கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 11,842 
 

தூமகேது பகுதி ஒன்று.

கார்த்திகை மாதத்தின் நிலவற்ற இரவு. ஜன்னலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று இந்திராணியின் உறக்கத்தைக் கலைக்க போதுமானதாக இருந்தது. அரைத்தூக்கத்தில் தனது படுக்கையைக் கையால் தடவிய இந்திராணி அருகில் தத்தா இல்லாததை உணர்ந்தாள். விடை அவள் அறிந்தது தான்.

‘’ ஹூம்… மீண்டும் அந்த மாயக்காரியுடன் கொஞ்சி விளையாட மொட்டை மாடிக்குப் போய்விட்டாரா..? போனவர் கதவைச்சாத்திக்கிட்டு போகனும்னு தோணலையே .. ‘’ அலுத்துக்கொண்டாள் இந்திராணி.

தன் கணவன் மேல் எரிச்சலான புகாரை அவள் வாய் சொன்னாலும் அவளது வாயோரம் எழுந்த புன்னகையை அடக்க இயலாமல் சிரிக்கவே செய்தாள். தன் கணவனது உடல் நலம் குறித்த அக்கறைதான் அவளை வருத்தமுறச்செய்தது.

’’ டாக்டர் எத்தனை முறை சொன்னார்..? குளிர் ஒத்துக்காது இவருக்குன்னு..ஹூம் .. அப்படி என்ன திவ்யாவை கொஞ்சாவிட்டால் என்ன குடிமுழுகியா போய்விடும்..? அட …போனது தான் போனார்… ஒரு ஸ்வெட்டராவது போட்டுக்கிட்டு போயிருக்கலாமே… இதோ சேர் மேல தானே கிடக்குது.. ஹூம்… அவருக்கு எப்படி இதெல்லாம் நினைவுல இருக்கும்… அந்த திவ்யா பிசாசு இருந்தாலே போதுமே..வேற ஒன்னும் தோணாதே .. ‘’

அலுத்துக்கொண்ட இந்திராணி தத்தாவின் ஸ்வெட்டரைக் கையில் எடுத்துக்கொண்டு தன்னை ஒரு சால்வையால் போர்த்திக்கொண்டு ,மொட்டை மாடிக்குச்சென்றாள். அவளுக்குத்தெரியும்… அவர் அந்த திவ்யா பேயுடன் மொட்டை மாடியில் கொஞ்சிக்கொண்டு இருப்பார் என்பது..

மொட்டைமாடியில் அவள் அனுமாணித்தது சரியானதாக இருந்தது.

தத்தா திவ்யாவுடன் ஒன்றிப்போய் அவள் கண்ணில் தன் கண்ணைப்பதித்து மெய்மறந்து இருந்தார்.

தத்தா அந்த டெலஸ்கோப்பை வாங்கும்போதே அவர் தன்னைமறந்து உற்சாகத்தில் விசிலடித்து அவளுக்கு திவ்ய கண்கள் என்று பெயரும் இட்டுவிட்டார்.

இந்திராணிக்கோ அந்த டெலஸ்கோப் இந்த வயதான காலத்தில் தன் கணவனை தன்னிடம் இருந்து பிரிக்க வந்து சேர்ந்த சக்களத்தியாகவே தெரிந்தது. எனவே இந்திராணி அந்த சக்களத்திக்கு திவ்யா என்ற பெயரையே சூட்டிவிட்டாள்.

தத்தாவின் வாழ்நாள் இலட்சியத்தை அடைய வந்து சேர்ந்த அற்புதமான தேவதையாக அந்த டெலஸ்கோப் பட்டது.

அமெச்சூர் வானியல் நிபுணரான அவருக்கு ஒரு நல்ல டெலஸ்கோப் வாங்குவதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்கான வசதியின்மையால் அவதிப்பட்ட அவர் தனது ரிடையர்மெண்ட்டில் கிடைத்த பெருந்தொகையைச் செலவளித்து அந்த எட்டு இஞ்ச் டெலஸ்கோப்பை வாங்கியே விட்டார்.

பிறகென்ன..? தினந்தோறும் இரவில் மொட்டைமாடியில் திவ்யாவின் கண்களில் தம் கண்களைப்பதித்து வானில் தோன்றும் வியப்புகளைக் கவனிப்பதுதான் தினசரி பணியாயிற்று.

மொட்டைமாடியில் அந்த டெலஸ்கோப்புக்காக பாதுகாப்பான கூரை அமைத்து பராமரித்து அதை அங்கே ஒரு கோயில் போல பாதுகாத்து வந்தார் தத்தா.

அவருடைய ஆசை வானில் தோன்றும் வால்நட்சத்திரத்தை முதன் முதலில் கண்டறிந்து உலகத்திற்கு சொல்லவேண்டும் என்பதும் அந்த வால் நட்சத்திரத்துக்கு தத்தா காமெட் என உலகம் முழுவதும் பெயர் சொல்லி வலம்வரவேண்டும் என்பதும் தான்.

வானியல் நிபுணர்கள் முதன் முதலில் கண்டறிந்து கூறும் வால்நட்சத்திரத்துக்கு கண்டறிந்தவர் பெயரை வைப்பது மரபு.

‘’ இந்தாங்க… இந்த ஸ்வெட்டரைப் போட்டுக்கோங்க.. இதே போல அலட்சியமா இருந்தா டாக்டர் நவீன்பாபுகிட்ட சொல்லி பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லச்சொல்லிடுவேன்.. ‘’ செல்லமாக மிரட்டிய இந்திராணி தன் கணவனின் லட்சியத்தை அறிவாள். அந்த லட்சியத்துக்கு தன்னால் இயன்ற உதவியையும் ஆதரவையும் செய்யத்தயங்குவதில்லை அவள்.

வானில் தினம் தினம் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். ஒரு நாள் இரவில் இருந்தது போல் அடுத்த நாள் இருப்பதில்லை. புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றிய வண்ணமே இருக்கும்.

ஆனால் தூமகேது என்னும் வால்நட்சத்திரம் நட்சத்திரஙகளைப்போல இல்லை. அவை சூரிய மண்டலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து சரேலென வானில் தோன்றக்கூடியவை. கிரகங்களைப்போலவே அவையும் சூரியனைச் சுற்றியே வருபவைதான். ஆனால் அதன் பயணப்பாதை ( ஆர்பிட்)மிகவும் விசாலமானது.

நெருப்புக்கோளமாக வரும் வால் நட்சத்திரம் சூரியனின் அருகாமையில் வரும்போது மிக நீளமான ஒளிவால் ஒன்று முளைத்துவிடும்.சூரிய ஒளியின் உதவியால் அது பிரகாசமானதாக ஒளிரும்.

பின்னர் இருளில் மறைந்து கண்காணாமல் போய்விடும். மீண்டும் பல ஆண்டுகள் சில சமயம் சில நூற்றாண்டுகள் கழித்தே மீண்டும் கண்களுக்குத்தெரியவரும்.

மிகப்பெரிய வானியல் ஆராய்ச்சியாளர்கள் பெரிய பெரிய சக்திவாய்ந்த டெலஸ்கோப்புகளை வைத்துக்கொண்டு ஆராய்கையில் இந்த அமெச்சூர் தத்தாவுக்கு தனது எட்டு இஞ்ச் டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு கண்டறியலாம் என்று நம்பிக்கை கொள்ளச்செய்தது எது..?

பலநேரங்களில் முழுநேர வானியல் நிபுணர்களால் கண்டறிய இயலாத வானின் அற்புதங்கள் தத்தா போன்ற அமெச்சூர் வான சாஸ்திரிகளால் கண்டறியப்பட்டுள்ளன என்பது தான் உண்மை.

அதிலும் தத்தா மிகவும் தன்னம்பிக்கை உடையவர். அவருக்கு தன் வாழ்நாளில் ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டறியும் வாய்ப்பு வருமென்றே திடமாக நம்பினார்.

ஆம் … அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை.

தூமகேது பகுதி இரண்டு.

அன்று இரவு எதுவோ நடக்கப் போகிறது என்னும் உள்ளுணர்வு தத்தாவுக்கு நிறைய இருந்தது.

என்னதான் வல்லுனர்கள் அதிநவீன உபகரணங்களுடன் இந்தத்துறையில் நாடோறும் உழைத்துவந்தாலும் அமெச்சூர் வானியலாளர்களே புதிய வால் நட்சத்திரங்களைக் கண்டறிவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஏனென்றால் ஆர்வத்தின் காரணமாய் துல்லியமான குறு மாற்றங்களைக்கூட விடாமல் கண்டறிய அமெச்சூரர்களாலேயே முடியும் என்பது வரலாறு தெரிவிக்கும் உண்மை.

பழைய நட்சத்திரங்கள் கிரகங்களின் கூட்டங்களின் பின்னணியில் புதிய மங்கலான ஒரு புதிய விண்பொருள் தெரிந்தது தத்தாவின் கூரிய பார்வைக்கு.அவர் தன்குறிப்பில் இருந்த நட்சத்திரங்கள் விண்கற்கள் கிரகங்கள் பட்டியலை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டார். தனது திவ்யாவின் லென்சையும் ஒருமுறை துடைத்துவிட்டார். எதுவாகிலும் தூசோ புழுதியோ இருக்கலாமோ என்னும் ஐயத்தில். தனது பாக்கெட் கால்குலேட்டரில் சில கணக்குகளைப் போட்டு தலையாட்டிக்கொண்டார்.

அவர் ஊகித்தது சரியே. எவ்விதப்பிழையும் இருக்க வாய்ப்பே இல்லாமல் துல்லியமாக புதிய வால் நட்சத்திரத்தைக் கண்டறிந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து கொல்கத்தாவின் ஆனந்த பஜார் பத்திரிகையில் கீழ்க்கண்ட செய்தி முதல் பக்கத்தில் பளிச்சிட்டது.

புதிய வால் நட்சத்திரம் .. கொல்கத்தா வானியலளாளர் கண்டுபிடித்தார்.

( நமது சிறப்புச் செய்தியாளர் )

திரு மனோஜ் தத்தா ,கொல்கத்தாவின் புறநகர்பகுதிவாசி ,புதியதொரு வால் நட்சத்திரத்தைக் கண்டறிந்தார். கடந்த இரண்டு இரவுகளாக அவர் கண்டறிந்த இந்த செய்தியை பெங்களூருவில் இருக்கும் இந்திய வானியல் கல்விநிலையம் ( Indian Institute of Astrophysics , IIA) உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய வானியல் கல்விநிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய 90 இஞ்ச் தொலைநோக்கியை காவலூரில் நிறுவியுள்ளது. அந்த தொலைநோக்கி மூலம் திரு தத்தாவின் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது அமெச்சூர் வானவியல் அனுபவத்தின் மூலம் திரு தத்தாவின் இந்த அபாரமான கண்டுபிடிப்பு அவரது வாழ்நாளின் இலட்சியம் என்று குறிப்பிடும் தத்தா, இன்னும் சில மாதங்களில் வெறும் கண்களுக்கும் அந்த வால் நட்சத்திரம் தெரிய வரும் என்று உறுதி கூறுகிறார்.

அவர் தனது இந்த கண்டுபிடிப்புக்கு தனது எட்டு இஞ்ச் திவ்யாதான் உதவியதாகப் பெருமையுடன் கூறுகிறார்.

இந்த செய்திக்குப்பின் ஒரே வாரத்தில் ’’ தத்தா தூமகேது ‘’என்னும் பெயருடன் அவர் கண்டறிந்த வால் நட்சத்திரம் டாக் ஆஃப் த இண்டியா ஆனது. உலகம் முழுவதும் அவரது பெயர் பரவத்தொடங்கியது.

இதனால் தத்தாவுக்கு அதீதமான பிராபல்யமும் எங்கும் அவரது புகைப்படங்களும் செய்திகளும் பாராட்டுக்கூட்டங்களும் புகழுரையுமாக அவரை மூச்சுத்திணற வைத்தது.

ஒருமுறை ஒரு பாராட்டுக்கூட்டத்திலிருந்து திரும்பிய தத்தா இந்திராணியிடம் அலுத்துக்கொண்டே கூறினார்.

‘’ ஹூம்… நான் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடிக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு தோணுது.. ‘’

தத்தாவின் ஆச்சரியத்தை அதிகரிக்கும் விதமாக இந்திராணி அவரது கூற்றை ஏற்றுக்கொண்டாள்.

‘’ நானும் அதே தாங்க நினைக்கிறேன்… ஆனா காரணம் வேற.. ‘’

‘’ அட .. நீ என்ன காரணத்துக்காக அப்படி நினைக்கிறே இந்து..? ‘’ வியப்புடன் வினவினார் தத்தா.

‘’ வால் நட்சத்திரம் வந்தால் அது அபசகுனம் … நல்லவரான நீங்க இதைக் கண்டு பிடிச்சு நாட்டுக்கு ஒரு கேடு வர காரணமா இருந்திருக்கவேண்டாமேன்னு நினைத்தேன்.. “

தத்தா சிரித்தார்.

‘’ ஹூம்… நீ படித்த எம் ஏ பிலாசஃபி உனக்கு கைகொடுக்காதது ஆச்சரியம் தான்.. இது மூட நம்பிக்கை என்பதை நீ புரிஞ்சுக்கலையா..? வால் நட்சத்திர வருகைக்கும் பூமியில் நடக்கும் எந்த விபரீதத்துக்கும் துளிக்கூட தொடர்பே இல்லை மண்டு..

வால் நட்சத்திரத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து இருக்காங்க.. அதன் காம்பினேஷன் எதுவும் இன்னல் தருவன அல்ல. நீயே பாக்கத்தான் போறே..இந்த தத்தா தூமகேது எந்தப் பிரச்சினையும் தராமல் அமைதியாக கடந்துபோகத்தான் போகுது.. ‘’

ஆனால் இந்த விடயத்தில் தத்தாவின் கூற்று முழுமையாக உண்மை ஆகப்போவதில்லை என்பதை காலம் உணர்த்தியது.

தூம கேது… பகுதி மூன்று..!

கேம்பிரிட்ஜ் நகரில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியின் உணவுக்கூடம்..

பணியாளன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட மேசையின் பொறுப்பாளரின் காதில் என்னவோ சொல்லி ஒரு சில்வர் ட்ரேயில் வைக்கப்பட்ட ஒரு காகித உறையைக் கொடுத்தான்.

பொறுப்பாளர் நேராக ஜேம்ஸை பணிவுடன் வணங்கி அந்த உறையைக் கொடுத்து மெல்ல காதில் கிசுகிசுத்தான்.

‘’ நீங்கள் உங்கள் தங்குமறையில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.. ‘’

ஜேம்ஸ் நெற்றியைச்சுருக்கியவாறு சிந்தித்தபடியே தன் அறைக்குத் திரும்பினான். வழியில் அந்த உறையைப் பிரித்து வாசித்தான்.

’’ அன்புடைய டாக்டர் ஜேம்ஸ் ஃபோர்சித் அவர்களே,

இந்த கடிதத்தை உங்களிடம் சேர்ப்பிப்பவருக்கு உங்களை என் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பணிக்கப்பட்டிருக்கிறது. தாமதிக்காமல் உடனே புறப்பட்டு வரவும்.. நீங்கள் இன்றிரவு இலண்டனில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். உங்களுக்கு ஏற்படும் இந்த இடையூறுகளுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். மேலும் இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கவேண்டி கேட்டுக்க்கொள்ளப்படுகிறீர்கள்.

என்னை நம்புங்கள். இது தவிர்க்க இயலா தொந்தரவு.

அன்புடன்
ஜான் மேக்பெர்சன். ‘’

கீழே இருந்த கையெழுத்தின் சொந்தக்காரரின் பதவியைக் கவனித்த ஜேம்ஸ் ஒரு கணம் மூச்சைவிட மறந்தே போனான்.

’’ இங்கிலாந்து மகாராணியின் பிரதம பாதுகாப்பு அதிகாரி ’’

அவனது அறையின் முகப்பில் நீளமான தொப்பி அணிந்த ஒருவன் பணிவுடன் ஜேம்ஸிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

‘’ நான் ஜான்சன். அரண்மனையின் உதவி பாதுகாப்பு அதிகாரி. நான் ஏன் இங்கிருக்கிறேன் என்பதை கடிதம் மூலம் அறிவீர்கள் என நம்புகிறேன். ‘’ என்று தலைகுனிந்து பணிவுடன் கூறினான்.

‘’ ஹூம்.. நானறிந்த வகையில் கடிதம் கூறியது போல செய்ய உத்தரவு ‘’ என்ற ஜேம்ஸ் இதற்குமேல் தன்னை அழைத்துப்போக வந்த ஜான்சனிடம் கேட்பது வீண் என உணர்ந்து அவனுடன் புறப்படத்தயாரானான்.

ஜான்சனின் நீளமான ஃபோர்ட் கார்ட்டினா கார் சரியாக 90 நிமிடத்தில் வைட் ஹால் எனப்படும் மகாராணியின் அரண்மனைக்கு சென்று சேர்ந்தது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சர் ஜான் மேக்பெர்சன் சேம்பரில் இருந்தான்.

அவனை சர் ஜானுக்கு அறிமுகம் செய்துவிட்டு குனிந்து வணங்கிவிட்டு நகர்ந்தான் அந்த கடமை தவறாத அதிகாரி ஜான்சன்.

‘’ டாக்டர் ஜேம்ஸ் ஃபோர்சித், முதலில் இந்த சிரமங்களுக்கு நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். ‘’ என்று கூறி ஜேம்சின் கைகளைக் குலுக்கிவிட்டு ‘’ மேலதிக தாமதத்தைத் தவிர்த்திட நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.. ’’ என்று அவனிடம் டைப் அடிக்கப்பட்ட காகிதத் தொகுப்பு ஒன்றை நீட்டினார் சர் ஜான்.

அதை வாங்கிப் பிரித்துப் பார்த்த ஜேம்ஸ் திடுக்கிட்டான் .

‘’ என்ன இது..? நான் ‘’ நேச்சர் ‘’ மாத இதழுக்கு எழுதிக்கொடுத்த ஆராய்ச்சிக் கட்டுரை இது.. அந்த மூலப்பிரதி உங்கள் கைக்கு எப்படி கிடைத்தது ..? ‘’ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் ஜேம்ஸ்.

சர் ஜான் அவனது பரபரப்பை உன்னிப்பாகக் கவனித்துவிட்டு கூறினார் .. ‘’ நேச்சர் இதழின் ஆசிரியர் எனது நண்பர். ‘’

‘’ இருக்கட்டுமே… நான் அவரிடம் இது உடனடியாகப் பதிப்பிக்கப்படவேண்டிய மிக முக்கியமான கட்டுரை என்று சொல்லியே கொடுத்தேனே ‘’ குழப்பமுடன் ஜேம்ஸ் மெல்ல அசைந்தான்.

‘’ ஆம் .. நான் ஏற்கிறேன். இது மிக மிக முக்கியமான கட்டுரை தான்.. இன்ஃபாக்ட் இதை பப்ளிஷ் செய்யக்கூடாத அளவுக்கு மிக மிக முக்கியமான கட்டுரை.. ‘’ என்று ஜேம்ஸின் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே பைப்பைப் பற்றவைத்தார் சர் ஜான்.

தூம கேது… பகுதி நான்கு..!

டாக்டர் ஜேம்ஸுக்கு தனது ஆராய்ச்சியின் நம்பகத்தனத்தைக் குறித்த விமர்சனங்களைப் பொறுப்பதே இல்லை. ஏனெனில் தனது ஆராய்ச்சியின் நுணுக்கமான முடிவுரையில் அத்தனை அபார நம்பிக்கை.

ஆனால் சர் ஜான் மேக்பெர்சன் இங்கிலாந்தே மதிக்கும் மிகப்பெரிய விஞ்ஞானியும் கூட என்பதால் அவர் கூறுவதைக் கேட்க முனைந்தான்.

‘’ தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் ஜேம்ஸ்.. இன்று மதிய உணவில் நேச்சர் இதழின் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் என்னிடம் உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரையைக் காட்டினார். நானும் வானவியல் அறிவியலில் நாட்டம் கொண்டிருக்கிறேன் ஜேம்ஸ்.. அந்த ஆசிரியர் என்னிடம் உங்கள் இந்த கட்டுரை வல்லுனர்கள் சிலரிடம் காட்டி கருத்து பெற விரும்பினார். நான் அதைத்தடுத்தேன்.. உங்கள் ஆராய்ச்சியின் விளைவுகளைக்குறித்து யோசிக்கும் போது அது உண்மையாய் இருக்கும் பொருட்டில் அதன் நிர்மூலத்தையும் விநாசத்தையும் நன்கறிய முடிந்தது.

ஜேம்ஸ் பதிலளிக்கும் வகையில் கனைத்துக்கொண்டு ‘’ நான் உறுதியாகக் கூற முடியும் சர் ஜான்.. அந்த கட்டுரை முழுக்க முழுக்க சரியானது. எனது ஆராய்ச்சி பிசகானது இல்லை.. ‘’

சர் ஜான் கவலையுடன் கூறினார், ‘’ காமெட் தத்தா இந்த பூமியுடன் மோதினால் விளையும் வினாசம் குறித்த அனுமானம் உண்டா ஜேம்ஸ்..? ‘’

‘’ ஆம். சர் ஜான்.. சர்வ நாசம் … உலகமுடிவு… நிச்சயம். ஏதாவது அதிருஷ்ட வசமான சம்பவங்கள் நேரும் பட்சத்தில் மட்டுமே இந்த உலகம் அழிவில் இருந்து தப்பிக்க இயலும்.. ‘’

சர் ஜான் குறுக்கிட்டார். ‘’ அந்த அதிருஷ்ட வசமான சம்பவங்கள் என்ன என்பதை விளக்கமுடியுமா ஜேம்ஸ்..? ‘’

ஜேம்ஸ் தொடர்ந்தான்.

‘’ வெல். சர் ஜான்.. ஒருவேளை அந்த காமெட் பூமியை நெருங்கும் முன் வேறு ஏதாவது எரிகல் மேல் மோதலாம்.. மோதினால் சிதறி துண்டுகளாகி அழிவுகள் தவிர்க்கப்படலாம்… அதன் திசை மாற்றப்படலாம்.. அல்லது சூரியனை நெருங்கும் போது அவை உடைந்து சிதறலாம்.. அல்லது ஆவியாக கரைந்து விடலாம்… ‘’ அவனை முடிக்க விடவில்லை சர் ஜான்..

‘’ அப்படி ஒரு அதிருஷ்ட சம்பவம் நேரும் என்று நாம் கையைக்கட்டிக்கொண்டு வாளாவிருக்க முடியாது ஜேம்ஸ்.. காமெட் தத்தா பூமியின் மேல் மோதியே தீரும் என்னும் முடிவில் நாம் உறுதியாக இருந்து அதைத் தவிர்க்க ஆலோசிக்க வேண்டும். வால் நட்சத்திரம் பூமியில் மோதுவது பத்து மில்லியன் ஆண்டுகளில் இருமுறை நிகழ்பவை. ஆனால் அது நம் சமீபத்தில் … இன்னும் ஒரே ஒரு வருடத்தில்… ‘’ என்றவரை இடைமறித்த ஜேம்ஸ் ‘’ சரியாக பத்தே மாதங்கள் சர் ஜான்.. ‘’ என்றான்.

‘’ ஹூம் … திருத்தத்துக்கு நன்றி ஜேம்ஸ். நம்மிடம் இன்னும் பத்தே மாதங்கள் தான் உள்ளன.. இந்த பேரழிவைத்தடுக்க நாம் ஏதாவது செய்யவேண்டாமா ஜேம்ஸ்..? ‘’ கவலையுடன் கேட்டார் சர் ஜான்.

ஜேம்ஸ் அந்த கவலையிலும் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். ‘ என்ன இவர் .. ஏதோ சட்ட ஒழுங்கு சிதையப்போவதைப் போல எண்ணி எதாவது செய்ய வேண்டாமா என்ரு யோசிக்கிறார்..? ‘

பிறகு சர் ஜானிடம் கேட்டான் . ‘’ எப்படி சர் ஜான்..? எப்படி தடுக்கப்போகிறோம்..? ‘’

’’ எனக்குத்தெரியவில்லை ஜேம்ஸ்.ஆனால் நாம் சும்மா இருக்கக்கூடாது. நம் கண்ணெதிரில் இந்த உலகமும் நாமும் அழிவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.. அந்த வழியை யோசிக்க நம் இருவரது மூளைகள் மட்டும் போதாது. உலகம் முழுவதிலும் இருந்து அனைத்து விற்பன்னர்களையும் வரவழைக்க வேண்டும். மிகவும் ரகசியமாக செய்து முடிக்கவேண்டியது அவசியம். இந்த செய்தி பரவினால் உலகில் அனர்த்தங்களும் வேண்டத்தகாதவைகளும் நிகழும்.. சட்டம் ஒழுங்கு மீறப்படும்.’’

சர் ஜானின் குரலில் உண்மையான கவலை தொனித்தது.

’’ இந்த கட்டுரை பிரசுரிக்கப்படுவதைத் தடுப்பதால் உண்மையை ஒளித்துவிடமுடியாது சர் ஜான்.. உலகில் இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கண்டுபிடிக்கத்தான் செய்வார்கள்.. ‘’ ஜேம்ஸ் உறுதியாகக் கூறினான்.

‘’ இல்லை ஜேம்ஸ். நான் மறைக்கச்சொல்லவில்லை. ஆனால் விளைவின் மோசத்தைக் குறைத்துச்சொல்ல வேண்டுகிறேன். உங்கள் கட்டுரையில் சில ஆனால் கள் சில இருப்பினும் கள் சேர்த்து உங்கள் ஆராய்ச்சி திட்டவட்டமான எந்த முடிவுக்கும் செல்லாமல் மழுப்பப்படவேண்டும். உலகமெங்கும் இருக்கும் ஆராய்ச்சியாளர்களின் முடிவையும் எனது அதிகார பலத்தை வைத்து தடுக்கப் பார்க்கிறேன்.. ‘’ என்ற சர் ஜானை இடைமறித்தான் ஜேம்ஸ்.

‘’ எத்தனை காலத்துக்கு..? ‘’

’’ ஹூம்… அந்த பாழும் வால் நட்சத்திரம் அமைதியாக நம் பூமியைக் கடந்து செல்லும் வரை… நாம் முதலில் உலகில் இருக்கும் அனைத்து வல்லுனர்களையும் ஒரே வாரத்தில் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். மிக துரிதமாக நாம் செயல் படவேண்டும்.’’

ஜேம்ஸுக்கு ஒரே வாரத்தில் இயலாத காரியம் என்று பட்டது. ஆனால் சர் ஜான் அதுகுறித்த முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டு செய்தும் காட்டினார்.

தூம கேது… பகுதி ஐந்து..!

சொன்னதைச் சாதித்தே காட்டினார் சர் ஜான்.

ஜேம்ஸ் அந்த கருத்தரங்குக்குச் சென்ற போது வியப்பில் ஆழ்ந்தான்.

உலகெங்கிலும் இருந்து அனைத்து வல்லுனர்களும் அங்கே குழுமி இருந்தார்கள்.

வானியல் வல்லுனர்கள், கணினி வல்லுனர்கள்,அணுசக்தி வல்லுனர்கள், விண்வெளி வல்லுனர்கள், உயிரியல் வல்லுனர்கள்,என உலகின் பல மூலைகளில் இருக்கும் விற்பன்னர்கள் அனைவருமே அங்கே கூடி இருந்தனர்.

அனைவரையும் ஒருங்கிணைத்து வரவழைக்க ஒரு வாரம் என்பது குறுகிய காலம் என்றாலும் அதைச் சாதித்து முடித்த சர்ஜானைப் பாராட்டாமல் இருக்க முடியைல்லை.

ஒருவாரம் தொடர்ந்து நிகழ்ந்த அந்த கருத்தரங்கு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

முதலில் அனைத்து வல்லுனர்களும் ஜேம்ஸின் ஆராய்ச்சிக்கட்டுரையை பலமுறை கூர்ந்து அலசி ஆராய்ந்தார்கள்.அதில் எந்த வித கணக்கியல் மதிப்பீடும் பிசகானதா என்பதை விரிவாக விவாதித்து அந்த ஆராய்ச்சி முடிவு சரியானதே என்றும் காமெட் தத்தா பூமியை மோதிவிடும் அபாயம் கட்டாயம் நேரும் என்னும் முடிவுக்கு வந்தார்கள்.

ஏதாவது செய்து அப்பேரழிவைத்தடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளதை அனைவரும் உணர்ந்தார்கள்.

ஆனால் அந்த ஏதாவதைச் செய்வது எப்படி..? அது தான் முக்கியம்.

பூமியில் இருக்கும் அனைவரும் பதுங்குகுழிக்குள் சென்று தப்பிப்பது என்ற மேலோட்டமான யோசனை உடனடியாக மறுக்கப்பட்டது. அது சாத்தியமில்லை என்பதுடன் பாதுகாப்பும் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தார்கள்.

எனவே பின்வாங்கும் முயற்சியை விட தாக்குதல் முயற்சியே சிறந்தது என்ற முடிவிற்கு வந்தனர்.

அதற்கான ஆலோசனைகள் அலசப்பட்டன.

அனைவரும் ஏகோபித்த ஒரு யோசனை இதுதான்.

வால் நட்சத்திரத்தின் பாதையைத் திசை திருப்பிவிடுவது.

எப்படி..?

அதன் மேல் எதைக்கொண்டாவது மோதி அல்லது விசை கொடுத்து தள்ளிவிடுவது.
.
உலகில் கிடைக்கும் அனைத்து அணுசக்தி விவரங்களைக் கணக்கிட்டனர். அனைத்தையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அணுவெடிப்பு ஒன்றை உருவாக்கி அந்த விசை மூலம் காமெட் தத்தாவின் திசையை மாற்றிவிடுவது.

சரியான நேரத்தில் சரியான திசையில் சரியான கணக்கீடுகளுடன் இந்த அணுவெடிப்பு உருவாக்குவதைப் பற்றி அலசி முடிவெடுத்தனர்.

ஒரு விண்வெளிக்கலஏவுகணையை அணுசக்தியுடன் ஏவுவதன் மூலமாக இதைச் சாதிக்க வேண்டும்.

ரிமொட் கண்ட்ரோல் மூலம் அந்த ஏவுகணை சரியான சமயத்தில் இயக்கப்பட்டு அணுவெடிப்பு உருவாக்க வேண்டும்.

இதில் வெற்றி பெறுகிறோமோ இல்லை தோல்வியுற்று அழிகிறோமோ தெரியாது. ஆனால் ரகசியம் இறுதிவரை பாதுகாக்கப்படவேண்டும்.

அந்த ஒருவாரக் கருத்தரங்கின் இறுதிப்படிவமாக இந்த செயல்பாட்டை‘’ ப்ராஜக்ட் லைட் ப்ரிகேட் ‘’என்ற் பெயர் சூட்டி பின்வருமாறு நிகழ்ச்சி நிரல் தயார் செய்தார்கள்.

அக்டோபர் 10 : அணுசக்தி நிரம்பிய ஏவுகணையை விண்வெளியில் செலுத்துதல்

நவம்பர் 15 : ஏவுகணை காமெட்டை நெருங்கியவுடன் அணுவெடிப்பை உருவாக்குதல்.

டிசம்பர் 15 : இந்த முயற்சி தோல்வியுற்றால் இதுதான் காமெட் பூமியுடன் மோதும் நாள். வெற்றி பெற்றால் அந்த வால் நட்சத்திரம் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பான தொலைவில் கடக்கும்.

இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் அந்த வால் நட்சத்திரத்தின் பருமனைப்பொறுத்த விடயம்தான்..

‘’ இந்த முயற்சி வெற்றி பெறுமா சர் ஜான்..? ‘’ கருத்தரங்கின் முடிவில் தத்தா சர் ஜானை வினவினார். அவர் தான் அந்த கருத்தரங்கின் முக்கிய விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த ஒருவார காலத்தில் தத்தாவும் சர் ஜானும் நெருங்கிப்பழகிவிட்டிருந்தனர்.

‘’ மிஸ்டர் தத்தா … உங்களுக்கு நான் நேர்மையான பதிலைச் சொல்லவேண்டுமென்றால் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நான் கிறிஸ்துமஸுக்கான எந்த பரிசுப்பொருளையும் வாங்கப் போவதில்லை.. ‘’ சர் ஜானின் பதில் சோகம் தெரிந்தது.

அடுத்த இரண்டு வாரங்களை இங்கிலாந்து சுற்றிப்பார்ப்பதில் கழித்த தத்தா இந்தியாவுக்குத் திரும்பியபோது அவரது வீட்டில் மிகப்பெரிய கூட்டம் குழுமி இருந்தது.

தூம கேது… பகுதி ஆறு..!

இங்கிலாந்திலிருந்து கொல்கத்தா திரும்பிய தத்தாவுக்கு பலமான வரவேற்புகளும் மாலை மரியாதைகளும் கைகுலுக்கல்களும் புகைப்படக்காரர்களின் பளிச் பளிச் களும் நிரம்பிய குதூகலமான வரவேற்பு கிடைத்தது. எண்ணற்ர நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் மாணவர்களும் இன்னும் இனம் புரியாத வகையினருமாக பெருத்த கூட்டம் அலைமோதியது.

பத்திரிகையாளர்கள் துரத்தி துரத்தி கேள்விக்கணைகளைத் தொடுத்தார்கள். ஆட்டோகிராஃப் வாங்கும் கூட்டமோ அலைமோதியது. எப்படியோ தப்பித்து தனக்காக காத்திருந்த காரில் விரைந்து ஏறி தன் வீட்டையடைந்தார் தத்தா.

அங்கும் பெரும் கூட்டம் குழுமியிருந்தது. வீட்டுக்கு முன்னால் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டு விழாக்கோலமாய் இருந்தது.

உள்ளே சென்ற தத்தா இந்திராணியை அர்த்தபூர்வமாகப் பார்த்தார்.

தன் கணவருக்கு கூட்டமும் இம்சையும் பிடிக்காது என்பதை முற்றிலும் அறிந்திருந்த இந்திராணி விளக்கம் சொல்லுவது போல் முன்வந்து கூறினார்.

’’ நான் தாங்க எல்லா பண்டிதர்களையும் அழைத்து வந்து மிகப்பெரிய யாகத்துக்கு ஏற்பாடு செய்தேன்.. அவர்கள் உங்களை ஆசிர்வதித்து உங்கள் பாவத்தைப் போக்கச் சொன்னேன்.. ‘’

தத்தா அதிர்ந்தார்.

’’ ஏன் … ஏன் இந்து இப்படி..? நான் கடல் கடந்து சென்றதாலா..? இதெல்லாம் முற்காலத்திய பைத்தியக்காரத்தனம் என்பதை புரிஞ்சுக்கலையா..? இதெல்லாம் அர்த்தமற்ற சடங்குகள்.. எனக்கு பிடிக்காதவை.. ‘’ அவர் குரலில் அதிருப்தி தெரிந்தது.

இந்திராணி தனது மைத்துனர் , தத்தாவின் தம்பி, சிவாஜிபாபுவைப் பார்த்தாள்.

சிவாஜிபாபு கனைத்துக்கொண்டு முன்னால் வந்து அண்ணனிடம் பணிவாகக்கூறினார்.

‘’ நீங்க இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடிச்சதுல இருந்து நாங்க எல்லாருமே அப்செட் ஆக இருக்கோம் அண்ணா.. ஒரு சாந்தியாகம் செய்தால் எல்லாம் சரியாகிடும்னு நம்ம குருஜி சொன்னார். அந்த யாகத்தின் மூலம் நீங்க கண்டுபிடிச்ச வால் நட்சத்திரத்தின் பின்னால் இருக்கும் தீமைகள் எல்லாம் சரியாகி அதன் கெட்ட செயல்கள் எல்லாம் போய் சுபமாகும்னு சொன்னார்.. நீங்க வருவதற்குத் தான் காத்திருந்தோம் அண்ணா.. மறுக்காதீங்க.. ப்ளீஸ்.. ‘’

மேலுக்கு அமைதியாகத்தெரிந்தாலும் உள்ளூறக்கோபம் கொந்தளித்தது தத்தாவுக்கு. அமைதியாகக் கேட்டார்.

‘’ இந்த யாகத்தால் குறிப்பிட்ட பயனைச் சொல்ல முடியுமா .. ? ‘’

சிவாஜி பாபு மீண்டும் பணிவாகப் பதிலளித்தார்.

‘’ நீங்க கண்டுபிடிச்ச வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த கெடுதலும் வராது..’’

அடக்கிவைத்திருந்த கோபம் ஆத்திரமாக வெளிப்பட்டது தத்தாவிடமிருந்து.

‘’ இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு உங்களுக்கு தெரியாதா..? ஆதிகாலத்தில் வால் நட்சத்திரம்னா என்னான்னு தெரியாத காலத்தில் வேணும்னா இதெல்லாம் ஏற்கலாம்.. ஆனா இப்போ வால் நட்சத்திரம்னா என்ன..? அது எப்படி உருவாகுது..? அது எப்படி இயங்குகிறது.. ? அதன் செயல்பாடுகள் என்ன என்று எல்லாமே கண்டுபிடிச்சுட்டோம் தானே..? துல்லியமான கணக்கீடு மூலமா அதன் அசைவுகளை அனுமானிக்கிறோம்.. புள்ளிவிவரங்களோடு அதைப்பத்தி பேசறோம்.. அதனால் பூமியின் இயக்கத்தில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லைன்னு எல்லாமே கண்டுபிடிச்சுட்டோம் தானே..? ஹூம்… உங்களுக்கு போய் இதெல்லாம் நான் விளக்குவது வீண் தான்.. ஏன்னா நீங்க எலிமெண்ட்டரி சயின்ஸ் கூட படிக்காத ஜென்மங்கள் தானே..? ‘’ கோபத்தில் பேசியதில் மூச்சிறைத்தது தத்தாவுக்கு.

சிவாஜி பாபு மீண்டும் பொறுமையாக பதில் சொன்னான். ‘’ ஆனா நம் முன்னோர்கள் இது போன்ற யாகத்தை செய்ய சொல்லி இருக்காங்கதானே..? ‘’

தத்தாவின் எந்த எதிர்ப்பும் அவர்கள் நடத்த நினைத்த யாகத்தைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.

தூம கேது… பகுதி ஏழு..! ( நிறைவுப் பகுதி )

ல]ண்டனில் இருந்து திரும்பியநாள் முதல் மனோஜ் தத்தா சர் ஜானுடன் அடிக்கடி தொடர்புகொள்ளத்தவறவில்லை.இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். ஒருவரை ஒருவர் திறமைகலை வியந்துகொண்டனர். அவர்களின் தொடர்பில் ப்ராஜக்ட் லைட் பிரிகேடின் முன்னேற்றம் குறித்த பரிமாற்றங்களும் இடம்பெறத் தவறவில்லை.

ஆனால் கடிதத்தைப் பிறர் எவர் படித்தாலும் விளங்கிக்கொள்ளாதவாறு சங்கேதங்களில் பரிமாறிக்கொண்டார்கள்.

தத்தா தனது திவ்யாவியின் உதவியுடன் அந்த வால் நட்சத்திரத்தைத் தினமும் கவனித்து தினம் தினம் அதன் தொலைவைக் கணக்கிடத்தவறவில்லை.

இப்போது வாலும் முளைத்துவிட்டிருந்தது.. தத்தாவுக்கு.. காமெட் தத்தாவுக்கு. ..

எதிர்பார்த்த மாதிரி அல்லாமல் அந்த வால் நட்சத்திரம் ஆவியாகாமல் சூரியனைச் சுற்றிவந்த வண்ணம் பூமியை நெருங்கிக் கொண்டிருந்தது.

லைட் ப்ரிகேட் ப்ராஜக்டில் தொடர்புகொண்ட அனைவருக்கும் காமெட் தத்தா பூமியுடன் மோதப்போவது திண்ணமாகத் தெரியவந்தது.

அக்டோபர் மாத நடுவில் சர் ஜானுக்கு தத்தாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தில் லண்டனைப்பற்றிய விவரங்களும் வானிலை அறிக்கையும் கால் பந்தாட்ட விவரங்களும் சமீபத்திய இடைத்தேர்தலைப்பற்றியும் எழுதப்பட்டு இருந்தாலும் லைட் பிரிகேடின் துவக்கம் பற்றியும் குறிப்பைக் கொடுத்திருந்தார்.

சரியான நேரத்தில் அணு ஆபத்துகளுடன் விண்கலம் வானில் ஏவப்பட்டது.

ஆனால் சரியான நேரத்தில் சரியான திசையில் சென்று வால் நட்சத்திரத்தை எதிர்கொள்ளுமா..?

சரியான சமயத்தில் ரிமோட் கண்ட்ரோல் சொதப்பாமல் வேலை செய்யுமா..?

முக்கியமான நேரத்தில் அணுப்பிளவு அங்கே நடவாமல் போய்விட்டால் என்ன ஆகும்..?

இவை எல்லாம் ஒரு குழுவினரின் தினசரி கவலைகள் ஆயின.

தத்தாவுக்கு தனது நிலைகொள்ளா தவிபை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட இயலாதது சிரமமாக இருந்தது.

வெளிப்படையாக தமது தவிப்பைக் காட்டிக்கொள்ளாமல் துர்கா பூஜை தீபாவளி ஆகிய அனைத்திலும் அமைதியாகக் கலந்துகொண்டார்.

இரவில் திவ்யாவுடன் தனது மனக்கலக்கங்களை மானசீகமாகப்பகிர்ந்து கொண்டார்.

இப்போது வெறும் கண்களுக்கும் கூட தத்தா வால் நட்சத்திரம் தெரியத் தொடங்கியது.

நவம்பர் 18 ஆம் தேதி தத்தாவுக்கு சிறப்புத்தந்தி வந்து சேர்ந்தது. மிகவும் அவசரம் என்பதால் தந்தி உயர் அதிகாரியே நேரில் வந்து . தத்தாவிடம் அந்த தந்தியைச் சேர்த்தார். தத்தா இப்போது உலகப்புகழ் பெற்றவர் இல்லையா..?

அந்தத் தந்தி சர் ஜானிடம் இருந்து வந்திருந்தது. நடுங்கும் கைகளால் அதைப்பிரித்துப் படித்தார் தத்தா.

‘’ இனி நான் கிறிஸ்துமஸுக்காக டிசம்பர் 15 ஆம் தேதி பரிசு வாங்கலாம் என நம்புகிறேன் – ஜான் மேக்பெர்சன்.’’

அடுத்து எல்லாமே சுமுகமாக நடந்தது. டிசம்பர் 15 ஆம் தேதி காமெட் தத்தா பூமிக்கு மிக அருகில் வந்து சென்றது. மிகப்பெரிய கோளமாக சுமார் 80000 கிலோமீட்டர் தொலைவில் வந்து சென்ற காமெட் தத்தாவை கோடிக்கணக்கானோர் கண்டு வியந்தனர்.

மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சிலரே அந்த வால் நட்சத்திரம் எத்தனை அருகில் வரவேண்டியது என்பதும் வராமல் போயிற்று என்பதையும் அறிவர்.

தத்தாவின் அருகில் வந்து அவரது கையைப்பற்றிய இந்திராணி கேட்ட கேள்வி தத்தாவை திடுக்கிடச் செய்தது.

‘’ அந்த வால் நட்சத்திரம் பூமிக்கு எந்த தீங்கும் செய்யாமல் காப்பாற்றியது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு..? ‘’

தத்தா அதிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தார். ‘ இவளுக்கு ஒரு வேளை உண்மை தெரிந்துவிட்டதோ ? நாம் யாரிடமும் சொல்லாமல் தானே காப்பாத்தி வந்தோம்..? எப்படி இவளுக்கு உண்மை தெரியவந்தது..? ‘

ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகக் கேட்டார். ‘’ எப்படி..? ‘’

‘’ நான் ஏற்பாடு செய்த அந்த சாந்தியாகத்தால் தான்.. இப்ப புரியுதா ? ’’என்றாள்.இந்திராணி

‘’ குருஜி சொன்னபடி யாகம் மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் என்னென்ன அனர்த்தங்கள் நடந்திருக்குமோ..’’ இந்திராணி கூறிக்கொண்டே சென்றது அவர் காதில் சன்னமாக மறைந்து அங்கே லண்டனில் ஒரு வாரம் தூக்கம் தொலைத்து வல்லுனர்கள் அனைவரும் அலசி ஆராய்ந்த அந்த காட்சி மனத்திரையில் ஓடியது.

தத்தா புன்னகைத்துக்கொண்டார்.

முற்றும்.

இக்கதை ஜயந்த் நார்லிகர் என்பவரால் எழுதப்பட்ட தி காமெட் என்னும் ஆங்கிலக் கதையின் மொழியாக்கம்.

பி. கு : இக்கதை முத்தமிழ்மன்றம் மற்றும் தமிழ்மன்றம் தளத்தில் பதிந்திருக்கிறேன். பத்திரிகைகள் எதற்கும் அனுப்பியதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *