தர்மக்கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 8,461 
 

செந்திலுக்கு இன்று சம்பளநாள். மகிழ்ச்சியாக இருந்தான். இரவுச் சாப்பாdட்டை வெளியிலேயே முடித்துவிட்டு இப்பொழுதுதான் அவன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான். சம்பளப்பணத்தை பத்திரமாக பெட்டியில் வைத்து மூடினான். தன் மேசை இழுவையைத் திறந்து அதிலுள்ள குறிப்பேட்டை எடுத்தான். இரவு அறைக்கு வந்ததும் அன்றையச் செலவுக் கணக்கை எழுதுவது அவனது வெகுநாளையப் பழக்கம். அவனிடம் இரு குறிப்பேடுகள் உண்டு. ஒன்றில் அன்றாட வரவுசெலவுகளையும், மற்றொன்றில் அவன் சிலசமயம் செய்கின்ற நல்ல காரியங்களையும் தருமங்களையும் எழுதிவைப்பான். இன்று வரவு செலவுக் கணக்கை எழுதிவிட்டு தருமக்கணக்கை எழுதும் குறிப்பேட்டை எடுத்தான்.

அவனுக்கு மிகவும் இரக்கக்குணம் உண்டு. தன் கண்ணெதிரே யாராவது கஷ்டப்பட்டால் உடனே உதவிசெய்ய ஓடுவான். மனிதர்களுக்கு மட்டுமல்ல, சேற்றில் சிக்கிக்கொண்ட நாய், அடிபட்டுக்கிடக்கும் பறவை என்று எந்தப்பிராணியாக இருந்தாலும் உதவுவான். இன்றும் அவன் அலுவலகம் கிளம்பும்பொழுதும், திரும்பி வரும்போதும் எதேச்சையாக இருவருக்கு உதவி செய்யும்படி நேர்ந்தது. இன்று காலை அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு முதியவர் தட்டுத்தடுமாறி நடந்து வந்தவர் பேருந்து நிறுத்தம் அருகில் மயங்கி விழுந்துவிட்டார். அங்கிருந்த சிலர் செந்திலும்தான் அருகில் சென்று நடுரோடில் கிடந்த அவரை சாலையோரம் தூக்கி வந்து முகத்தில் நீர் தெளித்து உட்கார்த்தி வைத்தனர். விசாரித்ததில் இந்தத் தள்ளாத வயதில் அவரை அவர் மகன் வீட்டைவிட்டுத் துரத்திவிட்டதாகவும் சாப்பிட்டு எரண்டு நாளாகிவிட்டதாகவும் ஈனஸ்வரத்தில் முனகினார். ஒரு சிலர் பரிதாபப்பட்டு அவருக்குப் பணம் கொடுத்தார்கள். செந்தில் பக்கத்திலிருந்த உணவகத்துக்கு அவரை மெல்ல அழைத்துச்சென்று அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அவனுக்குத் தெரிந்த முதியோர் இல்லத்தின் விலாசத்தைக் கொடுத்து, அவரை அங்கு போய் உதவிக் கேட்கச்சொல்லிவிட்டு, பின் தன் அலுவலகம் சென்றான். அலுவலகத்தில் மதியம் சாப்பாட்டு நேரத்தின்போது சிலர் ஒரு பிரபலமான அனாதையாசிரமத்திற்கு நன்கொடை கேட்டு வந்தார்கள். அவர்களுக்கு, செந்தில் அவனுடைய பங்காக ஐம்பது ரூபாய் தந்தான். இந்த இரு செயல்களையும் தருமக்கணக்கு எழுதும் கையேட்டில் எழுதிவைத்தான். பிறகு சிறிதுநேரம் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் பூமியதிர்ச்சி பற்றிய செய்தித்தொகுப்பு ஓடிக்கொண்டிருந்த்து. கொஞ்சநேரம் அதைப் பார்த்தவன் தூக்கம் கண்களைச் சுழட்ட தொலைக்காட்சியை அணைத்துவிட்டு படுத்தவன் உடனே உறங்கிப்போனான்.

திடுமென்று அவன் படுத்திருந்த கட்டில் ஆடியது. அவன் சட்டென்று விழித்துப் பார்க்கும் முன்பாக அந்தக் கட்டிடம் பலமாக ஆடி, அப்படியே இடிந்து அவன் இடிபாடுகளில் சிக்கி நினைவிழந்தான்.

எவ்வளவு நேரம் ஆனதோ, அவன் கண்களை சிரமப்பட்டுத்திறக்கும்போது அவன் இருந்த இடம் ஒரு அரசவைப் போல் இருந்த்து. உயரத்தில் சிம்மாசனத்தில் ஒருவர் கம்பீரமாக அம்ர்ந்திருந்தார். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவர் அருகில் அமைச்சரைப் போல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் கையில் தலையணை போல் ஒரு புத்தகம் வைத்திருந்தார். அடிக்கடி அதைப் பார்த்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவர்களுக்குக் கீழே வரிசையாக நிறையபேர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் தானும் நிற்பதை உணர்ந்தான். அவர்களுக்கு இருபுறமும் பயங்கரத் தோற்றத்துடன் சிலபேர் நின்றுகொண்டிருந்தார்கள். அரியணையில் அமர்ந்திருந்தவர் ஏதோ சொல்லச்சொல்ல கீழே நின்றுகொண்டிருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்துச்சென்று கொண்டிருந்தனர்.

வரிசையில் செந்திலுக்கு முன்பு துறுதுறுவென்று ஒரு சிறுவன், ஏழ்மைக்கோலத்துடன் ஒரு மூதாட்டி, உடலே மறையுமளவுக்கு நகையணிந்து ஒரு நடுத்தர வயதுடைய ஒருவர் நின்று கொண்டிருந்தனர்.

செந்திலுக்கு, தான் நிற்குமிடம் எமலோகம், மேலே அமர்ந்திருப்பவர் எமனும், சித்ரகுப்தனும் என்று புரிந்தது.

ஒவ்வொருவராக சென்றபிறகு அந்தச் சிறுவனின் முறை வந்தது. அவனைப் பார்த்த எமன், ‘ இந்தச் சிறுவனின் பாவபுண்ணியக் கணக்கு என்ன?’ என்றார்.

அதற்கு சித்ரகுப்தன், இந்தச் சிறுவன், பிறந்ததிலிருந்து எந்த ஜீவராசியைப் பார்த்தாலும் அதைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பான். சும்மா தெருவில் போகும் நாயைக் கல்லால் அடிப்பான். பட்டாம்பூச்சியைப் பிடித்து அதன் இறக்கைகளைப் பிய்ப்பான்.”

அதற்குமேல் கேட்க பொறுமையில்லாமல் ‘ஹூம், இவனை நரகத்திற்கு அழைத்துப்போ’ என்று உத்தரவிட்ட எமன் ‘அடுத்து?’ என்றார்.

அடுத்தபடியாக அந்த மூதாட்டி வந்தாள். ‘pi ரபோ, இவள் பிறந்ததிலிருந்து வாழ்க்கையில் கஷ்டங்களையே பார்த்திருக்கிறாள். கடைசியில் பிச்சைக்காரியாக வாழ்ந்து வந்தாள். இரண்டு, மூன்று நாளுக்கொரு முறைதான் இவளுக்கு சிறிதளவு சாப்பாட்டிற்கு ஏதேனும் கிடைக்கும். அந்தமாதிரி ஒருமுறை தன் சாப்பாட்டை பசித்திருந்த இன்னொரு ஜீவனுக்குக் கொடுத்துவிட்டாள்.’

‘சரி, இவளை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அடுத்து?’

‘இந்த மனிதர், செல்வந்தராகப் பிறந்து செல்வத்திலேயே திளைத்தவர். வருமானவரியிலிருந்து தப்பிக்கவே தர்மம் என்ற பெயரில் பணம் கொடுப்பார். விளம்பரத்துக்காக கோவில்களில் குழல்விளக்குகள் போட்டுக்கொடுப்பார். தன் பெயரை விளக்கின்மேல் எழுதி, அவற்றிலிருந்து வரும் வெளிச்சத்தை தடுத்து கோவிலையே இருட்டாக்கிவிடுவார், ப்ரபு.’

எமன், தாங்கமுடியாத கோபத்துடன், ‘இவனை நரகத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய் எண்ணெய்க்கொப்பரையில் இடுங்கள்’ என்றார்.

அடுத்து செந்திலின் முறை வந்தது. செந்தில் மனதில் எண்ணம் ஓடியது, ‘நாம் எவ்வளவு தர்மம் செய்திருக்கிறோம். நிச்சயம் நமக்கு சொர்க்கம்தான்’

சித்ரகுப்தன் தொடர்ந்தார், ‘ப்ரபோ, இவர் நிறைய தர்மங்கள் செய்வார்.’

செந்தில் கர்வத்துடன் நிமிர்ந்துப் பார்த்தான். ‘ஆனால் ஒவ்வொருமுறை தர்மம் செய்தவுடன் அதை ஒரு கைப்புத்தகத்தில் நினைவாகக் குறித்துவைத்துக்கொண்டு, அடிக்கடி அதைப் பார்த்து தான் செய்த தருமத்தை கர்வத்துடன் நினைத்து மகிழ்ந்து போவார்.‘ இவருக்கு, சொர்க்கமா, நரகமா தெரியவில்லை ப்ரபு’

‘சந்தேகமே வேண்டாம். தர்மம் செய்வதை நினைவில் வைத்துக்கொள்வதே பாவம். இவன் அதை எழுதிவைத்து மகிழ்ந்தானென்றால் நிச்சயமாக இவனுக்கு நரகம்தான். ஹூம், அழைத்துப் செல்லுங்கள் இவனை.’

‘ஐய்யயோ, எனக்கு நரகமா’ செந்தில் கதறினான்.

வியர்த்துக்கொட்டி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவனுக்குச் சிறிதுநேரம் சென்றபிறகுதான் தான் கண்டது கனவு என்று புரிந்தது. சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் ஒரு தீர்மானத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தான்.

நேரே மேசையருகே சென்று அதன் இழுவையைத் திறந்து தான் தருமக்கணக்கு எழுதி வைத்திருந்த கைப்புத்தகத்தைச் சுக்குநூறாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *