சிறுவியாபாரி குடும்பத்திலிருந்து ஒருவன்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,323 
 

ஒரே நேரத்தில் சிறுவியாபாரிகளையும் வசதி படைத்த குடும்பங்களையும் பற்றிப் பேசுவதே அபத்தமானது. இங்கு நாம் மிகவும் மேலோட்டமாகப் பேசுவதைப் போலிருக்கிறது இல்லையா?. சரி, இப்படி வைத்துக் கொள்வோம். தலைமுறை தலைமுறையாக சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். எந்த முடியாட்சி யின் போது இந்தக் குடும்பம் சிறு வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கியிருக்கும்? சொல்லவே முடியாது. எந்தெந்த சில்லறைச் சாமான்களை விற்றிருப்பார்கள்? இதையும் சொல்லிட முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. நான் அந்தத் தெருவுக்குக் குடிவந்த அடுத்த நாள், சூரியன் மறைந்த அந்த நேரத்தில், நான் தூரத்திலிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்த மூங்கில் ஒலியைக் கேட்டேன். ‘டக் டக் டக், டக் டக், டி டி டக், டக் டக், டி டி டக்’, என்று அதன் தாளலயம் மிகவும் சீராகக் கேட்டது. இரண்டே ஸ்வரங்களே இருந்தாலும், வெவ்வேறு அழுத்தத்தினால் பலப்பல தொனிகளில் ஒலித்தன. இரவின் நிசப்தத்தில், யாரோ யாரையோ கூப்பிடுவதைப் போலவும் யாரோ யாரிடமோ செய்தி ஒன்றைச் சொல்வது போலவும் ஒலித்தது.

தெருவைப் பார்த்து இருந்த சன்னலைத் திறந்தேன். கீழே குனிந்து பார்த்தேன். தெருவின் ஒரு கோடியில் ஒரு ஒளிப்புள்ளி தெரிந்தது. அவ்வொளி வெண் சுவர்களில் இரவுக் காவல் பூதத்தைப் போல அசைந்து அசைந்து ஒளிர்ந்தது. சில கணங்களில் தெளி வாகத் தெரிந்தது. பல வண்ணத்திலான பிசுக்கடைந்த தூக்கிச் செல்லும் ‘வோன் தான்’ கம்பம் தெரிந்தது. மெதுவாக மேலும் தெளிவாகத் தெரிந்தது. கம்பத்தின் மேற்புறம் ஆவி பறந்தது. தொங்கிக் கொண்டிருந்த அடுப்பில் விறகு எரிந்து கொண்டிருந்தது. ஜூ யுவாந்தா தான் கம்பத்தைத் தேக்கிக் கொண்டு வந்தான். அப்போது பதினேழோ பதினெட்டோ வயது தான் இருக்கும். உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்தான். அவனருகில் நரைத்த தலையுடன் வந்த வயதானவன் தான் அவ்வாலிபனின் தந்தை. முன்னால் போய்க் கொண்டே மூங்கிலால் ஓசை எழுப்பினார். ‘வோன் தான்’ விற்கவென்றுதான் வாழ் நாளெல்லாம் நடந்து சென்ற பாதையை மகனுக்குக் காட்டுவதைப் போல முன்னால் நடந்தார்.

அந்நாட்களில் நான் வேலையற்று இருந்தேன். வேலைப்பளு அதிகமிருந்து சிரமப்பட்ட சீன மொழி ஆசிரியர்களுக்கு உதவும் வேலையை மட்டுமே நம்பியிருந்தேன். மாணவர்களின் தேர்வுத்தாள்கள், குறிப்பேடுகள், வீட்டுப்பாடங்கள், கட்டுரைகள் போன்ற வற்றைத் திருத்தினேன். சொற்ப வருமானமே ஈட்டிய அந்த வேலை ஒன்றும் சுலபமில்லை. இரவெல்லாம் கண்விழித்துச் செய்ய வேண்டியிருந்தது.

‘டி டி, டக் டக்’, ஒலி என் சன்னலில் கீழ் கடக்கும். அவ்வொலி தினமும் அதே அந்தி வேளையில் அவ்வழியே போகும். பேய்ஜிங் தெருக் கூத்து முடிந்து பொதுமக்கள் திரும்பும் போது மறுபடியும் கடக்கும்.

பனிக்கால இரவெல்லாம் முழித்து உழைப்போர் மெல்லிய ஒரே ஆடை அணிந்திருந்தால் குளிரில் விரைத்துத்தான் போக வேண்டும். இதயம் மட்டும் சுருங்கியும் துடித்துக் கொண்டிருக்கலாம். அறைக்குள் கணப்பு இல்லை. சன்னலையே திறக்க முடியாத படிக்கு வெளியே கூர்மையான கத்தியைப் போல வீசியது வடக்கிலிருந்து குளிர்க் காற்று. சுழற்றி அடித்த இரவு மழை பூமியைத் தொடும் முன்னர் பனிக்கட்டியாக மாறி கூரையின் மீது கூத்தடித்தது. நள்ளிரவுக்குப் பிறகு, உலகமே ஒரு பனிக்கட்டி வீடாகி விடும். அவ்வேளையில் ஐந்தே காசுகளுக்கு சுடச்சுட ஆவி பறக்கும் ஒரு கிண்ணம் ‘வோன் தான்’ கொழுக்கட்டைதான் எத்தனை சுகம்! கொசுறாக காரச் சாறுடன் கூடிய சூப்பை மேலும் கொஞ்சம் ஊற்றிக் கொடுப்பார்.

முதல் நாளிலிருந்தே நான் ஜூ யுவாந்தாவின் வழக்க வாடிக்கையாளன் ஆகிப் போனேன். பிறகு, பேய்ஜிங் தெருக் கூத்திலிருந்து கேட்கும் கடைசி முரசு சத்தத்திற்குப் பிறகு மாணவர்களின் ஏடுகளிலிருந்து என் பார்வையைத் திருப்பி, மூங்கில் சத்தத்தைக் கேட்டிடும் ஆர்வத்தில் ஆழ்ந்தேன்.

மிகவும் துடிப்புடன் குறும்புத்தனமும் மகிழ்ச் சியும் கூடியதான ஜூ யுவாந்தாவின் தாளம் அவனின் அப்பாவுடையதை விட நன்றாக இருக்கும். சீக்கிரமே தாளம் என் சன்னலுக்குக் கீழே கேட்கும். “வாங்க வாங்க, சாப்டுங்க”, என்று கூப்பிடுவதைப் போலிருக்கும். கொஞ்சம் தாமதமானாலும், ஜூ யுவாந்தா கம்பத்தை இறக்கிக் கீழே வைத்து விட்டுக் கூப்பிடுவான். “திரு காவ், கீழ வாங்க. சூடா சாப்பிடுவீங்க”.

நான் விடுவிடுவென்று படிகளில் இறங்கிக் கீழே போவேன். அவனருகில் நிற்பேன். சின்ன அடுப்பை விசிறிக் கொண்டே, அன்றைய வியாபாரத்தைப் பற்றிப் பேசியபடி பாத்திரத்தை அடுப்பில் வைத்து வோன்தான் களைக் கிளறி விடும் அவனைப் பார்த்துக் கொண்டு நிற்பேன். அவன் சரியான வாயாடி. சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக அருவியென விழும். வோன்தான்னுக்காகக் காத்திருக்கும் நேரம் போனதே தெரியாது.

“இன்றிரவு வியாபாரம் நல்லா இருந்தது”, என்பான் பெரும்பாலும் வியாபாரம் மோசமாகவே இருந்ததில்லை என்பது போலிருக்கும் அவனின் பேச்சு. “தெருக் கூத்து முடிஞ்சதுமே கிட்டத்தட்ட இருபது பேர் என் கம்பத்தைச் சுத்தி நின்று கிட்டாங்க. கொழுக்கட்டைக்கு உள்ளே அடக்க போதுமான இறைச்சிப் பூரணம் கூட இல்லைன்னா நம்ப முடியுதா உங்களால? சும்மா சொல்லல்ல. கடைசி சில கிண்ணங்கள்ள இறைச்சி குறைஞ்சு தான் போச்சு. ஓஹ்! உங்களோடத் தனியா எடுத்து வச்சிட்டேன். அதுல நிறைய இறைச்சி அடச்சிருக்கும்”, என்பான். சொல்லிக் கொண்டே, பித்தளைக் கரண்டியால் பாத்திரத்தைக் கிளறிக் காட்டுவான். “பாருங்க, ஒவ்வொண்ணும் குண்டு குண்டாக இருக்கு.” நான் சிரித்துக் கொண்டே, “நிறைய இருந்தா என்ன, குறைய இருந்தா என்ன..ம்? இன்னும் கொஞ்சம் மிளகு சேர்த்து விடு”, என்பேன்.

ஜூ யுவாந்தா ஒவ்வொரு முறையும், “ரொம்ப குளிருது இல்ல? ஏன் நீங்க இன்னொரு கிண்ணம் சாப்பிடக் கூடாது?” என்று கேட்கத் தவற மாட்டான். “சரி ஆனா, உன்னோட இறைச்சி தீர்ந்துடுச்சே.” ஜூ யுவாந்தா வாயைத் திறந்து சிரித்து, கண்ணடிப்பான். “முதலுக்கே மோசம் இந்த வான்தான் விக்கிற பொழப்பு! வியாபாரம் செஞ்சா அப்பப்ப சரக்கு தீர்ந்து போச்சுன்னு அலட்டிக்கணும். அப்ப தான் மக்கள் கிடுகிடுன்னு நிறைய வாங்குவாங்க. உள்ள அடைக்க இறைச்சி இல்லன்னு சொன்னோம்னு வைங்களேன். மக்களுக்கு மேல்மாவாவது வேணும்!” என்று சொல்லிக் கொண்டே பேழைக்குள்ளேயிருந்து ஒரு மட்பாண்டம் நிறைய இறைச்சியை எடுத்து என் முன்னே காட்டிடுவான். “இதோ பாருங்க இருக்கு. இது போதாதா?!” என்று சொல்லிக் கொண்டே தன்னைக் குறித்த பெருமையுடன் விழுந்து விழுந்து சிரிப்பான்.

நானும் சேர்ந்து சிரிப்பதுண்டு. ஏதோ ஒரு தந்திர வித்தைக்காரன் தன்னுடைய தந்திரங்களை வேண்டுமென்றே வெளியிடுவதைப் போலிருக்கும்.

அப்போது ஜூ யுவாந்தா நேர்மையற்றவன் என்றோ இலாபத்தையே குறி வைத்துச் செயல்படுகிறான் என்றோ நான் நினைத்ததில்லை. அதிக ஏடுகளைத் திருத்த வேண்டும் என்றிருந்த என் எண்ணத்திற்கும், அதிக வான்தான்களை விற்றிட வேண்டும் என்றிருந்த அவனின் எண்ணத்திற்கும் எங்களின் வாழ்க்கை வசதிக் குறைவே காரணம் என்று தோன்றியது. ஒவ்வொரு இரவும் அவன் எனக்குக் கொஞ்சம் வெப்பத்தைக் கொணர்ந்தான். இன்னொரு கிண்ணம் காசு கொடுத்து நான் வாங்கினால் ஒருவருக்கொருவர் உதவியதாகும். காய்ந்து கிடக்கும் குளத்தில் இரு மீன்கள் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ஒன்றையொன்று துப்பிக் கொள்வதைப் போல.

சுதந்திரத்துக்குப் பிறகு எனக்கு கல்வித் துறையில் ஒரு வேலை வாய்த்தது. இன்னமும் வேலைப் பளு அதிகம் தான் என்றாலும், இரவு அதிக நேரம் விழிக்க வேண்டியிருக்கவில்லை. சம்பளமும் பெரிதாக இல்லை தான். இருந்தாலும் வான்தான் கொழுக் கட்டைகளை ஐந்து காசு கொடுத்து வாங்கி, என் அந்தஸ்தை மேலும் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா என்ற எண்ணம். தெருக்கூத்தைப் பார்த்து விட்டு பெய்ஜிங்கிலிருந்து திரும்பும் போது, தெரு வியாபாரியின் அருகில் குனிந்து நின்று குட்டிக் கொழுக்கட்டைகளைத் தின்பதை விட உணவு விடுதியில் நூடுல்ஸோ கொத்துக் கறியோ பதினைந்து காசு கொடுத்துச் சாப்பிடத் தான் தோன்றியது.

இன்னமும் என் சன்னலுக்குக் கீழ் மூங்கில் சத்தம் கேட்கத் தான் செய்தது. ஆனால், காலம் கடந்திடும் போது அவ்வோசை என்னில் கொணர்ந்த குதூகலமும், குறும்பும் மறையத் துவங்கியது. இன்னமும் கூப்பிடுவதைப் போலவும், காண அரிதான ஜூ யுவாந்தாவின் இயல்பையும் என்னில் நான் உணரவே செய்தேன். அவன் திரும்பிடும் நள்ளிரவில், நான் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பேன். அப்படியே உறங்காதிருந்த மூங்கில் ஓசையைக் கேட்டிட நேர்ந்தாலும், ஒரு வித இதம் என்னில் நிறைவூட்டத்தான் செய்தது. ஆனால், அந்த இதமானது முன்பைப் போலில்லாமல் மங்கலாகவும் நெருக்கமற்றுமே இருந்தது.

ஒரு நாள், 1958க்குப் பிறகு, ஒரு நூடுல்ஸ் கடையின் முன்பு வரிசையில் நின்றிருந்தேன். திடீரென்று என்னில் ஓர் உணர்வு. பல நாட்களாக மூங்கில் சத்தத்தைக் கேட்கவில்லை நான். இருளின் நிசப்தத்தை உடைத்த அந்தத் தாளம் என்னவாயிற்று? கொஞ்சம் வெட்கமாகக் கூட இருந்தது. அவ்வோசை இல்லாது போனதற்கு நானும் ஒரு சிறு காரணம் என்பதைப் போன்ற அலாதியான ஓர் உணர்வு. வலதுசாரிகள் எதிர்ப்பு இயக்கத்தில் இயங்க ஆரம்பித்ததிலிருந்து என்னால் என் பழைய பரிச்சயங்களையும் ஒட்டுதல்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது போனது. சோஷியலிஸம் ஒரு வித சீரான ஒற்றுமையை வேண்டி நின்றது. ஆகவே, சிறு தெரு வியாபாரிகள் இரவுகளில் உலாத்துவது சரியல்ல. எனக்கு ஜூ யுவாந்தாவை நினைத்து மகிழ்ச்சி தான். பரம்பரைத் தொழில் என்ற தளையிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைத்திருந்தது. நிச்சயம் இனி அவனுக்கு முன்னேற்றம் தான். வாழ்வில் வளம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால், விஷயம் முற்றிலும் வேறாக இருந்தது. ஜூ யுவாந்தா பகிங்கிரமாக மூங்கில் தாளம் இசைத்துச் செய்த அதே வியாபாரத்தைப் பதுங்கிப் பதுங்கி குட்டி சந்துகளில் செய்து வந்தான். வசந்தத்தில் சிவப்பு செர்ரிப் பழங்கள் விற்றான். இலையுதிர் காலத்தில் கடலை வகைகளையும் கொட்டை வகைகளையும் விற்றான். கோடையிலோ தர்பூசணிப் பழம் விற்றான். பனிக்காலத்தில் அவன் தன் வீட்டின் கீழ் தளத்தில் ரகசியமாக சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைச் சுட்டு விற்றான். சில நேரங்களில் அவன் கோஸ், முளைகட்டிய ஸோயா, உயிருள்ள கோழி, மீன் மற்றும் நெத்திலி மீன் போன்றவற்றை விற்றான்.

இன்றும் என் நினைவில் இருக்கிறது. ஒரு மத்திய இலையுதிர்கால விழாவின் போது எங்களின் அலுவலகத்தில் வலதுசாரிகள் எதிர்ப்புவாதிகள் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நானும் வலதுசாரி எண்ணமுடைய ஒருவரிடம் தீப்பொறி பறக்கும் விவாதமொன்றில் சொற்களை அள்ளி விட்டிருந்தேன். வீட்டை அடைந்ததும், நிலா தெளிந்து வானில் மேலேறியிருந்தது. ‘ஓஸ்மந்தஸ்’ பூக்களின் வாசம் ஊரெங்கும் வீசியது. நிலவொளியோ நீரைப் போலத் துலங்கியது. எனக்கு விநோதமான உணர்வெழுந்தது. போராட்டமோ மூர்க்கமாக இருந்தது. அதே நேரத்தில் சுற்றிலும் ஒவ்வொன்றும் மென் அழகில் ஒளிர்ந்து கவர்ந்தது. உலகமே தொடர்பில்லாத முரண்களைப் போலிருந்தது.

ஒரு கற்பாலத்தைக் கடந்தபோது, ஜூ யுவாந்தா பாலத்தின் மறுமுனையில் நிற்கக் கண்டேன். அங்கே ஒரு கடை விரித்திருந்தான். கொழுந்து தாமரை விதைகள்மற்றும் செக்கச் சிவந்த நீர்க்கொட்டைகள் நிறைந்த கூடை ஒன்றை வைத்திருந்தான். உடனே நின்றேன். அவை யெல்லாமே அரிய வகைப் பொருட்கள். உண்மையில் வீட்டுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொண்டு போகவே விரும்பினேன், ஆனால், தயங்கினேன். ஏனெனில், என் முன் இருந்தது அரசாங்க அங்காடி இல்லை. ஒரு கருப்புச் சந்தைக் கடை.

ஜூ யுவாந்தா முன் வந்தான். “காம்ரேட் காவ், ஏன் நீங்கள் கொஞ்சம் வாங்கிக் கொண்டு போகக் கூடாது? இதோ, மிகவும் தளதளவென்று இருக்கிறது. அரசாங்க அங்காடிகளில் இதெல்லாம் கிடைக்காது. கிடைத்தாலும் இவ்ளோ நல்ல தரமாக இருக்காது. அங்கே இவ்ளோ சிவப்பா எங்க இருக்கு? கடிச்சாலும் பல்லு போயிடும். சுருங்கிப் போய் கொஞ்சம் நாற்றம் கூட அடிக்கும்” என்றான். ஒரு சிறு கூடையை எடுத்து என் முன்னே குலுக்கிக் காட்டினான். அவன் முன்பு போலவே வாயடித்தான். அதே போன்ற வாடிக்கையாளர்களை இழுக்க முயலும் பேச்சு.

நான் கேட்க ஆரம்பித்த சில கணத்திலேயே விநோதமான ஒன்று புரிந்தது. வலதுசாரிகள் போலவே பேசினான் அவன். சோஷியலிஸத்தை இழிவாகப் பேசினான். ஜூ யுவாந்தாவுடன் இன்னொரு சொற்போருக்கு நான் தயாராகவில்லை. ஆனால், அவனை எச்சரித்திடவென்று சில சொற்கள் மட்டும் சொன்னேன்.

“நீ என்ன பேசறன்னு இனிமே கவனமாயிரு ஜூ யுவாந்தா. இந்தச் சில்லறை வியாபாரத்திலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளிய வா. இது முதலாளித்துவம். நாட்டின் இவ்வகையான முதலாளித்துவ கூறுககள் சீக்கிரமே முற்றிலும் அழிக்கப் படவிருக்கின்றன!” அவன் திடுக்கிட்டான். “என்ன! என்னை மாதிரி சிறு வியாபாரிகளைக் கூட கைது செய்வார்களா?”.

“உன்னையெல்லாம் கைது செய்ய மாட்டார் கள். ஆனால், வெகு சீக்கிரமே முதலாளித்துவச் சுவடு நிறைந்த ஒவ்வொன்றுமே ஒழிக்கப் படும்.”

அவன் சிரிக்க ஆரம்பித்தான். “பொறுங்க, பொறுங்க இதையெல்லாம் அழிக்கு முடியாது. இதை வாங்க ஆள் இருக்காங்க. அதனால, இதை விற்கவும் ஆள் இருப்பாங்க. அரசு அங்காடிகள் இவ்வகையானவற்றை விற்காவிட்டால் முதலாளித்துவம் அழிந்து விடுமா?”.

“எப்படி அழியும்? ச்சியாங் கேய் ஷெக்கின் மில்லி யன் கணக்கான படை வீரர்கள் அழிக்கப்பட்டார்கள். உன்னைப் போன்ற சிறுவியாபாரிகளைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையே இல்லை!”, என்று நானும் வழக்கமாச் சொல்வதையெல்லாம் எடுத்து விட்டேன். அதில் பொதிந்திருந்த உண்மையை யாராலும் சகித்திட முடியாது.

ஜூ யுவாந்தா குனிந்து பணிந்தான். “நிச்சயமா, நிச்சயமா, காம்ரேட் காவ். நான் அறிவிலி. உலக வழக்கங்களை நான் அறியேன். உங்களையே வழிகாட்டி யாக இப்போதிலிருந்து ஏற்பேன்”, என்று சொல்லிக் கொண்டே கூடைகளைத் தோளில் எடுத்துக் கொண்டு அவனை நான் கைது செய்து விடுவேனென்று பயந்த வனைப் போல விடுவிடுவென்று அவ்விடத்தை விட்டு அகன்றான்.

தட்டுத் தடுமாறிப் போனவனையே பார்த்தேன். கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. சாம்பலின் ருசி ஏற்பட்டது என் நாக்கில். எத்தனை நாட்கள் பல வருடங்களுக்கு முன்பு அவனின் கம்பத்தினருகில் நின்று கிண்ணம் கிண்ணமாக வான்தான் தின்றிருக்கிறேன். எப்படியும் அவன் ஒழிக்கப்படுவான் என்று நினைத்தேன்? உண்மையில் எங்களிடையே ஒருவித அன்பு ஏற்பட்டிருந்தது. ஜூ யுவாந்தா மறைந்து போனான் கண் பார்வையிலிருந்து எப்படி ஏற்பட்டது எங்களிடையே இந்த இடைவெளி?

அவனை மீண்டும் சந்தித்திட விழைந்தேன். சிரித்துத் தலையாட்டி, ஒரு சில நல்வார்த்தைகளை பேசிடவும் எங்களின் நட்பு இன்னும் இருக்கிறது என்ற செய்தியைச் சொல்லிடவும். எதிர்பாராத விதத்தில் அவன் தான் என்னைச் சந்திக்க வந்தான். எனது மூங்கில் இருக்கையில் கவனமாக உட்கார்ந்தான். இருக்கையைத் திருப்தியாகப் பார்த்தான்.

“காம்ரேட் காவ், இப்போது வசதியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. ஒரு நாள் உங்களுக்கு உடம்பு சரியில்லாமல், நான் வான்தான் கிண்ணத்தை மேலே கொண்டு போய் உங்களுக்குக் கொடுத்தேன் நினைவிருக்கிறதா? அன்று ஒரே ஒரு பலகைப் படுக்கையும் உடைந்த மேசையும் மட்டுமே இருந்தது. கொஞ்சம் பரிதாப நிலை.”

எனக்கும் கூட நினைவு வந்தது. ஆனால், சிரிக்காமல் நினைவு கூர்ந்தேன். எனக்குள் யோசித்தேன். ‘எதற்கு வந்திருக்கிறான்?’ உண்மையைச் சொல்லப் போனால் வலதுசாரி எதிர்ப்பியக்கத்தில் சேர்ந்தது முதல், எனக்கு யாரிடமும் நட்பு கொண்டிடவே பயமாக இருந்தது. பிரச்சனை முளைத்தால் என்னைத் தற்காத்துக் கொண்டு நிரூபிக்க மிகவும் சிரமமாகிவிடும்.

ஆனால், ஜூ யுவாந்தா முகத்திலிருந்தே மனதில் இருப்பதை அறிந்துக கொள்ளக் கூடியவன். சட்டென்று தனது வருகைக்கான காரணத்தை விவரித்திட ஆரம்பித்தான்.

“காம்ரேட் காவ், எனக்கு வேற வழியில்ல. உங்களை மட்டும் தான் எனக்குத் தெரியும். சொற் களிலும் பேச்சிலும் வல்லவர் நீங்கள். எனக்கு எழுதித் தரக் கேட்க தான் வந்தேன்.”

“எழுதவா?”, எழுதிட எனக்கு மேலும் பயமாக இருந்தது. “ஒரு சுய விமர்சனம்.”

அது பரவாயில்லை. அதை அவனுக்குச் செய்து தந்திடத் தடை எதுவுமில்லை. “என்ன குற்றம் உன் மேல்?”

“இலாபம் ஈட்டல். வேற என்ன?”, இதைச் சொல் லும் போது கொஞ்சமும் அவனை அது பாதிக்காத மாதிரி சொன்னான். நான் பெருமூச்செறிந்தேன். “யானை விலைக்கு விற்பதும்!”

“உண்மையில் அப்படியில்லை. நான் என் மீன்களை நாற்பது காசுகளுக்கு ஒரு எடை வாங்குகிறேன். அதை அறுபது காசுகளுக்கு விற்கிறேன். இரவெல்லாம் அலைந்து திரிந்து விற்று மொத்தமாகவே இரண்டு மூன்று யுவான்களை மட்டுமே ஈட்டுகிறேன். உங்களுக்கு இதைக் கேட்கப் பிடிக்காது. காற்று வாங்கிய படியே உட்கார்ந் திருக்கும் நீங்கள் என்னை விட அதிகமாகச் சம்பாதிக் கிறீர்கள்.”

இது என்னை மிகவும் அசௌகரியப் படுத்தியது. “அப்படியான ஒரு ஒப்பீட்டை எப்படி உன்னால் செய்ய முடியும்? நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம். நீயோ உனக்காக காசு சம்பாதிக்கிறாய்!”

அவன் ஏற்கவில்லை. “நான் மக்களுக்கு சேவை செய்யவில்லையா? நான் சேவை ஆற்றாமல் அவர்களுக்கு சமைக்க மீன் எப்படிக் கிடைக்கிறது?”

அடேயப்பா! இந்த விநோத நியாயத்தை எதிர்ப்பது தான் எப்படி? நான் எழுந்தேன். விரலை நீட்டிச் சுட்டிக் கொண்டே, “நீ சரியான விலைக்கு விற்றால், சேவை ஆற்றுவதாகும். அதிக விலைக்கு விற்றால் ‘கொள்ளை லாபம்’ என்று தான் சொல்ல வேண்டும். இது மிகவும் தீவிரமான விஷயம்.”

ஜூ யுவாந்தா சட்டென்று எழுந்தான். தன் நிலையை உணர்ந்தாற் போலிருந்தான். காற்று முழுவதும் போன பலூனைப் போல ஆகியிருந்தான்.

“நிச்சயமாக காம்ரேட். ஆனால், உங்களுக்கு வியாபாரம் தெரியாது. விலைகளும் புரியாது. நியாய விலைக் கடையில் இருக்கும் பொருட்களின் தரம் உயர்ந்தது என்று சொன்னால் எங்களுடையவை அதைவிடப் புதியதும் உயர்ந்ததும் என்பேன். அங்கு ஒட்டியிருக்கும் விலையெல்லாம் ஏமாற்று வேலை. அத்தனையும் பொய்!”

‘என்ன துணிச்சல்!…’, கோபப் படாமல் என்னையே நிதானத்தில் வைத்துக் கொள்ள முயன்றேன். அதையும் தாண்டி முன்னால் போனேன் சட்டென்று.

சரணடைந்து விட்டதை உணர்த்திட, ஜூ யுவாந்தா உடனே பாரம்பரிய முறையில் கையைக் கட்டிப் பணிந்து நின்றான்.

“சரி, சரி. நான் பேசல. ஆனால், தயவு செய்து என்னுடைய சுயவிமர்சனத்தை மட்டும் எழுதிக் கொடுங்கள்.”

“நீ ஒரு தவறும் செய்திடாத பட்சத்தில், விமர்சனம் எதற்கு? நான் எழுதித் தர மாட்டேன்.”

ஜூ யுவாந்தா என் ஆடையைப் பிடித்துக் கொண்டான். தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை உருவி எடுத்தான்.

“கோபப் படாதீங்க. சரி, தவறு என்னுடையது. நான் ‘முதலாளி’ தான்!. உங்களுக்கு என்ன எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுங்கள். கொஞ்சம் அலங்காரங்களும் சேருங்கள். என் பதின்பருவத்தி லிருந்தே நான் உங்களை அறிவேன் இல்லையா நண்பரே!”.

இது என்னைக் கொஞ்சம் நெகிழ்த்தியது. மேசை யில் உட்கார்ந்தேன். பேனாவை எடுத்தேன். “மீண்டும் சட்டத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டேன் என்று உறுதி கொடுப்பாயா?

“சரி… சரி உறுதி கொடுக்கிறேன். கொஞ்சம் புத்திசாலியாகி இருப்பேன் அடுத்த முறை.”, என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினான் என்னைப் பார்த்து, சிறுவயதில் இருந்த அதே குழந்தைத் தனத்துடன். எடுத்த பேனாவைக் கீழே வைத்த படியே, “இங்க பாரு. நீ ரொம்ப புத்திசாலின்னு நெனைக்காத. நீ ரொம்ப நல்ல உழைப்பாளி. பொறுமை சாலி. கடை ஊழியராகவோ, கூலியாகவோ நீ ஏன் சேர்ந்திடக் கூடாது? அது ஒன்றும் இழிவான வேலையில்லை. பெருச்சாளி மாதிரி ஏன் இப்படி ஒளிந்து ஒளிந்து பிழைக்க வேண்டும்?”

அவனின் முகம் இருண்டது. மூங்கில் இருக்கை யில் பேசாமல் உட்கார்ந்திருந்தான். கைகளை மார்பின் குறுக்கே கட்டியிருந்தான். சில கணங்களுக்குப் பிறகு, “அ… அது .. அது முடியாது”, என்றான்.

“ஏன்?” என்றபடியே நான் என் இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு அவனுக்கு விவரித்திடும் எண்ணத்தில் அருகில் போனேன்.

“சுயநல எண்ணம் தான் எல்லாப் பிரச்சனை களுக்கும் மூலகாரணம். எல்லாக் குற்றங்களுக்கும் அது தான் வேர். முதலாளித்தவம் அதில் வளரும் மரம். திருந்திட மிகவும் திடமனம் வேண்டும். இலாபம் ஈட்டிடும் நோக்கத்திலிருந்து பொதுநலச் சிந்தனைக்கு வருவது கடினம் தான். படித்த எங்களைப் போன்றோரையே எடுத்துக் கொள். எங்களுக்கே சீர்திருத்தத்தை ஏற்கவும் பழகவும் கஷ்டமாகத் தான் இருந்தது.”

ஆச்சரியப் பட்டான். “உங்களுக்கும் பிரச்சனையா?”

“ஆமாம். ரொம்பக் கஷ்டம்.”

“இல்லை, இல்லை. சும்மா சம்பிரதாயத்துக்கு சொல்லாதீர்கள். நீங்களும் உங்கள் மனைவியும் அரசாங்க வேலையிலிருக்கிறீர்கள். நீங்கள் மாதா மாதம் ஒரு நூறு யுவான்கள் ஈட்டுகிறீர்கள். உங்கள் கஷ்டங்களை நான் ஏற்றிடத் தயார். நான் ஏழாம் சொர்க்கத்தில் இருப்பேன்!”

“ஏன்… ஏன்… ஏன் நீ ஒரு வேலை தேடிக் கொள்ளக் கூடாது? ஊழியனாக ஒரு தொண் டூழியனாக..”, எனக்கு முட்டாளைப் போல உளறுவதைத் தவிர வேறு தெரியவில்லை.

“வேலை தேடிக்கிறதா? வேலை பற்றிய நெளிவு சுளிவுகள் தெரியாமல் என்னால் வேலையில் எப்படி இருக்கவோ ஈட்டவோ முடியும்?”.

“உனக்கு… ம்.. உனக்கு சுமார், முப்பது நாற்பது யுவான்கள் கிடைக்கும்.”

ஜூ யுவாந்தா குதித்து நின்றான். “காம்ரேட் காவ், எனக்கு நான்கு குழந்தைகள் இருக்கு. தவிர, அப்பாவும் அம்மாவும் வேற என்னோட இருக்காங்க. எட்டு வயிறு நிறையணும். இந்த முப்பது நாற்பது யுவான்கள் எந்த மூலைக்கு? நான் ஒன்றும் வெட்கங்கெட்டவனில்ல, பணத்தாசை பிடித்தலையல. என் குழந்தைகள் பசியில் அழுவதை நீங்கள் பார்த்த தில்லை. என் மனைவியின் கண்கள் எப்போதும் கண்ணீ ரால் நிறைந்திருக்கின்றன. அதையெல்லாம் பார்த்தால் உங்கள் இதயத்தில் கூரிய கத்தியால் அறுப்பது போல் வலிக்கும். எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. தொண்டை அடைக்க கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

முகத்தில் குளிர்ந்த நீரால் அறைந்தது போலுணர்ந்தேன். மிக உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் வான்வெளியின் அழகைக் கண்டபடி நான் நின்றிருக்க திடீரென்று என் காலடியின் கீழ் சேறு கடலென எழுந்து என் ரசனைமிகு காட்சியை அழுக்காக்கிக் கலைத்தாற் போலிருந்தது. வேறு எதையும் சொல்லத் துணியவில்லை நான். என் மனதிற்குள் ஒரு சுவரை எழுப்புவதைத் தவிர வேறு செய்திடத் துணியவில்லை நான். இது தனி ஒரு மனிதனான ஜூ யுவாந்தா என்பவனின் தனிப் பட்ட வேறு பிரச்சனை. சமாதானம் செய்திட முடியாது. கிடுகிடுவென்று ஒரு சுய விமர்சனத்தை எழுதி அவனின் கையில் திணித்தேன்.

அன்றிலிருந்து நான் என் மனைவி மக்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கினேன். ஜூ யுவாந்தாவிட மிருந்து பொருட்கள் வாங்கிடச் சம்மதித்தேன். ஜூ யுவாந்தா ஒரு முதலாளியாகிடவே வழியில்லை என்றுணர்ந்தேன். நான் பொது நலன் கருதி என்றால், என்னை விட ஏழ்மையிலிருந்த அவனின் பரிதாப நிலையில் அவன் எப்படி ஒரு முதலாளியாகிட முடியும்? தடையற்ற வணிகம் செய்ய மக்கள் நாட்டில் அனுமதிக்கப் பட்ட சில கஷ்ட காலங்களில் நான் ஜூ யுவாந்தாவிற்காக மகிழ்ந்தேன். அந்நேரங்களில் தான் ஜூ யுவாந்தா ஒரு முதலாளியாகிடவே முடியாது என்று உறுதியாகப் புரிந்து கொண்டேன். ஆனால், பிற்பாடு வந்த வர்க்கப் போராட்ட இயக்கத்துடன் இயந்து நடந்திட வேண்டியிருந்தது. அப்போது குழம்பினேன். அவன் ஒரு முதலாளி தானோ! மிகமிகக் குழம்பினேன். அப்போதுதான் உலகையே உலுக்கிய ஒரு பெரிய இடியோசை கேட்டது. கலாசாரப் புரட்சியின் பேரோசைகள் ஒலித்த நேரத்தில் முதலாளித்துவத்தின் முடிவும் வந்தது.

அதெல்லாம் மிகவும் அநியாயமாக இருந்தது. அவரவர் மாத சம்பளத்துக்கு அவரவர் உழைத்திட வேண்டும். ஆட்டு மந்தை போல் பின்னால் போகாமல் அவனவன் யோசித்திட வேண்டும் என்றேன். இப்போது பொதுவில் விமிர்சிக்கப்பட்டவன் நான். நிலைமை மிகவும் மாறிப் போனது. எனக்குக் கோபம் வந்தது. சரி, இனிமேல் கூட்டத்திலிருந்து நான் வேறுபட மாட்டேன். நானும் மற்றவரைப் போலவே இருப்பேன்.

கூட்டத்துடன் கலந்தேன். மிகப் பெரிய எழுத்து விளம்பரங்கள், அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை வாசித்தேன். நாட்டில் நடந்த எல்லா ஊர்வலங்களையும் கண்டேன். எல்லாவற்றையும் காணக் காண திடீரென்று எனக்குள் ஓர் எச்சரிக்கை மணி. வாழ்க்கையை இப்படியா வாழ்வது? சிறு சந்துகளில் வாழ்க்கை எத்தனையோ அதிக சிறப்பாகவும் அமைதியாகவும் இருந்தது. ஆற்றொழுகென வாழ்க்கை சீராக ஓடியது. பெருஞ்சாலைகளைத் தவிர்த்திட ஆரம்பித்தேன். சந்துகளில் நடந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய எழுத்து அறிவிப்புகளும் அறிக்கைகளும் விளம்பரங்களையும் அந்த சந்துகளின் சுவரொட்டிகளிலும் பார்க்க முடிந்தது. ஆனால், அங்கிருந்தவை அதிக வண்ணத்திலோ கவர்ச்சியாகவோ இருக்கவில்லை. காகிதம் சிறிதாகவும் சித்திர எழுத்துக்கள் சீரின்றியும் இருந்தன. யாரும் கவனிக்காத அவ்வெழுத்துக்களை நான் தான் சிரமப்பட்டு படித்தேன். நாளடைவில், பார்த்துப் பார்த்து அவற்றில் இருந்த உள்ளடக்கத்தின் விநோதத்தைக் கண்டு வியந்தேன். பெரிய பெரிய அரசியல் விஷயங்களோ சொற்களோ இல்லாமல் யார் யாரை அடித்தது. யார் இன்னாருடைய முற்றத்தில் அழுக்குத் தண்ணீரைக் கொட்டியது. திருமணமற்ற உறவில், யார் யாருடைய குழந்தையைப் பெற்றாள், யாருக்கு யாருடன் காதல் என்று மிகச் சாதாரண விஷயங்களைத் தாங்கியிருந்தன. மொழியோ மிகத் தரமற்றிருந்தது. ‘வெட்கக்கேடு’, ‘முரடு’ போன்ற சொற்களைப் பாவித்திருந்தனர். என் இதயம் இளகியது அவற்றைப் படித்து. எண்ணற்றோர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஒரே ஒருவனின் முடியைப் பிடித்து இழுத்தாற் போலிருந்தது. எல்லாமே காரணமில்லாமல். சீக்கிரமே, அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு வரவிருந்தது. ஆனால், இந்தச் சின்னச் சின்னப் பிரச்சனைகள் எப்போது தான் தீரும்? எனக்கு அவற்றைத் தொடர்ந்து படிக்கப் பிடிக்கவில்லை. திரும்பி கிழக்கு நோக்கி ஜூ யுவாந்தாவின் வீட்டைக் கடந்து நடந்தேன்.

வீடு அகலத் திறந்திருந்தது. முன்புறம் சன்னல் இல்லை. ஆகவே உட்புறம் வெளிச்சம் இல்லை. திடுக்கிட்டேன். இருளடைந்த வீட்டின் நீள் இருக்கையில் ஜூ யுவாந்தா கைகளைத் தொங்கப் போட்ட படியே நின்றிருந்தான். மேலே கயிற்றால் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தாற் போல அவனின் தலை கவிழ்ந்திருந்தது. பாதி சிரைத்திருந்தது அவனின் தலை. இடது கன்னத்தில் நீலமாய் காயம். பெரிய எலுமிச்சை அளவுக்கு கண் வீங்கியிருந்தது. கதவுக்கு அருகில் காகிதங்கள் ஒட்டப் பட்டிருந்தன. அவற்றில், “முதலாளித்துவத்தின் குகை. ஜூ யுவாந்தா தலையைக் குனிந்து குற்றங்களை ஏற்க வேண்டும்! இருபத்தி நான்கு மணி நேரமிருந்தது அவன் அவனின் சிறுவியாபார உபகரணங்களை ஒப்படைத்திட” என்று எழுதப் பட்டிருந்தது.

அவன் என்னைப் பார்க்கவில்லை. இனி அவனைப் பார்க்கவும் முடியவில்லை. ஏனெனில், அவனின் குற்றங்கள் என்று சொல்லப் பட்டவை குற்றங்களா, யாருக்கு அவன் பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் யோசித்தேன். எனக்கா பதில் சொல்ல வேண்டும்? சொர்க்கத்தைத் திருத்திட நான் யாருமில்லை. அதற்கான திறனும் என்னில் இல்லை. மனசாட்சியில் சிறு குறுகுறுப்பு.

சட்டென்று அவன் வீட்டைக் கடந்தேன். ரொட்டி விற்பவரின் வீட்டின் வாசலில் ஒட்டியிருந்த தையும் சுடுநீர் விற்பவர், முடிதிருத்துபவர், பாதணி தைப்பவர் என்று எல்லார் வீட்டு வாசலிலிலும் ஒட்டப் பட்டிருந்ததை பார்த்தேன்; படித்தேன். உள்ளடக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். எல்லாவற்றிலும் ஒரே கையொப்பம். மிகவும் பிரச்சனையாகிப் போனதை உணர்ந்தேன். மீள முடியாத சிக்கலில் விழுந்திருந்தான் ஜூ யுவாந்தா. கலாசாரப் புரட்சி முதலாளித்துவத்தின் கறைகளை அகற்றிட இறங்கியிருந்தது. அது ஜூ யுவாந்தாவை அழிக்கா விட்டால் வேறு எது அழித்திடும்?

இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, அதிகாரிகள் வந்தனர். சிலரது கைகளில் இரும்புக் கம்பிகள். மற்றவர்களிடம் பளபளக்கும் கத்தி. அதன் பிடியில் சிவப்பு நாடா. குழந்தைகள் அவர்கள் பின்னால்”வீட்டுச் சோதனை! வந்து பாருங்க, வீட்டுச் சோதனை!” என்று கத்திக் கொண்டே போனார்கள்.

மாடியிலேயே தயங்கியபடி இருந்தேன் நீண்ட நேரத்திற்கு. போய்ப் பார்ப்பதா வேண்டாமா? தற்காப்பு நிமித்தம், போய் நின்று சரி எது தவறெது என்று கேள்வி கள் எழுப்பிடும் சிந்தனைகளுக்கு இடம் தராதிருப்பதே நல்லது. ஆனால், போய்ப் பார்க்கத் தான் வேண்டும். ஒரு சாதாரண சில்லறை வியாபாரி வீட்டைச் சோதனை போடப் போகிறார்கள். என்ன தான் கிடைத்து விடப் போகிறது? எதைப் பறிமுதல் செய்வார்கள்?

நான் அங்கே போகும் போது ஏற்கெனவே தங்கள் வேலையைத் துவங்கியிருந்தார்கள். படிப்பாளி யின், அறிவாளியின், அரசு ஊழியரின் வீட்டுச் சோதனை யைப் போன்றதில்லை இது. அங்கேயெல்லாம் ஆவணங் கள், நாட்குறிப்புகள், கடிதங்கள் மற்றும் எழுத்துப் பிரதிகள் தான் தேடுவோரின் இலக்காக இருக்கும். அங்கேயெல்லாம் தேடுதல் வேட்டை நடக்கும் போது வீட்டினர் கௌரவமாகவும் சோகமாகவும் ஓரத்தில் நின்று பார்ப்பார்கள். தங்களின் வாழ்நாளின் முக்கிய பதிவுகள் புகையில் கருகிடுவதைக் காண்பார்கள். மிகவும் புனிதத் தோற்றம் கொண்ட உடைகளில் இருந்த சாத்தான்கள் செய்த வேலைகளைக் காண்பதைத் தவிர வேறு வழியுமிருக்காது.

ஆனால், ஜூ யுவாந்தாவின் வீட்டில் நடந்த சோதனையே வேறு மாதிரி. காட்சி மிகவும் பயங்கரமான தாக இருந்தது. தூரத்திலிருந்தே அழுகையும் அலறலும் கேட்க முடிந்தது. பொருட்கள் உடைபடுவதையும் கிழிபடுவதையும் கூட. இடையிடையே ஏச்சுக்களும்.

ஜூ யுவாந்தாவின் வீடு போர்க் களமாகக் காட்சியளித்தது. உள்ளே, இரைச்சல் காதைக் கிழித்தது. வெளியே தூசி பறந்தது. கீரைக் கூடை வெளியே தூக்கியெறியப் பட்டு கத்தியால் கிழிக்கப் பட்டது. ஏனெனில், அது முதலாளித்துவக் குற்றத்தின் கருவி. கீரை மட்டுமல்லாது. தாமரை விதைகள், மீன் போன்றவற்றை யும் கூட விற்க அது பயன்பட்டது. சிறு பெரும் பாத் திரங்கள், மட்பாண்டங்கள் வீட்டிற்குள்ளிருந்து பறந்து வெளியேறியது. வீதியோரக் கற்களில் பட்டு உடைந்தன. அப்பாத்திரங்கள் ஸோயா முளைக் கட்டவும் அவற்றை விற்கவும் பயன்பட்டன. ஒரு தகர வாளி, இரும்புக் கழியால் உடைத்து வளைக்கப்பட்டது. அது ஏனென்று தெரியவில்லை. ஜூ யுவாந்தாவின் மனைவி மக்கள் ஒவ்வொரு முறையும் வீரிட்டு அலறினர். குழந்தைகள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த கூடை தான் அவர்களைக் காப்பாற்றியதோ. ஒரு பீங்கான் கிண்ணத்தை இறுகப் பற்றியிருந்தாள் மனைவி. அதனுள் பச்சைப் பயிறு இருந்தன. விற்கவென்று வைத்திருந்ததாக இருக்கும். ஒவ்வொரு பொருளையும் காப்பாற்றிட கீழே விழுந்து புரண்டு எழுந்தது பரிதாபமாக இருந்தது. என் கண்களையே நம்ப முடியவில்லை. எப்படி மிக உன்னதக் கோட்பாடு இத்தகைய கீழ்த் தரமான செயலை விளைவிக்கும்.

கடைசியில் ‘வான் தான்’ கம்பத்தை இழுத் தார்கள். ஜூ யுவாந்தா பைத்தியக்காரனைப் போலப் பின்னால் ஓடினான். “உதவி! அதை மட்டும் விட்டு விடுங்கள்!”

அந்தக் கம்பத்தை மிக நன்றாக நான் அறிவேன். அது வெப்பத்தைக் கொணர்ந்து வயிற்றை நிறைத்ததைத் தவிர வேறு ஒரு பாவமும் செய்ததில்லை. அதுவுமில்லாமல் அதன் செதுக்கு வேலைப்பாடு மிகவும் அரியது. துருவி, நீர்வாளி, அடுப்பு, உப்பு, வாசனைப் பொருட்கள், எண்ணை அடங்கிய மரப்பேழை போன்றவற்றுடன் ஒரு சிறு சமையலறையையே தன்னுள் கொண்டிருந்தது. அதை ஆராய்ந்து விமானத்தின் சமையலறையை மேலும் சிறப்பாக வடிவமைத்திடலாம். நேராகச் சென்று அவ்வரிய பொருளைக் காப்பாற்றிடத் தோன்றியது. ஆனால், தைரியம் தான் இல்லை. கத்தியும் இரும்புக் கழியும் சேர்ந்து இயங்கியதில் பறந்த மரத் துண்டுகளையும் மூங்கில் பாகங்களையும் பார்த்துக் கொண்டு நிற்பதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியவில்லை.

முதலாளித்துவ குகை அழிக்கப்பட்ட பின்னர் எல்லா அட்டகாசமும் நின்று போனது. யாரும் அங்கு வந்து ஜூ யுவாந்தாவிடம் சுயவிமர்சனமோ வாக்குமூலமோ கேட்கவில்லை. புயல் ஓய்ந்தது. ஆனால், அவன் பிழைப் புக்கு என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியவில்லை.

மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு நாளின் அந்தி நேரத்தில் ஜூ யுவாந்தா தன் நான்கு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போவதைப் பார்த்தேன். ஒவ்வொருவர் கையிலும் நீள கயிறு இருந்தது. விடியற் காலையில் எல்லோரும் வீடு திரும்பினர். ஒவ்வொரு வரின் முதுகிலும் பழைய காகிதக் கட்டு இருந்தது. ஊரெங்கும் சுவர்களில் ஒட்டப் பட்ட பெரிய எழுத்து அறிக்கைககள் காற்றில் பறந்து வீணாகின. அதையெல் லாம் பொறுக்கினால், ஒரு நாளைக்கு நான்கைந்து யுவான்கள் கிடைத்து விடும். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது உண்மை தான் போலிருக்கிறது! பலரைப் பைத்தியக்காரர்களாக்கி வேறு சிலரை தற்கொலைக்குத் தள்ளிய அதே சுவரொட்டிகள் ஜூ யுவாந்தாவின் பிழைப்புக்கு வழி செய்திடும் என்று யார் தான் நினைத்திருப்பார்கள்! வாழ்க்கை மிகவும் மர்மங்கள் நிறைந்தது.

ஜூ யுவாந்தா தன் மனக் காயங்களையும் உடற் காயங்களையும் ஆற்றிக் கொண்டிருந்த போது நான் போய் அவனைப் பார்த்தேன். வழக்கம் போல் வாயடித்தான். கடந்த காலத்தைப் பற்றி நிறைய பேசினான். “காம்ரேட் காவ், மிகவும் மன்னியுங்கள். நான் உங்கள் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். அக்காலத் திலேயே நான் நினைத்திருந்தால், ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்திருக்கலாம். யூனியன் அலுவலகத் திற்குள் போய் கெஞ்சியிருந்தால், போதும். ஒரு வேலை கிடைத்திருக்கும் கம்யூனிஸ்டுக் கட்சி அப்படியொன்றும் பட்டினி போட்டிருக்காது. மான அவமானமென்னத் துக்கு பார்க்கணும் சொல்லுங்க? காசு கெடைச்சா முகத்தோலக் கூட இழக்கலாம். இதுல மானமாவது, அவமானமாவது? ம்? என்னைப் பத்தி நான் அதிகமா நெனச்சிட்டேன். என் சுய முயற்சியால் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிட நினைத்தேன். இப்போ எல்லாமே சரியாயிடுச்சு. மனைவி மக்கள் குப்பை பொறுக்கு கிறார்கள்” என்று கொட்டித் தீர்த்தான் ஜூ யுவாந்தா. தன் வாழ்க்கையின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது போலிருந்தது.

கொஞ்சம் ஊக்கமிகு வார்த்தைகளைச் சொல் வதைத் தவிர நான் அவனுக்கு வேறு எதையும் கொடுக்க வில்லை. “அமைதி, முதல்ல, உன் உடம்பைப் பார்த்துக் கொள். பிறகு, …ம், அந்த ‘வான் தான்’ கம்பம் உடைக்கப் பட்டது மிகவும் வருந்தத்தக்கது.”

அந்நாட்களில், நாளிதழ்களில் எங்கு பார்த்தாலும் “நமக்கு இரு கரங்களுண்டு, வீணே ஊர்சுற்ற வேண்டாம்'”! என்ற சொற்களைப் படிக்க முடிந்தது. ஏதோ நகரவாசியின் யோசனையும் சொற்களும் என்று சொல்லப் பட்டது. நகரவாசியின் முழுக்க வரிகளுக்கு நான் பெரிய கவனங்களைக் கொடுத்திட நினைக்க வில்லை.

ஆனால், அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் கிராமப்புறங்களுக்கு அனுப்பப் படுவதைக் கவனித்த படியே தான் இருந்தேன். அந்தப் பட்டியலில் நான் இருந்திடக் கூடாதே என்ற அக்கறையும் என்னில் இருந் தது. ஒருவித பதட்டத்திலேயே இருக்க வேண்டிய மிகவும் கொடுமையான நாட்கள் அவை. அதிருஷ்டவசமாக என்னை அனுப்பவில்லை.

கண்களில் கண்ணீருடன் ஜூ யுவாந்தா என்னி டம் விடைபெற்றிட வந்தான். குடும்பத்துடன் ஒரு தண்ணியில்லாக் காட்டுக்கு அனுப்பப் பட்டிருந்தான். அப்போது தான் “நமக்கு இரு கரங்களுண்டு. வீணே ஊர் சுற்ற வேண்டாம்!” என்ற சொற்களின் பொருளே எனக்கு விளங்கியது. வீணே சுற்றியது யார்? ஜூ யுவாந்தாவைப் போல வேலையில்லாதவர்கள். அவனின் சிறு வியாபாரம் வேலையில் சேராது. அவன் சுற்றிகள் பட்டியலில் தான் வருவான். யாரிடமும் உதவி கேட்பது பயனற்றதாக இருந்தது.

இருவரும் பேசாமல் உட்கார்ந்திருந்தோம். என்னைப் பொறாமையுடன் பார்த்தான். நான் அவனை அவமானத்துடன் பார்த்தேன். அவனைவிட எவ்விதத்தில் நான் உயர்ந்தவன்? என்னால் சில இடமாற்றங்களைத் தவிர்த்திட முடியும். ஆனால், அவனால் முடியவே முடி யாது. என்னையும் அனுப்பிட நேர்ந்தாலும் கூட என் சம்பளம் குறையாது.

கிளம்பிடும் முன்னர் ஜூ யுவாந்தா, தன் பையிலிருந்து எதையோ எடுத்து என்னிடம் நீட்டினான். “நேற்று குப்பைகளெல்லாம் கூட்டி சுத்தம் செய்தபோது, இதைக் கண்டேன். அடுப்பெரிக்க இதைப் போட மனமே வரவில்லை. இதை உங்களுக்கு ஒரு நினைவுப் பரிசாகக் கொடுக்க நினைக்கிறேன்” எனச் சொல்லிக் கொண்டே தாளம் இசைக்கும் மூங்கில்களை என் கையில் வைத்தான்.

இரு கரங்களையும் நீட்டி வாங்கிக் கொண்டேன். நுட்பமாக ஆராய்ந்தேன். அரை வட்ட வடிவிலானவை. கிட்டத்தட்ட எட்டடி அங்குல நீளத்தில் இருந்தன. ரகசியங்கள் ஒன்றுமில்லை அவற்றினுள். தலைமுறை தலைமுறையாக வந்த பொருள். வியர்வையும் எண்ணையும் ஏறியேறி ஒரு கருப்பு உலக நிறத்தில் பளபளவென்று இருந்தது. அவன் அங்கு வாழ்ந்தான் என்பதையும் அவனும் மற்றவருக்கு நல்லது செய் திருக்கிறான் என்பதையும் என் நினைவில் நான் இருத்திடத் தான் அதை என்னிடம் கொடுத்தானோ.

சந்திலிருந்து ஜூ யுவாந்தாவும் குடும்பமும் மறைந்தே போயினர். அவர்களின் புறப்பாடு மிகவும் கோலாகலமாக இருந்தது. ராட்சத ஜால்ராக்கள் ஒலித்தன. ‘புகழ்மிகு குடும்பம்’ எனும் சித்திர எழுத்துக்கள் கொண்ட தோரணம் வேறு! ‘முதலாளித் துவக் குற்றங்களின் குகை’ எப்படித் திடீரென்று ‘புகழ்மிகு குடும்பம்’ ஆனது? கண்சிமிட்டிடும் நேரத்தில், கிழட்டுக் கோழி வாத்தாகிப் போனது.

வேறு நான்கு குடும்பங்களும் காணாமல் போயின. ஒன்று அரசு ஊழியரது குடும்பம். மற்ற மூன்றும் சுடுநீர் விற்பவர், முடிதிருத்துபவர் மற்றும் பாதணி தைப்பவர் ஆகியோரது குடும்பங்கள். எல்லோருமே ஊர்சுற்றும் பட்டியலில் சேர்பவர்கள். அப்போதிலிருந்து ஒரு குவளை சுடுநீர் வாங்கிட ஒரு மைல் போக வேண்டியிருந்தது. செருப்புகளைத் தைத்து வாங்க இருபது நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. முதியவர்கள் வீதிகளில் வரிசை பிடித்து மணிக்கணக்கில் நிற்க வேண்டியிருந்தது. மூதாட்டிகள், “நாசமாப் போக, அவர்கள் ஊர் சுற்றித் திரிந்தார்கள் என்றவர்கள், இப்போது அவர்கள் கிராமப்புறங்களில் போய் ஊர் சுற்றுகிறார்கள். சுடுநீரை மறந்து விட வேண்டியதுதான். ஏய் கிழவா, முடி வெட்டவா நெனைக்கற, பேசாம பழைய சீனப் பாணியில் நீளமா வளர்த்துக்கோ” என்றனர்.

எட்டு வருடங்களுக்கு நான் ஜூ யுவாந்தாவைப் பற்றி கேள்விப் படவேயில்லை. இந்த வசந்த காலத்தின் போது தான் கேள்விப் பட்டேன். ஜூ யுவாந்தாவின் இரு மகன்களுக்கு தொழிற்சாலையில் வேலை கொடுத்துக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்று. பிறகு, ஜூ யுவாந்தா திரும்பி வந்திருக்கிறான் என்றும் கேள்விப் பட்டேன். யாரோ ஒருவனின் மூலம் எனக்கு செய்தி அனுப்பி யிருந்தான். என்னிடம் ஏதோ கேட்க இருந்தது என்று. இதைக் கேட்டதுமே, அவன் என்னிடம் கொடுத்த தாள மூங்கில்களைத்தான் கேட்கப் போகிறான் என்று நினைத்தேன்.

அப்போது மீண்டும், மக்கள் ‘சமூக நலச் சேவை’, ‘வர்த்தக வலை’, ‘வான் தான் கம்பம்’ மற்றும் ‘சுடுநீர் விற்பனை’ என்றெல்லாம் பேசத் துவங்கியிருந்தனர். ஒருவேளை திரும்பி வந்திருந்த ஜூ யுவாந்தா தனது பழைய சிறுவியாபாரத்தை ஆரம்பிக்கப் போகிறானோ என்னவோ. நான் அந்த தாளமூங்கில்களை எடுத்துத் துடைத்து வைத்தேன். என் கைகளில் வைத்துப் பார்த்தேன். அதனூடே சிவப்பு மண் அடுப்பின் தணலைக் கற்பனை செய்ய முடிந்தது. சந்தின் முனையில் நள்ளிரவின் ‘டக், டக்’ ஓசையையும் கேட்டிட முடிந்தது. விளக்கு எரிந்த சன்னலினடியின் நின்றது ஓசை. உள்ளே பல்கலை மாணவனான வாலிபனோ, இளம் ஊழியனோ, குளிரில் தவித்த கிழவனோ இருப்பார். முயற்சிகள் எல்லாம் கொடுத்திடாத பலன்களைக் குறித்தும் குடும்பத்தினரின் நல்வாழ்விற்கு உழைத்திட வேண்டிய கட்டாயத்தையும் எண்ணி சலிப்புற்றிருந்தனர். சவால்கள் மிகுந்த வாழ்க்கையை பெற்ற அவர்களுக்கு பசியாறிடவும் உடற் சூடேற்றிடவும் கிடைத்த சிறு வாய்ப்பும் இனிக்கவே செய்தது. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள எனக்கு இருபது வருடங்கள் எடுத்திருக்கின்றன.

மீண்டும் ஒரு அந்திநேரத்தில் வந்தான் ஜூ யுவாந்தா. கதவைத் தட்டியது என் மனைவிதான் போய் கதவைத் திறந்தாள். இருவரும் உல்லாசமாகப் பேசிக் கொண்டே மாடிப்படியேறி வந்தனர். குரல்களும் காலடிகளும் ஜூ யுவாந்தாவின் இளம் வயது குறும்புத் தனத்தையும் மூங்கிலின் தாளத்தையும் போல மகிழ்ச்சி தோய்ந்திருந்தன. இளமை நிரந்தரமில்லை. எனினும், இளமையின் உணர்வுகள் மீட்கப் படக் கூடியவையே.

“ஆஹா, காம்ரேட் காவ், நான் வந்து ஒரு மாசமாச்சு. குடியுரிமை மற்றும் வீடு போன்றவற்றிற்காக அலைந்து கொண்டிருந்தேன். உங்களை வந்து பார்க்க நேரமின்றியிருந்தது. ‘நான்கு குண்டர்’களை விரட்டியிருக்காவிட்டால் இந்த இனிய நாளை வாழ்ந்திட நாம் இருந்திருப்போமா?” முன்பு போலவே,மிகையுணர்ச்சி காட்டி பேசினான்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன் பிரச் சனைகளிலிருந்து விடுதலை பெற்று விட்டான் என்றே நினைத்தேன். “உட்காரு ஜூ யுவாந்தா!”, என்று சொன்னேன்.

மூங்கில் இருக்கையில் உட்கார்ந்தான். மிகச் சிறந்த சிகரெட்டுகளை எடுத்தான். என்னிடம் நீட்டி னான். இருவரும் ஆளுக்கு ஒன்றை புகைத்தோம். ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தான். தனது கிராமப்புற வாழ்க்கையை எட்டு வருடத்தை சொல்ல ஆரம்பித்தான்.

எனக்குத் தான் கதையெல்லாம் தெரியுமே. அது ஒன்றும் உல்லாச வாழ்க்கையில்லை. ஆனால், ஜூ யுவாந்தா சொன்னவிதம் எல்லாமே அவனுக்கு வெற்றி யாக அமைந்தது என்றான். உடைந்த பொருட்களை யெல்லாம் கிடைத்த விலைக்கு விற்றதாகச் சொன்னான். பிறகு என் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டான். சுரத் தில்லாமல், தலையசைத்து, “எல்லாம் அப்படியே இருக்கு. ஏன் ஏதேனும் மாற்றங்கள் செய்யக் கூடாது?” எனக் கேட்டான்.

நான் சிரித்தேன். “பொருட்கள் மாறவில்லை. மனிதன் தான் மாறி விட்டான்.”

“ஆமா, நிச்சயமா. மனிதன் மாறா விட்டால், வாழ்க்கை எப்படிப் போகும்?”

ஜூ தன் புது உடைகளை நீவி விட்டுக் கொண் டான். “பாருங்க என் வாழ்க்கை நல்லபடி மாறியிருக் கில்ல? என் இரண்டு மகன்கள் வேலைக்கு வந்தாச்சு. அரசு வேலை. மகள்கள் இருவரும் கிராமத்திலேயே இருக்கிறார்கள். கூட்டுறவு சங்கத்தில் வேலை. கடைக்குட்டி இருக்கிறான். அவனை நான் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிட நினைக்கிறேன். நான்கு இரும்புக் கிண்ணங்களும் ஒரு தங்கக் கிண்ணமும். இந்தக் கிண்ணங்களை இரும்புக் கழிகள் உடைக்க முடியாது. எல்லாம் சரியாகி விட்டது. நான் இப்போது நிம்மதியாக, மிக நிம்மதியாக இருக்கிறேன். நானே என்னைப் பார்த்து மகிழ்கிறேன்” என்று சொல்லி மனமாரச் சிரித்தான்.

நான் சீக்கிரமே, தாளமூங்கில்களை அவன் முன்னால் வைத்தேன். “மீண்டும் பழைய வியாபாரத்தை நடத்தப் போகிறாய். மிக்க நன்று. உன் வியாபாரம் அமோகமாக நடக்க வாழ்த்துக்கள்!”

நான் சொன்னது புரியாததைப் போல விழித்தான் ஜூ யுவாந்தா. அவனின் முகம் கொஞ்சம் சிவந்தது. தாளமூங்கில்களை தள்ளி வைத்தான். “நீங்கள்… நீங்கள் விளையாடறீங்களா?” அவன் மிகவும் நெளிந்தான். திடீர் கோடீஸ்வரனின் பழைய வாழ்க்கையை வெளியிட்டதைப் போல.

நான் இயல்பாகச் சொன்னேன். “இல்லை, இல்ல வேயில்லை, வியாபாரம் செய்ய இப்போது அனுமதி யுண்டு. உன்னைப் போன்றோரின் சேவை தேவை. உன்னைப் பற்றி நிறைய பேர் கேட்டபடியிருக்கிறார்கள்.”

ஜூ யுவாந்தா நிமிர்ந்து பார்த்தான். “இன்னும் நான் அந்தக் கம்பத்தைத் தூக்கிக் கொண்டு உழைத்திட எதிர்பார்க்கிறார்களா?”

நான் நினைத்தேன், அந்த அரிய கம்பம்தான் உடைக்கப் பட்டு விட்டதே. புதியதாக ஒன்றைப் பாவித்திட உன் மனம் ஏற்காதுதான். “சரி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு விற்கலாமே நீ. முதியவர்களுக்கு அதெல் லாம் மிகவும் விருப்பம். அதெல்லாம் இப்போது எங்கே கிடைக்கிறது?”

ஜூ யுவாந்தா விநோதமாகச் சிரித்தான். என்னைப் பார்த்துக் கண்ணடித்தான். முன்பு போலவே சிரித்துக் கொண்டே பேசினான். “உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தொழிற் சங்கத்தில் கேட்டார்கள். பழைய வியாபாரத்துக்குப் போகிறாயா என்று நான் சிரித்தேன். எனக்குத்தான் தொழிற்சாலை வேலை இருக்கே. எனக்குக் கொஞ்சம் அதில் பிரச்சனை இருக்கு. இருந்தாலும், பரவாயில்லை. முதலில் நான் கதவு திறந்து மூடுபவனாக வேலை செய்ய நினைத்தேன். ஆனால், அவர்கள் என்னை இரும்புத் துகள்களைக் கூட்டி வாரிடும் வேலைக்கு அனுப்பினார்கள். ஏதோ போகிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு அவித்து விற்பதைவிட மிகவும் சிக்கல்களற்றது.”

எனக்குக் கொஞ்சமும் சிரிப்பு வரவில்லை. நான் பெருமூச்செறிந்தேன். “ஏன்? நீ உன் வியாபாரத்தைச் செய்யாவிட்டால், உன் மகனும் செய்ய மாட்டான். அது மிகவும் வெட்கக் கேடில்லையா?

“வெட்கக் கேடு? எதற்கு? ஏன்? நான் இனி யாருக்கும் இழிவானவன் இல்லை.”

“ஆனால், நீ என்றுமே அப்படி இருக்க வில்லையே. நீ மக்களுக்கு சேவைதானே செய்து கொண்டிருந்தாய்.”

“இப்பவும் மக்களுக்கு சேவை தானே செய்து கொண்டிருக்கிறேன். அப்போது முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டியிருந்தது. என்னையும் தான். அந்த நிகழ்வின் போது நான் என் உயிரையே இழந்திருப்பேன்.” திடீரென்று படபடத்தான். அவனின் குரலில் ஒரு நடுக்கம். மீண்டும் சிகரெட்டை எடுத்தான். “வாங்க இன்னொன்று புகைப்போம். அந்த கேடு கெட்ட நினைவுகள் எதற்கு? இன்று நான் இங்கு வந்ததே, உங்களிடம் சில பயிற்சிப் பாடங்கள் கேட்கத்தான். என் மகனுக்காக. ஐந்தாவது மகன். அவன் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுக்குத் தயாராகவிருக்கிறான்.”

பல்கலைக்கழகத்திற்குப் போகட்டுமே. என்ன தடை? சில பயிற்சித் தாட்களின் நகல்களைக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தேன்.

பலமுறை நன்றி சொன்னான். போக வேண்டும் என்றான். முடியும் போது வரச் சொல்லி தன் வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டான். “வாங்க, ஒண்ணும் பிரச்சனையில்ல. எனக்கொன்னும் பணக் கஷ்டமும் இல்ல. இரும்புக் கிண்ணங்கள் மாதா மாதம் நிறைகிறது.”

கதவு கீழே கிரீச்சிட்டது. அனிச்சையாக தெருவைப் பார்த்து சன்னலைத் திறந்தேன். சுடச்சுட வான் தான்கள் விற்கும் வியாபாரியை எதிர் பார்த்தேனோ.

‘டக் டக் டக்’ ஓசையையும் கேட்டிட என் மனம் விழைந்ததோ. ஆனால், ஒன்றும் இல்லை. அங்கே இருளில் மறைந்து கொண்டிருந்த ஜூ யுவாந்தாவும் அவன் கட்கத்திலிருந்த பயிற்சித் தாட்களும் தவிர. கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. அவனின் முன்னால் நான் இதைச் சொல்லத் துணியவில்லை. கடந்த வருடங்களில் அவனை நானும் மற்றவர்களும் காயப்படுத்தியிருக் கிறோம். சீண்டியும் இருக்கிறோம். கடைசியில் எல்லோருக்குமே பிரச்சனைகளில்லாமல் அந்த இரும்புக் கிண்ணத்தை மிகக் கவனமாகக் கைகளில் ஏந்தி சோறு தீராமல் நிறைக்க வேண்டும். மாதக் கடைசியில் கிண்ணம் குறையத் தான் செய்யும். போதாமல் தான் போகும்.

ஆங்கில மொழிபெயர்ப்பு : Ralph Lake (October 13,1979)

சீனச் சிறுகதை லூ வென்ஃபூ (ஆங்கிலத்தினூடாக). தமிழில் ஜெயந்தி சங்கர்.

ஆசிரியர் குறிப்பு: லூ வென்ஃபூ பழமைமிகு அழகிய ஸூச்சாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கே அவர் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். ஊடகவியலாளராக வேலை பார்த்த அவர் எழுதத் தொடங்கினார். ஸூச்சாவின் மரபும் சமூகப் பழக்கவழக்கங்களும் அவரின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. உள்ளூர் மனத்துடன் அந்நகரின் மக்களின் வாழ்வை எழுதினார். 1978ல் ‘பக்தி’ 1980ல் ‘தெருவியாபாரி குடும்பத்திலிருந்து ஒருவன்’, 1983ல் ‘எல்லைச் சுவர்’ என்று எல்லாமே தேசிய அளவில் பரிசு பெற்றவை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *