தற்கொலை தான் முடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 10,471 
 

கல்பனா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

இன்று தான் அவளது கடைசி நாள், இந்த பாழாய்ப் போன பூமியில். இந்த முடிவில் மாற்றத்திற்கே இடமில்லை.

நோயிலும், வேதனையிலும் ஒரு நாளைப் போல சாவதை விட, ஒரேயடியாக போய் சேர்ந்து விடலாம்.

இது என்ன வாழ்க்கை, ஒரு பிடிப்பும் இல்லாமல், ? இந்த இருபத்திரண்டு வயதில் எல்லா வேதனைகளையும் அனுபவித்தாகி விட்டடது. போதுண்டா சாமி ! இதை விட நிம்மதியாகசெத்து மடியலாம்.

பாவம் கல்பனா, இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக தோற்றவள்.சுகமாக செத்துப் போவதற்கும் அதிர்ஷ்டம் பண்ணியிருக்க வேண்டும் போல. அது கூட அவளுக்கு இல்லை.

போன மாதம், பாம்பு புற்றில் கையை விட்டு தன்னை மாய்த்து கொள்ள பார்த்தாள். கடிபட்டது தான் மிச்சம். வேறொன்றும் ஆகவில்லை.

விடவில்லை அவள். ஒரு வாரம் கழித்து , அரளி விதைகளை விழுங்கினாள். அவள்மயங்கி விழுந்தது தான் மிச்சம். இன்னும் நிறைய சாப்பிட்டுருக்கணுமோ? அவளை பொறுத்தவரை, அவள் நினைத்தது எதுவுமே நடக்க வில்லை. சாவு கூட. கண்ணா மூச்சி காட்டுகிறது !

அம்மா அப்பா இல்லாத கல்பனாவை வளர்த்தது அவளது பாட்டிதான். அந்த பாட்டியே முடிவாக சொல்லிவிட்டாள். ”போதும் உன் பைத்தியக்காரத்தனம் ! சாவுதான் உன் பிரச்சனைக்கு முடிவா? யாருக்கு இல்லை பிரச்னை ? உன்னை இனிமேல் தனியாக எங்கும் அனுப்ப மாட்டேன். நீ எங்காவது உசரத்திலேருந்து குதித்து தற்கொலை பண்ணிப்பே. இல்லே காலை உடைச்சிகிட்டு வந்து நிப்பே. யார் நொண்டியை வெச்சிகிட்டு படறது?பேசாம இங்கேயே கிட!”.

கல்பனாவை வெளியே எங்கேயும் அனுப்ப பாட்டி மறுத்துவிட்டாள்.

கல்பனாவின் கதை ஒரு சோகக்கதை. அவளுக்கு ஒரு வயது இருக்கும்போதே, அவளது அப்பா, அவளது அம்மாவை உதறி விட்டு, வேறோருத்தியிடன் குடும்பம் நடத்த போய்விட்டான்.

அப்போது, கல்பனாவுக்கு, எதுவும் தெரியாத, புரியாத வயது. அதனாலோ என்னவோ, தனது இழப்பே தெரியாமல், குதித்து கும்மாளம் போட்ட காலம் அது. அம்மாவின் அரவணைப்பில், அவளது தந்தை பிரிவு தெரியாது திரிந்தாள். பாட்டி வேறே பக்க பலமாக இருந்தாள்.

ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமாக இல்லை. விதிக்கு ஏனோ அவளிடம் ஒரு வேண்டாத ஈடுபாடு. மீண்டும் ஒரு முறை அவளது வாழ்க்கையில் விளையாடியது.

கல்பனாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அம்மாவின் சிநேகிதன் ஒருவன், ராஸ்கல், அம்மாவை அழைத்துக் கொண்டு ஓடி விட்டான். பத்து நாள் கழித்து, அம்மாவின் சடலத்தை ஊட்டியில் பார்த்ததாக பாட்டியின் உறவினர் சொன்னார்கள். அனாதையான கல்பனாவுக்கு, அப்போது முதல், அவளது பாட்டி தான் துணை.

கல்பனாவின் கன்னிப் பருவம் சந்தோஷமாகதான் இருந்தது. கல்பனாவுக்கு நிறைய நண்பிகள். அவளும், அவளது தோழிகளும் ஒன்றாகவே இருந்தார்கள். ஆனால், எதுவும் நிலைக்க வில்லை. ஒவ்வொருவராக அவளை விட்டு பிரிய ஆரம்பித்து விட்டார்கள்.

ஒருத்தி மைசூர் பக்கம் வேலை தேடிக் கொண்டு விட்டாள். இரண்டு பேருக்கு, தமிழ் நாட்டிலேயே அரசு வேலை கிடைத்து விட்டது. சின்ன வேலை தான், ஆனாலும் அரசு வேலையாயிற்றே. ரெண்டு மூணு பேர் டெல்லி, கல்கத்தா பக்கம் போய் விட்டார்கள்.

கல்பனாவுக்கு அரசு உத்தியோகம் எதுவும் கிடைக்க வில்லை. ஆனால், பாட்டி வேலை செய்யும் எஸ்டேட்டிலேயே ஏதோ சின்னதாக, ஒரு வேலை கிடைத்துவிட்டது.ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

கல்பனாவிடம் ஒரு நல்ல குணம். அவள் கொஞ்சம் இருந்தாலே, திருப்தி அடைந்துவிடுவாள். அதனால், எதற்கும் அல்லல் படாமல், பாட்டியின் துணையுடன், அவளதுஇளமைக்கால வாழ்க்கை அமைதியாக, தெளிந்த நீரோடை போல் போய்க் கொண்டு இருந்தது.

அவள் சும்மா இருக்கலாம். ஆனால், அவளது இளமை சும்மா இருக்குமா? வாலிபம் வெறுமே இருக்குமா? அவளது ஹார்மோன்கள் ரீங்காரமிட ஆரம்பித்து விட்டன. இரவு நீண்டன. துணை தேட ஆரம்பித்தாள். விரகத்தில் தவித்தாள்.
அப்போது தான் , எஸ்டேட்டில், அவள் கணேசனைப் பார்த்தாள். எதேச்சையாக ஒரு நாள், அவளது பாட்டியை பார்க்க வந்திருந்தான். பார்த்தவுடனேயே அவன் மேல் ஒரு ஈர்ப்பு வந்து விட்டது அவளுக்கு. ஆஹா! இந்த கணேசன் என்ன ஒரு அழகு? என்ன ஒரு கம்பீரம்?

அவள் அவனை நோக்கினாள். அண்ணலும் அவளை நோக்கினான். கண்டதும் காதல் என்பது இதுதானோ? காதல் நெருப்பு, பார்த்தவுடன் பற்றிக் கொண்டது.

கணேசனுக்கு முப்பது வயது இருக்கும்.கல்பானாவை விட பத்து வயது பெரியவன் தான்.ஆனால், அதெல்லாம் பார்த்தா காதல் வருகிறது? காதலுக்கு தான் கண்ணில்லையே!

இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். உயிருக்குயிராய் காதலித்தனர். ஒரு நாள், பாட்டியின் சம்மதத்துடன், கணேசனுடன், கல்பனா, இல்லறத்தில் இணைந்தாள். தனியாக வாழ்க்கை அமைந்தது. கல்பனாவின் வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள் அவை. கொம்புத்தேனாய் இனித்தது.

அந்த சந்தோஷமும் நீடிக்க வில்லை. இரண்டே வருடங்கள் தான். விதிக்கு வேறே வேலையே இல்லை போலும். எப்போதும் இவளை சுற்றியே வந்து கொண்டிருந்தது.

திடீரென ஒரு நாள், அவளுக்கு மூளைக்குள்ளே ஏதோ பிராண்டுவது போல வலி . எப்போதும் தலை வலி, கடுமையை தாங்க முடியவில்லை அவளால். சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொண்டாள். காதில் லேசாக ரத்தம் கசிந்தது.

பாட்டி வந்து பார்த்தாள். டாக்டரிடம் அழைத்து போனார்கள். மூளையில், சின்னதாக ஒரு கட்டி வந்திருக்கிறதாம். மருந்து கொடுத்தார்கள்.

ஒரு வருஷம் ஓடியது. கட்டி குணமாகவில்லை. கட்டி மருந்துக்கெல்லாம் பே பே என்றது . நாளாக நாளாக கல்பனாவிற்குவலி அதிகமானது. மண்டையே வெடித்து விடும் போல. ‘ஓ” வென்று கத்தினாள். முனகினாள். எப்போதும் மண்டைக் குடைசல்.

எதிலும் நாட்டமில்லை. காதலும் கசந்தது. இல்லறத்தில் ஈடுபாடு இல்லவே இல்லை.

பொறுத்துப் பார்த்தான் கணேசன். கொஞ்ச நாளில் அவனுக்கும் வெறுத்து விட்டது.நோயாளியுடன் குடும்பம் நடத்த அவனுக்கு விருப்பமில்லை. இது சரிப் பட்டு வருமென தோன்றவில்லை. பார்த்தான், கணேசன், சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் ஓடிப் போனான்.

கல்பனாவின் வாழ்க்கை சூனியமானது. கணேசனை பிரிந்த தனிமை, நரகமாயிருந்தது. நோயின் கொடூரம் வேறு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

‘செத்துப் போயிடு, செத்துப் போயிடு’ என்ற குரல் அவளது காதுகளில், எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. தாங்க முடியாத தலை வலி. கூடவே கணேசனை பிரிந்த மன வலி

சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. பாட்டி வந்து பார்த்துக் கொண்டாள். கல்பனா வேலைக்கு போக மறுத்தாள். சுருண்டு சுருண்டு படுத்துக் கொண்டாள்.

****

இன்று கல்பனா ரொம்ப தீர்க்கமாக இருந்தாள். வேறு வழி தெரியவில்லை. தன் உயிரை மாய்த்துக் கொள்வதில் உறுதியாக இருந்தாள். யாரும் பார்க்காத போது, தன் மூச்சை அடக்கி, பிராணத்தியாகம் செய்யப் போகிறாள். அது ஒன்று தான் இப்போது சாத்தியம்.ரொம்பக் கஷ்டம் தான். ஆனால், உயிர் வாழ்வது என்பது, அதை விட கஷ்டம்.

யாரும் இல்லாத நேரம். யார் கண்ணிலும் படாமல், ஒரு ஓரமாக போய் காலை மடித்துஉட்கார்ந்து கொண்டாள். முதலில் தனது நுரையீரலில் இருந்த காற்று அத்தனையையும் வெளியேற்றினாள். பின் தனது மூக்கை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். வாயை மூடிக் கொண்டாள். தன் சுவாசத்தை அடக்க ஆரம்பித்து விட்டாள்.

ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள், கல்பனாவால் முடியவில்லை. மூச்சை அடக்க முடியவில்லை. அவளது தோள்பட்டை வலிக்க ஆரம்பித்து விட்டது. சுவாசிக்க சொல்லிமூளை ஆணையிட்டது. ஆனால், கல்பனா திடமான முடிவோடு இருந்தாள்.

‘மரண தேவனே வா! வந்து என்னை அழைத்துக் கொள். இந்த நரகம் எனக்கு வேண்டாம்!

அவளது இதயம் படார் படார் என அடித்துக் கொண்டது. மயக்கம் கண்ணை சுழற்றியது..ஏதோ ஒரு ஒளி வட்டம். கொஞ்சம் கொஞ்சமாக, பனிக்கட்டி நடுவில் இருப்பது போன்றஒரு குளிர், உடல் முழுவதும் பரவியது.

ஏதோ அனிச்சை செயல், அவளது மூக்கை விடுவிப்பது போல இருந்தது. மீண்டும் சுவாசிக்க ஆரம்பிப்பது போல மெல்ல தோன்றியது. . ‘மாட்டேன், சுவாசிக்க விட மாட்டேன் அவளுக்கு நிம்மதி வேண்டும்!’ அவளது கான்சர் கட்டி வந்த மூளை மாற்று உத்தரவிட்டது. மண்டைக்குள்ளேயே ஒரு பெரிய சண்டை.

கல்பனவிற்கு ஏதேதோ எண்ணங்கள். அவளது கணேசன் அவளைத்தேடி வருவது போல.‘கல்பனா, கல்பனா’, என்று யாரோ தட்டிக் கூப்பிடுவது போல. பாட்டி அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் போல.

இதெல்லாம் கொஞ்ச நேரம் தான். மெதுவாக, எல்லோரும் அவளை விட்டு விலகிப் போவது போல உணர்ந்தாள். மெதுவாக நினைவு தப்ப ஆரம்பித்தது.

கல்பனாவின் தோள்பட்டை வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது. உடல் பறப்பது போன்ற ஒரு உணர்வு. எல்லா துயரங்களும் அவளை விட்டு பறந்தன. மனம் காலியாகி விட்டது.

ஏதோ பறவைகளின் சத்தம் . அவளை சுற்றி சின்ன சின்ன பறவைகள். அண்ணாந்து , வானத்தை பார்த்தாள். தூரத்திலே கருடன் மேல் அமர்ந்து, ஒரு கையில் சக்ராயுதத்தை ஏந்தியபடி, சிரித்தபடி, இறைவன் கல்பனாவை நோக்கி வருவது போல தோன்றியது. ஒரே ஒளி வட்டம். எங்கும் அமைதி. மயான அமைதி.

“ஆஹா! விடுதலை! விடுதலை! நாராயணா! மாதவா! ரங்கா! ரங்கா!’ வந்து விட்டாயாபெருமாளே ! வா ! எனக்கு இந்த உலகத்திலிருந்து விடுதலை கொடு. போதும் நான் பட்டது ! ”அவள் மனம் ஆர்ப்பரித்தது. ஆனால், கல்பனாவின் உடல் மெதுவாக, மெதுவாக அடங்கிப் போனது. அவளது சப்த நாடியும் தான்.

*****

கல்பனாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் சொன்னது இதுதான்.“கல்பனாவின் மரணம் இயற்கையானது இல்லை. தற்கொலை தான்”

கூட இருந்த அரசு அதிகாரி கேட்டார் “மரணம் எப்படி ஏற்பட்டது? எப்படி நீங்கதற்கொலைன்னு உறுதியாக சொல்றீங்க? ஏன் இது இயற்கை மரணமா அல்லது விபத்தாஇருக்கக் கூடாது?”

“இல்லே! உயிர் போன நேரத்திலே இங்கே வேறே யாரும் இல்லை. உயிர் பிரிய ‘அப்னீயா’ தான் காரணம். அதாவது வெளி மூச்சு வாங்கி விடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த கேஸ்லே, தன் வாயை மூடி, மூச்சை அடக்கி தன்னை தானே தற்கொலை பண்ணிக் கிட்டிருக்கணும். ”

“இது சாத்தியமா?”

“அப்னீயா என்பது ஒருவரது தூக்கத்திலே கூட ஏற்படலாம், மருந்தினாலே ஏற்படலாம், கொலையாக இருக்கலாம், அல்லது தானே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்” டாக்டர் நிறுத்தினார். .

எல்லோரும் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் தொடர்ந்தார் “ உயிர் போன நேரத்தில், கல்பனா இருந்த விதத்தை பார்த்தால்,அவள், தன் தும்பிக்கையை தனது முன்னங்காலிலே வைத்து அழுத்தி, மூச்சை அடக்கி,தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாள் என்றே சொல்ல வேண்டும். வேறு எப்படியும்இருக்க வாய்ப்பில்லை. இதுதான் நடந்திருக்க வேண்டும்.”

அதிகாரி கேட்டார் “ நம்பவே முடியலியே! ஒரு யானை, தற்கொலை பண்ணிக் கொள்ளுமா?இது சாத்தியமா?”

உடனிருந்த வனச்சரகஅதிகாரி சொன்னார் “இது சாத்தியம் தான். மனிதர்களுக்குமட்டுமில்லை, நிறைய உயிரினங்களுக்கும் எண்ணங்கள் உண்டு. சிந்திக்க கூடியவை.யானைக்கு, பயம், கோபம், வருத்தம், சந்தோஷம் எல்லாம் நம்மை போல உண்டு. பிரேத பரிசோதனையில் கல்பனாவுக்கு ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு மூளையிலே கட்டி இருந்தது. அப்படிப் பார்க்கபோனால், நோயின் தாக்கம், மன அழுத்தம் காரணமாக வெறுப்பு ஏற்பட்டு, கல்பனா தற்கொலை பண்ணிகிட்டிருக்கலாம். இதிலே ஆச்சரியப் படரதுக்கு ஒண்ணுமே இல்ல.”

கேட்டுக் கொண்டிருந்த வன அதிகாரி சொன்னார் : “ஆமா ஆமா! எல்லா வசதியும் இருந்த மர்லின் மன்றோ, சில்க் ஸ்மீதா இவங்கல்லாம் தற்கொலை பண்ணிக்கச்சே, பாவம் கஷ்டத்திலேயே இருந்த கல்பனா பண்ணிக்க கூடாதா?”.

**** முற்றும்

யானை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: இந்த திரிக்கு செல்லவும்: ( நன்றி கூகிள்)

Yes, Elephants do committ suicide

http://en.wikipedia.org/wiki/Elephant_cognition

http://www.pbs.org/wnet/nature/unfor…/emotions.html

http://www.pinterest.com/MakaylaEmmaG/elephants/

“Elephants, the largest land animals on the planet, are among the most exuberantly expressive of creatures. Joy, anger, grief, compassion, love; the finest emotions reside within these hulking masses. Through years of research, scientists have found that elephants are capable of complex thought and deep feeling. In fact, the emotional attachment elephants form toward family members may rival our own.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *