தண்ணீர் சிறுவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 8,492 
 

அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய மைதானத்தில் அலங்கார மேடை போடப்பட்டிருந்தது. வளாக நுழைவு வாயில் முதல் மேடை வரை மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வளைவுகள், தோரணங்கள், வசதியான நாற்காலிகள், வி.ஐ.பி. சீட்கள் என ஆடம்பரமாக இருந்தது. மேடையின் மீது நான்கைந்து குஷன் நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டு, அதற்கு முன் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலும், சில காகிதங்களும், டீப்பாயின் மீது வைக்கபட்டிருந்தது. மேடையின் வலது ஒரத்தில் ஒரு மைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் வோல்டாஸ் ஏசி ஆள் இல்லாமல் வெறுமனே ஓடி கொண்டிருந்தது. மேடையில் நாற்காலிகளின் பின்புறம் “WELCOME TO JSD ENGINEERING COLLEGE – NATIONAL LEVEL SYMPOSIUM – DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY ” என சிகப்பு துணியில், தங்க நிறத் தெர்மகோலில் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது.

மேடைக்கு கீழே மாணவர்களும், ஆசிரியர்களும் வரிசையாக நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அந்த செம்மண் பூமியில், லேசாக வந்த உப்பு காத்து எல்லோரையும் சுகமாக குளிரூட்டியது. லேசான சுரத்தில் ரேடியோவில் மேற்கத்திய இசை பாடிக்கொண்டிருந்தது. ராஜும், அருணும் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் அன்று தான் அந்த கல்லூரிக்கு முதன் முறையாக வருகிறார்கள். காலையில் நடந்த போட்டிகளில், “பிக் டேட்டா அனாலிசிஸ் ” தலைப்பில் பேப்பர் பிரசென்டேஷனில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசையும், மதியம் நடந்த பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் பிடித்திருந்தனர். மாலையில் கல்லூரி தலைவர் கையால் பரிசளிக்கும் விழா நடைபெறும் என்று சொல்லப்பட்டதால், இருவரும் காத்திருந்தார்கள்.

“என்னடா இது!!! நாலரை மணிக்கு மேல ஆயிடிச்சு.. சேர்மன் இன்னும் வரவேயில்லை.. நாம கிளம்பலாம் வா… ”

“கொஞ்சம் வெயிட் பண்ணு அருண்..சர்ட்டிபிகேட் வாங்கினதும் நாம போய்டலாம்… சரியா !!! “, என்றான் ராஜ்.

“ஹ்ம்ம்..இங்கே வந்திருக்கவே கூடாது…. பேசாம வண்டலூர்ல மகரிஷி காலேஜுக்கு போயிருக்கனும்… வட பாயசத்தோட சப்பாடாம்.. சதீஷ் சொன்னான்.”

“டேய்.. இங்கயும் வந்து மதியம் மீனு, கருவாடு, கறிக்குழம்புனு நல்லா கொட்டிகிட்ட தானே ???”

“பின்ன..அதுக்கு தானே வந்தேன்..”

“சாப்டாச்சுல.. எல்லாம் முடிஞ்சிடிச்சுல… கொஞ்சம் பொறு…”

“….ஹ்ம்ம் …………….”

கூட்டத்தில் மாணவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கிடையே சலசலவென பேசி கொண்டே இருந்தனர். “Our Chairman is about to reach our campus. Students are requested to maintain silence and discipline” என்று ஒரு பீட்டர் விடும் பெண் குரல் அவ்வபோது மைக்கில் அறிவித்து கொண்டிருந்தது.

நன்றியுராற்றிவிட்டு பரிசளிக்க வேண்டிய ஜே.எஸ்.டி கல்லூரியின் தலைவர் இன்னும் வரவில்லை. அவருக்காகதான் அனைவரும் காத்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில், தீடீரென எல்லோரும் எழுந்து நின்று நுழைவு வாயிலைப் பார்க்க ஆரம்பித்தார்கள். தூரத்தில் ஹாரன் சத்தத்தில் நான்கு இன்னோவா கார்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தது. இன்னோவா கார்களின் இடையில் ஒரு உயர் ரக, வெண் நிற, ஃபான்சி நம்பருடன் கூடிய ஆடி கார் ஒன்று, மைதானத்தின் வலப்பக்கத்திலிருந்து, இடப்பக்கத்தில் மேடையருகே வந்து நின்றது. இன்னோவா காரிலிருந்து சில டிப்டொப் ஆசாமிகள் வேகமாக இறங்கி வந்து, ஆடி காரின் கதவுகளை திறந்தனர். உள்ளிருந்து எழுபது வயதுமிக்க ஒரு பெரியவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் புன்முறுவலோடு இறங்கி அனைவருக்கும் வணக்கம் வைத்தார். காரின் மறுபுறம், அவரது மனைவியும் இறங்கினார். பின் வந்த கருப்பு டொயோடா காரில் இரண்டு கல்லூரி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

நிர்வாகிகளும், கல்லூரி தலைவர், மற்றும் அவரது மனைவியும் மேடையில் உள்ள நாற்காலிகளில் போய் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் கல்லூரி நிர்வாகிகள், கல்லூரியின் பெருமைகளையும், கல்லூரி தலைவரின் கல்வித்தொண்டு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். “நமது கல்லூரி சேர்மன் திரு.ஜே.சிவதாஸ் அவர்கள் மிகவும் நல்லவர், பொது நலவாதியும் கூட. ஏழை குடும்பத்தில் பிறந்து, உழைத்து முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார். தான் படிக்காவிட்டாலும் ஊரில் உள்ள எல்லா ஏழை பிள்ளைகளும் படிக்க வேண்டுமென எண்ணி பள்ளிகூடங்கள், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து, இன்று பல பிள்ளைகளை இலவசமாக படிக்க வைத்து கொண்டிருகிறார். இவர் சேவையை பாராட்டி, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தலைவருக்கு ‘கல்வி தந்தை ‘ என்ற பட்டதை கொடுத்துள்ளது. மற்ற கல்வி நிறுவனங்களை போல கல்வியை விற்காமல், ஓர் சமுதாய பணியாகவே செய்து வருகிறார். ஆயிரம் கோவில்களை கட்டுவதும், ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பதும் ஒன்று என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத மனிதர் நம் கல்லூரி தலைவர்.”

மேலும் தலைவரை பற்றி பேசி கொண்டே இருந்தனர். அதன் பின் பேசிய கல்லூரி முதல்வர் நேஷனல் லெவல் சிம்போசியம் பற்றி விரிவாக பேசினார். கடைசியாக கல்லூரி தலைவர் சிவதாஸ் மாணவர்களின் ஒழுக்கம் பற்றியும், கல்லூரியின் தேர்ச்சி விகிதம் பற்றியும் பேசிவிட்டு, நேஷனல் லெவல் சிம்போசியம் பற்றி சிறிது நேரம் உரையாற்றினார்; பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பாராட்டுரையும், நன்றியுரையும் முடியவே ஆறரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. ராஜும் , அருணும் அக்கல்லூரி பேருந்திலேயே ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். போகும் வழியில் ராஜ், கல்லூரி சேர்மன் பற்றி நிர்வாகிகள் பேசியதை நினைத்து கொண்டிருந்தான். எல்லா கல்லூரியிலும் இப்படி தான் போல என்று எண்ணி கொண்டான். ஒவ்வொரு முறையும் கல்லூரி தலைவரை ‘கல்வி தந்தை’ என்று குறிப்பிடும் போது, அன்று மதியம் கேன்டீனில் நடந்த சம்பவம் நிழலாய் நினைவில் வந்து போனது.

—-

மதியம் கேன்டீனில் சாப்பிடும் போது –

“அருண் ! கருவாடு நல்லா இருக்குல.!!! ”

“ஆமா ..நல்லாயிருக்கு… ராஜ்.. அந்த வறுவலை கொஞ்சம் கொ… ”

“கிளிங் ! கிளாங் ! கிளிங் !..”

திடீரெனெ பாத்திரம் உருளும் சத்தத்துடன், பளார்!!! பளார்!!! என அரை விழும் சத்தமும் கேட்டது. சத்தம் வரும் திசையில் பார்த்த போது….

” அறிவுகெட்ட எரும மாடு.. வேலை செய்யும் போது, புத்தி எங்கடா போவுது.. ”

“இல்லண்ணே .. தெரியாம தண்ணி ஜக்கை ரொம்ப சாய்ச்சிடென்.. அதன் கீழே கொட்டிடுச்… ”

பளார்!!! …. மீண்டும் ஒரு அரை.

“ஒழுங்கா வேலை செய்யலேனா , ஊர பாக்க போக வேண்டியதுதான்… தெரியும்ல என் சேதி… தோலை ஊறிச்சுருவேன். ஜாக்கிரதை.. !”

“மம்ம்….சரிண்ணே…”

ஒற்றை கையால் கன்னத்தை பிடித்த படியே மீண்டும் கூலரிலிருந்து தண்ணீர் பிடித்து, பந்தியில் காலியான டம்ளர்களை நிரப்ப ஆரம்பித்தான் அந்த பன்னிரெண்டு வயது சிறுவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *