திரை மறைவில் ஓர் ஒளி நட்சத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 13,145 
 

ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக் கல்யாணம் கூட ஆகியிருக்கவில்லை. பதினாறு வயசு கூட நிரம்பாத அவளுக்கு வாழ்க்கை குறித்து எந்தப் பிடிப்பும் இல்லாமல், மனசளவில் ஆன்மீக விழிப்புப் பெற்றுத் தேறுகின்ற சுயத் தோன்றுதலான ஒரு தனிமை நிலை இயல்பாகவே அவளுக்கு அமைந்த ஒரு வாழ்க்கை வரம்

பெண்ணாகப் பிறந்து விட்டால் உரிய காலத்தில் கல்யாணமாகிப் பிள்ளை குட்டிகள் பெற்றுப் போட்டுக் கொண்டு வாழ முடிந்தால் தான் அவளுக்குப் பெண்ணென்ற பெயரே நிலைக்கும். அதையும் தாண்டி ஒரு தபஸ்வினி போல, வாழ நினைப்பது, நடைமுறை , வாழ்வனுபவங்களைப் பொறுத்த வரை ஒரு துருவ மறை பொருள் நிலைமை தான்.

எனினும் அவள் அப்படிதான் வாழ விரும்பினாள். அந்த வகையில் அவளுடைய தேடல் நிஜவுலக வாழ்வை அடியோடு மறந்து போன கற்பனை ஊற்றுக் கண் திறந்து, அறிவு மழையாகக் கொட்டுகிற அவளுள்ளேயே லயித்து உயிர் வாழ்கிற ஒரு மானஸீக விழிப்பு நிலைத் தவமாகவே அவளை இயங்க வைத்துக் கொண்டிருந்த நிலையிலும் சராசரி பெண் சமூகத்தைப் பொறுத்தவரை அது எவ்வளவு தூரத்துக்கு எடுபடுமென்று அவளுக்குப் புரிய மறுத்தது.

அந்தக் காலத்தில் பத்தாம் வகுப்புத் தாண்டினாலே பெண்களுக்குப் பெரிய சாதனை மாதிரி. அவர்கள் படித்துப் பட்டமெல்லாம் பெற்று முன்னேறுவதை , சமூகம் முழு மனதோடு அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போன மிகவும் பின் தங்கிய இருண்டயுகம் அது.. அந்த இருண்டயுகத்தில் தான், அகக் கண் திறந்து வெளிச்சம் பார்க்கிற விடிவெள்ளி போல அவள் இருந்தாள். பத்தாம் வகுப்புடனேயே கல்லூரிப் படிப்பு ஒரு முடிவுக்கு வந்த பின், வீட்டு வேலைகள் செய்து பளு தூக்கிய நிலையிலும், ஆத்மார்தமாக அவள் இருப்பு நிலை வேறு. தமிழ் எழுதுவது அவளுக்குக் கை வந்த கலை. சிறுவயதிலிருந்தே தத்துவ நூல்கள் மட்டுமல்ல சிறுகதைகளையும் நன்கு வாசித்து அதிலேயே புடம் பெற்றுத் தேறிய அறிவு ஞானம் கைவரப் பெற்றவள் அவள். அதனால்தானோ என்னவோ பின்னாளில் சிறுகதை எழுதுவது அவளுக்குக் கைதேர்ந்த கலையாயிற்று

மானஸீகமாக எழுதும் கலையோடு அவள் தனிமை நாடி வாழ்கிற அந்தப் புனிதமான வாழ்வின் இருப்புகளை விட்டுத், வெகு தூரம் விலகிப் போகிற சாதாரண பாமர மனிதர்கள் குறித்து, அறிவுபூர்வமான கவலையுடனேயே மனம் திறந்து அவள் பேசுவது, தனது வளமான சிந்தனைத் திறன் கொண்ட சிறுகதைகள் மூலம் தான், அவைகள் வாசகர் இதயங்களைச் சென்றடையும் மார்க்கம் தான் அவளுக்குப் பிடிபடவில்லை. அதற்கு நீண்ட காலம் அவள் காத்திருக்க வேண்டியதாயிற்று

அவள் எவ்வளவுதான் மலை போல எழுதிக் குவித்தாலும் பத்திரிகையுலகில் எடுபடாத ஒரு கரும் புள்ளியாகவே ,அவள் நிலைமை. திரைமறைவில் எழுத நேர்ந்த காலடிச் சுவடுகள் தான் அவளுடையது. இருந்தாலும் அவள் எழுதுவதை நிறுத்தாமல் இருந்தது ஒரு பெரிய தவம் மாதிரி.

அரவிந்தனோடு மட்டும்தான் அவள் மனம் விட்டு இதைப் பற்றி நிறையக் கதைத்திருக்கிறாள். அவன் அவளுக்கு நெருங்கிய உறவினன். ஒன்றவிட்ட சகோதரன். முன்பு மலை நாட்டில் கண்டக்டராக வேலை பார்த்தவன். இடையில் எஸ்டேட் முதலாளியுடன் ஏதோ மனஸ்தாபம் கொண்டு, வேலயை ராஜினாமா செய்து விட்டு இப்போது சுன்னாகத்திலுள்ள தேனீர்க் கடையொன்றில் சர்வராக வேலை செய்கிறான். அதிகம் படிக்காவிட்டாலும் மேடையேறிக் கணீரென்று பேசும் அபார திறன் கொண்டவன் சிறந்த பேச்சாளன் அவன். அவனது கம்பீரமான குரல் வளம் சக்திக்கு மிகவும் பிடிக்கும். கூட்டங்கள் தோறும் ஒலிபெருக்கியில் அவன் பேசுவது ஒரு சரித்திரமாக எடுபடும். அவ்வளவு சிறப்பான பேச்சு அவனுடையது .. அவள் பல தடவைகள் அதைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போயிருக்கிறாள்.

ஞாயிறு மட்டும் தான் அவனுக்கு லீவு நாள். மாலையில் அவளைச் சந்திப்பதற்காகத் தவறாது வந்து போவான் . சக்தி கதை எழுதுவது அவனுக்கும் தெரியும்.. அவற்றில் சிலவற்றை அவன் படித்துமிருக்கிறான். படித்து விட்டு மனம் திறந்து அவன் பாராட்டும் போது அவள் தன்னளவில் உச்சி குளிர்ந்து புல்லரித்துப் போனாலும், அதை வெளிக்காட்டாமல் மனம் வருந்தி அவள் கேட்பாள்

“அண்ணை! உண்மையாய்த் தான் சொல்லுறியளோ? இதை நீங்கள் மட்டும் சொன்னால் போதுமே?”

“அப்ப ஆரிடமிருந்து இதுக்கு அங்கீகாரம் பெற வேணுமென்று நினைக்கிறாய்?”

“ஆரென்று நான் சொல்லுறது?.“நான் எழுதுகோல் பிடிச்சு ஒரு யுகமாகிறது.. எனக்கு இது தான் உலகம். நான் பெரிதாக எதுக்கும் ஆசைப் படேலை. கல்யாணம் முடிச்சுக் கொடி விட்டுப் பறக்கிற ஆசையும் எனக்கில்லை. ஒரு தபஸ்வினியாய் மட்டுமே இருக்க ஆசைப்படுறன்.” வாழ்க்கை பற்றிய சத்திய நினைப்பு ஒன்றே என்னை இந்த நிலையிலை வாழ வைச்சுக் கொண்டிருப்பதாய் நான் நம்புகிறன்”

“சக்தி! உது விழல் கதை. அதுவும் ஒரு பெண்ணாய்ப் பிறந்திட்டு வாழ வேண்டிய வயதில் என்ன விசர்க் கதை கதைக்கிறாய்?”

“அதை விடுங்கோ இப்ப என்ரை கதை யுகதைப் பற்றிச் சொல்லுறன் ஏனண்ணை எல்லாம் குப்பையிலை போகுது?”

“எனக்குத் தெரியேலை நான் ஒரு கதை எழுதிக் கொண்டு வந்திருக்கிறன் . நீதான் இதைச் சரி பார்த்து எழுதித் தரவேணும்”

“ஒரு சிறந்த பேச்சாளன் நீங்கள். இது போதாதா? ஏன் இந்த வீண் ஆசை?”

“எல்லாம் புகழுக்குத் தான் எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன் பத்திரிகை ஒன்றிலே உதவி ஆசிரியனாக இருக்கிறான். அவனிடம் கொடுக்கலாமென்றுதான் உன்னை நம்பி வந்தேன்”

“சரியண்ணா! உங்கடை விருப்பம். கதையைத் தாங்கோ. நான் சரி பார்த்து எழுதித் தாறன்”

அவன் கொடுத்து விட்டுப் போய் விட்டான். அவளைப் பொறுத்தவரை சிறுகதை எழுதுவது வாழ்வியலோடு சார்ந்த ஒரு புறம் போக்கு அனுபவமல்ல. ஆத்மார்த்தமாகத் தன்னுள் ஆழ்ந்து அடியோடு உலகையே மறந்து போன ஒரு நிஷ்டை கூடிய மேன்னிலைத் தவம் மாதிரி அது அவளுக்கு.. அதிலிருந்து முற்றாக விடுபட்டு நிற்கிற , ஒரு மனித பாவனை நிழல் போல அவன் என்பது கதையைப் படித்துப் பார்த்த போது அவளுக்கு மிகத் தீர்க்கமாகப் புரிந்தது… அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளனென்பது வேறு விடயம். ஆனால் கதை எழுதும் கலைக்கு அது சரிப்பட்டு வராது. அவன் எழுதிய கதை அவ்வளவு படு மோசமாக இருந்தது. உயிரோட்டமான எழுத்து நடையே ஒரு கதைக்கு முக்கியம். அடுத்தது யதார்தத்தை விட்டு விலகாத, மெய்யறிவாகத் தோன்றுகிற கருப் பொருள். இவை இரண்டும் இல்லாமல் போனால் வெறும் சிதறு தேங்காய் தான். அவளுக்குக் கண்கள் கூசியது. கலைவழிபாடு செய்ய மட்டுமே பழகிய மனதை யாரோ ஈட்டி கொண்டு தாக்குவது போல உணர்ந்தாள். அதை அப்படியே திருப்பிக் கொடுக்கவும் மனம் வரவில்லை அவன் மீது கொண்ட பரிசுத்தமான அன்புக்கு அது அடையாளமல்ல. எப்படியோ அவனைத் திருப்திப்படுத்தினால் சரியென்று பட்டது

அதற்கான சந்தர்ப்பம் பகல் வேலை ஒழிந்து இரவு படுக்கை விரிக்கும் நேரத்திலே தான் கை கூடி வந்தது. அதைத் தன் சொந்தக் கதையாகவே எண்ணி அவள் திருத்தத் தொடங்கும் போது நேரம் போனதே தெரியவில்லை. இரவு மூன்று மணி வரை விழித்திருந்து நிஷ்டை கூடிய ஒரு தவம் போலச் செய்து முடித்த போது முற்றுமுழுதாகத் திருத்திய அவள் சொந்த நடையில், அது அவள் எழுதிய ஒரு கதை போலவே ஒளி கொண்டு மின்னுவதாய் உணர்ந்தாள்.

எனினும் அதில் பொறிக்கப்படப் போகிற பெயர் முத்திரை அவளுடையதல்லவே. . நிச்சயம் அரவிந்தன் பெயர் தான் அதில் கொடி கட்டிப் பறக்கும்.. இருந்தாலும் அந்தப் புகழுக்குரிய அவளின் பெயர் திரைமறைவிலேயே நிழல் தரித்து நிற்பதைச் சத்தியம் தோற்றுப் போன ஓர் அதிர்ச்சிச் செய்தியாகவே, அது அவளுக்கு ஜீரணமாக மறுத்தது

முதலில் கதை வரட்டும். மறு நாள் அதிகாலை அரவிந்தன் சைக்கிளில் வேலைக்குப் போகும் வழியில், மறக்காமல் கதை வாங்கிப் போக அவளிடம் வந்து சேர்ந்தான்.. அப்போது அவள் அடுக்களைக்குள் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். வாசலில் அப்பா அவனை வரவேற்கும் குரல் கேட்டது அவனோடு அவருக்கு நல்ல ஒட்டுதல். மனம் விட்டுச் சகஜமாக உலகியல் பற்றி நிறையவே கதைப்பார்

“வா! அரவிந்தா என்ன இந்த நேரத்திலை வந்திருக்கிறாய்?”

“எல்லாம் சக்தியைப் பார்க்கத்தான்.. திருத்தச் சொல்லி ஒரு கதை கொடுத்தனான். திருத்தினாளோ என்னவோ தெரியேலை”

“என்ன நீயும் கதை எழுதுறியோ? அவள்தான் குப்பைக்கு இரையாக எழுதிக்கிழிக்கிறாள். உனக்கு என்ன வந்தது?

“ பெரியப்பா! சத்தம் போடாதேங்கோ சக்தி காதிலை விழப்போகுது அதை அவன் சொல்லிக் கொண்டிருகும் போது , சக்தியின் குரல் கேட்டது

“அரவிந் நானொன்றும் கனவுலகிலை இருக்கேலை. அப்பா எதைச் சொல்ல வாறார்? குப்பையிலே கிடந்தாலும் நான் ஒன்றும் ஒழிஞ்சு போகேலை என்றைக்காவது ஒரு நாள் என்ரை உயிர், மெய்யான இருப்பு உலகின் கண்களில் வெளிச்சம் பரவிக் கொண்டு வந்து நிக்கத்தான் போகுது”

“அதை அப்ப காண்பம்.. இப்ப சொல்லு கதை எந்த அளவிலை நிக்குது?”

“கதை இப்ப உங்களுடையதல்ல. நான் புதிசாய் பிறப்பெடுத்த என்ரை கதை மாதிரியே இதை மாற்றி எழுதி இருக்கிறன். கொஞ்சம் இருங்கோ. அலுவலை முடிச்சிட்டு இதோ கொண்டு வாறன்”

அவள் கொண்டு வந்து தந்ததும் ,பிரமை மாறாமல் வாங்கி வாசித்துப் பார்த்து விட்டு அவன் சொன்னான்

“என்னாலை நம்பவே முடியேலை இது என்ரை கதைதானென்று”

“இருக்கட்டும். எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை இது நீங்கள் எழுதியதாகவே இருக்கட்டும்”

“என்ரை பெயர் போட்டு இது வந்தால் நீ வருத்தப்பட மாட்டியே?

“மாட்டன் நல்லாய்ச் செய்யுங்கோ”

அவன் அதை வாங்கிப் போய் ஒரு கிழமை கூட ஆகவில்லை. ஞாயிற்றுகிழமை வந்த போது மாலையில் வந்திறங்கிய அவன் முகம் உதயசூரியனாய் ஒளி விட்டு மின்னுவதை ஒரு தரிசனக் காட்சியாய் அவள் கண் குளிரத் தரிசிக்க நேர்ந்தது. ஆச்சரியம் மேலிட அவள் கேட்டாள்

“என்னண்ணை முகம் களை வடியுது அப்படியென்ன பெரிய சந்தோஷம் இப்ப உங்களுக்கு?”

“இண்டைக்கு ஞாயிறல்லே! தினகரனிலை என்ரை கதை வந்திருக்கு பாக்கிறியே?

“அதெப்படி உந்தத் தினகரனுக்கு நான் கதைகள் அனுப்பின போது எடுத்துக் குப்பைத் தொட்டியிலை எறிஞ்சவை . இப்ப உதுவும் நான் எழுதின கதை தானே முகம் அறிஞ்ச உங்கடை பெயர் தான் அதுக்கு விலாசம். என்ன கொடுமை இது “

“வருத்தபடாதை சக்தி. உன்ரை பெயர் போட்டு நீ ஒரு கதை எழுதித் தா. நான் கொடுத்தால் கட்டாயம் வரும்”

“எனக்கு அது தேவையில்லை. இதிலை எது முக்கியமென்று எனக்கு விளங்கேலை. இலக்கியப் பார்வை யதார்த்தம் அது இது என்பதெல்லாம் சும்மா புரூடா தான். இப்படி வேஷம் கட்டி ஆடுகிற மந்தைக் கூட்டத்திடம் நான் எதுக்கு மண்டியிட வேணும்? யுகமே தேயட்டும். நான் இப்படியே இருந்திட்டுப் போறன். நீங்கள் போய் இதை மேடை போட்டு மேளம் தட்டிக் கொண்டாடினாலும் நான் ஏன் வருத்தப்படப் போறன்.. என்ரை இருப்பு வானளாவிய பெரிய சத்தியக்கடல் மாதிரி. அதிலே நீச்சலடித்தால் எனக்கு எல்லாம் மறந்து போகும். நீங்கள் போங்களண்ணா. வெற்றி முரசு கொட்டி இதைக் கொண்டாடுங்கோ.. நான் காதைப் பொத்திக் கொள்ளுறன்”

அப்போது கூட அவளுடைய உள்ளொளியாக ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற இருள் விழுங்காத அந்த அகவுலகம், அவனின் புறப்பார்வைக்கு எட்டாத வெறும் புதினமாகவே பட்டது புதினங்களையே பார்த்துப் பழகிய அவனின் மந்தகதியில் ஓடுகிற ஊனக் கண்களுக்கு முன்னால், மறை பொருளாகத் தோன்றுகின்ற அவளின் இருப்பு, இருள் விழுங்கிய ஒரு துருவப் பாதையில் நிலை கொண்டு உயிர் சரிந்து போய்க் கொண்டிருப்பது போல் அவன் கண்களில் அப்படியொரு மயக்கத் திரை. இந்தக் கதைப் பரிமாற்றத்தில் வீழ்ந்தது அவளல்ல. அவளால் மிகவும் விரும்பி நேசிக்கப்படும் பெருமைக்குரிய தமிழே தோலுரிந்து உயிர் விட்ட கதை தான்.. அதை அவன் அறியாமல் போனதுதான் இன்னும் பெரிய மன இழப்பு இப்படி இழப்புகளே பழகிப் போன அவளுக்குக் கடைசியில் மிஞ்சுவது தமிழே மூச்சாக நினைக்கிற உயிர்க் கொடை ஒன்று மட்டும் தான். அது போதும் என்றிருந்தது அவளுக்கு. ..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *