தண்ணீர் விட்டோம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 13,804 
 

தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இன்றைக்குத்தான் சார்ஜ் எடுத்தேன். . சார்ஜ்.. எடுக்கும்போதே நான் சமாளிக்க வேண்டிய சவால்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்தியா முழுக்க விஸ்வரூபம் எடுத்திருக்கும் வறட்சியின் கோர தாண்டவம் தமிழகத்தையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நேரம் இது சோறுடைத்து சோழ நாட்டில் கூட பூமி பொட்டல் காடாய் வறண்டு கிடக்கிறது. அணைகளும்,கண்மாய்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்க,விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. காவிரித்தாயிடம் சுண்ணாம்பு பெறும் பிள்ளையாக நாம் இருக்கும்போது ராணிப்பேட்டை எம்மாத்திரம்?..

ஜீப்பில் சுற்றும் போது வழியெங்கும் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் கூட சைக்கிளில் இரண்டு பக்கங்களிலும் குடங்களைக் கட்டிக் கொண்டு, தண்ணீருக்காக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் இன்னொரு பாலைவனமாக மாறிவருகிறதா?.இனி என்னென்ன அழிவுகள் வரப் போகின்றனவோ?.இயற்கை பொறுமையானதும், கொடைத்தன்மைக் கொண்டதுவும் மட்டுமில்லை, ஈவு இரக்கங்கள் அற்றவையும் கூட.

பாலாற்று பாலத்தைக் கடக்கும் போது,அனல் காற்று சுரீரென்று முகத்தில் அறைய,முகம் எரிகிறது.. இன்னும் கத்திரி கூட பிறக்க வில்லை. ஜீப்பை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். சுற்றுப்பட்ட ஊர்களுக்கெல்லாம் தண்ணீர் அளந்துக் கொண்டிருக்கும் பாலாறு ஆறு மேற்கிலிருந்து கிழக்காய் பாம்புபோல் வளைந்தோடுகிறது,உயிரற்ற சடலமாய். இரண்டு திசைகளிலும் கண்களுக்கெட்டிய தூரம், அடிவானம் முட்ட,வெளேரென்று பொட்டல்வெளி,சொட்டுத் தண்ணீரில்லை.. மணல் வாரப்பட்டு, அடி செம்மண் தரை மொட்டென்று தெரிகிறது.ஆற்றங்கரை ஈஸ்வரன் கோவிலைச் சுற்றியிருக்கும் தென்னை மரங்கள் குருத்துடன் சேர்ந்து உலர்ந்துபோய் பாடம் பண்ணிய சவம் போல் நிற்கின்றன. ஆற்காடு என் சொந்த ஊர்தான், ஆனால் இருபது வருஷங்களுக்கு முன்பே குடிபெயர்ந்து சென்னையில் போய் செட்டில் ஆகிவிட்டதில் ஊர் அந்நியமாகிவிட்டது. ஆற்காடு டவுன், பாலாற்றுபாலம், ராணிப்பேட்டை, சிப்காட் பகுதி, இங்கெல்லாம் அப்ப நிறைய சைக்கிளில் சுற்றியிருக்கிறேன். ஏரியா அத்துபடி. இருபது வருஷங்களில் ஊர் எவ்வளவு மாறியிருக்கிறது? .ஆற்றின் வடக்குக் கரையோரத்தில், வறட்சி காலங்களில் கூட  ஓடையாய் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். .பெண்கள் அம்பாரம் அம்பாரமாய் அழுக்குத் துணிகளை சப்சப்பென்று அடித்துத் துவைக்கும் காட்சிகள், அப்புறம் இருமருங்கும் அடர்த்தியான தோப்புகள். ஊர் துணிகளை வெளுக்கடிக்கும் ஏகாலிகள் துறை. ஆற்றோரங்களில் கிழக்கு மேற்காய் பச்சைப் பசேலென்று  விரிந்தோடும்  நெல் வெள்ளாமை நிலங்கள். இன்றைக்கு எல்லாம் போய் பொட்டல்தான் மிஞ்சியிருக்கிறது .அங்கெல்லாம் கலர்கலராய் கற்கள் நடப்பட்டு, வீட்டு மனைகளாக ஆக்கப்பட்டிருந்தன. எங்கும் வெக்கையின் தீட்சண்யம் கொளுத்துகிறது.

ஆபீஸில் உட்கார்ந்தேன். குடிதண்ணீர் இல்லை ஆறு நாட்களாய் குழாயில் தண்ணீர் வரவில்லை. தண்ணீர் பாக்கெட்டுகளும், வாட்டர் கேன்களும் சராசரி ஏழ்மை நிறைந்த இந்த ஊருக்கு கட்டுபடியாகுமா?. ஆரம்பித்து விட்டார்கள். நாளை மறுநாள் சாலை மறியல். மகளிர் அணி கொடுத்திருக்கும் நோட்டீஸ் டேபிள் மீது கிடக்கிறது. நகராட்சி கமிஷனர், மற்றும்ஊழியர்களின் கூட்டத்தைக் கூட்டினேன். நீர்இருப்பு நிலைமைகளையும்,விநியோகிப்பதில் உள்ள பிரச்சினைகளையும்  உள் வாங்கிக் கொண்டேன்.மாலைவரை அவர்களுடன் விவாதித்தேன்.

முதல் காரியமாக மகளிர் அணித் தலைவியிடம் ஒரு பதினைந்து நாட்களுக்கு போராட்டத்தை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டேன். அன்றிலிருந்து காலை நேரங்களில் தலையில் மஃப்ளரைச் சுற்றி கொண்டுஒவ்வொரு தெருவாய் சுற்ற ஆரம்பித்தேன். குழாய்களில் தெருகோடி வரையிலும் பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாய் தண்ணீருக்காக தவமிருக்கின்றன.சுற்றிலும் மக்கள் கூட்டம்.

“வாங்கித் துன்ன பசங்க நாலு நாளுக்கு ஒரு தபாவாவது தண்ணி வுட்டுக்கிட்டு இருந்தானுங்களே இப்ப இன்னாகேடு? ஏழு நாளாச்சி கொழாய் தண்ணியப் பார்த்து. எப்பிடி பொழைக்கிறது?. த்தா! இவனுங்கள யாரு கேக்கறது?..”

“நாம போயி கலெக்டரைப் பர்க்கலாம்பா. ஏன் தண்ணி வரலன்னு அவரு சொல்லட்டும்டா..”

“நாம ஏன் அங்க போவணும்?. சாலைமறியல்னு எல்லாரும் ரோட்ல குந்துங்கடா. த்தா! எல்லா பசங்களும் நம்மள தேடி இங்க வரட்டும்டா. ஹக்காங்!.”

”டேய்! எதுவும் விஷயம் தெரியாம துள்ளாதீங்கடா. ஆத்தில சப்ளை பண்ற மூணு கெணறுகள்ல ரெண்டு வத்திப் போச்சாம்டா. முப்பது வருசமா வத்தாத கெணறுங்கடா அதுங்க. இப்ப ஒரேயொரு கெணறுதான் ஊர்முழுக்க சப்ளை பண்ணுது அத்த தெரிஞ்சிக்கோங்க. சட்டியில இருந்தாத்தானப்பா ஆப்பையில வரும்?. ”

“இருக்கட்டும்யா ஒரு ஏரியாவுக்கு ஒருநாள்னு டெய்லி ரெண்டு டேங்க் தண்ணிய ஏத்தி எறக்கறாங்க இல்லே?.. அவ்வளவும் எங்க போவுது?.தலைக்கு நாலு கொடம் ஆப்ட்டா கூடப் போதும். அம்மாந் தண்ணியும் எங்க போவுது?.”

“பெரிய எடத்து விசயம்.ஏண்டா பொல்லாப்பு?..”—-சொன்னவன் ஜாக்கிரதையாய் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்.

“பலான பலான ஆளுங்கட்சி ஆளுங்க, எதிர்கட்சிக்காரனுங்க, அவனுங்களோட மாமன் மச்சான்னு சொந்தக்காரனுங்க, அப்புறம் வூட்டு கனெக்‌ஷன் வெச்சிங்கீற துட்டு பெருத்த பேமானிங்க, எல்லாம் வூட்ல மோட்டாரு போட்டு தண்ணிய உறிஞ்சிட்றானுங்கன்னு உரக்க சொல்லேண்டா. எவனுக்குத் தெரியாது?. மொத்த லிஸ்ட்டும் எங்கிட்ட கீதுடா ஹக்காங். தெரு கொழாய்ல எம்பையன் மூத்திரம் பெய்யறாப்பல தண்ணி வந்தா நமக்கு எப்பிடி ஆளுக்கு நாலு கொடம் ஆப்டுமாம்?..”

இனி ஆற்றில் வேறிடத்தில் எங்காவது போர் போடலாம் என்பதற்கு சான்ஸ் இல்லை. அப்படி ஏற்கனவே இரண்டு இடங்களில் போட்டுப் பார்த்து விட்டார்கள். இருநூறு அடி போயும் சொட்டு தண்ணீர் இல்லை. ஸோ கிடைக்கும் தண்ணீரை அளவாய் பங்கிட்டாலே போதும். பிரச்சினைகளை ஓரளவு சமாளிக்கலாம்.என்பது புரிந்தது. அதுக்கு திருட்டுத்தனமாய் பம்ப் பண்றதை ஒழிக்கணும். அடுத்து அதற்காக போர்கால அடிப்படையில் செய்ய வேண்டியவைகளை நகராட்சி கமிஷனருக்கு உத்திரவிட்டு விட்டு,அதன் எதிரொலியை தவிர்க்க, சுற்றுப் பட்ட கிராமங்களை பார்வையிட கிளம்பிவிட்டேன். இம்மாத கடைசி வாரத்தில் முதல்வர் கூட்டியிருக்கும் வறட்சி நிவாரண ஆய்வு கூட்டத்திற்கு போவதற்கு முன்பாக ஏரியாவை ஸ்டடிபண்ணி ரிப்போர்ட் தயார் பண்ணியாகணும்..

போகுமிடமெங்கும் எங்க பார்த்தாலும் வறட்சி…வறட்சி…விளைநிலங்களெல்லாம் பொட்டால்காடாய் கிடக்கிறது.உலகின் பேரழிவு சீக்கிரமே வந்துவிடுமோ என்று அச்சப்பட வைக்கிறது. ’நீரின்றி அமையாது உலகு.’அடுத்த இருபது ஆண்டுகளில் சுத்தமான குடிதண்ணீர் இல்லாமல் நூறு கோடி பேர் அழியப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் சொல்லுகிறது. கடைசியாக தாசில்தாருடன் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தேன். எங்கும் மக்கள் குடங்களுடன் ஓடிக் கொண்டிருந்தனர். போகுமிடந்தோரும் தண்ணீரைத் தேடியலைவதே மக்களின் இன்றைய பிரதான வேலையாகிப் போச்சு.. எப்படியும் சமாளித்தாக வேண்டும். பஞ்சாயத்து கட்டடத்தில் போய் உட்கார்ந்தோம். ஊர் பிரமுகர்கள் திரண்டனர்.

“ இன்னாத்தங்க சொல்றது?. நாங்க பட்ற தண்ணி கஷ்டத்தை சொல்லி மாளாதுங்க. பொண்டுக இங்கிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால, குப்ப கவுண்டர் கெணத்துக்குப் போய் தண்ணி தூக்கிட்டு வருதுங்க.. புண்ணியவான்  இப்ப அவரு கெணறுதான் ஊருக்கே படியளக்குது ஐயோ! பகவானே! ஆடு,மாடுங்கள்லாம் தண்ணியில்லாம சாவுதுங்கய்யா. .கோராமையா கீது சாரு. தலைவரும் ரெண்டு எடத்தில போர் போட்டுப் பார்த்தாருங்க. இருநூறு அடி ஆழம் போயிகூட  ஒண்ணும் சொகமில்லீங்க. கீழ தண்ணி கீற மாதிரியே தெரியல.”.—. சொன்ன பெரியவர் முகத்தில் எதிர்கால பயம் தெரிந்தது.

“பெரியவரே! நிலைமையை நீங்களே சொல்லிட்டீங்க. மூணு நாலு வருஷமா காயுது. இப்ப குடிதண்ணிக்கு என்ன செய்யலாம்?.யார்கிட்டவாவது யோசனை இருந்தா சொல்லலாம்.”

ஒருத்தர் எழுந்து நின்றார்.அறுபது வயசு இருக்கலாம்.கதர் சட்டை, ஒடிசலான தேகம்,முகத்தில் ஒருவார சொறசொறப்பு..

“ஏரியின் நீர்பிடிப்பு ஏரியாவில் போர் போட்டுப் பார்க்கலாம் சார். காலங்காலமாய் நீர் தேங்கற பகுதி. அங்க  நீரோட்டம் இருக்க சான்ஸ் உண்டு சார்.’

உண்மைதான் சான்ஸ் இருக்கு.வித்தியாசமான சிந்தனை.நீங்க யார் சார்.?.”

“ நான் ரிட்டையர்டு ஃபாரஸ்ட்டு ரேஞ்சர் சார். ஓய்வுபெற்று  மூணு வருஷமாச்சி. மரக் கன்றுகளை உற்பத்தி செய்து,பெயருக்கு அதுக்கொரு விலை வெச்சி ஒரு கன்று ஒரு ரூபாய்னு மக்களுக்கு கொடுத்து வளர்க்கச் சொல்லி பிரச்சாரம் பண்ணிக்கிட்டு வர்றேன்.”——எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. முதன் முறையாக நான் சந்திக்கும் ஒரு சமூக பொறுப்புள்ள மனிதன்.

“உலகத்திலேயே அதிகம் மழை பெய்யுமிடம் ’சிரபுஞ்சி’ ன்னு பிள்ளைகளுக்கு இன்னைக்கும் சொல்லிக் குடுக்கிறோம்.. ஆனா இன்னிக்கு அங்க குடிக்க தண்ணீர் இல்ல சார். ஏன்?, சுற்றியிருந்த பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காடுகளை அழிச்சிட்டாங்க.. இன்னிக்கு நமக்கு வந்திருக்கிற நெலமைக்கும் இதுதான் சார் காரணம். மரங்களை வெட்றது, நமக்கு நாமே செய்துக் கொள்ளும் தவணைமுறை தற்கொலை சார்.”—எழுந்து ஆர்வத்துடன் அவர் கையைப் பற்றி குலுக்கினேன். பஞ்சாயத்து தலைவர் குறுக்கிட்டார்.

“இந்தப் பக்கம் ஒரு ஏழெட்டு கிராமங்கள்ல புரட்டாசியிலயிருந்து கார்த்தி, மார்கழி மாசம்வரைக்கும்மழை காலத்தில நடக்கிற கல்யாணங்கள்ல நாங்க யாரும் தேங்காய் பை குடுக்கிறது இல்லீங்க, பதிலுக்கு ரெண்டு மரக்கன்னுங்களைத்தான் பையிலே வெச்சி குடுக்கிறோம். சொல்லிச் சொல்லி எங்கள மாத்தினது இவருதான் சார்..”—-இப்போது அந்த ரிட்டையர்டு ரேஞ்சர் பேசினார்.

” மழை காலத்தில நட்டால் தண்ணி ஊத்தத் தெவையில்லை.. சீஸன் முடியறதுக்குள்ள செடி வேர்புடிச்சிக்கும். எப்படியும் படிக்குப் பாதியாவது தேறிடும்.”.

“வெரி இண்ட்ரஸ்டிங்..மனுஷனின் சோம்பேறித்தனத்தைப் புரிந்து ப்ளான் பண்ணியிருக்கீங்க.ஆனா எத்தனை பேர் சார் சிரத்தையா கொண்டுபோய் நடுவாங்க?. நட்டாதானே பொழைக்கிறதுக்கு?.. நம்ம ஜனங்க அந்தப் பக்கமா போயி வீசியடிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க சார். உங்க உழைப்பு வேஸ்ட்டா போகும் சார்.”

“போவட்டும் சார்! வேஸ்ட்டா போவட்டும்..போனவாரம் புதுப் பேட்டையில ஒரு வி.ஐபி வீட்டுக் கல்யாணம். ஆயிரம் கன்றுகளைக் கொடுத்தோம். அதில் நூறு கன்றுகள் ஏன் ஐம்பது நட்டால் கூட போதும். நாளை ஐம்பது ஆயிரமாகும்.”—அவர் கனவுகளுடன் பேசினார்.இந்த மனிதரைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கேயோ சிலர் இருக்கிறார்கள். .இவரைப் போன்ற சமூக பொறுப்பு மக்களுக்கு வந்தால் இங்கே பல அதிசயங்களை நடத்திக் காட்டலாம்.ஹும்!.

“ஓகே! இவர் சொன்னதைப் போல பரிட்சார்த்தமா உங்க ரெட்டை ஏரி நீர் பிடிப்புல ஒரு முன்னூறு அடி ஆழம் போர் போட உடனே ஏற்பாடு பண்றேன். பார்ப்போம். சக்ஸஸ் ஆயிட்டால் மற்ற ஊர்களுக்கும் விஸ்தரிக்கலாம்..”—எல்லோரும் கைதட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.அந்த சமூக சிந்தனையாளருக்கு நன்றி சொல்லிவிட்டுக்  கிளம்பினேன்..

ஐந்து நாட்கள் கழித்து இன்றுதான் ஆபீஸுக்குச் செல்லுகிறேன்.. இந்த ஐந்து நாட்களாய் யார்யாரோ ஆபீஸூக்கு வந்து எல்லோரையும் மிரட்டிவிட்டும், என்னை கண்டமேனிக்கு திட்டிவிட்டும்,  சென்றிருக்கிறார்கள்.. எதிர்பார்த்ததுதான். ஒன்பது மணி சுமாருக்கு தொகுதி எம்.எல்.ஏ. தன் பரிவாரங்களுடன் வந்துவிட்டார். ப்யூன் ஓடிவந்து என்னிடம் தகவல் சொல்வதற்குள் தடாலடியாக கும்பலுடன் உள்ளே வந்து விட்டார்.. அனுமதி பெற்று உள்ளே வரும் நாகரீகம் இன்றைய அரசியல்வாதிகளின்  அகராதியிலேயே இல்லை.

”என்ன கலெக்டர் சார்!, வந்தவுடனே புரட்சி பண்றீங்களா?..

“புரியல.”

“இந்த ப்ளம்பர் பசங்களுக்கு எம்மாந்திமிரு?.எங்க கட்சி ஆளுங்க வூடுகள்ல புகுந்து தண்ணி மோட்டாரை கழட்டிக்கிட்டு வந்திருக்கானுங்க.எல்லாம் உங்க உத்திரவாமே? என்னா எங்க கட்சிக்காரங்கள மட்டும் புடிக்கச் சொல்லியிருக்கீங்க. எதிர் கட்சி ஆளுங்க யாரும் மாட்டக் காணோம். எல்லாம் சத்தியகீர்த்தியா மாறிட்டாங்களா?.”—நக்கலாய் சிரித்தார்.

“சார்! உங்களுது தவறான தகவல். தப்பு பண்ணவங்களை மட்டுந்தான் பிடிக்கிறோம்.. அவங்க எந்த கட்சின்னு நாங்க ஏன் பார்க்கணும்? ஏன்? எதிர் கட்சி ஆளுங்களுந்தான் பத்து பேர் மாட்டியிருக்காங்க. நேத்து மட்டும் மொத்தம் நாற்பது மோட்டார்களை கண்டுபிடிச்சி கைப்பற்றியிருக்காங்க. அடுத்து இன்னைக்கு அவங்க கனெக்‌ஷனை கட் பண்ணப் போறோம்.”

எம்.எல்.ஏ. முன்னே சாய்ந்து நின்று அழுத்தமாகப் பார்த்தார்.

“முடிஞ்சா கட் பண்ணிப் பாருங்க.”

“சார்! கோவப்படாதீங்க.. இன்னைக்கு இருக்கிற நிலையில, மூணு நாட்களுக்கு ஒரு தடவை தலைக்கு நாலு குடம் தண்ணியாவது ரெகுலரா தர முடியுமா? ன்னு மண்டையைப் பிச்சிக்கிட்டு இருக்கேன்.இதில அரசியல்கட்சி ஆளுங்களும், சில பணக்காரங்களும்,  சட்ட விரோதமா மோட்டார் போட்டு பெரியபெரிய டேங்க்ல ஏத்திட்டு, குடி தண்ணீரை குளிக்கவும்,துணி துவைக்கவும், வீட்டைக் கழுவவும் யூஸ் பண்றீங்களே, அது அநியாயமில்லையா?. ..அதுமட்டுமில்லை மெய்ன் குழாயிலிருந்து வீடுகளுக்கு அரை அங்குலம் பைப்லைன் தான் அனுமதிக்கப்பட்ட அளவு. ஆனா உங்களை மாதிரி அரசியல் ஆளுங்க  வீடுகளுக்கு  இரண்டு அங்குல பைப்லைன் போவுது. எப்படி?. கழனிகளுக்கு இறைக்கிற மாதிரி உங்க டேங்க்ல தண்ணி கொட்டுது.   வேண்டாம் சார். இது கஷ்டமான நேரம். எல்லாருக்கும் குடிநீர் கிடைக்கணும். உங்க கட்சியைச் சேர்ந்த ஒரு பெரிய மனுஷன் வீட்டில நானே பார்த்தேன். கிருமிநாசினி கலந்து, சுத்தப் படுத்தி, மனுஷன் குடிப்பதற்காக அனுப்பும் குடிநீரை அந்தாளு பாத்தி கட்டி ரோஜா செடிக்குப் பாய்ச்சறான்..சோஷியல் அகனி. இப்படி இன்னும் யார்யாரு வீட்டில சாகுபடி நடக்குதோ தெரியல..”

“சரி…சரி கொஞ்சம் நீக்கு போக்கா நடந்துக்கோங்க.”

“ வத்தாம இருக்கிற ஒரு கிணத்தை மட்டும் வெச்சிக்கிட்டு இன்னும் அஞ்சி மாசம் இந்தப் பெரிய டவுனை எப்படி சமாளிக்கிறது?.ஜனத்தொகை— மூணு லட்சத்து பதிமூன்றாயிரம்… விழி பிதுங்குது. இந்தக் கிணறும் எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும்னு தெரியாது..அடுத்த வருஷமும் மழை சரியாக இருக்காதுன்னு வானியல் துறை சொல்லுகிறது.வாழ்க்கையே இன்னைக்கு கேள்விக்குறியாக  இருக்குது.. தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்க வேண்டியது இன்றைய மஸ்ட். இதில நீக்குபோக்கு என்ன சார் நீக்குபோக்கு.?.கடுமையாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி மேலிடத்து உத்திரவு, செயல்பட விடாமல் தடுப்பவர்கள் பெயரை முதலமைச்சர் செல்லுக்கு தெரிவிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.இது போர்கால நடவடிக்கைன்னு முதல்வர் சொல்லியிருக்கிறார். முதல் கட்டமாக அந்த  இரண்டு அங்குல பைப் லைன்களை எல்லாம் நீக்கிட்டு அவைகளை அரை அங்குல பைப் லைன்களாக மாத்தறோம். கவலைப் படாதீங்க. இரண்டு மணி நேரத்தில் உங்க வீட்டு குழாயில் நிச்சயம் இருபது  குடங்களுக்கு மேல் கிடைக்கும். குடிக்க அது போதும்.மத்ததுக்கு வீட்டிலிருக்கிற கிணத்துத் தண்ணியையோ,போர் தண்ணியையோ,  பயன் படுத்துங்க. அது உப்புத்தண்ணி, துணி துவைச்சா நுரை வரலேன்னு சொல்லிக் கொண்டிருக்கிற நேரமில்லை இது. ப்ளீஸ் சார் என்னை தவறாக நினைக்காதீர்கள்..”—–எம்.எல்.ஏ. எதுவும் பேசாமல் வெளியேறினார். முதலமைச்சர் செல் என்ற சொல் வேலை செய்தது.

நகராட்சியின் குடிநீர் குழாய் இணைப்பில் மோட்டார் பொருத்தி உறிஞ்சாதீர்கள். இணைப்பு துண்டிக்கப் படும்.என்று தண்டோரா போடப் பட்டது. டிவி ஃப்ளாஷ் நியூஸில் விளம்பரப் படுத்தப் பட்டது.. ஊரே இப்போது கப்சிப்.ஓகே! இனி எல்லாம் ஒரு ஒழுங்குமுறைக்கு வந்துவிடும்.அப்பாடா சட்டத்தின் மூலமும்,தண்டனையின் மூலமும்தான் மனிதன் ஒழுங்குக்கு வருகிறான், போதனையினால் அல்ல என்பதற்கு இன்னுமொரு ப்ரூஃப்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த  மூன்றாம் நாள் தண்ணீர் வந்தது. என்னாச்சி?. ஒண்ணுமே ஆகவில்லை.அதே பழைய கதைதான். எதுவும் மாறவில்லை.மக்கள் கொதித்துப் போய் அலுவலகம் முன்பாக வந்து கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்தார்கள். சொல்ல முடியாத வேதனை. எப்படி இது? இத்தனை நடவடிக்கைகளுக்குப் பின்பும் ஏன் மாறவில்லை/.. இனி எப்படி இதை டீல் பண்ணுவதென்றே தெரியவில்லை.. ப்ளம்பரைக் கூப்பிட்டேன்.

“சார்! ஒருத்தனும் இங்கே பயப்படல சார். பெரிய மனுசனுங்க இப்ப தண்ணி திருட்ற டெக்னிக்கை மாத்திட்டாங்க சார். கண்டுபிடிச்சிட்டேன். கதவை உள் பக்கமா  பூட்டிக்கிறாங்க., கூஜா மாதிரி கைக்கு அடக்கமான சின்னச் சின்ன பம்ப்களெல்லாம் இப்ப மார்க்கெட்ல இருக்குசார்.,அத்த பைப்ல சொருவி டேங்க்கை ரொப்பிக்கிணு கையோடு கொண்டுபோயி மறைச்சி வெச்சிட்றாங்க. பொட்டு சத்தம் வெளியே வரல.சார்.”

சே! இவர்களுக்கு யார் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை. சுயநலம் ஒன்றே குறி..என்ன பண்ணலாம்? மண்டை காய்கிறது. உபதேசம்—உதவாது,சட்டத்தையும் ஏமாற்றி விடுவார்கள்.என்னதான் தீர்வு?. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான்.நிர்தாட்சண்யமான தண்டனை உண்டென்றால் மட்டுமே உலகோர் நெறியில் நிற்பர் என்கிறது மனுதர்மம். அதற்குள் பொதுமக்கள் சார்பாகவும், மகளிர் அணி சார்பாகவும் கலெக்டருக்கு பெட்டிஷன் போக,அவர் வேறு கூப்பிட்டு காய்ச்சுகிறார். என்ன பண்ணப் போகிறீர்கள்?. என்ன பிளான்? என்று கேட்கிறார். என்ன சொல்றது? இருந்தாத்தானே சொல்றதுக்கு.. யோசனை…யோசனை… அன்றிரவு முழுக்க தூங்கவில்லை.

மறுநாள் ஊழியர்கள் கூட்டத்தை கூட்டி, அடுத்து என்ன செய்யலாம் என்று பேசினோம்.ஆளாளூக்கு உருப்படியில்லாத யோசனைகளை சொன்னார்கள். எதுவும் தேறவில்லை.. இரவு ப்ளம்பர் வந்து ஒரு யோசனையைச் சொன்னான் ..ஓகே! இது பரவாயில்லை .அஃப்கோர்ஸ்!,இதுவும் முடிந்த முடிவு அல்ல..மறுநாள் அந்த ப்ளம்பரிடமே கடிதம் கொடுத்து  அனுப்பி, வைத்தேன். இப்போது திட்டம் தயார். அடுத்து தண்ணீர் வரும் நாளுக்காக காத்திருந்தேன். அட்சயப் பாத்திரமாய் இருக்கும்அந்த  கிணற்றில் தினசரி இரண்டு டேங்க் மட்டுமே எடுத்தால் இந்த கோடையை ஒருமாதிரி சமாளிக்கலாம்.. எடுத்ததை சீராக விநியோகம் செய்ய வேண்டியது நம் கடமை.மட்டுமில்லை அத்தியாவசியம் கூட.. அந்த நாளும் வந்தது. காலை ஆறு மணிக்கு தண்ணீர் வர ஆரம்பித்தது. கால் மணி நேரம் கடந்திருக்கும் .ஊ…ஊ…ஊ… தெருவெங்கும்  உற்சாகக் கூச்சல். தண்ணீர் பிரஷராய் பீறிடுகிறது. அங்கங்கே நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் தலைக்கு நாலு குடம் தண்ணீர் இன்றைக்கு கியாரண்டியாகக் கிடைக்கும், கிடைத்துக் கொண்டிருந்தது. நான் நகராட்சி அதிகாரிகள் எல்லோரையும் தெருத் தெருவாக சுற்றி மேற்பார்வையிட வைத்தேன் ….

ப்ளம்பர் யோசனைப்படி மின்சார இலாகா துணையுடன் அந்த இரண்டுமணி நேரமும் டவுன் முழுக்க மின்சார சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டது. அதான் ஒர்க் அவுட் ஆயிடுச்சி. இப்பவும் ஜெயிச்சிட்டதா அர்த்தமில்லை. இந்த ஏற்பாடு தொடரும் சாத்தியங்கள் மிகக் குறைவு. எதிரிகள் சீக்கிரமே இதுக்கொரு மாற்று ஏற்பாடு செஞ்சிக்குவாங்க. அரசியல்வாதிகள் மின்சார இலாகாவுக்கு நெருக்குதல் குடுக்கலாம், அதில்லாம கைக்கு அடக்கமான சின்னச்சின்ன ஜெனரேட்டர்கள் இப்ப மார்க்கெட்ல இருக்கு. பணம் படைத்தவனுக்கு ஆயிரம் வழிகள். நானும் தயாராய் அதற்கு இன்னொரு மாற்று உத்தியை யோசிச்சி வைச்சிருக்கணும்.. எஸ்! யோசித்துக் கொண்டிருக்கிறேன். .இது தொடரும் போலீஸ் திருடன் விளையாட்டு போலத்தான் .என்ன செய்ய?  மக்களிடம் புதுப்புது கேம்களாக .ஆடிக் கொண்டே இருப்பதுதானே ஆட்சி?. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களை குடிதண்ணீரை சிக்கனமாக செலவழிக்க பழக்கியாகணும். எல்லோருக்கும் குடிதண்ணீர் கிடைக்கணும். இது மஸ்ட்.. போதும் நிறுத்திக்கோ என்றது அரசு. தொலைபேசியில் செய்தி. நான் தர்மபுரிக்கு மாற்றப்பட்டிருக்கிறேன். எனக்கு பதில் வரப் போகிறவர் மிஸ்டர் முரளீதரன். அடுத்த ஆண்டு ஓய்வு பெறப்போகிறவர். இத்தனை வருட சர்வீஸில்அரசியல்வாதிகளிடம் உதை, வதை பட்டிருப்பார். பணியில் நேர்மை என்பது அவரிடம் தொலைந்து போயிருக்கலாம். அல்லது மழுங்கடிக்கப் பட்டிருக்கலாம்.. ஸோ இனிமேல் பாமரன்கள் தவிக்க, அங்கே ரோஜாச் செடிக்கு தண்ணீர் பாத்திகட்டி பாயப் போகிறது. இந்த இந்தியத் திருநாட்டில், எனக்கு ட்ரான்ஸ்பர் வராமலிருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். நம் நாட்டில் நடக்கும் எல்லா கோளாறுகளுக்கும் காரணம் அதீதமான ஜனத்தொகை பெருக்கம்தான்  என்று சிலர் ஒரு தியரி சொல்லுகிறார்கள். அதைவிட இந்தஅரசியல்வாதிகளும் ,விழிப்புணர்வும், ஒற்றுமையாய் போய் தட்டிக் கேட்கும் குணமும் குறைவாய் இருக்கும் இந்த அப்பிராணி மக்களும்தான்..

– 31-08-2014 இதழில் பிரசுரமான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *