ஜீவகாருண்யம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 7,587 
 

தொபீர்! தொபீர்!

நடக்காமல் படுத்துவிட்ட மாட்டை ஆத்திரத்தோடு அடித்தான் வேலய்யன்.

போடா சக்கை என்றது மாடு. எழுந்திருக்கவில்லை.

சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த குமாரசாமி தெருக்காட்சியைப் பார்த்துத் துடித்துப்போனார்.

அவருக்கு இளகிய மனம். அதுவும் பிராணிகளிடத்தில் தனிக்கருணை. இளவயதில் தன் வீட்டிலேயே நாய், மாடு எல்லாம் வைத்திருந்தார். அதற்கெல்லாம் செல்லப்பெயரிட்டுக் குழந்தைகளை விட அதிகமாகப் பேணி வளர்த்தவர். இன்று உடம்பு முடியாமல் போனதால் எல்லாவற்றையும் விட்டு விட்டார்.

மாடு எழுந்திருக்காததைக் கண்ட வேலய்யன் கையைப் பின்பக்கம் வைத்து நெட்டித்தள்ளினான். காலால் உதைத்துப் பார்த்தான் நடக்கவில்லை. மீண்டும் குச்சியை ஓங்க-

குமாரசாமி ஓடிப்போய் அவனைத் தடுத்தார் “இந்தாப்பா, ஏன் இப்படி அடிக்கிறே, வாயில்லா ஜீவனாச்சேன்னு நினைக்காம இப்படிக் காட்டுத்தனமா அடிக்கிறியே, நிறுத்தப்பா”

குமாரசாமியின் வெள்ளை வேஷ்டியும், சட்டையும் அவனுக்குள் மதிப்பைத் தந்தாலும் அவன் அந்த மாட்டை லேசில் விடுவதாயில்லை.

“நீங்க நகருங்க சாமி. வாயில்லா ஜீவனாம் ஜீவன்! என்னமா முறைக்குது பாரு சாமி. இந்த மாட்டுக்கு எத்தனை கொழுப்பு பார்த்தியா சாமி. இத்தனை அடியையும் வாங்கிக் கிட்டு என்னமா அழும்பு பண்ணுது”

சிறிது நேரத்தில அந்த இடத்தில் ஒரு கூட்டமே கூடிவிட்டது.
எல்லோரும் வேடிக்கை பார்க்கும் ஆத்திரமும், அவனுடைய இயலாமையும் சேர ஓங்கி முகத்தை நோக்கிக் காலால் உதைத்தான் வேலய்யன்.

“இந்தாப்பா, நான் சொல்றது காதிலே ஏறலையா, நடுரோட்டிலே நின்னு இப்படி ஜீவஹிம்சை செய்யறியே?” குமாரசாமி மீண்டும் அவனைக் கண்டித்தார்.

“இதைப்பாரு சாமி. இது என்னுiயை மாடு, என் கஷ்டம். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், உனக்குக் கஷ்டமா இருந்தா வீட்டுக்குள்ளே போ சாமி ‘சொல்லியபடியே சுரீர், சுரீர் என்று அடித்தான். மாடு அசையவில்லை.

“இந்தாப்பா எனக்கு எதிரே அடிக்காதே, எட்டிக் கொண்டுபோய் அடி”

“அது எழுந்திருச்சாத்தானே எட்டிக் கொண்டுபோக முடியும், எழுந்திருக்க மாட்டேங்குதே! என்னை என்ன பண்ணச் சொல்றே” என்றான் வேலய்யன்.

“இந்தாப்பா நீ அந்தண்டே நகரு. நான் கிளப்பிப் பார்க்கிறேன்.” சொல்லியபடியே வீட்டிற்குள் சென்று ஒரு குண்டானில் தண்ணீர் கொண்டுவந்து மாட்டின் முன் வைத்தார்.

பின் அதன் முதுகை ஆதரவோடு தடவிக்கொடுத்துத் தாஜா செய்தார்.
குமாரசாமியின் ஐஸ் வேலையைத் தெரிந்துகொண்டோ என்னவோ அந்தமாடு நீரை முகர்ந்துபார்த்ததே தவிர அதைச் சீண்டவே இல்லை.
குமாரசாமி மனம் தளரவில்லை ஓடிச்சென்று புல்பறித்துப் போட்டார்.
எதற்குமே அசைந்துகொடுக்கவில்லை மாடு. எட்டி நின்று பொறுமையோடு பார்த்துக்கொண்டிருந்த வேலய்யன் நேரம் ஓடுவதை அறிந்து பொறுமை இழந்தான்.

“அட, என்னா சாமி உன்னோட பெரிய பேஜாராப் போச்சு. இந்த ஜம்பமெல்லாம் அதுகிட்டே சாயாது. ஆளை விடு. எனக்குச் சந்தைக்கு நேரமாச்சு”

“புல்பூண்டுக்காக வருத்தப்பட்ட வள்ளலார் பிறந்த நாட்டிலேதான் நீங்களும் பிறந்திருக்கீங்க, என்னா செய்யறது?” குமாரசாமி முணு முணுத்தார்.

“அது உங்ககிட்ட பழகிடுச்சு. விற்கப்போறேன்னு மனசு கஷ்டப்படுது. அதான் இப்படி அழும்பு பண்ணுது”

“மெதுவா தாஜா பண்ணி கிளப்பு, கோபத்தைக் காட்டாதே”

ஆளுக்கு ஆள் அட்வைஸ் செய்தபடியே நாலைந்து, பேராக அருகில் சென்று தூக்கினர். ஊஹூம் முடியவில்லை.

அலுத்துப்போன வேலய்யன் கடைசி முயற்சியாக “இந்தாங்க சார், யாராவது மிளகாய் இருந்தால் கொண்டாங்க, மூக்கில் வைத்தால் கிளம்பிடும்”

“இந்தாப்பா, நீ என்ன ராட்சசனா? அடிச்ச அடி போறாதுன்னு இப்படி இம்சை செய்யறே யாரும் மிளகாய் கொடுத்து அந்தப் பாவத்துக்கு ஆளாகாதீங்க” குமாரசாமி கொதித்துப் போனார்.

“அப்படின்னா ஒண்ணு செய்யுங்க. வீட்டிலே என் மனைவிக்குப் பிரசவ வலிஎடுத்து ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்கேன். இந்த மாட்டைவிற்றால்தான் ஆஸ்பத்திரிலேயிருந்து அவளை நல்லபடியா அழைச்சுகிட்டு வரமுடியும். இந்தக் கூட்டத்தில் உள்ள ஜீவகாருண்ய சங்கத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் இந்த மாட்டை வைச்சுக்கிட்டு அவசரமா இருநூறு ரூபாய் கொடுங்க போதும் நான் போயிடறேன்” கண்களில் நீர் துளிக்க உருக்கமாகக் கேட்டான் வேலய்யன்.

அதைக்கேட்ட குமாரசாமி அவசரமாக வீட்டின் உள்ளே ஓடிக் கதவைச் சாற்றிக் கொண்டார் கூடியிருந்த கூட்டமும் சிறிது, சிறிதாக விலகியது.
எஞ்சியது மாடும், வேலய்யனும்தான். “உதவாக்கரைப் பயலுவ, உதவின்னதும் ஓடிப் போய் கதவைச் சாத்திக்கிற இவனுக எல்லாம் ஜீவஹிம்சையைப் பற்றிப் பேசுவதோடும், எழுதுவதோடும் சரி, என் நேரத்தைப் பாழடிச்சிட்டானுக, கடவுளே! என்னை சோதிக்காதே!” சத்தமாகக் கூவியபடியே ஆத்திரத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி மனிதர்களை அடிக்க முடியாமல் மாட்டை ஓங்கி, ஓங்கி அடித்துக் கிளப்பினான். இத்தனை நாழி சோதனை செய்த மாடும் தன் வீம்பை விட்டு மனமிரங்கி எழுந்து நடக்க ஆரம்பித்தது சந்தையை நோக்கி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *