சோம சன்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 2,751 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோம சன்மா என்னும் ‘பிரம்மன்’ பாறைமீது கால் களை அழுந்த ஊன்றிக் கொண்டு, இளந்தாடி காற்றில் அலைய, கீழே பசிய மரஞ்செடிகள் அடர்ந்திருக்கும் பிரதேசத்தைக் கண்டு அதிசயித்து நின்றான்.

குருகுல வாசத்திலில்லாது. நேரே யோக சித்தியி னின்று விழித்தெழுந்த பால சன்யாசியாதலின், அவன் மண்டையிலும் முகத்திலும் உடலிலும் மயிர் வெட்டாது அடர்ந்து வளர்ந்திருந்தது. மண்டையில் ஊறியிருக்கும் ஞான வெறியோ என்னவோ! சற்று மஞ்சள் பூத்த கண் கள், வீக்ஷண்யமாய்ப் பிரகாசித்தன. சமாதியினின்று திடுக்கென்று விழித்தெழுந்ததாலோ என்னனோ, சதா அழிந்து கொண்டும் மறுபடி மலர்ந்து கொண்டு மிருக்கும் இந்தப் பூவுலகின் அழகு , அவனை அப்போது தான் வயிற்றி லிருந்து விழுந்த குழந்தை போல் பிரமிக்க அடித்தது.

பூமாதேவி, இளவேனிலில் குளித்து, குளித்த சுறுக்கில் பச்சைப் பட்டாடையை உடல்மேல் போர்த்திக் கொண் டிருந்தாள். அவளுடைய அவயவங்களின் வளத்தை எடுத் துக்காட்டி, மரமும் செடியும் கொடியும் பூவும் புதரும் அங்கங்கே பொங்கிப் புளகித்துப் பூத்திருந்தன. வெள்ளிச் சரிகை போல் ஓர் அருவி, பாறைகளினின்று சரிந்து, காட்டினுள் ஊடுருவிச் சென்றது. ஜலத்தடியில் வெள்ளைக் கூழாங் கற்களும் மணலும் பூமாதேவியின் அடி வயிறும் பிரகாசித்தன. எவ்வளவு தின்றும் குன்றா வான வெளி யின் நீலத்தை, வெண் மேகங்கள் நிதானமாய் மேய்ந்து கொண்டு சென்றன. புள்ளினங்கள் காலையிலெழுந்து. குதூகலத்துடன் ஒன்றையென்று கூப்பிட்டுக் குசலம் லிசாரித்துக் கொண்டிருந்தன.

சோம சன்மா கீழேயிறங்கிக் காட்டினுள் புகுந்தான். தாவர வர்க்கங்கள் தலை குனிந்து, அந்தப் பிராம்மணோத் தமனை வரவேற்றன. காயும் பழமும் இலையும் , கைக்கு. மாத்திரம் அல்ல, நேரே வாய்க்கே எட்டும் உயரத்தில் கனத்துத் தொங்கின. தரையில் ஜமக்காளம் விரித்தது போல் பச்சைப் புல். அகத்துள் வீற்றிருக்கும் பெம்மானை அர்ச்சிக்கும் பூக்கள், பக்குவ மலர்ச்சியில் பறிக்கத்தான் காத்துக் கொண்டிருந்தன. தவத்துக்கும் சிந்தனைக்கும் இதைவிடச் சௌக்கியமான இடம் ஏது?

இவ்வெண்ணம் மனதில் பாய்கையிலேயே, பின்னால் ‘வீல் என்று ஓர் அலறல்! சோம சன்மா திடுக்கிட்டுத் திரும் பினான். இரு புதர்களினிடையில் ஒரு பெண்ணின் உருவம் கரிமின்னல் போல் கண்ணில் பட்டு மறைந்தது. பின்னா லேயே அதைத் துரத்திக் கொண்டு ஒரு ஜந்து ஓடி வந்து, சோம சன்மனைப் பார்த்ததும் திகைத்து நின்றது.

சிக்குப் பிடித்துச் சடைசடையாய்த் தொங்கும் மயிர். அதைச் சுற்றிலும் குடலைக் குழப்பும் ஒரு துர்நாற்றம். தடித்துத் தொங்கும் உதடு. அதைத் தள்ளிக்கொண்டு கோர மாய் இளிக்கும் பற்கள். தீராத வேட்கைளின் மங்கிய சுடர் விட்டெறியும் கண்கள். மூச்சில் உலையனல் வீசிற்று, அதன் முற்றிய மூர்க்கத்தின் அடையாளமாய், நெற்றியில் இரு கொம்புகள் கொடி முடிச்சாய் முறுக்கிக் கொண்டிருந்தன. இதென்ன, மிருகமா அல்லது மிருக வேஷமெடுத்த அரக்கனா?

தவத்தைக் கலைக்க இம்மாதிரி ராக்ஷசர்கள் வருவது வழக்கமாயிற்றே! சோம சன்மனுக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. ஹுங்காரம் பண்ணிக் கொண்டு. அவ்வரக்கன் மீது பாய்ந்தான். ஊளையிட்டுக் கொண்டு, அந்த மிருகம் புறமுதுகிட்டு ஓடியது. • பிராம்மண’ கோபத்தின் முன் எது தான் நிற்க முடியும்……..?

அந்தப் பெண் அடர்ந்து வளர்ந்த புதர்களினின்று வெளிப்பட்டு, அவனை வணங்கிய பொழுது தான் அவனுக்கு அவள் நினைவு வந்தது. தாழ்ந்த குலத்தினள் தான். கன்னங்கறுத்த மேனி. ஆயினும், என்ன வனப்பு! அப்பெரும் விழிகளில் எவ்வளவு மருட்சி! மேனி பட்டுப்போல் மின்னியது. அச்சாய் அமைந்த அவயவங்களின் மனத்தில் எழுந்த ஆசையும், கண்ணை மறைத்தன.

பெண்ணே நீ யார்?’ என்னும் கேள்வி, தொண்டை யில் எழுந்ததேயன்றி வாயில் கிளம்பவில்லை. ஆம், வாய்ச் சொல்லில் என்ன பயன்? அவள் நிற்கும் நிலையும் பார்க்கும் பார்வையும், அவள் மனத்தில் உள்ளதை வெட்ட வெளிச்ச மாய் திறந்து காண்பித்தன. அவள் யாராயிருந்தால் என்ன? இவளை ஏற்றுக் கொண்டால் என்ன? காசியபப் பிரம்மா, மாயையைக் கூடவில்லையா? பராசரர், மச்சகந்தியை இச்சிக்கவில்லையா? ஸுப்ரஹ்மண்யன் வள்ளியைக் கொள்ளவில்லையா? பகவன் என்னும் பிராம்மணன் ஆதி யென்னும் பறைச்சியை அங்கீகரிக்கவில்லையா? முற்றிலும் கடந்தவனுக்கு குலமேது, கோத்திரமேது. வரம்பு ஏது?

அவள் கண்களால் சிரித்துக் கொண்டே, ஊடலாய்ப் பின்னிடைந்து ஓட ஆரம்பித்தாள். அவன் பின் தொடர்ந் தான். பாறைக்குப் பாறை மேட்டுக்கு மேடு தாவி, குன்றின் உச்சியை நாடி அவள் ஓடுகையில், அவள் உடல் கட்டின் விறுவிறுப்பும், சந்தனக் கட்டை போல் வழுவழுத்த வளமான தொடைகளின் மிடுக்கான ஒடிப்பும், அவனைத் திணற அடித்து, மூளையில் வெறியை உண்டாக்கியது. வெகு வேகமாய்க் குன்றைச் சுற்றிக் கொண்டு போய், உச்சியில் திடீரென்று எதிரில் தோன்றினான்.

அவள் தப்பியோட வழியில்லை. முன்னும்பின்னும் பக்கங்களிலும், பாறைகள் மதில்கள் போல் எழும்பித் தடுத்தன. விலக்க முடியா விதியை ஏற்கும் விரக்தியுடன், பயத்தின் குளிர்விட்டு, அவனது ஆண்மையின் சீறலை எதிர் பார்த்துக் கொண்டு அவள் நிற்பதை, அவன் கண்டான். அவன் கண்களில் ஜ்வாலைகள் கிளம்பின. பிடறி விசிறி போல் சிலிர்த்தது. அவளிடம் தாவுகையில் அவளே ஆகாயத் தில் பறப்பது போலிருந்தது.

***

இளவேனில் கோடையாய் முதிர்ந்தது. நாளடைவில் வேகமும் விறுவிறுப்பும் குறைந்து, நடை தளர்ந்து, உடல் கனத்து, அவள் பாதம் பூமியில் பதிவதைக் கண்டான். ஆயினும் இந்த அயர்ச்சியிலும் ஒரு கவர்ச்சி. இந்தக் கனத் திலு!! ஒரு மினுமினுப்பு, இந்த மெதுவிலும் ஒரு திமிர். அவனை அவள் இப்பொழுது நாடவுமில்லை. விரும்பவு மில்லை. தன்னில் தானே நிறைந்திருந்தாள். அவனை வேணுமென்றே ஒதுங்கியும் நின்றாள்.

பிறகு, ஒருநாள் மாலை அலைந்து திரிந்து விட்டு வாழு மிடம் திரும்புகையில், அவள் மடியில் ஒரு சிசு, பால் குடிப்ப தைக் கண்டான். அவன் நெஞ்சு நைந்தது. என்னதான் உயர் குலமாயினும் பெற்ற மனந்தானே! ஆனால் அவளுடைய மூர்க்கம் புரியவில்லை. குழந்தையினிடமிருந்து விடுவித்துக் கொண்டு ஓடிவந்து, அவனை முட்டியுதைத்து வீழ்த்தினாள். எதிர்பாராத வேளையில் அவள் தாக்கிய வேகத்தில், அவன் கால் சறுக்கிப் பாறையின் உயரத்தினின்று உருண்டு புரண்டு விழுந்தடித்துக் கொண்டு கீழே வந்து சேர்ந்தான். எழுந்ததும் உடல் மண்ணைத் தட்டிக் கொண்டு, வந்த கோபாவேசத்தில் அவளைச் சம்ஹாரம் பண்ணி விடுவதென்றே புறப்பட்டான். ஆயினும், அறிவு வந்து சமயத்தில் தடுத்தது.

– சீ, கேவலம் பெண் புத்தியைக் காண்பித்துவிட்டாள் . அதிலும் ஈன ஜாதி, நம் வைராக்கியத்தை மறந்தது நம்மேல் அல்லவா தப்பு? விசுவாமித்திரன் மாதிரி ஏமாந்து போனோம். இது நமக்கு நல்ல பாடம். உன்னையே நீ எண்ணிப் பார்.

அவ்விடத்து மண்ணை உதறிவிட்டு, அப்பால் அகன்றான்.

***

தாவரங்கள் சில மலர்ந்தன. சில வாடிக் காய்ந்து கருகி யழிந்தன. நீர் இருந்த இடம் வறண்டு உலர்ந்து வெடித்தது. வெடித்த இடம் சுரந்தது, பூத்திருந்தது செத்தது. செத்தது மறுபடியும் வித்து வைத்தது. வாழ்ந்தது, அழிந்தது, பிறந்தது.

காலம் பல கோலமாய்ச் சென்றது. அவன் திகம்பர னாய், தன்னைத் தவிர வேறேதும் சிந்தியாது, காய் கனி இலை சருகுகளைத் தின்று அலைந்தான். அவனது தனித் தவத்தின் விந்தை யாதெனில், மேனி இளைக்கவில்லை. மயிர் சடைத்ததால், உடம்பில் உரம் ஏறி, ஆள் உருவாய் விளங்கினான். நினைத்தபோது ஆகாரம். கண்ட விடத்தில் படுக்கை. தாடி முழங்கால் வரை தொங்கியது. அதிலிருந்தே அவன் எவ்வளவு பெரிய தவசி என்று அவனுக்கே தெரிந்தது. அவனை அண்ட எதுவும் அஞ்சியது. அவன் மூச்சிலேயே அவ்வளவு அனல் நெடி,

பிறகு, ஒருநாள் காலை, – வில்வ இலைகளை உட் கொண்டு உள்ளத்தில் வீற்றிருக்கும் பெம்மானை அர்ச் சித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று அவனுக்கு உடல் இருப்புக் கொள்ளாமல் பரபரத்தது. யாரோ புதர் களிடையே யிருந்து, தன்னைக் கூர்மையாய்க் கவனிப்பது போன்ற சங்கடமான உணர்ச்சி. வாயில் அப்படியே ஒரு வில்வ கொத்துத் தொங்கியது. அதை உள்ளே தள்ளி அதுக்கு முன், நாலு பேர் நாற்புறங்களினின்றும் பாய்ந்து வந்து, அவன் பாதங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண் டார்கள். அவனால் அசையக்கூட முடியவில்லை. திடீரென்று அவனை ஒருவன் தோளில் ஏற்றிக்கொண்டான். பின்னால் மற்ற மூவரும் கொக்கரித்துக்கொண்டும் குதித்துக் கொண்டும் ஏதோ புரியாத பாஷையில் பேசிக் கொண்டும் பின் தொடர்ந்தனர்.

எல்லோரும் காட்டோரத்தில் ஒரு கிராமத்தை அடைந் தனர். அது கிராமங்கூட அல்ல. சேரி மாதிரி இருந்தது. இன்னும் ஏழெட்டு பேர் குடிசைகளிலிருந்து ஓடிவந்து. அவனைப் புரியாத பாஷையில் வரவேற்றனர். அவனை ஒரு குடிசைக்குள் கொண்டுபோய் இறக்கி, ஆகாராதிகளையும் ஜலத்தையும் அவன் முன் வைத்து விட்டு, கதவை மூடிக் கொண்டு எல்லோரும் வெளியேறினர்.

அவர்களுடைய பிராம்மண பக்தி,’ அவனுக்குப் புரிய வில்லை. வேளா வேளையிலும், வேண்டாத வேளையிலும் வேணும் வரை தீனி, ஆனால் வெளிக்கதவு மட்டில் எப்போதும் அடைப்பு. அவன் ஒன்றும் பேசவேயில்லை. மௌனித்திருக்கும் சக்தி வேறெதற்கு உண்டு? எவ்வளவுக் கெவ்வளவு நான் மௌனமோ, அவ்வளவுக்கவ்வளவு இவர் கள் நம்மைக் கொண்டாடும் பெருமையும் அதிகரிக்கும். தவிர, என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே!

பின்பு –

ஒருநாள் உதயத்தில், சூரிய கோளம் தகதக என்று குன்றின் உச்சியை உதைத்துக் கொண்டு கிளம்புகையில், நாலு பேர் வந்து அவனை எழுப்பி, ஸ்நாந கட்டத்துக்கு அழைத்துப்போய், ஆசையாய், உடம்பை நன்றாகத் தேய்த்து, மயிரின் சடையையும் சிக்கையும் பிரித்து. உடல் பனிபோல் மின்னக் குளிப்பாட்டி, நெற்றியில் பதக்கம்போல் திலகமிட்டு, தலையில் பூச்சுற்றி, கழுத்திலே ஆரமிட்டு. கொட்டும் மேளமுமாய்க் கிராமத்தைச் சுற்றி வந்தார்கள்.

நம்முடைய மகத்துவம் இவர்களுக்கு எப்படித் தெரிந் தது? என்ன மரியாதை, என்ன பக்தி; ஏதேது. இவர்களுக்கு அடுத்த ஜன்மமே யிருக்காது போலிருக்கிறதே! அத்தனை பேருக்கும் நேரே ஒரே புஷ்பக விமானந்தான்.

எங்கும் ஒரே புஷ்ப மயம். முன்னால் நாலு பேர் , பக்கத் துக்குப் பத்து பேர். உடுக்குப் பாட்டு, பஜனை, தேங்காய், பழம், வெற்றிலை, சந்தனம், விபூதி, எலுமிச்சம்பழம், சாம்பிராணி.

கிராமத்தைத் தாண்டிக் காட்டோரமாய் ஒரு கோயிலை அடைந்தனர். சூர்ய கதியில் கோபுரத்தின் பித்தளை ஸ்தூபி நெருப்புக் கொழுந்தாய் எரிந்தது.

கோயில் பூசாரி தொந்தியும் தொப்பையுமாய், கையில் ஒரு செம்பு ஜலத்துடன் வெளிவந்து பெருத்த விழிகளுடன் சிரித்த முகத்துடன், அவர்களுடைய மகத்தான விருந் தாளியை வரவேற்றார். அம்மன் பிரசாதமாகிய அந்த ஜலத்தைக் கொஞ்சம் அவன் தலையில் தெளித்து விட்டு உள்ளே சென்றார்.

சோம சன்மா நின்ற இடம் த்வஜ ஸ்தம்பத்துக்கடியில். அங்கேயிருந்து நேரே பார்த்தால், வாகன மண்டபத்தைத் தாண்டி, உள்ளே இருளடைந்த கர்ப்பக் கிருஹத்தில், அகல் விளக்குகள் எரிவது தெரிந்தது.

மறுபடியும் உள்ளே போன பூசாரி, கன்னங் கறுத்த மேனியுடன் வெளி வருகையில், உள்ளிருளில் ஒரு பாகமே பிரிந்து வெளி வருவது போலிருந்தது. கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி, கை மணிக்கட்டில் காப்பிட்டதுபோல் ஒரு புஷப சரம், கையில் கத்தி, கத்திப்பிடியில் ஒரு சாமந்திக் கொத்து. பிறைச்சந்திரன் போல் வளைந்த அந்த அரிவாளின் கூர்மை யில் காலை வெய்யில் பட்டதும், மின்னல்கள் பிறந்து ஒன்றுடன் ஒன்று கோத்துப் பின்னி விளையாடின. அவனை நோக்கி அவர் வந்தார்.

அப்பொழுது தான் அவனுக்கு விஷயம் புலனாயிற்று – பனிப் படலங்கள் சூழ்ந்த மலையுச்சியில் ஏறுகையில், திடீரென்று பனித்திரை கிழிந்து, தான் செங்குத்தான ஒரு பாறையோரத்தில் கீழே அகண்ட பாதாளத்துக்கு நேராக அடியெடுத்து ஒரு காலை ஆகாயத்தில் தூக்கியவண்ணம் நிற்பதைக் கண்டால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது அவனுக்கு!

தப்பியோடக் கூடத் தோன்றாமல், மனமும் உடலும் வெலவெலத்து விட்டன. அதற்குள் சேர்ந்தாற்போல் ஐம்பது கரங்கள் இரும்புப் பிடியாய் அவன்மேல் விழுந்தாற் போலிருத்தது.

அவனையுமறியாமல். இத்தனை நாள் சாப்பிடுவதற் கன்றி வேறெதற்கும் திறவாத அவன் வாய் திறந்து, ஜகன் மாதாவின் காதுக்கெட்டவோ என்னவோ, தொண்டையைப் பீறிட்டுக்கொண்டு , ஓர் அலறல் எழுந்தது.

“ம் – மே – ஹே – ஹே -”

இந்த உண்மையென்னும் உபயோகமற்ற தத்துவம் ஒன்றிருக்கிறதே. அது எப்பொழுதுமே பொய்யில் தான் புதைந்து கிடக்கிறது. அது வெளிப்படுவதற்கு வேளையோ நேரமோ கிடையாது. அதன் பலனை அனுபவிக்க முடியாத வேளையில் தான் அது புலனாகிறது.

இத்தனை நாளும், தான் சோமசன்மா எனும் பிராமண னாயிருந்ததெல்லாம் போய், கடைசியில் தான் கேவலம், பூர்வஜன்ம வாசனை முற்றிலும் விலகாத ஓர் ஆட்டு ஜன்மமே என்று அப்பொழுதுதான் தெரிந்தது.

அப்பவே வெட்டும் கழுத்தில் விழுந்தது.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *