சிவத்தப்புள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,538 
 

சிவத்தப் புள்ளையூர் –

அந்த ஊர்க்கு முன்பு இருந்த பெயர் மறைந்து போகும் படியாக, அந்த ஊர்காரர்களே மறந்து விடும்படி, இந்தப் பெயர் நிலைபெற்று அநேக வருடங்கள் ஆகிவிட்டன.

அந்த ஊருக்கு இப்படி ஒரு பெயர் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த ரஞ்சிதம் கதை முடிந்தும் சில வருடங்கள் ஓடி விட்டன.

சில விசித்திரமான பெயர்கள் எத்தனை காலமானாலும் மாறுவதில்லை. “பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்தவள் ஓடை” என்ற பெயர் ஒரு சிற்றோடைக்கு நிலைத்து, கால காலமாக வழங்கி வருவது போல. என்றைக்கோ, எவளோ ஒருத்தி, ஓடும் நீரில் மிதந்து வந்த பலாப்பழத்தை எடுக்கும் ஆசையோடு, கைப்பிள்ளையைக் கரைமீது கிடத்தி விட்டு பழத்தைத்துரத்தி ஒட, – அவள் அதை எடுத்துத் திரும்பி வருவதற்குள் பிள்ளை உருண்டு ஒடையில் விழுந்து நீரோடு செல்ல – அவள் பழத்தைக் கரையில் வைத்து விட்டு பிள்ளையைப் பிடிக்க ஒட – பழமும் புரண்டு புரண்டு நீரில் அடிபட்டுச் செல்ல – முடிவில் பிள்ளையும் போய் பழமும் போய், அவளது செயலின் அழியாத நினைவாய் அந்த ஒடை ஒரு பெயரை தாங்கிக்கொண்டு நெளிகிறது இன்றும்.

அதைப் போன்றது தான் ரஞ்சிதத்தின் கதையும்.

ரஞ்சிதமும் ராணியும் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டக்காரிகளாக இருந்தார்கள். அது ஒரு காலம். கரகம் ஆடுவது, சும்மா குதித்துச் சுற்றிச் சுழன்றாடுவது என்று ஒரு தொழிலை மேற்கொண்டிருந்தார்கள். கோயில்களில் கொடை, திருவிழா என வந்தால், இவர்களுக்கு விசேஷமான கவனிப்பும் வருமானமும் கிட்டும்.

சுப்பய்யா என்று ஒருவன். அவன்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாளன். நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறவன். விழா விசேஷங்களுக்க அவர்களை இட்டுச் சென்று. நிகழ்ச்சிகளை பொறுப்பாக நடத்திவைத்து, பணம் பெற்று, அவர்களுக்கு ஒரு தொகை கொடுத்துவிட்டு, மீதியை தன்பங்காக வைத்துக் கொள்கிறவன். கான்ட்ராக்டர், மானேஜர், இயக்குனர் என்று சமயத்துக்குத் தக்கபடி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான்.

ரஞ்சிதம் ஒரு ஊரிலும், ராணி பக்கத்து கிராமத்திலும் வசித்தார்கள். ரஞ்சிதம் நல்ல சிவப்பு. ராணி கறுப்பு. ஆகவே, அவர்களைப் பற்றிப் பேசியவர்கள் “சிவத்தப்புள்ளை” “அந்தக் கறுத்தப்புள்ளை” என்று குறிப்பிடுவது இயல்பாக இருந்தது. ராணி – ராணி என்ற அடிக்கடி சொல்லும் சுப்பய்யாவுக்குக்கூட, ரஞ்சிதம் என்று கூறுவது சிரமமாக இருந்ததோ, அல்லது சிவத்தப் புள்ளை என்று குறிப்பிடுவது மனசுக்குப் பிடித்திருந்ததோ, தெரியவில்லை – சிவத்தப் புள்ளை என்று சொல்லு திர்ப்பதில் ஒரு சந்தோஷம் கிடைத்ததாகவே தோன்றியது.

“ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கு. ராணியை பார்த்துப் பேசிவிட்டு, இப்ப சிவத்தப் புள்ளை ஊருக்குப் போறேன் அவளிடம் தகவல் சொல்ல. சுப்பய்யா இவ்வாறு கூறுவது வழக்கம். அவ்வூர் சிவத்தப்பிள்ளையூர் என்று பெயர் பெறுவதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் சுப்பய்யா தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

பிறகு, ரஞ்சிதத்தின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கியவர்கள், அவளைப் பார்த்துக் கிறங்கியவர்கள், அவளுடைய பெயரைக் கேட்டுச் சொக்கியவர்கள் எல்லோரும் “அந்த சிவத்தப் புள்ளை” என்றும், “சிவத்தப்புள்ளையூர்” என்றும் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ரஞ்சிதம் சிவப்பாக இருந்தாள். சிரித்துச்சிரித்துப் பேசினாள். ஒய்யாரமாக நடந்தாள், ஒயிலாக நின்றாள்; நெளிந்தாள். கறுவண்டுக் கண்களால் கவ்வுவதுபோல் பார்த்தாள், எனவே பார்த்த அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்றாள்.

சுற்று வட்டாரத்துக் கோயில்களில் கொடை, விசேஷ விழா என்று எது வந்தாலும், சுப்பய்யாவுக்கு அழைப்பு வரும்; யாரை ஏற்பாடு பண்ணினாலும் பண்னாவிட்டாலும். அந்த சிவத்தப் புள்ளையை கண்டிப்பாக் கூட்டிட்டு வந்திரனும் என்று வலியுறுத்தப்படும்.

அப்படிக் கோருகிறவர்கள் ஆசையை நிறைவேற்றி வந்த சுப்பய்யா, “அது சாத்தியம் இல்லீங்க, அது இப்ப நம்பகை யிலே இல்லை” என்று சொல்லக்கூடிய காலமும் வந்தது.

“அது இப்பல்லாம் இதுமாதிரி ஆட்டத்துக்கு வாறதில்லே. ஸ்பெஷல் டிராமாவிலே நடிக்கப் போகுது. பெரிய நடிகைன்னு நினைப்பு அதுக்கு” என்று சுப்பய்யா குறைபட்டுக் கொள்வதும் சகஜமாயிற்று.

ஸ்பெஷல் நாடகமேடையின் ஜோதியாக மாறிவிட்ட ரஞ்சிதம் மேலும் கீர்த்தியும் கவனிப்பும் பெற்றாள். அவளது ஊரின் பெயரும் பரவியது.

“அந்த சிவத்தப்புள்ளை நடிக்குதோ இல்லையோ – அதுகிட்டே நடிப்புத்திறமை இருக்கோ இல்லியோ – அது சும்மா மேடையிலே வந்து நின்னு, கண்களை ஒரு சுழட்டுச் சுழட்டி, ஜோரா ஒரு சிரிப்பு சிரிச்சாலே போதும். நாடகம் பார்க்க வந்த வங்க அப்படியே சொக்கிப் போவாங்க சொக்கி” இவ்விதமான பாராட்டுரைகள் தாராளமாகவே கிடைத்தன அவளுக்கு.

இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜப்பா என்கிற ஷோக்சுந்தரம் ரஞ்சிதத்தின் துணைவனாய், பாதுகாப்பாளனாய் இருந்து வந்தான். தெருக்கூத்து ஆட்டக் காரியாக இருந்த சிவத்தப் புள்ளையை நாடகமேடை இளவரசி மிஸ் ரஞ்சிதமாக உயர்த்தியவனே அவன்தான்.

நாடகக்கலையை உய்விக்க வேண்டும் என்கிற தாகத்தை விட, நாடங்களில் நடிக்க வருகிற சுந்தரிகளையும் சிங்காரி ஒய்யாரிகளையும் அனுபவித்து ஜாலி பண்ண வேண்டும் எனும் மோகமே ராஜப்பாவை இயக்குவித்தது. அவனிடம் பணவசதி இருந்தது. ஊக்குவிக்கும் நண்பர்களும் சேர்ந்தார்கள். அவன் நாடகக் கான்ட்ராக்டர் ஆகி “ஸ்பெஷல் டிராமா” க்கள் நடத்தி வந்தான். வெவ்வேறு ஊர்களில்.

அப்படிச் சுற்றி வந்தபோது தான் ரஞ்சிதம் அவன் பார்வையில பட்டாள். “இப்படி தெருத் தெருவாக ஆடி அலைக்கழிவதை விட, ஜம்னு நாடகமேடையில் நடிக்கலாமே. அதனால் பெயரும் புகழும் வரும். பணமும் அதிகம் கிடைக்கும். சுகமாக வாழவும் முடியும்” என்று ராஜப்பா ஆசைப்பேச்சுகள் பேசினான்.

ரஞ்சிதம் அவனாலும் அவன் பேச்சுக்களாலும், மேடைக் கவர்ச்சியினாலும் வசீகரிக்கப்பட்டாள்.

“ஸ்பெஷல் டிராமாக்களிலே ஜொலிக்குதே ஒரு சிவத்தப் புள்ளை, அதுக்கு இந்த ஊருதான்” என்று ஊருக்கு விளம்பர மும் தேடித்தந்தாள்.

காலம் ஒடிக்கொண்டிருந்தது.

திடீரென்று நாடகமேடை ஜோதி ஸ்பெஷல் டிராமா உலகிலிருந்து அஸ்தமித்து விட்டது.

அந்தச் சிவத்தப்புள்ளை சினிமாவிலே நடிக்கப் போயிருக்கு தாம்” என்று பேச்சு எழுந்தது.

“அடி சக்கைன்னானாம்!” என ஆரவாரித்தார்கள் அந்த வட்டாரத்தினர்.

“சவம் கெட்டுக்குட்டிச் சுவராகப் போகுது. பின்னே அங்கே போயி உருப்படவா போகுது அது?” என்று கரித்துக் கொட்டினான் ராஜப்பா.

“கிளி தன் கையைவிட்டுப் பறந்து போயிட்டுதே என்கிற வயித்தெரிச்சலில் இவன் இப்படிப் புலம்புதான்” என்று அவனை விமரிசித்தார்கள் மற்றவர்கள்.

சினிமா உலகத்தைச் சேர்ந்த நபர்; “புதுமுகம்” களை தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு ஆசாமி அந்தப் பக்கம் வந்தான். தடயுடல் லாட்ஜ் ஒன்றில் தங்கினான். யார்யாரையோ பார்த்தான். சிவத்தப்புள்ளை ரஞ்சிதம் பற்றி யாரோ அவன் காதில் கிசுகிசுத்தார்கள். அவளை பேட்டிகான ஏற்பாடு செய்தார்கள்.

அவள் வந்தாள். பார்த்தாள். சிரித்தாள்.

மிஸ்டர் சினிமாவாலா கிறக்கமுற்றார். அப்புறம் என்ன? அவரும் அவளும் முதல் வகுப்பு வண்டியில் பிரயாண மானார்கள், சினிமாபுரியை நோக்கி.

புதிய படங்கள் வேகம் வேகமாக வந்தன.

ரஞ்சிதம் எதிலாவது வருகிறாளா என்று அந்த வட்டாரத்தினர் முழித்துப் பார்த்தார்கள்.

ஒரு படம் வந்தது.

அதில் கும்பல் காட்சியில் கூடிநின்று கும்மி அடித்து குதியாட்டம் போட்ட ஒருத்தியை கவனித்த ஒருவர், “இது நம்ம ஊர் சிவத்தப்புள்ளை இல்லையா?” என்றார்.

கூட இருந்தவர்களும் உற்று நோக்கினார்கள். “ஆமா. அவளே தான். ரஞ்சிதம் தான்” என்று சாட்சி கூறினார்கள்.

செய்தி வேகமாகப் பரவியது. சினிமாவில் நடிக்கும் சிவத்தப்புள்ளையை தரிசிப்பதற்காக தினசரி கூட்டம் திரண்டது.

“சினிமாவிலே நடிக்கப் போயிருக்குதே சிவத்தப்புள்ளை அதுக்கு இந்த ஊருதான்” என்று பேசுவதில் பெருமை கொண்டார்கள் அவ் வட்டாரத்தினர்.

“ஹூம் என்ன பிரமாதமா நடிச்சுக் கிழிச்சிட்டா கும்பலோடு கும்பலாவந்து போற எக்ஸ்ட்ராவா தானே சான்சு கிடைச் சிருக்கு!” என்று ராஜப்பா குறைகூறினான்.

“கும்மியாட்டம், கூத்துக்குதிப்பெல்லாம் சினிமாவிலே பண்ணுதே ரஞ்சிதம், அதுக்கு டிரெயினிங் குடுத்ததே நாமதான். ஆரம்ப காலத்திலே, நம்ம கையிலே இருந்துதே ஒரு சிவத்தப்புள்ளை அதே தான் இது” என்று சுப்பய்யா சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போனான்.

அந்த ஒரு படத்துக்குப் பிறகு, ரஞ்சிதத்தின் நிழல் வேறு எந்தப் படத்திலும் காட்சி தரவுமில்லை. அவள் என்ன ஆனாளோ, சிவத்தப்புள்ளையூர் வாசிகளுக்கு அதுவும் தெரியாது.

“என்ன தெரியாதா இங்கேயிருந்து அதை கூட்டிக்கிட்டுப் போனானே அவனோட ஆசை நாயகி ஆகியிருப்பா. அவ அலுத்துப்போனதும் அவன் அவளை கைவிட்டிடுவான். பிறகு யார் யார் தயவிலோ வாழவேண்டியிருக்கும். ஒளியைக்கண்டு மயங்கித் தாவுற விட்டில் கதைதான். சிவத்தப்புள்ளை – ஹoம்ப், பாவம், அவ்வளவு தான், என்று அனுதாபம் உதிர்த்தான் ராஜப்பா.

(“வஞ்சிநாடு 1980)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *