ஜக்கம்மா..!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 6,250 
 

“கோல்டன் குரோவ்..!” பெரிய நாயக்கன் பாளையத்தில் இருந்து கொஞ்ச தூரத்துல தள்ள்ள்ள்…..ளி உள்ள்ள்ள்…ள இருக்கிறது இந்த கேட்டட் கம்யூனிட்டி..!

இருங்க ட்ரோன் கேமிராவ எடுத்து பறக்க விடறேன்..கழுகுப் பார்வையில பார்க்கலாம்.! இப்பல்லாம் இதான ஃபேமஸ்.?

பெரிய நாயக்கன் பாளையத்தில இருந்து எல்எம்டபிள்யூக்கு நேர் எதிர் ரோட்ல போனா பத்து .. பதினோராவது கிலோமீட்டர்ல வரும் இந்த கோல்டன் குரோவ்.. அவ்வளவு தூரம் பறக்க ட்ரோன் கேமிராவுல சார்ஜ் இருக்குமான்னு தெரியல ..பார்ப்போம்…!

போற வழியில இருக்கிற ரெண்டு குக்கிராமத்து தெருநாய்களை லாவகமாத் தாண்டி கடி படாம சீக்கிரமா நாக்கு தள்ள ஓடிப் போனா முப்பது நிமிஷத்துல வந்திடும் நம்ம குடியிருப்பு…!

பேருக்கு ஏத்தமாதிரி தென்னந்தோப்ப பாதி அழிச்சுதான் கட்டியிருக்காங்க வீடெல்லாம்..! புதுசா இப்பதான் உருவாகுது இந்த கேட்டட் கம்யூனிட்டி.!

கேட்டட் கம்யூனிட்டி னா பெரிய வசதியானவங்க இருக்கிற எடம்னு நெனச்சுக்காதீங்க.. எல்லாம் சாதாரண மிடில் க்ளாஸ் கம்யூனிட்டிதான்..! பேருக்கு முன்னாடி ஒரு ஆர்ச் போட்டு.. ரோடு பார்வைக்கு மட்டும் செவுரு கட்டி இருப்பாங்க… பில்டர் ஆர்க்கிடெக்ட்ட வெச்ச கைக்காசெல்லாம் போட்டு கட்டின ஒரே விஷயம் இந்த ஆர்ச்சும்.. முன்பாதி மட்டும் இருக்கிற காம்ப்பவுண்டு செவுரும்தான்.! எல்லாம் வௌம்பரம்..!! வௌம்பரம்.!!

அப்படியே கேமிராவ கொஞ்சம் உள்ள கொண்டு போகலாம்..!

மொத்தம் முப்பது முப்பத்தஞ்சு தனி வீடுங்க இருக்கிற மாதிரி ப்ளாட் போட்டிருந்தாலும், இப்பதான் ஒரு ஆறு ஏழு வீடுங்க முழுசா வந்திருக்கு..ஒன்னு ரெண்டு அஸ்திவார நிலமையிலயும்.. பாதி கட்டின நிலமையிலும் இருக்கு.. சீக்கிரம் பிக்கப் ஆகிடும்.. !

அது சரி.. யாரு இந்த வீடு கட்ரவங்களுக்கெல்லாம் பச்சையும் மஞ்சளும் ரோஸுமா சுண்ணாம்பு அடிக்கக் கத்துக் குடுத்தது.. ? கேட்டா வாஸ்து கலர்ம்பாங்க… ஒன்னே ஒன்னு வசதி..ஈசியா அடையாளம் சொல்லிரலாம்..!

உள்ளயே ஒரு சின்ன பிள்ளையார் கோயில் .. முதல் முதலா கட்டப்பட்டதும் இங்க இதுதான்.. பில்டரே கட்டிட்டாங்க.. இத வெச்சுத்தானே வர்ர கஸ்டமர் ங்கள லைட்டா கவர் பண்ண முடியும்?

கேமிரா வ லைட்டா உள்ள பறக்க விடுவோம்..!

முதல் ரோவில் இடது பக்க முதல் வீடு வாசலில் பழைய ரெட் கலர் சேன்ட்ரோ நிற்கிறது பாருங்க?! அதுதான் சந்திர சேகர் சாருடையது காரமடை போற வழியில இருக்கிற பெரிய கம்பெனில மேனேஜர் உத்தியோகம்.. மனைவி சித்ரா.. ஒரே பெண் அஞ்சாவதோ.. ஆறாவதோ படிக்கிறாள் போல..!

சந்திர சேகர் சார் கொஞ்சம் அலட்டல் அதிகம்.. கம்பெனி மாதிரியே இங்கயும் தான் சொன்னா எல்லோரும் கேட்கணும்கர டைப்பு.. கார் வெச்சிருக்கர்தால கொஞ்சம் இவர்சொல்ரத மத்தவங்களும் கேப்பாங்க.. கிட்டத்தட்ட இந்த காலனி செக்கரட்ரியா தன்ன நினைச்சுகிட்டு அதை நோக்கி முன்னேறி வருபவர்தான் நம்ம சந்திரசேகர் சார்.. இருக்கட்டும் பரவால்ல..!

அடுத்து காலி ப்ளாட்டத் தாண்டி அடுத்த

வீடுதான்..வேணு கோபால் மாமாவோட சிங்கிள் பெட்ரூம் வீடு. வாசல்ல டிவிஎஸ் பிஃப்டி நிக்கர வீடுதான்..ரொம்ப நல்ல மனுஷர்.. எல்லாரும் வேணு மாமா ன்னு கூப்பிடுவாங்க.. மனைவி சரஸ்வதி மாமி. ரொம்ப பவ்யமான சாதுவான மனுஷி.. எல்லார்கிட்டயும் வாஞ்சையா பழகர டைப்பு.. வேணு மாமாதான் இங்க பிள்ளையார் கோயிலப் பாத்துக்கரார்..நல்லா பூஜையெல்லாம் பண்ணுவார்.. இதைத் தவிர வர்ர வழியில இருக்கிற கிராமத்து மாரியம்மன் கோயில். அப்பறம் பெரிய நாய்க்கன் பாளையம் மெய்ன் ரோடுகிட்ட இருக்கிற இன்னொரு பிள்ளையார் கோயிலெல்லாம் மாமாதான் கவனிக்கிறார்.. அங்க இங்கன்னு டிவிஎஸ் ஃபிஃப்டில அலையரத பயத்தா வருமானம் ஓகேதான்னு தோணும்..!

சரஸ்வதி மாமி நல்லா சமைப்பாங்க..! பொங்கல் புளியோதர மெதுவடைன்னு கோயில்ல எல்லா நல்ல நாட்களுக்கும் அவங்கதான் ப்ரசாதம் சமைக்கர வழக்கம்..!

எதிர் ரோவில பாத்தா அந்த கதவு ஜன்னலுக்கு கர்ட்டன் போட்ட வீடுதான் லூசி மேடத்தோட வீடு தனியாத்தான் இருக்காங்க பையன் காஸ்பரோட .. பெரியநாயக்கன் பாளையத்துல இருக்கிற ரோஸ்மேரி கான்வென்ட்ல டீச்சரா இருக்காங்க.. சொந்த ஊரு கேரளா…புருஷன் துபாய்லயோ சவூதிலயோ இருக்கார்.. ரெண்டு வருஷத்திற்கு ஒரு முறை வருவார்.. தடபுடலா இருக்கும் அவர் வந்தாலே..!

கிறிஸ்டியனா இருந்தாலும் பிள்ளையார் கோயில் பிரசாதமெல்லாம் நல்லா சாப்பிடுவாங்க. அதெல்லாம் பேதமில்லை..! ஆனா பாருங்க முகத்துல எப்பவும் ஒரு சோகம் கவிழ்ந்த மாதிரியே இருக்கும். பளிச்சுனு கலகலன்னு சிரிச்சு பேசி அவ்வளவா யாரும் பார்த்ததில்ல..!

இவங்க டீச்சரா இருக்கிற ஸ்கூல்லதான் சந்திர சேகர் சார் பொண்ணும் படிக்குது..! டீச்சரே தன்னோட ஸ்கூட்டில தெனம் தன் பையனோட சேர்த்து சந்துரு சார் பெண்ணையும் கூட்டிட்டு போய்டுவாங்க..!

அவங்க வீட்டு பக்கத்துலதான் விக்னேஷ் வீடு .. அதான் அந்த அப்பாச்சி நிக்கிற வீடு.. அவன் இடிகரை கிட்ட இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறான்.. ! அப்பா சந்திரன் மற்றும் அம்மா விஜயான்னு அளவான குடும்பம்..!

பின்னாடி தனியா நிக்கர்து பாருங்க பச்ச கலர் வீடு கேட்லாம் கூட பச்சை பெய்ண்ட் அடிச்சு அதுதான் ராமநாதன் சார் வீடு. மனைவி சுசீலா.. இன்னும் குழந்தையில்ல.. சுசீலா ரொம்ப ந்ல்லவங்க.. வாரத்தில எல்லா நாளும் ஏதாவது ஒரு கோயில்ல பாக்கலாம்..அடிப்பிரதட்சிணம்.. அர்ச்சனைன்னு… பாவம் குழந்தைக்கான வேண்டுதல்.. ! வாஸ்தவம்தானே..!? இந்த காலத்துல அளவா ஒன்னு பெத்துகிட்டாலும். அந்த ஒன்னும் கண்டிப்பா இருக்கணும்.. இல்லன்னா மனசு வேதனப்படத்தானே செய்யும்..?!

இதோ அங்க ஓரத்துல பார்த்தீங்களா.? ஒரு குடிசை கம் ஸ்டோர் ரூம் மாதிரி …! அதுதான் நம்ம வாட்ச் மேன் பெரியசாமி இருக்கிற வீடு.. வீடு கட்ர தட்டு முட்டு சாமான்லாம் கூட அங்கதான் வெக்கிறது வழக்கம்..! இருங்க அவனே வெளிய வர்ரான்..! கேப்போம்.. மொதல்ல இந்த கேமிராவ ஆஃப் பண்ணுவோம்..ரொம்ப நேரமா பறக்குது.. சூடாய்டும்..!

*ஆமா சார்.. நான்தான் பெரிய சாமி.. இங்க வாட்ச் மேனா இருக்கேன்.. இங்கயேதான் தங்கரது எல்லாம்.. ஊரு தேனி பக்கம் ஒரு சின்ன ஊரு பொண்டாட்டி புள்ளையெல்லாம் அங்கதான் இருக்காங்க.. பையன் ஐடி படிச்சிட்டு (ஐடிஐ யைத்தான் அப்படி சொல்ரார்). கெடச்ச வேலய செய்யரான்.. நிரந்தரமா இங்க கூட்டிகிட்டு வந்து வேல வாங்கித்தரணும்னு ஆசப் படரேன். நாகேந்திரன் சார், அதான் எங்க கம்பெனி சைட் மேனேஜர், ட்ட கூட சொல்லியிருக்கேன்.. இன்னும் நேரம் வரல.. நான் கோயமுத்தூர் வந்து ஆறேழு வருஷம் ஆச்சு.. நாலஞ்சு மாசத்துக்கு ஒருக்கா ஊருக்கு போரது வழக்கம்.. வீட்டுக்காரிதான் ரொம்ப பொலம்புவா.. “தனியா இருக்கியேய்யா.. தனியா இருக்கியேய்யா ” னு… என்ன பண்ரது சார் ..? படிப்பு ஏறலன்னா பின்னால கஷ்டப்படத்தான செய்யணும்.?

நானும் நைட்லதான் இங்க வாட்ச் மேன்..பகல்ல வீடு கட்ர வேலயும்செய்வேன்… மேஸ்த்ரி கூட.. அதிலயும் நாலு காசு வருமானம் வருமே.. ஆனா பாருங்க ..ரெண்டு மாசமா இந்த வியாதி வந்ததுல இருந்து வீடு கட்ரதில்ல.. யாரும் வேலைக்கும் வர்ரதில்ல.. பகல் வருமானம் நின்னு போச்சி…! ஆனா நைட் வாட்ச் மேனா இருக்கர்தால ஏதோ வருமானம் வருது .!

வாட்ச் மேன்னா… இந்த வீடுகளுக்கெல்லாம் இல்ல சார்.!. புதுசா கட்ர வீட்டுக்கு மட்டும்தான் காவல்..! சிமெண்ட்டுக்கும் ஜாமானுக்கும்.. நாகேந்திரன் சார்தான் ஐடியா குடுத்தாரு..”அப்படியே இந்த வீடுகளுக்கும் செக்யூரிட்டியா இருந்துக்கோப்பா.. அதிலயும் வருமானம் வரும்.ஆனா சம்பளம் என்ன கேக்காத.. வீட்டுக்காரங்களே தருவாங்க”ன்னு சொன்னாரு..!

நானும் முதல்ல சந்தோஷமாத்தான் ஆரம்பிச்சேன்.. இதோ இங்க நிக்குது பாருங்க .. ஜிம்மி .. இதுதான் என்னோட துணை.. எப்படியோ இங்க வந்து எங்கூடவே ஒட்டிகிட்டு இருக்கு..நாந்தான் பேரு வெச்சேன். ஜிம்மினு. ஆனா ஜிம்மின்னா ஆண் நாய் பேரா ..பெண் நாயான்னு கூட எனக்கு தெரியாது..? ஏதோ ஒன்னு கூப்டா ஓடி வரும்..! கடிக்குதோ இல்லையோ. போடர சாப்பாட்டுக்கு நல்லா வஞ்சமில்லாம குலைக்கும். அது போதுமே..?!

ஆனா ஒன்னு சார்.! இந்த வீட்டுக் காரங்ககட்ட சம்பளம் வாங்கரதுக்குள்ள உயிரு போவுது சார்.. ! கேட்டா நீ ஏற்கனவே வாட்ச் மேன்தான..? நாங்க வேற எதுக்கு தனியா சம்பளம் தரணும்பாங்க..!ஆனா நாகேந்திரன் சாரக் கேட்டா “நீ கரெக்டா கேட்டு வாங்கிக்கப்பா ! “ம்பாரு.. எங்கத்த போய் கண்டிசனா கேக்கரது..? கேட்டா இருக்கிற வருமானமும் போய்டும்னு பயமா வேற இருக்கு..!

ஆனா இந்த வேணு மாமா.. நான் அவர எப்பவுமே சாமி சாமி ன்னு தான் கூப்டு பழக்கம்.. என்ன ஒரு தெளிவான முகம் தெரியுமா ? அவங்க ரெண்டு பேருக்குமே..? பூசையெல்லாம் சொல்ராரே பின்ன சும்மாவா? …

சாமி யும் அவங்க சம்சாரமும்தான் பாதி நாள் என்னோட ராத்திரி சாப்பாட்டு பிர்சினைய தீர்த்து வைப்பாங்க.. ! அவங்க தர்ர பொங்கலும் லெமன் சாதமும்தான் பல நாட்கள் இரவு உணவு எனக்கு.. எப்பவாவது உடம்பு வலிச்சா சரக்கடிக்கும் போதுதான்..ரெண்டு புரோட்டாவ வாங்கிட்டு வருவேன்.. மத்தபடி வித விதமா சாமியும்..அவங்க சம்சாரமும்தான் தேடி வந்து குடுத்துட்டு போவாங்க.. ! மாமா ரெணு மூனு கோவில்ல பூச பண்ரதாலயும்.. நெறைய பேர் வீட்டு விசேசத்துக்குலாம் போவரதால எனக்கு கிட்டத்தட்ட எல்லா நாளும் சாப்பாடு கிடைச்சிரும்.. சாமி வார்த்தைய இங்க நிறைய பேர் கேப்பாங்க.. நல்ல மதிப்பு..!

ஆனா இந்த நோய் வந்ததுல இருந்து சாமிக்கு நெறைய வேலை இல்லன்னாலும்.. யாராவது கூப்பிட்டா அவங்க வீட்டுக்குபோவாரு.. ஏதாவது பூஜை பண்ணுவாரு… இங்ககூட ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் நோய் சரியாகணும்னு தினம் பிள்ளையார் கோயில்ல பூச பண்ணினாங்க.. !

ஆனா .. கொஞ்ச நாளா எனக்கும் அவருக்கும் நேரம் சரியில்ல.. பிள்ளையார் கோயில் மணியக் காணும்.. நல்ல பெரிய வெங்கல மணி..! அது காணாமப் போனதால சாமிக்கு மனசு ரொம்ப கஷ்டமாப் போச்சு..எந்நேரம் பொலம்பிகிட்டே இருப்பாரு.. நாலஞ்சுதடவ போலீஸ் டேசனுக்கு நடையா நடந்தாரு.. ப்ரயோசனம் இல்ல..நான் கூட போனேன்..! ஏஞ்சாமி

நாங்களே கொரோனா வேலயில ரொம்ப கஷ்டப்படரோம்.. நிலம சரியாகட்டும் பின்னால பாத்து தர்ரோம்னுட்டாங்க டேசன்ல..!

* பெரிய சாமி சொல்ரது சரிதான்.. இதுதான் இங்க நிலம.. பெரியசாமிக்கு இங்கயாரும் சம்பளம் தர்ராததால யாரும் அவன நிக்க வெச்சு கேள்வி கேக்கமுடியல..! ஆனா சந்துரு சார் மட்டும் யாராவது ஒரு நல்ல நேப்பாளி கூர்க்காவையோ.. இல்ல செக்யூரிட்டி கம்பெனி ஆளுகளையோ வேலைக்கு போடலாம்னு சொன்னாரு.. ஆனா மத்தவங்க செலவ நெனச்சு யோசிச்சாங்க.. ஆனா ஐடியா இன்னும் பெண்டிங் ல தான் இருக்கு..!

சந்துரு சார்க்கு என்ன அவ்வளவா பிடிக்காது.. எனக்கு பதிலா வேற ஒரு வாட்ச் மேன் வெக்கிற எண்ணம் அவர்கிட்ட இருக்கு..சரியான நேரம் பாக்கிறாரு..அது ஏன்னு கேக்கரீங்களா.? அத எப்படி சொல்ரது..? சொல்லணுமான்னு யோசிக்கரேன்…!

அதானே அத ஏன் நாம யோசிக்கணும்..? தப்பு செய்யரவங்களே யோசிக்காத போது.. அதப் பாத்த நாம யோசிக்கரது ஒன்னும் தேவையேயில்லயே.. !

அட ஏன் சார்.. இவ்வளவு இழுக்கணும்…? ஒரு நாள் ராத்திரி அவர் லூசி மேடம் வீட்ல இருந்து நைஸா வர்ரத நான் பாத்துட்டேன்.. நான் பாரத்தத அவரும் பாத்துட்டாரு..ஜன்னல் ஓரமா ஸ்க்ரீன் பின்னால நின்னுகிட்டிருந்து லூசி மேடமும் பாத்துட்டாங்க…!

நான் பாக்கர பாத்துட்டு விடு விடுன்னு தன் வீட்டுக்குள்ள போய்ட்டாரு சந்துரு சார்.. நமக்கென்னங்க வந்தது.? இது அவங்க அவங்க தனிப்ட்ட விஷயம்.. ஆனா அப்பாவி சித்ரா மேடத்தையும்.. எங்கியோ துபாய்ல இருககிற லூசி புருஷனையும் நெனைச்சுதான் கொஞ்சம் மனசு கஷ்டப்பட்டேன்..! இந்த லூசி ய ரொம்ப நம்பராங்க சித்ரா மேடம்..வீட்டுக்குலாம் தாராளமா விடுவாங்க.. அவங்களுக்கு கிடைச்ச பலன் இதான் போலிருக்கு.. சரி…சரி…விடுங்க..!!

வழக்கம் போல இன்னிக்கும் என்னோட செல் போன்ல பாட்டு கேட்டுகிட்டு பாய்ல படுத்திட்டு இருந்தேன்.. இன்னிக்கு சாம்பார் சாதம் குடுத்தாங்க சாமி வீட்ல.. இன்னிக்கு எந்த கோவில் பூசையுமில்ல.. இது அவங்க வீட்ல அவங்களுக்காக சமைச்சது.. கேரட் பொரியலும்..முள்ளங்கி சாம்பாரும்.. கையெல்லாம் வாசனை…ஜிம்மியும் வழக்கம் போல சாப்டுட்டு பக்கத்துல படுத்து கெடந்தது..

ஒரு பதினோரு மணி இருக்கும் யாரோ வர்ர சத்தம்.. ஜிம்மி தலைய தூக்கிப் பாத்துட்டு மெல்ல வால ஆட்டிச்சு.. ! யார்னுபாத்தா நம்ம முருகையன்தான்… குடுகுடுப்பக் காரன்.. வாரம் ஒன்னு ரெண்டு நாள் இந்தப் பக்கம்வருவான்.. இன்னுமா இந்த குடுகுடுப்பக் காரங்கலாம் இருக்காங்கன்னு கேப்பேன் அவன.. சிரிச்சிகிட்டே” ஏன் நான் இருக்கனே.!” ம் பான்..!

வந்தா கொஞ்ச நேரம் என் வீட்ல உக்காருவான்.. ஒரு பீடியக் குடிப்பான்..! ஜிம்மிக்கு ஏதாவது திங்கரதுக்கு போடுவான் தவறாம.. அதனாலதான் அவன பாத்த உடனே ஜிம்மி வால ஆட்டும்.! அவன் வந்தாலே அவன் மேல ஜவ்வாது வாசன அடிக்கும்.. அது என்னமோ ஜவ்வாது பிரியன் அவன்.. !

அவன் வந்த ஆரம்பத்துல எங்கிட்ட பேச்சு குடுத்து யார் யார் இங்க குடியிருக்காங்கன்னு என் வாய்லயே கேட்டு தெரிஞ்சிகிட்டான்.. ஏன்யா இதெல்லாம் கேக்கரன்னுகேட்டதுக்கு.. ” என்னப்பா பண்ரது.? ஏதாவது பொருந்தர மாதிரி குறி சொன்னாத்தான ஏதாவது வருமானம் கிடைக்கும்.?”பான்.. நானும் பாவம் போனா போறான்னு விட்டுட்டேன்.. நம்ம கஷ்டம் நமக்குதானே தெரியும்.?

” ராமநாதன் சார் வீட்ல ஒரு சின்ன பூசைக்கு கூப்டிருக்காங்க!” ன்னான் .. முருகையன்.. எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு.. “என்னப்பா சொல்ர..?” ன்னு கேட்டேன்..

“இல்லப்பா ..! குழந்த பொறக்கணும்னு ஒரு பூசை.. தலச்சன் குழந்த மை ய வெச்சு பூச செஞ்சா குழந்த பொறக்கும்னு நான்தான் சொன்னேன் ” னு சொன்னான்.. !

அவன் சொல்ர தலச்சன் மையெல்லாம் ஒரு டுபாக்கூர் வேலன்னு எனக்கு தெரியும்.. ஆனா அதக் காமிச்சுக்கல.. ! சரி அவன் வயித்துல ஏன் அடிக்கணும்னு விட்டுட்டேன்…

சரிப்பா வர்ரேன்னு போய்ட்டான்..! என்னதான் ஒரு அஞ்சாறு மாசமாத்தான் எனக்கு இவன தெரியும்னாலும் .. அவனோட ஏழ்மை னால எனக்கு அவன ஏதோ பிடிச்சு போச்சு.. ! ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி தானே..?

ராத்திரி .. மூனு மணி வரைக்கும் மெல்லிசா பூச பண்ர சத்தம் கேட்டுது ராமநாதன் சார் வீட்ல.. உள் ரூம் லைட்டு மட்டும் எரிஞ்சிகிட்டு இருந்தது.. பாவம் ..சில விஷயங்கள் கடவுள் நமக்கு தந்தா அதை மனசோட ஏத்துக்கர பக்குவம் மட்டும் நமக்கு வந்திட்டா.. பாதி பிரச்சினை தீர்ந்திடும் இங்க… சரி சரி தூங்குவோம்..!

இது நடந்து ரெண்டு நாள் இருக்கும்..அடுத்த தெரு ராம நாதன் சார் வீட்ல இருந்து சத்தம்..”திருடன்..திருடன்னு” ..லைட்ட போட்டுட்டு கத்தினாங்க புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும்..தடதடன்னு கதவ தொறக்கிற சத்தம்.. பக்கத்துல விக்னேஷ் வீட்லயும் முழிச்சிட்டாங்க… நாலஞ்சு வீட்ல லைட் போட ஆரம்பிச்சிட்டாங்க.!

நானும் சட்டய மாட்டிகிட்டு ராமநாதன் சார் வீட்ட நோக்கி போலாம்னு செருப்ப மாட்டிகிட்டு கிளம்பினேன்.. டார்ச் லைட் வேஸ்ட்டு.. பேட்டரி இல்ல.. ! சரி போவோம்னு கௌம்பும் போது.. ஒரு உருவம் தடதடன்னு படபடப்பா ஓடி வந்தது.. “யார்ரா..?” னு பார்த்தா நம்ம சந்துரு சார்.. படபடப்பா.. கையில சட்டையோட , போட்டிருக்கிற லுங்கி பனியனோட ஓட்டமும் நடையுமா வந்துகிட்டிருந்தாரு.. “என்ன சார்.? என்ன இந்த நேரத்துல..?” ன்னு கேட்டேன்..! டக்குனு லூசி மேடம் வீட்ல கதவை சாத்துர சத்தம் கேட்டது புரிஞ்சு போச்சு.. ! இவர் நைட்ல தன்னோட வீட்லயே தங்க மாட்டாரான்னு நெனச்சுகிட்டேன்..!

அதுக்குள்ள ராமநாதன் சார்..விக்னேஷ் , அவங்கப்பாலாம் நாங்க இருந்த பக்கம் வர்ர சத்தம் கேட்டுது.. உடனே சந்துரு சார்கிட்ட சார்.. உடனே என் வீட்டுக்குள்ள போயிடுங்க.. அவங்கல்லாம் போனப்புறம் மெல்ல உங்க வீட்டுக்கு போயிடுங்கன்னு அவசரம் அவசரமா வர என் குடிசைக்குள்ள தள்ளினேன்..! அவரு திருதிருன்னு முழிச்சிகிட்டே “தேங்க்ஸ்பா..!! நன்றிப்பா.!!”னு உளறிகிட்டடே உள்ள போய் பதுங்கிகிட்டாரு.. கஷ்டகாலம்..!! இதெல்லாம் இவருக்கு தேவையான்னு நினைக்கும்போதே… விக்னேஷ் அப்பா விக்னேஷ்லாம் ஓடி வந்தாங்க..கையில டார்ச் லைட்டோட..!

“வாட்ச் மேன்..!!வாட்ச் மேன்..!! இந்தப் பக்கம் யாராவது ஓடி வந்தாங்களா..? பாத்தீங்களா.? ராமநாதன் சார் வீட்டுல திருடன் பூந்துட்டான்” னுகேட்டாங்க.!

“ஆமாசார்…! எங்கவீட்டு பின் பக்க கதவ திறந்து வீட்டுக்குள்ள யாரோ வந்தாங்க” ன்னாரு ராமநாதன் சார்.!

எனக்குதான் தெரியுமே யார் திருடன்னு..?! ஆனா அதக் காமிக்காம. “ஆமா சார்…யாரோ அந்தப் பக்கம் ஓடின மாதிரி இருந்தது..வாங்க பார்ப்போம்!” னு பின்னாடி தென்னந் தோப்பு பக்கமா வேகமா ஓட ஆரம்பிச்சேன்.. கூடவே “அஸ்..அஸ்.!” னு ஜிம்மிய தூண்டி விட்ட உடனே அதுவும் பலமா கத்திகிட்டே அந்தப் பக்கமா ஓடிச்சு..!

கூடவே இவங்களும் பின்னாடிய ஓட ஆரம்பிச்ச உடனே.. நான் குடிசைக்குள்ள இருந்து.” சார் வெளிய வாங்க.. சீக்கிரமா வீட்டுக்கு போயிடுங்க.. பத்திரம்!!” ன்னு சந்துரு சார்ட்ட சொல்லிட்டு ஓடினவங்க பின்னாடியே நானும் ஓடினேன்…!

ஆனா என் மனசில ஒரு குழப்பம்.. சந்துரு சார் போன லூசி மேடம் வீட்டுக்கும்..ராமநாதன் சார் வீட்டுக்கும் சம்பந்தமில்லையேன்னு நெனச்சுகிட்டே தெரு முக்கு வரைக்கும் போய் நின்னுகிட்டு மெல்லமா சுத்திலும் இருட்டுல பார்த்தேன்.. அப்ப யாரோ.. அந்த மூலையில புதுசா கட்ர வீட்ல சுவர் பின்னாடி நிக்கர்து தெரிஞ்சது.. ஆமா.! கண்டிப்பா யாரோ இருக்காங்க..!

“யாரது.? வெளிய வாங்க.! ” னு கூப்டுகிட்டே வேகமா இருட்டில அந்த வீட்டு பக்கமா ஓட ஆரம்பிச்சேன்..நான் பககத்துல வந்த உடனே அந்த உருவம்.. சடார்னு வேகமா வெளிய வந்து இருட்டுல ஓட ஆரம்பிச்சிது..!

ஆனா நான் விடல கபால் னு பாஞ்சு அந்த ஆள் மேல விழுந்து கழுத்த கட்டிபிடிச்சு கிட்டு..”திருடன்..!! திருடன்..!! வாங்க வாங்க.! “ன்னு கத்த ஆரம்பிச்சேன்.. !

அந்த ஆளும் விடல ரொம்ப வேகமா திமிர ஆரம்பிச்சான்… எனக்கும் அந்தாள தொட்ட உடனே ரொம்ப தெரிஞ்ச மாதிரி இருந்திச்சு.. ஆனா அந்த அவசரத்துல யோசிக்க முடியல..! அந்த ஆளு கழுத்த கெட்டியா பிடிச்சு நெருக்க ஆரம்பிச்சு உடனே.. அந்த ஆளு பக்கத்துல இருந்த ஒரு கம்பினு நெனைக்கரேன்.. எடுதது என் தோளில் குத்தினான்..!

* பெரிய சாமிய அந்த ஆள் பலமா தோள் பட்டையில குத்தின உடனே பெரியசாமி கத்த ஆரம்பிச்சிட்டாம் பாவம்.. கைய விட்டுட்டான்.உடனே அந்த ஆளு இருட்டு ல ஓடிட்டான்..அவன் போகட்டும். பாவம் பெரியசாமிக்கு என்ன ஆச்சோன்னு தெரியல..அதுக்குள்ள எல்லாரும் சத்தத்தக் கேட்டு திரும்ப இந்தப் பக்கம் ஓடி வந்தாங்க .! பெரியசாமி தரையில கிடக்கரத பாத்துட்டு , கையில அடி பட்டிருக்கரத கவனிச்சு, உடனே பொிய சாமியத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாங்க…ஆமாம் இது வரைக்கும் அவனுக்கு ஒத்த ரூபா சம்பளம் கூட தராத அவங்கதான் இப்ப அவனுக்காக மொத்தமா ஆஸ்பத்திரிக்கு ஓடினாங்க.!

பரவால்லயே.!!

மறுநாள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஏட்டு வந்தாரு ..நேரா ஆஸ்பத்திரிக்கே நடந்ததெல்லாம் பெரிய சாமிகிட்ட கேட்டாரு.கை காயமெல்லாம் பாத்தாரு..” அந்த ஆள் யாருன்னு தெரியுமாப்பா..?”ன்னு கேட்டாரு.. !

அதுக்கு ராமநாதன் “இல்ல சார்! ஒரே இருட்டு ..எனக்கும் அடையாளம் தெரியல .பெரியசாமியும் பாத்திருக்க வாய்ப்பில்ல”ன்னு சொல்லும் போதே.. ! !!

“இல்ல சார்.. எனக்குத் தெரியும்.”னான் பெரியசாமி.. !!

* ஆரம்பத்துல எனக்கு அந்த ஆள் யார்னு தெரியல. இருட்டுல முகம் பாக்க முடியல.. ஆனா மனசுக்குள்ள ஏதோ ஒன்னு குடைஞ்சுகிட்டே இருந்தது.. கையால மூஞ்ச துடைக்கும் போதுதான் அத கவனிச்சேன்…” நர்ஸம்மா என்னோட சட்டயக் குடுங்க..!” ன்னு கேட்டேன்..!

“அத எதுக்குப்பா கேக்கர.. ஒரே ரத்தக் கறை..! இன்னும் தோய்க்கக் கூட அனுப்பலை.”! ன்னாங்க நர்ஸம்மா..

இ்ல்ல …! அதக் கொண்டாங்கன்னு கேட்டேன் நான்.!

*நர்ஸம்மா சட்டயக் கொண்டு வந்ததும் , அதை சுருட்டி மூக்கில் வெச்சு மூந்து பார்த்தான் பெரிய சாமி.!

“ஆளத் தெரியும்சார்!”..னு சொன்னான் பெரியசாமி.!

*சந்துரு சார் முகம் வெளிறிப் போனதைப் பார்த்தேன் நான்..!

சட்டையில ரத்த வாசனைய விட மருந்து வாசனைய விட மெலிசா அந்த வாசனையும் அடிச்சது.. அதாவது அந்த ஆள் மல அடிச்ச வாசன .. அவனைக் கட்டிப் பிடிச்ச என் மேலயும், என் சட்டை மேலயும் அடிச்சது.. அவன் போட்டிருந்த ஜவ்வாது சென்ட் வாசன தான் அது..!

” அது முருகையன் சார்..! குடுகுடுப்பக்காரன் முருகையன்!”னு சொன்னேன் .. உடனே அத்தன பேர் மூஞ்சிலயும் ஆச்சர்யம்..! ராமநாதன் சாருக்கு அதிர்ச்சி…தன்னோட மூடத்தனத்தால நடந்திருக்கிற விவகாரத்த நெனச்சு அவர் முகம் மாறிப்போனதை நான் கவனிச்சிட்டேன்..!

சந்துரு சார் மகிழ்ச்சில என்கைய புடிச்சு குலுக்கினாரு..”தேங்க்ஸ். தேங்க்ஸ் ” னு.. !!

எல்லாரும் அவரையே வித்தியாசமா பாத்தாங்க..!

ஏட்டு கிட்ட முருகையன் நம்பர் குடுத்ததும் போலீஸ் அவனப் புடிச்சதும் தனிக்கதை…. கடைசில பாத்தா அவங்கிட்டதான் கோயில் மணியும் இருந்திருக்கு.. அடக்கடவுளே இந்த குடுகுடுப்பன் காரன் வேலையே நோட்டம் விடரதுக்குதான் செய்யரான் இவன்னு புரிஞ்சு எனக்கே அதிர்ச்சியா போச்சு..!

* ரெண்டு நாள் கழிச்சு ஆஸ்பத்திரில இருந்து பெரியசாமி ய அனுப்பிட்டாங்க..!

காலனில இருந்த எல்லாரும் பெரிய சாமி குடிசை முன்னாடிதான் நின்னாங்க… சைட்டு சூப்பர்வைசர் நாகேந்திரன் சாரும் கூட வந்திருந்தாரு..!

“பெரிய சாமி .! எம்டிக்கு ரொம்ப சந்தோஷம்..இத்தன கஷ்டத்திலயும் உன்னால கோயில் மணி கிடைச்சது அவர் ரொம்ப சென்ட்டிமென்ட்டா ஃபீல் பண்ராருப்பா..உனக்கு உதவியா இருக்கும் வெச்சுக்க.!”ன்னு ஒரு கவரக் குடுத்தாரு..பெரிய சாமிக்கு ஒரே சந்தோஷம்தான் போங்க..!

வழக்கம் போல வேணு மாமா வீட்ல இருந்து பெரிய சாமிக்கு ரசம் சாதம் வந்தது.. !

அப்பதான் சந்துரு சார் சொன்னாரு.. “உன் மனைவியும் பையனும் ஊர்ல தனியாத்தான இருக்காங்க..? அவங்களையும் இங்க வரச் சொல்லிடேன் பெரியசாமி.. உன் பையனுக்கு என்னோட கம்பெனிலயே வேலைக்கு ஏற்பாடு பண்ரேன்!”னு சொன்னாரு..

அதைக் கேட்டு பெரிய சாமிக்கு முகம் விரிஞ்சத பாக்கணுமே.!

“ஆமாம் பெரிய சாமி.. உன்னோட மனைவிக்கு கூட எதாவது நம்ம கம்பெனில வீடு கட்ர வேலை பாத்துக்கலாம்.. எம்டி கூட இன்னும் ஏழெட்டு வீடு புக் ஆயிருக்கர்தால.. இங்கயே பர்மனென்ட்டா சம்பளத்துக்கு வாட்ச் மேனப் போட்டு தங்கரதுக்கு வீடு கட்ட சொல்லிட்டாரு.! “ன்னாரு.. நாகேந்திரன்..

பெரிய சாமி வாயப் பொளக்காததுதான் குறை..!

*” ஆமாம் பின்ன.?? இத்தன நாள் முட்டி மோதியும் நடக்காத விஷயம்லாம் இன்னிக்கு ஒரே ராத்திரில தான் தேடி வந்தத நினைச்சு எனக்கு என்ன சொல்துன்னே தெரியல..!!

எல்லாம் கடவுள் செயல் தான்னு நினைச்சுகிட்டேன்.. ! அது நான் கும்புடுர புள்ளையாரோ.. இல்ல முருகையன் கும்பிடுர ஜக்கம்மா வோ..?!

யாருக்கு , எப்படி, எப்ப உதவணும்னு எனக்கு பழக்கமேயில்லாத ஜக்கம்மாவுக்கும் தெரிஞ்சிருக்கே..?!

ரெண்டுநாள் கழிச்சு.. லூசி மேடமும் வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க…உறுத்தலா இருந்திருக்கும் போல..!

மூனாவது நாள் காலைல சித்ரா மேடம் தயங்கித் தயங்கி என்கிட்ட வந்தாங்க…கண்ல தண்ணி தளும்பியிருக்க.. கையக் கூப்பினாங்க என்னப் பாத்து..!

“தேங்க்ஸ்..!!”

ஐயய்யோ ! அதெல்லாம் ஒன்னுமில்ல.! விடுங்கம்மா.!”

எனக்கு ரெண்டு விஷயம் இப்ப புரிஞ்சு போச்சு…

ஒன்னு.. சித்ரா மேடம்க்கு தெரிஞ்சுதான் இத்தன நாள் இது நடந்திருக்கு..! அந்த வேதனை இப்ப முடிஞ்சு போச்சுங்கர திருப்திய கண்ல பாத்தேன்..!சந்துரு சார் இனிமேலாவது சரியா இருந்தா போதும்..!

ரெண்டாவது …ஜக்கம்மா முருகையன் வழியா எனக்கு மட்டும் உதவல.. என் வழியா சித்ரா மேடத்துக்குத்தான் நிஜத்திலேயே உதவியிருக்காங்கர உண்மை..!

பிள்ளையார் கோயில் மணி அடித்தது..! வேணு மாமாதான்….!

அவர் சந்தோஷம் அவருக்கு…!!

சட்டையை மாட்டிக் கொண்டு கோயிலுக்கு புறப்பட்டான் பெரியசாமி.!

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஜக்கம்மா..!

  1. Bhaskar’s presentation of the story is too good.
    Introducing the flat through drone camera is novel thing.
    He is giving variety of short stories which is commendable.

  2. கடவுள் நம்பிக்கை..அதே சமயத்தில் மூடநம்பிக்கை..தவறான நடத்தை..பணத்திமிர்..ஏழ்மையின் அவலம்..அனைத்தைப்பற்றியும் கதை சொல்லுகிறது..!!வாழ்த்துகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *