சிற்றறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,888 
 

தென்கடல் தீவில் இருநூறு வருசங்களின் முன்பாக இது நடந்தது என்கிறார்கள். அப்போது அதை ஒரு மகாராணி ஆட்சி செய்து கொண்டிருந்தாள். அவளது ஆளுமையின் கீழாக பல நூறு சிறுதீவுகள் இருந்தன. ராணி திருணம் செய்து கொள்ளாதவள். மிகுந்த முன்கோபி என்று பெயர் எடுத்திருந்தாள். குறிப்பாக அவளுக்குக் கடல்வழியாக வந்திறங்கி வணிகம் செய்யும் விதேசிகளைப் பிடிக்கவேயில்லை.

அந்த நாட்களில் போர்த்துகீசிய அரசு புகழ்பெற்ற கடற்பயணியான ஆல்பர்டோ ஒலிவாராவை அனுப்பி இழந்து போன தங்கள் கடல் வணிகத்தைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சித்து கொண்டிருந்தது. மூன்றரை மாதக் கடற்பயணத்தில் நிறைய அரசர்களை தன்வசமாக்கி வணிக அனுமதி பெற்ற ஒலிவாரா நிகோபார் தீவிற்கு காற்றடிகாலத்தில் வந்து சேர்ந்தான். தனது அலங்கார ஆடைகளை அணிந்து கொண்டு துணைக்கு இரண்டு கறுப்பு மூர்களையும் அழைத்தபடி பரிசாக்க் கொண்டு வந்த புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பல்லக்குகளில் ஏற்றிக் கொண்டு அரசியைக் காண சென்றான்.

அரண்மனை மரத்தால் கட்டப்பட்டு இருந்தது. மூன்று நாட்கள் காத்திருந்த பிறகு தான் மகாராணியின் தரிசனம் கிடைத்தது. சபைக்குள் அவரை அழைத்துப் போன மந்திரி மகாராணி எதிரில் ஒலிவாரா உட்கார கூடாது என்றும் சபைக்குள் காலணிகள் தொப்பிகள் அணிந்துவர அனுமதியில்லை என்றார். வழியில்லாமல் அத்தனையும் அகற்றிவைத்துவிட்டு மகாராணியை காண சபைக்குள் சென்றான்.

மகாராணி விலை உயர்ந்த சிவப்பு நிற பட்டு உடுத்தியிருந்தாள். ஐம்பது வயதை தாண்டியிருக்கும் தோற்றம். கழுத்தில் இரண்டு அடுக்கு வைர நகைகள் அணிந்திருந்தாள். துபாஷியிடம் அவன் யார் எதற்காக வந்திருக்கிறான் என்று அவள் விசாரித்தாள். மேன்மை தாங்கிய மகாரணியிடம் விஞ்ஞானத்தின் பெருமைகளை விளக்கிவரும்படியாக போர்த்துகீசிய அரசு தன்னை அனுப்பி உள்ளதாக சொல்லி தனது விசித்திரமான பரிசு பொருட்களை அரசியின் முன்னால் சமர்பணம் செய்தான். அரசி ஒவ்வொன்றையும் வியப்போடு பார்த்தபடியே விசாரித்தாள்.

மகாராணி இது தான் உலக உருண்டை. உங்களுக்காகவே தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது.மொத்த பூமியின் அளவும் இவ்வளவு தான். கையில் வாங்கி பாருங்கள் மகாராணி என்றான். ராணி தன் வாழ்வில் முதல்முறையாக மொத்த உலகத்தையும் தன்கையால் தூக்கி பார்க்கிறோம் என்ற பெருமிதத்துடன் அதை வாங்கிப் பார்த்தாள். பிறகு இதில் வானம் எங்கேயிருக்கிறது என்று கேட்டாள். ஒலிவாரா புன்சிரிப்போடு இது நிலவரைபடம். இதில் ஆகாசமிருக்காது என்றான். அதுவே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இதை எப்படி உருவாக்கினீர்கள் என்று கேட்டாள். அது வானவியல் அறிவால் உருவாக்கபட்டது போர்த்துகீசியர்கள் விஞ்ஞானப் பேரறிவு பெற்றவர்கள் என்றான். மகாராணியால் உலக உருண்டையை நம்ப முடியவில்லை. இவ்வளவு தான் மொத்த உலகமுமா? இந்தக் கோடுகள் தான் நாடுகளா. இது தான் கண்கொள்ளமுடியாத கடலா என்று மறுபடியும் கேட்டாள்.

மகாராணி அவர்களே, பூமியின் மொத்தபரப்பையும் எங்கள் விஞ்ஞானிகள் கணித்து வரைபடமாக்கிவிட்டார்கள். அதன் மாதிரி வடிவம் தான் இந்த உருண்டை இனி நாங்கள் அறியாத இடம் உலகில் எங்குமில்லை என்றான்.

இதில் தனது தீவு எங்கேயிருக்கிறது என்று கேட்டாள் ராணி. அதற்கு ஒலிவாரா இந்தியா என்பது இந்த சிறிய கோடு. அதில் தங்கள் ராஜ்ஜியம் இதோ சிறிய புள்ளிதான் என்றான். இவ்வளவு சிறிய பிரதேசம் தானா தனது ராஜ்ஜியம் என்று திகைத்தபடியே அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒலிவாரா சொன்னான், மகாராணி அவர்களே, விஞ்ஞானம் என்ற துறை இன்று வளர்ந்து வருகிறது. காற்றின் வேகத்தை அறிந்து சொல்லும் கருவி இது. இதை வைத்துக் கொண்டால் காற்று எந்தப்பக்கம் அடிக்கிறது என்று எளிதாக சொல்லிவிடலாம். இது போல இனி சுறாவேட்டையாட குத்தீட்டி தேவையில்லை. இதன் பெயர் துப்பாக்கி. இதை வைத்துச் சுட்டால் சுறா செத்து போய்விடும் இதனால் ஒரே வேளையில் பலசுறாக்களை கொன்று விடலாம் என்றபடியே ஒரு பன்றியை கொண்டுவரச்சொல்லி சுட்டுக்காட்டினான். அது குண்டடி பட்டு துள்ளி துடித்துச் செத்தது.

உங்கள் கண்டுபிடிப்புகளை கண்டு நான் சந்தோஷப்படுகிறேன் போர்த்துகீசியர்கள் மிகப்பெரிய அறிவாளிகள் என்றாள் மகாராணி. இதனால் மகிழ்ந்து போன ஒலிவாரா இத்தாலியில் இருந்து கொண்டுவந்திருந்த ஒரு தொலைநோக்கியை எடுத்து அவளிடம் தந்தான். இது என்னவென்று கேட்டாள். இதில் ஒரு கண்ணை வைத்து பாருங்கள் மகாராணி. உங்களுக்கே தெரியும் என்றான்.

அரசி அதை வாங்கி பயத்தோடு ஒரு கண்ணை வைத்துப் பார்த்தாள். தூரத்தில் உள்ள பொருட்கள் யாவும் மிக அருகில் கைதொடுவது போல தெரிந்தன. என்ன விந்தை. ஒரு சிறிய கருவி. இதன்வழியே தொலைவில் உள்ள யாவும் அருகாமையில் தெரிகிறதே. இது என்ன கண்கட்டுவித்தையா என்று வியந்தாள்.

உங்களை போன்ற உயர்ந்த மனிதர்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டியவர்கள். உங்களுக்காகவே இது உருவாக்கப்பட்டிருக்கிறது, எனது எளிய பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள் . இதை வைத்துக் கொண்டால் கடலில் இருந்தபடியே கரையை காணமுடியும். தொலைவில் துள்ளும் மீனை கூட படகில் இருந்தே பார்த்துவிடலாம். எதிரி வருவதை உடனே தடுக்க முடியும், இப்படி எதையும் வருவதற்கு முன்னால் அறிந்து கொள்ளும்படியாக செய்வது தான் விஞ்ஞானம் என்றான். மகாராணி கைதட்டி பாராட்டினாள்.

அடுத்து ஒரு உருப்பெருக்கி ஆடி ஒன்றினை கையில் எடுத்து இதில் இந்த எறும்பைப் பாருங்கள் என்றான். மகாராணி ஒரு மாயவித்தைகாரனின் நிகழ்ச்சியைக் காண்பது போல அவன் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருந்தாள். எறும்பு மிகப் பெரியதாக யானை போல தெரிந்தது. நிச்சயம் போர்த்துகீசியர்களின் விஞ்ஞானம் போற்றப்பட வேண்டியது என்றாள்.

அவன் அதன்பிறகு தனது மரப்பெட்டி ஒன்றில் இருந்து சிறிய குச்சி ஒன்றினை எடுத்து அதை உரசி காட்டினான். நெருப்பு பற்றி எரிந்தது. அதன் பெயர் தீக்குச்சி என்றும். அதை வைத்து இங்குள்ள பெரிய காட்டினைக் கூட எளிதாக எரித்துவிடலாம் என்றான்.

அதன்பிறகு பரிகாசமான குரலில் இந்தத் தீவின் வாழ்க்கை மிகவும் பின்தங்கிபோயிருக்கிறது. கடலை உங்களுக்குப் பயன்படுத்த தெரியவில்லை இங்குள்ளவர்கள் இயற்கைவளத்தை அறியாத அப்பாவி மக்கள். எங்களை வணிகம் செய்ய அனுமதித்தால் போதும் தீவின் வாழ்க்கையை புதிதாக மாறிவிடுவோம் என்று சொல்லி அதற்காகவும் தான் சில புதிய இயந்திரங்கள் கொண்டுவந்திருப்பதாக காட்டினான்.

ஒன்றை கையில் எடுத்துக்காட்டி இந்தக் கருவியை பொருத்தி விட்டால் அது சரியான நேரம் காட்டும் என்றான், வேறு ஒரு இயந்திரத்தை எடுத்துக் காட்டி இதை வைத்து மழையை அளக்கலாம் என மற்ற கண்டுபிடிப்புகளையும் அறிமுகம் செய்தான்.

மகாராணி அவற்றைக் கண்டு புருவத்தை உயர்த்தி வியப்பு தாங்க முடியாமல்.உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உங்களின் வருகை உறுதி செய்துள்ளது. என்று மனம் திற்ந்து பாராட்டினாள். அதற்கு ஒலிவாரா எங்கள் அறிவும் உங்கள் கருணையும் ஒன்று சேர்ந்தால் உங்கள் ராஜ்ஜியம் மிகபெரியதாக விருத்தியடையும். மேன்மை தாங்கிய மகாராணி அவர்களே, இங்கே நாங்கள் வணிகம் செய்ய அனுமதி தாருங்கள் என்று கேட்டான்.

மகாராணி மனம் மகிழ்ந்து இனி இது உங்கள் தீவு. இங்கே உங்கள் வணிகத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும் நானே செய்து தருகிறேன். நீங்கள் விரும்பியபடி எதையும் வாங்கி விற்று வணிகம் செய்யலாம் என்றாள். ஒலிவாரா மகிழ்ந்து போனான். மறுநாள் முறையான அனுமதி உத்தரவு கையெழுத்து இட்டு தரப்படும் என்ற ராணி அதுவரை தனது விருந்தாளியாக தங்கியிருக்கவும் என்று உத்தரவிட்டாள்.

ஒலிவாரா இது தான் அரசர்களின் பலவீனம் என்று உள்ளுற சந்தோஷம் கொண்டபடியே அரச விருந்தாளியாக அரண்மனையிலே தங்கி குடி பெண்கள் என்று இரவெல்லாம் உல்லாசமாக இருந்தான். மறுநாள் விடிகாலை ஐந்து மணி அளவில் அவன் தங்கியிருந்த மாளிகைக்கு மகாராணியே வந்தாள். அவன் அதை எதிர்பார்க்கவேயில்லை.

இரவெல்லாம் நீங்கள் கொண்டுவந்து தந்த பரிசுப் பொருட்களை ஆராய்ந்தபடியே இருந்தேன். உறக்கமே வரவில்லை. இந்தக் கண்டுபிடிப்புகள் அற்புதமானவை ஆனால் இவை எங்களின் இயல்பான அறிவை முடக்கிவிடக்கூடியவை. நாங்கள் சூரியனைப் பார்த்து நேரம் கணிப்பவர்கள். உங்கள் காலஇயந்திரம் அந்த அறிவை மறைந்து போக செய்துவிடும். நாங்கள் தேவையற்று ஒரு மரத்தை கூட வெட்டுவதில்லை. ஆனால் உங்கள் கண்டுபிடிப்பு காட்டுமரங்களை வெறும் வணிகப்பொருளாக்கிவிடும் அபாயமுள்ளது. உங்கள் மழையறிவு கருவியும் தேவையற்றதே. அதை அறிமுகம் செய்துவிட்டால் இயற்கையாக மக்களுக்குள்ள மழை அறியும் எளிய முறைகள் மனதில் இருந்து மறைந்துபோய்விடும்.

உங்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புள் எனது தீவுமக்களின் பாரம்பரிய அறிவை மொத்தமாக அழித்துவிடக்கூடியது என்று அஞ்சுகிறேன். இவை எல்லாம் வேடிக்கை பொருட்களாக கையாலாம். ஆனால் இயற்கையை புரிந்து கொண்ட எங்களது சிற்றறிவை முடக்கும் இந்த இயந்திரங்களை பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. நீங்கள் அறிமுகப்படுத்திய விஞ்ஞானம் ஒரு எளிய மோடி வித்தை போலதானிருக்கிறது. இதை கண்டு நானே ஒரு நாள் முழுவதும் மதிமயங்கி விட்டிருக்கிறேன். ஒருவேளை இதனால் எதிர்காலமே சீரழிந்து போய்விடலாம்.

எனது தீவு மிகச்சிறியது. ஆனால் இயற்கையோடு இணைந்து நாங்கள் வாழ்கிறோம். தேவைக்கு மேலாக நாங்கள் மீன்பிடிப்பது கூட இல்லை, கடலோடு நாங்கள் பகை கொண்டது கிடையாது, நாங்கள் இயற்கையை நம்புகிறோம், அதை அழிக்க ஒருபோதும் முயற்சிப்பதில்லை எங்களது அறிவு பல நூறு வருசங்களாக மனிதர்கள் வாழ்ந்து அனுபவித்து பகிர்ந்து கொண்டது. தலைமுறையாக கைமாறி மேம்பட்டு வந்து கொண்டேயிருக்கிறது. உங்கள் வணிக விஞ்ஞானத்தால் அதை சீரழிக்க விருப்பமில்லை.

ஆகவே உன்னையும் உன்னோடு உடன்வந்தவர்களை சிரச்சேதம் செய்து கடலில் எறிய உத்தரவிடுகிறேன். அத்தோடு உன் கப்பலும் தீக்கிரையாக்கப்படும். என்று அமைதியாக வெளியேறி சென்றாள்.

அன்றைய பகலில் ஆல்பர்டோ ஒலிவாராவின் உடல் தலையில்லாமல் கடலில் மிதந்து கொண்டிருந்தது. பேராசைகளும், துர்குணமும் கொண்ட ஒரு உடல் என்று அறிந்து கொண்டுவிட்டது போல கடல் மீன்கள் கூட அவனைத் தின்பதற்காக நெருங்கிப்போகவேயில்லை. சூரியன் மட்டுமே அதை பார்த்தபடியே கடந்து போய்க்கொண்டிருந்தது.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *