சுற்றுப்புற சுகாதாரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,527 
 

அதிகாரி அந்த ஊருக்குப் போனார். சுகாதார அதிகாரி; பெரிய பதவி வகிக்கும் பெரிய அதிகாரி. ஜீப்பெல்லாம் அங்கே போகாது; நடந்துதான் போகணும். அவரும் நடந்துதான் போனார். இப்படி நடந்தே போய் அந்தக் கிராமத்தின் சுகாதாரத்தை கவனிக்க அவருக்கு ஆசை.

இப்படிப் பைத்தியக்கார’ அதிகாரிகளும் இந்தக் காலத்தில் ஒண்ணு ரெண்டு இருக்கத்தான் செய்கிறார்கள்! இந்தியாவின் ஆத்மா கிராமத்தில்தான் இருக்கிறது என்று புத்தகத்தில் படித்திருக்கிறார் அவர்.

நடந்து போய்க்கொண்டே இருந்தார். கிராமம் இன்னும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. காடு செடி மரங்கள் மறைத்துக் கொண்டு நின்றன. இப்படி நடப்பதில் அவருக்கு ஒரு சந்தோஷம். வேலையையும் கவனித்தமாதிரி; தேகப் பயிற்சியும் எடுத்தமாதிரி.

‘சுதந்தரம் அடைந்து முப்பத்தியா-று வருசம் முடியப் போகுது. இன்னும் இந்தக் கிராமத்து ஜனங்கள் திருந்தவில்லை. அவர்களைத் திருத்தணும், எப்படியாவது’ என்று நினைத்தார். தண்ணீரைப் பத்து நிமிஷம் கொதிக்க வைத்து, அதை ஆறவைத்துச் சுத்தமான துணியினால் வடிகட்டிக் குடிக்கவேண்டும் என்று இவர் சுகாதார அதிகாரி ஆனதிலிருந்து சொல்லிக்கொண்டுதான் வருகிறார்; ஒரு சுடுகுஞ்சுகூடக் கேட்கமாட்டேன் என்கிறது. ‘குடிக்கிற, தண்ணீர்ப் பானையையாவது மூடிவையுங்கள்’ என்றும் சொல்லிப் பார்த்து விட்டார்.

இப்படி நினைத்துக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்த அதிகாரியின் மூக்கும் முகமும் திடீரென்று கோணிற்று! இது, ஒரு கிராமம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறி. மணி ஓசை வரும் முன்னே யானை வரும் பின்னே! நாற்றம் வரும் முன்னே கிராமம் வரும் பின்னே! அவருடைய சுத்தமான மூக்க பாழாய்ப் போய்விடும் போல் தெரிந்தது.

***

அந்த கிராமத்து மக்கள் தங்கள் கழிவு உபாதைகளுக்கு கிராமத்து மந்தைகளை ரெண்டாகப் பிரித்து வைத்திருந்தார்கள்.

ஊரின் தெற்கும் கிழக்கும் பெண்களுக்கு; வடக்கும் மேற்கும் ஆண்களுக்கு. இதில் அத்து மீறல் கிடையாது. ஊரைச் சுற்றிலும் இப்படி என்றால் தெருக்கள் மட்டும் சுத்தமாக இருக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. அந்தப் பங்கை நிறைவேற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். தெருவும் இப்படி என்றால், வீடுகளுக்கு உள்ளே வயசான நடமாட முடியாத கிழடு கட்டுகள் இருக்கிறார்கள்; அவர்கள் மந்தைக்கும் போகமுடியாது; தெருவுக்கும் வரமுடியாது; எல்லாமே வீட்டுக்கு உள்ளறதான்!

கிராமத்தில் வாசம்பண்ணும் அல்லது கிராமத்தையே சுற்றிவரும் வாயுபகவான் என்கிற காற்றுத் தேவன் திணறித்தான் போகிறான்; என்றாலும் அவர்கள் எல்லாரையும் போல அவனுக்கும் பழகித்தான் போச்சு; இது இன்றைக்கு நேற்று இருக்கும் சங்கதி இல்லை. கிராமம் தோணின அன்றையிலிருந்தே நீடித்துக்கொண்டு வரும் காரியம். எப்படியாவது இதை நிறுத்தியே ஆகவேண்டும் என்று பிரதிக்கினை எடுத்துக்கொண்டார், அந்தச் சுகாதார அதிகாரி.

ஊர் மடத்தில் வந்திருந்துகொண்டு, அம்பலக்காரர் முதல் கொண்டு ஊர்ப் பெரியவர்கள் எல்லாரையும் வரவழைத்து இது விஷயமாய் உருக்கமாக நீண்ட நேரம் பேசினார் அதிகாரி. கிராமத்து ஜனங்களுக்கு இரக்க சுபாவம் ஜாஸ்தி. ‘பாவி மனுசன் ரொம்பக் கஷ்டப்படுறாரே’ என்று நினைத்து, “என்ன செய்ய வேணுமென்றாலும் தயார்” என்று உறுதி தந்தார்கள்.

இதே விஷயமாக இந்தக் கிராமத்தில் முன்பு நடந்து முடிந்த பல காரியங்கள் அதிகாரிக்குத் தெரியாது. சர்வோதயத் தலைவர்களும் தொண்டர்களும் இங்கே வந்து முகாமிட்டிருந்தார்கள். கிராமத்தின் இந்த அவலத்தைப் போக்க ‘தொண்டைத் தண்ணி’ வற்றும் அளவுக்குப் பேசினார்கள்; பாட்டுக்களெல்லாம் பாடினார்கள்.

“இப்படி ஊரைச் சுற்றிலும் அசிங்கப்படுத்தினால் கிராமத்தின் தூய்மை கெட்டுவிடும். தொற்றுநோய் பரவும்” என்றெல்லாம் சொன்னார்கள். தூரத்தில் கொஞ்சம் நடந்துபோய் இருந்துவிட்டு வாருங்கள்’ என்றார்கள். ஒருவர் சொன்னார், ‘போகும்போது களை செதுக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு போங்கள். ஒரு குழி பறித்து அதில் இருங்கள். வரும்போது அதில் மண்ணைப் போட்டு நன்றாக மூடிவிட்டு வந்துவிடுங்கள்.”

“அது ஒண்ணு, இது நிலத்துக்கு நல்ல உரம். ரெண்டு, இது காற்றைக் கெடுத்து நாற்றம் ஏற்படுத்தாது. பூனை, நாய்கூட இப்படிச் செய்கிறது. சில பூனை, நாய்கள் மட்டுமே மனிதனைப் பார்த்து இப்போது இப்படிச் செய்ய மறந்துபோய்விட்டது.”

கிராமத்து மக்கள் இவர்கள் பேசுவதை எல்லாம் கூடிக் கேட்டார்கள். சிரித்தார்கள். “சரிதானே அதுவுக சொல்றது” என்று சிலர் சொன்னார்கள். நடக்கத்தான் முடியலை, அந்தப்படி.

சர்வோதயத் தொண்டர்கள் மேலும் விடாப்பிடியாக ஒரு காரியம் செய்தார்கள். சொல்லியும் கேட்காமல் இருக்கும் மனித மலங்களை வாளியும் தகடுகளையும் கொண்டு அள்ளிக்கொண்டு போய்ப் புஞ்சை களில் புதைத்தார்கள். தெருக்களையும் சுத்தப்படுத்தினார்கள்.

இது பலபேருடைய மனசைத் தொட்டது. “அடடா” என்று வருத்தப்பட்டு, “யாரு பெத்த பிள்ளைகளோ? ராஜா வீட்டுப் பிள்ளைகள் போல இருந்துக்கிட்டு இப்பிடி நம்ம ஊரிலெ வந்து தோட்டி வேலை செய்யுதுகளே?” என்று, அந்த ஊரில் அவர்கள் தங்கியிருந்த நாட்கள் வரைக்கும் வேலை மெனக்கிட்டாலும் பரவாயில்லை என்று மந்தையில் உட்காராமல் கொஞ்சதூரம் நடந்து போய் இருந்துவிட்டு வந்தார்கள்.

“எடுக்கட்டும் பயபுள்ளக; நல்….ல திண்ணு கொழுத்துப்போயி அலையுதுக” என்று சிலர் வழக்கம்போல் நடந்துகொண்டார்கள். இப்படியும் ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்று ஊர் மடத்தில் கூடியிருந்தவர்களிடமிருந்து தெரிந்துகொண்டார் அதிகாரி. – அவர் இப்போது அவர்களிடம் ஒரு மாற்று யோசனையை முன் வைத்தார். அதன்படி, ஊருக்கு தெற்கிலும் வடமேற்கிலும் மந்தையில் ரெண்டு பாதாளக் கக்கூஸ்கள் சர்க்கார் செலவிலேயே கட்டித்தருவது என்றும், அந்தமாதிரி அள்ளிப் புதைக்கவோ வேலை மெனக்கிட்டுத் தொலைதூரம் நடந்துபோகவோ வேண்டியதில்லை என்றும், தண்ணீர் வசதி, லைட் வசதி எல்லாம் செய்து தரப்படும் என்றும் * ‘கால்’ கழுவி, முடித்துவிட்டு, ஒரு வாளித் தண்ணீர் ஊற்றினால் போதும், மலம் பாதாளத் தொட்டிக்குள் போய்விடும். சுற்றுப்புறம் நாறாது; ஈக்கள் மொய்த்து நோய் பரவாது; கிராமச் சுற்றுப்புறம் சுத்தமாகிவிடும்” என்றும் சொன்னார்.

ஊர்ப் பெரியவர்களுக்கு, இது நல்லதுதான் என்று பட்டு, “சரி, அப்படியே செய்யலாம்” என்று சொல்லிவிட்டார்கள்.

அதிகாரி சொன்னபடியே, சர்க்காரிலிருந்து ரெண்டு பாதாளக் கக்கூஸ்கள் கட்டப்பட்டு, தண்ணீர் வசதிக்காக ‘ அடிபம்பு’கள் போடப்பட்டு, தண்ணீர் அடிக்க சோம்புகிறவர்களுக்கு பக்கத்திலேயே சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் அடித்து நிரப்பி வைக்கப்பட் டிருந்தது. வாளிகளும் தயாராக இருந்தன.

மக்கள் போய்ச் சுற்றிப் பார்த்தார்கள். பலபேருக்கு அதில் எப்படி உட்கார்ந்து வெளிக்கு இருப்பது என்றே தெரியவில்லை. ‘இப்படிச் சுத்தமான ஒரு இடத்தில் வந்து வெளிக்கிருப்பதாவது’ என்று பட்டது!

சிலர் உட்கார்ந்து இருந்து பார்த்தார்கள்; வெளிக்கே வரவில்லை! வீட்டுக்கு உள்ளே நாலு சுவர்களுக்குள் இருப்பதுபோல இருந்ததால் வெளிக்கு இருக்கமுடியாமல் வெளியே ஓடி வந்துவிட்டார்கள். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதப்பா என்று பலரும் சொல்லி விட்டார்கள்.

அதிகாரியோ ‘பிடிசாதகம்’ பிடிச்ச மனுசன்; விடாக்கண்டன். எப்படியாவது இதுக்கு கிராமத்து மக்களைப் பழக்கியே தீருவது என்றிருந்தார். இளைஞர்களைச் சிநேகம் பிடித்துப் பக்குவமாகப் பேசி, *எப்படி இதை உபயோகப்படுத்துவது, எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்வது’ என்று அவர்களுக்குப் புரியும்படியாகச் சொன்னார்.

முதலில் அது இவர்களுக்கு ‘ஒண்ணுக்கு’ இருக்க மறைவாகவும் தோதாகவும் பட்டது.

தொட்டியில் நிரப்பியுள்ள தண்ணீரை மொண்டு மாடுகளைக் குளிப்பாட்டினார்கள். முதலில் இப்படித்தான் அதன் உபயோகம் தொடங்கியது. ‘சரி; இப்படியாவது அதன் பக்கத்தில் நெருங்கி வருகிறார்களே?” என்று அதிகாரி பார்த்துக்கொண்டிருந்தார்.

அவசரமாய் வெளிக்கு நெருக்குகிறவர்களும், வயித்தோட்டம் வந்தவர்களுமே முதலில் அதை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்கள் சரியாகத் தண்ணீர்விட்டுச் சுத்தப்படுத்துவதில்லை. அதிகாரி வந்து பார்ப்பார்; அவரே வாளி வாளியாகத் தண்ணீரை மொண்டு கொட்டுவார்.

முகம் பழகியவர்களைக் கூட்டிக்கொண்டு போய் காண்பிப்பார். இப்படித் தண்ணீரை விட்டாலே போதும் என்று சொல்லி, அந்த “உழக்கு வளையத்திலும் தண்ணீர் மட்டுமே நிற்கவேண்டும்; மலம் நிற்கக்கூடாது. ஒண்ணுக்கு இருந்தாலும் தண்ணீர் விட்டால்தான் நாற்றம் வராது” என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

அதிகாரி இருக்கும்வரை இது கொஞ்சம் நடந்தது. தூரத்தில் இருந்துகொண்டு அவர் கவனிப்பார். ஒரு ஆள் வெளியே வந்ததும் உள்ளே போய்க் கவனித்தார். பழைய கதைதான்.

விடாப்பிடியாக அவரும் ஒவ்வொருவர் வெளியேறிய பிறகும் போய்த் தண்ணீர் விட்டுவிட்டு வருவார். ‘குழந்தைகளுக்கு ‘கால்’ கழுவி’ விடுவதுபோல அவர்களுக்கு விடவேண்டாம்; அதை மட்டும் அவர்கள் செய்து கொள்கிறார்கள்:

சோர்வும் அலுப்பும் தட்டினாலும் மனசைத் தளரவிடவில்லை அவர். அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குப் போனார், ஹெட்மாஸ்டரைப் பார்க்க. அங்கே எட்டாவது வகுப்பு வரை இருந்தது. பெரிய பள்ளிக் கூடம் என்றுதான் சொல்லணும்.

அதிகாரி நினைத்துப் போனது, சிறிய வயசில படிக்கும்போதே குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்கள் செய்துவிடுவார்கள். இப்படியாக விஷயங்களைக் குழந்தைச் சமுதாயத்தில் இருந்துதான் ஆரம்பிக்க வேணும்.

அதிகாரியை வரவேற்று ஹெட்மாஸ்டர் அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அதிகாரி பைய்ய விஷயத்துக்கு வந்தார். ஹெட்மாஸ்டர் சொன்னார்; “எங்க பள்ளிக்கூடத்திலேயே பிளஷவுட் லெட்ரின் இருக்கே.’

“அப்படியா! நா அதைப் பார்க்கலாமா?”

“ஓ! தாராளமா.”

மேஜை இழுப்பை இழுத்து, தேடி, ஒரு துருப்பிடித்த சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் ஹெட்மாஸ்டர்.

சாவி என்னத்துக்கு என்று கேட்டபோதுதான் தெரிந்தது, “திறந்து போட்டால் சவம், பிள்ளைக அதெ நாசமாக்கீராதா?” என்று கேட்டார்.

‘ஆஹா; விஷயத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது இப்போத் தான் விளங்குகிறது. குழந்தைகளிடமிருந்து அல்ல; வாத்தியார் சமூகத்திலிருந்துதான் தொடங்கவேண்டும் விஷயத்தை!’ என்று பட்டது.

“நீங்க இதையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரணும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டால் அது மனுச சமுதாயத்துக்கே சொல்லிக்கொடுத்த மாதிரியில்லையா?”

கல்வி இலாக்கா மேலதிகாரி வந்து இப்படிச் சொன்னால் அதுக்கென்ன ஆகட்டும் சார்’ என்று சொல்லித் தப்பித்துவிடலாம்.

இந்த அதிகாரி வந்து இப்படிச் சொல்றது பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. இருக்கிற பாடங்களையே சொல்லிக் கொடுக்கவும் படித்துக் கொள்ளவும் நேரம் பத்தலை; ஏகப்பட்ட ஸெலபஸ். அதிலும் பிள்ளைகளுக்கு எப்பொ “வெளிக்கு’ வரும் என்று சொல்ல முடியாது! அந்த வேளைகெட்ட வேளையில் போய் இருந்துகொண்டு இப்படி இப்படி வெளிக்கு இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்க முடியுமா? இதெல்லாம் ‘ஸெலபஸ்ஸில் இல்லாத விஷயங்கள் அல்லவா? ‘குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷனுக்கு ஆட்களைப் பிடித்துக்கொண்டு வரச் சொல்லுகிறமாதிரி இதையும் வாத்தியான் தலையில் எங்கே கட்டிவிடுவார்களோ?’ என்று உள்ளுக்குள் பயம்தான்.

ஆனாலும் ரெண்டு படிப்பாளிகள், அறிவு ஜீவிகள் என்கிற கடமையில், இந்தியாவின் ஆன்மா, கிராமத்தின் சுத்தத்தன்மை, சுற்றுப்புற சுகாதாரம் என்றெல்லாம் பேசிக் கடேசியாக ஒரு மட்டுக்கும் கொள்கையளவில் ஹெட்மாஸ்டர் ஒப்புக்கொண்டார். இளநீர் சாப்பிட்டுவிட்டு அதிகாரி விடைபெற்றுப் போய்விட்டார். –

திரும்பவும் அந்தக் கிராமத்துக்கு அதிகாரியால் நினைத்ததுபோல் போகச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. மழைக்காலம் என்பதால் அங்கே போவது ரொம்பச் சிரமம் என்று சொன்னார்கள். ஆபீஸ் வேலையில் மூழ்கியிருந்தாலும் மனசு கிராமத்தில் இருந்தது; இந்த ஒரு விஷயத்தில் வெற்றி கண்டுவிட்டால் எல்லாக் கிராமங்களுக்கும் இதை விஸ்தரித்து விடலாம் என்பது அவர் எண்ணம். ‘ரிசல்ட்’ என்ன என்று தெரிந்து கொள்ள வேணும் முதலில்.

பூரணமாக மழைக்காலம் முடிகிறவரை அவரால் காத்துக்கொண் டிருக்க முடியவில்லை. மத்தியில் ஒருதடவைப் போய் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று நினைத்தார். மழை ஒன்றிரண்டு நாள் இடைவெளி விட்ட சமயம் பார்த்துப் புறப்பட்டுப் போனார்.

கரிசல் மண் ஒற்றையடிப் பாதையில் இவ்வளவு ஆழத்துக்கு கால் போகும் என்று அவருக்குத் தெரியாது. கையில் ‘சப்பல்’களைக் கழற்றி வைத்துக்கொண்டு காலைக் கொடுத்துக் காலைப்பிடுங்க வேண்டியது இருந்தது. அரைக் கிலோமீட்டர் போவதற்குள்ளேயே அலுத்துப் போனார்.

ஊரை நெருங்க நெருங்க, எதிர்பாராத அந்தத் துர்நாற்றம் குடலைப் புரட்டியது. ஏன் என்னது என்று அவருக்கு ஒன்றும் புரிய வில்லை. விடாப்பிடியாக நடந்து அந்தக் கிராமத்தை நெருங்கிப் போய்ப் பார்த்தார். அவருடைய லட்சியமான அந்தக் கக்கூஸ்களை கிராமத்தார் யாரும் அதன் உள்ளே நுழையாதவாறு கருவேலம் முள்ளை வெட்டிப்போட்டு அடைத்திருந்தார்கள். உடைந்த கண்ணாடிப் பாட்டில்களின் சிதறல்கள் அதன்மேலே இரைந்து கிடந்தன. அந்தக் கட்டடத்தைச் சுற்றி வழக்கம்போல் அவர்கள் இஷ்டத்துக்கு கழிவு உபாதைகளை போக்கியிருந்தார்கள்.

அந்த வழியாக போன ஒரு ஆளைக் கூப்பிட்டு, “ஏன் இதை இப்படி முள்ளால் அடைத்துவிட்டார்கள்?” என்று கேட்டதுக்கு அவன் சொன்னது; “நாத்தப் பொணம் சகிக்கலைங்க, ஊரிலிருந்தே இதை வேண்டாம்னு அடைச்சி மூடிட்டாங்க”

இனி ஊருக்குள்ளரப் போய்ப் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்துகொண்டார். என்ன செய்வது என்றும் தெரியவில்லை. யோசித்துவிட்டுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்து நடந்தார்.

– தீபாவளி மலர், நவம்பர் 1983

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *