சுற்றிச்சுழலும் தட்டைப்பாம்புகளும் புளிபோடாத உளுவைமீன் குழம்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 14,658 
 

ஜூம்ஆவில் பயான் (பிரசங்கம்) செய்துகொண்டிருந்த ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் பேச்சு, காட்டுப்புதர்களிடையே மகுடி ஊதும் பிடாரனின் குரலாக வசியம் கொண்டிருந்தது. ஆலவிழுதுகளாய் முறுக்கிக்கொண்டு புற்றிலிருந்து வெளிக்கிளம்பும் பாம்புகளின் உடல்களாய்ச் சொற்கள் வளமும் செறிவுமாகத் தெறித்து விழுந்தன. சொற்களின் ஓசையில், பாம்புகளுக்கான இசை அலையாடியது. வார்த்தைகளை வெளியேற்ற வாய்த்திறக்கும்போது அவர் நாக்கு, தடித்த மலைப்பாம்பாய் எட்டியெட்டிப் பார்த்தது.
புழுபூச்சிகளைப் பிடித்து உணவாய் உட்கொள்ள ஏதுவாக இருக்கும் நாக்குப்பசை, அவர் வாயிலிருந்து எச்சிலாக சிதறித் தெறித்தது. எதிரே இருந்தவர்கள் தங்கள் மீது எச்சில்பட்டும் அசூயைப்படவில்லை. அந்தஎச்சிலை யாரும் துடைத்துக்கொள்ளவு மில்லை. வழித்து வாயில் போட்டுக்கொண்டு பயானில் மூழ்கியிருப்பவர்களாய் நடித்தார்கள். துடைத்து தூரஎறிவதைப் பார்த்தால் ஏதும் சாபம் தந்துவிடுவாரோ எனும் அச்சம், கூடியிருந்த எல்லோருக்குள்ளும் இருந்தது.
இதற்குமுன்பான ஜும்ஆ பயான்களில் இப்படியேதும் நிகழ்ந்ததில்லை. இன்று பள்ளிவாசல் முழுவதையும் ஏதோ ஒன்று கவ்விப்பிடித்திருக்கும் மாயம் தெரிகிறது. ஈரமும் பிசுபிசுப்பானதுமான இழைகள் வார்த்தைகளின் பிரதிகளைச் சுமந்து திரிவதாகப் பட்டது. பிரகாசிக்கும் வண்ணநிற லாந்தர்கள், ஒளியை மட்டுப்படுத்தி பம்மி ஒளிர்வதும் அதன் நீட்சியாக இருக்கிறது. மசங்கிய ஒளியில் தொழுகைப் பள்ளியின் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் முப்பதுக்கும் மேலான விளம்பர நாட்காட்டிகளின் தாட்களும் வகைதொகையான பாம்புகளாய்க் காற்றில் அசைந்தாடின. மின்விசிறிகளின் இறக்கைகள் தட்டைப் பாம்புகளாய்ச் சுற்றிச் சுழல்கின்றன. விரிக்கப்பட்டிருக்கும் தொழுகை ஷப்(பாய்)களில் தண்ணீர்ப்பாம்புகள் ஊர்வதை உணரமுடிந்தது. ஏழெட்டு கட்டுவிரியன் பாம்புகளும் ஐந்தாறு கண்ணாடிவிரியன் பாம்புகளும் தொழுகைப்பள்ளி சஹானில் (வளாகத்தில்) காற்றில் மிதந்து குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து திரிந்தன. ஹவுஜில் (நீர்க்குளத்தில) நீந்தித்திரியும் மீன்கள் பாம்புகளாக உருமாறியிருந்தன. ஒருபச்சைப் பாம்பு, மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த விளக்குமாறாகத் தரைக்கும் சுவருக்கு மாய் நெளிந்து வாலாட்டிக் கொண்டிருந்தது. தொழுவதற்கு குல்லா எடுத்துவர மறந்தவர்கள் அவசரத்துக்கு வைத்துக்கொள்ள அடுக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குல்லாக்கள் பாம்புகளை அடைக்கும் சைஞ்சிகளாக (பிடாரிகளாக)த் தெரிந்தன.
சிவந்த வண்ணத்தில் அழகிய சிறிய பூக்களைக்கொண்ட ருமாலை (தலையில் சுற்றிக் கொள்ளும் துணி) தலையில் கட்டியிருந்த அவர், பெண்மையின் சாயலில் இருந் தார். தாடி நெஞ்சைத் தொடுவதாக இருந்தது. அதேவேளையில் கூந்தல் முதுகில் அடர்த்தியாய்ப் பரந்து கிடந்தது. முடியின் நுனிகளை நேர்த்தியாக வெட்டியிருந்தார். அது ஒரு ஒழுங்கை அவர் முதுகின் மேல் கடைப்பிடித்திருந்தது. கையில் பெரிய மணிகளால் ஆன தஸ்பீ ஒன்றை வைத்திருந்தார். பள்ளிவாசலில் நிலவிய மசங்கிய வெளிச்சம் தஸ்பியிலிருந்துக் கசியும் ஒளிக்கீற்றைப் பிரகாசப்படுத்தியது. கையில் அவர் பெரிய லாந்தரைப் பிடித்திருப்பதைப்போல ஒளி பரவியிருந்தது. அந்த ஒளிக்கீற்று அவரை முன்னடத்திச் செல்வதாக எல்லோரும் நம்பினார்கள். அந்தப்பாதையில் மற்றவர்களையும் அவர் அழைத்துச் செல்வார் என்றும் நம்பப்பட்டது. வேறுநேரங்களில் அந்தத்தஸ்பீ அவர் கழுத்தில் கிடப்பதைப் பார்க்கமுடியும். அது அவருக்குப் பெண்ணுக்கானத் தோற்ற மிருப்பதை உறுதி செய்துவந்தது. குரலுக்கும் சொற்களுக்கும் சம்பந்தமில்லாத அவரின் நளினமும் உடலசைவும் பெண்மையை மேலும் நினைவூட்டியது.
இருகைகளையும் அகலவிரித்து, இமைகளை மூடிமூடி, விழிகளால் அழைக்கும் காமப் பெண்ணின் வசிகரம் அவரிடமிருந்தது. அவரது சொல்லுக்கும் விளக்கத்துக்கும் பொருள் புரியாத வர்கள் பெண்மை நிறைந்த அவர் உடம்பின் அசைவுகளில் ஈர்த்துக் கட்டுண்டு கிடந்தார்கள். பொருள் புரிந்தவர்கள் பாம்புகளால் கட்டப்பட்டவர்களாக அவர் குரலுடன் பிணைந்துகிடந்தார்கள். முகம்மத் வஜீர் அலிகான் மட்டும் அசைவுக்கும், அந்தக்குரலுக்கும் கட்டுப்பட முடியாதவராக மண்ணுளியாய்ச் சுளிந்துகிடந்தார். விளக்கு மாறாகத் தரைக்கும் சுவருக்குமாய் நெளிந்து வாலாட்டிக் கொண்டிருந்தத் தண்ணீர்ப் பாம்புக்கு அருகில், அவர் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். பயானில் பிரயோகிக்கப்பட்ட அரபுச்சொற்களும், அதன் வீச்சும், இசையுடன் கூடிய உச்சரிப்பும் அவரை வசியம் செய்யப் போதுமானதாக இருக்கவில்லை. தாடிக்குள் விரல்களைவிட்டுக் கோதிக் கொண்டார்.
ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானி, வடக்கேயுள்ள உத்பல்நகர்ப் பள்ளி யின் இமாம். அவர் செய்யும் பயான் உலகெங்கும் பிரசித்தமாகியிருந்தது. மக்காவிலும் மதினாவிலும்கூட அவர் ஜும்ஆ பயான் நடத்தியிருக்கிறார். புருனே சுல்தானுக்கு தனித் தொழுகை நடத்தித் தந்தவர். அவர் நடத்தும் தொழுகையைப் பார்க்க வேண்டும் என்று ஒபாமா ஆசைப்பட்டதும் நடந்திருக்கிறது. வழியனுப்புவதற்காக ஒசாமா கரடுமுரடானப் பாதையில் நீண்டதூரம் நடந்துவந்ததும் நடந்திருக்கிறது. உச்சரிப்பில் அல்லாஹ்வின் கருணை மழையாய்ப் பொழியும். கேட்பவர்கள் ஈரத்தை உணர்ந்ததாகச் சொல்லிக் கொள்வார்கள். வார்த்தைகளில் தயவான பலன்கள் மலிந்து கிடக்கும். இஸ்லாத்தின் கடமைகளைப் பெயருக்குச் செய்பவர்கள், விட்டேத்தி வாழ்க்கை வாழ்பவர்கள் அவரது பயானுக்குப் பின் தங்களை மாற்றிக்கொண்டதாகச் சொல்லிக்கொள்வார்கள். கருணை யின் வடிவாகவும் அவர் இருந்தார். அதனால், ஜும்ஆ பள்ளிகள் அவருக்காக வரிசைக் கட்டி நிற்கின்றன. இந்தப்பள்ளியில் பயான் செய்யச்சொல்லி பலதடவைகள் நிர்வாகத் தால் அழைக்கப்பட்டு, தேதியில்லையென்று கைவிரித்துவிட்டிருந்தார். இன்று பெரிய மனது பண்ணி, இந்த ஜும்ஆவுக்கு அவர் வந்திருக்கிறார். போன ஜும்ஆ அன்றே, இன்று அவர் வருவதாக அறிவிப்பு செய்து, பயானுக்கு வராமல் நேரே தொழுகைக்கு வந்துவிடும் தொழுகையாளிகளுக்கு கவனம் செய்யப்பட்டது.
முகம்மத் வஜீர் அலிகான் நேரந் தவறாதவர். எதையும் முறையாகச் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். அவரைப் பார்த்து கடிகாரத்தில் நேரத்தைத் திருகிக்கொள்ளலாம். ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் பயானுக்கு நேரத் துக்கே வந்துவிடவேண்டுமென்று அவர் வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தார். பயானை உள் வாங்கும் மனநிலை அவரிடம் நிறைந்திருந்தது. மறுமையில் தோதக்கிற்குப் (நரகத் திற்கு) போக விரும்பாதவர். ஜன்னத் (சொர்க்கம்) மட்டுமே அவரது குறி. அதற்கானச் செயல்களில் மனதை ஈடுபடுத்துவது அவருக்குக் கைவந்திருந்தது. வயதைத் தாண்டிய உற்சாகமும் துள்ளலுமாகக் கிளம்பிய அவர் தெருமுனையைத் திரும்பும்போது, அது நடந்தது.
அவரது ஒரே மகள் சௌகத்துன்னிஸா, ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு ஆவிபோல கடந்துபோனாள். அவர் திடுக்கிட்டுப் போனார். ரோட்டில் வேறு எந்த நடமாட்டமும் அப்போது இருக்கவில்லை. மேற்கே வெற்றிலைப்பேட்டை முக்கு தெரிந்தது. இராமநாத புரம் போகும் லாரியில் இரண்டுபேர் சரக்கு ஏற்றிக்கொண்டிருந்தனர். கிழக்கே ஓலைப் பட்டினம். புன்னைமர நிழலில் நாலைந்துபேர் வாட்டியெடுக்கும் வெயிலுக்கு பயந்து நின்றிருந்தனர். ரோட்டின் இரண்டுபுறமும் வெறிச்சோடிக் கிடந்தது. நடுவில் பாலை போல வெயிலோடி அலையடித்தது.
ஒருநொடிதான். அதிர்ச்சியிலிருந்த அவர் மீண்டு திரும்பப்பார்த்தபோது, ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டுபோன சௌகத்துன்னிஸா இருக்கவில்லை.
அத்தனைச் சீக்கிரமாகக் கடந்துபோயிருக்க முடியாது. பள்ளிவாசலை ஒட்டியே கபரஸ் தானும் இருந்தது. ‘எங்கே போயிருப்பாள்? கபரஸ்தானுக்குள் போய்விட்டாளோ?‘ என்று மறுகினார். அவருக்குக் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. வெயில் நிறைந்த அந்தப்பகல்பொழுது எதிரிலுள்ள எல்லாவற்றையும் கருப்பாக அவருக்குக் காட்டியது. கால்கள் அனிச்சையாக அவரை பள்ளி வாசலுக்குள் கொண்டுவந்து சேர்த்தன.
ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானி தொடங்கிவிட்ட பயானில் மற்றவர் கள் லயித்துக் கட்டுண்டு, அவரது அசைவுக்கேற்ப தங்கள் உடம்புகளைத் தாலாட்டிக் கொண்டிருந்தார்கள். தலைகள் ஒரேலயத்தில் அசைந்தன. உள்ளே வரும்போதே முகம்மத் வஜீர் அலிகான் மனநிலை முற்றிலும் அவர்களுக்கு எதிராக இருந்தது. வெளியில் இருந்த இருள் உள்ளேயும். பாம்புகள் ஒருபெரும்கட்டுபோல அவரைப் பின்னிச் சுற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றார். அத்தனைச் சுலபமாக அது இருக்கவில்லை. அவரெடுத்த முயற்சிகள் மேலும்மேலும் பாம்புகளாக விளைந்துகொண்டிருந்தன. பயானுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க ரொம்பவும் பிரயத் தனப்பட்டார். பலனளிக்கவில்லை. நேரமாக ஆக ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானின் முகம், அவர் மகள் சௌகத்துன்னிஸாவின் முகம்போல யௌவனமாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.
பயான் முடிந்து, தொழுகையும் முடிந்து எல்லோரும் கட்டித்தழுவி முலாகத் (ஆலிங்கனம்) செய்துகொண்டனர். ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியிடம் முலாகத் செய்துகொள்ள முண்டியடித்தனர். வரிசை முளைந்திருந்தது. ஒருதொழுகை யாளி இரண்டாவது முறையாக வரிவையில் நின்று முலாகத்செய்து, திருப்திப்பட்டுக்
கொண்டார். முகம்மத் வஜீர் அலிகான் காத்திருந்து அவரைக் கட்டித்தழுவினார். மகள் சௌகத்துன்னிஸாவைக் கட்டித்தழுவுவதுபோல அவருக்குள் உணர்வெழுந்தது.
“வாங்க, நம்ம வீட்டுல சாப்புடலாம்!” என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்தார். முகம்மத் வஜீர் அலிகான் அழைப்பில் ஒரு பிரியம் இருப்பதை ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானால் உணரமுடிந்தது. கையை அவரிடமிருந்து விடுவித் துக்கொள்ளாமலேயே, “இங்கே ஏற்பாடு பண்ணீருப்பாங்களே. அதைத் தவிர்க்கமுடியாது. உங்க வீட்ல சாப்புடாட்டி என்ன. இங்கே ரிஜ்ஜக்(சாப்பாடு) முடிஞ்சதும், உங்க வீட்டுக்கு வர்றேன். பேசிக்கிட்டுருக்கலாம். விலாசம் சொல்லுங்க!” என்றார்.
விலாசத்தை கவனமாகக் குறித்துக்கொண்டு வழியனுப்பி வைத்தார். வார்த்தை களில் சௌகத்துன்னிஸாவின் உச்சரிப்பும் நளினமும் செயல்பாடும் அச்சுக்குலையாத பிரதியாய் இருந்தது.
·
சௌகத்துன்னிஸா, முகம்மத் வஜீர் அலிகானுக்கு ஒரேமகள். செல்லமகளும் கூட. ‘ஓவியமானப் பொண்ணாக்கும்?‘ வகைதொகையில்லாமல் அவர் செல்லம் கொடுப்பதாக மஹல்லா முழுவதும் பேச்சிருந்தது.
‘மகளுக்கு பாவா செல்லம் கொடுக்காம வேறு யார் கொடுப்பாங்க?‘ என்பது அவர் கேள்வி. மகள் இல்ம்(இஸ்லாமிய வாழ்க்கை முறை) கற்றுக்கொண்டிருப்பதுடன் உலக யதார்த்தத்தையும் அவள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அது தான் பெண்ணுக்கான சுதந்திரம் என்றும் கருதினார்.
ஒருநாள், அவரது கருதுகோளுக்கு அவராலேயே பதில் சொல்லிக்கொள்ள முடி யாதபடிக்கு, சௌகத்துன்னிஸா தன்னுடன் படித்த இந்துப்பையனைத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள்.
செல்ல மகளின் இந்தச்செயல் முகம்மத் வஜீர் அலிகானை ஒடித்துப்போட்டு விட்டது. அது, அவர் எதிர்பாராதது. மஹல்லாவில் முகம்காட்ட முடியவில்லை. எல்லோரும் முதுகுக்குப் பின்னாலும் முன்னாலுமே கெக்கலித்துச் சிரித்தார்கள். வயதாகியிருந்தாலும் துள்ளல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துவந்த அவர், துவண்டு விட்டார். கண்முன்னே பெண்ணைத் தொலைத்துவிட்டு தவித்துக்கொண்டு நிற்கும் வலி நிறைந்த நேரமது.
அவசரமும் பரபரப்பும் தானாக விளைந்து, அவருக்கு முன்னால் விரிந்துநின்று, “என்ன செய்யவேண்டும். உத்தரவிடுங்கள், மாலிக்(எஜமானே)?” என்று அற்புதவிளக்கு பூதமாய் கைகளை மார்பின்குறுக்கே கட்டிக்கொண்டு காத்திருந்தது. பரபரப்பான நேரங் களில் அவர் மௌனத்தைக் கைக்கொள்வார். நிதானமாய் யோசிக்க… யோசிக்க… மகள் மீது கண்மூடித்தனமாகக் கொண்டிருந்த பாசம் பாழாய்ப் போய்விட்டதாக, இப்போது தோன்றியது. உடல் குலுங்கினார். “இப்டிச்செய்வானு நான் எதிர்பாக்கல. எதிர்பாக்கல” என்று தேம்பினார். உலக யதார்த்தத்தைக் கற்றுக்கொண்ட மகள், ‘இல்மை‘த் தொலைத்
துவிட்டதாகப் புலம்பினார்.
அதேவேளையில், என்னென்ன வகையான வழிகளில் பெண்ணை மீட்டுக் கொண்டு வரலாம் என்று ஜமாத் கூடிக்கூடி ஆராய்ச்சி செய்தது. அனுபவஸ்தர்களும், நேரத்தை சூதானமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தவர்களும் பல்வேறுகட்ட நட வடிக்கைகளை முன்மொழிந்தார்கள். அதைச் செய்துகொடுப்பதற்கு நிறைய ஆட்கள் தயாராகவே நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதும் அற்புதவிளக்கு பூதங் களைப்போலவே தெரிந்தார்கள்.
சிலர் ஒதுங்கி நின்று, ‘அந்தப்பையனும் பொண்ணும் இப்ப என்ன செஞ்சுக்கிட்டு இருப்பாங்க?‘ என்று அவரவர் பாணியில், மும்முரமாகக் கற்பனை செய்துகொண்டிருந் தது, தனிக்கதை.
முகம்மத் வஜீர் அலிகானிடம் பெண்ணை மீட்பது பற்றிய வழிமுறைகளை ஜமாத் ஆட்கள் சொன்னார்கள். காதுகொடுத்து அமைதியாகக் கூர்ந்துகேட்டார். நிதானம் கைகொடுத்திருந்தது.
அவருக்கென்றும் தனிப்பட்ட யோசனைகள் இருந்தன. இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாய்ப் பொருத்திப் பரிசீலித்துப் பார்த்தார். வெட்டுக்குத்தில், ஆள்கடத்தலில், பகை மையில், தனிமைப்படுத்தலில் என்று, அதற்கும் இதற்கும் எதுவும் பொருந்திப் போவ தாக இருக்கவில்லை. வெவ்வேறு திசைகளாக அவை இருந்தன. ஒத்தக்கருத்தாய் இல்லாது போனதும், லேசாக முறுவலித்துக் கொண்டார். பிறகு மெல்ல, என்னென்ன வெல்லாம் நடக்கலாம் என்று மற்றவர்கள் எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறாக, ‘அதெல்லாம் ஒண்ணும் செய்யவேணாம். போனதுபோனதாவே இருக்கட்டும். எம் பொண்ணு மௌத்தாயிட்டா. அதை மட்டும் ஜமாத்துல அறிவிப்பு செஞ்சுருங்க!‘ என்று சொன்னார்.
ஜமாத் பிரமித்துப் போனது.
பணம், செல்வாக்கு, எதையும் செய்வதற்கு ஆட்கள் என்று எல்லாமே இருந்தும் எந்தவகையான முடிவுக்கும் அவர் போகவில்லை. முகம்மத் வஜீர் அலிகானின் வைராக்கியம் அப்போதுதான் வெளிப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இத்தனைக்கும் மகள் அடுத்தப் பகுதி யில்தான் புருஷனுடன் குடியிருக்கிறாள். தன்பெயரை, அதே அர்த்தம் வரும்படி சௌபர் ணிகா என்று மாற்றிக்கொண்டாள்.
மகளைப் பார்ப்பதே பாவம் என்று முகம்மத் வஜீர் அலிகான் ஒதுங்கிக்கொண் டார். அந்தப்பகுதியில் வேலையிருந்தாலும் போவதைத் தவிர்த்துக்கொண்டார். மகளுக்கு கோவிலில் தாலிகட்டித் திருமணம் செய்துகொண்ட அந்தப் பையனை முன்னே பின்னே அவர் பார்த்தது கூட இல்லை.
பாவா மீது அளவுகடந்த பிரியம் கொண்டிருந்தும், இப்படி புறப்பட்டு வந்தது பற்றி, பின்னாளில் சௌகத்துன்னிஸாவுக்கு நிறையநிறைய வருத்தம் எழவே செய்தது. ஆனாலும் பாவாவின் முன்னால் போய்நின்று, அவரை மேலும்மேலும் சங்கடப்படுத்த வேண்டாமே என்று அவளும் அவரைப் பார்ப்பதை குற்றவுணர்வுடன் தவிர்த்துக் கொண்டிருந்தாள். தான் மௌத் தாகிவிட்டதாக பாவா செய்திருந்த அறிவிப்பு, அவளைக் குற்ற வுணர்வுக்குள் தள்ளியிருந்தது.
·
ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் முலாகத், இத்தனைநேரமும் முகம்மத் வஜீர் அலிகானை ஒருபெரும்கட்டுபோல பின்னிச் சுற்றிக்கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து மீளச்செய்திருந்தது. கசடுகளெல்லாம் அடித்துச்சென்ற பின்பான சுத்தம் அவருக்குள் இருந்தது. சுகந்தமும் பரவிக்கிடந்தது. தன்னை இலகுவாக உணர்ந் தார். பள்ளிவாசலின் உட்புறம் ஜெகஜோதியாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. திரும்பிய திசையெல்லாம் ஊர்ந்துகொண்டிருந்த பாம்புகளைத் தேடினார். ஒன்றையும் கண்ட டைய முடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. பயான் கேட்கக் கிளம்பும்போது இருந்த உற்சாகம், இப்போது மறுபடியும் வந்து தொற்றிக்கொண்டது. விலாசத்தைக் கொடுத்து விட்டு வீடு திரும்பினார்.
முகம்மத் வஜீர் அலிகான் வீட்டில், எல்லா நாட்களுமே சிறப்பான நாட்கள்தான். ஜும்ஆ அன்று மதியம் இன்னும் கூடுதல் இருக்கும். உளுவைமீன் அவருக்குப் பிடித்த மான ஒன்று. யானைக்கல் பாலத்தின் கீழே பானைப்பறி போடும் நங்கமுத்து எப்போது உளுவை விழுந்தாலும் அதை முகம்மத் வஜீர் அலிகானுக்கென்று எடுத்துவைத்து, ஆளனுப்பிவிடுவான். உளுவை மீனென்றால் அவரும் பேரம் பேசுவதில்லை. சொல்லும் விலைக்கும் அது மதிப்பில்லாதது என்பதை அவர் அறிவார். என்ன விலை சொன் னாலும் வாங்கிவிடுவது அவர் வழக்கமாக இருந்தது. உளுவைமீன் அவர் பாரியாள் ஆமீனாவின் கைகளுக்குக் கைக்கூடிவரும். சின்ன உள்ளியை அரிந்து, புளிபோடாமல் அவள் வைக்கும் மிட்டா சால்னா மஹல்லாவில் பிரசித்தம். சௌகத்துன்னிஸாவுக்கும் உளுவைமீன் பிடிக்கும். அவள் வீட்டில் இல்லாததால் கொஞ்ச நாட்கள் வரை அந்த மீனைத் தவிர்த்து வந்தனர். மறுபடியும் இப்போது புழக்கத்தில் இருந்தது.
இன்று காலையில் நங்கமுத்துவின் ஆள்வந்து சொன்னபோது, உடனே கிளம்பிப் போய்விட்டார். தங்கத்தை அரைத்துப் பூசியதுபோல கை பருமனில் தகதகத்துக் கொண் டிருந்தன, நான்கு மீன்கள். அதுவும் உயிரோடு. அவற்றின்மேல் காலை வெயில்பட்டு மேலும் ஜொலிக்கச் செய்தது. விராலும் குரவையும் மட்டுமே பிடித்து வெகுநேரம்வரை உயிருடன் இருக்கும். உளுவைமீன் கொஞ்சநேரம் தாங்காது. மென்மையானது. செத்து விரைத்துவிடும். ஆடோ… மாடோ… கோழியோ… அது செத்துவிட்டால் தின்னக்கூடாது. செத்ததைத் தின்பது ‘ஹராம்‘ என்று இஸ்லாத் தில் விலக்கப்பட்டுள்ளது. ஆனால், மீன் களுக்கு மட்டும் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுத்துச் சாப்பிட வேண்டுமென்பதில் விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. செத்தமீனை ஒரு முஸல்மான் தயக்கமில்லாமல் சமைத்து உண்ணலாம்.
கொண்டுபோயிருந்த எவர்சில்வர் தூக்குவாளியில் ஆற்றுத்தண்ணீர்விட்டு நான்கு உளுவைகளையும் அதில் போட்டுக்கொண்டுவந்தார்.
ஆமீனா, “உசுரோடயா… உளுவையா?…” என்று கேட்டுக்கேட்டு மாய்ந்து போனாள்.
பக்குவம் பார்த்து, சமமான விகிதத்தில் மசாலா கலந்து வேகவைத்ததில், பஞ்சு மிட்டாய்ப்போல தித்தி்ப்பாக இருந்தது, உளுவைமீன். ரசனையாய் அதன் முதுகுப் பாகத்தை அலுங்காமல் பிய்த்து வாயில்போட்டுச் சுவைத்தார். அவரது முகம் பார்த்து ஆமீனா ரசித்தாள்.
“உளுவைன்னா, அது உங்கைக்குதான் ருசி!” என்றார். சாப்பிடும்போது எப்போதுமே முகம்மத் வஜீர் அலிகானுக்கு ஆமினா பக்கத்தில் இருக்கவேண்டும். பிள்ளையில்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளிவிளையாண்ட கதையாக, மனைவிக்கு ஊட்டியெல்லாம் விடுவார்.
‘உளுவைன்னா, அது உங்கைக்குதான் ருசி‘ என்று அவர் சொன்னதும், ஆமீனா வின் முகம் மிளிர்ந்தது. மூக்கின் இடதுபக்கக் கல்மூக்குத்தியில் ஒளியொன்று பிறந்து, நிதானமாகத் தெறித்து மறைந்தது. அதைப் பார்த்துக்கொண்டே அடுத்தக் கவளத்தை உண்டுவிட்டு நிமிர்ந்தவர், ஆமீனாவின் முகம் வாடியிருப்பது கண்டு அதிர்ந்தார். “ஏலா… கொழம்பு நல்லாருக்குன்னுதானே சொன்னேன்!”
அவள் அடிபட்டக் குழந்தைபோல விதிர்த்து, விக்கிவிக்கி அழுதாள்.
அவள் அழுவதன் காரணம் அவருக்குத தெரியாமல் இல்லை. இருந்தாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
“ஏம்புள்ளக்கி உளுவைன்னா உசுரு!” என்றாள்.
“யாருக்கு… மௌத்தாப் போயிட்டாளே… அவளுக்கா?”
“………………………….”
“ஒனக்கு ஒத்தப்புள்ளதானே? அவளும் மௌத்தாயிட்டாளே.. அதுக்காக நாம சாப்புடாம இருக்கமுடியுமா? நீயும் நல்லா சாப்புடு!”
முகத்தைப் பொத்திக்கொண்டு எழுந்த ஆமீனா, உள்ளே போய்விட்டாள். கிண்ணத்தில் இருந்த குழம்பு அத்தனையையும்போட்டு திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டுத் தான் அவர் எழுந்தார். உள்ளேபோன ஆமீனா எச்சில் பாத்திரத்தை எடுக்கத் திரும்ப வெளியில் வரவில்லை.
சௌகத்துன்னிஸாவுக்கு எட்டு வயதிருக்கும்போது, முகம்மத் வஜீர் அலிகான் முதல் முறையாக அவளை மீன் மார்க்கெட்டுக்குக் கூட்டிப்போனார். பெரிய இரும்பு டபாராக்களிலும், அலுமினிய டபாராக்களிலும் உயிருள்ள மீன்கள் நீந்திக்கொண்டிருந் தன. சிமெண்ட் மேடைகளில் கூறுகட்டியும், கூறுகளில்லாமலும் வைக்கப்பட்டிருந்த மீன்களில் பெரும்பாலானவை உயிருள்ள வையாக இருந்தன. துள்ளியும் நழுவியும் அவை கீழேவிழுந்தன. தன் காலடியில் வந்துவிழுந்த மீனைக்கண்டு, “பாவா… சாப் (பாம்பு)” என்று பதறித்துள்ளினாள். அன்றிலிருந்து மீனைக் கண்டால் அவளுக்கு பயம் இருந்தது. ரொம்பநாள்வரை மீனைப் பாம்புஎன்றே சொல்லிவந்தாள். அவளை மடியில் உட்காரவைத்து மீன்குறித்த பயத்தைச் சொல்லிச்சொல்லிப் போக்கியது, அவர்தான்.
ஒருநாள் வேறு நல்ல மீன்கள் கிடைக்காததால், ஊளிமீன் வாங்கி வந்திருந்தார். அதைப் பார்த்து சௌகத்துன்னிஸா சொன்னாள். “மீனோட மண்டைய வெட்டி எடுத் துட்டா, அப்பறம் அது பாம்பா… மீனான்னு தெரியாதே!” என்று.
அன்றிலிருந்து ஊளிமீன் வாங்குவதை நிறுத்திவிட்டார். காலம் போகப்போக மீனை நுணுகி, முள் விலக்கி, ரசித்து சாப்பிட மகள் கற்றுக்கொண்டிருந்ததில், அவருக்கு பெருமை இருந்தது. அவளுக்குப் பிடித்தது, உளுவைமீன்.
பாவாவுக்கும் மகளுக்குமான உறவு இழைகள் ஒரேயடியாக அறுபட்டுப் போகு மென்று யாரும் நினைத்திருக்கவில்லை. அறுபடுமளவுக்கு அவள் நடந்துகொண்டதை முகம்மத் வஜீர் அலிகானும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் இந்தநிமிடம் வரை அவருக்குக் காயம் ஆறவில்லை. நொதித்தப் புண்ணாக அதை நினைத்திருந்தார்.
சாப்பிட்டக் கையுடன் கட்டிலில் சாய்ந்தார். ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் ஜும்ஆ பயானும் அதற்கு முந்தையதும் பிந்தையதுமான நிகழ்ச்சிகள் கோர்வையாக அவருக்குள் வரிசைக்கட்டி வந்தன. பயானில் பேசப்பட்ட, ‘பிறரின் தவறு களை மறந்து மன்னிக்கும் பக்குவம் முஸல்மானுக்கு இருக்கவேண்டும். அப்படி மன்னிப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்‘ என்ற வாசகங்கள், அவரைப் பின்னியிருந் தன. அல்லாஹ்வே நேரிடையாக அவரிடம் பேசுவதுபோலவும் இருந்தது. மயக்கத்தில் கண்கள் சொக்கின. பயான்செய்த, மகள் சௌகத்துன்னிஸாவின் யௌவன முகம் கொண்ட ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மான், “சாப்ட்டாச்சா?” என்று கேட்டபடி கட்டிலுக்கு எதிரே கிடந்த சோபாவில் வந்தமர்ந்தார்.
முகம்மது வஜுர்அலிகான், அவர் வருவாரென்று எதிர்பார்க்கவில்லை. வருவ தாகச் சொல்லிவிட்டு வராமல் இருந்துவிடுவார் என்றே நினைத்திருந்தார். அதனால் அவரின் இந்தத் திடீர் வருகை, தடுமாற்றத்தைத் தந்திருந்தது. “வாங்க” என்று பதற்றத் துடன் அழைத்தார். அவர் உள்ளே நுழைந்த பின்பு, வீட்டுக்குள் ஒளி பரவியதுபோல பேரண்ட வெளிச்சம் வந்திருந்தது. மகள் இந்தவீட்டில் இருந்த காலத்தில் இதுபோலான ஒளிஒன்று நிரந்தரமாக இருந்தது. விட்டிலிருந்து போன மகள் அதையும் எடுத்துக் கொண்டு போய்விட்டதாக அவ்வப்போது நினைப்பதுண்டு. அதை அவரின் வருகை உறுதிப்படுத்தியது.
இருவருடைய பேச்சும் பாம்புகளைப்போல எங்கெங்கோ நீண்டுபோனது. அவரிடம் பேசுவது சௌகத்துன்னிஸாவிடம் பேசுவதைப்போலவே உணர்ந்தார். அன்பும் பாசமும் கலந்து பேசப்பேச, ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மான் சௌகத்துன்னி ஸாவாகவே ஆகிப்போயிருந்தார்.
எதிரே சௌகத்துன்னிஸா உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், முகம்மது வஜுர் அலிகான் அமைதியாகிப்போனார். பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
அவரது அமைதியைக் கலைப்பதுபோலவும், தான் செய்த தவறுக்கு வருந்துவது போலவும் அவள் நடந்துகொண்டாள். “எங்கே நீங்க ஒத்துக்க மாட்டீங்களோன்னுதான் பாவா, நான் அப்டியொரு முடிவுக்குப் போனேன். தப்பு எம்மேலதான்னு இப்ப நான் உணருறேன் பாவா” சொல்லிக்கொண்டே அவள், அவர் மடிமேல் ஏறி உட்கார்ந்து கொண்டாள். எந்தவயதிலும் பாவா வுக்கு அவள் மகள்தான் என்பதை உணர்த்துவது போல இருந்தது, அவள் செய்கை.
அவர் பதில் ஏதும் பேசவில்லையே தவிர, மகளைக் கீழிறங்கச் சொல்ல வில்லை. இறக்கியும் விடவில்லை. மௌனமாகவே இருந்தார். வீட்டுக்கு வெளியே அவருக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அதை வெளியேயே வைத்துவிட்டு வந்துவிடு வார். வெளி்ப்பிரச்சனையை அவர் வீட்டுக்குள் கொண்டுவருவது இல்லை. அதுபோலத் தான் வீட்டுப்பிரச்சனையை அவர் வெளியில் கொண்டுபோகாததும். அவருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதை சௌகத்துன்னிஸா நொடிப்பொழுதில் உணர்ந்துகொள்வாள். அவர் மௌனமாக இருக்கும் தருணங்கள், வெளியில் ஏதோ பிரச்சனை அல்லது அவர் கோபமாக இருக்கிறார், இல்லையென்றால் இந்தநிகழ்வு அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும். அது, அவளுக்குத் தெரியும்.
“நான் கௌம்பிப்போன அன்னிக்கு ஒங்கக்கிட்டே பேசலாம்னு இருந்தேன் பாவா. நீங்க வேற ஏதோ கோபத்துல இருந்தீங்க. அதான் நான் ஒங்கக்கிட்ட சொல்லாமப் போய்ட்டேன்”.
பாவா பதிலேதும் பேசாமல் தொடர்ந்து அமைதியாக இருந்ததால், அரைமனதுடன் கீழிறங்கி எதிரே கிடந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டாள்.
“வஜீர்பாய்க்கு இது ஓய்வுநேரம்போல. அதுதெரியாம நான் வந்துட்டேன். அப்புற மாப் பாக்கலாம்” ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானி சோபாவிலிருந்து எழுந்து கொண்டார். “போய்ட்டு வாரேன்” என்றுவிட்டுக் கிளம்பினார்.
அதைக்கேட்டு, அமைதியாகத் தலையாட்டினார். ஆனாலும் அவருக்குள், மகளும் ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியும் வேறுவேறு என்று பிரித்துப் பார்க்க முடியாதபடிக்கு இரண்டுபேரும் ஒருவருள் ஒருவராய் கலந்திருந்தார்கள். வாசலைத் தாண்டி ரோட்டில் இறங்கி அவர் போகும்போது, மகள் சௌகத்துன்னிஸா போவது போலவே இருந்தது, துள்ளலான அவரது நடை.
அவள் கீழிறங்கிப்போனக் கொஞ்சநேரத்தில் யார் மூலமோ, ஸ்கூட்டியில்போன சௌகத்துன்னிஸா மணல் லாரி மோதி அந்தஇடத்திலேயே மூளை வெளித்தள்ளி இறந்துபோனதாக தகவல் வந்தது. அதைக்கேட்டதும், முகம்மது வஜீர் அலிகான் நிலை குலைந்து போய்விட்டார்.
பெற்றவர். தோளில் சுமந்துதிரிந்தவர். நெஞ்சில்போட்டுத் தாலாட்டியவர். எல்லா வற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தவர். மகளின் மரணச்செய்தி அவரைத் தூக்கிப் போட்டு மிதித்துவிட்டது. சிலநிமிடங்களுக்குமுன், தன் மடியில் உரிமையுடன் ஏறி உட்கார்ந்து பேசியவளிடம்கூட முகம்கொடுத்துப் பேசவில்லையே என்று நொந்து கொண்டார். இதயம், “என்ன மனுஷன் நீ?” என்று எகிறித் துள்ளியது. மனசுகிடந்து பரிதவித்தது. இத்தனை ஆண்டுகளாக அவர் கொண்டிருந்த வைராக்கியம் சுக்குநூறாகத் தகர்ந்தது. அடிவயிற்றிலிருந்து, “பேட்டி(மகளே) சௌகத்மா…!” என்று அலறினார்.
உடம்பின் சதை அத்தனையும் ஒருசேர ஆடி, அவர் கால்களுக்கு அசுரபலம் வந்து சேர்ந்துகொண்டது. யாரையும் பொருட்படுத்தவில்லை. மற்றவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வயதுமறந்து ஓடினார்.
அவரைப் பின்தொடர்ந்து மஹல்லா ஓடியது.
பெரியாஸ்பத்திரியின் பிணவறைக்குள் சடலம் கிடந்தது.
அறுத்துக் கூறுபோடும் டாக்டர் இன்னும் வரவில்லை.
தனது நீண்டமௌனத்துக்கு மன்னிப்புகேட்டு, மகளின் முகத்தில்… நெற்றியில்… கன்னத்தில் முத்தமிட வேண்டும் போலிருந்தது. மகள் பிரிந்துபோன ஏக்கத்தை ஒட்டு மொத்தமாக முத்தமிட்டுத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தவியாய்த் தவித்தார், முகம்மத் வஜீர் அலிகான்.
பிணவறையின் உதவியாளன் யாரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டான். “போங்க… போங்க..” என்று விரட்டியடித்தான். அன்றாடம் துயரங்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்தவன். மனம் மரத்தவன்.
இறுக்கமான அந்த அறையின் கதவுக்கு அப்பால் நிற்பதைக் காட்டிலும் துயரம் வேறெதுவும் இருக்கமுடியாத அளவுக்கு, நிழல் கனத்துக்கிடந்தது. இன்று ஜும்ஆ தொழுகையின்போது, பள்ளிவாசல் முழுவதையும் கவ்விப்பிடித்திருந்த மாயத்தின் சாயல் இங்கும் இருப்பது அவருக்குத் தெரிகிறது. ஈரமும் பிசுபிசுப்பானதுமான இழை களுடன் துர்நாற்றமும் சேர்ந்தடித்தது.
உடைந்திருந்த சன்னல் கண்ணாடி வழியாக, மேடைமீது கிடத்தப்பட்டிருக்கும் சடலத்தில், மண்டை பிளந்து கசிந்த ரத்தம் முகத்தில் காய்ந்துகிடப்பது தெரிந்தது. அதன் மீது ஒரு ஈ. உட்கார்வதும் எழுவதுமாகப் பறந்து அலைந்தது. ஈ மொய்க்காமல் தன் மகளின் உடலைப் பாதுகாக்க வேண்டுமென்று அவர் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. ‘ஒரேமகள்… ஒரேமகள்…‘ என்று நோகாமல் வளர்த்தது, நினைவில் அலை புரண்டது.
அப்போது யாரோ ஒருவர், “சௌபியோட புருஷன்” என்று ஒருவனை அறிமுகம் செய்துவைத்தார்.
முன்னேபின்னே பார்த்தறியாத அந்த வாலிபனைக் கட்டிப்பிடித்து, நெஞ்சில் சாய்ந்துக் கதறித் துடித்துவிட்டார். கூட்டம் துக்கித்து நின்றது.
துயரத்தைக் கொட்டுவதற்கு யார் எவரென்ற கணக்கெல்லாம் யாரிடமும் இருக்கவில்லை. யாரும் யாரையும் கட்டிப்பிடித்துத் தேம்பித்தேம்பி அழுதார்கள். அழுது ஓய்ந்த முகம்மத் வஜீர் அலிகான், அந்தவாலிபனின் கைகளைப் பிடித்துக்கொண்டார். கேவலுடன், “அய்யா… நீ நல்லாருப்பே. உசுரோட கொண்டுபோன எம்பொண்ணை மய்யத்தாவாச்சும் என்ட்ட திரும்பத் தந்துருய்யா. ஒனக்குப் புண்ணியமாப்போகும். நிக்காஹ்தான் என்னால செஞ்சுபாக்க முடியல. அவ கபர்க்குழியவாச்சும் பாத்துக் கறேன்!” கலங்கியக் குரலில் கெஞ்சினார். இதுபோலான ஒருசோகம் மஹல்லாவில் யாருக்கும் நேர்ந்ததில்லை.
சுற்றியிருந்தவர்களெல்லாம் சௌகத்துன்னிஸா மீது, அவர் கொண்டிருந்த அன்பு குறித்து சிலாகித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
சிலாகிப்பில், ‘சௌபியோட புருஷன்‘ கதறத்துவங்கிவிட்டான். இழப்பின் சோகம். பாதிவழியிலேயே முடிந்த ஆட்டம். நினைவுகளைத் தாண்டி நனவாக்க முடியாதக் கட்டம். ஒன்றிலொன்றாய்ப் பிணைந்து கிடந்தது அறுந்துபோன ஆதங்கம்.
“அவ இல்லாத ஒலகம் எனக்கில்லையா. நீங்களே ஒங்கமகப் பொணத்தைக் கொண்டு போயிருங்க. என் நெஞ்சுல இருக்குற அவள, என்னால தீக்கு திங்கக்குடுக்க முடியாது!”. தாடிக் காரரின் கைகளைப் பிடித்துகொண்டு மண்டியிட்டு அழுதான்.
டாக்டர் வந்து அறுத்துக் கூறுபோட்டுக்கொடுத்த உடலை வாங்கியபோது, அவரையும் அறியாமல், “நாரே தக்பீர்” என்று குரல் எழும்பியது. பிணத்தை கொண்டு செல்ல அமர்த்தப்பட்ட வண்டியைத் தவிர்த்துவிட்டு, தானே அந்த உடலைப் பொட்டல மாக இரண்டு கைகளிலும் ஏந்தித் தூக்கிச்சுமந்து மஹல்லா நோக்கி நடந்தார். நடை யில் வெற்றிபெற்றுத் திரும்பும் வீரனின் மிடுக்கு இருந்தது. ஜமாத் ஆட்கள் பின்னால் ஓடிவரவேண்டியதாக இருந்தது. தொங்குஓட்டத்தில் தொடர்ந்து வந்தார்கள். அவர் சடலத்தைக் கையில் ஏந்திக்கொண்டு நடப்பதை ரோட்டில் போவோர் வருவோர் நின்று வேடிக்கைப் பார்த்தார்கள்.
பிணவறையிலிருந்து மஹல்லா நோக்கி நடந்த அவர்களை எதிர்கொண்டு, பள்ளிவாசலைக் கூட்டிப்பெருக்கும் சின்ன முஅத்தின் யாரோ அவனைப் பிடறியில் கைவைத்துத் தள்ளியதுபோல கடுகிவந்தான் நீண்டதூரம் ஓடிவந்ததில் வியர்த்தது. மூச்சு வாங்கினான். கூட்டம் அவனைப் பார்த்ததும் தயங்கி நின்றது. ஜமாத் தலைவரி டம் திக்கலும் திணறலுமாக அவன் சொன்னான். “நம்ம பள்ளிவாசல் நம்பருக்கு உத்பல் நகர்லருந்து போன் வந்துச்சு. அந்த ஜமாத்காரங்க பேசுனாங்க. மொதல்ல ஒங்களுக்குப் போன் போட்டாங்களாம். நாட் ரீச்சபிள்னு வந்துச்சாம். பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணி வாங்கிறணுமாம். லாரிமோதி செத்ததுன்னு டெத் சர்டிபிகேட்டும் வாங்கிறணு மாம். அவங்க இங்கே வந்துருவாங்களாம். வந்து, நம்ம கபரஸ்தான்லயே தபன் (அடக்கம்) பண்ணிக்கிறாங்களாம். புறப்பட்டுட்டதாச் சொன்னாங்க. ஒங்களயும் செல் நம்பர்க்குப் பேசச் சொன்னாங்க.”
கூட்டம் அமைதியாக இருந்தது.
“எத்தன இடத்துக்குப் போனவரு. இங்கே வந்து மௌத்தாகணும்னு இருக்கு. சரி. நம்ம கபரஸ்தான்ல நம்ம ஜமாத்தைச் சேராத ஆளுகளுக்கு இடம் குடுப்பாங்களா என்ன?” யாரோ குசும்புடன் கேட்டார்கள்.
“இவரு பயான் செய்றதுல பெரிய ஆளுல்ல. அதுனாலத் தருவாங்க. இன்னிக்கு நம்ம கபரஸ்தானுக்கு இது புதுவரவு!” இன்னொரு குசும்புக்காரன் பதில் சொன்னான்.“இவரு பயான் செய்றதுல பெரிய ஆளுல்ல. அதுனாலத் தருவாங்க. இன்னிக்கு நம்ம கபரஸ்தானுக்கு இது புதுவரவு!” இன்னொரு குசும்புக்காரன் பதில் சொன்னான்.“இவரு பயான் செய்றதுல பெரிய ஆளுல்ல. அதுனாலத் தருவாங்க. இன்னிக்கு நம்ம கபரஸ்தானுக்கு இது புதுவரவு!” இன்னொரு குசும்புக்காரன் பதில் சொன்னான்.
மகள் சௌகத்துன்னிஸாவின் முகச்சாயல்கொண்ட ஹஜரத் பிர்லோடி தாயம் கான் ரஹ்மானியின் உடலசைவும், முலாகத்தின்போது மகள் சௌகத்துன்னிஸாவைக் கட்டித்தழுவுவதுபோல அவருக்குள் எழுந்த உணர்வும் மறுபடியும் ஒன்றன்பின் ஒன்றாய், நினைவுக்குள் வந்துபோனது. மகள் குடியிருக்கும் பக்கத்துப் பகுதிப்போய், அவளுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்ற நினைப்பு ஓடியது.

நடையைத் தொடர்ந்த முகம்மத் வஜீர் அலிகான், தன் கையில் மகள் சடலத்தைப்போல ஏந்திக்கொண்டிருந்த ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானின் சடலத்துக்குள்ளிருந்து, ஒருகட்டுப் பாம்புகள் நெளிவதை உணர்ந்தார்.

– 6th May 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *