சாஸ்திரம் சம்பிரதாயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 6,976 
 

என்ன சார் இந்த சண்டே ஊர்வனாவா?பறப்பனவா? சத்தமாய் கேட்டார், வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர். சார் சத்தம் போடாதீங்க,வலது பக்கமா இருக்கறவங்க அசைவம் சாப்பிடாதவங்க சார், அது மட்டுமில்லை, சுத்தம், அப்படி இப்படின்னு சொல்றவங்க, அவங்க

கேட்டாங்கன்னா, மனசு சங்கடப்படுவாங்க, சொன்னவுடன் என் மீது எகிறி விழுந்தார் அந்த நண்பர். சார் ஒரு தனி மனிதன் விரும்பறதை சாப்பிடறதுக்கு கூட பயப்பட வேண்டியிருக்கு. நாம சாப்பிடறது அவங்களுக்கு பிடிக்கலியின்னா வீட்டை காலி பண்ணிட்டு போக வேண்டியதுதானே. இவரின் கோபமான வார்த்தையை கேட்டு ஏண்டா இவரிடம் இதை சொன்னோம் என்று வருத்தப்பட்டேன். பிறகு சரி விடுங்க சார், அப்புறம் உங்க வீட்டுல இன்னைக்கு என்ன சமையல், பேச்சை மாற்றினேன். நம்ம வீட்டுல பருப்பு, ரசம்தான்.

ஒரு மாசத்துக்கு அசைவம் பக்கம் போக வேண்டாமுன்னு பார்க்கறேன், பசங்களுக்கு எக்ஸாம் வருதில்லை,சொல்லி விட்டு சிரித்தார். ரொம்ப நல்லது, பசங்களுக்கு எக்ஸாம் டைமுல அசைவம் சேர்த்தாம இருக்கறது ரொம்ப நல்லது, சொல்லிவிட்டு வேறு பக்கம் பேச்சை திருப்பினோம்.

இந்த பக்க வீட்டுக்காரர் சுத்தம், அசைவம் சாப்பிடாதவர், மற்றும் பழைய பழக்க வழக்கங்களை விடாமல் பின்பற்றுபவர்கள், என்றாலும் அவரும், அவர் குடும்பமும்

என் குடும்பத்திடம் பழகுவதில் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. அவர்கள், எங்கள் குடும்பத்து விழாக்கள் எதுவென்றாலும் கலந்து கொள்வார்கள், உணவு விசயத்தில் மட்டும் எங்களிடம் தள்ளியே இருந்தார்கள். அவர்கள் குடும்பத்துக்குள், தொட்டால் தீட்டு,அது இது என்று எதையாவது கடை பிடிப்பார்கள். நான் கூட அந்த வீட்டுக்காரரை கேலி செய்வேன், என்ன சார் இன்னும் பழைய காலமாகவே இருக்கறீங்க.ஒரு காலத்துல உங்க ஆதிக்கம் இருந்ததுனால அதெல்லாம் செல்லுபடி ஆச்சு. இந்த காலத்தில கூட சாஸ்திரம், சம்பிரதாயம், பாக்கறீங்க. சொல்லி விட்டு சிரித்தேன்.

ஆதிக்கம், அது இது அப்படீங்கறதை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது, அதே நேரத்துல பழக்க வழக்கங்கள் அப்படீங்கறது நம்மோட இரத்தத்துல ஊறி வர்றது, அன்னைக்கு எங்கம்மா செஞ்சதை, நான் செய்யறேன், நான் செய்யறதை என்னோட குழந்தைகள் செய்யுது, இப்படித்தான் இந்த பழக்கம் வந்து கிட்டு இருக்குது. நீங்களும் உங்க குலப்படி சடங்குகள் செய்துகிட்டு தான் இருக்கறீங்க, ஆனா நாங்க செய்யறது மட்டும் தான் பெரிய அளவுல விளம்பரம் செய்யப்படுது. நான் மெளனமாய் தலையசைத்தேன்

வரிசையாக நான்கு வீடுகள் ஒரு காம்பவுண்டுக்குள் அமைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் மூவரின் குடும்பங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாகவும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை, பற்றி கவலைப்படாதவர்களாகவும் காட்டி கொள்வோம். எங்களுக்கு இடையில் எப்படியோ இந்த குடும்பம் வந்து மாட்டிக்கொண்டது. மாட்டிக்கொண்டது என்று நான் மட்டும் சொல்கிறேனே தவிர அவர்கள் எங்களுடன் பத்து வருடங்களாக மகிழ்ச்சியாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் மூவர் அவ்வப்பொழுது அவர்களை கிண்டல் செய்தாலும் எங்களுடன் அந்நியோன்யமாக இருந்து கொண்டுதான் இருந்தார்கள்.

அன்று அலுவலகத்துக்கு சென்று அரை மணி நேரம்தான் ஆகியிருக்கும். மனைவியிடமிருந்து திடீரென்று போன் வந்தது, அம்மாவுக்கு திடீரென்று முடியவில்லை. எனக்கு மனசு திக்கென்றது. என்னை பெற்ற அம்மா, வயது எண்பது ஆகி விட்டது. நல்ல திடமாய்த்தானே இருந்தாள். அந்த காலத்தில் அவளும், அப்பாவும் விவசாய கூலிகளாய் இருந்து என்னை உருவாக்கி இருந்தார்கள். என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. நான் கண்ணீருடன் போனை கையில் வைத்துக்கொண்டு நிற்பதை பார்த்த நண்பர், மெல்ல போனை வாங்கி கீழே வைத்து விட்டு மெல்ல தோளை தொட்டு விசாரித்தார். நான் அம்மாவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதை சொன்னேன். கவலைப்படாதே, என்று ஆறுதல் சொல்லிவிட்டு அவரே விடுமுறை சொல்லி விடுவதாகவும் நீ போய் அம்மாவை பார், என்று அனுப்பினார்.

வீட்டுக்கு வருவதற்குள் காரியம் கை மிஞ்சியிருந்த்து. அம்மா, காலையில் நன்றாகத்தான் இருந்தார்களாம், நான் வேலைக்கு கிளம்பிய பத்து நிமிடத்தில் நெஞ்சை அடைப்பதாக கூறியிருக்கிறார்கள். கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த பையன் போய் அருகில் இருந்த கிளினிக்கில் இருந்து மருத்துவரை அழைத்து வருவதற்குள் அவர்களில் தலை சாய்ந்து விட்டது.பையன் மருத்துவரை கூப்பிட சென்ற நேரத்தில் மனைவி எனக்கு போன் செய்திருக்கிறாள். நான் போய் சேரவும் அங்கு மருத்துவர் அம்மா இறந்து விட்டதாக தெரிவிக்கவும் சரியாக இருந்தது. எனக்கு வயது ஐம்பதாகியிருந்தாலும், அம்மா இறந்து விட்டார்கள் என்று கேட்டவுடன் மனசு அப்படியே துவண்டு விட்டது.பையன் சுதாரித்து கொண்டு வைத்தியரை அனுப்பி வைத்து விட்டு மெல்ல வந்து என் தோளை பற்றிக்கொண்டான்..

உறவுகளுக்கு செய்தி சொல்லி ஒவ்வொருவராய் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அம்மாவுக்கு சடங்குகள் செய்ய வேண்டும், வீட்டுக்குள் இட வசதி பத்தாத்தால் வாசலில் வைத்து செய்யலாம் என்று நினைத்தோம். எதற்கும் வலது புறம் இருப்பவர்கள், சாஸ்திரம்

பார்ப்பவர்கள் என்பதால், இடது புறம் இருப்பவர்களிடம் கேட்கலாம் என்று அந்த வீட்டுக்கார அம்மாளிடம் வீட்டு முன்புறம் வைத்து சடங்குகள் செய்யலாமா என்று கேட்டேன்.

எங்க வீட்டுக்கார்ருகிட்ட கேட்டு சொல்றேன் என்று சொல்லி உள்ளே சென்றவர்கள், ஐந்து நிமிடம் கழித்து, எங்க வீட்டுல தீட்டு இருக்காம்,இது மாதிரி வீட்டு முன்னாடி செஞ்சா

குடும்பத்துக்கு ஆகாதாம், அதனால வாசல்ல வச்சு செய்ய வேணாங்கறாரு, சொல்லி விட்டு உள்ளே சென்றாள்

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பத்து வருடம் வசிக்கிறவர்கள், சாஸ்திரம், சம்பிரதாயத்தை பற்றி வாயில் கிழி கிழி என்று கிழிப்பவர்கள், தனக்கு என்றவுடன், தீட்டாகிவிடுகிறது. மனசு நொந்து போய் அதற்கு அடுத்த வீட்டுக்கார்ர்களை பார்க்க அவர்கள் அதுவரை அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் என் பார்வையை தவிர்ப்பதற்காக சட்டென ஏதோ வேலை இருப்பது போல உள்ளே நுழைந்து விட்டார்கள். வருத்தத்துடன் வீட்டுக்குள், செல்ல காலை வைத்தேன். யாரோ தோளை தொட்டார்கள்.

திரும்பினால் வலது புற வீட்டுக்காரர் நின்று கொண்டிருந்தார். சார் என் வீட்டு வாசலில

இடம் இருக்கே சார், உங்க வீட்டு வாசலும், எங்க வீட்டு வாசலும் சரியா இருக்கும். உங்கம்மாவை எடுத்துட்டு வந்து இங்கே செய்யுங்க. சொன்னவர், தன்னுடைய வாசலில் இருந்து குப்பைகளை எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

மற்றவர்களை அவர்களின் சாஸ்திர, சம்பிரதாயங்களை குறை சொல்லும் நாம், நம் மனதுக்குள் பதுங்கி இருக்கும், அதை விட அதிகமாய் இருக்கும் இந்த குறைகளை எப்பொழுது சுத்தம் செய்யப்போகிறோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *