திருப்பங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 1,722 
 

வெளியே சைக்கிள் மணி ஒலித்தது. சற்றுநேரத் தில் வீட்டுக்காரி அவன் பெயருக்கு வந்திருந்த தந்தி யொன்றைக் கொண்டுவந்து நீட்டினாள். யாழ்ப்பாணத் தில் காலையில் அடித்த தந்தி இரவு நேரம் கடந்த பின்னர் தான் கிடைத்திருக்கிறது. படபடப்போடு பிரித்தான்; ‘Your father expired funeral tomorrow.’ — (உனது தகப்பனார் காலமாகிவிட்டார், ஈமைக்கிரியை கள் நாளையதினம்) சுவர்ப் பல்லியொன்று அடித்து வைத்துச் சொல்லியது.

ரவீந்திரன் அதிர்ந்து போனான். ‘ஐயா’ என்று ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது. கால்கள் நடுக்க மெடுத்தன. பக்கத்திலிருந்த கட்டிலில் அமர்ந்தான். கண்களில் சுழற்சி… அறையிலுள்ள சகல பொருட்களும் -‘யாமிருக்கப் பயமேன்?’ என அபயமளித்துக் கொண்டிருக்கும் சுவாமிப்படம் முதல் அடுக்கி வைக் “கப்பட்டிருக்கும் புத்தகங்கள் ஈறாக – பார்வையிலிருந்து வெகு தூரத்திற்கு விலகிக்கொண்டிருந்தன.

அவன் நாளைக்குச் சமூகத்தில் மதிக்கப்படக்கூடிய பெரிய மனிதனாகப் போகிறான் என்றால் அது ஐயா இட்ட பிச்சைதானே?

நன்றாக நினைவிருக்கிறது, சின்ன வயதில் அவனை விடியப்புறமே எழுப்பிவிடுவார் ஐயா, (தம்பி… படி ராசா… படி!”) இவன் சினத்தோடு எழுந்து கண்களை வேண்டா வெறுப்புடன் கழுவுவான், புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு (படிக்கிறானாம்!) கைவிளக் கோடு சேர்ந்து தூங்குவான். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஐயாவுக்கு இங்கேதான் கரி சனை. படிக்கிறானோ என்னவோ என்ற தவிப்பு. அடிக் கடி வந்து பார்த்து, ”படிக்கச் சொல்லி எழுப்பிவிட்டால்…… நித்திரை கொள்கிறாய் ?…….. பஞ்சி யைப் பாராமல் படி.ராசா!……… நல்லாய்ப் படிச்சால் தான் முன்னுக்கு வரலாம். அந்த ஆதரவான வார்த்தைகள் இன்றும் செவிகளில் ஒலிக் கின்றன. இனி, இப்படியெல்லாம் வழிகாட்ட யார் இருக்கிறார்கள்?

அப்பொழுதுதான் அறைக்குள் நுழைந்த நண்பன் சிவலோகநாதன் கேட்டான்; “என்ன மச்சான் விஷயம்?… ஒரு மாதிரி இருக்கிறாய்?”

கதைக்க முடியவில்லை. முயன்று கதைத்தால் அழு கை வெடிக்கும் போலிருந்தது. தந்திக் கடதாசியை அவனிடம் நீட்டினான். விஷயத்தை அறிந்த பின்னர் ரவீந்திரனின் முகத்தையே பார்க்க முடியாதவாறு கவலை பொங்கியது நண்பனுக்கு. ”இப்ப கவலைப்பட்டு என்ன செய்யிறது ரவீ?… எல்லாருக்கும் ஏற்படுகிற முடிவு இது தானே?………என்ன சுகமில்லாமல் இருந் தவரோ ?”

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. நல்லாத் தானே இருந்தார். சடுதியாக என்ன நேர்ந்துவிட்டது.

கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் ஊருக்கு சென்று வந்தபொழுது புகையிரத நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்த அந்தப் பரிவான முகம் நினைவை ஆக்கிரமிக்கிறது. பிரிய மனமில்லாமல் எவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்! “தம்பி!… கெட்ட சகவாசம் கூடாது… நல்ல குணமுள்ள பெடியளோடை சேரவேணும்… பீடி சுருட்டுக் குடிக்கிறவங்கள் உன்னை யும் ஏமாத்திக் குடிக்கப் பழக்கிப் போடுவாங்கள்… கண்டகண்ட பழக்கங்களுக்கு மனத்திலை இடம் குடுக் காமல் போனகாரியத்தைக் கெட்டித்தனமாய் முடிச்சுக் கொண்டு வரவேணும்!…. எங்கடை குடும்பம் இருக்கிற நிலைமை உனக்குத் தெரியும்… குடும்பம் சீரளியிறதும்… நல்லாய் வாறதும் பிள்ளையளின்ரை கையிலை தான் இருக்கு!” இப்பொழுதும் ஒரு சிறுவனுக்குப் புத்தி சொல்வது போலத்தான் அவரது நினைவு! அவர் கதைப் பதை எவ்வளவு நேரமென்றாலும் கேட்டுக்கொண்டிருக் கலாம். அவ்வளவு பாசம் நிறைந்த வார்த்தைகள். கடினமாகப் பேசத் தெரியாது. பக்குவமாகத் தடவுவது போலக் கதைப்பார்.

அவன் பயணப்படும் பொழுது, ஐயா சைக்கிளில் ஏற்றி வந்து ஸ்டேசனில் விடுவார்- கொஞ்சமும் நோக விடமாட்டார். அவனுக்கு ஒரு தலையிடி காய்ச்சலென் றால் துடித்துப் போவார். பாவம், ஐயா சும்மாவா இருந்தார்? விடிந்தாற் பொழுதறிதியும் தோட்டவேலை வேலையென்று… மண்வெட்டியும் கையுமாக… மண்ணோடு மண்ணாக,

–அவனது கண்கள் கலங்கின. அழுகை பொங்கிய பொழுது சொண்டைக் கடித்துக் கட்டுப்படுத்த முயற் சித்தான்.

“இப்ப என்னெண்டு போகப்போறாய் ரவி?… மெயில் றெயினும் போயிருக்கும்.” நண்பன் கேட்டான் .

“எப்பிடியாவது போகத்தானே வேணும் சிவா?”‘

“பஸ் இருக்குதோ தெரியாது… அப்பிடிப் போற தெண்டாலும்…இரவிரவாய் அலைக்கழிவாய் இருக்கும்… மோனிங் றெயினிலை போகலாம் தானே?”

ரவீந்திரன் சீறினான், “வளர்த்து ஆளாக்கிவிட்ட மனிசன் செத்துப்போய்க் கிடக்குது… இஞ்சை என்னை நிம்மதியாய் படுத்து நித்திரை கொள்ளச் சொல்லுறியோ?”

– ஐயாவை அவரது கயிற்றுக் கட்டிலிற் கிடத்தி யிருப்பார்கள். அம்மாவும், அக்காவும், தங்கைகளும் கட்டிலைச் சுற்றி நின்று அழுது குளறுவார்கள். அய லெல்லாம் கூடியிருந்து ஒப்பாரி வைக்கும். அந்தநிலையை உணர்ந்ததும் அவனுக்கு உடனடியாக வீட்டில் நிற்க வேண்டும் போலிருந்தது. அவர்களோடு சேர்ந்து கொண்டு தானும் குளற வேண்டும் போன்ற ஆவேசம்.

சிறுவயதிலிருந்தே ஐயா நாளும் பொழுதும் ஊட்டி வந்த உற்சாகம்தானே படிப்பில் பெரிய ஆர்வத்தை யும் ஆசையையும் தூண்டியது? உயர் வகுப்பில் சக மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு கல் லூரி… ரியூசன் என அல்லும் பகலும் அயராத படிப்பு.

படிப்பதென்றால் சும்மாவா? எவ்வளவு செலவு எதையுமே, தனது அசுர உழைப்பினால் ஐயா தளராது எதிர் நோக்கினாரே!

இரவு வெகுநேரம்வரை அவன் படித்துக் கொண் டிருந்தால் தம்பி… இனிக்காணும் ராசா… படு! விடிய எழும்பிப்படிக்கலாம்” -அவனது உடல் பாதிக்கப் படுமாம்! அதிகாலை இரண்டு மூன்று மணிவரை படிப் பை முடித்து அவன் படுக்கைக்குப் போகும்வரை ஐயா வும் விழித்துக்கொண்டே இருப்பார். நண்பர்களோடு சேர்ந்து படிப்பதற்காக அவன் வெளியே சென்றுவிட் டால் திரும்பும்வரை ‘தம்பி எங்கை போனவன்?” என அம்மாவிடம் நச்சரித்துக் கொண்டு வழியைப் பார்த்திருப்பார். எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும் அடுத்தனாள் விடியப்புறமே – தோட்டவேலைக்காக — அலுக்காமல் சலிக்காமல் எழுந்து விடுவார். ‘பாவம் ஜயாவைக் கதிரையில் இருத்தி வைத்து உழைத்துப் போடவேணும்’ என ரவி அடிக்கடி நினைத்துக் கொள் வான். அந்த எண்ணத்தில் இப்பொழுது ஏன் இடி விழுந்தது?

இருந்தாற்போல் தலையணையில் விழுந்து முகத் தைப் புதைத்துக்கொண்டு குமுறிக்குமுறி அழத்தொடங் கினான். சிவலோகநாதன் ஓடிவந்து பக்கத்தில் அமர்ந்து அவனது தலையை நிமிர்த்தினான் . ஆதரவோடு அணைத்து முகத்தைத் தடவியவாறு ஆறுதல் கூறினான். ”ரவி என்ன இது?… குழந்தைப் பிள்ளை மாதிரி?… டோன்ற் கிறை!… எழும்பு! எப்பிடியாவது இப்ப ஊருக்குப் போகலாம்.’

2

இரவு பதினொரு மணியளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து அநுராதபுரம் செல்கிற பஸ் கிடைத் தது. அநுராதபுரம் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் போகிற வழியைப் பார்க்கலாம், என்ற நினைவில் ஏறிக் கொண்டார்கள். நண்பனது மடியில் அழுது தீர்த்த பின்னர், பஸ்சிற்குக் காத்து நின்ற ஓரிரு மணித்தியாலங்களில் ரவீந்திரனது அதிர்ச்சி ஓரளவு குறைந்தது போலக் காணப்பட்டது. எதையாவது, தேவையான பொழுது கதைத்தான். கூடிய கெதியில் வீடுபோய்ச் சேர வேண்டுமே என்ற தவிப்பு மேலோங்கியிருந்தது.

இரவுப் பயணம். சிலரைத் தூக்கம் அணைத்துக் கொண்டது. இன்னும் சிலர் பக்கத்திலிருப்பவர்களை அணைத்துக் கொண்டிருந்தார்கள். ரவீந்திரன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான் , அவனுக்கு அருகாமை யில் ஒரு பெரியவர்.அவர், அவனது மனநிலையை அறி யாமலே சம்பாஷிக்கத் தொடங்கினார். அவர் வலிந்து – கதைக்கும் பொழுது பேசாமலிருப்பது பண்பற்ற செய லாகவும் பட்டது. பலவிஷயங்களையும் விடுத்து விடுத் துக் கேட்டார். சொன்னான்.

“நீர் என்ன செய்கிறீர்?”

இதற்கு என்ன பதிலைச் சொல்வது? பல்கலைக்கழக மாணவன் என உள்ளதை உள்ளபடியே கூறிவிடலாமா? எப்படி முடியும்?

இதற்கு முன்னர் ஒரு நாள் கொழும்பில் அறிமுகம் ஆகிய கனவான் ஒருவரிடம்பட்ட அனுபவம் இன்னும் மறந்து போகவில்லை. அவர் இவனது ”ஏ . எல். றிசல்ட்” டைக் கேட்டார். சொன்னான் –பெருமை தொனிக்க. அவர் ஏளனமாக சிரித்தார் ‘ தமிழ் ஸ்ரு டன்ஸ்சுக்குப் பரீட்சைகளில் மாக்ஸ் அதிகம் போடுகி றார்களாம்!” பத்திரிகைகளில் வெளிவந்த தலையங்கச் செய்திகள், பெருந்தொகையான தமிழ் மாணவர்களுக்கு உயர்தர வகுப்புப் பரீட்சையில் மேலதிக புள்ளிகள்!’ அவன் தங்கியிருக்கும் வீட்டுக்கார நோனா கூட அன் றைக்கு அதை தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்து கேட் டாள் –‘சரியில்லாத வேலை தானே?’ அவன் அதற் குச் சமாதானம் கூறமுடியாமற் சங்கடப்பட்டான். அப்படி இன்னொரு தலை குனிவா?

ரவி மௌனம் சாதித்தான். என்ன பதிலைச் சொல்வது? பெரியவர் திரும்பவும் கேட்டார், “நீர் உத்தியோகம் செய்கிறீரா?” பதில் சொல்லாவிட்டால் மனிசன் விடமாட்டார் போலிருந்து. ஏன் இப்படித் திருகுகிறார்.?

‘சொல்வதைச் சொல்லட்டும்’ என மனதிலே திடத்தை ஏற்படுத்திக்கொண்டு உள்ளதைக்கூறினான்.

“ஒழுங்காக விடைத்தாள்களைத் திருத்தியிருந்தால் ஒருவேளை உமக்கும் யூனிவேசிற்றியில் இடம் கிடைத் திருக்காது –” திட்டவட்டமான தீர்ப்பு! –

அவனுக்குப் பெரிய கவலையாக இருந்தது. அல் லும் பகலும் அயராது படித்தது இப்படி ஒரு கெட்ட பெயரைச் சம்பாதிப்பதற்குத்தானா? படித்து உயர் மட்டத்திலிருக்கின்ற கனவான்களே இப்படி யென்றால் பத் திரிகைச் செய்திகளைப் பார்க்கின்ற சாதாரண மக்கள் எம்மாத்திரம்? தமிழ் மாணவர்கள் கல்விமுறையில் உள்ள பலவித திட்டங்களினால் தாங்கள் பாதிக்கப்படு வதாக எதிர்ப்புக்குரல் தெரிவிப்பதை அமுக்குவதற்கு மேலிடத்திலுள்ளவர்கள் கிளப்பவிட்ட, புரளிதானே இது?

மூன்று வருடங்களுக்கு முன்னர் தரப்படுத்தல் போன்ற தடைகளைக் கடந்து தானே அவன் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முடிந்தது. இப்பொழுது இப் படியொரு பழியா? இந்தப் பழியைச் சுமந்துகொண்டு எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது? இப்படி. படித்ததற்காக வெட்கப்படவேண்டிய நிலைமை வேறு எந்த நாட்டிலாவது இருக்குமா?

இனம்புரியாத ஒருவித வேதனை மனதைக்குடைய ஆரம்பித்தது. இது ஐயா இறந்து போய்விட்ட கவலையை விடப் பெரியதாக வருத்தியது.

அந்த ஏழைத் தந்தை அவனை கல்விமானாக உயர்த்து வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார். உயிரை வெறுத்து உடலை உருக்கிக் கல்விச் செல்வத்தை அளித்த ஐயா, இப்பொழுது இருந்தால் இந்தப் பழியை எப்படித் தாங்கிக் கொள்வார்?

பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரயாணி கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். கவலை இல்லாத மனிதர்கள். சாரதியைப் பார்க்க பாவமாக இருக் கிறது. இவ்வளவு பேரையும் பாதுகாப்பாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவனுடையது. இந்த நடுநிசியிலும் விழிப்போடு ஓடுவதைப் பார்த்தால் அவனுக்காகவே விழித்திருக்க வேண்டும் போலிருந்தது.

3

ஓடிச்கொண்டிருந்த பஸ்சை கும்மிருட்டில் நின்று ஒருவன் மறித்தான் . பஸ் சடுதியாக நிறுத்தப்பட்டது . அந்தக் குலுக்கத்தில் பலருக்கு உறக்கம் கலைந்தது. ‘இவன் இப்படி நிறுத்திப் புறப்பட்டால் எத்தனை மணிக்குத்தான் போய்ச் சேருவது – முணுமுணுப்புக் கள் அவ்வளவு அவசரமாக போகவேண்டிய ஏதோ தலைபோகிற அலுவல்கள் இருக்கிறது, அவர்களுக்கு!

சாரதி கண்ணாடியினூடாக வெளியே பார்த்து , “மொக்கத?” என்றான். பஸ்சை மறித்தவன் அண்மை யில் வந்து விபரம் சொன்னான்.

வீதியின் குறுக்கே விழுந்து கிடக்கும் தென்னை மரத்தையும், மறுபக்கமாகப் பள்ளத்தில் பிரண்டு கிடக்கும் லொறியையும் கவனித்த பிரயாணிகள் விபத் தொன்று நடந்திருப்பதை ஊகிக்கின்றனர். வீதியில் ஒருவன் பிரக்ஞையில்லாமற் கிடந்தான்.

தூக்கங்கள் பறந்துபோக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வெளியே குதித்தார்கள், நொந்துபோய்க் கிடக்கிறவனுக்கு உதவி செய்வதில் இவ்வளவு ஆர்வம் இருக்கிறதே!

பிணத்தைப்போலக் கிடந்தவனைச் சூழ்ந்து கொண்டு – விசாரணை ஆரம்பிக்கின்றது.

“பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறானே?”– “என்ன நடந்தது?”

பஸ்சை மறித்தவன் விஷயத்தைச் சொல்கிறான் –

சற்று முன்னர் அடித்த பெரியகாற்றில் மரமொன்று வீதியின் குறுக்கே சாய்ந்திருக்கிறது. வேகமாக லொறியை ஓட்டிவந்த சாரதி மிக அண்மையில் வரும் வரை அதைக் கவனிக்கவில்லை. கண்டபின்னர் பாரத் (தோடு வந்த லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாதளவு நெருக்கம். மரத்தோடு லொறி பலமாக அடிபட, சறுக்கி வீசப்பட்டு மறுபக்கமாக பள்ளத்தில் பிரண்டுவிட்டது. சாரதி தருணத்தில் வெளியே பாய்ந்து தப்பிவிட்டான். சிறுகாயங்கள். அவனது நண்பன் • கிளீனருக்கு’ பலமான அடி. இருளில் எல்லாமே அதிர்ச்சியாக நடந்து முடிந்துவிட்டது. சிரமத்தோடு அவனை இழுத்துத் தூக்கிவந்து வீதி ஓரத்திற் கிடத்தி விட்டு ‘ யாராவது வரமாட்டார்களா?’ என்ற ஏக்கத் தோடு நின்றிருக்கிறான்.

‘வெறியிலை வந்திருப்பான்? – ‘ஏன் ஒரு நிதான மாக ஓடக்கூடாது?’ பஸ்சிலே வந்தவர்களின் அபிப் பிராயமும், அனுதாபமும், “இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்?”

எப்படியாவது கொழும்புக்குக் கொண்டு செல்வது தான் நல்லது – அங்கே எங்கள் கடையும் இருப்பதால் கவனிப்பதற்கு வசதியாயிருக்கும்” என அவன் பதிலளித்தான்.

4

சிங்களத்தில் எழுத வாசிக்க அவ்வளவு தெரியா விட்டாலும் சிங்களக் குடும்பங்களுடன் இரண்டறக் கலந்திருக்கிற புண்ணியத்தில் பேசவும் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் ரவீந்திரனுக்கும் நண்பனுக்கும் முடியுமாகையால் அவர்களது சம்பாஷணை விளங்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் கதைப்பதிலிருந்து அது முந்தல் எனும் இடத்துக்கு அண்மையான ஓர் இடம் என அறிந்து கொண்டனர். முந்தலில் ஓர் அரசினர் வைத்தியசாலை இருக்கிறதாம். ஆனால் அங்கு வைத்திய வசதிகள் குறைவு எனக் கதைத்துக் கொண்டார்கள்.

“நீ சொல்வது போல எப்படியாவது கொழும்புக் குக் கொண்டுபோவது தான் நல்லது… எப்பிடிக் கொண்டு போகப் போகிறாய்?”

“கொழும்புக்குப் போகிற சாமான் லொறிகளில் போகலாம். இப்பொழுது ஒன்று போனது. ஆனால் அவர்கள் ஏற்ற முடியாது என்று சொல்லிவிட்டார்கள்”

“ஏன்?”

“இடமில்லையாம்…! அவர்கள் தமிழ் ஆக்கள்!”

“கொஞ்சம் கூட மனிசத் தன்மை இல்லாதவர்கள்”

சிவலோகநாதனுக்கு அவர்களது இந்த அபிப்பிரா — யம் கொதிப்பை ஏற்படுத்தியது, “பார் மச்சான் இந்த விஷயத்தையும் துவேசமாய்த்தான் கதைக்கிறாங்கள்” என்றான்.

“ஆனால் இப்படி ஆபத்திலை கைவிட்டுப் போறதும் பிழைதானே?… இவர்களும் அவங்களைப் போலை ராவி ருட்டியிலை வீதியிலை ஓடித்திரியிற தொழிலாளியள் தானே?… நாளைக்கு இதே நிலைமை அவனுக்கு நடந் தால் ஆர் பாக்கிறது?” என ரவீந்திரன் நியாயத்தைக் கூறி அவளைச் சமாதானப்படுத்தினான்.

அவர்களது குறுக்கு விசாரணை தொடர்ந்து கொண் டிருந்தது.

“வேறை லொறிகள் வராதா?”

“சாமான் லொறிகள் வரும்”

இதற்குள்ளே சிலர் எப்படி பஸ்சை மறுபக்கம் எடுக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.

“சரி! அப்ப இனி வருகிற லொறியை மறித்துக் கொண்டு போ! நாங்கள் போகிற வழியிலை வந்தால் சொல்லி அனுப்பிவிடுறம்.” ஒரு நோயாளிக்கு ஆலோ சனை வழங்குகிற வைத்தியரின் கரிசனை!

தென்னை மரம் சாய்ந்து வீதியின் குறுக்கே கிடப்ப தால் பஸ்சை மறுபக்கம் எடுப்பது சிரமம். கலந்தா லோசிக்கப்பட்ட பின்னர், எல்லோருமாகச் சேர்ந்து மரத்தை இன்னும் சற்று உயர்த்தினால், ஓரமாகத் திருப்பி, மறுபக்கம் எடுத்து விடலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

5

அந்த மனிதன் இறந்தவன் போலக்கிடந்தான். கண்கள் மூடிக்கிடக்கின்றன – என்றாலும் மூச்சு இருக்கிறது.

அனைவரும் ஒன்று சேர்ந்தனர். கைகள் உயர்ந்தன. சரிந்திருந்த மரம் மெதுவாக உயர்ந்தது.

“லொறியிலை போனவங்கள் தமிழர் என்றபடி யால் தான் தங்களை விட்டுட்டுப்போனவங்கள் என்று அவன் சொன்னான் -இவங்கள் துள்ளியடிச்சதைப் பார்த்தால் ஏதோ வெட்டிப் புடுங்கப் போறாங்களாக் கும் எண்டு நினைச்சன்… இப்ப இவங்களும் விட்டிட்டுத் தானே போகப் போறாங்கள்!” சிவலோகநாதன் சினங் கொண்டு கேட்டான்.

இப்பொழுது பஸ் மறுபக்கம் வந்துவிட்டது. ‘இனிக் காலைவரை போகமுடியாது தானே’ என ஏக்கம் படர்ந் திருந்த முகங்களெல்லாம் மலர்ச்சியடைந்தன. ஒருவரை’ ஒருத்தர் முந்திக்கொண்டு ஏறத்தொடங்கினர்.

“மனிசன் ஐக்கியப்பட்டால் என்ன தான் முடியாது? எல்லாரும் ஒன்று சேர்ந்த படியால்தான் இந்தப் பெரிய மரத்தையே நொடிப்பொழுதில் உயர்த்தி வாக னத்தை மறுபக்கம் எடுக்க முடிந்தது. இப்படித்தான் மனிசர் ஒருத்தருக்கொருத்தர் உதவியாயிருக்க வேணும்.” முன்னர் அறிமுகமாகிய பெரியவர் ரவீந் திரனைக் கண்டதும் இப்படிக் கூறிக்கொண்டு பஸ்சில் ஏற ஓடினார்.

“ஐக்கியம், ஒற்றுமை எண்டு சொல்லுறதும் சந் தர்ப்பவாதம்தான். கெதியிலை போய்ச் சேரவேணு மெண்ட எண்ணத்திலை தான் அவங்களெல்லாம் இந்த மரத்தைத் தூக்கிறதுக்கு ஒண்டு சேர்ந்தார்கள். இல் லாட்டி ஒருத்தரையும் பிடிச்சிருக்கேலாது.” -பெரியவர் மேல் ஏற்பட்ட சீற்றத்தை ரவீந்திரனிடம் காட்டினான் சிவா.

அதிகம் பேசாமலிருந்த ரவீந்திரனுக்கு இப்பொழுது சிவாவை சமாதானப்படுத்த வேண்டும் போலிருந்தது,

“எந்தப் பிரச்சனையையும் வகுப்பு வாதமாக்கிற திலை ஒரு பலனும் கிடைக்கப் போறதில்லை… தன்ரை இனத்தவன் எண்டபடியால் நிச்சயம் உதவுவான் என்று லொறிக்காரன் நினைச்சான்… ஆனால் இவங்கள் அந்தக் காரணத்துக்காவது தங்கடை அற்ப தேவைகளைக்கூட விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை! மனிசரிலை ஊறிப் போயிருக்கிற சுயநல உணர்வுதான் இது! சிங்களவ னாயோ தமிழனாயோ இருக்கிறதாலை எந்தவிதமாக விஷேச குணமும் தோன்றாது. மனிச வர்க்கத்திலை சுய ‘நலம் கருதாத ஒற்றுமையுணர்வு இருந்தாத்தான் உண்மையான ஐக்கியம் பிறக்கும்.”

பஸ் “ஸ்ராட்’ செய்யப்பட்டது.

“கிட்ட இருக்கிற ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய் முதலுதவியெண்டாலும் செய்திருக்கலாம் தானே?” சிவலோகநாதன் அபிப்பிராயப்பட்டான்.

-ஐயாவைக் கட்டிலில் கிடத்தியிருப்பார்கள் . அம்மாவும், தங்கைகளும், அக்காவும் உயிரை மாய்த் துக் கொள்வது போலக் குளறிக்குளறி — ரவிக்கு அவர் களோடு சேர்ந்து குளறவேண்டும் போலிருந்தது .

“இனி ஏதாவது லொறி வருமோ தெரியாது!” – திரும்பவும் சிவாவின் நச்சரிப்பு. அவனால் இருப்புக் கொள்ள முடியவில்லை.

– பஸ் ஓடுகிறது!

பின்னே திரும்பிப்பார்த்தான் ரவி. இருள் — ‘போகவா நிற்கவா?’ எனத்தனித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிர் – அவனது அடிபட்ட உடல் –‘செத்துப்போய் விடுவானா?’

அந்த ஏழைத்தொழிலாளியின் மகன் எங்கையா வது ஒரு பாவமும் அறியாமற் படித்துக்கொண்டிருப் பான். தனது தந்தையை ஒரு நாளைக்காவது சொகு சாக இருத்தி உழைத்துப் போட வேண்டும் என்று கனவு காண்டான். ‘Your father expired funeral tomorrow’ என ஓர் இடி விழும்.

இப்பொழுது ரவீந்திரனுக்கும் இருப்புக் கொள்ள முடியவில்லை. இருக்கையை விட்டு எழுந்தான்.

மணியை அடித்ததும் பஸ் நிறுத்தப்பட்டது. பிரயாணிகள் சினத்தோடு திரும்பிப் பார்த்தனர் – நடத்துனர் கேட்டான்; “என்ன விஷயம்?”

ரவி தனக்குத் தெரிந்த சிங்களத்தில் பதில் சொன்னான், “உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறவளை இப்படி விட்டுப் போறது சரிதானா?”

சரியான கேள்வி, இனி அவர்கள் எல்லோருமே திரும்ப வேண்டும்.

– சிரித்திரன் டிசம்பர் 1980 – கொடுத்தல், சிரித்திரன் அச்சகம், முதற்பதிப்பு: 10-6-1983

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *