செருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 18,545 
 

பிள்ளையார் கோவில் மணி வழக்கமான இனிமையின்றி, ஒலிப்பது போல், நீண்ட நேரமாய் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. ஏதாவது விபரீதம் நடந்தால் தான் இவ்வாறு ஒலிப்பது வழக்கம். இன்றைக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. காதை அடைக்கும் அந்தச் சத்தம் பொறுக்காமல் தேவி வீட்டு வாசலருகே வந்து நின்றிருந்தாள்.

சங்கக் கடைக்குச் சாமான்கள் வாங்கப் போயிருந்த அப்பா, தெருக் கோடியில் பரக்கப் பரக்க வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் முகத்தில் என்றுமில்லாத கவலை தெரிந்தது,.அவர் படலையைத் தாண்டி வந்ததும் ஓடோடிச் சென்று, அவரிடமிருந்து சாமான் பையை வாங்கி வைத்துக் கொண்டு தேவி கேட்டாள்.

“என்னப்பா…………………..?

“உனக்குப் புதினம் தெரியாதே”

“இல்லையே…………….”

கோவிலுக்கருகே ஒரு பிணம் கிடக்குதாம். யாரோ சுட்டுப் போட்டுப் போயிட்டாங்களாம் …..!”

“கடவுளே………..என்று கண் கலங்கிய தேவி நெஞ்சு முட்டிய சோகத்துடன் மேலும் விபரம் அறிய விரும்பி, அவரைக் கேட்டாள்.

“அப்பா! அது ஆரென்று தெரியுமே?”

“ஒரு சின்னப் பெடியனாம். பத்துப் பன்னிரண்டு வயது பாலகன் போலத் தெரியுதாம் எங்கடை ஊருக்குள்ளை இது நடந்திருக்கே. எல்லாம் கலி முற்றிய காலப் பிழை தான்”

“அப்பா! நான் அதைப் போய்ப் பார்த்திட்டு வரட்டே?”

“நீ எதுக்கு தாயில்லாப் பிள்ளையென்று உன்னைப் பொன் போலக் காப்பாற்றி வாறன் அங்கை போய் இந்த அக்கிரமத்தைப் பார்த்தால் உனக்கு மனம் தாங்குமே?

“என்ன செய்வதப்பா? எனக்குக் கண் போ”ய்விடுமேயென்று உங்கடை கவலை. அநியாயமாய் அந்தச் சின்னப் பெடியன் செத்துவிட்டிருக்கிறானே. இதுக்குக் கவலப்பட மாட்டியளே?”

“சரி கோவில் மதிலுக்குப் பின்னாலே தூரத்தில் மறைந்து நின்று பார்த்திட்டு உடனே திரும்பி வா” என்று அவர் விடை கொடுத்ததும் அவள் மாமி வீட்டு வளவைத் தாண்டிப் போய் பனை வடலியினூடாகப் போகும் ஒற்றையடிப் பாதையில் ஏறி நடக்கும் போது ,லட்சுமியக்கா எதிர்ப்பட்டாள்.அவள் தேவிக்கு உறவு இல்லாவிட்டாலும், தேவி வாய் நிறைய அன்பொழுக அவளை அக்கா என்றே அழைக்கிறாள். மிகவும் கஷ்டப்படுகிற குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி தலையில் ஒரு கடகத்தோடு,அந்தப் பனை வடலிக்குள் வந்து விறகு பொறுக்கி கொண்டு போவாள். விகடமாக நிறையப் பகிடிக் கதைகள் சொல்வாள்.

அப்போது குனிந்து பனை மட்டை பொறுக்கிக் கொண்டிருந்தவள்,தேவியின் காலரவம் கேட்டு,நிமிர்ந்து பார்த்தாள்.

“எங்கே ஓடுகிறாய் தேவி? அங்கை கோவிலடியிலை பிணம் கிடக்குதல்லே!. நீ அதைப் பார்த்திட்டுப் பயத்திலை கத்தப் போறியே?”

“லட்சுமியக்கா……… ஆரோ சின்னப் பெடியனாம். அது தான் மனம் கேட்காமல், போய்ப் பார்க்கப் போறன்” என்று கூறிய தேவி மேற்கொண்டு அவளோடு பேச விரும்பாமல் கோவிலை நோக்கி வேகமாக நடந்து போனாள்.

பிள்ளையார் கோவில் அந்தக் களேபரத்திலிலும் சிறிதும் பங்கப்படாமல் அமைதியாகவேயிருந்தது.மாலை நேரப்பூசை தடைப்பட்டுக் கோவில் பூட்டிக்கிடந்தது.அவள் அதை அண்டினாற் போலிருக்கும் குச்சொழுங்கையின் கடைசி எல்லை வரைக்கும் போய்,அதில் மறைந்து மதிலின் விளிம்பு வழியாக தெருவை எட்டிபார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள்.

அந்தச் சிறுவனின் சடலம் அனாதையாய் தெருக் கரையில் கிடந்தது. இரத்தக் கறை படிந்த வெள்ளைத் துணியால் அவனை யாரோ மூடிவிட்டுப் போயிருந்தார்கள். கால்கள் மட்டும் வெளியே நீட்டியபடியே கிடந்தன. அவற்றினுள் சிதறிக் கிடந்த இரத்தத் துளிகள் இன்னுமொரு பரிதாபக் காட்சி.. சுடுகிறவன் துரத்திக் கொண்டு வரும் போது,அந்தப் பையன் மிக வேகமாக ஓடி வந்திருக்க வேண்டும்.
அப்படி அவன் தலை தெறிக்க ஓடி வந்த, வேகத்தில் அவனது கால் செருப்பு ஒன்று வார் அறுந்த நிலையில் இரத்தம் குளித்துக் கொண்டு தெருவின் நடு மையத்தில் வீழ்ந்து கிடந்தது.

அவள் வெகு நேரமாய்க் கண் கலங்கியவாறு நிம்மதியிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அநியாயமாக இச்சிறுவனைக் கொன்று போட யாருக்கு மனம் வந்தது? அதற்கு இவன் செய்த மிகப் பெரிய குற்றம் தான் என்ன? பெரிய தர்ம காவலனென்று தன்னைச் சொல்லிக் கொள்கிற ஒருவனே, இதைச் செய்திருக்கக் கூடும். இதற்கு அவன் ஆயிரம் நியாயங்கள் பிரகfடனப்படுத்திக் கூறுவான்.

எனினும் நீதி செத்து விட்டதைப் பகிரங்கமாகப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் இச் சிறுவனின் பரிதாபச் சாவிற்கு அவை பரிகாரமாகி விடப் போவதில்லை.இச் சிறுவனதும் இவன் செருப்பினதும் துயரம் மிகுந்த நினைவுக் காட்சிகளையே தன் மனதில் சிலுவை குத்திக் கொண்டு நிற்க நேர்ந்திருகிறதே அவளுக்கு. இப்பாவத்தின் கறை போக அது போதும்.

அதன் பிறகு இனிய வாழ்வின் தடங்களே அடியோடு மறந்து போனவளாய், அழுது வாடிய முகத்துடன் அவள் வீடு திரும்பினாள்.. வாசலில் நின்ற அப்பா அவளை எதிர் கொண்டார்.

“என்ன சவத்தைப் பார்த்து முடிஞ்சுதே?போய்க் குளிச்சிட்டு வா!”

“அப்பா! ஆற்றிலே முழுகினாலும் அந்தச் சிறுவனின் முகம்………….இல்லைச் செருப்பு அழியாது. அது காலம் காலமாய், என்னைத் தொடர்ந்து வருத்திக் கொண்டிருக்கும். இனித் துவக்கு மனிதனைக் காணும் போதெல்லாம் இந்தச் செருப்புத் தான் என்னைத் துடிதுடித்து அழவைக்கும். நான் எப்படி மறப்பேனப்பா அந்தச் செருப்பை?”

அவள் கண்ணைக் கிழித்த அந்தச் செருப்பு அவர் காட்சியில் தோன்ற மறுத்தது. அது ஓர் உயிரை வதைக்கும் சிரஞ்சீவிச் சோக காவியமாய் அவளுக்கு மட்டுமே புரியக் கூடியது. அதை மேலும் விமர்சனம் கொண்டு விளக்க விருப்பமின்றி அவள் மனம் கனத்துப் போயிருந்தாள்.

– தினமுரசு (செப்டெம்பர்,2004)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *