தீபாவளி டிரஸ் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 6,816 
 

நவம்பர் 1,2021

காத்தவராயன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் தம்பி ரகு ஆறாம் வகுப்பு.இருவரும் படிப்பது அரசுப் பள்ளியில். பள்ளித் திறப்பால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தீபாவளி டிரஸ் பற்றிய பேச்சே அதிகமாக இருந்தது.

ஆசிரியர்களும் பாடம் நடத்தி போரடிக்காமல், தீபாவளிப் பண்டிகை பற்றி உரையாடி மாணவர்களை மகிழ்ச்சியூட்டி, மகிழ்ந்தார்கள். இடையிடையே பாதுகாப்பு பற்றியும் சொல்லிக் கொடுத்தார்கள்.

புத்தகங்களை ஜூலை மாதமே கொடுத்து விட்டதால், அரசு உத்தரவுப்படி விலையில்லா நோட்டுகள், யூனிபார்ம் போன்றவை பள்ளி திறந்த இன்றே, அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டன.

நவம்பர்-2

பள்ளிக்குச் சென்ற காத்தவராயனையும் ரகுவையும்.

தலைமையாசிரியர் அழைத்தார். பயந்துகொண்டே அவர் முன் நின்றார்கள் இருவரும்.

“நேத்து நம்ம ஸ்கூல்ல கொடுத்த யூனிபார்ம்மை வாங்கிக்கிட்டீங்க தானே?

“வாங்கிக்கிட்டோம் சார்…”

“அப்ப ஏன் புது யூனிபார்ம் போடல?”

“கொரோனாவால வேலை போயி அப்பா அம்மா ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க.” என்றான் காத்தவராயன்.

“அதுக்கென்ன இப்ப..” என்றார் ஹெட் மாஸ்டர்.

“எங்களுக்கு தீபாவளிக்கு புது டிரஸ் வாங்க வசதி இல்லை. அதனால இந்த யூனிபார்மை தீபாவளிக்கு வச்சிருக்கலாம்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க சார்.” என்றனர் இருவரும் கோரஸாக.

– கதிர்ஸ் – நவம்பர் 01-15 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *