சுதா டீச்சர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 7,975 
 

செடி, கொடி மரங்கள் என்றால் சின்ன வயதில் இருந்தே எனக்கு அப்படியொரு பைத்தியம். எங்கேனும் வாசல் இடுக்கில் வளர்ந்துவரும் ஒற்றைப் புல்கூட என்னை வசீகரித்துவிடும். பெரிய பெரிய தோட்டங்களைப் பார்த்துவிட்டால், பசி தாகம்கூட எனக்குத் தெரியாது. வெறும் புல்வெளியில் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் அதன் பச்சைய வாசனையை நுகர்ந்தபடி விருப்பத்துடன் அமர்ந்திருப்பேன்.

மதுரையில் ஒரு எலிமென்டரி ஸ்கூலில் நான் படித்தபோது வாரத்தில் மூன்று பிரியட் தோட்டக்கலை வகுப்பு என்று ஒன்று உண்டு. அந்த மூன்று பிரியட்களும் கடைசி பிரியட். வகுப்புப் பையன்கள் அனைவரும் அவர்களுக்கு அலாட் செய்யப்பட்டிருக்கும் தோட்டத்திற்குப் போய், மண்ணைக் குத்திக் கிளற வேண்டும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களை எடுக்க வேண்டும். இந்தத் தோட்ட வேலைகளை நாங்கள் அனைவரும் நிஜமாகவே போட்டி போட்டுக்கொண்டுதான் ஆர்வத்துடன் செய்வோம். “இந்த ஆர்வத்தை உங்கள் படிப்பிலும் காட்டுங்கடா” என்று க்ளாஸ் டீச்சர் எங்களைக் கிண்டல் பண்ணுவார்.

பள்ளியின் தோட்டக்கலை வகுப்பிற்கு சுதா டீச்சர்தான் பொறுப்பு. சுதா டீச்சர் அந்தக் காலத்திலேயே ஹார்ட்டிகல்ச்சர் படித்திருந்தார். சிவப்பாக, சிரித்தமுகத்துடன் அழகாக இருப்பார். ‘பூவே பூச்சூடவா’ நதியா மாதிரியான தோற்றம். சுதா டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தோட்டத்தை நல்லவிதமாக பராமரிக்க வாரத்தில் எப்படி மூன்று பிரியட்கள் போதும்? அதுவும் சுதா டீச்சர் பொறுப்பில் இருக்கும்போது?

நான்தான் க்ளாஸ் மானிட்டர் என்பதாலும், தோட்டத்தில் எனக்கு நிறைய ஆர்வம் இருப்பதாலும், சுதா டீச்சரை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்பதாலும் – நான் தினமும் காலையிலேயே சில மாணவர்களுடன் தோட்டத்தில் ஒரு அன்-அபீஷியல் க்ளாஸுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்.

பள்ளிக்கு வந்ததும் தினமும் காலையில் சுதா டீச்சர் முகத்தில்தான் விழிப்பேன். அந்தத் தோட்டத்துப் பச்சைகளுக்கு நடுவே காலை வேளையில் சுதா டீச்சர் ஒரு மலர்ந்த புதிய ரோஜாபோல் புத்துணர்வுடன் காணப்படுவாள். எனக்கு தினமும் காலையில் டீச்சரைப் பார்க்கும்போது கிளுகிளுப்பாக இருக்கும். மனசு படபடக்கும்.

சுதா டீச்சர் ஒரு சின்னவேலை சொல்லிவிட்டால் கூடப்போதும், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு நாங்கள் முடித்துக் கொடுப்போம். நான் க்ளாஸ் மானிட்டர் என்பதால் நான்தான் சுதா டீச்சருடன் அதிகமாக ஒட்டி உறவாடுவேன்.

எனக்கு அப்போது வயது பதின்மூன்று. டீன்ஏஜ் ஆரம்பம். என் வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது என்றால், அது என் சுதா டீச்சர் மீதுதான். நாட்கள் செல்லச்செல்ல எனக்கு சுதா டீச்சர் மீது ஈர்ப்பையும் தாண்டி ஒரு பொசஸிவ்னஸ் வந்துவிட்டது. நான் மட்டுமே டீச்சருடன் அதிகநேரம் இருக்க வேண்டும், நான் சொல்வதைத்தான் டீச்சர் கேட்க வேண்டும் என்று டாமினேட் செய்ய ஆரம்பித்தேன்.

சுதா டீச்சருக்காகவே தோட்டத்தின் வளர்ச்சியில், அதன் செழிப்பில் அதிக அக்கறை காட்டினேன். எங்களின் ஒன்றுபட்ட உழைப்பில் நிஜமாகவே தோட்டம் கத்தரி, வெண்டை, அவரை, புடலை, தக்காளி என செழித்து வளர்ந்தது. . பச்சைப் பாம்பு மாதிரி நீண்டு தொங்கிக் கிடக்கிற புடலங்காய்களைப் பார்த்தாலே எனக்கு சந்தோஷமாக இருக்கும். அவைகளை அன்புடன் தடவிக்கொடுத்து பிறகு என் உள்ளங்கையை முகர்ந்து பார்ப்பேன். புடலங்காய் வாசனை வித்தியாசமாக இருக்கும். எல்லாக் காய்கனிகளையும் அது வளரும்போது போய்ப் போய்ப் பார்த்து அதன் அருகிலேயே ரொம்பநேரம் நிற்பேன். அவைகளுடன் மானசீகமாகப் பேசுவேன்.

காய்களெல்லாம் பறிக்க வேண்டிய பக்குவத்திற்கு வந்ததும், சுதா டீச்சரிடம் சொல்லிப் பெருமைப் படுவேன். டீச்சர் தன் வீட்டிலிருந்து பெரிய பெரிய சணற் பைகளை கொண்டு வந்துவிடுவார். டீச்சரின் மேற்பார்வையில் நாங்கள் அனைவரும் காய்கறிகளை பறித்து அவருடைய பைகளில் திணிப்போம். எனக்கும் தொட்டுத்தொட்டு காய்கறிகளை பறிப்பதற்கு குதூகலமாக இருக்கும்.

பைகள் நிரம்பியதும் அந்தப் பைகளை மூச்சிரைக்க சிரமத்துடன் பத்திரமாக தூக்கிக்கொண்டு சுதா டீச்சருடன் அவருடைய வீட்டிற்கு செல்வேன். அவ்விதம் டீச்சருடன் அவர் வீட்டுக்கு செல்கையில், நான் டீச்சரை மிகவும் நெருங்கிவிட்ட பெருமையும், இறுமாப்பும் எனக்குள் தெறிக்கும்.

ஓடி, ஓடி தோட்டத்தில் வேலை பார்த்த எனக்கும், மற்ற பையன்களுக்கும் சுதா டீச்சர் ஒரு பிஞ்சுக் காயைக்கூட தரமாட்டார். எனக்கு இது உள்ளுக்குள் மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். இருப்பினும் என் சுதா டீச்சருக்குக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருந்தேன். இம்மாதிரி அடிக்கடி சுதா டீச்சருக்காக காய்கறிகள் சுமந்தேன்.

அந்தக் காலத்தில் மதுரையின் அழகே அதன் தெருக்களில் வெள்ளை வெள்ளையாக பவனி வந்த டிவிஎஸ் டவுன் பஸ்கள்தான். அதிலும் அந்த டைகர் லைலேண்டின் பிரம்மாண்டமும், அழகும் காணக் கண்கோடி வேண்டும். அதற்கு இரண்டு கண்டக்டர்கள் உண்டு. நானும் சுதா டீச்சரும் அதில் அடிக்கடி அருகருகே அமர்ந்துகொண்டு பயணித்திருக்கிறோம். அது ஒரு சுகானுபவம்.

அன்று ஒருநாள் வைகுண்டஏகாதசி. நானும் டீச்சரும் டைகர் லைலேண்டில் பயணித்து பெருமாள் கோவிலுக்குப் போனோம். ஏராளமான கூட்டம். வந்திருந்தவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப் பட்டது. கோவிலை கவனித்துக்கொள்ளும் ஒரு வெள்ளைத் தாடிக்காரர் ஓடிவந்து சுதா டீச்சரை நலம் விசாரித்தார். எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்கவில்லை. நானும் டீச்சரும் தரிசனம் முடிந்து கிளம்பும்போது, அந்தத் தாடிக்காரன் டீச்சரிடம் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை நிறைய லட்டுகளை கொடுத்து வீட்டிற்கு எடுத்துப் போகச்சொன்னான். அதில் கிட்டதட்ட நூறு லட்டுகள் இருக்கும். பக்தர்கள் ஆளுக்கு ஒரு லட்டுக்கே போட்டிபோட்டு கால் கடுக்க க்யூவில் நின்றபோது, இந்தத் தாடிக்காரன் சுதா டீச்சருக்கு மட்டும் எப்படி இவ்வளவு லட்டுக்களை…..?

அப்போதுதான் எனக்கு உரைத்தது. டீச்சர் சிகப்புத் தோலில் அழகாக, அம்சமாக இருக்கிறாள். இந்த அழகுதான் அந்தத் தாடிக்காரனை அடித்துப் போட்டிருக்கிறது. நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும், என்றைக்கும் சிவப்புத் தோல் அழகிய பெண்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசுதான்.

‘டீச்சர் தனியாகத்தானே இருக்கிறார்? அவருக்கு எதற்கு இவ்வளவு லட்டுகள்?’ டீச்சர் அவைகளை வீட்டிற்கு வரும் வேலைக்காரி, பால்காரி இஸ்திரிக்காரன் என்று போகிற வருகிறவர்களிடம் வாரி வாரிக் கொடுத்தார்.

அப்போதுதான் எனக்கு சட்டென இன்னொன்றும் தோன்றியது. ‘பள்ளித் தோட்டத்தில் பயிரிட்டு, பறித்து நான் தூக்கிவரும் இவ்வளவு காய்கறிகளையும் அவர் என்னதான் செய்வார்?’ என்று யோசித்தேன். அதற்காகன விடை எனக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து கிடைத்தது.

அன்றும் நிறைய காய்கறிகளை சுமந்துகொண்டு சுதா டீச்சருடன் பெருமையாக அவருடைய வீட்டிற்குச் சென்றேன்.

டீச்சரின் வீட்டிற்கு அவருடைய உறவினன் ஒருத்தன் வந்து காத்திருந்தான். பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தான். டீச்சரைத் தொட்டு தொட்டுப் பேசினான். எனக்கு அவனைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அவன் டீச்சரின் அத்தை மகன் என்பதைப் புரிந்து கொண்டேன்.

பேச்சின் நடுவில் டீச்சர் என்னிடம் “கண்ணா, அந்தக் காய்கறிகளை மனோகர் அண்ணன்கிட்ட கொடு.” என்றாள்.

எரிச்சலுடன் நான் தூக்கிவந்த பைகளை மனோகரிடம் நீட்ட, அவன் பைகளைப் பிரித்துப் பார்த்து, “சுதா போனதடவை நீ கொடுத்த புடலங்காய்கள் ரொம்ப டேஸ்டியாக இருந்தது…..இந்தத் தடவை புடலையே இல்லையே….” என்றான்.

“சரி இப்ப இருக்கிறதை நீ எடுத்திட்டுப் போ, அடுத்ததடவை பார்க்கலாம்.”

“கண்ணா, காய்கறிப் பையை எடுத்துகிட்டு மனோகர் அண்ணனை பஸ்டாண்டில் கொண்டுபோய் விட்டுட்டு அப்புறமா நீ வீட்டுக்குப் போ” சுதாடீச்சர் என்னிடம் சொன்னதும், நான் மிகவும் கடுப்பாகிவிட்டேன்.

“இல்ல டீச்சர்….எங்க அப்பா என்னைத் தேடுவாரு….நான் வீட்டுக்குப் போகணும்” என்று முறித்துக்கொண்டு உடனே கிளம்பி விட்டேன்.

அந்த ஷணத்தில் எனக்குள் ஏதோ ஒன்று இடம் பெயர்ந்தது. கேவலம் இந்தத் தடியன் மனோகருக்காத்தான் நாங்கள் இத்தனை மாதங்கள் உழைத்திருக்கிறோம்…. சுதா டீச்சரை நினைத்தாலே வெறுப்பும் கோபமும் எனக்குள் மூண்டது.

அடுத்த தடவை காய்கறிகள் வளர்ந்து முற்றியதும், அதற்காக உழைத்த மாணவர்களை காலையிலேயே சீக்கிரம் பையுடன் வரச்சொல்லி, காய்கறிகளை சமமாகப் பிரித்து, எல்லாவற்றையும் அவர்களின் வீட்டிற்கு எடுத்துப் போகச் சொன்னேன். நான் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு க்ளாஸ் மானிட்டராக இதுகாறும் நான் செய்த அராஜகத்துக்கு ஒரு தண்டனையை எனக்கு நானே விதித்துக் கொண்டேன்.
.
காய்கறிகளை பறித்து மாணவர்களுக்கே பிரித்து கொடுத்ததை தெரிந்துகொண்ட சுதா டீச்சர் எனக்கு எதிராக ஏதேனும் செய்யக்கூடும் என்பதால், நானே முந்திக்கொண்டு, மானிட்டர் என்கிற முறையில் முன் அனுமதி பெற்று பள்ளியின் முதல்வர் அல்போன்ஸ் சாமுவல் என்பவரை சந்தித்தேன் அவரிடம், அடுத்தமுறை காய்கறிகள் பறிக்கப்படும்போது முதல்வர் என்கிற முறையில் அவர் சீக்கிரம் பள்ளிக்கு வந்து மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்கிற வேண்டுகோளை நேரில் வைத்தேன். அவரும் என் அழைப்பை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார்.

அல்போன்ஸ் சாமுவல் மிகவும் அமைதியானவர். அதிர்ந்து பேசமாட்டார். பள்ளிக்கு உள்ளேயே அமைந்திருக்கும் சர்ச்சில்தான் அடிக்கடி காணப்படுவார். எதற்கெடுத்தாலும் “ஜீசஸ், ஜீசஸ்” என்பார்.

அவர் கூடிய சீக்கிரமே பாதிரியாராகப் போகிறார் என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். அவர் பெயரளவிற்குத்தான் முதல்வர். உதவி முதல்வர்தான் எல்லா முடிவுகளையும் எடுத்து அறிவிப்பார். அதிகாரம் செலுத்துவார்.

ஆனால் என்னை அறியாமலேயே, ஒரு ஆரம்பத்திற்கு அன்று வித்திட்டுவிட்டேன் என்பதை வெகு காலத்திற்குப் பிறகுதான் நான் உணர்ந்து கொண்டேன்.

அடுத்ததடவை காய்கறிகள் பறிக்கும்போது தலைமையாசிரியர் மேற்பார்வையில் அதை ஒரு சிறிய விழாவாக நடத்தி, காய்கறிகளை மாணவர்களே சமமாகப் பிரித்து எடுத்துச் செல்லும் முறையை அபிஷியலாக பிரகடனப் படுத்திவிட்டேன். அதனால் சுதா டீச்சரை ஓரங்கட்டிவிட்ட பெருமை எனக்குள். அந்தச் சிறிய விழாவிற்கு பள்ளியின் தோட்டக்கலை டீச்சர் என்கிற முறையில் சுதாடீச்சரும் வந்திருந்தார்.

அதன்பிறகு ரெகுலராக மாணவர்களே காய்கறிகளைப் பறித்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும் முறை தொடர்ந்தது. அடுத்த ஆறு மாதத்தில் நான் க்ளாஸ் மானிட்டரிலிருந்து உயர்ந்து அந்த எலிமென்டரி பள்ளிக்கே மானிட்டராக உயர்த்தப் பட்டேன்.

பதின்மூன்று வயதில், ஒரு எலிமென்டரி ஸ்கூலில் நான் புகழின் உச்சியில் திளைத்தபோது, அரசு உத்தியோகத்தில் இருந்த என் அப்பாவுக்கு பாளையங்கோட்டைக்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது.

அதன்பிறகு எட்டாவது பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் சேர்ந்து படித்தேன். அந்த அனுபவங்களை ‘பள்ளிக்கூடம்’ என்கிற எனது அடுத்த கதையில் எழுதியுள்ளேன்.

நான் பத்தாவது படிக்கும்போது ஒருமுறை மதுரைக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது நான் படித்த பள்ளியின் உயர் நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடரும், ரகுராமனைத் தேடிப்போய் சந்தித்தேன்.

“தோட்டமெல்லாம் எப்படியிருக்கு, சுதாடீச்சர் எப்படியிருக்காங்க?”

“ஓ….ஆமா உனக்கு விஷயமே தெரியாதுல்ல… இப்ப எல்லாக் காய்கறிகளும் பள்ளியின் கரஸ்பாண்டென்ட் சுதாமேடம் வீட்டுக்குத்தான் போகுது. அவங்கதான் இப்ப எல்லாமே..”

“புரியும்படியா சொல்லுடா …..”

“மவனே, நீதான அவங்கள சாமுவேல் சாரோட கோத்துவிட்ட…?”

“என்னது கோத்துவிட்டேனா?”

“சுதாமேடம் சாமுவேல் சார காதலிச்சு போன வருஷம்தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க… இப்ப அவங்கதான் மோஸ்ட் பவர்புல். நீதான எலிமென்டரி ஸ்கூல்ல காய்கறிகளைப் பறிக்கும் விழாவுல சாமுவல் சாருக்கு சுதாவ முதல்ல அறிமுகம் செஞ்சு வச்ச? இப்ப சார் சுதாவையே தனக்காக பறிச்சிகிட்டாரு” என்று சொல்லி பெரிதாகச் சிரித்தான்.

எனக்கு சிரிப்பு வரவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *