கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 8,143 
 

அமெரிக்காவின் நாஷனல் சயன்ஸ் பவுண்டேஷனின் ஆதரவில் நாங்கள் இருவரும் மேற்க ஆபிரிக்காவின் சியாரா லியோனுக்கு வந்திருந்தோம். எங்கள் பி.எச்.டி படிப்பில் இது ஒரு முக்கியமான கட்டம். அபூர்வ குரங்கு ஜாதியான கொலபஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக கடந்த ஐந்துவருடங்களாக பி.எச்.டி மாணவர்கள் ஆபிரிக்காவுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இம்முறை நானம் டேமியனும் இந்த ஆராய்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தோம். டார்வினில் சித்தாந்தப்படி குரங்குகள் எங்கள் மூதாதையரல்லவா? அந்த கோட்பாட்டில் உள்ள ஓட்டைகள் சிலவற்றை இந்த ஆராய்ச்சி நிரப்பும் என்று நாங்கள் நம்பினோம். இது என்னுடைய இரண்டாவது வருடம்; டேமியனுக்கு இதுதான் முதல் தடவை.

கலவரத்தின் உச்சத்தில் மடியைப் பிடித்தபடி ஐரோப்பா, அமெரிக்காவென்று அகதிகளாக தெறித்து ஓடி, நிலைமை žரடைந்த சமயங்களில் திரும்பவும் யாழ்ப்பாண மண்ணில் மிதித்து, தமது மூத்த தலைமுறையினரை பார்த்து அதிசயித்து, ஆராய்ந்து, மூக்கின்மேல் விரலை வைத்து வியந்து ‘இது என்ன கோணாக் கோணாக் காய்?’ என்று கேட்டு, ‘இதுதான் கோத்தை வித்த புளியங்காய்’ என்று பதிலடிபட்டு, மூக்கின்மேல் வைத்த விரலை எடுத்து, ஆராய்ச்சிக்கான குறிப்புகளை மூட்டைகட்டிக் கொண்டு சலியாது திரும்புபவர்கள்போல, நாங்களும் எங்களுக்கு கிடைத்த நிதியுதவியில் சகல ஆராய்ச்சிகளையும் இரண்டே மாதங்களிலே பூர்த்தி செய்து எங்கள் பூரிவீக கடியினரின் மூலஸ்தானத்து ரகஸ்யங்களை உலகத்துக்கு ‘ஆசை பற்றிய அறைய’ வந்திருந்தோம்.

டேமியன் அமெரிக்கனாக இருந்தாலும் உயரத்தில் சராசரிதான். மெலிந்த தேகம். புத்திக் கூர்மையான கண்கள். எதையும் ஆராய்ந்து அறியும் வேட்கை இயல்பாகவே அவனுக்கு இருந்தது. கால்கள் ஒரு இடத்தில் நிற்காது. எப்பவும் சாகசமாக எதையும் சாதிப்பதற்கு தருணம் பார்த்திருப்பான். கற்பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறும் வித்தையில் கெட்டிக்காரன். அதற்கேற்ற உடல்வாகு அவனுக்கு இருந்தது. பெண்களும், ஆண்களும் சமமாக பங்கேற்கும் விளையாட்டு இந்த உலகத்திலேயே இது ஒன்றுதான். இதற்கு உடல் அமைப்பு சிறியதாகவும், கைவலிமை பெரியதாகவும் இருக்க வேண்டும். இந்த தகுதி டேமியனுக்கு இருந்தது. செங்குத்தான பாறைகளில் வெறும் கைகளை மூலாதாரமாகப் பற்றி இவன் கிறுகிறுவென்று ஏறும்போது பார்ப்பவர்கள் நெஞ்சம் துணுக்குறும். இரண்டு மாதகாலம் ஆபிரிக்கக் காட்டில் வேலை செய்வதற்க அளவில்லாத ஆர்வத்தை அள்ளிக்கொண்டு இவன் என்னோடு வந்திருந்தான்.

இந்த இரண்டு மாத காலமும் நாங்கள் நடுக்காட்டில் கடைபரப்பி கொலபஸ் குரங்குகளின் பூர்வீகத்தையும், சமுதாய வாழ்க்கை விபரங்களையும் அவதானித்து குறிப்புகள் சேகரிக்க வேண்டும். புலம்பெயர்வு, உணவுமுறை, குடும்பம், குட்டிகளைப் பராமரித்தல் எல்லாம் இவற்றில் இடங்கும். இறுதியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொலபஸ் குருங்குகளைக் கைபற்றி PIT முறையில் அடையாள எண்ணிட்டு அவைகளைப் பற்றிய குறிப்புகளை கம்புயூட்டரில் பதிந்துகொண்டு காட்டிலேயே அவைகளை திருப்பி விட்டுவிட வேண்டும். அடுத்த வருட தொடர் ஆராய்ச்சியில் இந்தக் குரங்குகளின் புலம் பெயர்வு, பழக்கவழக்க மாற்றங்கள் எல்லாம் இலகுவில் தெளிவாகி விடும்.

PIT என்றால் Passive Integrated Transponders. குரங்குகளைப் பிடித்ததும் இஞ்செக்ஷன் மூலம் குண்டூசி தலையளவு பருமனுள்ள துகளை அந்தக் குரங்குகளின் தோலின் கீழே செலுத்திவிடவேண்டும். எங்கள் ஊர்களில் மாடுகளை சாய்த்துப் போட்டு, கொல்லனுடைய உலையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் நாமம் சுடுவதுபோல இதுவும் ஒரு அடையாள நம்பர் முறைதான். ஆனால் இந்த முறையில் குரங்கு சூடுபட்டு துடிக்கத் தேவையில்லை. அந்தக் குரங்கின் நம்பர் அந்தத் துகளில் இருக்கும். இதற்கென்று இருக்கும் எலக்ட்ரோனிக் கருவியை அந்த குரங்குக்கு கிட்ட கொண்டு வந்ததும் அந்த நம்பர் பளிச்சென்று தெரியும். குரங்குக்கு ஒரு நோவும் இல்லாமல் அந்தத் துகள் அதன் உடம்பில் ஆயுள் பரியந்தமும் இருக்கும். அந்த நம்பரில் குரங்கு பற்றிய விபரங்களெல்லாம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கல்லூரி கம்புயூட்டரில் பதிவாகிக் கொண்டிருக்கும்.

நாங்கள் காட்டிலேயே வாழ்ந்து எங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக பல வாரங்கள் தொடர்ந்தோம். ஒரு விக்கினமும் இன்றி ஆராய்ச்சிகள் நன்றாக நடைபெற்று முடியுந் தறுவாயில் இருந்தன. எங்கள் குடிசையிலே எங்கே பார்த்தாலும் கத்தை கத்தையாக குறிப்புகளும், டயரிகளும், புத்தகங்களம், கோப்புகளுமாக கிடந்தன. இனிமேல் எல்லாக்குறிப்புகளையும் žர்படுத்தி கலிபோர்னியாவில் போய ஆய்வைத் தொடர வேண்டியதுதான். குரங்குகளைப் பிடிக்கவேண்டி தருணம் இறுதியில் வந்தது. தலைக் குடிமகனிடம் போய் முந்திய வருடம்போல குரங்குகளைப் பிடிக்க வேண்டிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்வதென்று தீர்மானித்தோம். அங்கேதான் எங்களுக்கு ஒரு வில்லங்கள் காத்திருந்தது.

நாங்கள் அவரைப் பார்க்கப் போனபோது அவர் முன் விறாந்தையில் இருந்த ஒரு ‘வலை ஏணையில்’ (Hammock) ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு இருந்தார். கறுப்பு மலையை உருட்டிவிட்டது போல இருந்தது அந்தக் காட்சி. வண்ணப்பூக்கள் போட்ட நீண்ட வெள்ளை அங்கியும், அதே கலர் தொப்பியும் அணிந்திருந்தார். அவருடைய வாய் ஓயாது ‘கோலாநட்டை’ சப்பியபடியே இருந்தது. மேலே கூரையில் இரண்டு கோழிகள் காலில் கட்டப்பட்டு தலை கீழாக தொங்கிக்கொண்டு இருந்தன. அவை அடிக்கடி செட்டைகளை அடிக்கும்போது மெல்லிய காற்று வந்து அவருடைய பிரும்மாண்டமான உடம்பை ஆற்றியது. கோழிகள் களைப்படைந்து ஓய்வெடுக்கும்போது இவர் தன் கையிலிருக்கும் ‘பாம்’ ஓலைவிசிறியால் விசிறிக் கொண்டார். அப்போது அவர் முகத்திலே அப்பிக் கொண்டிருந்த இலையான்கள் எல்லாம் ஒன்றுகூடி எழுந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு திரும்பவும் வந்து தங்கள் தங்கள் ‘žட்களில்’ உட்கார்ந்து கொண்டன.

ஆரவாரத்துடன் எங்களை வரவேற்றவர் முன்பென்றும் இல்லாத மாதிரி பற்கள் தெரிய அட்டகாசமாக சிரித்தபடியே குரங்குகள் பிடிக்கும் செலவிற்கும் பேரம் பேசத் தொடங்கினார். அந்தக் கால அரசர்களிடம் அஸ்வசாஸ்திரம் தெரிந்த விற்பன்னர்கள் பக்கத்திலேயே இருப்பார்களாம். அதுபோல இவரிடமும் குரங்கு சாஸ்திர நிபுணா ஒருவர் நீண்ட நெடுமரமாக ஒரு பக்கத்திலே நின்றுகொண்டு அவ்வப்போதுதன் ஞானக்கண்ணைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். கத்தி படாத தாடையை சொறிந்து சொறிந்து ஒன்றிரண்டு ஞானமுத்துக்களை உதிர்த்தார். மற்றப் பக்கத்திலே அடைப்பைக்காரன் போல வண்ணம் அவ்வப்போது கோலாநட் சப்ளை செய்தவண்ணம் இருந்தார். இவர் முகத்திலே, காவடி எடுப்பவர்கள் செடில் குத்தியதுபோல கன்னங்களிலும், நெற்றியிலும், கண்களுக்குக் கீழேயும், உதட்டின் மேலேயும், நாடியிலும் மீன் செதிள் போன்ற ‘மென்டே’ இனத்து சின்னங்கள் விழுப்புண்களாக பரவிக் கிடந்து அழகூட்டின.

ஒரு குரங்கு பிடிப்பதற்கு காசு இருநூறு லியோன்வரை தயங்காமல் கேட்டார் தலைக்குடிமகன். இவர்கள் இருவரும் ஒரே ‘கரண்டில்’ வேலை செய்வது போல் வேகமாக ஆமோதித்து தலையாட்டினார்கள். இது போன வருடத்திலும் பார்க்க பத்து மடங்கு அதிகம். நாங்கள் என்ன, குரங்கைப் பிடித்துமூட்டை கட்டி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறோமோ? பிடிப்பதற்குத்தானே பணம்; மறுபடியும் காட்டிலே விட்டுடத்தானே போகிறோம்!

கடைசி விலை நாற்பது லியோன் என்று நான் சொன்னதும் தலைக்குடிமகன் ஆவென்று வாயைப் பிளந்தார். அங்கே முப்பத்திரண்டு பற்களும், அறுபத்திநாலு சானல்களும் தெரிந்தன, நீண்ட நேர மந்திராலோசனைக்குப் பிறகு ஒருவாறு தலைக்குடிமகன் இறங்கி வந்தார். நூறு லியொனுக்கு பேரம் பூர்த்தியானது. பட்ஜெட் இடிக்கத் தொடங்கிவிட்டது; என்றாலும் வேறு வழியென்ன? பாதி சவாரியில் இறங்க முடியுமா? நாங்கள் அவர் கேட்ட அக்கிரமமான விலையை கொடுப்பதற்கு சம்மதித்தோம்.

ஆபிரிக்கக் காட்டில் இரண்டு மாங்கள் ஓடிவிட்டன. ஆரம்பகாலத்து ஆர்வமெல்லாம் மறைந்து எங்கள் முகங்கள் களையிழந்து காணப்பட்டன. நுளம்புகள் கடித்து பண்பட்ட எங்கள் உடம்பு திட்டுத் திட்டாகத் தடித்து தடுக்குப் பாய்போல ஆகியிருந்தது. பசளையில்லாமல் பயிரிட்ட பாவக்காய் போல முறுகி, ‘புஃல்லாபிரட்’ என்று சிறப்பு நாமதேயம் பெற்ற ரொட்டியையும், அவித்த கடலையையும், வறுத்த சோளத்தையும் சாப்பிட்டு, சாப்பிட்டு வாய் மரத்துவிட்டது. கடைசி மாவிலே பிடித்த கொழுக்கட்டைபோல ‘மொக்கட்டி, நெக்கட்டியான’ படுக்கையிலே ஒரு கண் நித்திரைகூட வரமறுத்தது. ‘படுக்கை நொந்தபடி’ என்ற பாடல் வரிகளின் அர்த்தம் மூளையில் இறங்கியது. குலையீனா வாழைக் குருத்துகள் போன்ற இளம் ஆபிரிக்கப் பெண்கள் காலையும், மாலையும் தண்­ருக்கும், விறகுக்குமாக அலைந்து திரிந்து தலைச்சுமையோடு அசைந்து நடந்து வரும் அழகை காத்திருந்து பார்ப்பதுகூட எங்களுக்கு இப்பவெல்லாம் அலுத்துவிட்டது.

இப்படியாக மனமுடைந்திருந்த சமயத்தில்தான் ஒரு நாள் அதிகாலை தலைக் குடிமகனிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்த செய்தி வந்தது. சிறுவர்களும் பெரியவர்களுமாக தாரை தப்பட்டைகளை தட்டிய படியே குரங்கு கூட்டத்தை துரத்தி வந்து ஒரு பெரும் மரத்திலே ஏற்றி விட்டார்கள். நாங்கள் அங்கே ஓடிவந்தபோது பக்கத்திலே வளர்ந்திருந்த சிறுமரங்களையும் செடிகளையும் தறித்துவெறுமையாக்கி கொண்டிருந்தார்கள். குரங்குகள் பாவம் ‘கீயாமாயா’ என்று கத்தியபடி கீழேயும் மேலேயும் போய் அலறத் தொடங்கின. பேச வழியில்லை என்று தெரிந்ததும் அலறல் அழுகையாக மாறத் தொடங்கியது. மரத்தின் கீழே வலைப்பரப்பி தயார் நிலையில் இருந்தது. குரங்கு சாஸ்திர விற்பன்னரும், அடைப்பைக்காரரும் ஓடியாடி மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சி ஓர் அபூர்வமான காட்சி. வாழ்நாளிலே காணக் கிடைக்காத காட்சி. சின்னதும் பெரிதுமாக எத்தனை நிறத்தில் எத்தனை விதமான குரங்குகள். திகிலுடன் கிளைக்கு கிளை பாய்ந்து ‘கீகீ’ என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவரிக்க ஏலாது. தவ்வல் குட்டிகள் தாயின் மடியை இறுக்கிப் பிடிக்க தாய் குரங்குகள் தடுமாறியபடி கிளைக்கு கிளை தாவி தப்புவதற்கு வழி தேடின. சின்ன விரல் சைஸ் கிளைகளில் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் ‘என்ன ஆகுமோ?’ என்று பயந்து துணுக்குற்றது. ‘என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத கொம்பு?’ என்ற கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்கு புலனாகியது.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி குரங்குகள் பொத் பொத்தென்று எங்கள் கைகளில் வந்து குதிப்பதாய் தெரியவில்லை. அப்பொழுது அடைப்பைக்காரர் பெரிய கோடாரியொன்றை எடுத்து மரத்தை ‘டம், டம்’ என்று அடிக்கத் தொடங்கினார். அனுபவமில்லாத ஒரு குரங்கு மரத்தை யாரோ வெட்டுகிறார்களென்று பயந்து அவசரமாக குதித்தது. அதைத் தொடர்ந்து வெள்ளையும் சிவப்புமாக குரங்குகள் குதிக்கத் தொடங்கின. அந்தக் காட்சி வெள்ளை மலர்களையும் சிவப்பு மலர்களையும் தேவர்கள் ஆகாயத்திலிருந்து கொட்டுவது போல இருந்தது. ‘ஸ்வீட் ஜ“சஸ்’ என்று கத்தியபடி டேமியன் செய்வதறியாது அங்குமிங்கம் ஓடினான். அளவுக்கு மீறிய பரபரப்பான சமயங்களில் டேமியன் இப்படி கத்துவது வழக்கம். குரங்குகள் குதிக்க குதிக்க ஆபிரிக்க சிறுவர்கள் ‘பொக்கு பிளென்டி! லெவ்வாம், லெவ்வாம்!’ என்று கூவியபடி கோழிக்குஞ்சை அமுக்குவது போல் பக்கென்று அவற்றைப் பிடித்துக்கொண்டு ஓடியோடிப்போய் மூங்கில் கூட்டிலே அடைத்துவிட்டு வந்தார்கள்.

கொலபஸ் குரங்குகளில் இரண்டு விதம் இருந்தது. ஒன்று சிவப்பு வரை; மற்றது கழுத்திலே வெள்ளை வளையம் போட்டது. தவறுதலாக வலையில் பிடிபட்ட சாதாரண குரங்குகளை நாங்கள் திரும்பவும் கொண்டு போய் காட்டிலே விட்டுவிட்டோம். ஒன்றிரண்டு கொழுத்த குரங்குகளை அவர்கள் சாப்பாட்டுக்காக வைத்துக்கொண்டார்கள். குரங்கு இறைச்சியை ஆபிரிக்காவின் மென்டே இனம் விரும்பிச் சாப்பிடும். நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றி. ஆஹா, என்ன நிம்மதி! இனி எங்கள் வேலைகள் இரண்டு நாளிலேயே சுலபமாக முடிந்துவிடும்.

டேமியனுக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. அதைக்காட்டும் முகமாக ‘பாம்’ மரங்களில் ஏறி ஏறி இறங்கினான். அவனுக்கு பாம் மரங்களில் ஏறுவதும் எஸ்கலேட்டரில் மேலே போவதும் ஒன்றுதான். மரத்தின் உச்சிக்குப் போனதும் முட்டிகளில் வடிந்திருக்கும் பாம் வைனை ஒரு மிடறு குடித்து ருசி பார்த்துவிட்டு போன வீச்சில் இறங்கிவிடுவான். கற்பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறுபவனுக்கு பாம் மரம் ஏறுவது ஒரு காரியமா? வேலைகள் தலைக்குமேல் இருக்கும்போது இவன் இப்படி சிறு பிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தது, எனக்க எரிச்சலாக இருந்தது. அவனுடைய மரம் ஏறும் வித்தைக்கு விரைவிலேயே ஒர் உபயோகம் வரப்போகும் விஷயம் எனக்கு அப்போது தெரியவில்லை.

ஆபிரிக்கக் காடுகளின் உட்பகதிகளில் கட்டியிருக்கும் சில குடிசைகளின் பக்கம் அந்நிய மனிதர்கள் அணுக முடியாது. களி மண்ணும் வைக்கோலும் சேர்த்து பிசைந்த ஒரு கலவையால் கட்டிய குடிசைகள் அவை. வைக்கோல் கூரை. இந்தக் குடிசைகளில் தான் ஆபிரிக்க சிறுவர்களுக்கான சில ரகஸ்ய சடங்குகள் நடைபெறும். மிகவும் ரகஸ்யமாக நடக்கும் இந்த சடங்கின் பின்தான் ஒரு சிறுவன் மனிதன் ஆகிறான் என்பது இங்கே ஐதீகம். அந்த சடங்கிற்காக போடப்பட்ட பழைய குடிசை ஒன்றிலே பெரியவர்கள் ஓர் ஆந்தையையும் இரண்டு குஞ்சுகளையும் கண்டு விட்டார்கள். ஆந்தை என்றால் ஆபிரிக்காவில் பேய் பறவை என்று பேர். அங்கே கண்டாலும் அதை அந்தக் கணமே கொண்டுவிட வேண்டும். துப்பும் பாம்பைக்கூட சட்டை செய்யாமல் கிட்டப்போய் வெறும் கையால் பிடித்துவிடும். ஆபிரிக்கர்கள் ஆந்தையைக் கண்டால் ஒரு கட்டை தூரம் ஓடிவிடுவார்கள்.

ஆந்தை அவர்களுக்கு கெடுதல் விளைவிக்கிறது என்று முழு மூச்சுடன் நம்பினார்கள். ஒருமுறை ஆந்தையினால் அந்த கிராமத்தில் பேதி வந்து அரைவாசிப் பேர் இறந்து போனார்களாம். இன்னொரு தடவை உரிய நேரத்துக்கு மழை வராமல் பயிர்கள் எல்லாம் அழித்து விட்டனவாம். முழு கிராமமும் ஒன்றுகூடி இது பற்றி நீண்ட நேரம் விவாதம் செய்தது. முடிவாக குடிசையுடனேயே சேர்த்து ஆந்தையையும் குஞ்சுகளையும் கொளுத்தி விடுவது என்று தீர்மானமாகியது.

இந்த செய்திகள் அவ்வப்போது எங்களுக்கு மெண்டே சிறுவர்கள் மூலம் வந்து கொண்டிருந்தன. எனக்கு தெரிந்த கொஞ்சம் மெண்டே பாஷையை வைத்து அவர்கள் கூறுவதை புரிந்து கொண்டேன். இதை நான் டேமியனுக்குச் சொன்னதும் அவன் ‘ஸ்வீட் ஜ“ஸஸ்’ என்று தலையிலே கைவைத்து கத்தினான். ஆந்தைகளைப் பற்றி அவனுடைய ஞானம் அபாரமானது. தீவிர ஆராய்ச்சிகள் செய்து சயன்ஸ் பத்திரிகைகளில் கட்டுரைகள் எல்லாம் எழுதியிருக்கிறான். அவனால் இந்த அநீதியை ஜ“ரணிக்க முடியாமல் இருந்தது. எப்படியும் அந்த ஆந்தைகளை காப்பாற்றுவது என்று அவன் மனதிலே தீர்மானித்துக் கொண்டான்; இதற்கு அவன் என் தயவையோ, கட்டளையையோ எதிர்பார்க்கவில்லை.

கடவுளால் படைக்கப்பட்ட அத்தனை ஜ“வராசிகளிலும் மிகவும் அற்புதமானது ஆந்தை என்பது அவன் கருத்து. முதலாவதாக, பறவை இனத்திலே அது ஒன்றுதான் இரவு பட்சிணி. வெளவால் பறவையல்ல, மிருகம். ஆகவே அதைக் கணக்கிலே சேர்க்கக்கூடாது. இரண்டாவதாக கண்களை திருப்பாமல் கழுத்தை மட்டும் நூற்றியம்பது டிகிரி திருப்பி தன் இரையைத் தேடும் வல்லமை படைத்தது. வேறொரு மிருகத்துக்கோ பறவைக்கோ இந்த சலுகை கிடையாது. கண்கள் பெரிதாக இரவிலே பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். காதுகள் இரண்டும் ஒன்று மேல் பார்த்தும் மற்றது கீழ் பார்த்தும் இருட்டிலே திறையறிவதற்கு ஏற்றமாதிரி அமைந்திருந்தன. அது மாத்திரமல்ல, உடம்பின் ஒவ்வொரு பகுதியும் ஒலியை வாங்கி திசையறிவதற்கு தகுந்தமாதிரி இதற்கு அமைக்கப்பட்டிருந்தது.

இது பறக்கும் விசித்திரத்தை விஞ்ஞானிகள் இன்னும் முற்றிலும் கற்றுத் தேறவில்லை. மற்றப் பறவைகள் பறக்கும்போது சடசடவென்று செட்டைகளை அடித்து பறக்கும். இரவு வேளைகளில் இப்படி ஆரவாரம் செய்து பறந்தால் இதனுடைய இரை ஓடி மறைந்து கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவோ, இது பட்டம் பறப்பதுபோல் ஒருவித சத்தமும் போடாமுல் விசுக்கென்று இறாஞ்சி விழுந்து இரையைப் பிடித்துவிடும். கும்மிருட்டிலே காதுகளின் ஒலியை மட்டுமே வைத்து எங்கோ புதருக்குள் ஓடும் எலியை வந்து லபக்கென்று பிடித்துவிடும் அற்புதம் வேறு எந்த பறவையிடமும் கிடையாது.

ஆனால் இதனிலும் விசித்திரம் அது சாப்பிடும் முறைதான். பிடிக்கும் இரையை அது அப்படியே முழுசாக விழுங்கிவிடும். மற்றப் பறவையினம்பேல இரையை கால நகங்களிலே கௌவிப் பிடித்து அலகினால் கொத்தித் கிழித்து சாப்பிட இதற்குத் தெரியாது. சில பெரிய ஆந்தைகள் ஒரு சிறிய முயற்குட்டியைக்கூட அப்படியே முழுசாக தூக்கி விழுங்கி விடுமாம். உண்ட சிறிது நேரத்தில் உணவு செரித்தபின் வேண்டாத எலும்புகளையும் கழிவுகளையும் அப்படியே துப்பிவிடும்.

இதிலே அதிசயம் என்னவென்றால் ஆபிரிக்க ஆந்தைகள் விவசாயத்திற்க செய்யும் தொண்டு அளப்பரியது. மனிதன் பாடுபட்டு விளைவித்த தானியங்களைச் சேதமாக்கும் சுண்டெலிகள், எலிகள், பெருச்சாளிகள் போன்ற எல்லாவற்றையும் ஆந்தைகள் தேடிப்பிடித்து சாப்பிட்டுவிடும். ஆந்தைகளினால் மனிதனுக்கு நன்மையே ஒழிய ஒருவித தீங்கும் கிடையாது. டேமியன் செய்த ஆராய்ச்சியின் பிரகாரம் ஆந்தைகள் இல்லாவிட்டால் ஆபிரிக்காவின் உணவுப் பற்றாக்குறை இருபதுவீதம் அதிகரித்து விடுமாம்.

இதுதான் டேமியனுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. அவனை என்னால் தடுக்க முடியாது. ஆகவே உதவி செய்வதாகத் தீர்மானித்தேன். இந்தக் காரியத்தில் அவன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் எங்களுடைய ஐந்து வருட கொலபஸ் ஆராய்ச்சி மட்டும் தொடர முடியாமல் ஸ்தம்பித்து போகும் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமும் இல்லை.

அன்றிரவு நடுநிசியளவில் டேமியன் கையுறைகளையும், முதுகுப் பையையும் மாட்டி, வளையம் வைத்த லைட்டையும் தலையிலே பொருந்திக் கொண்டு துணிச்சலுடன் புறப்பட்டான். நான் வேவுபார்த்துக்கொண்டு வெளியிலேயே காவல் இருந்தேன். ரகஸ்ய சடங்கு குடிசையை அடைந்ததும் டேமியன் தலையில் மாட்டிய லைட்டை இயக்கினான். அதிர்ஷ்ட வசமாக தாய் ஆந்தையையும், குஞ்சுகளும் அங்கேயே இருந்தன. திடீரென லைட்டைக் கண்டு திகைத்திருந்த தாய் ஆந்தையை முதலில் பிடிப்பதில் டேமியனுக்கு ஒருவித சிரமமும் இருக்கவில்லை. பிறக இரண்டு குஞ்சுகளையும் பிடித்து முதுகுப் பையிலே மரம் ஒன்று சிறிது தூரத்திலேயே இருந்தது. டேமியன் அந்த மரத்தில் சறுசறுவென்று ஏறி ஆந்தையையும் குஞ்சுகளையும் வெகு கவனமாக ஒரு மரங்கொத்திப் பொந்தில் தெரியாமல் இருவரும் வெகு வாதுவாக திரும்பி வந்து படுத்து விட்டோம்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே சத்தம் கேட்டு விழித்துக்கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடிமகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்கு காவிகள் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். மலைபோன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடிமகன்.

சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன் பானுகோபன் என்று மாறிமாறி வரும். உடம்பு ஒன்று; தலைமாத்திரம்தான் மாறும். சகடையில் வைத்து தள்ளிவரும்போது புன்னாலைக்கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தை பார்த்துக்கொண்டு இருப்போம். அப்ப ‘பானுகோபன், பானுகோபன்’ என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன் பதுமகோமளைக்கு பிறந்தவன். சிறுபிள்ளையாக இருந்தபோது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன். தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரியவர்கள் கையைப் பிடித்துக் கொள்வோம்.

அதுபோலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண்டிருந்தார். அறுத்துக்கொண்டோடிய மாடுகள்போல முன்னுக்கும் பின்னுக்குமாக சனங்கள் தலைதறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆரவாரம் காதைப் பிறந்தது. பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களுமாக கூட்டம். எங்கள் ஊரில் சொக்கப்பானை எரிப்பதுபோல் அந்தக் குடிசை எரிந்து கொண்டிருந்தது. தலைக் குடிமகன் இந்தச் சொக்கப்பானை வைபவத்தை நேரிலே மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அடைப்பைக்காரரும, பல்லக்கு காவிகளும் மிகவும் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். நாங்களும் ஒன்றும் அறியாத பூனைகள்போல போய் அந்த ஆரவாரத்தல் கலந்து கொண்டோம்.

திரும்பி வரும்போது இந்த மூட நம்பிகைக்யைப் பற்றி டேமியன் தாங்கியபடியே வந்தான். முழுக்க முழுக்க மனிதனுக்கு நன்மையே செய்யும் ஒரு பறவையை கெட்ட சகுனமாக கருதுவது எவ்வளவு மடமை என்றெல்லாம் உரத்து பேசியபடியே எங்கள் குடிசைக்கு கிட்ட வந்தான். அப்படி வந்தவன் சடுதியில் வாயை திறந்தபடியே மூடாது ‘ஆ’வென்று சிறிதுநேரம் வைத்துக் கொண்டிருந்தான். கண்கன் நிலைகுத்தி நின்றன, பிறகு ஸ்வீட் ஜ“ஸஸ்’ என்றான். நாங்கள் பாடுபட்டு கட்டிய மூங்கில் கூடு திறந்து கிடந்தது. கொலபஸ் குரங்குகள் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டன.

நான் மாடக்கூடலில் நரியைப் பரியாக்கிய அற்புதம் இங்கேயும் நடக்கிறதா? கூட்டிலே அடைத்து வைத்த குரங்குகளை மறைந்த மாயம் என்ன? ஒன்றையொன்று சாப்பிட்டு விட்டனவா? பூமியிலே புதைந்து விட்டனவா? காற்றிலே கரைந்து விட்டனவா? ‘கறையான் தின்றதோ, கள்வன் கவர்ந்து சென்றானோ?’ என்று தர்பார் ராகத்தில் வாய்விட்டு அழுதோம். குரங்குகளைக் காணவில்லை; காரணமும் தெரியவில்லை. டேமியன் கூட்டுக் கதவை சரியாக கட்டவில்லை என்பது என் வாதம். குரங்குகளே கதவைத் திறந்து விட்டன என்பது அவனுடைய கட்சி.

குனிந்த தலையுடன் இருவருமாக தலைக்குடிமகனிடம் போய் எங்களுக்கு நேர்ந்த கதியை முறையிட்டோம். அவருடைய உதட்டிலே புன்சிரிப்பு. குரங்கு சாஸ்திர விற்பன்னரை நோக்கி அவர் பார்வை திரும்பியது. அவர் ஓடோடி வந்து தலைக்குடிமகன் பக்கத்திலே நின்று கொண்டார். இப்போது இரண்டாவது ‘எபிஸோட்’ தொடங்கியது. அவருடைய கவலையெல்லாம் இன்னொரு தடவை குரங்கு பிடிக்கும்போது எவ்வளவு வருமானம் அதிகரிக்கும் என்று கணிப்பதிலேயே இருந்தது. முந்திப் பேசிய விலைப்படி இன்னொரு முறை குரங்கு கூட்டத்தை பிடிப்பதற்கு சம்மதம் தந்தார். எவ்வளவு கெஞ்சியும் அவர் விலையை குறைக்கவில்லை. பட்டம் பிய்த்துக் கொண்டு போவதுபோல எங்கள் பட்ஜெட் தறிகெட்டு போவதை செய்வதறியயாது பார்த்துக் கொண்டு நின்றோம்.

டேமியன் உலகம் கவிழ்ந்ததுபோல இருந்தான். ஆந்தையினால் கிராமத்துக்கு ஏற்பட வேண்டிய கெடுதல் எங்களுக்கு வந்துவிட்டது என்று அவன் நினைத்தான். எனக்கு இது அதிசயமாக இருந்தது. நான் “எங்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஆந்தை என்ன செய்யும்? ஆந்தை இறக்கவில்லை; ஆனால் அது இறந்து விட்டதென்று கிராம மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்க நஷ்டத்திற்குப் பதிலாக இப்போது இரட்டிப்பு லாபம் அல்லவா கிடைக்கிறது? அவர்களைப் பொறுத்த மட்டில் ஆந்தை அவர்களுக்கு ஒரு அதிர்ஸ்ட தேவதைதான்” என்றேன். டேமியன் ஒன்றுமே பேசவில்லை. துண்டுவிழும் கணக்கை எப்படி சமாளிப்பது என்ற விசாரத்தில் மூழ்கிக் கிடந்தான். அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

அன்றிரவு பாதுகாப்பான மரப்பொந்திலிருந்து ஆந்தையுடைய அற்புதமான கூவல் ‘க்கூம், க்கூம்’ என்று டேமியனுக்கு நன்றி கூறுகூதுபோல கேட்டது. அப்படியான ஒரு சோகமான இனிமையான நான் என் வாழ்நாளில் கேட்டதேயில்லை. மனிதர்களின் அறியாமையை நினைத்து அதனுடைய சோக கீதம் இருந்திருக்கலாம்; அல்லது ஆபிரிக்காவின் உணவு உற்பத்தியில் தனக்கிருக்கும் பங்கை பறை சாற்றுவதாகவும் இருந்திருக்கலாம். அந்த தாலாட்டில் எப்பொழுது தூங்கினேன் என்பது எனக்கு நினைவு இல்லை.

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

நன்றி: http://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *