வேப்ப மரத்தை வெட்டிய போது …

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 11,181 
 

தாயும், குழந்தையும் கட்டிக் கொண்டு இருப்பது போல…குழந்தை பத்துப் பதினைந்து கைகளைக் கொண்டு தாயை இறுக்கிக் கொண்டு கிடப்பது போல…குழந்தையின் அணைப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் தாயும் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல…பூமித்தாயில் வேர்கள் பரந்து படர்ந்து அடி ஊடுருவிக் கிடந்தன. தாயிடமிருந்து பலவந்தமாகக் குழந்தையைப் பிரிதெடுப்பது போலத் தான் இருந்தது அந்த முயற்சி. இரண்டு ஆட்கள் கோடாலியும், கடப்பாரையுமாக அருகில் நெருங்கியபோது மௌனமாக எல்லாவற்றையும் துறந்த ஞானி போல்தான் பார்த்துக் கொண்டு நின்றது எங்கள் வேப்பமரம்.

கருவிகளை நீரில் கழுவி, மரத்தின் அருகில் வைத்து விட்டு, “அம்மா! தாயே! மகமாயி!” என்று சொல்லி மரத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தான் ஆட்கள் வேலையை ஆரம்பித்தார்கள். அதை பார்த்ததும் எனக்குக் கூட கொஞ்சம் சுருக்கென்றது. தவறு செய்கிறோமோ, வேப்ப மரத்தை வெட்டக் கூடாதோ என்று கண நேரம் பயம் தோன்றியது.

ஆனால் மரமோ தானாக முளைத்தது. இந்த ஐந்தாறு வருடங்களாக அதற்கு நீர் ஊற்றி வளர்த்ததென்னவோ வாஸ்தவம்தான். அது முதன் முதல் கிளைகள் விரித்து ஆகாசத் தந்தையையும் அணைக்கும் முயற்சியில் துளிர்த்து, காற்றில் அலைந்த போது மனம் பரவசமானது கூட உண்மைதான்.

ஆனால் எத்தனைக்கெத்தனை அதன் துளிர் இலைகளையும், வசந்த காலம் வந்து விட்டதை உலகுக்கு அறிவிக்கும் அடையாளமாய் பூத்துக் குலுங்குவதையும், காற்றில் பூ வாசனையைக் கலந்து மூலிகைக் காற்றாக வீசுவதையும் பார்த்து, அனுபவித்து, ரசித்து மகிழ்ந்தோமோ,அத்தனைக் கத்தனை வருத்தப்பட நேர்ந்த போது இந்த முடிவை எடுப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

கொல்லைப் புற காம்பவுண்டு சுவருக்கு அருகில் முளைத்திருந்த இரண்டு சின்ன வேப்பங்கன்றுகளில் ஒன்றைப் பிடுங்கி வாசல் பக்கம் ரோடருகில் வைத்து, தினமும் நீர் ஊற்றியும் அது பட்டுப் போனதால், இன்னொன்றை அப்படியே கொல்லையிலே வளர விட்டு விட்டோம். அது வளர்ந்து பெரிதான போது மகிழ்ந்துதான் போனோம்.

இரண்டு மூன்று நாட்கள் அதன் கொழுந்தைப் பறித்து செல்லமாக வாயில் போட்டுக் கொண்டு மென்று, முகத்தைச் சுளித்துக் கொண்டே துப்பினோம். குழந்தைகள் அதன் மெல்லிய கிளைகளை ஒடித்துப் பல் தேய்த்துப் பார்த்தார்கள். தெருவில் யாருக்காவது அம்மை போட்டிருந்தால், வந்து வேப்பிலை பறித்துக் கொண்டு போவார்கள்.வருடப் பிறப்புக்கு பூப்பறித்துக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முறையும் கிளை விடும் போதும் எண்ணி எண்ணிப் பார்த்து மகிழ்ந்தோம். நாங்களும் சொந்த மரத்திலிருந்து முதன் முதலில் பூத்த பூவினால் பச்சடி செய்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். எல்லாம் சரிதான்.

ஆனால் அது துளிர்க்கும் இலைகளையெல்லாம் உதிர்த்த போது வருத்தமாக இருந்தது. ஐயோ, இவ்வளவு இலை முளைக்கிறதே! அவ்வளவும் உதிருமே! பெருக்கி அள்ள வேண்டுமே என்று ஆயாசப்பட்டுப் போனோம்.

பூ, காயான பின் வேலை இன்னும் அதிகமானது. காக்கைகள் வந்து மரத்தில் உட்கார்ந்து கொண்டு, வேப்பம் பழங்களை மூக்கால் பறித்து, அழகாகக் காலில் வைத்துக்கொண்டு கொட்டையை மட்டும் பிதுக்கி முழுங்கி விட்டுத் தோலியை உதறிவிட்டுப் போயின. அவற்றை வேறு கூடை கூடையாக அள்ளி ஏறிய வேண்டி இருந்தது. வேப்ப இலைகளைத் தின்ன சின்னப் பச்சை நிறப் புழுக்கள் வேறு வந்தன. அவை நூலேணியில் ஊசலாடிய போது சொல்ல முடியாத கஷ்டமாக இருந்தது.

ஒரு மழை பெய்ததும், கீழே விழுந்த கொட்டைகள் அத்தனையும் குப்பென்று மரத்தின் கீழ் செடியாக முளைத்து எங்களை பயமுறுத்தின. கொல்லைப்பக்க வீட்டிலிருந்து வேறு இலை விழுவதைக் குறித்தும், பெருக்கி மாளாதது குறித்தும், காம்பவுண்டு சுவரில் வெடிப்பு வந்தது குறித்தும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் புது வருடத்திற்குப் பூப்பறிக்க மட்டும் எங்கள் மரம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. என்ன செய்வது? அண்டை வீடாயிற்றே, சொல்லிக் காட்ட முடியுமா? என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்து விட்டோம். ஆனால் அவர்களைச் சொல்லியும் குற்றமில்லையே!

இருக்கும் சின்னத் தோட்டத்தில் பாதிக்கு மேல் இந்த மரமே அடைத்துக் கொண்டு, இலையும் தழையுமாகக் கொட்டினால் பார்க்கவும் தான் நன்றாக இல்லை. எவ்வளவு தான் வலை போட்டு மூடினாலும், கிணற்றில் வேறு இலையும் பூவும் விழுந்து விடுகிறது. இதெல்லாம் பெரிய கொல்லை இருப்பவர்கள் தான் வைத்துக் கொள்ள முடியும் என்றுமுடிவு எடுத்து விட்டதால் தான் இந்த வெட்டும் ஏற்பாடு.

ஆட்கள் முதலில் மரத்தின் மேல் ஏறிக் கிளைகளை எல்லாம் கழித்து விட்டுக் கீழே இறங்கினார்கள். “ஆ! வேப்பமரத்துக்கு ரெத்தம் வருது!” குழந்தை உரத்துக் கத்திய போது ஓடிப் போய்ப் பார்த்தேன்.

கோடாலி மரத்தின் மேலாகப்பட்ட போது, பட்டை உரிந்து, சிவப்பாக உட்புறம் வெளிப்பட்டது தெரிந்தது. அப்பாடா என்றிருந்தது. அடி மரத்தின் பக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கடப்பாறையால் தோண்டி, மண்ணை வாரிப் போட்டுக் கொண்டே, மேலெழுந்தவாரியாக இருந்த வேர்களை எல்லாம் வெட்டிக் கொண்டே. வந்தார்கள், மேலே கனம் இருந்தால்தான் வேரோடு மரத்தை பிடுங்க முடியும் என்பதால் கணிசமான உயரத்திற்கு, நான்கைந்து கிளைகளின் பாக்கிகளோடு மேல் மரத்தை விட்டிருந்தார்கள்.

ஒரு குண்டு வேர் காம்பவுண்டு சுவரின் அஸ்திவாரத்தையும் தாண்டி கொல்லை வீட்டுக்குள் புகுந்து குசலம் விசாரிக்கச் சென்றிருந்தது. பக்கங்களில் படர்ந்து கிடந்த குண்டு குண்டான வேர்களைத் தவிர, அடியில் மரத்திற்கு நேர் கீழே மரத்தின் அதே பருமனோடு ஒரு பெரிய ஆணிவேர் பாதாளத்தில் நீர் பருகி வரும் எண்ணத்தோடு போய்க் கொண்டிருந்தது. தாய் மரம் இரு கைகளுக்குள் அடங்குமா என்பது சந்தேகம் தான். கீழே வேரும் அதே அளவு குண்டாக இருந்ததைப் பார்த்து ஆட்கள் மலைத்தார்கள்.

வேரை வெட்டும் போது மரம் விழுந்து விடாமலிருக்க, கிணற்றிலிருந்து தாம்புக் கயிற்றைக் கழற்றி மேல் கிளையில் போட்டு முடியிட்டு ஒருவன் இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.ஒருவர் மாற்றி ஒருவர் தோண்டுவதும், பிடித்து இழுத்துக்கொண்டு நிற்பதுமாக இருந்தார்கள்.

கூலி, நூறு ரூபாயிலிருந்து குறைத்து ஐம்பது ரூபாய்க்கு பேரம் பேசியிருந்தோம். இரண்டு ஆட்கள் காலையிலிருந்து வேலை செய்கிறார்கள். இன்னும் முடிந்த பாடில்லை. ஒரு ஆளுக்கு ஒரு நாள் கூலி இருபது ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட இரண்டு பேருக்குக்குமாக நாற்பது போக பத்து ரூபாய் லாபம் தானென்று கணக்குப் போட்டு மகிழ்ந்திருந்த கூலி ஆட்கள், மரத்தின் பிடிவாதத்தைக் கண்டு கொஞ்சம் கலங்கிதான் போனார்கள். இரண்டு செம்பு ஜில்லென்று தண்ணீர் வாங்கிக் குடித்தார்கள். அரை நாளில் முடிந்து விடும் என்று நினைத்தோமே, இப்படி இழுத்தடிக்கிறதே என்று முணுமுணுத்துக்கொன்டர்கள்.

தாயும் குழந்தையுமாக இருவருமே பிடியைத் தளர்த்தவில்லை. பக்கங்களில் இருந்த வேர்களை எல்லாம் வெட்டி எடுத்தாகி விட்டது. மேலேயும் மொட்டையாகக் கீழேயும் மொட்டையாகப் பார்க்கப் பரிதாபமாக நின்றிருந்தது எங்கள் வேப்ப மரம். மீண்டும் துளிர்க்க வழி விடாமல் வேரோடு ஒட்ட வெட்ட வேண்டும் என்று முன்பே பேசி விட்டதாலும், நாங்களும் கூடவே நின்று பார்த்துக் கொண்டிருந்ததாலும், அவர்கள் முடிந்த வரை வேரை வெட்டி, மரத்தைச் சாய்த்துக் குழியை மண்ணைப் போட்டு மூட வழியில்லாமல் போய் விட்டது.

மரத்தின் கிளைகளையும், தாய் மரமான பெரும் கட்டையையும் அவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டதால், கிளைகளை ஒழுங்காகக் கழித்து, அடுக்கி வைத்துக் கொண்டார்கள். மெல்லிசுக் கிளைகளை இலையோடு தூக்கி எறிந்து விட்டார்கள். கட்டைகளையும் அடி மரத்தையும் எடுத்துச் செல்ல வண்டி பேச வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

கலகல வென்று பட்சிகள் சூழ்ந்திருக்கும் இந்த மரத்தை நோக்கி, காலையில் இரை தேடச் சென்றிருக்கும் பறவைகள் திரும்பி வந்தால் என்ன செய்யும்? மரத்தைக் காணாமல் சுற்றித் திரிந்து விட்டு வேறு ஒரு பெரிய மரத்தில் போய் அண்டி விடுமா? அந்த மரத்தில் இருக்கும் பறவைகள் சும்மா இருக்குமா? சண்டை போடுமா? எனக்குப் புரியவில்லை.ஆனால் இனிமேல் பறவைகளின் இனிய கீச் கீச் ஓசைகளும், வாசனை கலந்த குளுமையான காற்றும், பரந்து விரிந்த நிழலும் கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். நாளைக் காலையில் எழுந்திருந்து வெறிச்சென்றிருக்கும் மரம் நின்ற இடத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தால் பகீரென்றது.

எப்படியும் ஆட்களுக்கு நஷ்டம் இல்லை. அடி மரமே ஐம்பது கிலோவுக்கு மேல் இருக்கும். ஐம்பது அறுபது ரூபாயாவது கட்டைகள் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைக்கும். அவர்களே அடுப்புக்கு உபயோகித்தாலும் சரி, விறகுக் கடையில் கொண்டு போட்டாலும் சரி, அவர்களுக்கு லாபம் தான். இதை நினைக்கையில் சந்தோஷமாக இருந்தது. என்னதான் கூலிக்கு வேலை செய்பவரானாலும், கைகள் ஓய்ந்து போக, கொப்பளம் வரும்படியாக கோடாலி பிடித்து, கயிற்றைப் பிடித்து இழுத்து அவர்கள் கஷ்டப்படுவதைக் கூட இருந்து பார்த்த எனக்கு அவர்கள் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் உண்டு என்று அறிந்ததும் அப்பாடா என்றிருந்தது.

எவ்வளவோ ஆசையோடு மேலே கிளை பரப்பி, கீழே வேர் பரப்பி, பூமியில் நிலைத்து நிற்கும் எண்ணத்தோடு வளர்ந்து விருக்ஷமாக உள்ள இந்த வேப்ப மரம், இப்படி அல்பாயுசில் அதனை வெட்டுவோமென்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்குமா? இது தான் சிருஷ்டி மகத்துவம் போலும். நாமும் இப்படித்தானே ஆசைகளை வளர்த்துக்கொண்டு, எதிர் காலத் திட்டங்களைத் தீட்டி கொண்டு, என்றைக்குக் கணக்கு தீர்ப்பான் என்பது தெரியாமல் அறியாமையில் உழல்கிறோம்?

இப்படி என் சிந்தனையைத் தூண்டி விட்டு, எங்கள் வீட்டு வேப்ப மரம் மட மட வென்று கீழே சாய்ந்தது.

– கணையாழி, செப்டம்பர் 1989ல் வெளியானது.

Print Friendly, PDF & Email

4 thoughts on “வேப்ப மரத்தை வெட்டிய போது …

  1. என் வீட்டிலும் வேப்பரம் உள்ளது. அதன் வோ்கள் ஆள்துளை கிணறுக்குள் சென்று விடும் என்று எண்ணி வெட்டலாம் என்று நினைத்தேன். வேப்ப மரத்தை வெட்டிய போது … என்ற சிறுகதையை படித்தவுடன் வெட்டலாமா? வெட்டக்கூடாதா? என்ற யோசனையில் உள்ளேன்.
    எதாா்த்தமும். நடைமுறை வாழ்க்கையையும் சித்தரித்த விதம் மிகவும் அருமை.
    கவிஞா் பழனிபாலா

    1. வணக்கம் கவிஞர் திரு பழனிபாலா. ஆள் துளைக் கிணற்றின் பைப்புக்குள் வேப்ப மரத்தின் வேர்கள் துளைக்க இயலாது என்றே கருதுகிறேன். வாழ்க வேப்ப மரம். நன்றி. – ராஜி ரகுநாதன்.

    1. அற்புதமான கருத்துக்கு நன்றி திரு கருணாகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *