தேடிக்கொண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 11,267 
 

நாலு பக்கமும் இருட்டு.. ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் தனியாக ஒரு உருவம் நடந்து கொண்டிருந்தது…இன்னும் எவ்வளவு தூரமோ… மனித மனதின் விசித்திரத்தை எண்ணிக்கொண்டு… அதைப் புரிந்துகொள்ளும் வழி எங்கே என்று தேடிக் கொண்டு……

***

மன்னார்குடியிலிருந்து பஸ் கிளம்பியபோதே இரவு 10.30க்கு மேல் தாண்டியிருந்தது. திருவாரூர் போக ஒரு மணி நேரம் நிச்சயம் பிடிக்கும். அப்புறம் அங்கிருந்து கீவளுரில் இருக்கும் நண்பன் வீட்டுக்குப் போக இன்னும் நேரமாகும். சரிதான். இந்த கொஞ்ச தூரத்துப் பயணமே முழு இரவையும் எடுத்துக் கொண்டு விடும் என்று நினைத்தபடி ஜன்னல் கம்பியின் மீது சாய்ந்து கொண்டான் முரளி.

அவனுக்கு முன் சீட்டில் இருந்து கருகருவென்ற தலைமுடியுடன் ஒரு சின்ன முகம் எட்டிப் பார்த்தது. “எங்கே துள்ளுற?” என்றபடி அந்தக் குழந்தையின் தாய் அதை மடியில் சரித்துக் கொண்டாள். நாலு மாதம் இருக்கலாம். ஏழைக் குழந்தையானாலும் களையாக இருந்தது. குளிருக்கு அடக்கமாக அழுக்குத் துணிக்குள் சுருட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது.

“திருவாரூர் ஒண்ணு” என்று டிக்கட் வாங்கிக் கொண்டான்.

“லக்ஷ்மாங்குடி, கமலாபுரம் மட்டும்தான் நிக்கும். இது எக்ஸ்பிரஸ் வண்டி” என்று அறிக்கை விட்டபடி கண்டக்டர் நகர முன்சீட் பெண் கமலாபுரத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டாள். உடையிலும், முகத்திலும் ஏழ்மை தாண்டவமாடும் அவளை கண்டக்டர் பார்த்த விதத்தில் ஏளனம் தெரிந்தது.

“நல்லா தள்ளி ஒக்காரு… அழுக்கு மூட்டையைத் தூக்கி காலுக்கு கீழே வச்சுக்க..பக்கத்து சீட்டுலயும் ஆளுங்க உக்காரணும். தெரியுமில்ல” என்று கடூரமாகச் சொன்னபடி நகர்ந்தார். அந்தப் பெண் பதில் பேசாமல் ஓரமாக ஒடுக்கிக் கொண்டு குழந்தையின் கால்களையும் மடக்கி விட்டுக் கொண்டாள்.

முரளிக்கு கஷ்டமாக இருந்தது. காசு கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு பயணம் செய்யும்போது ஏழை, பணக்காரன் வித்தியாசம் எங்கே வந்தது. எதற்காக கண்டக்டர் அவளை இப்படி மரியாதை இல்லாமல் நடத்துகிறார் என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். என்ன செய்வது? நம்மைப் போன்ற மத்தியதர வர்க்கத்துக்கு மனதுக்குள்ளே கேள்வி கேட்பது ஒன்றுதான் தெரியும்.

பஸ் வேகமாக பாமணியாற்றைக் கடந்து வளைந்து வளைந்து இருளில் முன்னேற ஆரம்பித்தது.

அரைகுறை தூக்கத்தில் கமலாபுரம் கடைத்தெரு தாண்டியது முரளியின் கண்களில் பட்டது. ஐந்து நிமிடம் கழித்து எதிரில் வந்த லாரிக்காக டிரைவர் போட்ட பிரேக் ஒன்றில் கம்பியில் முட்டிக் கொண்டு கண்விழித்தபோது முன் சீட்டில் குழந்தையின் முகம் தெரிந்தது.

கமலாபுரம் போய் விட்டதே.. இந்தப் பெண் இறங்காமல் என்ன செய்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே அவள் வேகமாக எழுந்து “கண்டக்டர் ஐயா… கொஞ்சம் தயவு பண்ணுங்க.. நான் தூங்கிட்டேன்.. கமலாபுரம் இறங்கணும்” என்றாள்.

“ஹோல்டாய்ய்ய்ய்ன்ன்ன்ன்….” என்றபடி அனல் பறக்கும் கண்களுடன் வந்த கண்டக்டர் “இறங்கும்மா.. ராத்திரி வேளையிலே எங்க கழுத்த அறுக்கணும்னு வந்து சேந்தீங்களா..இறங்கி போயிரு” என்று கத்த, அவள் குழந்தையையும், மூட்டையையும் தூக்கிக் கொண்டு இறங்கினாள்.

ஜன்னல் வழியே பார்த்த முரளிக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயலும், இருட்டும்தான் தெரிந்தன. மனதுக்குள் ஏதோ வலித்தது. என்ன மனிதர்கள் இவர்கள்.. ? இரக்கம் என்பது இல்லாமலேயே போய் விட்டதா? ஒரு பெண்ணையும் குழந்தையையும் நெடுஞ்சாலையில் இருளில் தனியாக இறக்கி விட்டு விட்டுப் போக எப்படி மனம் வருகிறது..?

முரளி யோசிக்கும் முன் பஸ் கிளம்ப அவன் சட்டென்று முடிவெடுத்தான்.

“கண்டக்டர்,, பஸ்ஸை நிறுத்துங்க” என்றான்.

“என்ன சார் ?” என்று வந்த கண்டக்டரை முறைத்தபடி வேகமாக இறங்கிக் கொண்டான்.

“சரியான கிறுக்கன் போல..” என்ற குரலுடன் பஸ் கிளம்பிப் போக அதன் பின் சிவப்பு விளக்கு புள்ளிக்களாக மறைந்தது.

இருட்டில் நாலு புறமும் துழாவிப் பார்க்க அந்தப் பெண் சாலை ஓரமாக மூட்டையை இறுக்கி கட்டிக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தது தெரிந்தது.

“கொஞ்சம் நில்லும்மா..” என்றபடி முரளி போனான்.

“என்னங்கையா… இந்த வனாந்தரத்திலே இறங்கி இருக்கீங்க.. எங்கே போகணும்?” என்றபடி அந்தப் பெண் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“கொஞ்சம் கூட இரக்கமில்லாத மனுஷன்மா அந்த கண்டக்டர்.. உன்னை இப்படி நடுத் தெருவில் விட்டுவிட்டு போயிட்டானே..”என்ற முரளி

“நீ கமலாபுரம் தானே போகிறாய். அது அஞ்சாறு கிலோ மீட்டர் இருக்கும். தனியா எப்படிம்மா போவாய். அதுதான் நான் இறங்கி வந்தேன். வா.. உன்னை விட்டுவிட்டு அடுத்து ஏதாவது பஸ் வந்தா நான் போறேன்” என்றான்

“அடக் கடவுளே.. இதுக்காகவா இறங்கினீங்க.. ஐயோ… அந்த கண்டக்டர் எனக்கு சொந்தக்காரர்தானுங்க.. இது முன்னாலேயே பேசி வச்சுகிட்ட விஷயந்தானுங்க. இந்த பஸ் எக்ஸ்பிரஸ் என்பதால இங்க எல்லாம் நிறுத்த மாட்டாங்க. அதனால கமலாபுரம் தாண்டியதும் நான் தூங்கி முழிச்சாப்போல எழுந்து பேசுவேன். அவரு வண்டியை நிறுத்தச் சொல்லி¢ என்ன இறக்கி விடுவாரு. இதோ திருப்பத்திலதாங்க என் வீடு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு மனிதன் அவளை நெருங்கி வந்தான்.

“இதோ என் வீட்டுக்காரரும் வந்துட்டாரு…. அட சாமி.. நீங்க கமலாபுரம் போனாத்தான் அடுத்த பஸ் கிடைக்கும். இங்கே வேற யாரும் நிறுத்தவும் மாட்டாங்க.. என்னங்க இப்படி அசட்டுத்தனம் பண்ணிட்டீங்க.. சரி சரி.. பொழுதோட நடையைக் கட்டுங்க” என்று அவர்கள் நகர்ந்தனர்.

நாலு பக்கமும் இருட்டு.. ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் தனியாக ஒரு உருவம் நடந்து கொண்டிருந்தது…இன்னும் எவ்வளவு தூரமோ… மனித மனதின் விசித்திரத்தை எண்ணிக்கொண்டு… அதைப் புரிந்துகொள்ளும் வழி எங்கே என்று தேடிக் கொண்டு……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *