுத்துணை இல்லை.

“ நடேசன் இருக்காரா…?” வாசலில் அமந்திருக்கும் திலகத்திடம் கேட்டுக்கொண்டே நுழைவேன்.

“ ஆமா எங்க போயிட போறார்.. எதாவது புக்கை தூக்கிகிட்டு எழுதிகிட்டு இருப்பார்…”

முன்பெல்லாம் நான் வந்ததுமே திலகம் காபி எடுத்து கொண்டு வந்துவிடுவாள். இப்போதெல்லாம் அவர் குரல் கொடுத்த பிறகே இரண்டு மருமகள்களில் யாரவது ஒருத்தி முகத்தை தூக்கி வைத்து கொண்டு வந்து கொடுத்து விட்டு போவார்கள்.

“ சபேசா.. சின்னவனுக்கு கல்யாணம் பண்ணி இன்னொருத்தி வந்த பிறகு இரண்டு மருமகள்களுமே ஒத்து போக மாட்டேன்றாங்கப்பா.. அவ என்ன சொல்றது இவ என்ன செய்றதுண்ணு வீட்ல தினம் பிரச்சினை.. இந்த புத்தகங்கள் மட்டுமில்லைன்னா எனக்கு வேறு என்ன ஆறுதல்..?

“ ஏம்ப்பா ஒத்து போகாதவங்களை ஏன் வைச்சிருக்கிற? தனியா அனுப்பிடு.. “

“ அவங்களா விருப்பபட்டா போகட்டும்.. நானா சொல்லி அனுப்ப மாட்டேன்…”

பிள்ளைகள் இருவரும் தனி கணக்கு போட்டார்கள். அப்பாவுடன் சேர்ந்து இருக்கும் போது செலவு அவருடையதாகிவிடும். தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அப்படியே சேமிக்க வசதி என்று.

“ சபேசா ‘ வாழ்வியல் முறைகள் ‘.. ன்னு எழுதி தொகுத்து வச்சிருக்கேன். புரூப் எல்லாம் ரெடி… குறிஞ்சி தமிழ் மன்றம் அவங்க சார்பா புத்தக வெளியீட்டு செலவை ஏத்துக்கிறேன்னாங்க…”

குறிஞ்சி தமிழ் மன்றதுக்கு பெரும்பாலான பொறுப்புகளை இவர்தான் பார்த்துக் கொள்வார். ஆனால் பெயர் மட்டும் வேறு யாராவது சம்பாதித்து கொள்வார்கள். நான் எத்தனையோ முறை திட்டுவேன், “ நீ நிறைய உழைக்கிற ஆனா புகழை வாங்கிக்கிறது எவனோ..” என்று.

“ அட போப்பா.. நான் புகழுக்கா இத செஞ்சிட்டிருக்கேன்..? தமிழுக்கு நான் செய்ற தொண்டாதான் நினைக்கிறேன்..”

“ ஆமா.. நீ செய்யும் தொண்டிற்கு அவர்கள் இதை செய்வது ஒன்றும் பெரிசு இல்ல.. அவனவன் விஷயமே இல்லாமல் பதவியை வைத்து நாலு பேரை பிடித்து புத்தகத்தை வெளியீட்டு விடுகிறான்.. வாழ்க்கையே தொண்டா நினைக்கிற உன்னை மாதிரி ஆளுகளை அடையாளப்படுத்த வேணாமா..?”

எதிர் பாராத எதாவது ஒன்று நடந்துதான் விடுகிறது. நடேசன் அன்று வழக்கத்தை விட மிகவும் சோர்வாக இருந்தார்.. “ ஏம்ப்பா ஆஸ்பிட்டலுக்காவது போகலாமா..? ரிடையர்டு ஆயிட்டமா கொஞ்சம் ஓய்வா உடம்பை பார்த்துக்காம இப்படி ஊர் வேலை எல்லாம் பறந்து பறந்து செய்து உன் உடம்பை கெடுத்துக்கற….”

“ சபேசா.. நாம கீழ விழறவரைக்கும் மத்தவங்களை தூக்கி விட்டுகிட்டே இருக்கிறதுதான் வாழ்க்கை… என்னை பத்தி கவலைப்படாத எனக்கு ஒண்ணுமில்லை…”

அரை மனதோடுதான் அன்று வீடு திரும்பினேன். மறு நாள் இடியாய் அந்த செய்தி வருமென்று எதிர்பார்க்கவில்லை. திலகம் விடியற்காலையில் பதட்டமாய் போன் பண்ணினாள் “ அண்ணா என்ன ஆச்சுன்னு தெரியலை எழுந்தவர் கீழே விழுந்திட்டார்… பேச்சு.. மூச்சு இல்ல.. உடனே ஹாஸ்பிட்டல் வந்திடுங்க..”

ஹாஸ்பிட்டலை சென்றடையும் போது அவர் போய்விட்ட செய்திதான் கேட்க முடிந்தது. பொது இடம் என்பதை மறந்து என் நண்பனை பிடித்து கதறினேன். இனி யாரிடம் கம்பனையும், வள்ளுவனையும் பற்றி பேசப் போகிறேன்…

நடக்க வேண்டியது எல்லாம் முடிந்து விட்ட பிறகு அவரவர் வேலையை பார்த்து கொண்டு போய் விட்டார்கள்.

மணி மாறன் அழைத்திருந்தது சொத்து விஷயங்கள் பற்றிதான், “ சபேசன் சார்.. என்ன இருந்தாலும் அப்பாவுக்கு நீங்கதான் கூட பிறந்தவர் மாதிரி.. உங்களை வச்சி பேசி முடிச்சிட்டா அவங்கவங்க பிழைப்பை பார்த்துக்குவோம்…” அதுவரை தாக்கு பிடித்தவர்கள் தனியாக பிரித்து கொள்வதிலேயே இருந்தார்கள்.

இப்போது இருக்கும் வீடும் நிலமும் மணிமாறனுக்கும், மேற்கு பக்கம் இருக்கிற வீடும், காலி மனையும் தமிழ்மாறனுக்கும் என்று முடிவானது. மிச்சம் இருப்பது திலகம்தான்,

“ ஸார் அம்மா என் வீட்ல ஆறுமாசமும், தம்பி வீட்ல ஆறு மாசமும் இருந்துகிடட்டும்…”

பணத்தை பங்கு போடுவது போல் கடமையை கூட பங்கு போட்டுக் கொண்டார்கள். திலகம் அதை பற்றி கவலைப்படுவதாயில்லை… நடேசன் அத்தனை மன பக்குவத்தை திலகத்திற்கு உருவாக்கியிருந்தார்.

கிளம்பும் போது நடேசன் அறைக்கு சென்றேன், கதவை திறந்ததும் யாரும் அந்த அறைக்கு வருவதேயில்லை என்பது அங்கிருந்த புழுதியும், ஒட்டடையும் சொன்னது. அவர் பார்த்து பார்த்து அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் முழுதும் தூசி நிரம்பியிருந்தது.

“ சபேசா.. என் காலம் இருக்கறதுக்குள்ள இந்த புத்தகங்கள் முழுதும் வாசிச்சி முடிச்சிடனும்தான் நினைக்கிறேன்.. எனக்கப்புறம் இத எடுத்து பார்க்க கூட ஆள் இருக்காது.. என்னால முடியாத கட்டம் வரும் போது இதை எல்லாம் லைப்ரரிக்கு குடுத்திட போறேன்.. தேவைப்படற யாருக்காவது உதவுமில்ல…”

நடேசன் எதிரில் உட்கார்ந்திருப்பது போலவே இருந்தது. அமைதியாய் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து உள்ளுக்குள் கலங்கினேன்.

“ சார் குப்பை மாதிரி இவ்வளவு சேர்த்து வச்சிருக்கார்.. இதை எல்லாம் என்ன பண்றது….” மணி மாறன் கேட்டதும் மனம் கொதித்தது,

“ மாறா.. அவர் நினைவு நாள் வர்றவரைக்குமாவது இங்கு இருக்கட்டுமே… அதுக்கப்பறம் அவர் விருப்பபடி நான் லைப்ரரிக்கு அனுப்பிடறேன்…”

கண்ணீர் மல்க ஒரு துணி எடுத்து புத்தகங்களை துடைக்கிறேன்.. கடைசியாக அவர் வெளியிட இருந்த ‘ வாழ்வியல் நெறிகள்’ புத்தகம் புரூப் டேபிளில் இருந்தது. குறிஞ்சி இலக்கிய மன்றத்துக்காக அவர் எவ்வளவோ செய்திருந்தாலும், இல்லாத போது மறந்து விடுகிறார்கள்.. புத்தகம் வெளியிடுவதை பற்றி இரண்டொரு முறை கேட்டும் பதில் எதுவும் இல்லை. என் நண்பனுக்காக நானே அதை வெளியிடுவது என்ற முடிவுடன்,

“ மாறா உங்கப்பா கடைசியா சம்பாதிச்ச சொத்து இதை நான் எடுத்துக்கிறேன்…” புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு புறப்படும் போது, இன்னொரு முறை அந்த அறையை திரும்பி பார்க்கிறேன். நடேசன் அறை முழுதும் புத்தகங்களாய்…!

– தங்க மங்கை இதழில் வெளிவந்துள்ளது(செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

2 thoughts on “நண்பன் என்றொரு புத்தகம்….

  1. மிகவும் நல்ல கதை! புத்தகங்களை போன்ற உற்ற நண்பர்கள் எந்த ஒரு மனிதனுக்கும் கிடைக்கவே மாட்டார்கள்..அதை புரிந்து கொண்டவர்கள் இன்றைய உலகில் ஒரு சிலரே!

    தேவவிரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *