திருந்தாத சமுதாயம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 10,327 
 

நேரு மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடத்தை பராமரிக்கும் வேலையை ஒரு தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைந்திருந்தது.

செல்வம் காரை பார்க் செய்தவுடன், ஒரு தடித்த மனிதன் ஒரு துண்டுச் சீட்டை நீட்டி முப்பது ரூபாய் கேட்டான்.

“ என்னப்பா!…அநியாயமா இருக்கு….சைக்கிளுக்கு இரண்டு ரூபாய்…பைக்கிற்கு ஐந்து ரூபாய்…கார்களுக்கு பத்து ரூபாய் என்று தானே நம்ம மாநகராட்சி கட்டணம் நிர்ணயம் செய்திருக்கு…..நீ எதற்கு முப்பது ரூபாய் கேட்கிறாய்?….”

“ இங்கு அது தான் கட்டணம்…அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மட்டும் தான்!… இஷ்டமிருந்தா இங்கே நிறுத்துங்க…அப்புறம் உங்க இஷ்டம்!…”

வேறு வழியில்லாமே முப்பது ரூபாயைக் கொடுத்தான் செல்வன்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்தப் பணியைக் கவனிக்கும் மாநகராட்சி அதிகாரிக்குப் போன் செய்தான். அந்த அதிகாரி மிகவும் கோபக்காரர் என்றும் தன் கீழ் வேலை செய்யும் பணியாளர்களை கடுமையாகத் திட்டி வேலை வாங்குவார் என்றும் கேள்விப் பட்டிருந்தான்.

லைனில் அந்த அதிகாரியே வந்தார். செல்வம் காலையில் நடந்ததை கோபமாகச் சொல்லி, “ இது ரொம்ப அநியாயம் சார்!..” என்று சொன்னான்!

“ சாரி…சார்!….இப்பத்தான் என் கவனத்திற்கு இது வந்திருக்கு..நான் உடனே ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்று பொறுமையாகச் சொன்னார் அந்த அதிகாரி.

உடனே ஜீப்பை எடுத்துக் கொண்டு அந்த அதிகாரி அந்த வேலையை குத்தகைக்கு எடுத்த காண்டிராக்டர் வீட்டிற்கே போனார்.

“என்னிடம் இருபது ரூபாய் தான் கார்களுக்கு வசூலிப்பதாகச் சொன்னீங்க!.. இப்ப முப்பது ரூபா வசூலிப்பதா புகார் வந்திருக்கு!… நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரியில்லே!.” என்று கோபமாகப் பேசினார்.

“எதுக்கு சார் இப்படி கோபப் படறீங்க!….நமக்குள்ள என்ன இருக்கு….அந்த இடம் கூட்டம் நிறைய வருகிற இடம்…அதைப் பார்த்திட்டுத்தான் நான் முப்பது ரூபா வசூலிக்கச் சொன்னேன்!…இப்ப என்ன கெட்டுப் போச்சு…இருபது ரூபா வசூலிக்க நான் உங்களுக்கு மாசா மாசம் தருவதா சொன்ன மாமூலை இனி இரண்டு மடங்காக்கி முதல் தேதியே உங்க வீட்டிற்கு அனுப்பிடறேன்!…நீங்க கவலைப் படாமே வீட்டிற்குப் போங்க!… என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

ஆய்வை முடிந்து விட்டு, சந்தோஷத்தோடு அந்த மாநகராட்சி அதிகாரி ஜீப்பிற்கு விரைந்தார்!

பாக்யா11-17 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *