கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,027 
 

“”ஏப்புள்ள நேசம்…நேசம்…எங்க நிக்க, சீக்கிரம் வாயேன்” எனப் பொண்டாட்டியை அவசர அவசரமாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார் முத்து.

“”எதுக்கியா இப்படி கத்துதிய, தெருவே வீட்டுல என்னமோ நடக்குதுன்னு கூடிறாம, நானு மாட்டுச் சாவடியில நிக்கது ஒங்க கண்ணுக்கு தெரியலியாங்கும்” என மாட்டுச் சாணியை பனைமட்டையால் ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த முத்துவின் பக்கத்திற்கு வந்தாள் நேசம்.

சொந்த பூமிமுத்துவின் முகத்தில் தெரிஞ்ச அவசரத்தையும் நேசம் கவனிக்காமல் இல்லை. என்ன வெசயம் என்பதுபோல நேசம் முத்துவின் முகத்தைப் பார்க்க,

“”ஏப்பிள்ள, வயக்காட்டுல தொளி அடிச்சிப்போட்டு ரெண்டு மூணு நாளாயிருச்சி, வயலுவ எல்லாமே நல்லா பருவமா, சும்மா களிமண்ண மிதிக்கிற மாதிரி கெடக்குது. சீக்கிரம் நெல்ல நட்டுப் போடணுமுல்லா, நடவுக்கு ஆளுங்கள சத்தம் காட்டச் சொன்னேமுலா என்ன ஆச்சி” என்ற முத்துவிடம்,

“”நானு ரெண்டு நாளா நாயா பேயா அலஞ்சி பாக்கேன், ஒருத்தியும் நடுவ நடுத வேலக்கி வரமாட்டேங்குறா, என்னைய என்னச் செய்ய சொல்லுதிய” எனத் தன் இயலாமையை மன வருத்தத்துடன் சொன்னாள் நேசம்.

“”என்ன பிள்ள இப்படிச் சொல்லிட்ட” என்ற எதிர்பாராத பதிலால்,””யாராச்சும் ஒரு நாலு பேரு கெடச்சா ரெண்டு நாலுல நின்னு நட்டுப் போட்டுறலாம். ஒண்ணுக்கு வழியில்லாமலா இப்பிடி கெடந்து அழுவுது” என அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் முத்து.

“”ஏய்யா வர வர ஒருத்தியும் காட்டு வேலக்கி வார மாதிரி தெரியல. இந்த ஊர்க்காட்டுல வேல வந்ததுல இருந்து எல்லாருமே மண்ணு சொமக்க போறாளுவ. இனிமே யாரு இந்த காட்டுல போயி வெவசாய வேலய பாக்குறது. இத நெனச்சாலே ஈரக்கொல நடுங்குது” என தனது ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தாள் நேசம்.

சற்று நேரம் மயான அமைதி. அந்த அமைதி அவர்களது எதிர்காலத்தைப் பற்றிய- விவசாயத்தைப் பற்றிய- பயமாகக் கூட இருக்கலாம்.

“”நேசம், காசு கூட பத்து இருபது செலவழிஞ்சாலும் பரவாயில்ல, ஆளுங்க எதுவும் கெடைக்குமான்னு பாரேன்”

“”இந்த மண்ண செமக்க கவருமெண்டு வேல வந்ததுல இருந்து, வீட்டுல சும்மா பீடிய சுத்திக்கிட்டு இருந்தவளுமுலா வெவசாய வேலக்கி வரமாட்டேங்கிறா. கொஞ்சம் நஞ்சம் இருக்க கெழடு கட்டையெல்லாம் போயி சேந்துட்டா அப்புறம் சம்சாரிங்க பாடு திண்டாட்டந்தான். ஊருக்குள்ள யாரும் போயி நானு வேலக்கி கூப்புட சொல்லுங்க பாப்போம்”

நேசத்தின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமலும் விவசாயம் சூன்யமாகி வருவதை நினைத்தும் கீழே குனிந்து நிலத்தை வெறித்துப் பார்த்தவராய்,””ச்சே, கொஞ்ச நஞ்ச நெலத்த மட்டுமே நம்பி இருக்கற நம்மள மாதிரி சம்சாரிங்களோட நெலம…” அவரால் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை. தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். அப்படியே அருகில் கிடந்த கல்லில் உட்கார்ந்து கொண்டார்.

“”போற போக்கப் பாத்தா யாருமே இனி வேலக்கி வரமாட்டாங்கன்னு நினைக்கேன். இந்தக் கொளத்தையும், ஓடக்கரைகளையும், ரோட்டையும் சுத்தப்படுத்திகிட்டு, மண்ண அள்ளிப் போட்டுட்டு ஒடம்பு வலிக்காம வேலய பாக்குறாளுவ. இனிமே எப்பிடி காலையில இருந்து பொழுது அடையற வரைக்கும் நெலத்துல பாடுபட வருவாளுவன்னு நெனக்கிறீய, எல்லாமே மாறிப்போச்சி. வேல இருக்கா, வேல இருக்கான்னு சம்சாரிங்க தொந்தரவு பண்ணுன காலமெல்லாம் போச்சி, காலையில ஒம்போது மணிக்கி போயிட்டு, சாயங்காலம் அஞ்சி மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துர்ராங்க. அன்னன்னைக்கி வீட்டுல ஒல வெக்க கொஞ்சம் வெறவு வேற கெடச்சிருது. கைநெறையா சம்பளம் வேற” என பேசிக்கொண்டே நேசம் மாட்டுச் சாவடியை கழுவலானாள்.

முத்துவுக்கு தொண்டையெல்லாம் அடைத்துக்கொண்டு வந்தது. பாவிப் போட்ட நெல்லு நாத்து பச்சைப் பிள்ளையாய் வளர்ந்து சிரிப்பது போலவும், மஞ்சள் நீரால் குளிப்பாட்டியது போல தகதகத்துக் கொண்டிருந்த வயல்களும் அவர் கண் முன் நிழலாடிச் சென்றன. நெல்லை நட்டுவிடுவோமா என்ற நினைப்பு அவரை அதிகமாக வாட்டியது.

உட்கார்ந்து இருந்த இடத்தின் அருகில் உள்ள மாட்டு கழிவு நீர் தொட்டியைப் பார்த்தவராய், பழைய நினைவுகளில் லயிக்கலானார்.

இந்தப் பதினைந்து இருபது வருடங்களில் தான் எத்தனை வளர்ச்சி, 20 ரூபாய் கூலிக்கே நானா, நீயா என அடித்துக்கொண்டு சம்சாரிகளை தொந்தரவு செய்து அரக்க, பறக்க ஓடிவந்த காலம், கொஞ்ச கொஞ்சமாக வேறு தொழில்கள் நுழைய ஆரம்பித்ததும், அதோடு கூலி உயர்வு, அதனால் விளைந்த பொருள்களுக்கு மட்டும் அன்று போல இன்றும் அதே விலை.

“”என்னய்யா, அப்படியே உக்காந்துட்டிய, கஞ்சி வெச்சித் தரட்டுமா?” என நேசம் கேட்ட பிறகுதான், தன் உணர்விற்கே வந்தவராய் “சரி’ என்பது போல தலையை மட்டும் அசைத்தார். குண்டாவில் ஊற்றிக் கொடுத்த கஞ்சியைப் பிசைந்தவராய், “”ஏப்பிள்ள, நம்ம கெணத்துக்கு கீழே கெணத்துக்காரன் எப்பிடி நடப்போறானாம்?”

“”அவன் சேகரு, இங்க எதுவும் ஆளுங்க கெடக்கலைன்னு தென்காசி பக்கமா இடைகாலுக்கும், கீழப்பாவூருக்கும் போயி பாத்துட்டு வரலாமுன்னு போயிருக்கறதா அவன் வீட்டுக்காரி சொன்னா”

“”என்ன செய்யுறதுன்னே தெரியலியே” என முணுமுணுத்துக் கொண்டார்.

வீட்டில் நடக்கிறதையெல்லாம் முத்துவின் பிள்ளைகள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். மூத்தவன் தங்கராசு மட்டும் ஐ.டி.ஐ. படித்துக் கொண்டிருக்கிறான். மற்ற மூவரும் பள்ளிக்கூடம் தான் போய் வருகிறார்கள்.

“”அதான் ஒரு வருசமா வேலக்கி ஆளுங்க சரியா கெடைக்காம இருக்காங்கன்னு தெரியுதுலா, பேசாம எடத்த வித்துட்டு சும்மா இருக்கத விட்டுட்டு எதுக்கு இப்பிடி ஒப்பாரி வெச்சிட்டு இருக்கிய” என மூத்த மகன் சொன்னதுதான்,

“”என்னதுல, எடத்த விக்கணுமால” என வீட்டின் வெளியே நின்றவர், மகனை அடிக்க வருவதுபோல ஓடி வந்தார்.

“”இன்னிக்கி நீயும் நானும் உசுரோட இருக்கதுக்கு காரணமே அந்த நெலம்தாமுல. என்னோட தாயில அது. எங்க பாட்டன், பூட்டன் காலத்து சொத்துல அது. இன்னிக்கு நீ படிக்க காரணமே அதுதான். பூமியையா விக்கச் சொல்லுத, மருவாதி இல்ல உனக்கு” என அடைத்து வைக்கப்பட்ட தண்ணீர் மடையை திறந்ததும் வெள்ளமெனபாய்ந்து செல்வது போல வந்தன வார்த்தைகள். அவருடைய மூச்சு மேலும் கீழும் இழுத்தன. உதடுகளில் வார்த்தைகள் உச்சரிக்கத் தடுமாறின. ஆனால் அவை யாவும் கண்களில் தெறித்தன.

முத்துவுக்கு இப்படி கோபம் வந்ததைப் பார்த்திராத மூத்தவன், சற்று நடுங்கிப் போனான். மற்ற மூவரும் அப்பாவின் முகத்தையே உற்றுப் பார்த்தனர். பொரித்த குஞ்சுகள் தன் தாயின் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பது போல.

வீட்டில் என்னமோ நடந்துவிட்டது என வேலையை பாதியிலேயே போட்டு வந்தாள் நேசம்.

வீட்டில் சற்று நேரம் மயான அமைதி.

“”அப்படி என்ன அப்பாவிடம் கேட்டு விட்டோம்?” என்ற புரியாமலேயே தங்கராசு தலையை கீழே குனிந்து கொண்டான்.

“”ஏம்பிள்ள பாத்தியா…சோறு போடுத பூமிய மூத்தவன் விக்கச் சொல்லுதான். ரொம்ப மவராசனா இருப்பான். ஏலே, நான் உயிரோட இருக்கற வரைக்கும் என்னோட சொந்த பூமியில பாடுபடுதேன்னு சொல்லிக்க பெருமையா இருக்குல”

“”நேசம், இனிமேலு வேலக்கி ஆளுவ வருவாளுவன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்க வேண்டாம். நாளக்கி ஞாயித்துக்கிழம அதுவுமா, வீட்டோட எல்லாருமா போறோம். நடுவைய ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமா நட்டாலும் பரவாயில்ல. என்னோட சொந்த பூமிய எப்பிடி பாதுகாக்கதுன்னு எனக்குத் தெரியும்” என கொடியில் கிடந்த துண்டை தோளில் போட்டுவிட்டு ஓரு தீர்க்கமான முடிவோடு கிளம்பினார்.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *