கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 7,496 
 

எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது ‘நியூ வேவ்’ பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று அவரைச் சந்திப்பதற்காக புறப்பட்டிருந்தது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். நேற்றுக்கூட வானொலியில் திருவின் ‘பழைய பானைக்குள் புதிய கள்ளு’ என்ற இசையும் கதையும் ஒலிபரப்பாகியிருந்தது. காதல் சுவை சொட்டும் கள்ளு சாந்தியைக் கவர்ந்திருந்தது. அவள் திருவின் படைப்புகளை ஆய்வு செய்து கலைத்துறையில் பட்டம் பெற இருக்கின்றாள். அவளை ஆய்வு செய்வதற்காக மற்றைய நால்வரும்.

ஐந்து பெண்களும் சைக்கிளில் சவாரி செய்து ‘சடின் பிறேக்’ போட்டு திருவின் வீட்டிற்கு முன்னால் புழுதி கிழப்பினார்கள். புழுதி அடங்குமுன் நாய்களின் ஆரவாரம் தொடங்கியது. படலை திறந்து கிடந்தபடியால் உள்ளே புகுந்தார்கள். உள்ளேயிருந்து ஒரு நாய் ஓடிவந்தது. மாமரத்திற்குக் கீழே இருந்த ஒருவன் ‘றெக்ஸ் றெக்ஸ்’ என்று அதைக் கூப்பிட்டான். அவர்கள் சைக்கிளையும் தள்ளிக் கொண்டு மாமரத்திற்குக் கிட்டப் போனார்கள். முற்றத்தில் புளுக்கொடியல், மிளகாய் வத்தல், ஊறுகாய் என்பன காய்ந்து கொண்டிருந்தன. மாமரத்திற்குக் கீழே மரக்குற்றி ஒன்றின்மீது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் அவற்றிற்கு காவலாக அமர்ந்திருந்தான். பக்கத்திலே கொஞ்சம் குறுணிக்கற்கள். அவன் அந்தப் பெண்களை நிமிர்ந்து பார்த்தான். பரட்டைத்தலை. ‘சேவ்’ செய்யப்படாத முகம். கிழிந்து தொங்கும் சட்டை. பாக்கு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான்.

“நாங்கள் றைற்ரர் திருவை மீற் பண்ணவேணும்.”

சத்தமில்லை. மீண்டும் கொஞ்சம் இறுக்கமான தொனியில் ஒருத்தி கேட்டாள்.

அவன் தனது வலது கையின் இரண்டு விரல்களையும் ‘வி’ போல விரித்து உதட்டருகே வைத்து அதனுடாகத் துப்பினான். ‘சளக்’ என்று மென்று கொண்டிருந்த பாக்கு வெற்றிலைக் கவளம் வெளியே வந்து விழுந்தது. காற்று அதில் கொஞ்சத்தைக் கவர்ந்து இவர்கள் மேலும் தெளித்தது.

“என்ன விஷயம்?”

“பேட்டி ஒண்டு எடுக்க வேணும்.”

“அவர் லைபிறரிப் பக்கம் போயிட்டார். இன்னும் ஒரு அரைமணி நேரம் கழிச்சு வாங்கோ.”

மீண்டும் ‘சளக்’. துப்பினான்.

“ஏய் டீசென்ரா பிஹேவ் பண்ணும். இதிலை நிக்கிற சாந்தி ஆரெண்டு தெரியுதா? சாந்தி, றைற்ரருக்கு வேண்டிய ஆள்”

“அவர் வந்தா நாங்கள் வந்ததாகச் சொல்லுங்கோ.”

“வேலைக்காரனுக்கு இருக்கிற நடப்பைப் பாரன். எடியேய் உந்த லூசோடை என்ன கதை. நாங்கள் போயிட்டு ஹாவ் அன் அவரிலை வருவம்.”

எல்லோரும் போவதற்கு தயாரானார்கள்.

“ஒரு நிமிஷம் பொறுங்கள்” என்றான் அவன். தன்னுடைய வீட்டை நோக்கி ‘திலகா திலகா’ என்று கூப்பிட்டான். சற்று நேரத்தில் வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள்.

“திலகா நீர் ஏதாவது அலுவலா இருக்கிறீரா?”

“ஒண்டுமில்லை. ஏன்?”

“இதிலை கொஞ்ச நேரம் இதுகளுக்குக் காவல் இரும். நான் இவையளுக்கு ஒரு பேட்டி குடுத்துவிட்டு வாறன்.”

எல்லோருடைய முகத்திலும் அதிர்ச்சி. அவன் மெல்ல மரத்தைப் பிடித்துக் கொண்டு எழும்பி நின்றான். பின் கால்களை எத்தி எத்தி தனது வீட்டை நோக்கி நடந்தான்.

“வாருங்கள். வீட்டிற்குள்ளிருந்து நாங்கள் பேசுவம்.”

சாந்தி அவனது நடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகையாக வந்தது. அவளால் எதையுமே நம்ப முடியவில்லை.

– ஏப்ரல் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *