சாருபாலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 13,575 
 

(இந்தக்கதை பற்றிய ஒரு முக்கிய குறிப்பு. இருக்கிறது. அதை இப்போது சொல்லலாமா அல்லது கடைசியிலா என்று யோசித்ததில், கடைசியில் சொல்வது நல்லது என்று படுகிறது)

இன்றைய ஹிந்து பேப்பரில் அந்த போட்டோவில் அது கணபதியே தான். அந்த உருண்டை முகம், பட்டையான விபூதிக்கு நடுவில் குங்குமம், அசௌகரியமாக அணிந்த பாண்ட். இந்த முப்பத்திச்சொச்சம் வருஷத்தில் முகம் மாறவே இல்லை, அந்த குழந்தைத்தனம் அப்படியே உறைந்தார்போல இருந்தது.
SSLC படிக்கும்போது எப்போதும்போல் விவேகானந்தன் சார் கிளாசுக்காக ஆவலோடு காத்திருந்தோம். இன்னிக்கும் புதுசாக எதாவது இருக்கும் என்று தெரியும். போன வாரந்தான் அவரே காசு போட்டு எங்கள் எல்லாரையும் Mary Poppins காசினோ தியட்டருக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தார். இன்னும் நாங்கள் Julie Andrews பற்றியும் Dig Van Dyke பற்றியும் இன்று ஜுஜுபீயாகிவிட்ட அனிமேஷன்பற்றியும் ஸ்லாகித்துப்பேசிக்கொண்டிருந்தோம்.

உள்ளே நுழைந்த விவேகானந்தன் சாருடன் வந்தவன் நாங்கள் பின்னால் அறிந்த கணபதி. குள்ளமான உருவம்.களையான முகம். அதில் நேர்த்தியாக இட்ட விபூதி கற்றை, நடுவில் ஜ்யொமெட்டரிகலான வட்ட வடிவ குங்குமம். முழங்கால் வரை நீண்ட எங்கள் யூனிபார்ம் காக்கி அரைப்பாண்ட் , மேலே மஞ்சள் பழுப்பேறிய வெள்ளை சட்டை அம்மா அல்லது அக்காவின் பின்களின் துணையோடு ஒரு சில பட்டன்களை இழந்திருந்தது.
“இது கணபதி. தமிழ் மீடியம் SSLC க்ளாஸ்தான்.” ரொம்ப நல்லா படிக்கிற பையன். தமிழ்ல உங்க கிளாஸ் top மார்கைவிட ரெண்டு மார்க் அதிகம்’ என்று சிரித்தார் விவேகா சார்.
நாங்கள் அப்போதெல்லாம் தமிழ் மீடியம் பசங்களுடன் அதிகம் புழங்க மாட்டோம். இரண்டு காரணம்,. தமிழ் மீடியம் பசங்க ” டாய் தயிர் சாதம்” என்றுதான் விளிப்பார்கள். இங்க்லீஷ் மீடியத்தில் மட்டும்தான் பெண்கள் உண்டு பதினெட்டு பேருக்கு பன்னண்டு அடுக்காதுடா” என்றும் ஆபாசமாகப்பேசுவார்கள் என்று ஒரு சில புகார்கள் உண்டு. ” அப்படீனா என்னடா” என்று ஒரு முறை சந்திரிகா கேட்டதற்கு, மூர்த்தி மென்னு முழுங்கினான்.

இரண்டாவது காரணம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. எங்கள் ஸ்கூலில் நாங்கள் ஒன்பதாவது வந்தவுடன் கோ எஜுகேஷன் தவறு என்று சில மானேஜ்மென்ட் பிரகிருதிகள் சொல்லப்போய் காந்தி நகர் கிரிகெட் க்ரவுண்ட் இருக்குமே ,அதற்கு பக்கத்தில் இருந்த பெரிய இடத்தில் தனியாக பெண்கள் பள்ளிக்கூடம் கட்டிவிட்டார்கள் . நாங்களெல்லாம் உடைந்து போய் வசுந்தராவையும் கோதைநாயகியையும், ராஜியையும் எப்படிப்பிரிவது என்று உலகே மாயம், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் போன்ற பாடல்களின் மகத்துவத்தை ஆராய முற்பட்டோம். ஆனால் டும்மி கடையில் வெங்காய மூட்டைக்கு மேலே உள்ள அலமாரியில் வைத்திருந்த அமிர்தாஞ்சன் பாட்டிலுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அந்த விதியானது ” பக பக” வெனச்சிரித்திருக்கிறது போலும். பன்னிரெண்டே பெண்களுக்காக தனி வகுப்பு நடத்த முடியாது. ஆகவே இந்த செட்டுக்கு மட்டும் ஒரே கிளாசில் இங்கேயே படித்து விட்டுப்போகட்டும் என்று முடிவு எடுத்துவிட, சுரேந்திரனும் ஈயமும் ஸ்கூல் திறந்த முதல் நாளில் ” உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்” பாட்டுக்கு பகிரங்கமாகவே டான்ஸ் ஆடினார்கள். முதல் நாள் உள்ளே வந்த பெண்கள் முகத்தை கஷ்டப்பட்டு சோகமாக வைத்துகொண்டிருந்தார்கள். சுந்தர்தான், ” ரொம்ப நடிக்காதீங்கடி” என்று சத்தமாக சொல்ல, ஆச்சரியமாக பெண்கள் கோபப்படாமல் சிரித்தது எங்களுக்கு மோகனமாகவே இருந்தது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்

“கணபதியை உங்களுக்கு அறிமிகப்படுத்த காரணம் பப்ளிக் எக்ஸாமில கேள்விகள் தமிழ் மீடியம் சிலபஸ்லேர்ந்து கூட வரலாம். அதனால நீங்க கணபதியோட பேசி அவன்கிட்டேர்ந்தும் சில போர்ஷன்ஸ் காபி பண்ணிக்கணும், அதே மாதிரி, நம்ம சைடிலேர்ந்து கூட அவனுக்கு வேணுங்கறதை காப்பி பண்ணிக்க குடுங்க, சரியா?”

சரி, கணபதி, நீ போ கிளாசுக்கு. நீங்க அப்பறமா மீட் பண்ணி பேசிக்கோங்க’

அவன் கூச்சத்துடன் எங்களைப்பார்த்து புன்னகை போல ஒன்றை சிந்திவிட்டு ஓடியே போய் விட்டான். ஏனோ எங்களுக்கு அவனை அப்போதே ரொம்பவும் பிடித்துப்போய் விட்டது. கருணை பொங்க பார்த்துக்கொண்டிருந்த பெண்டுகள் சைடுலயும் நெலமை அப்படித்தான் என்பது வசந்தாவும் பாரதியும் சிரிப்போடு பேசிக்கொள்வதிலிருந்து புரிந்தது.
விவேகா சார் சற்றே தாழ்ந்த குரலில் , ” இன்னொரு விஷயம். கணபதி ரொம்பவும் கஷ்டப்படுகிற குடும்பம். இவனும் இவனின் அண்ணா ரகுபதியும் பார்ட் டைமா வேலை செஞ்சு சம்பாதிக்கிறார்கள். அம்மா வீட்டு வேலை செய்யறாங்க. உங்களால முடிஞ்சா அவனுக்கு உதவி பண்ணுங்க. நீங்கல்லாம் தொண்ணூறு மார்க் வாங்கறது பெரிசில்லைப்பா. அவன் பாஸ் பண்ணறதே பெரிசு. ஆனா அவன் டாப்பரா இருக்கான். அதனாலதான் அறிமுகம் பண்ணினேன்.”

இதற்குள் எங்க கிளாஸ் தாய்க்குல பக்கத்திலிருந்து க்ளக், க்ளக் போன்ற சம்பிரதாயமான பரிதாப சப்தங்கள் எழ, விவேகா சார்,” அவனுக்கே தெரியற மாதிரி பரிதாபப்படாதீங்க. அவனுக்கு அசௌகரியமாகப்போய்விடும்” என்று எச்சரிக்கையும் செய்தார்.
தாய்மை உணர்வுடன் கிளாஸ் பெண்டுகள் அவனுக்கு உதவ ஆரம்பித்தது வீரம் நிறைந்ததாக கருதப்பட்ட சில பசங்களுக்கு கோபத்தையும், எங்களைப்போன்ற ரெண்டு கெட்டான்களுக்கு பொறாமையும் உண்டாக்கின என்றால், தமிழ் வழக்கப்படி, மிகையாகாது.

” பாவி, மச்சண்டா”. ஒரு நாள் ஔவை என்று நாங்கள் கூப்பிடும் சுகுமார்.

என்னடா ஆச்சு?

“கோதா இன்னிக்கு சக்கரைப்பொங்கல் கொண்டு வந்திருக்கா. ஊட்டி விடல, அதொண்ணுதான் குறைச்சல்”

“போடா. நேத்திக்கு நீ பாக்கணுமே. ராஜி அவன் note book கப்பார்த்து எழுதராளாம். கை உரசறது, இந்த பய நோட்டப்பார்த்து படிச்சிண்டு இருக்காண்டா”. இந்த ராஜியின் வளப்பம் பற்றி நாம் ஏற்கனவே “சந்திரிகா என்னும் கிருஷ்ணம்மா”ளில் அறிந்திருக்கிறோம்.

அவனவனுக்கு அடி வயிற்றில் பத்திக்கொண்டு எரிந்தது என்பதில் சந்தேகமில்லை.

கணபதி அடிக்கடி லஞ்சின் போது எங்கள் கிளாசுக்கு வருவதும் நோட்ஸ் எழுதுவதும் நடந்து கொண்டிருந்தது பாவம், அவன் நிச்சயம் பெண்களுடன் பழகும்போது அதீத கூச்சத்துடன் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. ஓரிரு முறை வசுந்தராவும், சுந்தரும் அவனுக்கு பக்ஷணங்கள் கொடுத்ததும் அவன் மறுத்ததும் அவனின் ஏழ்மையிலும் கௌரவத்தை விட்டுக்கொடுக்காத சுய மரியாதைக்காரனாகவே காட்டியது.
ஒரு திங்கள காலை ப்ரெயர் முடிந்து கிளாசுக்கு போகும்போது ஈயம் ஒரு தாயம் போட்டான். “தமிழ் மீடியம் பிரேம்குமார் கணபதியை அடித்து விட்டான்”. எங்களுக்குமே கோபம் வரத்தான் செய்தது. கணபதியைப்போய் அடிப்பதாவது என்று. கணபதி ராஜியுடன் பழகுவது பார்த்துவிட்டு பிரேம்குமார் ஒரு லெட்டரை அவளிடம் கொடுக்கச்சொல்லி இருக்கிறான். கணபதி மறுத்துவிடவே அவன் தனியாக கோட்டூரில் நடந்து போகும்போது வழியில் மடக்கி மிரட்டினதில், சின்ன கை கலப்பு ஏற்பட்டு கணபதிக்கு முழங்கையில் நல்ல அடி. மொத்த கிளாசும் கணபதிக்கு சார்பாக பேசி பிரேம்குமாருக்கு ரெண்டு நாள் சஸ்பென்ஷன் வாங்கிக்கொடுத்தோம். இதில் முக்கியமாக சுந்தரும் வசுந்தராவும் முன் நின்று வாதாடியதில் அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் அது சக்திதாசன் சம்பவத்தில் உடைந்தது பற்றி நாம் ஏற்கனவே அறிவோம்.
க்வாட்டர்லி பரிக்ஷைக்கு முன்பு ராஜியும் கோதாவும் ” ஆளுக்கு ஐந்து ரூபாய் contribute பண்ணி கணபதிக்கு கொடுக்கலாம். அது அவனுக்கு வீட்டில் தீபாவளி செலவுக்கு உதவும்’ என்று சொன்ன ஐடியா எல்லோருக்கும் பிடித்துப்போக, ரெண்டே நாளில்’ கிடைத்த எண்பத்தி சொச்சம் ரூபாயை கண்டிப்பாக மறுத்து விட்டான். என்ன சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. விவேகா சார் கூட, ” ஆசையாய் தராங்கப்பா , வாங்கிக்கொயேன் ” என்ற போதும் அவன் மசியவே இல்லை. இவங்க என்கூட friendlyஆ பழகறதே எனக்கு பெரிசு சார், இதெல்லாம் வேண்டாம்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டான்.

SSLC ஸ்டடி லீவின் போது இன்னொன்றும் கேள்விப்பட்டோம். வீட்டுப்பக்கத்தில் உள்ள சேரியில் சில கார்பரேஷன் பள்ளி பிள்ளைகளுக்கு ட்யுஷன் எடுக்கிறான். அதுவும் இலவசமாக. இந்த விஷயம் எங்களை நிஜமாகவே ஆச்சரியப்படுத்தியது.
பரிக்ஷைக்கு சில நாட்கள் முன்பு விவேகா சார் எங்களைக்கூப்பிட்டனுப்பி நீண்ட நேரம் பேசினார். வாழ்க்கைக்கான அபூர்வமான வழிகாட்டுதல் அந்தப்பேச்சு. இவரைப்பற்றி தனி வ்யாசமே எழுதலாம். என்ன, சுவாரஸ்யமாக ஒன்றும் இருக்காது, ஆனால் நெகிழ வைக்கும். கடைசியில் அவர், ” நீங்க எல்லாரும் நல்லா வருவீங்க’ எனக்கு கணபதி பத்தித்தான் கவலை .பிற்காலத்துல அவன் உங்க கிட்ட வந்தா உங்களால முடிஞ்சா உதவி பண்ணுங்கப்பா” என்ற போது அந்த வயதுக்கே உரிய தழு தழுப்புடன் உறுதி அளித்தோம்.
கடைசி நாள் get together இல் ” அப்போதைய ஹிட்டான ” ஒரு மல்லிகை மொட்டு’ பாட்டை ரெகார்ட் ப்ளேயரில் மறுபடி மறுபடி போட்டதும், ” சர்த்தான் போங்கடா’ என்ற கித்தாப்பில் மல்லிகா தன ரெட்டைச்சடையை முன்னும் பின்னும் போட்டதையும், சாதுவான மனோகர் கூட அன்று டான்ஸ் ஆடியதும் உங்கள் எல்லா பள்ளியிலும் நடந்த நிகழ்ச்சியின் பிம்பங்கள் போலத்தான். புதுசாக எழுத ஒன்றும் இல்லை.

வேறென்ன சொல்லுவது, அவ்வளவுதான். பள்ளிக்காலம் முடிந்து நாங்களும் பிரிந்தோம். நானும் ராமநாதனும் B Com, CA என்றும், சங்கர் IAS , இன்னொரு சங்கரும் குமாரும் engineering, ஈயம் AC Techஇல் லெதர் technology என்றும் சென்றோம். கணபதி என்ன ஆனான், எங்கே போனான் என்பது பற்றி கேள்விப்படவும் இல்லை, நாங்களும் தேடவில்லை என்ற ஒரு சின்ன குற்ற உணர்ச்சியுடனே இருந்தோம். எல்லோரும் சந்திக்கும்போது நினைத்துக்கொள்ளுவதோடு சரி.

ஹிந்துவில் கணபதி போட்டோ பார்த்ததிலிருந்து ஆரம்பித்தேன், இல்லையா? அதற்கு முன் ” கதையின் ஆரம்பத்தில் நான் சொல்லாமல் விட்ட விஷயம் –

ஈயம் அனுப்பிய ஈமெயில்: விவேகா சார் நேற்று காலமானார்”.
ஹிந்துவில் கணபதி போட்டோ சம்மந்தப்பட்ட செய்தி இதுதான்:
சாருபாலா கம்யுநிகேஷன்ஸ் என்கிற telecom கம்பெனிக்கு இன்டர்நெட் bandwidth, VOIP மற்றும் சர்வதேச அழைப்புகளுக்கான billing ஆகியவற்றில் நடந்த முறைகேடு சம்மந்தமாக ஏற்பட்ட 60 கோடி ரூபாய் இழப்புக்கு காரணமாக இருந்த ………….நிகம் லிமிடெட்டின் AGM கணபதி கைது செய்யப்பட்டார்.

விவேகா சாரின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க போவது பற்றிய குழப்பத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *