சொன்ன சொல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 10,935 
 

நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம் உள்ளது. ஏழுமாத கர்ப்பிணியாக அவரது தாயார் அவரைச் சுமந்துகொண்டு சுப்பையா பிள்ளையுடன் மருதூரைவிட்டு புறப்படும்போது ஊரே கண்ணீர் வடித்தது என்று சொல்ல வேண்டும். வாழையடி வாழையாக நல்ல செயலிலிருந்த பண்ணையார் சுப்பு பிள்ளையின் குடும்பம் நொடிந்துவிட்டது. பண்ணையார் சுப்பு பிள்ளை சொன்ன சொல் தவறாதவர் என்று பெயர் வாங்குவதற்கே தம்முடைய நண்பரும் காசுக்கடைப் பிள்ளையுமான உமையொருபாகன் பிள்ளைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பதற்காக பூர்வீக நிலத்தை எல்லாம் விற்றார். அவருக்கு உதவினார். ஆனால் கடை முறிந்த போது சுப்பையா பிள்ளையின் குடும்பமும் முறிந்தது.

உமையொருபாகன் பிள்ளை ஆதியில் காசுக்கடை ஆரம்பிக்கும் போது பிள்ளையவர்களையும் பங்கெடுத்து கூட்டாளியாக வரும்படி கேட்டார். ஆனால் பிள்ளையவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. “எனக்கு பூமியைப் பார்த்துக் கொள்வதற்கே நேரம் போதமாட்டேன் என்கிறது. வியாபாரத்தில் ஈடுபடுவது என்றால் நிலம் மண்ணாகப் போய்விடும்; நான் ஒன்று சொல்லுகிறேன்; உனக்கு ஆபத்து வந்தால் எந்த நிமிஷமானாலும் என்னிடம் வா; கை கொடுக்கிறேன்” என்றார். அந்தக் காலத்தில் அவர் அப்படி கையடித்திருக்கும்போது, தன்னை ஒரு விஷப் பரீட்சைக்கு ஆளாக்கிக் கொள்ளுகிறோம் என்று நினைத்தாரோ என்னவோ.

ஒரு நாள் இரவு 11 மணிக்கு மருதூரில் உமையொருபாகன் பிள்ளை இரட்டை மாட்டு வண்டியில் வந்திறங்கி வாசலில் நார் கட்டிலில் படுத்திருந்த சுப்பையா பிள்ளையவர்களின் காலைக் கட்டிக்கொண்ட பொழுது சத்தியசந்தனாகிவிடுவது என்று உறுதியாக நினைத்தார். உமையொருபாகன் பிள்ளை கேட்ட தொகை திடீரென்று சேகரிக்கக் கூடியதுமல்ல; சேகரித்துக் கொடுத்தாலும் அவரது நிலையையே சற்று ஆட்டி வைக்கக் கூடியது. பேசாமற் உள்ளே சென்று பெட்டியை திறந்து பார்த்தார் வீட்டில் ரொக்கமாக ரூ.2000-ந்தானிருந்தது. “ஏளா, அங்கே என்ன செய்யுறே” என்று மனைவியைக் கூப்பிட்டு கைவசமுள்ள நகைகளை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டார்.

கணவருடைய வேண்டுகோள் விபரீதமாகப்பட்டது. கர்ப்பிணி, அந்த சமயத்தில் நிதானித்துப் பேசுவதற்கு இயலுமா? யார்தான் சாதாரண காலத்தில் கூட தம்முடைய கணவரின் நண்பருக்காக கழுத்து நகையை அவிழ்த்துக் கொடுக்க சம்மதிப்பார்கள். அவள் முடியாது என்றதும், நண்பனது கஷ்டத்தைத் தீர்த்து வைப்பது தமது கடமைகளில் ஒன்று என்று நினைத்து, நிலத்தை அடமானம் வைக்க முற்பட்டார்.

இரண்டொரு புள்ளிகள் விற்பனை என்றால் சம்மதிப்பதாக சொன்னார்கள். இன்னும் இரண்டொரு நண்பர்களிடம் கைமாற்றாக வாங்கிய தொகை ரூ.5000-ம் போக மீதிக்கு நிலத்தை விற்றுக்கொடுப்பது என்று தீர்மானித்தார். சுப்பையா பிள்ளை இவ்வளவு அக்கறை காட்டுகிறதைப் பார்த்தால் இதில் ஏதோ சூது இருக்கிறது என்று சிலர் சந்தேகித்தார்கள். மறுநாளைக்கு பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்துகொள்ள சம்மதிப்பதாக பணம் கொடுக்கிறவரை இணங்க வைப்பதற்காக நிலத்தையும் அதற்கு இசைந்தாற்போல ஏராளமாக தியாஜியம் செய்ய வேண்டியிருந்தது. உமையொருபாகன் பிள்ளை கையில் ஏழாயிரத்துடன் டவுனுக்கு ஏகினார். மறுநாள் விற்பனைப் பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்து தொகையுடன் சுப்பையா பிள்ளையவர்கள் டவுனுக்குச் சென்றார். உமையொருபாகன் பிள்ளையையும் தொகையையும் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான்.

மூன்று நாட்கள் கழித்து உமையொருபாகன் பிள்ளை வைரத்தைப் பொடித்துத் தின்று மாண்டுபோனார். கடை முறிந்தது. ரூபாய்க்கு அரையணாக்கூடத் தேறாது எனச் செய்தி வந்தது.

மாலை ஐந்து மணி இருக்கும்; டவுனுக்கு காரியமாக சென்றிருந்த வேலப்ப பிள்ளை வேகுவேகென்று ஓடி வந்து தகவலைச் சொன்னார்.

பிள்ளையவர்கள் ஒன்றும் பேசவில்லை. வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். புகையிலையை எடுத்துச் சாவதானமாக போட்டுக் கொண்டு, “இருங்க தம்பி வர்ரேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

வருவதற்கு சற்று தாமதித்தது. வந்ததும் துண்டை உதறித் திண்ணையில் போட்டுவிட்டு, சாவதானமாக உட்கார்ந்தார்.

மடியிலிருந்த வைர நகைகள் சிலவற்றை எடுத்து மௌனமாக வேலாயுதம் பிள்ளையிடம் கொடுத்தார்.

“வேலையா, வண்டியைப் போடச் சொல்லுகிறேன்? நேரே ஸ்ரீ வைகுண்டத்துக்குப் போயி நம்ப சிதம்பர ஐயர் கடையிலே இதை விற்று தொகையைக் கொண்டு வா. நானும் ஒரு துண்டு எழுதித் தாரேன். காதோடு காதாக இருக்க வேண்டும். நான் இங்கேயே உறங்காமல் உட்கார்ந்திருப்பேன்; என்ன சொல்லுறே” என்றார்.

“இது என்னத்துக்கு அண்ணாச்சி; நம்ம ஊர்லெதானே; மின்னெப் பின்னே சொல்லிக்கிட்டாப் போகுது” என்றார்.

“தம்பி பண விஷயம்; வாக்குத்தான் சொத்து” என்றார்.

வேலாயுதம் பிள்ளை திரும்ப வரும்போது இரவு மணி இரண்டு. இருவருமாகச் சென்று முந்திய நாட்களில் கடன் வாங்கிய புள்ளிகளிடம் சென்று வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுத்தார்கள்.

“பிள்ளைவாள் விடிஞ்சா என்ன பூனையா கொண்டு போயிடுது? என்னத்துக்கு இந்த அவசரம்” என்றார்கள். அவர்களுக்கு உமையொருபாகன் பிள்ளை செல்லாகிப் போன கதை தெரியாது.

“மனிதன் வாழ்வு என்ன நிச்சயம்?” என்றார் சுப்பையா பிள்ளை.

“எத்தினி நாளாக ஐயா இந்த வேதாந்தம். காலையிலே காஷாயமோ?” என்று கேலி செய்தார்கள்.

“ஒருவேளை கயிலாசமோ” என்றார் பிள்ளை.

இருவரும் திரும்பினார்கள்.

பிள்ளையவர்கள் நார் கட்டிலில் படுத்துக்கொண்டார்.

“வேலையா வீட்டுக்குப் போகலியா?” என்றார்.

“இனியெங்கே, நடுச்சாமத்திலே ஏன் போய் தட்டி எழுப்பணும். இங்கே திண்ணையில் சாய்ந்தால் போகிறது” என்றார் வேலாயுதம் பிள்ளை.

“நீ ரொம்பக் கெட்டிக்காரன் தாண்டா; நான் இப்படி அப்படி சாகமாட்டேன்; நாளைக்கு டவுனுக்கு போனாத் தேவலை” என்றார்.

மறுநாள் காலை அனுதாபம் கேட்க வருவதுபோல மிச்ச நிலமும் விலைக்கு வருமா என நோட்டம் பார்க்க வந்தவர்கள் சுப்பையா பிள்ளையைப் பார்க்க முடியவில்லை.

அவர் டவுனுக்குச் சென்று திரும்புவதற்கு மூன்று நாட்களாயின.

– 1941, புதிய ஒளி, முதற் பதிப்பு: டிசம்பர் 1953, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *