சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 7,907 
 

சத்தம் கேட்டு அவன் வெளியே வந்து பார்த்த போது அந்தப்பெண் நின்றிருந்தாள். நடுத்தர வயது மதிக்கத்தகுந்த

அவளது முகத்தில் இருந்ததெல்லாம் அனுதாபத்தை பெற முயற்சிக்கும் பாவனைகள். குட்டையாக ஒரு புறம் சாய்ந்திருந்த மல்லிகை மரத்திலிருந்த பூவொன்று அவள் கையில் இருந்தது.முற்றம் என்று சொல்ல முடியாத அதைவிடக் குறுகிய இடத்தில்; கவனமின்றி சுற்றிய புடவையும்,சீப்புப்படாத முடியமைப்பும், தோலில் தொங்கிய சீத்தைப்பையுடனும் ஒரு பக்கம் ஒருக்களித்து நின்றிருந்த அவளது கோலம் ஒரு ஓவியனின் கண்களில் படாமல் போனது வருந்நத்தக்கது தான்.

பல தடவைகளுக்கு மேலாக குரல் கொடுத்தபடி நின்றிருக்கிறாள் என்பதை அவள் முகத்தில் தெரிந்த சலிப்பு தெரிவித்தது போல் நேரங்கடந்து அவன் வெளிவந்ததற்கு காரணம் ‘தூங்கியிருந்தான்’ என்பதை பிடிவாதமாக வெளிப்பட்ட கொட்டாவி அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். வழமையான இந்தக் காலை நேரங்கள் தூக்கத்துக்கானவை அல்ல. இப்போது அவன் தூங்கியிருக்காவிட்டால் ‘நகுலன்’ எழுதிய ‘நினைவுப்பாதை’யை அல்லது ‘சுந்தர ராமசாமி’யின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’யை படித்துக்கொண்டிருப்பான் அல்லது ஐPடு கிரிக்கட் போட்டியின் மறு ஒளிபரப்பை கதிரையின் நுனிவரையிலும் சென்று பதட்டத்துடனும் ஆவலுடனும் பார்த்துக் கொண்டிருப்பான்.

இயல்பாகவே பெர்னான்டோ மென்மையானவன். இதை அறிய வேண்டுமாக இருந்தால் இப்போது யாசகம் கேட்டு வந்த பெண்ணை வீட்டுக்குள்ளேயே அழைத்துச் சென்று இருக்க வைத்து பேசிக்கொண்டிருப்பதை உதாரணம் கொள்ளலாம்.

உண்மையில் அவனுக்கு அவள் மீது அவனுக்கு மிகுந்த அனதாபமும், மதிப்பும் ஏற்பட்டிருந்தது. அதற்கான காரணம் ஒன்று – அவன் எழுந்து கொள்ளும் வரை காத்திருந்து பணம் பெற்றுக்கொள்ளவிருந்த பொறுமையும் அதைத்தூண்டிய வறுமையும். அவள் நினைத்திருந்தால் அவன் தூக்கத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்து எதையாவது சூறையாடியிருக்கலாம். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை.

காரணம் இரண்டு – வேலைதேடி இந்த ஊருக்கு வந்து வேலை கிடைக்கும் வரை இந்த வயிற்றுக்காக நிகழ்ந்த பட்டினிப்போராட்டங்கள்……

அவளுடன் பேசுவதற்கு பெர்னான்டோவுக்கு நிறைய இருந்தது. அவளது விபரம், குடும்பம், பிச்சை எடுத்தலின் பின்னணி என்று நிதானமாகவும் அன்பாகவும் பேசினான். பதினைந்து நிமிடங்களைக் கழித்து அவளது தாகத்தைத் தணித்து நூறு ரூபாய் பணத்தையும் கொடுத்து அவளை வழியனுப்பிய போது “இந்த உலகத்தில் என்னை விட நல்லவன், வல்லவன் யாரும் இருக்க முடியாது” என்ற அப்பட்டமான எண்ணம் தோன்றியது. அந்த யாசகப்பெண்ணின் மனநிலையில் அவன் விம்பம் உயர்ந்து நிற்பதைப்போல் கற்பனை எழுந்தது.

மற்ற யாசகம் பெரும் ‘நண்பிகளிடம்’ இன்று தான் சந்தித்த ஒரு நல்ல மனிதன் பற்றி அவள் உரையாடக்கூடும். அப்படி இல்லாமல் போனால் என்ன, இனி வரப்போகும் அவன் பரம்பரையை பட்டினி அண்டாமல் இருப்பது எவ்வளவு மேலானது என நினைத்துக் கொண்டான்.

பெர்னான்டோ இலக்கிய நயமுள்ள ஒருவன், அதனை ‘கலைநயம்’ என்ற வார்த்தையிலும் பயன்படுத்தலாம். ஒரு அறையில் இருக்கும் தனித்த இளைஞர்கள் போல் அலங்கோலப்போக்கை கொண்டவனல்ல. அவனது வீட்டில் இரண்டு பெண்கள் வசித்திருந்தால் அது எப்படி சுத்தமாக இருக்குமோ அதைவிட அழகாக வைத்திருந்தான் பெர்னான்டோ. புத்தகங்களும், பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் அதிகமாகவே அவனிடம் இருக்கும். எல்லாச்சந்தர்ப்பத்திலும் அவன் உணவுக்காக உணவு விடுதியை நாடுவதில்லை. சமயலறையையே பயன்படுத்தினான். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத இந்த தனிக்காட்டு ராஜாவின் வீட்டுக்கு யார் வேண்டுமானாலும் திடீர் பிரவேசம் செய்யலாம். அது அவனையும், வருபவர்களையும் எந்த விதத்திலும் பாதிக்காது என்பது அவன் பற்றிய உதிரித் தகவல்.

பின்னேர நேரங்களில் அவன் பொழுதைக்கழிக்கும் சில நண்பர்களை விட தான் உயர்ந்தவன் என்று எண்ணினான். இன்றைக்கு அவர்களைச் சந்திக்கும் போது இப்போது நடந்ததை ‘எப்படி அவர்களிடம் சொல்வது’ என்ற யோசனையும் எழுந்தது. அவன் நண்பர்கள் அனைவரும் அவன் அளவுக்கு உத்தமர்கள் இல்லை என்பது அவன் கணிப்பீடு. அவன் பக்கத்திலிருக்கும் போது அவர்கள் புகைக்கிறார்கள், ‘தண்ணியடிப்பது’ பற்றி பேசிக் கொள்கிறார்கள், பாதையில் செல்லும் பெண்கள் பற்றி மோசமாக வர்ணித்துச்சிரிக்கிறார்கள்.அப்படிப்பார்க்கும் போது அவர்கள் எல்லோரையும் விட “நான் தான் நல்லவன்” என்று அவன் தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக்கொள்வான்.

பெர்னான்டோ பற்றிய இன்னுமொரு ‘உதிரி’யும் இருக்கிறது. சாதாரணமாக வெளியே செல்வதாக இருந்தாலும் நல்ல உடைகளைத்தான் அணிவான்,இதில் சில ஒப்பனைகள் வேறு செய்து கொள்வான்.

என்னதான் அவனையே அவன் ஜனாதிபதி விருது (மட்டும்) பெறாத வல்லவன் என நினைத்திருந்தாலும், வழக்கமான அவன் நண்பர்கள் பார்வையில் ஏதோ ஒரு விஷேசமான ஜந்து. சில முற்போக்குப்பேர்வழிகளுக்கு அவன் – ‘ஆண் குலத்தை அவமானப் படுத்தும் ஒருவன்’ . இன்னும் சிலருக்கு – ‘இன்னும் வளராத சிறுபையன்’. அவரவர்களுக்கு தாங்களே நோபல்பரிசு பெறப்போகும் அதிசயப் பிறவியாக தோற்றம் இருக்கலாம், ‘அது பெர்னான்டோவுக்கு மட்டும் உரித்தான கற்பனைகளா என்ன……?’

இத்தனைக்கும் நடுவில் அந்த நண்பர்கள் கூட்டத்தில் அவனும் இருக்கிறான் என்றால் காரணம் இருந்தது – பெர்னான்டோவிடம் இருந்த ‘பணம்’, இலகுவாகக் கறந்து விடுவார்கள் – நல்லவர்கள் எல்லாம் ஏமாளிகள் தானே………….

இதையும் மீறி பெர்னான்டோவுக்கு அவர்கள் தேவைப்படுவதற்கு காரணம் – அவன் புகழ்பாடவும், அவன் பேசுவதைக் கேட்கக் கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். இந்த விடயத்தில் அவன் திருப்தியடைந்தான். அவனுக்கு விருப்பமானதையே அவன் செய்தான் – அவர்களுக்கு பணம் கொடுப்பதுவும் அவனுக்கு விருப்பமானதாகவே இருந்தது. அதற்காக ஒரு போதும் அவன் முகம் சுழித்ததில்லை – இந்த ஒரு காரணத்துக்காகவே அவன் எவ்வளவு பேசினாலும் என்ன பேசினாலும் அவர்கள் கேட்டுக்கொண்டு தானே ஆக வேண்டும், அது தான் நிகழ்ந்தது……….

இரண்டு,மூன்று நாட்களில் தான் செய்த அந்த தருமமான காரியம் பற்றி பெர்னான்டோ நண்பர்களிடம் பேசி விட்டான். அது மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது……

ஒவ்வொரு நாள் காலையிலும் பெர்னான்டோ பெருமிதமாகவே எழும்புவான், இன்று காலையிலும் அது நிகழ்ந்தது. யாசகப் பெண்ணைச் சந்தித்து சரியாக ஒரு வாரமாகியிருந்தது. அதற்கிடையில் ஒரு வாரம் ஓடிவிட்டதை நினைத்து ஆச்சரியப்பட்டவாறு அமர்ந்திருந்தான். அன்று போல் அன்று இன்று தூக்கம் வரவில்லை. பத்திரிகையுடன் ஒன்றிப்போய் இருந்தான்.

ஒரு வாரம் முன்னால் கேட்ட அதே குரல் – அவனது மூளை நரம்பு உணர்ந்து கொண்டது, அதே பெண் தான்…… அவளைப்பார்ப்பதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏளனம் கலந்த மகிழ்ச்சி தோன்றி மறைந்தது. வெளியே சென்றான், தெரிந்த ஒருவரைப் பார்ப்பது போன்ற முக பாவனைகளுடன், சிரிப்பும் நிறைந்திருந்தது அவளிடம். அவள் எதை எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டு அவளை அழைத்தான்… அவளுக்கு தயக்கம் இருக்கவில்லை.

இதுவும் அவனை பெருமிதப்பட வைக்கும் நிகழ்ச்சி தான். யாரென்றே அறியாத ஆடவனுடன் ஒரு அபலைப்பெண் தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் நின்று கொண்டிருக்கிறாள் என்றால் அது பெருமிதப்பட வேண்டிய விடயம் தான்.

அவன் கட்டளையை எதிர்பாராமல் அவள் அங்கே கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள். “பசிக்கிறது” என்று கூறி கண்களால் கெஞ்சினாள். இப்போது கூட அவன் கோபப்படவில்லை, ‘இரு வருகிறேன்’ என்று சமயலறைக்குச் சென்றான்.

உணவுத்தட்டுடனும், தண்ணீருடனும் அவன் வெளியே வந்தபோது நான்கைந்து பேர் நின்றிருந்தார்கள். இதுவரை அவன் காணாத முகங்கள். ஆனால் அவள் அங்கேயே அமர்ந்திருந்தாள். கைகளில் இருந்ததை அவளிடம் கொடுத்து விட்டு வந்தவர்களை நோக்கி அவன் திரும்பினான்.

அவர்களில் முன்னால் நின்ற ஒருவன் “எங்களுக்கும் பசிக்குதே…..” என்றான். ஆவர்களை வினோதமாகப் பார்த்துக்கொண்டே “யார் நீங்க…” என்றான் பெர்னான்டோ. அதன்பின் யாரும் பேசிக் கொள்ளவில்லை, நொடிப் பொழுதையும் வீணாக்காமல் வந்தவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். கதவை இழுத்துப்பூட்டினான் ஒருவன். நிலைமையை சுதாகரிக்கும் முன் பெர்னான்டோவை மடக்கிப்பிடித்து கதிரையுடன் சேர்த்து கட்டிப்போட்டார்கள். பேச முடியாதபடி பெரிய சீலையொன்றினால் கட்டி அவனை நிராயுதபாணியாக்கிவிட்டு, தொலைக்காட்சியை இயக்கி விட்டான் ஒருவன். ஏதோ படத்தில் பார்த்தது போல் இருந்தது, கண்களை விரித்துப் பார்த்தான் பெர்னான்டோ. ஐந்து பேர். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது விளங்கியது. அவனால் அசையக்கூட முடியவில்லை. கண்கள் கலங்கி விடும் போல் இருந்தது. மனம் பிரார்த்திக்கத்தொடங்கியது. ஆனால் என்ன செய்வதென்பது அவனுக்குத் தெரியவில்லை, எல்லாம் தன்னை விட்டு விலகியதுபோன்ற பிரமை…….

இவ்வளவு நடந்தும் அந்தப்பெண் எதுவும் நடக்காதது போல் அப்படியே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இப்போது அவள் மீது பரிதாபப்படுவதா, கோபப்படுவதா எனத் தெரியவில்லை. ஒரு வேளை அவள் புத்தி பேதலித்தவளா என்று பெர்னான்டோ சிந்திக்கத் தொடங்கினான். சூத்திரதாரிகள் ஐந்துபேரும் அவன் வீட்டிலிருந்து என்னவெல்லாம் எடுக்க முடியுமோ அத்தனையும் அவசர அவசரமாக மூட்டை கட்டத்தொடங்கினார்கள். அப்போதும் அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள், வந்தவர்களில் ஒருவன் சகிக்க முடியாத தூசன வார்த்தையால் அவளை நிந்தித்து “வந்த வேலையைப் பார்” என்றான்.

பெர்னான்டோ அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தான். அப்போது தான் அவனுக்கு விடயம் முழுவதுமாக புரிந்தது. ஆனால் அவனால் நம்பவே முடியவில்லை, அது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் வெளிப்பட்டது. கண்ணீர் கண்களிலேயே தேங்கி பார்வையை மழுங்கடித்தது. இருள் சூழ்ந்தது போல் உணர்ந்தான் பெர்னான்டோ. தலை சுற்றியது. இதயம் அடித்தடித்து அவனைத்திட்டியது……. அதற்கு மேல் அவனால் யோசிக்க முடியவில்லை…….

சரியாக சன நடமாட்டம் குறைந்த நேரம் பார்த்து வந்திருக்கிறாரகள், திருட்டிலும் எவ்வளவு திட்டமிடல். அரைமணி நேரத்துக்குள் எல்லாம் முடித்து எல்லோரும் போய் விட்டிருந்தனர். அவனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை, அவன் அப்படியே கிடந்தான்…… அவனைத்தேடி அவனது நண்பர்களில் ஒருவன் வரும் வரை அவன் அப்படியே தான் கிடந்தான்.

பெரும் பிரயத்தனப்பட்டு பெர்னான்டோவை விடுவித்தான் நண்பன். கயிறு இருக்கிய இடமெல்லாம் வலித்தது, அதை விட மனது வலித்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் வீட்டில் கூட்டம் கூடி விட்டது. அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை, யாரிடமும் அவன் எதையும் பேசவில்லை. அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அவ்வளவு இலகுவில் மறைந்து போய்விடுவதல்ல.

‘என்ன நடந்தது’, ‘வந்தவர்கள் யார்’, ‘ஏன் இப்படி நடந்தது’, ‘வந்தவர்கள் தெரிந்தவர்களா தெரியாதவர்களா’……….. ஏகப்பட்ட கேள்விகள். அவனது அமைதி கலையவில்லை…… எதுவும் பேசாமல் எல்லோரையும் அதிசயமாகப் பார்ப்பது போல் பார்த்தான். தானே வலிந்து ஏமாந்த கதையை சொல்ல விருப்பமில்லை. அதற்குள் அங்கிருந்து “வைத்தியரிடம் செல்வோமா” என்றது ஒரு குரல்……அவன் திடுக்கிட்டான். “எங்கே……….. பைத்தியகார ஹொஸ்பிட்டலுக்கா…..?” என்று கேட்க வேண்டும் போலிருந்தது. “எழும்புடா பொலிஸ_க்கு போவோம்” என்றான் நண்பன். அழுவதைப்போல் அவனைப் பார்த்தான் பெர்னான்டோ, எல்லோர் முகத்தையும் ஒரு நொடி ஆராய்ந்தான். எல்லோரும் நிஜமாகவே கவலைப் படுகிறார்களா என்ற சந்தேகம் வந்து விட்டிருந்தது. “எவ்வளவு காலம் கடந்த யோசனை”. எழுந்தான், வீட்டை ஒரு தரம் நோட்டமிட்டான்.கட்டில், கதிரை, அலுமாரி போன்ற பெரிய பொருட்கள் தவிர மற்ற எல்லாவற்றையுமே சுருட்டிக் கொண்டு போயிருந்தார்கள். மாட்டிக்கொண்டு போக உடைகள் கூட இல்லை. அவர்கள் விட்டு விட்டுப்போன அளவான பொருட்கள் என்றால் அது அவனது புத்தகங்கள், சஞ்சிகைகள்……. இதனால் என்ன பிரயோசனம் என்று நினைத்திருப்பார்கள் போலும்…… அந்த நேரத்திலும் அதற்காக அவனால் சந்தோசப்பட முடிந்தது, ஏனென்றால் மற்ற எல்லா பொருட்களையும் விட அவன் அதிகம் அலைந்து,திரிந்து கஷ்டப்பட்டு வாங்கியவைகள் அவை தான்.

எப்படியோ பொலிஸில் சென்று புகார் செய்தாயிற்று.அவர்களும் வந்து விசாரித்து விட்டும் போயாயிற்று………..

இவ்வளவையும் பறிகொடுத்து விட்டு நிற்கும் அவன் பரிதாபத்துக்குரியவனாக பார்க்கப்படுகிறான். ஆனால் ‘முதல் தடவையாக’ ஏமாந்து விட்டதாக பெர்னான்டோ உணர்கிறான்………

திருட்டுப்போன எந்தப் பொருள் பற்றியும் அவன் சிந்திக்க வில்லை. அது அனைத்தும் அவன் ஐந்து மாதங்களில் சம்பாதித்தவை. இன்னும் ஐந்து மாதங்களில் தன் வீட்டை பழைய மாதிரி அவன் உருவாக்கி விடுவான். ஆனால் மனதர்கள்…………..??? அவன் வைத்திருந்த நம்பிக்கை……..? இதை எங்கவென்று வாங்குவது……….?

ஊருக்குப் போய் சில நாட்கள் இருக்கும்படி பலர் அறிவுரை கூறினர், அவன் விடயத்தை ஊரிலுள்ளவர்களுக்கு அறிவிக்கவில்லை. “பாவி…………….. எப்படி ஏமாற்றி விட்டாள், அவளுக்கு நான் நல்லது தானே செய்தேன்…? என்னையும், என் எண்ணங்களையும் இப்படி அவமானப்படுத்தி விட்டாளே…….” ஏமாற்றம், வேதனை….. அவனால் அதை மறக்க முடியவில்லை……. படித்து உணர முடியாத அளவுக்கு அவன் மனம் சஞ்சலப்பட்டது……… நண்பர்களைச் சந்திக்கும்போது பெர்னான்டோ எதையும் பேசுவதில்லை………. எதனால் இது நடந்தது என்று அவனைத்தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை…….

தன்னை மறுபடியும் நிலைநிறுத்த அவன் பாடுபட்டான். வேலை தவிர்த்து அநேகமான நேரங்களில் அவன் வெளியில் வருவதையே தவிர்த்திருந்தான். அவனுடைய இலக்கிய நயம் செத்துப்போய்க்கிடந்தது. முன்பு போல் எதையும் அவனால் ரசிக்க முடியவில்லை. வாசிப்பு, தொலைக்காட்சி எல்லாம் தடைப்பட்டிருந்தது…………..

ஆனால் இந்த நிலையை விட்டும் பெர்னான்டோ தன்னை மாற்றிக் கொள்ள நினைத்தான். தன் அலுவலகத்தின் ‘சிம்பதி’யால் ஐந்து மாதங்களுக்கு முன்பே அவனது நிலையை முன்பிருந்ததை விட சிறப்பாக்கினான். அதில் லயித்துப் போவதை விரும்பினான். நண்பர்களுடன் செலவிடும் பின்னேரப் பொழுதுகளை ‘கராட்டே’ வகுப்பில் கழித்தான். இப்போது நண்பர்கள் யாரும் அவனிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பதில்லை, ஆனால் அவன் பேசுவதைக் கேட்கத்தயாராக இருந்தார்கள். குறிப்பாக நான்கு மாதங்களுக்கு முன்பு அவன் வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றித் தெரிந்து கொள்ள தயாராகவிருந்தார்கள்.ஆனால் அவன் எதையும் பேசவில்லை. பொலிஸ் விசாரணையின் போது கூட அவன் சரியான தகவலளிக்கவில்லை. ஏனென்றால் தான் ஏமாந்ததை பகிரங்கப்படுத்தவோ, சொல்லிக்கொண்டு திரியவோ அவன் விரும்பவில்லை. ஆனால் பழையபடி பெர்னான்டோ தன்னை மாற்றிக்கொண்டு வந்தான். டீவியில் கிரிக்கட் பார்க்கத் தொடங்கினான், புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினான், நண்பர்களுடன் சிரிக்கவும் பணம் கொடுக்கவும் கூட ஆரம்பித்தான்.

இப்போது அந்தச் சம்பவம் பற்றி யாரும் பேசுவதில்லை. மீண்டும் பெர்னான்டோ பழையபடி உலவ ஆரம்பித்தான்.

ஐந்து மாதங்கள் கழித்து ஒருநாள்,

யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். தொலைக்காட்சியில் பழைய பாடலொன்று ஓடிக் கொண்டிருந்தது. ‘அது தான் தன்னை தூங்க வைத்திருக்கிறது’ என நினைத்துக் கொண்டு சோம்பல் முறித்தவாறு வெளியே வந்தான்.

புழுதி படிந்த முகம், அடர்ந்த அலங்கோலமான் தாடி, பரட்டைத்தலை, அருவெறுப்பூட்டும் உடையுடன் ஒரு வயதானவர் நின்றிருந்தார். பார்த்தவுடன் பாவம் எனத் தோன்றும் முகம். ஆவரைப் பார்த்துக் கொண்டே பெர்னான்டோ அப்படியே நின்றிருந்தான். ஏதேதோ எண்ணங்கள் அவன’ இதயத்தை நிறைத்தது……….

“இன்னொரு தடவையும் தன்னை வடிகட்டிய முட்டாளாகவும், விருது பெற்ற ஏமாளியாகவும் ஆகப் போகிறாயா……?” என்றது மனதுக்குள்ளிருந்து ஏதோவொன்று, நிமிர்ந்து அந்த மனிதரைப் பார்த்தான்.

“உடுக்க உடுப்பு இருந்தா தா மகன்…….” என்றார். முனம் இளகியது. “ஒன்றுமில்ல போ….” என்று சொல்ல வாய் எழவில்லை. ‘வா’ என்ற சைகையுடன் வீட்டுக்குள் சென்றான். வாசல் வரை வந்த அவர் ஏதோ வரக்கூடாத இடத்துக்கு வந்தது போல் நின்றிருந்தார். என்ன நினைத்தானோ அவரை அழைத்து உள்ளே அமர வைத்து “சாப்பிட்டாச்சா…” என்றான்.இனி அடுத்தடுத்த கேள்விகளை அளித்து பதிலை எதிர்பார்த்தான். அவர் முகத்தை ஆராய்ந்த பெர்னான்டோ ‘எல்லோரும் ஒரே மாதிரி இருப்பார்களா என்ன…..?’ என தனக்குள் கேட்டுக் கொண்டான்.

இப்போது நண்பர்களிடம் பேசவும், தன்னை நினைத்து பெருமிதப்படவும் அவனுக்கொரு விடயம் கிடைத்து விட்டது……..சூடு கண்டாலும் அடுப்பங்கரையையே சுற்றிச்சுற்றி வரும் பூனையாக மாறியிருந்தான் பெர்னான்டோ………………………………..!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *