கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 4,701 
 

அது ரொம்பத் தாட்டிக்கமான கொக்கு. சுபாவத்தை மீறிய தாட்டிக் கம். பெரிய சிறகு. காதுக்கு மேல் பின்வாக்கில் கோதிவிட்ட தூவிகள், வினார் வீசிய புருவம். கால் திரட்சி. ஏக வெள்ளையாக அது நடக்கும் தோரணையே தனி.

ஊருணி கிடங்கு, கண்மாய், வாய்க் கால், ஏரி, கால்வாய், ஆறு, அணைக் கட்டு… என்று மீன் துள்ளும் சகல நீர்நிலைகளிலும் அதைப் பார்க்க லாம். மற்ற கொக்குகளைப் போல் ‘எஞ்செவனே’ என்று ஒற்றைக் காலில் வயணம் காக்காமல் ஓடியாடி இரை தேடும். தேடி வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.

கழுகு, காக்காய் எந்தப் பட்சியா னாலும் அது பயப்படுவதில்லை . சிறகுக்குச் சிறகு அவருக்கு அலகு என்று சரி சண்டை போடும். தலையை ஒரு சிலுப்புச் சிலுப்பி கரகரப்பான குரலில் கதையை எடுத்து விட்டால் எதுவும் கிட்ட அண்ட முடியாது.

வேடிக்கை பார்த்த பட்சிகள் ஆச் சரியத்தில் முணுமுணுத்துக் கொண்டு போகும்.

“சொந்தக் காரியத்துக்குத்தான் தொண்டத் தண்ணி வத்தக் கத்துதாக் கும்னு நெனச்சென். காசு பெறாத சங்கதிக்குப் போயி மாங்கு மாங்குனு மல்லுக் கெட்றதப் பாரு. கூத்துத் தான்.”

“தட்டிக் கேக்கிறதுக்கு இப்படி யும் ரெண்டு வேணுமில்ல.”

“இருந்தாலும் இதுக்கு இம்புட் டுத் தோரிணி ஆகாது. நாலு மீன விழுங்குனமா கூடு வந்து அடஞ் சமான்னு இருக்கிறத வுட்டுட்டு..”

சிறுபிராயத்திலிருந்து அதுக்கு மல்லுக்கட்டியே பழக்கம். வயசு ஆக ஆக அதன் வீரியம் கூடியது. வேடிக்கை என்னவென்றால் அப்போதுதான் அதுக்குச் சேக்காளிகள் அதிகமாயின.

ரெம்ப காலம் அது நாடகத் தோப் பில் தங்கியிருந்தது. அங்கே நிறை யப் பட்சிகளுடன் பழக்கம் ஏற்பட் டது. உடம்பைக் கிண்டிக் கொண்டு பாடுபழமை பேசும் வாத்துக்கள். பறக்கும்போதே பாடும் பலவர்ணக் கிளிகள். அங்குமிங்கும் தோரணை யாக லாந்தும் நாரைகள். இப்படி பலரகம்.

அங்கே அதன் மனசுக்குப் பசிய டங்கவில்லை. சினிமாத் தோப்புக்கு வந்து கொஞ்ச நாள் இருந்தது. ஆனா லும் பழைய தோப்பை மறக்க வில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் போய் வரும்.

புதுத்தோப்பு வித்தியாசமாக இருத் தது, பட்சிகளின் உண்மையான குர லைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ராத்திரி முழுக்க அதைச் சுற்றிக் கும் மாளமிட்டவற்றை விடிந்ததும் காண வில்லை. நல்ல துணையில்லாமல் அதுக்குள் ஒரு தலிப்பு.

எதையாவது உருப்படியாகச் செய் யணும் என்ற வெறி அதைப் பாடாய்ப் படுத்தியது. இலக்கியக் காட்டுப் பக்கம் வந்து சுற்றிப் பார்த்தது. ஒரு இடம் மழை தண்ணீரில்லாமல் பொட்டலாகக் கிடந்தது. அதுக்கென் நால் வருத்தமான வருத்தம். அங்கே ஒரு தோப்பு கண்டிப்பாகத் தேவை யென்று பட்டது.

நல்ல தரையாகப் பார்த்து கிணறு தோண்டியது. கொஞ்ச ஆழத்திலேயே ஊற்றுக்கண் திறந்து நீர் பெருகி கிணற்றை மோதிப் புரண்டது. அதைத் தேக்கி வைக்க ஒரு குளம் வெட்டி யது. குளத்தைச் சுற்றிப் புதுசாக ஒரு பத்திரிகைத் தோப்பு உண்டு பண்ணி யது. தண்ணீர் பஞ்சம் இல்லாததால் அதை வளர்ப்பதில் கஷ்டமிருக்க வில்லை .

தோப்பில் விதவிதமான செடி யென்ன கொடியென்ன… மரவகை யில் கருவலை முதல் தேக்கு தோத கத்தி வரை எல்லாம் இருந்தது. இன்னதுதான் என்றில்லாமல், பல விதமான பட்சிகள் அங்கே வந்து குடியிருக்க ஆரம்பித்தன. கடை விரித் துப் படங்காட்டுவதற்காக தோகைக் கொத்தைச் சுமந்து திரியும் மயில்கள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் குடுமி வாலை வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டி அலட்டும் சித்துள்ளான்கள். கோலிக் கண்களை உருட்டி மிரட் டும் ஆந்தை, தலைகீழாகத் தொங் கும் வௌவால்கள். சிமிட்டிக் குதிக் கும் சிட்டுக் குருவிகள், ஒண்ணரைக் கண்பார்வையில் உலகத்தை அளக்கும் காக்காய்கள். நாடு தாண்டிப் போய் எதையாவது விழுங்கி விட்டு வந்து செமிக்காமல் நடக்கத் தள்ளாடும் கூழைக் கிடாக்கள். சட்டியடிப்ப தையே தொழிலாகக் கொண்ட நாணவந்தான். அடேயப்பா தோப் பில் கலகலப்புக்குக் கேட்கணுமா! சண்டை …. சச்சரவு… சந்தோஷம்… எல்லாவற்றிலும் அந்தக் கொக்கும் கலந்து கொண்டது. உக்கிரமான சம யங்களில் அதன் கத்தல் ஓங்கிக் கேட்கும்.

கொக்கு தோப்பைப் பசுமையாக வைத்துக் கொள்வதற்கு அரும்பாடு பட்டது. மூனு தோப்புப் பட்சிகளையும் கூட்டி வந்து விவகாரங்களைப் பேசவைத்தது. வயசானதென்று எதை யும் ஒதுக்குவதில்லை . நல்ல சமாச் சாரங்கள் எந்தப் பட்சியிடம் இருந்தா லும் அதைத் தேடிப் போய்க் கூட்டி வந்து தோப்பில் இடங்கொடுத்தது.

இப்படித்தான் அதுக்கும் ஒரு காணாங்கோழிக்கும் பழக்கம் ஏற்பட் டது. கோழி தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அமைதியாக இருக்கும். எப்படியோ ரெண்டுக்கும் பிடித்துப் போயிற்று. ஒண்ணை யொண்ணு மதித்துப் பழகியதால் பல சமாச்சாரங்களில் அதுகளுக்கிடை யில் ஒரு அன்னியோன்னியம் வளர்ந் தது. கொக்கு, கோழிக்கும் தோப்பில் இடங்கொடுத்தது.

ரெண்டும் அடிக்கடி சந்திப்ப தில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேசிக் கொள்வதுண்டு. சில சமயம் அதனதன் இடத்தில் இருந்த படியே குரலால் விசாரித்துக் கொள் ளும். |

ஒருநாள் வருத்தமான சேதி வந் தது. கொக்குக்குத் தீராத நோய் வந்து பறக்க முடியாமல் படுத்துக் கிடப்ப தாக ஒரு மைனா சொன்னது. கோழிக்கு வேதனை சொல்ல முடியாது. கொக்கு படுத்துக் கிடக்கும் கோலத்தை மன சுக்குள் போட்டுப் பார்த்து வெதும்பி யது. பழைய தோரணை ஆழப் பதிந் திருந்ததால் படுத்துக் கிடப்பதைப் பார்க்க விரும்பவில்லை. கொக்குக்கு நன்றாகத் தெரியும், கூடிய விரைவில் தன் கதை முடிந்து விடுமென்று. ஆனால் அதன் பேச்சில் அந்தக் கவலை கொஞ்சங்கூட இருப் பதாகத் தெரியவில்லை . வழக்கம் போல் திடமான குரலில் பேசியது. அதன் கவலையெல்லாம் தோப்பைப் பற்றித்தான். படுத்துக் கொண்டே அது தோப்பைக் கவனித்த விதத்தை நினைத்தால் மலைப்பாக இருந்தது.

அன்று விடியற்காலம் வேப்ப மரத்திலிருந்து கரிக்குருவி கூவியது.

“கொக்கு செத்துப் போச்சு. கொக்கு செத்துப் போச்சு.”

கோழிக்கு சிறகால் மார்பிலடித்து அழணும் போலிருந்தது. கொக்கின் வைராக்கியம் நினைவுக்கு வரவே சிரமப்பட்டு அடக்கிக் கொண்டது. தெம்பாகவே போய்ப் பார்க்கணு மென்று முடிவு செய்து கிளம்பியது. கொக்கின் கூட்டுக்கு முன்னால் ரெம்பப் பட்சிகள் கூடியிருந்தன. மூணு தோப்பிலிருந்தும் வந்திருந் தன, ஒரு முகத்தில் கூட களையில்லை. பழைய கலகலப்பில்லை . துக்கத்தில் முணுமுணுத்துக் கொண்டன. ஒரு மாடப்புறாவின் கனத்த முனக்கம் நெஞ்சை அறுத்தது. சித்துள்ளாறுக்கு வால் இருந்த இடம் தெரியவில்லை.

கொக்குக் குஞ்சு நோஞ்ச குரலில் என்னென்னமோ சொல்லிப் புலம் பிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து மற்றப் பட்சிகள் கண்களைத் துடைத் துக் கொண்டன. கோழி மட்டும் இன் லும் இறுக்கமாக இருந்தது. எங்கே தமர்ந்து விடுவோமோ என்று அதுக் குள் ஒரு பயம். மற்ற பட்சிகளுடன் பேசி அதை மறைக்க முயன்றது.

வெள்ளை போர்த்தி கொக்கு அமைதியாகக் கால் நீட்டிப் படுத் திருந்தது. வாடிக் கவுத்துவிட்ட புருவ விளார்கள், துவண்டு போன காதோ ரத் தூவிகள். அந்த வயணத்திலும் அதன் கம்பீரம் குறையவில்லை. அதைத் தூக்கிக் கொண்டு போகும் போது கொக்குக் குஞ்சின் கூப்பாடு விட்டு விட்டுக் கேட்டது.

கொக்கின் பயணம் பக்கத்திலுள்ள தோப்பில் முடிந்தது. மரங்களும், செடிகளும் அடர்ந்த அந்தத் தோப்பு வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருந் தது. கூட வந்த பட்சிகள் ஆங்காங்கே நிழலில் உட்கார்ந்தன.

கொக்கை எரிக்கும் போதுகூட கோழி திடமாக இருந்தது. கடைசி வரை சாவைத் துச்சமாக மதித்த கொக்கின் வைராக்கியம் அதுக்குள் மேலோங்கியிருந்தது.

எல்லாக் காரியங்களும் முடிந்து திரும்பும் போது ஒரு பனங்காடை வருத்தமாகச் சொன்னது.

“இது வனத்த தோப்ப எரிச்சு அழிக்கப் போறாங்களாம்.” கூட வந்த கொண்டைக் குருவி ‘உச்’ கொட்டியது.

“அடடா… எப்பேர்ப்பட்ட தோப்பு: இனிமே நம்ம எங்க போயி அடையிறது?”

கோழியின் நெஞ்சை ஒருவித சோகம் கவ்வியது. நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்தது. கொக்கு அமைதி யாக எரிந்து கொண்டிருந்தது. தெருப் பிலிருந்து கிளம்பிய புகை மரங்களைத் தாண்டி வானவெளியில் மிதக்கத் தொடங்கியிருந்தது. அதற்கு முன் னால் கால் நீட்டி கழுத்து நீட்டி வெள்ளைச் சிறகசைத்து கொக்கு எங்கோ பறந்து போகிறது. இரைக் காக நீர்நிலை தேடிப் போகும். இல்லை பொதுக்காரியத்துக்காக சண் டையிடப் போகும்…

கோழிக்குத் தெம்பும் வைராக்கிய மும் உருகி கண்களில் குளங்கட்டின. உள்பட்டையால் நீரை உதிர்த்துக் கொண்டே அது தோப்பை விட்டு வெளியேறியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *