கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 14,464 
 

சிலை தலைவர்நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதிக் கொள்ளும் நான்கு முனை சந்திப்பு அது. அப்படியொன்றும் அது பரபரப்பான சந்திப்பு இல்லைதான். பக்கத்து மெயின் ரோட்டில் பாலம் கட்டப்படுவதால் அங்கே போக்குவரத்து நெருக்கடி அதிகமானதன் காரணமாக சில நாட்களாக போக்குவரத்து இந்த வழியாய் திருப்பி விடப்பட்டிருந்தது.

சாதாரணமான அந்த நான்கு முனை சந்திப்புதான் இன்று எல்லாரையும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. கேமரா, மைக் சகிதமாக பர
பரப்பான செய்தி தேடி அங்குமிங்கும் மீடியாகாரர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடிகள் முளைத்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.இந்தப் பரபரப்புக்குக் காரணமே நான்கு முனை சந்திப்பின் மையத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பெரிய கட்சித் தலைவரின் சிலைதான்.

எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அந்தச் சிலைத் தலைவர் உயரமான பீடத்தின் மீது நின்றபடி கும்பிடுவது தெரியும். மழைக்கு நனைந்தும் வெயிலுக்கு காய்ந்தும் காணப்பட்ட அவர், வாகனங்களின் புகை மற்றும் தூசி முழுக்க தன்மீது அப்பிக்கொண்டபடி தனது ஒரிஜினல் கருப்பு நிறத்தை மங்கவிட்டபடி காட்சியளித்தார்.

அவரது பிறந்த நாளுக்காக மட்டும், கட்சியின் இப்போதைய தலைவர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை அவருக்கு மாலையிட்டு வழிபட முண்டியடிப்பார்கள். மற்ற நாட்களில் கண்டுகொள்ளப்படாத சிலைத்தலைவர்.அந்தச் சிலை மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றபடி, டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் சொல்லும் அளவுக்கு தொண்டர் கூட்டத்தை அங்கே சேர்த்து விட்டிருந்தது. டிராபிக்கே நிறுத்தி வைக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருந்தது. காரணம், அந்தச் சிலை இடிக்கப்பட்டிருந்ததுதான்!

‘‘தலைவா… உன்னை இடிக்கிறதுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ..?’’ ஒரு குடிமகன் கூட்டத்தில் அரற்றிக் கொண்டிருந்தான்.

‘‘எப்படி கம்பீரமா இருந்தார் நம்ம தலைவர்… இப்படி பண்ணி வச்சிருக்கானுங்களே!’’‘‘இந்த வேலையை யாரு பண்ணான்னு தெரிஞ்சாகணும்…’’

‘‘மவனே அவன் மட்டும் கைல கிடைக்கட்டும் நடக்கிறதே வேற…’’

அந்த நான்கு முனை சந்திப்பின் எதிரே இருந்த டீக்கடை தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கல்லாவில் இருந்த டீக்கடைக்காரர், ஏதேனும் தகராறு நடந்தால் ஷட்டரை மூடும் பதற்றத்தில் இருந்தார்.‘‘சிலை இருக்கிற கோலத்தைப் பார்த்தியா? அழுக்கை சுரண்டி எடுத்தா ஒரு அரை லாரி அள்ளலாம். என்னிக்கு அந்த தலைவருக்கு பிறந்தநாள் வருதோ அன்னிக்குதான் பத்து பாத்திரம் துலக்கிய மாதிரி பளிச்சுன்னு வச்சிருப்பானுங்க. மத்த நாள்ல கண்டுக்ககூட மாட்டானுங்க. இப்ப என்னடான்னா சிலை உடைஞ்சிடுச்சுனு பெரிசா சீன் போடறானுங்க…’’

‘‘சார், டீ சாப்பிட வந்தா அதை மட்டும் பாருங்க. அரசியல் வேண்டாமே…’’ டீக்கடைக்காரர் சொன்னார்.‘‘அரசியல் நடக்கிற இடத்துலதானே நீங்க கடை வச்சிருக்கீங்க?’’ பெரிதாக ஜோக் சொன்னது போல் சிரிக்க ஆரம்பித்தான்.‘‘இல்லீங்க. கட்சி ஆட்கள் நிக்கிறாங்க. உங்களுக்கு என்ன… குடிச்ச கிளாஸை வச்சிட்டு கிளம்பிடுவீங்க. நானும் என் கடையும் என்ன ஆவறது?’’ அவஸ்தையாய் சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்தார்.

அங்கே நுழைந்த போலீசைப் பார்த்ததும் அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள் மௌன விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள்.‘‘என்னப்பா… நேத்து நைட் எத்தனை மணிக்கு கடை முடினே?’’

‘‘10 மணிக்கு!’’

‘‘நீ கடையை மூடுற வரைக்கும் யாரையாவது சிலை கிட்டே பார்த்தியா?’’

‘‘இல்ல சார்…’’ டீக்கடைக்காரர் சொன்னார்.

‘‘இந்தத் தெருவுல யாரு கடையை லேட்டா மூடுவாங்க?’’

‘‘நைட் டிபன் சென்டர் எதிர்த்தாப்பிலே இருக்கு பாருங்க… அவங்க மூடுறதுக்கு 12 மணி ஆகிடும்…’’

‘‘நடுரோட்டிலே கொண்டாந்து சிலையை வச்சிடுறாங்க. இப்ப எவன் இடிச்சான்னு எங்க போய் கேட்கிறது?’’

சலித்தபடி எதிர்க்கடையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார் அந்த போலீஸ்காரர்.

இதற்குள் அங்கே சிலையைச் சுற்றிலும் குழுமியிருந்த தொண்டர்களின் கோஷம் அதிகமாகிக்கொண்டிருந்தது. ஆவேசமான குரல்கள் கூட்டத்திலிருந்து வந்துகொண்டிருக்க, டிராபிக் க்ளியராகக் காத்திருந்தவர்கள் பொறுமை இழந்து, கிடைக்கும் கேப்பில் உள்நுழைந்து தாண்டிச் சென்றுகொண்டிருந்தார்கள். அப்படிச் செல்ல முடியாதவர்கள் வாகனங்களில் அமர்ந்தபடியே சலிப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘‘இப்படி போராட்டம் பண்ணா நாங்க எப்பய்யா போறது ஆபீஸ்க்கு?’’

டூ வீலரில் காத்திருந்த ஒருவன் துணிச்சலாக வார்த்தைகளை விட்டுவிட, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவன் கத்தி போல் வார்த்தையை வீசினான். ‘‘இன்னிக்கு ஒரு நாள் போகாம இரு. உன் குடி ஒண்ணும் முழுகிப்போயிடாது..!’’

அப்போதுதான் அந்த டிராபிக் நெரிசலில் தன் டூவீலரைக் கொண்டுவந்து நுழைத்த ஒரு வாலிபன் ‘‘என்னாச்சு?’’ என்றான்.

மற்றவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு,‘‘இவங்களே உடைச்சிட்டு இவங்களே போராட்டம் பண்ணுவாங்களா…’’ என்றபடி அந்த இடத்தை தன் செல்போனில் படம் எடுத்து முகநூலில் ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்தான். சிலையைச் சுற்றி வந்து போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சிலையின் கீழே இருந்த பீடம் பாதி இடிந்த நிலையில் காணப்பட்டது. அதில் பதிக்கப்பட்டிருந்த, திறந்து வைத்த, தலைமை வகித்தவர்கள் பட்டியலைக் கொண்டிருந்த கல்வெட்டு முழுக்க பெயர்ந்து போய் எங்கும் சிதறிக் கிடந்தது. சிலைக்கு இதனால் ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், பீடத்தைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த அலங்கார சுற்றுச் சுவரின் ஒரு பகுதி பெருமளவில் இடிக்கப்பட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் இடிக்கப்பட்டிருந்தால் சிலை கீழே சாய்ந்திருக்கும்.

‘‘டயர் தடயம் தெரியுது. ஏதோ வண்டியை வச்சி மோதிதான் இடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. யாேரா வர்றதை பார்த்ததும் ஓடியிருக்காங்க…’’ ஒரு போலீஸ் அதிகாரி நேரில் பார்த்தது போல் சொல்லிக் கொண்டிருந்தார்.‘‘இதுல இன்னொரு விஷயம் இருக்கு. அவங்க நோக்கம் சிலையை உடைக்கிறதா… இல்ல சிலைக்கு கீழே இருக்கிற பெயர்ப் பலகைல இருக்கிற பெயரை உடைக்கிறதானுதான் தெரியல…’’ என்றார் இன்னொரு அதிகாரி.

‘‘எப்படி இந்த முடிவுக்கு வந்தீங்க..?’’ இன்னொரு அதிகாரி தொப்பியைச் சரி செய்தபடி கேட்டார்.

‘‘கட்சிக்குள்ள ரெண்டு அணி இருக்கு சார். ஒரு அணியோட முக்கியமான ஆள் பேர் இதுல இருக்கு. மற்றொரு அணிக்கு இது பிடிக்காததால உடைச்சிருக்கலாம்…’’இவர்கள் பேசுவதை பக்கத்தில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த வட்டச் செயலாளர் இடையில் புகுந்தார், ‘‘சார், இடிச்சது எதிர்க்கட்சியோட வேலை! அதை கவனிங்க. எங்களுக்குள்ள பிரச்னையை உண்டுபண்ணாதீங்க!’’

‘‘இது போலீஸ் புத்தி. இப்படித்தான் யோசிப்போம். நீங்க பிரச்னை பண்ணாம கிளம்புங்க!’’ வட்டத்திடம் சொன்ன கறார் அதிகாரி, போலீசார் பக்கம் திரும்பினார். ‘‘முதல்ல சி சி டிவி கேமரா எதுனா சுத்தி உள்ள கடைகள்ல இருக்கானு பாருங்க…!’’ ஆணையிட்டார்.

‘‘கேமரா வைக்கிற அளவுக்கு பெரிய கடைனு இங்க எதுவுமே இல்ல சார். எல்லாம் சாதாரண கடைகள்…’’

‘‘விசாரிங்க… எதுனா க்ளூ கிடைக்கும்…’’

தலையசைத்தபடி நகர்ந்த கான்ஸ்டபிள் ‘‘எவனைக் கேட்டாலும் தெரியலனே சொல்றாங்க. எத்தனைபேர் வீட்டுக் கதவை தட்டிக் கேட்கிறது…’’ தன் சக கான்ஸ்டபிளிடம் சலித்துக் கொண்டார்.தன் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த வட்டம், ‘‘ஆள் பத்தாது. முடிஞ்சா ஆயிரம் பேரை திரட்டிட்டு வா. இந்தத் தொகுதில கட்சி எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குனு கட்சிக்கு நாம காட்டியே ஆகணும்! இதுதான் சரியான சந்தர்ப்பம்…’’ எனக் கட்டளையிட்டார்.

சுற்றி அமர்ந்திருந்த தொண்டர்கள் ‘‘கண்டுபிடி, கண்டுபிடி… இடிச்சவனை கண்டுபிடி…’’ என கோஷமிட்டார்கள். ‘‘நாங்க கண்டுபிடிச்சிடுவோம். நீங்க அமைதியா கலைஞ்சு போயிடுங்க. உங்களால் டிராபிக் ஜாம் ஆகுது…’’ டிராஃபிக் போலீஸ் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘‘அதப்பத்தி எங்களுக்கு கவலையில்லே. இடிச்ச கும்பலை எங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க!’’ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியவன் ஆவேசமாய்ச் சொன்னான்.‘‘உங்க தலைவரே வீணா பிரச்னை பண்ண வேண்டாம்னு சொல்லிருக்கார். கலைஞ்சு போங்க…’’

‘‘அவரேதான் பிரச்னை முடியற வரை நகரக் கூடாதுனு எங்களுக்கு சொல்லிருக்கார்!’’

‘… செய்திகளுக்காக உங்கள் கல்பனா!’ கேமராவைப் பார்த்த படி பேசிக் கொண்டிருந்தார் ஒரு பெண் ரிப்போர்ட்டர்.டிராஃபிக்கை இப்போது வேறு பக்கம் திருப்பி விட ஆரம்பித்திருந்தார்கள்.

“அவங்களை விரட்டாம நம்மை சுத்திட்டு போகச் சொல்றாங்க…’’ முணுமுணுத்தபடி மக்கள் நகர்ந்தார்கள்.

‘‘சார்… சிலை சேதாரமானது தொடர்பா எதிர்க்கட்சிப் பிரமுகரை வெட்டிட்டாங்களாம். இப்ப அந்தக் கட்சிக்காரங்க படை திரட்டிக்கிட்டு இங்க வந்திட்டிருக்காங்க!’’ ஓடிவந்து இன்ஸ்பெக்டர் சொன்னதும் போலீஸ் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார் தடியடிப் பிரயோகத்தை போலீஸ் கையிலெடுத்தது. அடி தாளாமல் தொண்டர்கள் திசைக்கொருவராக ஓட… அந்த இடமே ரணகளமானது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அந்த சிலைத் தலைவர் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நெடுஞ்சாலையில் இருந்த ஹோட்டலின் முன்னே அந்த லாரி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய டிரைவர் தண்ணீர் பாட்டில் எடுத்து முகம் கழுவினார். கிளீனர் இறங்கி வந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கொட்டாவி விட்டான். சட்டென்று அவன் பார்வையில் அது பட்டது.

‘‘அண்ணே! லாரில சிராய்ப்பு இருக்கு. எங்கயாவது இடிச்சுட்டீங்களா?’’

‘‘ஆமாம்டா… தூக்கக் கலக்கத்துல ஏதோ சிலை மேல லாரி மோதிடுச்சு..!’’ என்றார்!

– ஜனவரி 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *