கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 5,580 
 

சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, ‘கோழி’என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல் நேராய் சொல்கிறார்களில்லை. எங்களுக்கோ சொந்த மொழி! இந்த தமிழ் மொழி’யை வேற ஒருத்தன் கற்க வாறான் என்றால், எங்களையே குழப்புற மொழியாக வைத்திருந்தால்,அவன் தலையை பிய்க்க மாட்டானா? அறிவு ரீதீயாக பொருந்தாமலும் கிடக்கிறதே. ஆனால்,’சாமச்சேவல்’ என்பதில் ஒரு பொருந்தாமையும் இருக்கிறதாகப்படுகிறது. எங்க’பண்டிதர்களை என்ன செய்யலாம்?’என்ற ஆத்திரத்தோடு சைக்கிளை மிதித்தான். இலக்கணச் சுத்தமாக எந்த மொழியைக் கற்கப் போனாலும் இப்படி இடரப் பட வேண்டி இருக்குமோ? மொழியும்,சுதந்திரமும் உடலும் உயிரும் போன்றது, மொழி எளிமை நல்லதில்லையா?,இந்த சுதந்திரத்திற்காக தானே போராடுகிறோம்.

தேவையில்லாமல் இந்த தொழிற்சங்களும் கூட இப்படி நல்லாய் நேரம் பிந்தி அனுப்புகிறார்களே ‘எனவும் சலிப்பாக இருந்தது.சிலசமயம், இந்த நேரத்தில் வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு போனால் சரோஜா, வில்லி பார்வை பார்ப்பாள். எதுவும் சொல்ல மாட்டாள். முகத்தில் அத்தனை கடுகடுப்பு பொரியும்.முகம் கொடுக்கிறதே சிரமமாய் கிடக்கும்.குட்டித் தேவதை எதுவும் அறியாமல் நித்திரையில் கிடக்கும். அவனுக்குப் புரியாமல் இல்லை.ஆனால்,வெளியில் நிலவுற சிங்கள அரசியல் எங்க சமானிய வாழ்வையும் குலைத்து விட்டிருக்கிறதே! அதை யாரிடம் போய் முறையிடுவது?

சர்வதேசம் வேண்டாம்,இந்த சார்க் நாடுகள், ஆசிரியர் போன்ற தன் பொறுப்பை சரியாய் நிறைவேற்றுகிறதா? இல்லையே !,அவர்களுடைய அரசியலை செருகிக் கொண்டு ‘நிகழும் கில்லட் பிளேட் கொலைகளை’ எல்லாம் வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கிற பத்தோடு பதினொன்றான நாடுகளாக நிற்கின்றனவே.

முட்களாய் மாறிப் போய்க் கிடக்கிற வாழ்வை மாற்ற வேண்டியது அவசியம்? ஆனால் முட்களை மாத்திரமே… கொண்டு வந்து கொட்டுறார்கள்.அது சுதந்திரம் கிடைக்கும் என்பதையே சந்தேகக்கிடமாக்கி விடுகிறதே.பாரதப் போரில் வந்தது போல கண்ணண்,மனித உருவில் எங்க போராட்டத்திற்கும் இரங்கி வர வேண்டுமோ? ஏன் இந்த நிலை?. ஏன் தான் சிங்களவர்கள் இப்படி வெறுக்கிறார்களோ? கொலையே செய்யும் அளவுக்கு அப்படி என்ன தப்பை நாம் செய்து விட்டோம்?, எங்களுடைய உடலை, கசாப்புக் கடைக்காரன் போல வதைகளுடன் கோரமாக வெட்டித் தள்ளுகிறதிலும், உயிரை எடுக்கிறதிலும் ஒரு ரசனையே பெற்று காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறார்களே!

இந்த கொடூரங்களை பார்த்து வார நாம்,பிறிதொரு சமயத்தில் சுதாரிக்கிற போது,இவர்கள் மேல்… அல்லாவிட்டால், வேறொரு மக்கள் மேல் அப்படியே..அல்லது அதற்கு மேலேயும் போய் பிரயோகிக்கப் போறோமே! வரலாற்றுச் சக்கரம் அப்படி தானே சுற்றுகிறது. இன்று யூதர்கள் கொடியவர்களாகி இருக்கிறார்களே, அதே மாதிரி..!

புத்தர்கள்,காந்திகள் தொண்டைத் தண்ணீர் வற்ற சொல்லியவை எல்லாமே வீணாய் தானே போய்க் கிடக்கிறன. புத்த சமயத்தை பின்பற்றுறதுக்கும் ஒரு தகுதி வேண்டும். இந்த சிங்களவர்களுக்கு ..தகுதி இல்லை.

எல்லா மனிதனுமே,சிங்களவர் உட்பட ..சாகத் தான் விரும்புகிறார்கள் .ஆனால்,இப்படி வலியுடனும்,அரை உயிருடன் இருந்து தவியாய் தவித்து துன்புற்று அல்ல. சே! யாராவது கெட்டுப் போன இந்த அரசியலுக்கு சாவுமணி அடிக்க மாட்டார்களா?கடவுள், கேளாதவர் போல இருக்கிறார் என்பதால் நாம் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். காந்திமுறையில் தானாக மாறும் எனக் காத்திருந்தால்..,நடக்கிறது மாதிரியும் காணோம்! பழைய அரசர்களின் கோரத்தைத் தாளாமல் ‘ஜனநாயக ஆட்சி முறை மலர்ந்தது என சந்தோசப்பட்டால்’..,இங்கேயும் சிங்களவர்கள் குறும்புத்தித் தனமாக அந்த பழைய அரச பயங்கரவாத்ததையே மீள கொண்டு வந்து விடுகிறார்கள்.சிறிலங்காவில்., ஜனநாயகம் தோல்வி அடைந்திருக்கிறது. தற்போது, அதற்கு நம் இனம் மட்டுமே விலை கொடுக்க வேண்டியும் இருக்கிறது.

நினைக்க நினக்க அலுப்பாக இருந்தது. இயல்பாய் வாழ்ற குடும்பசந்தோசமும் ஒரு கனவாய் போய் விட்டது.நாம் விடுற பெருமூச்சுக்கள் சேர்ந்தே ஒரு புதிய வாயு தோன்றி விடப் போகிறது.சிரிப்பும் வந்தது.

அவன் என்ன விருப்பத்துடன் அரசியலில் அலைந்து கொண்டா… இருந்தான்? ,இங்கேயே படித்து ஒரு நல்ல வேலை எடுக்க வேண்டும் என்ற பிரயாசை மட்டும் தானே இருந்தது .பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகவில்லை தவிர ,அவன் சமூகத்தில் ‘படித்தவன். அவனிடத்திற்கு வாற வேற சாதியர், கிளியண்ணேயின் பிரதான சீஸ்யன் என்று அவனையே பேசுவதற்கு முதலில் தேடுவார்கள்.

ஈழத் தமிழர்களாகி நமக்கு ஒரு அரசாங்கம் இருந்தால் கிராமத்தில் இன்னும் எவ்வளவு சிமார்ட்டாக இயங்குவோம். நகரசபையில் எங்களுடைய அங்கத்தவர் இல்லை. இல்லாததால் எத்தனைப் பிரச்சனைகள். மாகாண நிர்வாகத்திற்கு தேர்த்தலில் தெரிகிற அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் கவனத்தில் எடுப்பதில்லை.நம் அரசியல்வாதிகள் நம்மக்கள் மத்தியிலே மதிப்பிழக்கிறார்கள். பிறகு சேவை செய்ய எப்படி மனம் வரும்?செயலில்லாமல் அனுபவங்கள் ஏற்படாது.ஒரு கிராமம்,நகரம்,வட்டம்,நாடு முன்னேற அனுபவப் பாடங்கள் வேண்டுமே.

அரசு,ஜி.ஏ,எ.ஜி.ஏ,ஜி.எஸ்..என தனக்கு என ஒரு நிர்வாகத்தை முட்டாள் தனமாக வைத்துக் கொண்டு(வீணாக சம்பளமும் கொடுத்துக் கொண்டு)பம்மாத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது.எல்லா தேர்தல்களையும் எடுத்து விட்டு ஜனாதிபதிக்கு மட்டும் தேர்த்தலை வைத்துக் கொண்டு ராஜ தர்ப்பார் நடத்தலாமே! உண்மையில் அப்படித் தான் இருக்கிறது.தன் கட்சிக்காரன் ஆட்சியில் இருந்தால் அபிவிருத்தி..,எதிரானவனானால்…பிரச்சாரம்(விமர்சித்தல்) செய்தல் எனவே கிடக்கிறது.

தமிழர் நிலங்களில் காட்டுத் தர்ப்பாரே செய்கிறது. சிங்கள பொலிசாரை இங்கே அனுப்பி.. தமிழர்களின் சொத்துக்களான நூலகம்,சந்தை,கடைகளை…எரித்தல், அவற்றை காப்பாற்ற தவிப்பவர்களையும் கிட்ட நெருங்க விடாது முழுமையாக எரிய வைக்கிறவர்களாக சண்டித்தனம் செய்தல்,.கடவுள் எல்லாத்தையும் பார்த்து குறித்துக் கொண்டிருந்தாலும்,அவர் கணக்கு தீர்க்கிற காலம் நீண்டு கிடப்பதால்…தமிழன், பொறுமையை அப்பப்ப இழந்து விடுகிறான்.இரண்டு மனிதர்களுக்கிடையில் “நீ பெரியவனா?நான் பெரியவனா? என்ற சுயமரியாதைச் சவால்!

நம்மவர்களில் சிலர் எல்லா அடிமைச் சங்கிலிகளையும் அறுத்துக் கொண்டு துணிந்து சவாலை சந்திக்க காலடி எடுத்து வைக்கிறார்கள்.தைரியம் பெற்ற பல இளைஞர்கள் அவர்கள் பின்னால் அணி திரள்கிறார்கள்.ஆனால் சந்ததியாக குடும்பங்களில் பிறக்கிறவர்களில் ஆண்,பெண்..எனவே அல்லவா பெருந்தொகையாய் கிடக்கிறார்கள். எல்லோரும் தனிய ஆண்களாக மட்டும் இருப்பதில்லையே

பாரம்பரியமாக இருக்கிற பழைமைவாதச் சட்டங்களில்.. பெண்களுக்கு சம அந்தஸ்து நிலவவில்லை.அரசாங்கமில்லாததால், சம சமூக உரிமைகளும் (சொந்த அரசாங்கமானாலும் கூட)கிடைப்பதில்லை.

உள்ளேயே ஒரு ஆடு,புலி ஆட்டச் சூழல்.எனவே எப்போதும் ஒரு பெண்ணும் ,ஆணுக்கு தோள் கொடுப்பவளில்லை. ஆணுக்கும் பெண் விளங்குவதில்லை, எனவே அவனும் அவளை கருத்தில் எடுப்பதில்லை.

‘கல்வியிலும், பிறப்பு,கடவுளால் நிர்ணயிக்கப்படுகிறது!இருவரும் ஒருத்தரை ஒருத்தர் புரிய முயற்சித்து நட்பு செலுத்த வேண்டும்’என்ற விளக்கம்.. ஒன்றுமே கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அது தவிர வெளியே, ‘மக்களுக்காக அரசியல் இருக்க வேண்டுமே தவிர அரசியலுக்காக மக்கள் இல்லை’என்ற போன்ற சமூக விஞ்ஞான பாடங்களும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதனால் இருவருமே தெளிவுறுவதில்லை. மணமுடித்தாலோ மேலும் குழப்பமுற்று செயலற்றவர்களாகி விடுகிறார்கள்.

அதிகமாக விடுதலைச் செய்திகளை வாசிக்கிற ஆணே,அதிலே ஒரு கால்,இதிலே ஒரு கால் என வைத்து திண்டாடுகிறான்.

நம் வரதனும் அதில் ஒருத்தன் என்று சொல்லத் தேவையில்லை. அவன், அதிகமாக காலை வைத்து, எந்த இயக்கத்திலும் போய்ச் சேர்ந்திருக்கவுமில்லை.

பெரிய நூலகத்தை எரித்த பிறகு எல்லா கிராமங்களிலும் ஒரு சிறு வாசிகசாலையாவது வைக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்திருந்தது.”தம்பி,இந்த கட்டிடத்தை பொது வாசிகசாலையாய் ஆக்க விரும்புகிறோம்.நாங்க வீரகேசரியை போடுகிறோம்.நீங்க தினபதியை போட முடியுமா?”என வரதனை வீதியில் கண்ட கிராமத்து பெரிசுகள் சில கேட்டன. நல்ல விசயம் தானே! நம்ம பெடியள் சம்மதிப்பார்கள் என்ற தைரியத்தில் உடனேயே ஒப்புக் கொண்டான்.இன்னொரு பிரிவு ஈழநாடு போடுவதற்கு சம்மதித்திருந்ததையும் தெரிவித்தார்கள்.

“தம்பி வார போது கொஞ்சம் சுத்தமாக வர வேண்டும்”என்று அவர்களில் ஒருத்தர் இழுத்தார்.புரிந்து கொண்டான்.”வேலையாலே வீட்ட வந்த பிறகு குளித்த பிறகு வர வைக்கிறேன்”என்றான்.தோய்த்து உலர்ந்த ஆடையே அணிய வேண்டும்’என்று கிளியண்ணையே ஏற்கனவே சொல்லி வாரவர்.அது சாதிக்கு மட்டுமில்லை,எல்லா மனிதர்களுக்கும் அவசியமானது.ஒரு சில பெடியள்களையே மாற்ற வேண்டியிருக்கிறது. காலப்போக்கில் அவர்களும் மாறுவார்கள். கிளியண்ணை வளர்க்கிற அணியில் குகன்,பாரதி,ரவி..என அவனைப் போல இன்னும் பலர் இருக்கிறார்கள்.

அந்த கிராமம்,சைக்கிளில் வலம் வந்து விடக் கூடிய இடமே.மாலையில் கால் பந்து விளையாடுறதுக்கு முதல் வாசிகசாலைக்குப் போய் விட்டு விளையாடப் போகச் சொன்னால் …கேட்பார்கள். எல்லாம் ‘வெல்லாம்’ என பட்டது.

பக்கத்து வீட்டு செல்வம்,நீர் இறைக்கிற பம்பி ஒன்று வாங்கி வியாபாரம் ஆரம்பித்திருக்கிறான்.எல்லாரும் பேதம் பாராமல் ‘அவனை கூட்டிப் போய் கிணற்றை கலக்கி இறைக்கிறதும் நடக்கிறது. ஒரு சாதி மற்ற சாதியில் வைத்திருக்கிற மரியாதை அது.சிலசமயம் வரதன் கூட அவனோட போய் கலக்கி இறைக்கிறவன்.

ஒரு தடவை நல்ல தண்ணீர்க் கிணற்றை இறைத்த போது, ஒரே ஒரு சிங்க(பென்னம் பெரிய) றால் பிடிபட்டு, அதிலே எப்படி வந்தது? என்று எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். “ஊற்று என்கிறோமே,அந்த நிலத்தடி நீரோட்டம் நிலத்திற்கு கீழே ஓடிக் கொண்டிருக்கிறது, அதன் ஊடாக மீன்,றால் எல்லாம் வருகின்றன”என்று கூப்பிட்ட பாலன் சொன்னான்.அப்படித் தான் வருகின்றன போல இருக்கிறது.

குஞ்சாக வந்தது ,என்ன மாதிரி வளர்ந்திருக்கிறது! “நீங்களே சுட்டுச் சாப்பிடுங்கள்”என்று தந்ததை ..சுட்டு சாப்பிட்டதை அவனால் மறக்க முடியவில்லை. கூட வந்த ரவியும் “மச்சான் என்ன ருசியாய் இருந்தது” என்று இப்பவும் .. நாக்கு சப்பச் சொல்லுவான். இவர்கள் அதன் ருசியில் லயித்துக் கொண்டு கிராமத்தில் ஓடித்திரிந்த போது எதிர்ப்பட்டவர்கள் எல்லாருமே கேட்டார்கள்.அவர்களுக்குள் அப்ப, ‘வீரபுருசர்’ புளுகமும் கிளர்ந்திருந்தது .அன்று கிராமம் முழுதும் அதே… பேச்சாகவே கிடந்தது.

கிளியண்ணையின் இன்னொரு சீடன் குமார், குத்தகைக்கு நிலம் எடுத்து மிளகாய் வைக்கக் விரும்பினான்.பரமசிவம்,தனது ஒன்றரைப் பரப்புக் காணியை பெரிய மனதுடன் கொடுத்திருக்கிறார்.கிளியண்ணே மேலே உள்ள மரியாதையாலே கொடுத்தார்.சாதியை அங்கே ஒரு பாட்டுக்கு வேலியில் சாய்த்து வைத்து விட்டே எல்லோரும் பிழங்கிறார்கள்.

பேதங்களை ஓரேயடியாய் எடுத்து விடுகிற புத்திசாலித் தனம் இல்லை தான்.பழகிப் போன செருப்பாகாக அது கடிக்கிறது.குறிப்பாக காதல் ,மண உறவுகள் ஏற்படாத வரையில் எல்லாருக்குள்ளும் அந்த அரக்கன் புகுந்து வெளிப்படுவதில்லை.எல்லா கிராமங்களிலும் இயக்கங்களுக்கு பெடியள் அள்ளுபட்ட பின்பு அதன் காரம் இன்னமும் குறைந்து விட்டிருக்கின்றது.

காய்கறி,மீன் சந்தையை இயக்கப் பெடியள் தலைமையில் எல்லாரும் சிரமதானமாக சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்.மேசன் வேலை செய்கிறவர்கள் சீமேந்து உடைவுகளை கட்டி செப்பனிட்டிருக்கிறார்கள்.மக்கள் இரண்டு வருசத்திற்கொரு தடவை கூரையை ஒழுங்காய்யாக வேய்கிறார்கள். அவர்கள் ..பிரச்சனைகளை வாசிகசாலையில் அல்லது முருகமூர்த்தி தேர்முட்டியடியில் கூடி திட்டமிட்டு சுமூக தீர்த்துக் கொள்கிறார்கள்.

உபதபால் கந்தோரிற்கு வார கெசட்டில் ‘கலால் பிரிவில் வேலை வாய்ப்புக்கு கேட்டிருந்த போது அவன் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினான். ஆச்சரியமாக இண்டர்வியூக்கு லெட்டர் வந்திருந்தது. இண்டர்வியூ பண்ணிய குழுவில் அக்கிராமத்தைச் சேர்ந்த (உயர்சாதியைச் சேர்ந்த) தர்மலிங்கமும் இருந்தார். இன்று அந்த வேலை கிடைத்ததிற்கு முழுக்க முழுக்க அவர் தான் காரணம்.அவர், அதை எந்த பிரதியுபகாரம் கருதிச் செய்யவில்லை.வேலை கிடைத்த பிறகு வழியில் சந்தித்த போது “தம்பி,நான் இந்த வருசத்தோட இளைப்பாரப் போகிறேன்.நீ படித்த பெடியன்.உனக்கு வயசு இருக்கிறது.இதிலுள்ள உயர் வேலை வாய்ப்புப் பரீட்சைகளை எல்லாம் எடுத்து என்ர நிலைக்கு உயர வேண்டும்.நீ வருவாய் என்று தெரியும்.முயற்சியாலே எதுவும் கிடைக்கும்.மறவாதே”என்று வாரப்பாடாக கதைத்தார்.

அவர் கைலாகு குடுத்து தூக்கி விட்டதை யாரும் கேட்டால் ‘ஊர்க்காரன்’என்பதற்காக செய்தேன்’ என்பார். அப்படி சொன்னாலும் , அது அவருடைய தனிப்பட்ட குணமே!. சாதி இருக்கிறது தவிர அதிலுள்ள மனிதர்கள் உண்மையில் அந்தளவு மோசமானவர்களாக இருக்கவில்லை. பொதுவாக அவர்களுடைய உணர்வுகளை பிழையாக கிளறி காயப்படுத்தினாலே,சாதி முகமூடிகளை போட்டு வெளிப்படுறது நடக்கின்றன. அது ஒரு வகையில் மிரட்டுவதற்காக தூக்கப் படுற ஆயுதம்.

வேலை கிடைத்த பிறகு சுறுசுறுப்பாகி புது ரத்தம் பாய்ந்தவன் போல அவன் திரிய, அம்மா உடனேயே பெண் பார்க்க கிளம்பி விட்டார்.அடுத்த வருசமே வேறொரு கிராமத்தில் இருந்த (அவனுக்கே தெரியாத) தூரத்துச் சொந்தமான சரோஜாவை பேசி ,கட்டியும் வைத்து விட்டார். வீட்டிலே வரதனே கடைசிப் பெடியன்.அவனுடைய அக்காமார், அயலுக்கேயும்,வெளியேயும் இருந்தார்கள்.அம்மா,அவனுக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டு அயலுக்க இருந்த அக்காவோடு போய் விட்டார்.அக்காமார்,”தம்பி படித்தவன் “என பெருமை படுற ரகம்.

என்ன இருந்தாலும் மனைவியாய் வாரப் பெண் ஒரு ஆணுக்கு எப்பவும் வசந்தம் தானே. அவன் பித்தாய்யே கிடக்கிறான். குட்டித்தேவதை சுமியை வேறு பெற்ற தாய்மை அவளை பொலிய வைத்திருந்தது.

இருவருக்கும் சந்தோசகரமாக அமைய வேண்டிய குடும்ப வாழ்க்கை…இப்படியாகி விட்டதே? ம் !பெருமூச்சு அவனிடமிருந்து வெளியேறியது.

அவனுடைய சின்னக்காவின் 13 வயசுப் பெடியன் ராமு,சிறிலங்காவின் செல்லடியில் சிதறிச் செத்தது..அவனை பெரிதாய்ப் பாதித்து விட்டது.நெடுக சைக்கிளிலே ஏத்தித் திரிந்தவன்.., தன்னை பெரியவனாய் நினைத்து எத்தனை விசயங்கள் அலம்பி இருக்கிறான்.ம்!எல்லாமே அர்த்தம் இழந்து போய் விட்டனவே!அந்த நேரம் சந்திரன்,அவனை “டேய் வாடா மணிவாணனின் பேச்சு நல்லாய் இருக்கும்”என பக்கத்துக் கிராமத்தில் நடந்த தொழிற்சங்க கூட்டமொன்றுக்கு கூட்டிச் சென்றான்.கையறு அற்ற நிலையில் அவன் பேச்சு வழிகாட்டின போல இருந்தது. மணி ,அத்தனை தெளிவாக பேசினான்.ஒரு நண்பனைப் போல ..அப்படி பேசியதை இதுவரையில் அவன் யாரிடமும் கேட்டதில்லை.சினிமா நடிகர்க்கு ரசிகர் போல, அவன் …மணிவாணனின் ரசிகனாய் விட்டான்.என்ர பெரிய குருஜி மணிவாணன்!அவன் வாய் முணுமுணுத்தது.உண்மை தான்.அவனுக்கு மட்டுமே தெரிந்த விசயம்.அவன் தாமரை இயக்கத்தில் சேரவில்லை. மணிவாணன் கிராமத்தில் கட்டிய தொழிற்சங்கத்தில் தான் சேர்ந்து கொண்டான்.

அவனுடன் திரிய அவ்வியக்கத்தின் அரசியல் அமைப்புப் பெடியள்களுமே தெரிய வர பெரிய கூட்டமே நண்பர்களாகி விட்டார்கள்.தர்மலிங்கத்தின் மருமகப் பெடியன்,கொழும்புக் கலவரத்தில்…என்னவானான் என்றே தெரியாது.இருந்த போதிலும், அவனைக் கண்ட போது “தம்பி,இந்த அரசியல் ஒரு சகதி!காலை வையாதே”என அட்வைஸ் பண்ணினார்.”நான் இயக்கத்தில் சேரலை அண்ணை!தொழிற்சங்கத்தில் தான் சேர்ந்திருக்கிறேன்.”என்று பதிலளித்தான்.”எனக்கு, நீ இயக்கத்தில் சேர்ந்தது மாதிரி தானே தெரியிறாய்! உந்த இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமை வேறு இல்லை,பகை கிடக்கிறது.சிறிலங்காப் படைகளை போல இவையும் பார்த்தால் எனக்கு பயம் தான்.பார்த்து நடந்துக்கப்பா “என்று நடந்தார்.

ஒற்றுமைப் பட எத்தனையோ விசயங்கள் இருக்கைக்க,இந்த இயக்கங்கள் எல்லாம் அற்ப விசயங்களுக்காக அடித்துக் கொண்டு சாகிறார்களே என்ற விசாரம் அவனுக்கும் இருந்தது.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு இயக்கங்களுமே ஆரோக்கிய வரலாற்றையும்,இழப்புகளையும் கொண்டிருந்தன.தோழர்களை “ஒன்றுபடுங்கடா”என்றால் நாளைக்கே ஒன்றுபட்டு விடுவார்கள். அவர்கள் மத்தியில் அத்தனை பிரச்சனைகள் இல்லை.ஆனால் தலைவர்கள்?அவர்களும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாதவர்கள் இல்லை.தொடக்கத்தில் ஒன்றாய் சேர்ந்தே போராட என வந்த போராளிகள்.கடுமையான சட்டவிதிகளை தமக்குள் போட்டுக் கொண்டு கால் வைத்தவர்கள். ‘விதிகளை மீறுகிறவர்கள் சுட்டுக் கொள்ளப்பட வேண்டும்’என்ற விதியையும் முட்டாள்தனமாக சேர்த்துக் கொண்டு…இன்னமும் களையாமல் துரத்திக் கொண்டும் சுட்டுக் கொண்டும் இருக்கிறவர்கள்.

தற்போதைய தோழர்களை விட இவர்கள் தீவிரமானவர்கள் !ஒப்புக் கொள்கி றான்.ஆனால், அத்தலைவருக்குப் பின்னால் இயக்கமாக இருக்கிற தோழர்களையும் அதே பகையுடன் வேட்டையாடுகிறார்களே,

அறிவு பத்தாது போல!இவர்கள் தேறுவார்களா?

இன்னொருபுறம், சேர்வதற்குப் பெண்களும் இருக்கிறார்களே! பெண்கள் படித்தவர்களானால் தான் தம் பொறுப்பை உணர்ந்து விழிப்புணர்வு பெறுவார்கள். ஆண்கள், யாருடனும் சரிவர பழகத் தெரியாதவர்கள். இனி இவர்களுடன் பழகவும் வேண்டுமே .

சரியான கொள்கைகளை வைத்திருந்தாலே மக்கள் வலிமை பெறுவார்கள்.தொழிற்சங்கமூலம் மக்களுடன் சரிவர பிணைந்தாலே இலக்குகளை எட்டவும் முடியும். பிறகு ,எழுந்து விடுற மக்களை எந்த சக்தியாலுமே அடிமைப் படுத்த முடியாதே. ஆனால், சரியான வழி இல்லையானால் ஒன்றுமே நடக்காது!

வரதனின் நினைவுப் பறவை எங்கையோ….சிறகடிக்கிறது.அவன் இப்படித் தான் அடிக்கடி கனவுகளில் குழம்பி விடுகிறான் . தமிழனாய் பிறந்து விட்டானே,விதி!ஆனால்,தமிழிழம் ஒரு சுகமான கனவு, நனவுபட வேண்டியது.தாமரை இயக்கத் தலைவர்கள் பெரும்பாலும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் பிரிவிலிருந்து பிரிந்து வந்தவர்கள் .பலருக்கு,இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த முருகேசனே பாடங்களை எடுத்தவர். அவர் மணிவாணனின் அப்பா. எல்லாருக்கும் ஒரு …வெளி_வெறுமை ஏற்படுற போது வழி நடத்த யாரோ ஒருவர் வருகிறார். இப்ப,அவர்களில் சிலர் சிறிலங்காப்படைகளாலும்,கழுகின் தாக்குதலாலும் இறந்து போய் விட்டார்கள். தோல்வி,தோல்வி.. என்று தடைப்பட்டு நிற்கவா முடியும்?எதிர்ப்புகள் மத்தியிலும் முயற்சிகளை கை விட முடியாதல்லவா!

தாமரை இயக்கத்தின் மகளிர் அமைப்பு,கிராமங்கள் தோறும் ஏற்கனவே இருந்த மகளிர் அமைப்புகளுடன் எல்லாம் தொடர்பு கொண்டது அங்கே ஏற்கனவே இருந்தவை சில இயங்க முடியாத நிலையில் இருந்தன.பல நெசவுசாலைகளுக்கு பஞ்சு ,நூல் வரத்து இல்லாமல் போனதால்..பாழடைய, அதில் வேலை செய்த அவர்களும் செயலிழந்தனர். அவர்களுக்கு இயக்கத்தின் மகளிரின் வருகை இதயத்தில் பால் வார்த்தது போல இருந்தது,இயங்க முன் வந்தார்கள் .

தொழிற்சங்கம், சிலர் அன்பளிப்பாக கொடுத்ததையும், மக்களிடம் அரசியல் பேசியே பெற்ற பழுதடைந்து திருத்தப்படாதிருந்த பல தையல் மெசின்களையும் மகளிர் அமைப்பிடம் கொடுத்தது.தாமரையில், வள்ள மோட்டர்கள்,சைக்கிள்,கார்,மோட்டார் சைக்கிள்,மற்றும் எலெக்ரோனிக் கருவிகள் திருத்தக் கூடிய சூரர்கள் இருந்தார்கள்.அமைப்பு வடிவம் நல்லாவே கை கொடுத்தது.அவர்கள் மூலமாக திருத்த வேண்டியவை திருத்தப் பட்டன.அவை பிழைக்கிற போதும் மீளவும் திருத்துற …சூழலும் இருந்தது.

மகளிர், முதலில் தையல் வகுப்புகள் வைப்பதிலிருந்தே தமது வேலை திட்டத்தைத் தொடங்கினார்கள். தையல் வகுப்புகளுக்கு அத்தகையப் பெண்ககளுடன் மற்றவர்களும் கூடவந்தார்கள். மகளிர் அமைப்பு, அதோடு சில குடும்பங்களுக்கு சிறு வருவாய்யைப் பெறுவதற்காக மெழுகுதிரி அச்சுக்களை தொழிற்சங்க மூலமாக தயாரித்துப் பெற்றும் ,மெழுகையும் அவர்கள் மூலமாக எங்கையோப் பெற்றும்…மெழுகுதிரிகள் தயாரிப்பதைச் சொல்லிக் கொடுத்தது.

தொழிற்சங்கதில் இருந்த சிலருக்கு கொழும்பில் சில சிங்கள நண்பர்கள் (மனிதர்களாக) இருந்தார்கள் . அவர்கள் ,பெரிய தேயிலைப் பெட்டியை அங்கேயிருந்து வாங்கி பஸ்ஸில் அனுப்பினார்கள்.அவற்றையும் மகளிர் அமைப்பு சில குடும்பங்களிடம் கொடுத்து சிறுசிறு பைக்கற்றுக்களில் அடைத்து கடைகளில் போட்டார்கள். இப்படி வீட்டுக் கைத்தொழில்கள் சில இயங்க ஆரம்பித்தன.

தொழிற்சங்கம் தானும் பல வேலைகளை செய்தது .தென்னம்மட்டைகளை ஊற வைத்து, தும்பு எடுத்து கயிறு தயாரித்தல்,தும்புத்தடிகள் செய்தல், தோல் பதனிடதல் தொழிலிலும் இறங்க தீர்மானித்தார்கள்,தவிர செப்டிக் குழியிலிருந்து இயற்கை எரிவாயு தயாரித்து சிறு வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்தல்(இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது)..இப்படி பல !

இவை எல்லாம் இவர்கள் மூளையிலிருந்து உதித்தவை கிடையாது. ,தமிழர்கள் சுய பொருளாதாரத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும்’என்று விமலதாசன் என்ற இளைஞன்’மனிதன்’என்ற புதினப் பத்திரிகையை தனித்தவனாக இருந்து வெளியிட்டு,அதில் எழுதி வந்த திட்டங்கள் தான் இவை! பிறகு,சிறிலங்கா படைகளினால் யாழ்ப்பாணம் எரிக்கப்பட்ட போது, சுட்டுக் கொல்லப் பட்ட ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழர்களில் அவனும் ஒருத்தனாய் இருந்து போனதை என்னவென்பது?

மகளிரின் தயாரிப்புக்களை அந்தந்த கிராமங்களில் இருந்த தாமரைப் பெடியள் ,சைக்கிளில் ஏற்றிச் சென்று சாதாரணக்கடைகளில் விற்க வைத்தார்கள்.கடையினருக்கு எந்த இயக்கம் என்றாலும் பயம், பணத்தை நேர்மையாகவே கொடுத்தார்கள்.அதை விட தொழிற்சங்கமும் நியாயவிலைக் கடைகள் சிலதையும் திறந்து வைத்து எல்லாவற்றையும் விற்கவும் வைத்தார்கள்.

மகளிர் அமைப்பினர், மேலதிகமாகவும் ஒரு முயற்சியில் இறங்கியது. தோட்டக்கலையில் சிறந்தவர்களை தேடிப் பிடித்து அவர்களின் மேற்பார்வையில் சில இடங்களில் நெற்செய்கை செய்யாத காலங்களில் அக்காணிகளில் தோட்டம் வைக்க பார்த்தார்கள்.நிறைய கஸ்டங்களைப் பெற்று தோல்வியைக் கண்டது தான் மிச்சம்.அதற்கு பலவிதக் காரணங்கள் இருக்கலாம்.அக்காலங்களில் போதியளவு நீர் இல்லை என்பதால் தான் நெல்லே விதைப்பதில்லை.நிலம், அப்பயிர்களுக்கு போதியளவு பண்படுத்தப்படாதாக கூட இருக்கலாம். தமிழர் பகுதியில் இருந்த குளம் குட்டைகளை இந்த அரசாங்கம் எங்கே திருத்தியது?தவிர யாழ்ப்பாணத்தில் 5 நன்நீர் நிலை இணைப்புத் திட்டம் என்று ஏதோவொன்றையும் செய்ய ஆராய்ந்தார்களாம்,அதைக் குப்பைக் கூடைக்குள் அரசு தூக்கி எறிந்திருந்தது.இவையெல்லாம் கூட காரணம் தான்.

தொழிற்சங்கம் பலவித தொழிலாளர்களைச் சந்திக்கிறது;திட்டங்களை செயல்படுத்துறது..என தன்பாட்டில் இயங்கி கொண்டிருந்தது.மற்றய இயக்கங்களும் இவர்களைப் போல சில செயற்பாடுகளை செய்யவே செய்தன அப்படி செய்கிற போது வெடிமருந்துப் பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் சிலர் இறக்கவும் நேர்ந்தது.அல்லி இயக்கப் பெடியள் சிலர் கடலுக்குச் சென்று தாமே வலையை வீசி மீன் பிடித்தார்கள்.ஈழத்தமிழர்களுக்கு அரசாங்கம் இல்லை.எனவே ‘மக்களை சிறிதளவாவது அரசாங்கமாக இயங்க வைக்கிறதில் கவனம் செலுத்தியது.

சிறிலங்கா, கையாலாகத்தனத்தால் ..அப்பப்ப கோபப் பார்வைகளை தமிழ் மக்கள் மேல் பார்த்தன . பல படுகொலைகள் வலிகளுடன் துயரகரமாக பதைப்புடன் பார்க்க நிகழ்ந்தேறின.இதில் தப்பியவர்களை நிச்சியமாக அதிருஸ்டசாலிகள் என சொல்ல முடியாது.நாளை,அல்லது தொடரும் நாளில் ஒரு நாள் என..இவர்களின் விதியும் அப்படியே கிடந்தன.

ஆனால்,கழுகு, எத்தனை மக்கள் செத்தார்களோ..அத்தனை ஆமிக்காரர்களை கொல்றதுக்கு துரத்தியது.மற்றயவை வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டன. அதனால் சிறிலங்கா அரசுக்கு கழுகு என்றால் உண்மையிலே பயம் தான்.

மரம் ஏறி ‘கள்’ இறக்கிறவர்களுக்கு பலநோக்குச்சங்கள் இருந்தன தான்.ஆனால் அவை தற்போது உயிரிழந்து போய் இருந்தன.அதில் உள்ள கலால்பிரிவிலே வரதன் வேலை செய்கிறான். உயிரிழந்து போய் இருந்த கலால் வேலையையும் இந்த வேலைகளுடனும் வரதன் செய்கிறான்.ஒரு காலத்தில் அரசவேலை என்றால்..கெளரவமாக,மதிப்பாக,திருப்தியாக இருந்தது. ஆனால்,இன்று காந்தி கூறிய ஏழு சமூக பாவங்களில் ஒன்றான “வேலை செய்யாமல் வரும் ஊதியமாக”கிடக்கிறது.சிறிலங்கா அரசு,இவர்கள் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என் நம்புகிறது.ஜி.எ,எ.ஜி.எ…என்ற அரச நிர்வாகத்துடன் இணைக்கப் பட்ட வேலை தான் கலால் வேலை.செல்லடிகள்,பதற்ற வேளைகள்,ஆமி நகர்வுகள்,இயக்கங்களின் கர்த்தால்கள்…இப்படியான நாட்களை விட்டு இயங்கிறது தான்.தமிழீழப் பகுதிகளில் இப்படியான நாட்கள் தாமே அரைக்கரைவாசி நாட்கள்.இப்படியான நாட்களுக்கும் லஞ்சம் போல கொடுப்பதால்..அரசு இவர்களையும் சேர்த்து சுட்டுக் கொல்கிற போதிலும் தன்னுடைய ஆட்கள் என்றே கொள்கிறது.அவர்களும் அவ்வளவாக தடம் புரழ்ளாதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.ஆனால் உறவுகளில் சாவு நேர்கிற போது…சமூக பாவத்தை செய்ய துணிந்து விடுகிறார்கள்.

கலால் பகுதியைச் சேர்ந்தவர்களைக் கொண்டு … ‘பதநீரிருந்து வெல்லங்கள்’ தாரிக்கப் பட்டன. ‘ஐயாவே,(தானே) அந்த முயற்சிக்கு வழி காட்டியவர்’என்பதில் அவனுக்கு உள்ளூர சந்தோசமாக இருந்தது. ஈழத்தமிழர்களால் எதிலேயும் சுயகால்களிலே நிற்க முடியும் தான் .இந்த அரசிற்கெதிராக காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தை ஆரம்பித்தால் நல்லது போலவும் பட்டது.

ஒரு காலத்தில் சோழர்கள் அதாவது தமிழர், பெரும் கடற்படையைக் கட்டிக் கொண்டு கடலையையே ஆண்டவர்கள். இவர்களாலும் வள்ளங்கள், பாய்க்கப்பல்கள் சுயமாக செய்தும் வடக்கு,கிழக்கு கடல்களில் விட முடியும் தான் ?கனவுகள் தாலாட்டுகின்றன!

கடவுளிலே பாரத்தை போட்டு விட்டு இப்ப கடமையைச் செய்வோம் எனவே இயங்கினார்கள்.

மக்களிடம் சிறு வரம்புக்குக் கூட சண்டை இடுதல்,அடுத்தவர் வளவிற்குள் வேலியை போடல் போன்ற குள்ள நரித்தனங்களும் மலிந்து காணப்பட்டன.அவற்றை இயக்கங்கள் பாராதது போல விட்டு விட்டு அப்பால் போனால் முட்டாள் தனமாக அடித்துக் கொண்டார்கள்.அதை தலைவலியாகவே இயக்கங்கள் எதிர் கொண்டன .

கழுகு, “உங்களை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை,மற்றயவை சிவில் விவகாரங்களை கவனிக்கின்றன ,அவர்களிடமே போங்கள்” என கழன்று கொண்டது.மற்றயவைக்கும் நேரத்தை விரயமாக்கிறதாகவே சலிக்க வைத்துக் கொண்டே இருந்தது.தாமரை,அவர்கள் மத்தியிலே விழிப்புக் குழுக்களை கட்டி,அல்லது உள்ளே விட விரும்பாதவர்களுக்கு அவர்களிட கோயில்,விளையாட்டு,வாசிகசாலைக் குழுக்களையே “நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்”என அவர்களிடம் பொறித்து விட்டு கழன்றது.தீவிரமான பகுதிகளிற்கு இயக்கப் பெடியள் இருவரையும் பிரதிநிதியாய் அனுப்பியது.சண்டித்தனம் செய்தால் இயக்கம் ஆயுதபாணியாக அந்த இடத்திற்குப் போகும்.விசாரிப்பு என்றால்,பொலிஸ் அடி தான்.தாமரை அடித்தால் வெளிக்காயம் தெரியாது,ஆனால் கட்டாயம் புக்கை கட்ட வேண்டி இருக்கும் என்பார்கள்.மக்களுக்கு இதெல்லாம் அத்துப்படி.

அரசாங்கம்,பொலிஸ் இல்லை. எனவே எல்லாப் பிரச்சனைகளும் இவர்கள் தலையிலே வந்து விழுந்து கொண்டேயிருந்தன .ஏலுமான வரையில் சமாளித்தார்கள்.அதோடு போர்க்களத்திற்குத் தயார்படுத்தல் வேறு. உபத்திரவமாக கிடந்தது .எல்லா இயக்கங்களும் ஒன்றிணைந்திருந்தால்…ஒருவித பாதுகாப்பு உணர்வு இருந்திருக்கும்.ஆமியை எதிர்க்கிற போது முழு ஆற்றல்களையும் பயன்படுத்தி அதிர வைத்திருப்பார்கள். எதிர்காலத்திலும் சிங்களம், தமிழ்ப் பகுதிகளில் மேய்ய அனுமதித்திருக்க மாட்டார்கள் . ஆனால் ‘விதி’என்று ஒன்று இருக்கிறதே,சிங்களத்திற்கும் அதே விதி கிடக்கிறது என்பது வேறு விசயம். அந்த அனுபவத்தை அவர்கள் ஒரு காலத்தில் பெறுவார்கள்.இயக்கப் பகையால் எந்த நேரமும் கழுத்துக்குக் கத்தி என்ற நிலையில் ஆமி எதிர்ப்பையும் பலமாக காட்ட முடியாமல் பள்ளிக்கூட வகுப்புகளில் ஃபேயில் ஆகி விடுறது போல தடக்கிக் கொண்டேயிருந்தார்கள் .

வரதனுக்கும் இந்த குளறுபடிகள் சலிப்பை ஏற்படுத்தின . விடுதலைப் பக்கம் போகாது, என்ன எப்படி? என சரிவர தெரியாத தொழிற்சங்கப் பக்கம் செல்ல அதுவும் ஒரு காரணம். ஆனால் இயக்கங்கள் எழுந்ததிற்கான நியாயத்தை வரதன் மறுக்கவில்லை.அவர்கள் எதிர் கொள்றது நடைமுறைச் சிக்கல் தான் . அதுவும் அவனுக்கு தெரியும்.ஒவ்வொரு ஈழத்தமிழனும் தனது அரசியல் அறிவையும் ,ஆளுமையையும் வளர்த்துக் கொள்ளாமல் தேற முடியாது.அதற்குரிய கல்வியை பெறுவதற்காக சமூக விஞ்ஞானக் கல்லூரியையும் கட்டிக் கொள்றதுக்கு தாமரை இயக்கம் முயற்சித்திருந்தது ஆச்சரியம் தான்.

அதன் முயற்சிகள் எல்லாம் ஏனோ நிறைவேறாமல் போகிறதுக்கு காரணம் அது முற்பிறவியிலே செய்த ஏதோ ஒரு ஊழ்வினையாக இருக்க வேண்டும்.வரதன் நீண்ட பெருமூச்சு விட்டான்.

வாள் எடுத்தவன் வாளால் மடிவான். சிறிலங்காவையும் பயங்கரவாத செயற்பாடுகளும் ஒரு காலத்தில் அவர்களையே திரும்பி பலி எடுக்கப் போகிறது தான் . இன்று பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி,பங்களாதேஸில் ராணுவ ஆட்சி,பர்மாவில் ராணுவ ஆட்சி,ஏன் எகிப்திலே ..கூட ராணுவம் தன் சொந்த மக்களை தான் கொல்கிறது.சிறிலங்காவில் தமிழனை அடக்குவதற்காக மிதமிஞ்சிய ராணுவத்தை முட்டாள்தனமாக ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் .தற்போதைய ஆட்சி சரிகிற போது ராணுவமே ஆட்சியை கைப்பற்றி விடக் கூடிய சாத்தியமே அதிகமாக கிடக்கிறது.இல்லாட்டிலும் பெரிய வல்லரசுகள் அதை இலகுவாக செய்து விடும்.சொந்த சிங்கள ராணுவமே சொந்தச் சிங்களவர்களை ..எகிப்த்தைப் போல ஒரு நாள் பலி எடுக்கவே போகிறது.போர்களை தெரியிற ஜனநாயக ஆட்சியினர்,எப்பவும் நல்ல விளைவுகளை சந்திப்பதில்லை.

ஆட்சி மாற்றங்களை யாராலுமே எதிர்வு கூறவும் முடியாது .நீண்ட காலம் ஆட்சியில் இருந்த எல்லாளன் ,ஆட்சியை கைமுனு கையிலே கொடுக்க வேண்டி நேரிட்டதே.கைமுனு கூட ..வேற யாரோ கையில் தானே கொடுத்தான்.பிறகு பிரித்தானியர் கீழ் நசுங்கு பட நேரவில்லையா? பிரித்தானியர் மேல் இப்ப “அவர்கள் இவர்களை விட பரவாய்யில்லை “போன்ற ஒரு நினைப்பு ஏற்படவில்லையா?ஆனால் அவர்களும் சிறிலங்காவினரை விட கொடூரமாக நடந்தவர்கள்.அதைப் போல இவர்களின் போர்க் குற்றமும் பேசுவது பிறகு நைந்து தளர்ந்து போய் விடுமோ?அந்த நோக்கத்தில் தான் இந்த அரசும் காலத்தை இழுத்தடிக்கிறதா? கடவுளே!,இவர்கள் தப்பி விடக் கூடாது.அவனுடைய மதத்தில்,கடவுள் மனிதனாக பிறந்தாவது…இப்படிப்பட்டவர்களை,வதம் செய்கிறது;அழிக்கிறது என புராணக்கதைகள்;நம்பிக்கைகள் இருக்கின்றன!அவனுக்கும் நம்பிக்கை இருக்கிறது.

குடும்பங்களில் பெணடிமைத்தனத்தை மோசமாக பிரியோகிக்கிற ஆண்களைப் போல ,சிறிலங்கா அரசு, தமிழர்களை அடிமைப் படுத்துகிறது.அதை சிங்கள பெண்ணியவாதிகள் சரிவர உணர்ந்திருக்கிறார்கள் போலவும் படுகிறது.’பெண்னடிமைத் தனம் எத்தகைய மோசமானது’ என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.மகிந்தாவிற்குப் பயப்பிடாமல் அவர்கள்”தமிழர்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள்”என சிங்கள மக்கள் மத்தியிலே துணிவாகச் சொல்கிறார்களே.வரதனுக்கு “சந்திரிகாவும் ஒரு பெண்ணியவாதியே!”என்றே படுகிறது.அவரது செயலை,குரலை அவருடைய தாய் மாமன் ரத்வத்தை அடக்கி விட்டார் போல.. அவனுக்கு தோன்றிக் கொண்டிருக்கிறது.ரத்வத்தை ஒரு பெண்னடிமைவாதி! சரியோ,பிழையோ இப்படியெல்லாம் தோன்றுகிறது.

கழுகின் பார்வைகள் வேறாக இருந்தாலும்,சிறிலங்காவிற்கெதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்தை குறித்து அவன் அவ்வளவாக விமர்சனங்கள் வைத்ததில்லை.சரியானவை என்றே …ஏற்கிறான்.நம்மவர்கள் மத்தியில் தான் கழுகினர் நாணயமற்றவர்கள்,வெளியில் நாணயமானவர்கள்.இப்படி ஒரு அபிப்பிராயம் அவனுக்கு மட்டுமில்லை, பல தோழர்களுக்கும் கிடக்கிறது.

இவர்களால் கழுகோடு இணையவும் முடியாது.அவர்கள், இவர்களை எப்பவும் ‘உளவாளிகள்’ என்றே பார்ப்பார்கள்.இணைப்புக்குச் சாத்தியமில்லை. அமெரிக்காவிற்கு கம்யூனிசம் பிடியாது போல கழுகுக்கும் மற்ற இயக்கத்தவர்களைப் பிடிக்காது .சிறிலங்காவரசு,சரணடைகிறவர்களை கொல்கிறது போல கழுகும் எப்படியும் மற்றய இயக்கத்தவர்களை கொல்லவே கொல்வார்கள். அதேசமயம், சிறிலங்காவில் ஜனநாயகம் பறிபோய் இருப்பதனால் சிங்களவர் நிலையும் மேம்பட்டதாக இருக்கவில்லை. நிச்சியம் ஒரு நாள் சிங்களவர்களே போர்க் குற்றவாளிகளை கவனத்தில் எடுப்பார்கள். அவர்களுடைய அரசாங்கமும் எகிப்தில் உள்ள பிரதர்கூட் கட்சியைப் போல அடிப்படைவாதத்துடனே நடை போட்டிருக்கிறது; போடுகிறது என்பதை அப்பஉணர்வார்கள்.

கடவுளின் என்ன விளையாட்டோ..?எல்லா மதத்திலும் இரண்டு இரண்டு கட்சிகள்,கிருஸ்துவில்..கத்தோலிகர்,புரடஸ்டண்டர்;முஸ்லிம்மில்..சனி,சியா பிரிவுகள்,புத்தத்தில் ‘மகாய்யான’என்கிற கிம்ஸையில் நாட்டமுள்ளவர் (பர்மாவில் இருப்பவர்களும் இதே பிரிவினரா? ஒரு புத்த பிக்கு, முஸ்லிம் மனிதர் ஒருவரை உயிருடன் தீயிடுவதை பி.பி.சி தொலைக்காட்சி கட்டியதே), அகிம்ஸையில் உள்ள புத்தர் பிரிவினர்;இந்துவில் வைஸ்ணவர்,இந்துக்கள் எனப் பிரிவுகள்(ஒரு காலத்தில் மோசமாக அடித்துக் கொண்டவர்கள்),கழுகு இயக்கத்திலிருந்து இப்ப கழுகு,தாமரை என இருப் பிரிவுகள்,அதே போல மற்ற இயக்கங்களிலும் இரண்டு இரண்டு பிரிவுகள்..;கடைசியில் ஆண்,பெண்..என எதிர்க்கட்சிகள்.

இந்து சமயத்தில் கள்ளச்சாமியார் போல புத்த சமயத்திலும் ‘கள்ள புத்தபிக்குக்கள்’ இருக்கிறார்கள் போலும்.மது,மாது, எல்லாவற்றையும் கள்ளமாக அனுபவிக்கிறவர்கள். நரபலியிட லுக்காகவே கலவரங்களைச் செய்கிறார்கள் போல படுகிறது! இளவயது புத்த பிக்குவால் நேர்மையான புத்த பிக்குவாக இருக்க முடியாது என்றே வரதனுக்கு தோன்றுகிறது. அது புத்த சமயத்தின் பிழை இல்லை.அந்த வயசுக்காரர்களை ஏன் புத்த பிக்குவாகச் செருகிறார்கள்?.அப்படியே வளர்ந்த பிக்கு வக்கரித்த பிக்குவாக இருப்பதே சாத்தியம்.’பிரம்மச்சரியத்தை கடைப் பிடிப்பது’ என்பது லேசானதில்லை.அதன் காரணமாகவே கள்ளத்தனம் புகுகிறது.

யாருமே வானத்திலிருந்து வருகிறவரில்லை.முதலில் எல்லோரும் சாதாரண மனிதர்,அப்புறம் தான் சிங்கள சாதி, தமிழ்ச் சாதி!இல்லறம் கடந்து வாரவர்கள், புத்த பிக்குவானால்…அவர்களிடம் புத்தரின் அகிம்ஸைக் கொள்கைகள் நிச்சியம் வாழும் என்றே படுகிறது. ஒரு காலத்தில் ,வரதனுக்கு புத்த பிக்கு என்றாலே மரியாதையே இருந்தது. அவரிமிருந்து சிங்களம் எல்லாம் படிக்க வேண்டும் என்று கூட . ஆசைப்பட்டிருக்கிறான்.ஆனால்,அரசாங்கத்தின் பாதுகாப்புடன் வரும் புத்த பிக்குவைக் கண்டு பயப்படுகிறான்.அவர் புத்தபிக்கு அல்ல, கொலைஞன்!அரசாங்கத்தால் ஏற்பட்ட அவமரியாதைக்கும்,அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட (கடந்த கால) அரசியல் வரலாற்றுக்குப் பிறகு,சிங்களத்தின் மீதே ஒரு வெறுப்பு விழ்ந்து விட்டது. அமெரிக்கவால் அனுப்பப்படுற ஊடகவியளாளர்கள் எல்லாரும் சி.ஐ.எ ஏஜென்ட் போல, சிறிலங்கா அரசால் அனுப்பப் படுறவர்கள் சிறிலங்காவின் ஏஜென்ட்டுகள்.

வடக்கு,கிழக்கில் நிலவும் தற்போதைய ராணுவ ஆட்சியில் வண்டில் மாடுகளுக்கு இழுக்கிறதுக்காக கழுத்தில் மேல் வைத்து கட்டப் படுற நுகத்தடி போல ஒன்று தமிழர்கள் எல்லாரின் கழுத்திலும் விழுந்து அழுத்துவதாக உணர்கிறார்கள்.

“லேட்டாய் போயிட்டுது,காம்பிலே படுத்து விட்டு காலையிலே போகலாமே”செல்வன் அவனை மறித்தான்.

“தனிய இருப்பாள்,நான் போகணும்”என்று வருகிறான்.சாமக்கோழி கூவித் தொலைக்க நினைவுக்குருவி,இலக்கியத்தில்,அரசியலில் பறந்து ஒரு கால் பந்தாட்டமே ஆடி விட்டது.நல்லகாலம் குருவியிலே இந்தச் சிக்கலை புகுத்தவில்லை.

ஆள்ரவமற்றச் சூழல் சிறிது பயத்தை அளித்தது.அரச பயங்கரவாதிகளை,நவின விஞ்ஞானத்தை விட மோசமான அரக்கர்கள் யார் இருக்கப் போறார்கள்?அமாவாசை இருளாய் இருந்தால் தம்பியரின் துணிவு கொஞ்சம் காணாமல் போய்யிருக்கும்.சைக்கிள் விடக் கூடிய நிலவு வெளிச்சமாக இருந்ததால்..வீர வசனம் எல்லாம் பேசுகிறான்.

கேட்டை திறந்து சத்தமில்லாது போனான். சைக்கிளை திண்ணையில் ஏற்றி பூட்டி விட்டு,அவனுக்கு தெரிந்த முறையில் கதவை திறந்தான்.கதவு உள்ளே பூட்டி இருக்கவில்லை.கொளுவி மாத்திரம் போடப்பட்டிருந்தது.அவனே ஒரு சாமக் கோழி என்பது சரோஜாவிற்குத் தெரியும்.எவ்வளவு நேரம் முளித்திருப்பாளோ..?நித்திரையில் வீழ்ந்திருந்தாள்.வயிற்றில் பசி கிளறினாலும் இப்ப சாப்பிட முடியாது.இன்னம் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடப் போகிறது.சாரத்திற்கு மாற்றிக் கொண்டு அவளுக்குப் பக்கத்தில் போய் படுத்தான்.அடுத்தப் பக்கத்தில் சுமி நித்திரையில் அணுங்கி விட்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.இருட்டில் கண்கள் பழக, அவளைப் பாராது ,பார்த்தால், மனம் அலை பாய்யும் என்று மோட்டுபளையைப் பார்த்தான்.

சே! ஒரு வேலையே ஒழுங்காகவும் திருப்தியாகவும் அமைந்திருக்கக் கூடாதா?இது என்ன வாழ்க்கை?என சலிப்படைந்தான்.

ஒவ்வொரு தடவையும் நேரத்திற்கு வந்து விடுவேன் என்றே சொல்லி விட்டே போகிறான்.கள்ளனைப் போல வர வேண்டியிருக்கிறது.

இப்படியாய் போய்க் கொண்டிருந்த ஒரு நாள்,தாமரையின் தலைவர் பரிவாரங்களுடன் தளத்திற்கு வந்தார்.களவிபரங்களை பார்ப்பதற்காக ..வாரது இருக்கின்றது.இந்த இடம் அவர்களது கோட்டை.எனவே, இங்கே தான் வந்திறங்கினார்கள்.களவாகவே வாரவர்கள்.முன்னேற்பாடுகளுடன் வருகிற சுவட்டை கசிய விடாது கவனமாக இருந்தார்கள்.பகைமை இருந்தாலும் ஒருவேளை மற்றைய இயக்கங்களுக்கு தெரிய வந்தால்,சிறிலங்கா அரசுக்கு காட்டிக் கொடுக்கிற கீழ்த்தரம் எல்லாம்…கிடையாது. சிலவேளை, உள்ளே,தாமரை இயக்கத்தவர்களுக்கே கூட தெரிய வராது.ஒரு குழு வந்து போகிறது அவ்வளவு தான்!

விடுதலைப் போராளிகளுக்கு எந்தச் செயற்பாடுமே சவால் நிரம்பியதாகவே கிடந்தது.உயர்,நடு,கீழ்…என அவரவர்களுடைய பொறுப்புகளுக்கேற்ப அபாயங்களும் இருந்தன. சிலவேளை போராடுற சமநிலை பிறழ்ல்றதும் கூட நிகழ்கின்றன..அச்சமயங்களில் யாருக்காக போராடுகிறார்கள் என்பதில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன .போராட்ட முதற் சந்ததியினர் என்பதால் அனைவருமே தேர்ச்சியற்ற அப்பிரண்டீஸ்ஸாகவே இருந்தனர். கற்றுக் குட்டிகள்.

சிறிலங்காவரசு,இவர்களின் பலவீனத்தையும் கவனத்தில் எடுத்து சதிவேலைகளையும் மேற்கொண்டது.தமிழர்களுக்கும் அவர்களில் ஒரு பகுதியினரான முஸ்லிம்களுக்குமிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுதல்,இயக்கங்களிற்கிடையில் கிடக்கும் பகைமை ஊதி கூட்டி விடுவதற்கான செயல்களை திரைமறைவில் செய்தல்…என பல உத்திகளைக் கையாண்டது. அந்தஸ்து,அதிகாரம்,ஆயுதம்,பணம்…எல்லாவற்றையுமே லஞ்சமாகக் கொடுத்து தமிழர்கள் …சிலரையும் அரசால் விலைக்கு வாங்க முடிந்தது.

அரசாங்கம்,தனது பலத்தைப் புரிந்து கொண்ட அமைப்பு!விடுதலை இயக்கம் தனது பலத்தை சரிவர புரிந்து கொள்ளாத அமைப்பு!இவர்கள் சிறிது அசந்தாலும் …அரசாங்கத்தின் கை ஓங்கி விடும்.

கழுகு,’தாக்குதலைச்’ செய்தால்.. அவர்களை அசர வைக்கிறமாதிரி செய்ய வேண்டும் என்று, ‘நடிகர் விக்கிரம் போல ஒவ்வொரு அசைவுகளையும் கவனத்தில் எடுத்து கஸ்டப்பட்டு கஸ்டப்பட்டு தாக்கியது.அவர்கள் அடிக்கடி அரச தரப்பை விட தேறியதாக …ஆட்டி வைத்தனர்.காயப்பட்ட விலங்கு போல அரசு, படைகள் மூலமாக போர்க்குற்றங்களை புரிந்து கொண்டிருக்கிறது .

அதனால், மனித தன்மையை இழந்த அரசாங்கம் சர்வ தேச மட்டத்தில்..கெட்டப் பெயரை சம்பாதிக்கத் தொடங்கியது. ஒரு நாடு தன் பெயரை ,ஒரு தடவை இழந்தால்,பிறகு நல்ல பெயரைப் சம்பாதிக்க முடியாது. ஆட்சியில் உள்ள தலைவர் உட்பட அரசியல்வாதிகளையும்,படையினரையும் கட்டாயம் மாற்றியேயாக வேண்டும்.

வல்லரசுகள் எஜமானர்கள் என்பதால்..அவர்கள் ஆட்டுவிப்பவர்கள்! மாடமாளிகைகள் திறமான வீதி,வடிகால் அமைப்புடைய நகரங்களை நிர்மாணித்த ஈராக்கையே,வல்லரசுகள் வீடியோ விளையாட்டுகள் விளையாடியது போல இரக்கமற்று நிர்மூலமாக்கி விட்டார்களே!, சதாம் கூசைன் ,கொடியவனாக இருந்தாலும்(ஈராக்கை ) நகரங்களை கட்டி எழுப்ப அவன் எத்தனை தூரம் பாடுபட்டிருப்பான். அவை எல்லாம் ஒரே நாளில் தவிடு பொடி!அங்கே, அவர்களால் தொடங்கப்பட்ட மனிதச் சாவுகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறதே.இப்படி ஒரு நிலை சிறிலங்காவிற்கும் நிகழ சாத்தியம் தானே!தீர்க்க சிந்தனையுள்ள மனிதர்கள் இங்கே பிறக்கவே மாட்டார்களா?உருவாக்கப் படுகிறவர்கள் என்றால்…விரதம் கிடந்தும்,படித்தும் ..உருவாகவே மாட்டார்களா?இந்நாட்டு மக்களிற்கு,பஞ்சத்தில் புரண்டு,இயற்கை வளங்கள் இருந்தாலும் மலிவாக சுரண்டலுக்கு .. பறி கொடுத்து,மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் சாக வேண்டி வேண்டியிருக்கப் போகிறதோ! கடைசியில் நாடு வெற்றுக் கூடாகி விடும் என்ற விதியைத் தான் தாங்கி இருக்கிறதோ!

இவை எல்லாம்.. நடக்கிறதாக இருந்தாலும் மெதுவாகவே …நடக்கும்.ஆனால் ‘நடந்தே தீரும்’ என்ற உண்மையை புரிய வேண்டாமா?.

இரவல் ஆயுதங்களில் போர்களை விரும்பும் நாடுகள், சீரழிந்து சிதலமான வரலாறுகளே உலகமெங்கும் பரந்து கிடக்கின்றன.ஈழத்தமிழர்களும், ,இந்த நாடு சிதலமாகப் போகப் போவதை பார்ப்பதற்காக காத்துக் கிடக்கிறார்கள்.ஆனால் அதோடு இவர்களுடைய சிறிலங்காவும் சேர பறி போகப் போகிறது என்பதை அறியும் புத்திசாலித்தனம் அவர்களுக்கும் இல்லை.காந்திக் கொள்கைகள்,புத்தரின் கொள்கைகள்.. தாம் ஒரு நாட்டைக் காப்பாற்ற எத்தனை தூரம் அவசியமானவை என்பதை சிறிலங்கர் அறிய இன்னொரு யுகம் கழிய வேண்டுமோ என்னவோ?.

‘நாடு தான் மக்கள்’என்பதை ஆட்சியில் கிடக்கும் குறும்புத்திச் சிங்களவர்கள் புரிந்து கொள்ளாமலே கிடக்கிறார்களே. கடைசி வரை புரிந்து கொள்ளாமலே போகப் போறார்கள். ஆனால்,தமிழர்களுக்கோ,தோல்விகள் ஒவ்வொன்றும் போராடுவதற்கான பல வழிகளை தெரியபடுத்தியே செல்கின்றன.அஞ்சாதவர்கள் ..அதில் நடைபயில்கிறார்கள். புத்திசாலிகளாக இல்லாதது தான் ஒரு குறை.ஏன் அப்படிச் சறுக்கிறோம்? என்பதை விமர்சனம்,சுயவிமர்சனங்களை செய்து கொண்டு போகிற போது ஒரு நாள் கண்டு பிடித்து விடுவார்கள். அப்ப, சபலமற்ற போராட்டப் பாதையை (கொள்கைகளை) வரைந்து விடுவார்கள். எவருமே சரியான பாதையை தெரிகிற போது அரைவாசி வெற்றியே கிடைத்து விடுகிறது.ஒருநாள் தமிழிழம் மலரப் போவது உறுதி!பல்லி இச்சிக் கொட்டியதை நல்ல சகுனமாக எடுத்து,’கனவு பலிக்கப் போகிறது’என்று விழிப்பும்,கண்னயர்விலுமான அரைமயக்கத்திலும் சந்தோசப்பட்டான்.

இங்கே இருக்கிற வரையில் கனவுகள் துரத்தவே போகின்றன.தட்டிக் கிட்டி..பையித்தியமாக்கி விடாதே முருகப் பெருமானே!’என வேண்டியும் கொண்டான். அப்துல்கலாம் எந்த வேளையில் கனவு காணச் சொன்னாரோ?,ஈழப்பெடியள் அனைவரும் காண்கிறார்கள்.சிரித்துக் கொண்டான்.சரோஜா,முளித்து அவனைப் பார்த்திருந்தால்…”கடவுளே..”என முணுமுணுக்கிறதையும், பிறகு சிரிக்கிறதையும் பார்த்து,”மச்சானுக்கு பையித்தியம் பிடித்தே விட்டது என்று நிச்சியம் நினைத்திருப்பாள். ஏதோ சத்தம் கேட்டது.திடுக்குட்டு படுக்கையில் இருந்தபடியே எழும்பிப் பார்த்தான்.இருளில் ஒருக்களித்து என்ன அழகாகக் கிடக்கிறாள்.நித்திரை வராது போலக் கிடக்கிறதே!ஒரு மணி நேரமாவது தூங்கவே வேண்டுமே!, கண்ணை இறுக மூடிக் கொண்டு திரும்ப படுத்தான்.

காலைக் கோழிகள் கூவின.தமிழை திருத்தவெல்லாம் இறங்கவில்லை.” தமிழ் அப்படியே வாழட்டும்” விட்டு விட்டான் .வேலை இருக்கிறதோ இல்லையோ… வேலைத் தளத்திற்குப் போனான்.தலைவராக இருந்தவர்,அவனை அராலிப்பக்கம் போகச் சொல்லியிருந்தார்.வடக்கு,தெற்காக இருந்த இருபகுதியாட்களையும் சந்திக்க மத்தியானமாகி விட்டது.அவ்வளவு தான் அன்றைய வேலை.

தூக்கக்கலக்கம் விட்டபாடில்லை.எங்கையும் மரநிழலில் விழுந்தாலும் நித்திரை ஆகிவிடுவான்.எதற்கும் தொழிற்சங்க ஆட்கள் கூடுற வாசிகசாலையை எட்டிப் பார்த்து விட்டே போவோம்’என யந்திரமாகப் போனான். கதிரவன் தொட்டு சில தொழிற்சங்கத் தோழர்களும்,எ.ஜி.எ அமைப்பைச் சேர்ந்த சிலரும்…சோர்ந்த முகத்துடன் வீற்றிருந்தார்கள்.இன்றைக்கு என்ன குண்டோ?கேட்கவும்…பயமாகவிருந்தது.

கதிரிடம்”என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள்”என்று கேட்டான்.”உனக்கு செய்தி தெரியாதா?”கேட்டான்.

“என்ன செய்தி?”வரதனுக்குப் புரியவில்லை.

“கழுகைச் சேர்ந்த நாலு பேர்களைக் காணவில்லையாம்.திம்புப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஆமிக்காரர் காம்பை விட்டு வெளியே போகக் கூடாது.இரவில் சத்தமில்லாமல் களவாக நடமாடுகிறார்களோ?இந்த காரைநகர்க் காம்பை அடித்து நொறுக்கி இருக்க வேண்டும்.மாதகல் ஓரம் நடமாடுகிறார்களோ?எனச் சந்தேகமாக இருக்கிறது”என்றான் கதிரவன்.

“நம் தலைவர் இருந்த பகுதியிற்கருகில் கடைசியாக மக்கள் பார்த்ததாக கதை.அவர்களிடம் போய்க் கேட்டால்..’வயசு ,உயரம்,எப்படி இருப்பினம்? என்று எல்லாம் திருப்பிக் கேட்கிறார்கள்”என்று பக்கத்தில் இருந்த குகன் சொன்னான்.
“ஒரு வேளை கடத்தி இருப்பார்களோ?”வரதன் சந்தேகமாகக் கேட்டான்.

“அல்லி இயக்கம் அதையே திடமாகச் சொல்றது,உதைக்கிறது”குகனுக்குப் பக்கத்தில் இருந்த செல்வன். இருக்கிற விடுதலைப் போரே பாரதப் போராகக் கிடக்கையில் இந்த குறுக்காலே இழுப்பு எதற்காக? ஆனால் ,தலைவரின் மேல் உள்ள நம்பிக்கை பலமாக இருந்தது.

“சே,சே! அப்படியெல்லாம் இருக்காது.நம் தலைவர் எத்தனை தெளிவானவர்!என்ன நடந்தது என்பதை முதலில் அறிய வேண்டும்”என்ற வரதனுக்கு வீட்ட போறது மறந்து விட்டது.

ஒருவேளை உண்மையாக இருந்தால்..இவர்களோடு திரியிறது விசர் வேலையோ?என்று முதல் தடவையாக தோன்றியது. கழுகு இயக்கமும் தேடவே போகிறது.பகையைக் கொண்ட தாய் இயக்கம்.எதிர்வினை ஆற்றாது விடாது .

கண்கள் எரிந்தன.தம் ஒரு தோழரைக் கொன்றால் ஒன்பது ஆமிக்காரர்களை தேடிப் போய் சுட்டுக் கொல்லும் போக்குடையது.ஆமிக்காரர், பத்து பொதுமக்களைக் கொல்வார்கள்,தவிர கழுகிட்ட போக மாட்டார்கள்.நாலுபேர்க்கு நிச்சியமாக பலி தீர்க்கவே போகிறார்கள்.

“கதிர்,நித்திரை வருகிறது .நான் வாரன்”என்று கழன்று கொண்டான்.

வேளைக்கு வந்தவனை சரோஜா அதிசயமாகப் பார்த்தாள்.”மகாராணியைப் பார்க்க வந்தேன்”என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு,சின்னவளை தூக்கிக் கொண்டான்.கொஞ்ச நேரம் அவளோடு விளையாடினான்.கள்ளமில்லா மழழைச் சிரிப்பு நெஞ்சை கொள்ளைக் கொண்டது.அவளுக்கும் தீத்தி, தானும் சாப்பிட்டான்.”சரோ,நித்திரை வருகிறது”என்று சொல்ல அவள் பாவமாகப் பார்த்தாள்.குழந்தையை வாங்கிக் கொண்டு “நீ போய்ப் படு”என்றாள்.படுத்தது தான் தெரியும்.அவன் மேல் ஏறி “அப்பா, அப்பா”என்று சின்னன் மிழற்றியது கூட கேட்கவில்லை. அப்படித் தூக்கம் !

காணாமல் போனோர் விசயமே ஊரைக் கலக்கிக் கொண்டிருந்தது.தாமரையின் கோட்டையான அவ்விடத்திலிருந்து கழுகுக்குப் போனவர்களை எண்ணி விடலாம்.ஒரு பதினைந்து, இருபது..பேர்கள் இருக்கலாம்.எல்லாம் இருபது வயசுக்குட்பட்ட பெடியள். இன்னமும் கோட்டை தான்! அவர்களுடைய பெற்றோர் தாமரை ஆதரவாளர்களே.இப்ப, அதில் நால்வரை தான் காணவில்லை.

ராணுவம் கொலைசெய்தால்…அப்பெடியள்பால் அனுதாபமே எழும்.ஏதாவது ஒரு இயக்கம் செய்து விட்டால்…அது ஏற்படுத்தும் அதிர்வலைகள் சுனாமியை ஒத்தவை.காணாமல் போன இடம் தாமரையின் கோட்டை!வெளிப்படையாக அவர்கள் மேல் சந்தேகம் விழுவது தவிர்க்க முடியாதது.”கடவுளே என்று இவர்கள் செய்தாக இருக்கக் கூடாது”வேண்டிக் கொண்டான்.

பரிவாரங்களுடன் தலைவர் திரும்பிப் போய் விட்டிருந்தார்.

தொழிலிற்குப் போகிறவர்கள் கடற்கரையில் ஒரு புதர் பகுதியை நாய் ஒன்று கிளறியதைக் கண்டு கிண்டிய போது ..மோசமான மணம் பரவியது.அழுகிய இரண்டு மனிதக் கால்கள் தெரிய, துணியால் மூக்கை இறுக கட்டிக் கொண்டு மேலும் கிண்டி இரண்டு உடல்களை வெளியில் எடுத்தார்கள்.உடைகளோடே புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.பதறியடித்துக் கொண்டு வந்த மக்கள் காணாமல் போனோரில் இருவருடையவை என்பதை உடனேயே கண்டு கொண்டார்கள்.

மிச்ச இருவரும் இங்கே தான் எங்கையும் புதைக்கப் பட்டிருக்கும் என பல இடங்களில் கிண்டிப் பார்த்தார்கள்.4 நாட்களுக்குப் பிறகே,அரை கி.மீ தூரத்தில் மற்ற இரண்டு உடல்களையும் கிளறி எடுத்தார்கள்.யார் செய்தார்கள்?என்ற கேள்வியே தொக்கி நின்றது.

ஒருவேளை தலைவரோடு வந்தவர்களே செய்திருப்பார்களோ?என்ற சந்தேகம் முதல் தடவையாய் கதிர் ஆட்களுக்கு ஏற்பட்டது.இறந்த பெடியள்களுக்கு இரங்கல் கூறி தலைவர் கையொப்பம் இட்ட துண்டு பிரசுரம் ஒன்று அங்கிருந்து அச்சாகி தளத்திற்கு வந்தது.”மர்மமான முறையில் நகழ்ந்த கொலைகளை கண்டு பிடிக்க நம் தோழர்கள் உதவியாய் நிற்பார்கள்”என்று மேற்கொண்டுச் சென்றது.நாங்கள் செய்யவில்லை என்ற வாக்குமூலம்!

அப்ப யார் செய்திருப்பார்கள்?அரசியல் பிரிவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.பின் தளத்திலிருந்த தலைவர்களில் ..மரியாதைக்குரியவரும்,பொய் பேசாதவருமான ஒருவர் ஏதோ அலுவலாக வந்த போது,இறந்த பெடியள்களின் பெற்றோரில் ஒருவர்,உரிமையுடன்” யார் தான் செய்திருப்பார்கள்?”என்று அவரிடம் நேரிடையாகக் கேட்டார்.அவர் தனக்கு தெரிந்தவற்றை அப்படியே கூறி விட்டார்.”இந்தப் பெடியள், தலைவர் இருந்த பகுதிக்குள் நோட்டீஸ் ஒட்ட வந்தார்கள்.எங்கடயாட்கள் தான் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போய் விசாரித்தார்கள்.பிறகு, எங்கே இறக்கி விட்டார்கள்?என்ன நடந்தது? எல்லாம் தெரியாது”என்றார் கண்கள் கலங்க.

ஒன்றும், ஒன்றும் இரண்டு!கணக்கு கிட்டத்தில் வந்து விட்டது.தள அரசியல் அமைப்பு பின்தளத்தை உலுக்கிக் கேட்டது.”என்ன பொய்யா ..? சொல்கிறீர்கள்,உண்மையைச் சொல்லுங்கள்”.தலைமை மெளனம் காத்தது.ஓட்டைவாய்த் தலைவரை உடனடியாக பின் தளம் வரும்படி கட்டளை இட்டது.

ஆனால், செய்தி கசிந்து வந்து விட்டது.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகளிடம் பயிற்சி பெற்றவர்கள்,அங்கே சாதாரணமாக இருக்கிற நடைமுறையை இங்கே அப்ளை பண்ணி இருக்கிறார்கள்.நாலு பெடியள்களையும் அவர்கள் தான் பிடித்து சென்றிருக்கிறார்கள்.சிறுவர்கள் அதிகமாக வாய் காட்டியிருக்கிறார்கள்.கன்னத்தைப் பொத்தி விட்ட அறையில் ஒரு பெடியன் இறந்து விட்டான்.பயத்தில் உறைந்து போய்யிருந்த மற்றவர்களை வெளியில் விட்டால் நல்லதில்லை என்று சுட்டுக் கொன்று விட்டு புதைத்து விட்டார்கள். இப்படி முந்தி எம் பெடியள்களையும் விசாரிக்கிற போதும் இரண்டொருவர் இறந்திருக்கிறார்கள்’என்ற அதிர்ச்சியான செய்தியும் கூட வெளியாகியது.

நாகாம் தரமாக அதில் அனுபவம் உள்ளவவராகி விட்டார்களா?, ருசியும் கண்டு விட்டார்களா!சே,கவனமாக இருந்திருக்க வேண்டாமா,எவ்வளவு மினக்கெட்டு பயிற்சி எல்லாம் எடுத்தவர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்த முதல் இப்படி சிறுகற்களிலே போய் இடறி விழுந்து விட்டார்களே!

தாக்குதல்ளை செய்து கொண்டு போர்க்களத்தில் நின்றிருந்தால் ‘சா’க்க்கள் விழுகிறதோடு இந்த சாவும் பத்தோடு பதினொன்று. கழுகு, அப்படி தான் கண்டபடி மக்களையும் சுட்டுக் கொண்டிருந்தது.இவர்கள், அமைதியான நிலையில் போர்க்களத்திற்கு வெளியே நின்றார்கள். கழுகு தோழர்களைப் போல இவர்களும் அலட்சியமாக செயல் பட்டு விட்டார்கள்.அச்செயல் இவர்களின் பெயரையும் கெடுத்ததோடு மட்டுமின்றி,இயக்கத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் தகர்த்து விட்டது.

இவ்இயக்கத்தின் ராணுவப் பிரிவுக்கு பெரிதாக தாக்கமில்லை தான் .ஆனால்,அரசியல்,மகளிர்,தொழிற்சங்க அமைப்புகள் ..கால்பந்தாட்டத்தில், போடப்பட்ட பந்தின் நிலையில் விழுந்து விட்டது.மகளிர் பிரிவு ‘தாம் செயற்பட முடியாத நிலையை விளங்கப் படுத்தி ‘அறிக்கையை வெளியிட்டு விட்டு ,தம் செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டது.தொழிற்சங்கத்திற்கும் ஏறத்தாழ இதே நிலை தான். ஆனால்,அது அறிக்கை ஒன்றும் விடவில்லை.

அரசியல் பிரிவு,வரிந்து கட்டிக் கொண்டு உள்ளுக்க சண்டையில் இறங்கியது. “இயக்கம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்றும் விடாப் பிடியாய் நின்றது.

சுனாமியில் உறவுகளை இழந்தவர்களுக்கு எல்லாம் தாய் தந்தையாய் இருக்க வேண்டியது ஒரு அரசு தானே.தமிழர்களுக்கோ அந்த அரசை இல்லாமல் செய்து விட்டு சிறிலங்கா, தனது மனநோய்களுக்கு… தோன்றுகிற மாதிரி எல்லாம் கண்டபடி தமிழர்களை கொன்று கொண்டு வருகிறது. எம்மக்களுக்கு ‘ஒரு அரசு எப்படியும் வேண்டும்!அதை பெறுவதற்கு போர்கள் இருக்கிற போது, தடையாக, இந்த கோழிச் சண்டைகள் எல்லாம் எதற்கு?’வாய் விட்டு கத்தலாம் போல வரதனுக்கு இருந்தது.

வரதன்,கதிர், தோழர்களுடன்… கதைத்து விட்டு திரும்புற போது,வழியில் கிங்கரர்கள் போல கழுகைச் சேர்ந்தவர்கள் மறித்தார்கள்.

“என்ன விசயம்?”கேட்டான்.

“உங்களை மேலிடம் விசாரிக்க வேண்டுமாம்!உத்தரவு”என்று ஒருத்தன் கூறினான்.

சச்சரவு செய்தால் விடவா போறார்கள்?சரி!என்று அவர்களோடு போனான்.அவர்களுடைய காம்பில், அறையினுள் அவனை பிடித்து தள்ளினார்கள்.உள்ளே மணிவாணன் இருந்தான்.

“ஏன் உன்னைப் பிடித்தார்கள்?”கேட்டான்.

“விசாரிக்க வேண்டுமாம்.சொல்கிறார்கள்”என்றான்.

இவர்களிட பாசையில் விசாரிக்கிறதென்றால் மண்டையில் போடுறது தானே!ஒருவேளை அந்த நாலு பேர்களுக்காக இருக்குமோ?.சாகிற போது கூட ஒரு தோழன் இருந்தால் மனசும்… துணிச்சலாகிக் கொள்ளுமா?

இரவாக, இருவரையும் வாகனத்தில் ஏற்றி..செலுத்தினார்கள்.

நவாலிச் சுடலையாக இருக்குமோ?அவனால் சரியாக மட்டுக்கட்ட முடியவில்லை.பகலாக இருந்திருந்தால் இனம் கண்டிருப்பான்.

வேறொரு வாகனத்தில் அரசியல் பிரிவைச் சேர்ந்த சாந்த னையும்,பாகனையும் கொண்டு வந்து இறக்கினார்கள்.நாலு பேர். கணக்கு சரி!

கண்களை கட்டக் கூடவில்லை,என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரிந்து விட்டது.

ரிவால்வரை சிவநேசன் வெளியில் எடுத்தான். வரதன், ஒரு ஆவிப் பார்வை மட்டும் பார்த்தான் .”உங்கட நாய்களைப் போல நாங்கள் சித்திரவதை செய்யவில்லை”. அவனுக்கு நெற்றியில் குண்டு பாய்ந்ததே தெரியவில்லை..அவனுடைய உடம்பு செத்து… தொப்பென விழுந்தது.பிறகு,மணிவாணன் தொட்டு மற்றவர்களையும் சுட்டது அவனுக்கு எங்கே தெரியப் போகிறது?

ஆனால், எந்த காலத்தில் நிகழ்ந்தாலும் மரணமும், அதன் வலியும்,ஏற்படுத்தும் வேதனையும் ஒன்று தானே!

இனி,அந்த வலிகளை சுமக்கப் போகிற உறவுகளைப் பற்றி …எவருக்கு என்ன கவலை?

(உண்மைச் சம்பவத்தை தழுவி… எழுதப்பட்டது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *